- பயந்த பூனைக்குட்டி -
உள்ளுக்குள் நானொரு
பயந்த பூனைக்குட்டி
யாராவது என்னைப்
பெயர் சொல்லி
அழைத்தால்
கொஞ்சம் சத்தமாக
அழைத்தால் அழுதிடுவேன்
அப்படியொரு
பயந்த பூனையாகத்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
ஆனால் எனக்கு
ஒருபோதும் எலிகளுடன் சிக்கல்
இல்லை
அவை என்னை
கடந்து போகும் போதும்
என் உணவுகளை
களவாடி போகும் போதும்
என் உடைகளை
கிழித்து சிரிக்கும் போதும்
என் உடைமைகளை
கலைத்து கடிக்கும் போதும்
எனக்கு கோவமே வருவதில்லை
அதற்கு பதிலாக
என் உரோமங்கள் சிலிர்த்து
என் கண்கள் கலங்கி
கால்கள் நடுங்கி
வயிறு கலக்கி
ஒருமாதிரி ஆகிவிடுவேன்
பசித்திருந்த கனவொன்றில்
எதார்த்தமாக
எலியை விழுங்கிவிட்டேன்
அந்த ருசி
நாக்கில் ஒட்டிக்கொண்டது
வாய் முழுக்கவும்
அந்த ருசியைத் தடவிவிட்டேன்
கனவுதானே என
தூக்கம் கலைந்து
கண்திறந்து பார்த்த நாளில் இருந்து
எந்த எலியும் என் முன்
நடப்பதில்லை
நடமாடுவதுமில்லை
நானும் எலிகளும்
ஒரே கனவையா
ஒரே நேரத்தில்
கண்டிருக்கிறோம்
சின்ன சந்தேகம்
நான் எலியை விழுங்கி ருசித்த
கனவு போல
எந்த எலியாவது
என்னை விழுங்கி ருசிக்கும்
கனவு கண்டிருந்தால்
'ஐயகோ...'
என் கதி என்ன ஆவது
நானும் இனி
தலைமறைவாகத்தான்
வாழவேண்டும்
0 comments:
கருத்துரையிடுக