பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 25, 2011

கத்தி குத்தும் புத்தி திட்டும்


கத்திக்குத்தும் புத்தியெல்லாம்;

செத்துப்போகட்டும்.........

யுத்தம்கேட்கும் மொத்தபேரை;

பித்து சூழட்டும்..........ஜித்தனாக எண்ணி;

ஜாலம் காட்டுவேன்........

கல்வி வேண்டாம் கலவி போதும்;

என்றே கூறுவேன்.............கைகள் கட்டி வாய்கள் பொத்த;

லஞ்சம் நீட்டுவேன்............

நேர்மை என்றால் விலையைக் கேட்டு;

கேலி பேசுவேன்..........கதரைக் தூக்கி;

கருத்தாய் பேசி..........

கோஷம் வாங்குவேன்;எல்லாம் செய்வேன்;

உண்மை கொல்வேன்.........

இருக்கும் வரையிலே;

நரம்பு முறுக்கும்........

வரையிலே;கண்கள் மங்கி;

கால்கள் வீங்க.............

படுப்பேன் பாயிலே;

பணம் இருக்காது.........

பையிலே;

கத்தி கம்பும் கைக்கு;

எட்டா தூரம் சிரித்திடும்..........

இதுவரை கொன்ற முகங்கள்;

என் மூச்சை முகர்ந்திடும்..........கண்ணருகில் இருப்போரெல்லாம்;

கறுப்பாய் மாறுவர்.........

தலைவன் நாந்தான் என்ற எண்ணம்;

தரையை நோக்கிடும்........

தரணி மீது செய்த பாவம்;வட்டி கேட்டிடும்;

வணக்கம் சொன்ன வாய்கள்;

இனி எச்சில் துப்பிடும்............

வன்முறையாளனின் கதை;

இப்படியே முடிந்திடும்............

தொடரும் கிழிதல்கள்

மேடை
பலமான ஆட்டம்
பரபரக்கும் கூட்டம்
தொடைக்கு மேல்வரை
பாவாடை
ஆட்டத்தால் கொஞ்சம்
கிழிந்தது
.
.
இரு வினாடி
மௌனம்
சட்டென
முழுதாய் அவிழ்த்து
ஆட்டத்தைத் தொடர்ந்தார்கள்
.
ஒரு வினாடி
மௌனம் மீண்டும்
தொடங்கினார்கள்
ஒவ்வொருவரின் பாவாடையும்
கிழியும்வரை..........

நவம்பர் 19, 2011

சுந்தர ராமசாமின் எழுத்துகள் 19.11.2011


சுந்தர ராமசாமியின் கட்டுரைகளையும், ந.பிச்சமூர்த்தி குறித்த அவர் எழுதிய விமர்சனத்தையும் படித்த பிறகு; தற்போது சு.ரா-வின் 'அழைப்பு' சிறுகதை தொகுப்பை படிக்கவுள்ளேன். அடுத்ததாக அவரது முழுசிறுகதை தொகுப்பையும் படிக்கவேண்டும்.

(ஜெயமோகன் தன் புத்தகத்தில் முன்மொழிந்திருக்கும் சு.ரா-வின் முக்கிய சிறுகதைகளை முதலில் படிக்க வேண்டும்)

இதன் பிறகு சு.ரா-வின் நாவலான 'ஒரு புளியமரத்தின் கதை'-யை படிக்கவுள்ளேன்.

இம்மாத இறுதிக்குள் கல்யாண வேலைகளின் ஊடே; மூன்று மாதங்களாகப் படித்த.......
1.இவை என் உரைகள்.
2.இறந்த காலம் பெற்ற உயிர்.
3. ந.பிச்சமூர்த்தியின் மரபும் மனித நேயமும்.
போன்ற புத்தகங்கள் குறித்து என் வலைத்தளத்தில் பதிகிறேன்.

நவம்பர் 18, 2011

'எஸ்.ரா' உடன் 'சாரு'


15.11.2011 ஏற்கனவே பார்த்து வைத்த புத்தகங்கள். இன்றுதான் வாங்கும்படி ஆனது.

எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகங்கள்.

1. வாசக பர்வம்.
- எஸ்.ரா எதிர்கொண்ட ஆளுமைகள் குறித்த பதிவு.

