பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 26, 2020

நாகம்மாளின் மனக்குறிப்புகள் – புத்தக வாசிப்பு

 


மனோகரன் கிருஷ்ணன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு, ‘நாகம்மாளின் மனக்குறிப்புகள்’. வழக்கமாக , கதைகளை இதழ்களுக்கோ அல்லது ஏதும் ஊடங்களுக்கோ அனுப்பி அது பிரசுரமாகிய பின் தொகுத்து புத்தகமாக்குவார்கள். அல்லது புத்தகம் வெளியீடு செய்வதற்கு முன்னமே அதையொட்டிய சில கதைகளை ஊடகங்களுக்கு அனுப்பி பிரசுரிக்க வைப்பார்கள்.

இந்த இரண்டும் இல்லாமல், தனது வலைப்பூவிலும் அவ்வபோது முகநூலிலும் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்கியுள்ளார் கதாசிரியர். தொடர்ந்து வாசிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு பல்வேறுபட்ட பதிப்புகளில் வெளிவந்துள்ள திருக்குறள் புத்தகங்களை சேகரித்து வருகின்றார். மலேசிய எழுத்தாளர்களின் புத்தகங்களையும் தொடர்ந்து சேமித்து வருகின்றார். தற்போது வெளியீடு காணும் புத்தகங்கள் முதல் கிடைக்காத புத்தகங்கள் வரை அதில் அடங்கும். இச்செய்தி வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவும் என நம்புகின்றேன்.

இனி சிறுகதை தொகுப்பிற்கு செல்லலாம்;

மொத்தம் 15 கதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் நம் மண்ணில் கதையைச் சொல்ல முற்பட்டிருக்கின்றது. அது முழுமையடைந்துள்ளதா என்றால் அதன் முயற்சி தெரிகிறது எனலாம்.

முதல் கதை, ‘மனைவி காத்திருக்கிறாள்’. இக்கதை எனக்கு ஒரு புதுமொழியை நினைக்க வைத்தது. ‘ஊருக்கு ராஜாவாக இருந்தாலும் வீட்டிற்கு துடைப்பக்கட்டைதான்’. பெரும்பாலும் கணவன்களுக்கு  இதனைச் சொல்லி கிண்டல் செய்வோம். சொல்லப்போனால்,  பெரும்பாலான கணவன்களின் நிலை இதுவாகத்தான் இருக்கும். பிறந்த விட்டிற்கு சென்றுள்ள மனைவியை அழைத்து வர செல்லும் கணவன் அதற்கான இரயிலில் ஏறினாரா இல்லையா என்பதுதான் கதை. ஒரு கதைக்கு இதுமட்டும் போதுமா என்ன.? கணவனின் அந்த பயணத்தை கதாசிரியர் சொல்லிக் கொண்டுச் செல்லும் போது நமக்கேக்கூட ஓரளவிற்கு பதற்றம் தொற்றிக்கொள்கிறது. நம்மில் பலர் பொது போக்குவரத்து சேவைக்கு இவ்வாறான  அனுபவங்களைப் பெற்றிருப்போம். ஆனால் கதையின் முடிவு கதையோட்டத்தை காப்பாற்ற தவறிவிட்டதாகப்படுகிறது. இத்தனை இன்னல்களை தாண்டி, கணவன் தன் மனைவியை அழைத்து வருவதற்கு பேருந்தில்  ஏறிவிட்டதில் என்ன கதை இருக்கிறது. முழு கதையையும் மாற்றிப்போடும்  சூட்சுமம் இருக்கும் கதை முடிவில் இன்னும் கவனம் எடுத்திருக்கலாம். பல பாடுகள் கடந்து விட்ட நிலையில் மனைவி தொலைபேசியில் அழைக்கும் சமயத்தில், சில நொடிகளின் இரயிலை தவறவிட்டு நிற்பதில்தான் இக்கதை ஒளிந்திருக்கிறது. ஆனால் இக்கதையின் முடிவு இக்கதையை அனுபவ பத்தி போல அமைத்துவிட்டது.

அடுத்த கதை, ‘வெளியே ஒரு வானம்’. தன் வகுப்பு மாணவனின் வித்தியாசமான செய்கையால் ஈர்க்கப்படும் ஆசிரியை அதற்கான காரணம் தெரிந்ததும் உடைந்துப் போகிறார். இக்கதை சொல்லப்பட்டிருந்த விதம் கவர்கிறது. முன் யூகங்கள் ஏதும் இக்கதைக்கு இடம் கொடுக்கவில்லை.

‘ஆன்மாக்களின் தரிசனமும் கடவுளின் வார்த்தைகளும்’. புதிய அனுபவத்தை கொடுக்க முயற்சிக்கும் கதை. இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் இக்கதை மேலும் சிறப்பாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.  நாவலுக்கான கருவை மிக சுக்கமாக சொல்ல முயன்று அது தன் பக்கங்களின் சிலவற்றை அதிகப்படுத்தியது போல இருக்கிறது. இதனை நாவலாகவோ குறுநாவலாகவோ கதாசிரியர் முயற்சிக்கலாம். அது இக்கதை வாசிப்பின் அனுபவத்தை முற்றிலும் வேறொரு அனுபவத்தைக் கொடுக்கும்.

‘வட்டிப்பணம்’ . பணம் படுத்தும் பாடு. பணமே பிரதானம் என்னும் மனிதனின் கடைசி நிமிடம் எப்படி இருந்துவிடும் என சொல்லும் கதை. இக்கதை சொல்லப்பட்ட விதம் வாசகர்களை கவரும். மெல்ல மெல்ல காய்களை நகர்த்தி  முன்னேறிச் செல்வது போல கதையை ஆசிரியர் முன்னகர்த்தி செல்கிறார். கதையில் முடிவு முழு கதையையும் மீண்டும் நினைக்க வைக்கிறது.

‘ஒற்றைச் செருப்பாய்’ இந்நாட்டுச் சூழலில் தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை சொல்லும் கதை. பலரும் இத்தகைய கருவினை கையாண்டிருக்கிறார்கள். கதாசிரியர் தன் பார்வையில் கதையை நகர்த்துகிறார்.

‘அற்றைக்கூலி’ வாசித்து முடிக்கவும் மனதை கணக்க செய்துவிடுகிறது. எதற்காக போராடுகின்றோமோ அது கைக்கு எட்டிய நொடியில் நாம் அதனைவிட்டு இன்னும் அதிகம் தூரம் நகர்ந்துச் சென்றுவிடும் உணர்வு மேலிடுகிறது.

‘கலைந்து செல்லும் மேகங்கள்’, சகோதரியின் மரணத்திற்கு செல்லும் வழியில் நாயகனின் நினைவுகள் பின் செல்கின்றன.

‘நெருப்புப் பிண்டங்கள்’, சில பக்கங்கள் கொண்ட கதைதான். ஆனால் கதையின் முடிவு என்னை பெரிதும் பாதித்தது என்றே சொல்லவேண்டும்.  தாத்தாவும் பேத்தியும் இருக்கும் வீட்டில் திருடர்கள் நுழைகிறார்கள்.  தடுக்க முயன்ற தாத்தா கொலை செய்யப்படுகின்றார். அந்த ஏழை வீட்டில் திருடர்கள் பறித்துக்கொண்டு போனது தாத்தாவின் உயிர் மட்டுமல்ல அந்த பேத்தியின் எதிர்காலத்தையும் என கதை முடியும் போது வாசிக்கையில் நம்மால் அவ்வளவு சீக்கிரத்தில் மீண்டு வர முடியாது.

‘பள்ளி வண்டி’, கதையும் இங்குள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்தான். பெரும்பாலும் பேருந்து ஓட்டுனர்கள் குறித்து பெரிதாக பேசுவதில்லை. இக்கதை அவர்களின் சிக்கலைக் காட்டுகிறது.

‘தாயுமானவள்’, ஆசிரியை குறித்த கதை. பெரிய திருப்பங்கள் இல்லை. நன்னெறியை போதிக்கும் வகை கதை.

‘மானுடம் கடந்த மனிதர்கள்’, தலைப்பிற்கு ஏற்றார் போல அமைந்துவிட்ட கதை. தினமும் ஒரு முறையாவது  வித்தியாசமான மனிதர்களை நாம் சந்திக்கக் நேரும். அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னதான் தேவை போன்ற எந்த புரிதலுக்கும் நம்மால் வர முடியாது ஆனாலும் நம்மால் அவர்களை புறக்கணிக முடியாது. கதையின் மையம் இதுதான்.

அடுத்த தலைப்பு, புத்தக தலைப்பைக் கொண்டது. ‘நாகம்மாளின் மானக்குறிப்புகள்’. அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார் நாயகன். அங்கு சந்திக்கும் நபர் மூலம் பழைய தங்களின் தோட்டத்து பழைய வாழ்க்கையை நினைத்துப்பார்க்கும்படி கதை நகர்கிறது. குலதெய்வ வழிபாடு குறித்து இக்கதையில் குறிப்பிடும் தகவல் அதிர்ச்சியைக் கொடுக்கின்றது. ஜீரணிக்க முடியவில்லை. அந்த காலத்தில் பூப்படைந்த பெண்களைக் கண்டு வேற்று இன மன்னர்களும் சிப்பாய்களும் அதிகாரம் படைத்தவர்களும் வன்முறை செய்து இச்சையைத் தீர்ப்பதற்காக அவர்களை இழுத்துப் போவார்களாம். அதனை தடுப்பதற்காகவே, பெண் குழந்தைகள் வயதிற்கு வந்தவுடன், வீட்டின் முன் சிறு குழியை வெட்டி அந்த பெண்ணை அதில் அமரவைப்பார்களாம். அவள் கையில் அகல் விளக்கைக் கொடுத்து அவள் மேல் தென்னை மட்டைகளைப் போட்டு மூடி விடுவார்களாம். அந்த பெண் குழிக்குள்ளேயே எரிந்து பூபோல் சாம்பலாகி விடுவதால் அவளையே குலதெய்வமாய் வணங்குகிறார்களாம்.

‘நிழல் மரக்கோடுகள்’ கதையும் பழைய வாழ்க்கையைச் சொல்லி செல்கிற கதைதான். போர்க்காலம், கொடுமைக்காலம், கலவரக்காலம், வசந்தகாலம் என நான்கு காலத்தின் சூழலைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. இன்னும் அதிகமாக சொல்லியிருக்க கூடும் வாய்ப்புகள் இருந்தும் இக்கதையில் கதாசிரியர் அதனை செய்யவில்லை. செய்திருக்கலாம்.

தொகுப்பின் நிறைவான கதை, ‘சுடுகாட்டு காளி’. சிறிய கதை. மேலும் செறிவாக்கம் செய்திருந்தால், ‘குறுங்கதை’ வடிவில் கிடைத்திருக்கும்.  இக்கதையை நேர்த்தியாக சொல்ல முயன்றுள்ளார். சாமாண்யன் நான்கு நம்பர் எடுக்கும் கதை. அதற்காக மந்திரவாதியுடன் சுடுகாட்டிற்கு பூஜை செய்ய செல்கிறார்கள். அங்குதான் சிக்கல் ஏற்படுகிறது. நினைத்துப் போன நான்கு நம்பர் கிடைத்ததா இல்லையா என்பதுதான் கதையின் சுவாரஸ்யம். கதையின் கடைசி பத்தி நம்மை நோக்கி நாமே சிரிக்கும்படி ஆகின்றது.

மனோகரன் கிருஷ்ணன் அவர்களின் இந்த ‘நாகம்மாளின் மனக்குறிப்புகள்’ அவரின் முதல் சிறுகதை தொகுப்பு. அதற்கான முயற்சிகள் தெரிகின்றது. இப்புத்தகம் வாசிப்பதற்கு ஏற்றது. வழக்கமாக வாசித்துப் பழகிய கதைகளில் இருந்து சற்றே மாறுபட்ட கதைபோக்குகள் கொண்ட கதைகளாக இக்கதைகளைச் சொல்லலாம்.

அடுத்தடுது இன்னும் ஆழமான படைப்புகளை எதிர்ப்பார்க்கலாம். கதாசிரியருக்கு வாழ்த்துகள்.

 

#தயாஜி


டிசம்பர் 25, 2020

பேய்ச்சி' தடை! கொண்டாட வேண்டியதா? யோசிக்க வேண்டியதா?

 

அதற்கு முன் சிலவற்றை பேச நினைக்கிறேன். எனக்கும் நவீன் அவர்களுக்கும் இடையில் உள்ள சிக்கல் கொடுக்கல் வாங்கள் போன்ற வாய்க்கால் வரப்பு சிக்கல்தான். யோசித்துப் பார்த்தால் இதெற்கெல்லாமா வீராப்பு பிடித்து கொள்வோம் என நினைக்கத்தோன்றும். ஒரு வேளை நாளையே அவர் "வாடா தம்பி"  என்று அழைத்தால் நான் போனாலும் போய்விடுவேன். 


ஆனால் இப்பொழுது நான் பேச முற்படுவது இலக்கியத்திற்காக எதனையும் இழக்க தயாராய் இருக்கும் எழுத்தாளர் ம.நவீன் பற்றி...

எனது பதின்ப வயதில் இருந்து திரு.ம.நவீன் அவர்களின் வாசகனாக இருக்கிறேன். ஒரு சமயம் வல்லினம் குழுவில் இணைந்து செய்லாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. ஆத்மார்த்தமாகத்தான் அதில் பயணித்தேன். நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். அப்பயணத்தில் என்னால் பலவற்றை அறிந்துக்கொள்ள முடிந்தது. தனிப்பட்ட வாழ்வில் எனக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு வல்லினம் குழுவினரும் ம.நவீன் அவர்களும் ஆறுதலாகவும் ஆலோசகராகவும் இருந்தார்கள். 

தனிப்பட்ட முறையில் அவருடன் பலவற்றைப் பற்றி பேசியுள்ளேன். சண்டை போட்டுள்ளேன். முரண்டு பிடித்துள்ளேன். திரும்பி வராத அந்த காலத்தின் நினைவுகளை எப்போதும் மறப்பதற்கில்லை.

சரி,
மலேசிய நவீன இலக்கியம் என்று பேச்செடுத்தால் வல்லினம் மற்றும் ம.நவீன் அவர்களை மேற்கோள் காட்டாமல் பேச முடியாது. குறைந்த பட்சம் திட்டுவதற்காவது பேசுவார்கள். அதற்கான உழைப்பை கொடுத்தோம். கொடுத்தோம் என இச்சமயம் சொல்வது சரியா அல்லது கொடுத்தார்கள் என சொல்வது சரியா என பிடிபடவில்லை.
மற்ற இயக்கங்களும் அவர்கள் பங்கிற்கு செயலாற்றினாலும் முதன்மையாக இருப்பது தற்காலத்தில் வல்லினம் இணைய பக்கம்தான்


சில காரணங்களால் பேய்ச்சி நாவலை வாசிக்கவில்லை. ஒரு சமயத்தில் அவர் எழுதிய புத்தகங்களின் முதல் பிரதியை அவர் கையெழுத்துடன் முதல் நபராக வாங்கி வாசித்தவனால் பேச்சி நாவலை யாரோ ஒருவர் போல வாசிப்பதை மனம் ஏற்கவில்லை.

அந்நாவல் குறித்து பலவாறான விமர்சனங்கள் வந்ததை அறிந்திருந்தேன். ஒரு கட்டத்தில் நாவலைப் பற்றி பேசாமல் ம.நவீன் அவர்களை தூக்கிப் பேசவும் தாக்கி பேசவும் ஆரம்பித்துவிட்டார்கள். அங்கு பலருக்குள் சிக்கல் வந்திருக்கலாம்.

இன்று போய்ச்சி நாவலை தடை செய்துவிட்டோம். அடுத்த என்ன ஆகப்போகிறது. சும்மா இருந்தவர்களை சொறிந்துவிட்ட கதையாய் இனிதான் அந்த நாவலை ரகசியமாக வாசிப்பார்கள். அதனை எழுதியவர் மீது புதிய வெளிச்சமும் ஏற்படப்போகிறது. 

எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் போன்ற ஒவ்வொன்றின் மீதும் ஒரு தடையை வைக்கப் போகிறார்கள். அது நாம் எல்லாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சமூக  அவலங்களை முழுமையாக எழுத முடியாது. ஊழல் அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்க முடியாது. 

சமீபத்தில் கூட 'குலதெய்வங்கள்' பற்றி ஒருவர் எழுதிய புத்தகத்தை இங்கு வெளியீடு செய்ய  தடை போட்டுவிட்டதாக முகநூலில் பார்க்க நேர்ந்தது. 


இலக்கிய படைப்பை விமர்சிப்பதும் விவாதிப்பதுமே அதற்கு நாம் செலுத்தும் நன்றி என நம்புகிறேன். அங்கிருந்துதான் அப்படைப்பு நிலைக்குமா இல்லையா என்கிற தெளிவு கிடைக்கும். மாறாக தடை போடுவதும் எழுதியவரை தாக்குவதும் ஏற்புடையதா என்பது நம்மை நோக்கி நாமே கேட்க வேண்டிய கேள்வி.

யோசித்துப்பாருங்கள் நாளையே ஒரு ஆளோ ஒரு இயக்கமோ சேர்ந்து, உலக பொதுமுறை என நாம் போற்றும் திருக்குறளில் 'காமத்துப்பால்' இருப்பதால் அது ஏற்புடையதல்ல என குருட்டுத்தனமாக தடைவிதிக்க வந்தால் என்ன செய்வோம்?

என்னால் இத்தடைக்கு கண்டனம் தெரிவிக்க முடியவில்லை. இதுவரை தெரிவித்த கண்டனங்களுக்கு பெரிதாக எந்த மாற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. பின் விளைவுகளை நினைத்து, என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


#தயாஜி

ஆகஸ்ட் 09, 2020

ஒத்திகை...


கைபேசி கேமராவை தயார் நிலையில் வைத்து விட்டான். எல்லோரையும் போல தானும் பிரபலமாக வேண்டும் என்பதுதான் சாமுவேலின் ஆசை.

சமீபத்தில் அதிகம் பிரபலமான ஒரு யூடியூப்பில் இருந்து அந்த ஐடியாவை எடுத்திருக்கலாம். மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டிருக்க வேண்டும் என்கிற சிந்தனையில் தன் முகநூல் நேரலையைத் திறந்திருந்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் அப்பா வந்துவிடுவார். கோவக்கார மனிதர் அவர்.

அவர் வந்ததும், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், சில காரணங்களால் (ஒரே காரணம்தானே!!) அவள் கர்ப்பமாகிவிட்டாள் என்றும் சொல்ல வேண்டும். அம்மாவிடம்  அப்பாதான் இந்த விபரத்தைச் சொல்ல வேண்டும் என்பதுதான் அந்த திட்டம்.

எல்லாவற்றையும் முகநூலில் பேசிக்கொண்டிருந்தான். சரியாக பேசி முடித்த சில வினாடிகளில் அப்பா அவனது அறைக் கதவைத் தட்டினார். கட்டை விரலை கைபேசி முகநூலில் காட்டிவிட்டு ஓடிச்சென்று கதவைத் திறந்தான்.

"என்னமோ தனியா பேசனும்னு சொன்னியே என்னது..?" என்றார். அப்பாவின் குரல் கம்பீரமாக இருந்தது. 

சாமுவேல், தன் காதலி கர்ப்பாகிவிட்டாள் என்று கூறிக்கொண்டே அப்பாவின் காலில் விழுந்தான். அப்பாவின் கண்கள் சிவந்தன. உடல் அதிர்கின்றது.

"என்னடா சொல்ற...?!" அந்த குரலில் உள்ள கோவத்தை வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை. தவறு நடந்து விட்டதாகவும் , அவர்தான் அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்றும் கண்களில் நீர்க்கசிய கெஞ்சுகிறான். அம்மாவிடம் அப்பாதான் நாசூக்காக இதனை சொல்ல வேண்டும் என்று விசும்ப ஆரம்பித்தான்.. (இது உலக நடிப்புடா சாமி).

அப்பா, அவசரப்படவில்லை. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். சூழலைப் புரிந்துக்கொண்டார். எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பாக ஆழ்ந்து மூச்சினை இழுத்துவிட்டார். மகனின் தோளில் கையை வைத்து அழுத்தமாக பிடித்தார். சாமுவேலுக்கு இப்போதுதான் பயம் வரத்தொடங்கியது. அப்பாவின் இந்த சாந்தம் அவனை ஏதோ செய்தது. அப்பா வாய் திறந்தார்.

"டேய் சாமுவேல்..... என் காதலியும் எப்படியோ கர்ப்பமாகிட்டாடா.... நீதான் அம்மாகிட்ட நாசூக்கா இதை எடுத்து சொல்லனும்...." 

சாமுவேல் விழி பிதிங்கினான். அந்த முகநூல் நேரலையில், கடைசியில் அவனுக்கு பதில் அவனது அப்பா பிரபலமாகிவிட்டார்.


#தயாஜி

ஆகஸ்ட் 08, 2020

கடவுளே...!

எத்தனை கொடுமையான வாழ்க்கை இது!. அழுவதா சாவதா என்று தெரியவில்லை. கூடாது.. சாகக்கூடாது.. சாகடிக்க வேண்டும்...

என்பதுதான் அவனை இப்போது வழி நடத்திக் கொண்டிருக்கிறது. நிச்சயம் இன்று ஒரு கொலை உறுதி. சொல்ல முடியாது. இரண்டு கொலைகளாகவும் இருக்கலாம். ஆனால் அந்த குழந்தையைக் கொல்வதற்கு மனது வருமா என தெரியவில்லை. வரலாம். அவளில் துரோகத்திற்கான சம்பளம் அதுவாகத்தான் இருக்கும்.

கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் மருத்துவமனையில் இருந்து அழைத்திருந்தார்கள். சமீபத்திய உடல் பரிசோதனைக்கான விபரங்களை கேட்டிருந்தான். சில காரணங்களால் எல்லாவற்றையும் பரிசோதித்திருந்தார்கள். பலரை அழைக்கவேண்டியுள்ளதால் அவசரமாக விசயத்தை சொல்ல முயன்றுக் கொண்டிருந்தார். 

நர்ஸ் சொல்வதை முழுமையாகக்கூட அவனால் கேட்க முடியவில்லை. அதற்குள் கண்கள் இருட்டிவிட்டன. காதுகள் அடைத்துக் கொண்டன.  தொலைபேசியை பாதியிலேயே துண்டித்தான். 

மனைவியின் முகமும் தன் குழந்தையின் முகமும் கண் முன் வந்துப்போனது. இல்லை இனி அது அவனது குழந்தை இல்லை. அதைத்தான் நர்ஸ் சொல்லிக் கொண்டிருந்தார். அவனுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பதை விடவும் தனக்கு ஒரு குழந்தை இருப்பதுதான் அவனை மெல்ல மெல்ல மிருகமாக்கிக் கொண்டிருக்கிறது.

மனிதனாக வெளியேறியவன் மிருகமாக வீட்டிற்குள் நுழைந்தான். நேராக சமையல் அறைக்குச் சென்றான். அங்குள்ள கத்தியை எடுத்தான். அந்த கத்தி அவனது கைக்கு நேர்த்தியாகப் பொருந்தியது.  அது கத்தியல்ல அவனது வலது கையாக மாறிவிட்டது.

படுக்கையறைக்குச் சென்றான். குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. அருகில் சென்றான். கட்டிக்கொண்டு ஏமாற்றியவளையா ? அல்லது பிறந்து இருக்கும் இந்த ஏமாற்றத்தையா ? யாரை முதலில் கொல்வது என முடிவெடுக்கத் தயாரானான்.

அறைக்குள் அப்போது நுழைந்த மனைவி, "ஏங்க நர்ஸ் கூப்டிருந்தாங்க.. உங்க போன் பாதியிலேயே கட் ஆச்சாம்.. கூப்டும்  கிடைக்கலையாம்... ஏதோ ரிப்போட் மாறிப்போச்சாம்... சோரி சொன்னாங்க.. நாளை ஆஸ்பிட்டல் வந்து ரிப்போர்ட் எடுத்துக்கச் சொன்னாங்க...."

அவனது கண்களில் இருந்த இருள் மறைந்தது. எச்சிலை விழுங்கிக் கொண்டான். கத்தியை மெல்ல மறைத்தான். அப்படியே கண்களை மூடி கடவுளே...! என்றான்.