2. காற்றில் யாரோ நடக்கிறார்கள்.
- கட்டுரை தொகுப்பு.

3. அதே இரவு அதே வரிகள்.
- பலவகை கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் - தொகுப்பு எஸ்.ரா


சாரு நிவேதிதா புத்தகங்கள்.

4. மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்.-
- சாருவின் 30 சிறுகதைகளின் தொகுப்பு.

5. ஒழுங்கின்மையின் வெறியாட்டம்.
- நேர்காணல்கள்

6. நரகத்தில் இருந்து ஒரு குரல்.
- சினிமா கட்டுரைகள்

கண்ணில் பட்ட புத்தகம்


சமீபத்தில் பினாங்கு சென்றிருந்தேன். அப்போது வாங்கிய புத்தகம், "கடவுளைத் தேடாதீர்கள்!". எழுதியவர் தென்கச்சி கோ.சுவாமிநாதன்.
- 64 குட்டிக்கதைகள் அடங்கிய புத்தகம்.

17.11.2011 - திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது ; கண்ணில் பட்ட புத்தகம்;

1. கிறுகிறு வானம் - எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன்.
-குழந்தைகள் நாவலான இதனை, குழந்தைகள் மொழியிலேயே, குழந்தை சொல்வதாக இந்த நாவலை எழுதியிருக்கிறார் எஸ்.ரா.

2. ஆழ்நதியைத் தேடி - எழுத்து ஜெயமோகன்.
- உயிர்மை இதழில் வெளிவந்த ஜெ.மோ-வின் 15 கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம்.

சுந்தர ராமசாமியின் 'காகங்கள்'


சில மாதங்களுக்கு முன்பு விலைகேட்டு, விட்டுவந்த புத்தகம். தற்போது சுந்தர ராமசாயின் எழுத்துகளைப் படித்துக் கொண்டிருப்பதால், இந்த புத்தகத்தில் விலை ஒரு பொருட்டாக இருக்கவில்லை.

இன்று வாங்கிவிட்டேன்.(19.11.2011)


1950 முதல் 2000 வரை சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு இந்த புத்தகம்.


அவர் எழுதிய 61 சிறுகதைகளில் பலவீனமான 5 கதைகள் தவிர மற்ற 56 சிறுகதைகள் அடங்கிய புத்தகம்.

தயாஜி

நவம்பர் 13, 2011

ஏழாம் அறிவும் எட்டி நிற்கும் தமிழர்களும்


7-ம் அறிவு படத்தைப் பார்த்தப் பிறகு, “நான் தமிழன்னு சொல்லி பெருமையா காலரைத் தூக்கிவிட்டுக்கறேன்”என சொல்லுகின்றவர்களை நினைக்கையில் வியப்பாகத்தான் இருக்கிறது.

இவர்களுக்கும், வேலாயுதம் படத்தைப் பார்த்தப் பிறகு “எனக்குள்ள இருக்கிற வேலாயுதம் வெளியே வருவாண்டா” என சொல்லுகின்றவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்க முடியும். யோசிக்கிறே. விளைவு இந்த பதிவு.

இது, சூர்யாவின் ‘7-ம் அறிவு குறித்தோ விஜய்யின் ‘வேலாயுதம்’ குறித்தோ அல்ல. தற்காலிகமாக தமிழண்டா என பெருமைபடுகின்றவர்கள் குறித்து.

பணி நிமித்தமாக வெளியூர் சென்றதால் நேற்றுதான் 7-ம் அறிவு படத்தைப் பார்த்தேன். அதற்கு முன் அப்படம் குறித்த விளம்பரங்களையும் எதிர்ப்பார்ப்பு வாசகங்களையும் கண்டு எதிர்ப்பார்த்து இருந்தவர்களில் நானும் ஒருவன்.

மீண்டும் சின்ன நினைவுருத்தல்; இது வேலாயுதம் குறித்தோ, 7-ம் அறிவு, படங்கள் குறித்த விமர்சனம் அல்ல. இதனை மீண்டும் சொல்ல காரணம் இருக்கிறது. உணர்ச்சிவசப்படுதல். தமிழர்களுக்கு மிகவும் நெருங்கிய ஒன்று.