அப்போது அவளும் கண்களை மூடி, கடவுளே..! என்கிறாள்.

#தயாஜி


ஆகஸ்ட் 07, 2020

பாம்பின் கால்கள்...

காதலைச் சொல்லி இரண்டு நாட்கள் ஆகின்றன. ஆனால் எந்த மிச்சமும் அவர்களிடத்தில் இருக்கவில்லை. எல்லாவற்றையும் பேசித் தீர்த்துவிட்டார்கள்.

பல ஆண்டுகளாக தேடி கிடைத்த தேவதை என அவனும், யாருக்கும் கிடைக்காத வரம் என்று அவளும் ஆளுக்கு ஆள் நினைத்துக் கொண்டார்கள். அது உண்மையும் கூட.

முகநூலில் முதன் முதலாகப் பார்த்த போதே இருவருக்கும் ஏதோ ஈர்ப்பு தோன்றியது. அன்றே நண்பர்களாகி நட்பாகி காதலாகி கசிந்து உருகிவிட்டார்கள்.

மூன்றாம் நாள் சந்திப்பு. இரவு. மெழுகுவர்த்தி வெளிச்சம். சூடான மேற்கத்திய உணவு. திறந்து கொடுக்கப்பட்ட வைன் பாட்டில். நாற்காலியைச் சுற்றிலும் வண்ண பலூன்கள். மத்தியில் அவனும் அவளும். கண்கள் பேசிக்கொண்டே இருக்கின்றன.

"நா..."
"நா.."

இருவரும் ஒரு சேர பேச ஆரம்பித்து, நிறுத்தி சிரித்துக் கொண்டார்கள்.

"நீங்..."
"நீங்..."

இப்போதும் அப்படியே நடந்தது. இனி பேசக்கூடாது என்று நினைத்தார்கள். கைபேசியை எடுத்தார்கள். டைப் செய்தார்கள் அவன் அவளுக்கு அவள் அவனுக்கும் அனுப்புனார்கள். ஒரே சமயத்தில் இருவரின் கைபேசியிலும் மணி ஒலித்தது.

ஆர்வம் பொங்கிய காதலுடன் எடுத்துப் பார்த்தார்கள். இருவருக்கும் அது அதிர்ச்சியைக் கொடுத்தது. இருவர் முகமும் இறுகியது. இது ஒத்துவராது என்று முடிவெடுத்தார்கள்.

ஒன்றும் சொல்லிக்கொள்ளாமல் அவன் ஒரு பக்கமும் அவள் ஒரு பக்கமும் நடக்கலானார்கள். நடந்துக் கொண்டே இருவரும் கைபேசியை எடுத்து மீண்டும் பரிமாறிக்கொண்ட விடயத்தை பார்த்தார்கள்.

'முகநூலை டிலேட் செய்துடு. நாம கல்யாணம் செய்துக்கலாம்...' என இரண்டிலுமே இருந்தது.


#தயாஜி

ஆகஸ்ட் 06, 2020

ரிஸ்க்கும் ரஸ்க்கும்...


ரிஸ்க்கு என்றால் ரஸ்க்கு சாப்பிடுவது போலதான் குமாருக்கும். இன்றைய கூட்டணி தேவாவுடன் ஆரம்பமானது.
சவால் விட்டு சம்பாதிப்பதுதான் குமாரின் முழு நேர வேலை. மற்றபடி கைச்செலவிற்காக பகுதி நேரமாக ஏதேதோ வேலைகளை செய்து வருகிறான்.

சவால் தொகை பெரிது என்பதால் இன்றைய சவாலும் பெரிதாக இருந்தது பேயாகவும் இருந்தது. தூரத்தில் இருக்கும் பேய் வீட்டிற்குச் சென்று திரும்ப வேண்டும்.  வீட்டின் பின் வாசல் கதவில் கையில் கொண்டு போன சாயத்தைப் பூச வேண்டும்.

விடிந்ததும் அந்த சாயம் சரியாக பூசப்பட்டிருந்தால் குமாருக்கு இரு வாரத்திற்கான தொகை கிடைக்கும். தேவாவும் குமாரும் புறப்பட்டார்கள். எப்போதும் உடனிருக்கும் சில நண்பர்கள் சொல்லி வைத்தார் போல இன்று காணவில்லை. இரவு என்பதால் பயந்துவிட்டார்கள் போல.

இருவரும் தயாரானார்கள். தேவா மீண்டும் ஒரு முறை செய்ய வேண்டியதைச் சொன்னான். குமாருக்கு அவசரம் தாங்கவில்லை. கையில் புதிய சாமி கயிறும் கழுத்தில் பளபளக்கும் முருகன் டாலரும் இருந்தன. கையில் சாய டின்னை எடுத்துக் கொண்டு பேய் வீட்டிற்கு நுழைந்தான். 

உள்ளே சென்றவன் நேரமாகியும் வரவில்லை. தேவாவிற்கு பயம் வரத் தொடங்கியது. கூப்பிட்டுப் பார்த்தான் கத்திப் பார்த்தான் கல்லெடுத்து அடித்துப் பார்த்தான் எந்த பதிலுமே இல்லை.

அப்போது ஏதோ ஒன்று மரத்தின் பின்னால் இருந்து தேவாவை பார்க்கிறது. மெல்ல அவன் பின்னால் அது வந்த வண்ணம் இருக்கிறது. 

எதையோ உணர்ந்த தேவா திரும்பவும் அவன் முன்னே அந்த உருவம் நிற்கவும் சரியாக இருந்தது. தேவாவிற்கு உயிர் போய் வந்தது. இதுவெல்லாம் ஒரு விளையாட்டா என்று குமார் மீது கோவித்துக் கொண்டான்.

இத்தனை பயம் உள்ளவன் என்னிடம் மட்டும் எதற்கு இப்படி ஒரு சவாலை விடவேண்டும் என கேட்டு சிரிக்கலானான். அப்போது குமாருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

"குமாரு எங்க இருக்க.. எவ்வளவு நேரம் கூப்டறது.. லைன் கிடைக்கவேயில்லை... தேவா அடிபட்டுட்டாண்டா.. பொழைக்க மாட்டான்னு சொல்லிட்டாங்க.. நாங்கலாம் ஆஸ்பிட்டல்லதான் இருக்கோம்.. நீயும் வந்துடுடா.........."

குமாரால் மேற்கொண்டு கேட்க முடியவில்லை. அவன் முன்னே நின்றுக்கொண்டிருந்த தேவா, உடல் முழுக்க சிவப்பு சாயத்தால் நனைந்திருந்தான்....


#தயாஜி

ஆகஸ்ட் 04, 2020

உணவு..தூக்கம் வரவில்லை. எவ்வளவு நேரம் தான் அப்படியே படுத்துக் கிடப்பது. சுவரின் வலது மூலையில் இருக்கும் பல்லி இதுவரை பதினைந்து தடவை வாலை ஆட்டிவிட்டது. பத்து தடவைக்கு மேல் சத்தம் போட்டுவிட்டது.

காற்றே வராத காற்றாடி வாசிக்கும் இசை, இப்போதெல்லாம் இம்சிப்பதில்லை. குமாருக்கு எல்லாம் பழகிவிட்டது. அவ்வப்போது புரண்டு படுத்து கட்டில் கொடுக்கும் சத்தத்தையும் காற்றாடி கொடுக்கும் இசையையும் ஒருங்கிணைப்பது சமயங்களில் ஜாலியாக இருக்கும். ஆனாலும் கட்டில் உடைந்துவிடுமோ என்கிற எண்ணம் குமாரை பயப்படுத்தவே செய்கிறது. 

நான்கு சுவர்களுக்கு மத்தியில் அவனது வாழ்வு முடிந்துவிடுவதை அவன் விரும்புவதில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பான். ஆனால் ஏதுவும் செய்யத் தோன்றாது.

வாழ்க்கையின் மீது ஒட்டியிருந்த கொஞ்சநஞ்ச ஒட்டுதலும் ஒதுங்கிக் கொண்டதும். காரணம்? தெரியவில்லை. தெரிந்துக் கொள்ள விரும்புவதில்லை.

அந்த பல்லி மெல்ல முன்னேறுவதைப் பார்க்கிறான். அது செல்லும் இடத்தில் ஒரு ஈ ஏனோதானோவென்று அமர்ந்திருக்கிறது. ஈ தப்பிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டான். யாரிடம் வேண்டினான் என தெரியவில்லை. பல்லியைப் பார்க்கவும் பாவமாக இருக்கிறது. ரொம்பவும் சப்பையான பல்லி அது. அநேகமாக இவன் இந்த அறைக்கும் வந்தபோது வழி மாறி வந்திருக்கலாம். வெளியேறத் தெரியாமல், எப்போதாவது இவன் சாப்பிட்டு கீழே சிந்தும் சோற்றுப் பருக்கை அதற்கு கிடைக்கும்.

இன்று இங்கே வந்திருக்கும் ஈ, அவன் அறையின் விருந்தாளியாக நினைக்கிறான். எப்படி ஒரு விருந்தாளியை இன்னொரு விருந்தாளி சாப்பிட அனுமதிப்பது. ஆனால் எப்படி பழைய விருந்தாளியைப் பட்டினி போடுவது.

அவனுக்குள்ளாக பல கேள்விகள் எழுந்தன. 

யாரோ ஒருவர் யாரோ ஒருவருக்கு உணவாவதை யார்தான் தடுக்க முடியும் என்கிற ஞானம் அவனுக்கு தோன்றியது. கிழித்துப்போட்டிருந்த தனது நண்பர்களின் புகைப்படங்களை பொறுக்கி எடுத்தான். மேஜை மீது கொட்டினான்.  பழையபடி ஒட்டினான். மிகவும் சந்தோசமான நாட்கள் அவை. 

கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மீண்டும் அவற்றை கிழித்துப் போட்டான். இப்போது பல்லியும் சத்தமிடுகிறது. திரும்பிப் பார்த்தான். ஈ அங்கு இருக்கவில்லை.

அந்த பல்லி நேராக தன்னை நோக்கி வருவதை கவனித்தான். எத்தனை பேர்தான் என்னை சாப்பிட்டு சக்கையாக்குவார்களோ என்கிற கேள்வியோடு அந்த பல்லியிடம் தன் கைகளை நீட்டலானான்.
 

#தயாஜி

ஜூலை 30, 2020

நானும் என் குறுங்கதைகளும் 1


தொடர்ந்து #குறுங்கதை கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு முறை எழுதும் போதும் புதிதான ஒன்றை முயல்வதாகவே நினைத்து எழுதுகிறேன். 

குறுங்கதைகளை வாசித்து பலரும் அவர்களின் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். இன்னும் சிலர் அவர்கள் வாழ்வில் நடந்தவற்றை பகிர்ந்துக் கொள்கிறார்கள். 

"இதிலிருந்து உங்களுக்கு கதை கிடைக்குதான்னு பாருங்க..?" என்றுதான் தொடங்குவார்கள். உண்மையில் அப்படி அவர்கள் சொல்லா விட்டாலும் அதிலிந்து எப்படியாவது கதையை உருவி எடுத்து விடுகிறேன். 

சமயங்களில் அவர்களுக்கு தெரியாமல் எடுத்த கதைகளை அவர்கள் குறுங்கதைகளாக வாசிக்கும் போது, அவர்கள் சொல்லாத உண்மை அதில் இருப்பதை கண்டு முழு கதையையும் ந்
சொல்லியிருக்கிறார்கள். சிலர் இப்படி நடந்திருந்தால் நிம்மதியாக இருந்திருப்பேன் என்கிறார்கள். 

எனக்கும் என் எதிரில் இருக்கும் மனிதருக்குமான பகடையாட்டம்தான் இந்த கதைகள். சமயங்கள் அவர்களாகவே என் கதைகளுக்காக காய்களை உருட்டிக் கொடுத்துவிடுகிறார்கள். அவர்கள் நன்றிக்குரியவர்கள்.சமீபத்தில் நான் எழுதிய #குறுங்கதை களின் ஒன்றான 'ஆவியுடன் பேசுவது எப்படி..?' என்ற குறுங்கதையை, ஆசிரியை ஒருவர் தன் மாணவர்களுக்கு சொல்லி அதிலிருந்து அவர்களுக்கான கதையை எடுத்துச் சொல்லியிள்ளார்.

இது குறித்து அவர் பகிர்ந்திருந்த புலனச்செய்தி எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதனை உங்களிடம் பகிர்வதில் அம்மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். 

அவ்வபோது #குறுங்கதை களுக்கு வாசகர்கள் பகிரும் இது போன்ற கருத்துகளை பகிரலாம் என நினைக்கிறேன்.

தொடர்ந்து வாசித்து கருத்துகளைப் பகிர்ந்துவரும் உங்களுக்கு என் அன்பும் நன்றியும்....

- தயாஜி

அது மட்டும் அல்ல...


     இயல்பாகவே உயரம் என்றால் பயம். ஏணியில் ஏறி நின்றாலும் கூட கொஞ்ச நேரத்தில் கால்கள் கதகளி ஆட ஆரம்பித்து விடும். நான் மட்டும் எப்படி சும்மா இருப்பது என்று இடுப்பும் அது பாட்டுக்கு ஒரு ஆட்டதை ஆடிக்காட்டும்.

   இன்னும் சொல்லப்போனால் தைரியமாக எறிவிடலாம். ஆனால் இறங்குவது என்பது , அதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. எதையாவது அல்லது யாரையாவது பிடித்துக் கொண்டுதான் இறங்க முடியும்.
உயரமாக இருப்பதால் மற்றவரை விட குறைவான ஏணிப்படியையே ஏறி சமாளித்து விடுவேன். ஆனால் உயரமான வேலை என்றால் துயரமான அதனைக் கடந்து ஏற வேண்டி வந்துவிடுகிறது.

   இந்த ஃபேபியா போதாதென்று தலையில் அடிபட்ட பின்பு, முதல் இரண்டு ஏணிப்படிகள் ஏறினாலே மயக்கம் வந்து கண்கள் இருட்டாகிவிடுகின்றன. கொஞ்சம் உயரம் என்றாலும் ஏதோ செய்கிறது.
ஆனாலும் அவ்வபோது அந்த இருண்டுவிடும் கண்களையும் மயக்கம் வரும் மண்டையையும் விளையாட்டாக அனுபவிக்கத் தோன்றும். வலித்த நினைவுகளை வழிந்து நினைத்து அழுவது போலதான். அதில் ஒரு சுவாரஷ்யம் இருக்கிறதே.

    இன்றும் அப்படி பத்தாவது மாடியில் இருந்து எட்டிப் பார்க்கத் தோன்றியது. வீட்டில் யாரும் கவனிக்கவில்லை. மெல்ல பால்கனி கதவை திறந்து வெளியேறினேன்.

    தலை வலிக்கத் தொடங்கியது. கால்கள் நடுங்கி கண்கள் இருண்டன. கையில் கம்பியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன். கண்கள் முழுவதுமாக இருட்டாவதற்குள் வானத்தைப் பார்த்துவிட முயன்றேன்.

   
  கீழே இருந்த பல விளக்கொளிகளைவிட வானில் இருந்த ஒற்றை நிலவொளி அத்தனை நிம்மதியைக் கொடுத்தது. இன்னொரு கையில் படமெடுக்க முயன்றேன். மங்கலாக விழுந்த சில படங்களில் ஒன்று மட்டும் பார்ப்பது ஏற்றதாய் இருந்தது.

     ஆனால் நான் பார்த்தது அந்த நிலவின் ஒளியை மட்டுமல்ல என்பது என் ஒருவனுக்குத்தானே தெரியும்....

#தயாஜி

ஜூலை 28, 2020

அன்புள்ள அக்காவிற்கு...

அக்கா..... 
    நீங்கள் இந்த கடிதத்தை வாசிக்கும் போது நான் இங்கிருக்க மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். உங்களைப் போன்ற சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களைப் பார்ப்பது கடினம். என்னைப் போன்ற பல பெண்களுக்கு நீங்கள் ஓர் உதாரணம். எத்தனையோ பெண்கள் உங்களால் நல்வாழ்வு வாழ ஆரம்பித்துள்ளார்கள்.

   உங்களைச் சந்திக்காமல் இருந்திருந்தால் நான் எப்படி எப்படியோ போயிருப்பேன். திக்கற்று கிடந்த எனக்கு நீங்கள் மறுவாழ்வு கொடுத்தீர்கள். உங்களை என் தெய்வமாகவேப் பார்க்கிறேன். எனக்கு மறுவாழ்வு தந்ததோடு எனக்கு உங்கள் வீட்டிலேயே அடைக்களம் கொடுத்தீர்கள். அங்கு நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.

    ஆனால் உங்கள் முகத்தைப் பார்க்காமல் செல்கிறேன். அதற்காக என்னை மன்னியுங்கள். குழந்தை இல்லாத உங்கள் வீட்டில் நீங்கள் என்னை கவனித்த விதத்தை எப்போதும் நான் மறக்க மாட்டேன். 

    என் இளம் வயதில் நான் தேர்ந்தெடுத்த வழி என் வாழ்நாளை அப்படியே புரட்டிப் போட்டது. தெய்வமே வருவது போலதான் நீங்கள் வந்தீர்கள்.

   உங்கள் குடும்பத்தில் நானும் ஒருத்தியானேன். நீங்கள் என்னை முழுமையாக நம்பினீர்கள். அது எப்படி அக்கா உங்களால் முடிந்தது. அதற்கு நான் தகுதியானவள் தானா.? ஆனால் நீங்கள் வைத்த அந்த நம்பிக்கைதான் என்மீது எனக்கே ஒரு மரியாதையைக் கொடுத்தது.

    என் வாழ்நாள் முழுக்க நான் உங்களுக்கு நன்றியோடு இருப்பேன். அந்த நன்றியை நான்  சுமந்தப்படியேதான் போகிறேன். போகத்தான் வேண்டும். 

   கடைசியாக உங்களிடம் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்; அக்கா உங்கள் கணவரையும் கவனித்துக் கொள்ளுங்கள். 

#தயாஜி

ஜூலை 26, 2020

ராமனும் கிருஷ்ணனும்   இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இன்றுதான் பிறந்தகம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. விமான நிலையத்தில் இருந்தே நேராக ராமனைப் பார்ப்பதற்காகத்தான் சென்றுக் கொண்டிருந்தான் கிருஷ்ணன். இவர்கள் இருவருக்கும் எப்படி இந்த பொருத்தமான பெயர் அமைந்தது என வியக்காதவர்கள் இல்லை. 

    இவர்கள் பழகியது என்னவோ ஒரு வருடம்தான். ஆனால் அவர்களின் நட்பு அவர்களின் பெயருக்கு ஏற்றார் போல அத்தனை நெருக்கமாக இருக்கிறது. 

   தற்கொலைக்கு முயன்ற தருணத்தில்தான் கிருஷ்ணன், ராமனைக் காண நேர்ந்தது. அவனது கண்களில் இருந்த தீர்க்கமும் அன்பும் கிருஷ்ணனுக்கு தன் வாழ்க்கையின் மீது  பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. அதன் பிறகு அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். 

    கிருஷ்ணன் தன் மீது கொண்ட தீரா அன்பின் காரணத்தால் அவனை சிலர் தவறாக பேசினார்கள். ராமனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் போல தோன்றியது. உடனே கிருஷ்ணனுக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கிக் கொடுத்தான். இரண்டு மாத பிரிவு என்றாலும் இருவரும் நொடிக்கு நொடி தொலைபேசியில் பேசிக் கொண்டும் முகத்தைப் பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். இருவருக்குள்ளும் எந்த ஒளிவுமறைவும் இல்லை. 

   இன்று, ராமனைக் கண்டதும் கிருஷ்ணனுக்கு கண்கள் கலங்கிவிட்டன. தன் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த முகம் அல்லவா அது. ராமனுக்கும் அவ்வாறுதான். இப்படியொரு அப்பழுக்கற்ற நட்பை காண்பது அறிதுதானே.

    அப்போழுதுதான் அவளும் ராமன் அருகில் வந்து நின்றாள். ராமன், தான்  அவளைத்தான் திருமணம் செய்யவிருப்பதாக ஏதோ பெயரைச் சொல்லி அறிமுகம் செய்தான். 

    இருவரையும் வாழ்த்திவிட்டு வேறெதையும் பேசாது கிளம்பினான் கிருஷ்ணன்.

     இரவு. வீடு. கதவு. அறை. அங்கு கிருஷ்ணன் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறான். அவனால் இன்னொரு இழப்பை தாங்க முடியவில்லை போலும்....


#தயாஜி

ஜூலை 25, 2020

ஆவிகளுடன் பேசுவது எப்படி ?    இது விளையாட்டல்ல. முதலில் உங்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். நம்மை மீறிய ஏதோ ஒன்று இருப்பதை நம்ப வேண்டும். அல்லது இருப்பதாக நம்ப வேண்டும். அதுதான் நாம் செய்யவிருக்கும் காரியத்திற்கான முதல் வேலை.

      நெகட்டிவ் பாசிட்டிவ் போல எல்லா இடத்திலும் இரண்டு தரப்புகள் இருக்கின்றன. ஒன்று தூய சக்தி இன்னொன்று தீய சக்தி. அந்த இரு வித சக்திகளிலும் பல்வேறு நிலைபாடுகள் உள்ளன. ஆனால் நமக்கு அவை தேவையற்றவை.

   ஆவியுடன் பேசுவதற்கான அடிப்படைகளின் மூலத்தை சொல்லி விட்டேன். மேற்கொண்டு செய்ய வேண்டியவைக்கு வரலாம்.

   உங்களுக்கு நன்கு பழக்கமான ஒருவரின் புகைப்படத்தையும் பெயரையும் ஏற்பாடு செய்துக் கொள்ளுங்கள். மறந்துவிட்டேன்! அவர் செத்துப் போயிருக்க வேண்டும். அதற்காகவே ஒரு கொலையை செய்துவிட்டு என்னை போலீஸீல் கோர்த்து விட்டுவிடாதீர்கள். 

   முக்கியமாக செத்துப்போனவர் நல்லவராக இருக்கவேண்டும். அது சிக்கல் இருக்காது. நல்லவர்களைத்தாம் சீக்கிரம் கொன்றுவிடுவார்களே..

    நள்ளிரவு 12.00க்கு சரியாக இருட்டறையில் அமர வேண்டும். மெழுகுவர்த்தி இருக்க வேண்டும். பிடித்தமான வாசனையுள்ள ஊதுபத்தி இருக்க வேண்டும். எடுத்து வைத்திருந்த இறந்தவரின் புகைப்படம் இருக்க வேண்டும். அதன் கீழ் வெள்ளைக் காகிதத்தில் சிவப்பு வண்ணத்தில் அவரின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள். இப்பொழுது கண்களை மூடிக் கொள்ளுங்கள் (உடனே அல்ல.!! முழுக்க வாசித்து முடித்த பின்). ஆழ்ந்து மூச்சை இழுத்து விடவும். மெல்ல விட வேண்டும். அவசரப்பட்டு முழுக்கவும் விட்டுவிடாதீர்கள். அப்பறம் உங்கள் புகைப்படம் இன்னொருவருக்கு தேவைப்பட்டுவிடும்.

      எழுதி வைத்த பெயரை மெல்ல மெல்ல சொல்ல வேண்டும். அப்படியே கண்களை மூடிக்கொள்ள வேண்டும். விடாது அந்த பெயரைச் சொல்ல வேண்டும். அறை முழுக்க அந்த பெயர் நிறைய வேண்டும். உங்கள் உடல் தானாக சிலிர்க்கத் தொடங்கும். மெல்ல உங்கள் கைகளில் அதிர்வு ஏற்படும். நீங்கள் கூப்பிட்ட ஆவி உங்கள் முன் வந்துவிட்டதற்கான அறிகுறி இதுதான்.

   கண்களைத் திறக்க வேண்டும். இப்போது உங்கள் முன் ஒரு வெண்மேகம் வடிவில் ஓர் உருவம் தெரியும். அதன் ஒளி உங்கள் கண்களைக் கலங்கச் செய்யும். அதுதான் நாம் பேச அழைத்த ஆவி என அறிக. அதன் பிறகு நீங்கள் ஆவியுடன் பேச ஆரம்பிக்கலாம்.

   ஒரு வேளை அப்படி ஏதும் நடக்கவில்லை என்றாலோ ஆவி வரவில்லை என்றாலோ கவலை வேண்டாம். எனக்கும் வரவில்லைதான். இருவரும் சேர்ந்து இன்னொரு முறை முயற்சிக்கலாம்.


#தயாஜி

ஜூலை 21, 2020

நானே இன்னும்...


   "இவன் பண்ணிருக்கற காரியத்துக்கு இவனை அடிக்காம என்ன செய்ய சொல்றீங்க...?"

 "..."

 "நீங்க ஒன்னு.. இவன் பண்ண காரியத்துக்கு இவனை...."

"..."

   "என்ன பேசறீங்க நீங்க....??என்ன பேசறீங்க...? எப்படி விட முடியும்..? இன்னிக்கு இவனை அடிக்கற அடில....."

"..."

   "நானா இருக்கிறதால அடிச்சிகிட்டு இருக்கேன்.. வேற யாரும் இருந்தா இந்நேரத்துக்கு இவனை கொலையே செய்திருப்பாங்க...."

"..."

   "விடுங்க.... என்னைய தடுக்காதீங்க.. இவனோட கை காலை ஒடிச்சாதா எனக்கு நிம்மதி... இவன் பண்ணிருக்கற காரியத்துக்கு...."

"..."

  "பின்ன என்னங்க பின்ன... மொளைச்சி மூனு இல கூட வரல.. இவனை..."

"..."

 "என்னைய தடுக்காதீங்க... இன்னையோட இவன் கண்ணை நோண்டிடறேன்..."

"..."

   "என்ன காரியம் பார்த்திருக்கான் தெரியுமா இவ...."

"..."

   "அட இருங்க நாலு அடி அடிச்சிக்கிறேன்..."

"..."

  "என்ன காரியம் தெரியுமா செஞ்சிருக்கான்...? என் மச்சினிச்சி குளிக்கறத வேடிக்கை பார்த்திருக்காங்க..."

"..."

 "ஏது..! சின்னப்பையன் மன்னிச்சிடனுமா..?"

"..."

  "எப்படிங்க இவனையெல்லாம் மன்னிக்கிறது... அவள நானே இன்னும் பாக்கல தெரியுமா......?"

"!!!"


#தயாஜி

ஜூலை 14, 2020

WWW.செய்வினை.COM


    மார்க்கெட் சென்று வந்தவன் தூங்குகிறான்.  அதிகாலை நான்கு மணிக்கே எழுப்பி விட்டிருந்தாள். இதோடு பத்து மணி வரை தூங்கலாம். தொந்தரவு செய்ய மாட்டாள். சமைப்பதற்கு முன் வாசலை கூட்டிப் பெருக்கும் பழக்கம் அவளுக்கு உண்டு. பிறகு சமைத்துவிட்டு கணவனை எழுப்புவாள். அதன் பிறகு மத்தியானம் வரை அவள் தூங்குவாள்.

    வாசல் விளக்கை போட்டாள். கதவைத் திறந்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னமோ ஒன்று ரத்தத்தில் நனைந்து கிடக்கிறது. எலியோ? இல்லை ! வேறு என்னவாக இருக்கும். மெல்ல அதன் அருகில் வருகிறாள்.

     கோழியின் தலை. அதிலிருந்து ரத்தம் வழிந்திருந்தது. அதன் கண்கள் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஐயய்யோ!!
எவளோ செய்வினை வச்சிட்டா... !அப்படியே மனதார மாரியாத்தாவையும் காளியாத்தாவையும் கூம்பிட்டாள். 

    உடனடியாக அந்த கும்பகர்ணனை எழுப்பி எதாவது செய்ய வேண்டும். உள்ளே ஓடத்தொடங்கினாள். அவசரத்தில் கால், வாசல் படியில் இடித்து விட்டது. உயிர் வலி போனது. குழம்பியிருக்கிறாள். அவள் சொல்ல நினைத்தது, வலி உயிர் போனது. அந்த உயிரை அதிக தூரம் போகாதவாறு பிடித்து இழுத்துக் கொண்டாள். கால் சுண்டு விரலில் ரத்தம் வழியத் தொடங்கியது.  உலகத்திலேயே வைத்த செய்வினை  உடனே வேலை செய்தது இதுவாகத்தான் இருக்கும். 

     கணவனின் முகத்தைப் பார்ப்பதற்கு முன் பல முகங்கள் அவள் முன் வந்துச் சென்றன. 

ராசாத்தி - போன வாரம் சண்டை போட்டிருந்தாள்..

கல்யாணி - ரெண்டு நாள் முன்னாடி சண்டை போட்டிருந்தாள்.

காயத்ரி - நேற்று சண்டை போட்டாள்

பங்கஜம் - நாளைக்கான சண்டையை இனிமேல்தான் யோசிப்பாள்.

    இதில் யாராவதுதான் செய்வினை வைத்திருக்க வேண்டும். அந்த செய்வினைக்கு இன்றோடு ஒரு செயல்பாட்டு வினையை வைத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டாள். 

    அடித்து எழுப்ப, கணவனும் அடி வாங்கி எழுந்து உட்கார்ந்தான். விபரத்தைச் சொன்னாள். அரை தூக்கத்தில் கணவன் தலையில் அடித்துக் கொண்டான். காலையில் மார்க்கேட்டில், தான் வாங்கி வந்திருந்த வெட்டப்பட்ட கோழியில் இருந்து தலை தவறி வாசலில்  விழுந்திருக்கும் என்று சொன்னான்.

    இப்போதுதான் அவளுக்கு நிம்மதி. கணவனை தூங்கச் சொன்னாள். இயல்பு நிலைக்கு திரும்புகிறாள்.

   ஆனால் இன்று அவளது கணவன் கோழி இறைச்சியை வாங்கவே இல்லை என்ற தகவல் எனக்கும் இப்பொழுது உங்களுக்கும் மட்டும் தெரியும்.

#தயாஜி

ஜூலை 12, 2020

காதல் கடிதம் எழுதவே


    அனு, அவள் பெயர். சின்ன பெயர். அதற்கு ஏற்றார் போல குட்டி உருவம். காதருகில் சுருள் முடி. 'ஸ்ப்ரிங்' போல அவள் நடக்கும் ஒவ்வொரு அடிக்கும் மேலும் கீழும் சென்று வருகிறது. 

     கண்களில் எதையோ தேடும் தீவிரம். எதனையும் பொருட்படுத்தாதப் பார்வை. சிரிக்கும் போது வலது கன்னத்திலிருந்து துருத்தித் தெரியும் சிங்கப்பல்.  இல்லை அவளுக்கு அது அணில் பல். தேர்ந்த கைகள் செதுக்கிய வடிவ முகம். அம்புகள் இல்லாமல் குத்திச் செல்லும் வில் புருவம். 

     என் வாழ்க்கையில் மிக முக்கிய நாள் அவளை சந்தித்ததுதான். அப்போது நான் என் பெயரை பதிவு அட்டையில் எழுத வேண்டும். எழுதிக் கொண்டிருந்தேன். ஒரு வாசனை என்னை மயக்கியது. அந்த வாசனையை வர்ணிக்கத் தெரியவில்லை. அது வாசனை மட்டுமல்ல எனக்கான வசியம். திரும்பிப் பார்த்தேன். அவள் நின்றுக் கொண்டிருந்தாள். அடுத்ததாக அவள் பெயரை எழுத வேண்டும்.

   வாசனையை முகர்ந்தபடியே வழிவிட்டேன். வகுப்பில் வலது மூலை நாற்காலி எனக்கும் ஒடது மூலை நாற்காலி அவளுக்கும் கிடைத்தன. படிவம் ஒன்றுக்கான வகுப்பு முழுக்க அவளின் வாசனையே நிறைந்திருந்தது.

   இத்தனை நாட்களாய் பார்த்திருந்த தமிழ்ப்படங்கள், கேட்டிருந்த தமிழ்ப்பாடல்கள் ஏதும் பயனில்லாமல் போகவில்லை. அப்படியொரு தேவதையை எனக்கு அடையாளம் காட்டின.  புத்தகப்பையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்தேன். நடுப்பக்கத்தைக் கிழித்தேன்.
'அன்புள்ள அனுவுக்கு....' என்று தொடங்கி, கடைசியில் 'உன் அன்புக்காக மணி...' என முடித்தேன். இடைபட்ட இடம் முழுக்க கவி அருவிகளை ஓடவிட்டேன். அவை தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்தன. எழுதியவன் என்றுக்கூடப் பார்க்காமல் என் முகத்தைக் கூட அவை நனைத்தன.

     பதிமூனாவது வயதில் என் வாழ்நாளில் நான் எழுதிய கவிதையும் காதல் கடிதமும் ஒன்றாக அமைந்தது எத்தனை அபூர்வம். அன்றைய முதல் நாள் வகுப்பு முடிந்தது. துள்ளி குதித்துக் கொண்டேன். அனுவிடம் சென்றேன். கடிதத்தைக் கொடுத்தேன். "படிச்சிட்டு நாளை வந்து சொல்லு.." என்றேன். தேவதை தலையாட்டினாள்.

    மறுநாள். பள்ளி மணி அடிக்கப் போகிறது. அனு  என்னைத் தேடி வந்தாள். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். அவள் கையிலிருந்த கடிதத்தைக் கொடுத்தாள். நேற்று நான் கொடுத்த அதே கடிதம். எனக்கு புரியவில்லை. நான் சட்டென 'இதயம்' முரளியாக மாறி, "என்னை உனக்கு பிடிக்கலையா....?" என்றேன்.

   "இத்துல்லா என்னா எளுதிருக்கா.. என்க்கு தமிலு தெரியாது...." என்றாள்.

   பள்ளி மணி அடித்தது. அனு செல்கிறாள். ஒரு தமிழ் துரோகியால் என் தேவதைக்கு ஒரு கவிஞனின்  கடைசிவரை தெரியாமலேயே போனதை நினைத்து இன்றுவரை நான் வருந்திக்கொண்டு இருக்கிறேன்.


#தயாஜி
ஓவியம்- ஆதித்தன் மகாமுனி

ஜூலை 11, 2020

தங்கக் காலணி


    அந்த பெயரை அத்தனை சீக்கிரத்தில் மறந்திருக்கக் கூடாது. நான் அப்போது ஆரம்பப்பள்ளி படித்துக் கொண்டிருந்தேன். படிப்பு வந்ததோ இல்லையோ, பந்து விளையாட்டு நன்றாகவே வந்தது.

    நான் பந்தை உதைக்கும் லாவகத்தைப் பார்த்த கணித ஆசிரியர் பொறாமை பட்டார். அதற்காகவே ஒவ்வொரு முறையும் கணித தேர்வில் தோல்வி அடையும் போது நான் சதம் அடிக்கும் காலிலேயே ரோத்தானில் அவரும் சதம் அடிக்க ஆரம்பித்தார். அப்போது பந்து விளையாட்டு செய்திகளை குறிப்புகளை தகவல்களை வானொலியிலும் தொலைக் காட்சியிலும் மட்டுமே தெரிந்துக் கொண்டோம்.

    கால்பந்து வீரருக்கு முதன் முதலாக தங்கக் காலணி கிடைக்கவிருக்கும் செய்தியைக் கேட்டு நானும் நண்பர்களும் கொண்டாடினோம். எங்கள் வகுப்பு ஆசிரியர்தான் அந்த தகவலைச் சொன்னார். மேலும் தங்கக் காலணி பற்றி அவர் கொடுத்திருந்த வருணனை அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது.

    ஒரு விளையாட்டு வீரனுக்கு தன் துறை சார்ந்து இப்படி ஒரு அங்கிகாரம் கிடைக்கத் தொடங்கியிருப்பது  குறித்து ஆசிரியர் சொல்லும் போது எங்களுக்கு புல்லரித்தது. காவல் துறையினருக்கு தங்க துப்பாக்கி, மருத்துவர்களுக்கு தங்க ஸ்டெதஸ்கோப் இப்படி அவரவர் செய்யும் வேலைக்கு ஏற்றார் போல தங்கம் கொடுப்பார்கள் என நாங்கள் நம்பிக் கொண்டோம்.

    ஏனோ கணித ஆசிரியர்க்கு அதில் எந்த ஆவலும் சந்தோசமும் இல்லை. அதை பற்றி வகுப்பில் பேசி நண்பன் திட்டும் அடியும் வாங்கியிருந்தான். அவரைப் பொருத்தவரை படிப்பும் வேலையும்தான் ஒருவனுக்கு முக்கியம் அதுதான் எதிர்காலம் என்பார்.

    பல ஆண்டுகள் கழித்து, நேற்று அந்த நண்பஞ் ஆச்சர்யமாக என்னை அழைத்திருந்தான். செய்தி தெரியுமா என்றான். எனக்கு புரியவில்லை. அந்த கால்பந்து விளையாட்டு வீரர் பெயரைச் சொன்னான். எனக்கு ஞாபகத்துக்கு வந்து விட்டது. ஹப்பா..! எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. நாட்டின் முதல் தங்கக் காலணியை பெற்ற வீரரை மறக்க முடியுமா என்றேன்.

    நண்பனின் குரல் மாறியது. எனக்கு பக்கென்றது. அன்று தங்கக் காலணியை பெற்ற அந்த வீரர் தற்போது அதனை ஏலத்தில் விற்று விட்டதாக சொன்னான். எனக்கு கோவம் வந்துவிட்டது. நண்பனையும் திட்டினேன். அந்த விளையாட்டு வீரரையும் திட்டினேன். என்ன இது முதல் தங்கக் காலணியை போய் விற்று விட்டாரே.. பணமா முக்கியம்... எத்தனை பெரிய கௌரவம் அது...

    திட்டி முடித்ததும். நண்பன் தொடர்ந்தான். "அவரோட மருத்துவ செலவுக்கு அவசர தேவையாம்.. அவருக்கு வேற வழி தெரியலன்னு சொல்லி அழுதாருடா...."

    "என்னடா சொல்ற... அவருக்கா இந்த நிலமை...?"

    "டேய் அன்னிக்கு கணக்கு டீச்சர் அறைஞ்சது எனக்கு இப்பதாண்டா வலிக்குது..."

#தயாஜி
ஜூலை 10, 2020

ஏய் டூப்பு..


   எல்லாம் தயார். ஆனாலும் மீண்டும் பரிசோதிக்க வேண்டும். நாயகன் தனக்கான டெம்போவில் இருந்து இறங்கினார். ரசிகர் பட்டாளம் ஆரவாரம் செய்தது. தனது கறுப்பு கண்ணாடியை கழட்டி, ரசிகர்களைப் பார்த்து கைசயைத்தார். ரசிகர் பட்டாளம் துள்ளி குதித்தது.

   தொடர்ந்து பல வெற்றி படங்களைக் கொடுத்த நாயகனின் அடுத்த படபிடிப்பு. நாயகனின் சிறப்பே சண்டைக் காட்சிகள் தான். படத்திற்கு படம் மாறுபட்ட சண்டைக் காட்சிகள். புதிய யுக்தி முறைகள். பார்க்கின்றவர்களை பரபரப்பில் ஆழ்த்திவிடும் ரிஸ்க்கான காட்சிகள்.  

   இன்றைய படபிடிப்பு தளத்தில் எடுக்கவிருக்கும் காட்சிதான் இந்த திரைப்படத்தின் 'செல்லிங் பாயிண்ட்' என்பதை அறிந்துக்கொண்ட தயாரிப்பாளரின் நண்பர், இதனை விளம்பரப்படுத்தி டிக்கட்டும் போட்டுவிட்டார். 

     பதினைந்தாவது மாடியில் இருந்து கீழே குதிக்க வேண்டும். அதோடு பத்தாவது மாடிவரை வளர்ந்திருக்கும் மரத்தில் குறிப்பிட்ட கிளையில் தொங்கி அங்கிருந்து பல்டி அடுத்து கீழே குதிக்க வேண்டும். இதுதான் நாயகனின் அறிமுகக் காட்சி.

    நாயகனும் சில துணை நடிகர்களும் பதினைந்தாவது மாடியில் இருக்கிறார்கள். இயக்குனரும் சண்டை மாஸ்டரும் காட்சியை மீண்டும் ஒரு முறை நாயகனுக்கும் துணை நடிகர்களுக்கும் விளக்குகிறார்கள். நாயகனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அமர்ந்தபடியே கற்பனையில் குதித்து, தொங்கி, பல்டி அடித்து குதிக்கிறார். 

    மீண்டும் அங்குள்ள பாதுகாப்பு அம்சங்களை பரிசோதித்தார்கள். நாயகனும் அவர் பங்கிற்கு சிலவற்றை பிடித்தும் இழுத்தும் பார்த்தார். எல்லோரும் அந்த ரிஸ்க்கான காட்சிக்கு தயாரானார்கள். 

    பதினைந்தாவது மாடியில் இருந்து நாயகன் மீண்டும் தன் ரசிகர்களுக்கு கையை காட்டுகிறார். பதிலுக்கு அவர்கள் எதை காட்டுகிறார்கள் என அவ்வளவு தூரத்தில் தெரியவில்லை. 

   அவர்கள் சிலர் நாயகனின் வீரசாகசத்திற்காக பிரார்த்தனைகள் செய்யத் தொடங்கினர். நாயகன் ஒரு முறை நன்றாக மூச்சை இழுத்துவிட்டார். கண்களை முடி சில வினாடிகள் எதையோ சொன்னார். கண்களைத் திறந்தார். சட்டென திரும்பி கடகடவென மின் தூக்கிக்குச் சென்று கீழே இறங்கலானார்.

    மாடியில் இருந்து ஒருவர் ஓடி வந்து எகிரி குதிக்கிறார். கூட்டத்தில் ஒரே கூச்சல். கைத்தட்டல். கத்தல். குதித்தவர் பத்தாவது மாடியில் இருந்த மரக்கிளையைப் பிடித்துவிட்டார். அங்கிருந்து பல்டி அடித்து இன்னொரு பாய்ச்சல். குறிப்பிட்ட இடத்தில் அவர் குதிக்கவும், மின் தூக்கியில் இறங்கிய நாயகன் வெளியில் வரவும் சரியாக இருந்தது.

    வெளியில் நாயகனைப் பார்த்த ரசிகர் பட்டாளம் மீண்டும் சத்தமிட்டு ஆரவாரம் செய்தது. நாயகன்  அவர்களுக்கு கையைக் காட்டிவிட்டு, தன் டெம்போவிற்கு ஓய்வெடுக்க செல்கிறார்.

    கீழே குதித்து அதிக நேரம் எழாமல் இருந்தவனைப் பார்த்து, "ஏய் டூப்பு.. சீக்கிரம் மேல வாயா... இந்த சீன் சரியா வரல..."


#தயாஜி

ஜூலை 09, 2020

எழுத்தாளரின் வாசக கடிதம்


   அவர் பிரபலமான எழுத்தாளர். உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஒவ்வொரு வாரமும் அவரது படைப்புகளில் ஏதாவது ஒன்று இதழ்களில் வெளிவந்துவிடும். அடுத்த வாரமே அவரின் படைப்பை குறித்த ஆழமான விமர்சனமும் வாசக கடிதங்களும் அதே இதழில் பிரசுரமாகும்.

   அவர் எழுதும் முழு பக்க கதை என்றாலும், ஆள் காட்டி விரல் அளவு துணுக்கு என்றாலும் மறு இதழிலேயே பலர் அதனை பாராட்டி விமர்சனம் எழுதிவிடுவார்கள்.

   அப்படியான தீவிர வாசகர்கள் இருப்பது ஒரு வகையில் சிக்கலையும் கொடுத்தது. சமயங்களில் பத்திரிகை ஆசிரியரே கூட இவரை அழைத்து அடுத்த இதழுக்கு ஏதாகிலும் படைப்பை அனுப்பும்படி கேட்டு இம்சிப்பார். 

   இவரிடம் இருக்கும் ஒரே சிக்கல் இன்றளவும் கையெழுத்திலேயே எழுதி அனுப்புவார். வேறு வழி இல்லாத சமயங்களில் பத்திரிகைகளில் இருந்து யாராவது இவருக்கு 'போன்' செய்து இவர் சொல்லச்சொல்ல எழுதிக்கொண்டு பிரசுரத்திற்கு அனுப்புவார்கள். அந்த சமயங்களில் இவர் யாருக்கும் அதிக சிரமம் கொடுக்காது சில துணுக்குச் செய்திகளை மட்டும் கொடுப்பார். கட்டை விரல் அளவிற்கான அந்த துணுக்கு செய்திக்குக் கூட மறு வாரமே பல வாசக கடிதங்கள் வந்துவிடும்.

   அந்த எழுத்தாளருக்குத்தான் அப்படியொரு சம்பவம் நடந்தது. ஒரு சிறு தவறு அவரை செய்வதறியாது திகைக்க வைத்துவிட்டது. அவரின் எழுத்து வாழ்வே இனி அவ்வளவுதான் என யாரோ சொல்ல ஆரம்பித்தார்கள்.

   அவரின் கைகள் நடுங்கின. காலையில் தான் பத்திரிகைகளுக்கு அனுப்பிய படைப்புகளை ஒரு முறை மனதின் அசை போட்டார். பதட்டத்தில் அவை வேகமாக அசை போட்டுக் கொள்வதால் அவரால் நிதானிக்க முடியவில்லை.

   ஒரு முறை மூச்சை நன்றாக இழுத்துவிட்டார். படபடப்பு குறையத் தொடங்கியது. நன்றாக நினைவுக்கூரலானார். ஆமாம் காலையில் மூன்று படைப்புகளை எழுதி மூன்று பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அதில் ஏதோ ஒன்றில், படைப்பிற்கு அடுத்த வாரம் வர வேண்டிய வாசக கடிதத்தையும் இணைத்து அனுப்பி விட்டார். அதனை அடுத்த வாரம்தான் அனுப்ப வேண்டும்.

   பல பெயர்களில் இவருக்கே இவரே எழுதியிருந்த வாசக கடிதங்களில் ஒரு கடிதம் காணாமல் போனதில் இருந்து அவரால் வேறெதையும் யோசிக்க முடியவில்லை.

   ஒரு பிரபலமான எழுத்தாளன் எதற்கெல்லாம் பதட்டப்பட வேண்டியுள்ளது..

#தயாஜி

ஜூலை 08, 2020

ஒரு கசமுசா கதை

   
   திரையரங்கம். சமீபத்தில் கொரிய படங்களுக்கு ரசிகைகள் அதிகமாகி விட்டார்கள். அதனால் மொழி விளங்கா விட்டாலும் பரவாயில்லை என ஒரு கொரியன் படத்திற்கு சென்றான். படத்திற்காக அல்ல பார்வையாளர்களுக்காக.

      முதல் அரை மணி நேரத்திற்கு யார் நாயகன் யார் நாயகி என கண்டு பிடிப்பதற்கே நாக்கு தள்ளிவிட்டது. இன்னும் ஒரு மணி நேரத்தில் படம் முடிந்துவிடும். அதற்குள்ளாக தான் வந்திருந்த வேலையை செய்ய வேண்டும். இல்லையென்றால் அடுத்த கொரியன் படம் வரை தாங்காது.

     மேற்கொண்டு யார் யார் என தேடப் போவதில்லை. எல்லார் மூக்கும் ஒரே சப்பையாகத்தான் இருக்கிறது. அதை வைத்து எங்கிருந்து கண்டு பிடிப்பது. ஆனாலும்  ஆண்டவன் அவர்களுக்கு மூளையை கொஞ்சம் அதிகமாகத்தான் கொடுத்திட்டான் போல. என்னமா கதை சொல்கிறார்கள்.

     பக்கத்தில் இருந்தவளை பார்த்து சிரித்தான். அவளும் சிரித்தாள். ஆஹா நமக்கு அதிஷ்டம் அடித்துவிட்டதென நினைத்திக் கொண்டான். 

     ஏதோ ஒன்று மெல்ல அவனது வலது கையை உரசியது. அவளைப் பார்த்தான். மீண்டும் சிரித்தான். இவனும் இளித்தான். அந்த ஒன்று மீண்டும் அவன் கையை உரசியது. சட்டென அதனைப் பிடித்துக் கொண்டான். அவளிடமிருந்து மெல்லிய சத்தம் வந்தது. அவன் எதிர்ப் பார்த்ததுதான்.

     இருவர் முகங்களும் திரையைப் பார்க்க, கைகள் மட்டும் ஒன்றோடு ஒன்று பிணைந்துக் கொண்டன. தன் நாற்காலி இடுக்கில் இருந்த அவளின் கையை அவன் பற்றி பிசைந்தான். அது அத்தனை மிருதுவாக இருந்தது.  அவனுக்குள் என்னென்னமோ செய்தது. திரை வெளிச்சத்தில் தெரிந்த அவளது அழகிய முகத்தை வெளிச்சத்தில் பார்க்க ஏங்கினான். அவளது சப்பை மூக்கை தன் கூர் மூக்கால் உரசுவதாய் கற்பனைகள் எழுந்து அவனை குதூகலப்படுத்தியது.

பேச்சை ஆரம்பிக்க நினைத்தான். 
"ரொம்ப குளிருதா..?" என்றான். "இல்லையே" என்றாள்.
"பின் ஏன் கையுறை போட்டிருக்க...?"
"கையுறையா...? நான் போடலையே..."  என தன் இரு கைகளையும் எடுத்து அவன் முன் காட்டிவிட்டு மீண்டும் திரை பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

    அப்படியென்றால் தான் இதுவரை பிடித்திருந்த கை யாருடையது என வலது பக்கம் திரும்பி ஆழ்ந்து பார்த்தான். அது கையல்ல பின்னால் அமர்ந்திருந்தவனின் கால். அவன் தன் 'சாக்ஸ்' போட்ட காலைதான் இவனுடைய நாற்காலி இடுக்கு வரை நீட்டியிருக்கிறான்.

    அந்த காலுக்கா இதுவரை மசாஜ் செய்தோம் என நினைத்தவன் வெளியேற எழுந்தான். பின்னால் அமர்ந்திருந்தவனும்  எழுந்து இவனை பின் தொடரத் தொடங்கிவிட்டான்.

#தயாஜி

ஜூலை 07, 2020

இது பேய்க்கதை அல்ல..


   பூஜை நடந்துக் கொண்டிருக்கிறது. பூசாரியும் அவரது உதவியாளனும் மாற்றி மாற்றி மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் இன்று பேயை ஓட்டிவிடுவார்கள் என அங்கிருந்தவர்கள் நம்புகிறார்கள்.

   சில நாட்களுக்கு முன்பு. இரவில் வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்த சமயம். சிறுநீரும் குமாருடன் வந்திருந்தது. வீட்டிற்கு செல்லும் வரை தாங்காது. பக்கத்தில் இருந்த மரத்தில் சிறுநீரை இறக்கி வைத்து, அங்கு அமர்ந்திருந்த பிசாசு ஒன்றை ஏற்றிக் கொண்டான்.

   அன்று ஆரம்பித்தது எல்லாம். தானாக குழாய் நீர் திறந்துக் கொள்கிறது.  இரவில் சமையல் அறையில் பாத்திரங்கள் உருள்கின்றன. தொலைக்காட்சியும் பேட்டரி இல்லாத பழைய வானொலியும் தானாக பாடவும் பேசவும் செய்கின்றன.

    கொரோனாவுடன் வாழப் பழகிய சமயம் அது. பிசாசுடன் வாழப் பழக விரும்பவில்லை. குமாரும் அவனது நண்பர்களும் எப்படியாவது பிசாசை விரட்ட முயன்றார்கள். அப்போது, முகநூலில் 'உங்கள் வீட்டில் பேய் இருக்கிறதா?' என்ற பக்கம் கண்ணில் பட்டது. தொடர்பு கொண்டு முன்பணம் அனுப்பி இன்று பூஜையும் நடந்துக் கொண்டிருக்கிறது.

    பேய்ப்படங்களில் வருவது போல பூஜைக்கு எந்த இடையூறும் வரவில்லை. சின்னதாய் இடைஞ்சல் கூட இல்லை. ஜன்னல் திரை கூட அசையவில்லை என்பது குமாருக்கு சந்தேகத்தைக் கொடுத்தது.

   பூசாரி இதனை கண்டு கொண்டார். கஸ்டமர்களின் சந்தேகம் அவர் வருமானத்தை பாதிக்கும். கொஞ்சம் விளையாட்டு காட்ட நினைத்தார். 'ஆ...ஊ...' என ஏதோ மந்திரத்தை உரக்கச் சொன்னார்.  கையில் ஒரு எலுமிச்சைப் பழத்தை எடுத்தார். எல்லோர் பார்வையில் படும்படி வைத்தார். 

   அது மெல்ல அசைய ஆரம்பித்தது. இதான் சமயம் என பூசாரி ஒவ்வொருவரையாகப் பார்க்கலானார். கடைசியில் நின்றுக்கொண்டிருந்த பெண்ணிடம். "ஏய் பொண்ணு.. போய் கத்தி கொண்டு வா.." என்றார். அவள் அசையவில்லை. 

   "உன்னைதான் பொண்ணு.. போய் கத்தியை எடுத்துவா..." என அதட்டினார். இப்போது குமாருக்கும் அவனது நண்பனுக்கும் நடுக்கம் வந்தது.

    "சாமி இந்த வீட்டுல நீங்க ரெண்டு பேரும் நாங்க ரெண்டு பேரும்தான் இருக்கோம்..
பொண்ணுங்க யாருமில்லையே....!!!" என்று குமாரின் நண்பன் சொல்லவும் விளக்குகள் அணையவும் சரியாக இருந்தது.

    பூசாரி அலரத் தொடங்கினார். காரணம் தெரியவில்லை. ஏனெனில் இது பேய்க்கதை அல்ல. பேயின் கதை.

#தயாஜி

ஜூலை 06, 2020

அவளின்னும் பிறக்கவில்லை


   அவளும் எதிர்ப்பாக்கவில்லை. சட்டென கடவுள் கண்முன் தோன்றுவார் என யார்தான் எதிர்ப்பார்ப்பார்கள். நம்பவில்லை. அவளுக்கு அதிலெல்லாம் நம்பிக்கையும் இல்லை.

   கண் கூசும் வெளிச்சத்தைக் கடவுள் குறைத்துக் கொண்டார். அவளால் இப்போது ஓரளவிற்கு கடவுளைப் பார்க்க முடிந்தது. ஆனாலும் அவளின் கண்கள் ரொம்பவும் சுருங்கியிருந்தன. 

   "யார் நீங்கள்... எதற்கு இங்கு வந்து விளக்கு பிடித்துக் கொண்டு நிற்கிறீர்கள்..?"

    கடவுள் அதைக் கேட்டு சிரித்தேவிட்டார். சிரித்தவாக்கிலேயே தன்னை அறிமுகம் செய்தார். அவள் நம்பவில்லை.

   நம்பியவர் கண்களுக்குத் தெரிந்தாலே நம்ப யோசிப்பார்கள். இப்படி நம்பிக்கையில்லாதவள் கண்களுக்கு கடவுள் தெரிகிறேன் என்றால் எப்படி நம்புவாள். இருந்தும் அவளுக்கான மீட்டிங்கிற்கு இன்னும் நேரம் இருப்பதால் கொஞ்ச நேரம் டைம் பாஸ் செய்ய நினைத்தாள்.

   கடவுள் அதனைக் கண்டு கொண்டார். அவரே உரையாடலைத் தொடங்கினார். அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது. அது அவளின் உரிமை எனவும் அதற்கான முடிவெடுக்க தன் கணவனுக்குக் கூட உரிமை இல்லை என்றாள்.

   "உயிர்களின் அத்தியாவசிய தேவைகளின் ஒன்றுதான் இனவிருத்தி. அதற்குத்தான் ஆண் பெண் இரு வெவ்வேறு தரப்புகளை உருவாக்கி ஒரு சாராருக்கு விந்தணுக்களையும் இன்னொரு சாராருக்கு கர்ப்பப்பையையும்  கொடுத்திருக்கிறேன். ஏன் கர்ப்பப்பை வேண்டாம் என்கிறாய். அந்த பொறுப்பை சுமக்க நீ மட்டும்தான் தகுதியானவள் என்றல்லவா நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்..."

   "என் உடல் என் உரிமை.. கர்ப்பப்பை இருக்கிறதாலதான எங்களை கொழந்தை பெத்துக்கற மொஷின் மாதிரி பாக்கறீங்க.. அதான்..."

     "உன் தந்தை உன் தாயை அப்படித்தான் பார்த்தாரா...?"

   "அது எனக்கு தெரியல.. ஏன்னா.. எங்கம்மா ஒரு வெகுளி , போதிய அறிவு இல்ல.. அதனாலதான் அவங்களுக்கே அது தெரியல......"

    "அப்படியா... சரி... ஒருவேளை உன் சிந்தனையை உன் அம்மாவிடம் கொடுத்தால் அதற்கான பதில் கிடைக்கலாமோ..?

   "நீங்கள்தான் கடவுளாயிற்றே.... கொடுத்து தான் பாருங்களேன்.."

    சிரித்தவாறு கடவுள் கண்களை மூடி திறந்தார். அவளைக் காணவில்லை. கடவுளின் கண்களுக்கு மட்டுமல்ல, அவளின் கண்களுக்கும் அவள் தெரியவில்லை...!

   "ஐயோ எங்கே என்னைக் காணவில்லை.. என்ன சூழ்ச்சி இது கடவுளே....!??"

   "சூழ்ச்சியல்ல பெண்ணே.. உன் சிந்தனையை உன் அம்மாவிற்குக் கொடுத்திருந்தேன். அவரும் அவரின் கர்ப்பப்பையை நீக்கிவிட்டார். ஆதலால் நீ பிறக்கவில்லை. ஆக நீ இனி பிறக்கப்போவதும் இல்லை..."

கடவுள் மறைந்தார். 
அவள் பிறக்கவில்லை.

#தயாஜி

ஜூலை 05, 2020

ராஜா ராணி


    கல்யாண மண்டபம். விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மணமக்கள் மேடையிலும் மற்ற மக்கள் கீழும் அமர்ந்திருந்தார்கள். நான் தான் நிகழ்ச்சியில் அறிவிப்பாளர். 

   சில பாடகர்களும் நகைச்சுவை நடிகர்களும் இருந்தார்கள். ஒத்திகைக்கு ஏற்றவாறு  விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மணமக்களை வாழ்த்தவும் மொய் கொடுக்கவும் மேடைக்கு வரலாம் என்று அறிவித்தேன். வருசையில் நிற்கலானார்கள். சிலர் ஒரு பக்கம் சாப்பிடச் சென்றார்கள்

   பாடகி பாடிக்கொண்டிருந்தாள். நல்ல வேளையாக அப்போது ஏற்பட்டிருந்த இரைச்சலில் இந்த குயிலின் குரல் சரியாக கேட்கவில்லை. கேட்டிருந்தால், வந்தவர்கள் எல்லாம் கூவியிருப்பார்கள்.

   அப்போதுதான் அந்த முகத்தைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் அந்த முகம் நாசுக்காக தன்னை மறைத்துக் கொள்ள முயன்றது. நான் யோசிக்கலானேன். அட ஆமாம்! அது என் நண்பன் பிரபா. காலேஜ் நண்பன். அப்போது நான் , பிரபா, ராஜன் தான் நல்ல நண்பர்களாக இருந்தோம். எத்தனை சேட்டைகள் எத்தனை திட்டுகள். நாங்கள் மூவரும் தான் எப்போதும் ஒரு கூட்டணியாக இருப்போம். ஒன்றாக இருந்தோம். நன்றாகத்தான் இருந்தோம். 

   காலேஜ் முடிந்து நான் கோலாலும்பூர்க்கு வந்துவிட்டேன். ஒரு கட்டத்தில் எங்கள் தொடர்பு தடைபட்டுவிட்டது. பல வருடங்கள் கழித்து இப்போதுதான் பிரபாவைப் பார்க்கிறேன். இப்போதே ராஜனையும் பார்த்துவிட வேண்டும் என தேடலானேன்.

 பிரபா மணமேடையை நெருங்கிவிட்டான். இன்னமும் முகத்தை மறைப்பதிலேயே மும்முரம் காட்டிக்கொண்டிருந்தான். இப்போதுதான் கவனித்தேன். அவன் ஏதோ பெண்ணுடன் வந்திருக்கிறான். மனைவியோ காதலியோ அப்படித்தான் தெரிந்தது. இருவரும் ராஜா ராணி போல பொருத்தமான உடையணிந்திருந்தார்கள்.

   அந்த பெண்ணும் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருந்தாள். ஆனால் அவள் ஏன் என்னை இப்படி பார்க்கிறாள். பிரபா என்ன சொல்லியிருப்பான் என யூகிக்க முடியவில்லை. அந்த பார்வையில் ஏதோ ஒன்று இருந்தது. இப்போது நான் என் முகத்தை மறைத்துக் கொள்ள இடம் தேடும்படி ஆனது.

   மணமக்களை வாழ்த்தி இருவரும் கீழே இறங்க வந்தார்கள். நான் அங்கே நின்றுக் கொண்டிருந்தேன். சட்டென "பிரபா.." என அழைக்கவும் செய்தேன். இப்போதுதான் என்னை பார்ப்பது போன்ற பாவனையில் அதிர்ச்சியாகி ஏதேதோ உளறினான். 

   நிலமையை சமாளிப்பதற்காக, "உன்னை பார்த்துட்டேன்.... ராஜனை எப்ப பார்ப்பேன்னு தெரியல...?" என்றேன்.

   சட்டென " டேய் மணி நான் தாண்டா... என்னை தெரியலையா உனக்கு... " என்று கேட்டு பிரபாவுடன் வந்திருந்த பெண் சிரிக்கலானான். அந்த சிரிப்பும் குரலும்  அப்படியே ராஜன் தான்.

#தயாஜி

ஜூலை 04, 2020

ஆகாயம் தொட்ட மரம்


    தங்களின் மூதாதையர்கள் அதில் வாழ்வதாக நம்புகிறார்கள். தினமும் அந்த மரத்தை வணங்குவதுதான் முதல் வேலை. தேவைக்கு ஏற்ற மழையும் தேவையான உணவும் அவர்களுக்கு கிடைத்துக் கொண்டே இருந்தன. அந்த மரம் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

   வியாதிகள் அவர்களை ஒன்றும் செய்வதில்லை. அந்த இலைகளைத் தொட்டு வீசும் காற்று அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. அந்த மரத்தைச் சுற்றிலும் வந்திருக்கும் செம்மண் வளையத்தில் வந்துவிட்ட எந்த மிருகத்தையும் அவர்கள் வேட்டையாடுவதில்லை. 

   அதைவிட அதிசயம் அங்கு நுழைந்து நிற்கும் எந்த மிருகமும் அங்கு நடமாடும் யாவரையும் சீண்டுவதில்லை. ஒரு முறை அங்கு நுழைந்துவிட்ட காண்டா மிருகம், ஒரு முயல் போல தன்னை நினைத்து சில மணி நேரம் அந்த செம்மண் வளையத்தில் உள்ள குழந்தைகளிடம் விளையாடிவிட்டுச் சென்றது.

   வான் தொடும் அந்த மரத்துடன் வாழ்வதை அவர்களின் வரமாக நினைத்தார்கள். அவர்களின் வாழ்வும் அதுதான். அவர்கள் வணங்கும் கடவுளும் அதுதான். 

    நாகரீகமும் சுகாதாரமும் இல்லாத அவர்கள் மீது அரசாங்கள் ஒரு நாள் அக்கறை காட்டியது. அவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டது. அவர்கள் வாழ்வில் முன்னேற பல திட்டங்களை வகுத்தது. 

இன்று,

    அந்த மரம் முளைத்திருந்த இடத்தில் ஒரு ரசாயண தொழிற்சாலை வந்திருக்கிறது. இதற்கு முன் அங்கு மனிதர்கள் வாழ்ந்த எந்த அடையாளத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

#தயாஜிஜூலை 03, 2020

வினோத ஜாலக்கண்ணாடி


   பழைய புத்தகக்கடையில் வாங்கியது. சாக்லெட் நிற கெட்டி அட்டை. மஞ்சள் படிந்த பக்கங்கள். 'வினோத ஜாலக்கண்ணாடி' என்னும் தலைப்பே அவனை வசீகரித்தது. வேறேதும் காரணம் சரியாக தெரிந்திருக்கவில்லை. ஏதோ ஈர்ப்பு இருந்திருக்க வேண்டும்.

   கட்டிலில் படுத்திருக்கிறான். பக்கத்தில் அந்த புத்தகம். அதனையே பார்த்துக் கொண்டிருக்கிறான். கடைக்காரருக்கே இந்த புத்தகம் பற்றி தெரியவில்லை. எப்போதோ யாரோ வந்து பழைய நாளிதழ்களுடன் எடைக்கு போட்டிருக்கிறார்கள். சமயங்களில் அங்கு சில அரிய வகை புத்தகங்கள் புகைப்படங்கள் கிடைக்கும் என்பதால் அவ்வழியே செல்லும் சமயத்தில் அக்கடைக்கு சென்று பார்வையிடுவது அவனுக்கு வழக்கம்.

   புத்தககத்தை எடுத்தான். முதல் பக்கத்தைத் திறந்தான். காலி. இரண்டாம் பக்கத்தைத் திறக்கிறான். காலி. இடையிடையே சில பக்கங்களைத் திறக்கிறான். காலி. காலி. காலி. மூடிவிட்டான். 

   அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. கடையில் புத்தகத்தை வாங்கும் போது , பக்கங்களைப் புரட்டினான். அதில் ஓவியங்களும் சில சமஸ்கிருத எழுத்துகளும் ஆங்காங்கு கையெழுத்தில் என குறிப்புகளும் தமிழில் எழுதப்பட்டிருந்தன.

  மீண்டும் புத்தகத்தைத் திறக்கிறான். ஆச்சர்யம். கடையில் பார்த்தது போல எழுத்துகள் இருந்தன. 

   அவன் திருந்திருந்த பக்கத்தில் உள்ள கையெழுத்து குறிப்புகளைப் படிக்க ஆரம்பித்தான். முன்னுக்கு பின் வாக்கியங்கள் முரணாக குழப்பம் கொடுப்பவையாக இருந்தன.

   கையில் சொடுக்கு போட்டுக்கொண்டே அந்த புரியாத வார்த்தைகளை வாசிக்கிறான். ஒரு சொடுக்கில் நிறுத்தினான். அவனால் நம்ப முடியவில்லை. அவன் கைக்கு நேராக இருந்த மீன் தொட்டியில் உள்ள மீன் அப்படியே சிலையாக நிற்கிறது. தண்ணீரில் அசைவில்லை. தொட்டியில் உள்ள நீர்க்குமிழிகளும் அப்படியே ஸ்தம்பித்துவிட்டன.

   தன் கையைப் பார்க்கிறான். மீண்டும் சொடுக்கு போட்டான். எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. மேலே சுற்றிக்கொண்டிருக்கும் காற்றாடியைப் பார்க்கிறான். சொடுக்கு போட நிற்கிறது. அடுத்த சொடுக்கில் சுற்றுகிறது.

   முழுதும் படிக்காமல் புத்தகத்தை மூடி வைத்தான். 

   கட்டிலில் இருந்து துள்ளி குதிக்கிறான். எதிரே இருந்த ஆள் உயர கண்ணாடியில் நிற்கிறான். அவன் கைகள் பரபரத்தன. எவ்வளவு பெரிய விடயம் இது. இனி தான் செய்யப்போகும் காரியங்கள் அவன் கண் முன்னே நின்றும் நடந்தும் காட்டின.

  சொடுக்கு போட்ட கைக்கு முத்தம் கொடுக்கிறான். உணர்ச்சிவசப்பட்டு கண்ணாடி முன் சொடுக்கு போட்டான்.

  அவ்வுருவம் அப்படியே நின்றுவிட்டது. இப்போது அவனால் அவன் கையை மட்டுமல்ல அவன் கண் விழியைக் கூட அசைக்க முடியவில்லை. மூடியப் போவதுமில்லை.

#தயாஜி

ஜூலை 02, 2020

போர் வீரனின் பரிசு


     இன்று பொம்மிக்கு பிறந்தநாள். ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதுதான் வாய்ப்பு கிடைத்தது. பிரிவு என்பது எத்தனை சிறிய சொல். ஆனால் எத்தனை அடர்த்தி நிறைந்தது. பொம்மிக்கு இன்றோடு பத்து வயது பூர்த்தியாகிறது.

     இப்போது அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என எனக்கு தெரியவில்லை. அவள் முகம் எப்படி மாறியிருக்கும்? அவ்வபோது அவள் எப்படித்தான் இருப்பாள் என யோசித்துக் கொள்வேன்.

    குண்டு கண்கள். குழிவிழும் கன்னங்கள். சிவந்த உதடு. சீவக்கலையும் தலை முடி. மெலிதான அழுகை. ரசிக்க வைக்கும் சிரிப்பு. இன்னும் எத்தனையோ கற்பனைத் திரையில் பார்த்துக் கொண்டேன்.

     அன்றும் இதே நாளில்தான் அவளுக்கு பிறந்த நாள் பரிசு வாங்க சென்றிருந்தேன்.   பள்ளிக்கு போவதில் ஆர்வம் காட்டியதால், பள்ளிப்பை ஒன்றை வாங்கிக் கொண்டேன். சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது, சட்டென ஆளுக்கு ஆள் பரபரப்பாக ஓடத்தொடங்கினார்கள்.

    யுத்தம் வரலாம் என்கிற தகவல் கொடுக்கப்பட்டது. தகவலை இன்னொருவருக்குச் சொல்லிக் கொள்ளக் கூட நேரம் வாய்க்கவில்லை. சாலையில் பெரிய லாரிகள் வந்தன. கண்ணில் படுகின்ற ஆண்கள் எல்லாரையும் பிடித்துக் கொண்டார்கள். லாரி மூழுக்க எங்களை நிரப்பினார்கள். ஒரே நாள் எங்கள் இயல்பு வாழ்வு இல்லாமல் போனது.

   தொடர்ந்து ஐந்து ஆண்டுகள். வெளியுலக தொடர்பே இல்லை. அறிமுகம் இல்லாத இடத்தில் இருந்தோம். எங்களை,  யுத்தங்களுக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். புதுப்புது பயிற்சிகள் கொடுத்தார்கள். நவீன இயந்திர துப்பாக்கிகளைப் பயன்படுத்தக் கொடுத்தார்கள். வெடிகுண்டுகள், கன்னிவெடிகள் போன்றவற்றை  பரிசோதிக்கச் சொன்னார்கள்.

    யுத்தத்திற்கான தயார் நிலையிலேயே நாங்கள் நிலைகுத்திப் போனோம். எங்களில் சிலர் பயிற்சியின் கடினம் தாங்காது இறந்தும் போனார்கள். கடைசிவரை யுத்தம் வரவேயில்லை. யுத்தம் வரலாம் என சந்தேகித்த எதிரி நாட்டு அதிபரின் நட்பு கிடைத்து விட்டதால் நாங்கள் தப்பித்தோம். அப்போது புதிதாக பதவி ஏற்றவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எங்களில் சிலருக்கு சில நாட்களுக்கு விடுப்பு கொடுத்தார். 

    அவர்களே எங்களை லாரியில் அனுப்பி வைத்தார்கள். பணமும் கொடுத்தார்கள். 
ஐந்து ஆண்டுகளாக பாதுகாத்து வைத்த பொம்மிக்கு வாங்கியிருந்த பள்ளிப்பையுடன் சாலையில் நடந்துக் கொண்டிருந்தேன். என் தோளில் மாட்டியிருந்த புத்தகப்பை , பொம்மியை சுமந்திருப்பது போல இருந்தது. என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. 

    அதோ என் வீடு தெரிகிறது. ஐயோ என்ன இது இப்படி சிதைந்துப் போயிருக்கிறதே. இப்போதுதான் என்னால் சூழலை கவனிக்க முடிந்தது. எங்கும் மரண ஓலத்தின் எதிரொலி. வீடுகளே இல்லை. எல்லாம் வெறும் சுவர்களாகக் கிடக்கின்றன. எல்லாமோ அலங்கோலமாக இருந்தன. நான் ஸ்தம்பித்தேன். 

    எதிரே சில கார்கள் வரிசையாய் வருகின்றன. அதற்கு முன் ஒரு லாரி செல்கிறது. அதிலிருந்த ஒலி பெருக்கியில் எதையோ சொல்கிறார்கள்.
'யுத்தம் நடந்த இடத்தை இரு நாட்டு அதிபர்களும் பார்வையிட வருகிறார்கள். இனி யுத்தம் பற்றிய பயம் நமக்கு இல்லை..'

     கடைசி காரில் இரு நபர்கள் வெள்ளைக் கொடியைக் காட்டிக் கொண்டு சிரிக்கிறார்கள்.


#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்