இப்படி ஒரு பத்தியை எழுதப் போகிறேன் என, என் முகநூலில் பதிவு செய்தேன். அதனை முழுமையாகப் படிக்காமல் சற்று நேரத்தில் தோழியின் தொலைபேசி அழைப்பு வந்தது. அழைப்பு என்பதை விட எச்சரிக்கை என்பதே பொருந்தும். சமாதானம் செய்ய நேரமானது. அது குறித்து

பின்னர் பார்க்கலாம்.

அதற்கு முன்;

7-ம் அறிவு திரைப்படக் குழுவினர்க்கு முதலில் பாராட்டுகள். படம் எடுத்ததற்காக அல்ல எந்த அளவுக்கு நாம் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமைப் பட்டிருக்கின்றோம் என்பதை காட்டியதற்காக.

இப்படத்தை பார்த்து தான் தமிழன் என மார்தட்டிக் கொண்டவர்களின் அடுத்த வேலை..?

சூர்யாவின் அடுத்த படம்...

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம்..

அல்லது சுருதிஹாசன். எதுதான் அந்த மார்தட்டிய தமிழனின் அடுத்த கட்டம்.

போதி தர்மர் பற்றி - கொஞ்சம் அதிகம்தான் விட்டுவிடுவோம். மஞ்சள் மருத்துவம், சானம் மகத்துவம் என்பதெல்லாம் நம் தமிழர்க்கு என்ன அப்படியொரு புது தகவல்களா..? படத்தில் சொன்னதாலா.. சூர்யா சொன்னதாலா..?

இத்தனை நாளாய் நாம் செய்து வந்தவைகளையெல்லாம் என்னவாக பார்த்தீர்கள்.

முடிந்த கதையை விடுங்கள். ஒரு திரைப்படம் இத்தனை காலமாய் வெறும் தமிழர்களாய் இருந்த உங்களை மார்தட்டும் தமிழர்களாக உருவாக்கியதில் சராசரி தமிழானாய் மகிழ்ச்சி. இனி நீங்கள்?.

போதி தர்மரும், மஞ்சள், உடன் சானமும் போதுமா..? வேறு வழி இல்லை. இருக்காது. நீங்கள்தான் அடுத்த படத்திற்கு முன்பதிவு செய்துவிட்டீர்களே.

திருக்குறளையும் இன்னும் கொஞ்ச காலத்தில் நாம் சொல்லபோகிறோம் “திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் ஒரு தமிழர். ”

இதுவரை நாம் மறந்தவற்றையும்; துறந்தவற்றையும் தேடுவது மட்டுமே நீங்கள் மார்த்தட்டிக் கொள்ளும் 7-ம் அறிவு படத்திற்கு வெற்றி. இல்லையேல்; இன்று இதைப் பார்த்து மார்தட்டுவது போல நாளை வேறு ஒன்றைப் பார்த்து மூக்கு நோண்டுவீர்கள். வியப்பில்லை.!

மீண்டும் ‘பாரதி’ திரைப்படத்தை எடுக்க வேண்டும். அதில் சூர்யாவோ விஜய்யோ நடிக்க வேண்டும் அப்போதுதான் பாரதி என்கிறவரைக் குறித்து உங்களுக்கு தெரியும் என்றால் ; நீங்கள் யார்.? எந்த வகை தமிழர்.?

இன்னும் எத்தனை காலம்தான் சினிமா மோகத்தாலும் உணர்ச்சிக் கொதிப்பாலும் கர்ஜிக்கப் போகிறோம்?.

மார்தட்டியத் தமிழர்களுக்கு மீண்டும் ஒரு கேள்வி; சீரியலைப் பார்த்துக் குமுறும் தாய்மார்களுக்கும், குடித்து போதையில் தள்ளாடும் தந்தைமார்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருப்பதாய் நினைக்கிறீர்கள்?.

தொடக்கத்தில் எச்சரித்த தோழி சொன்னாள் ; “எது எப்படியோ தமிழ் பேச வெட்கப்படும் தமிழர்கள் கூட இந்த 7-ம் அறிவை பற்றி பேசாறாங்க தெரியுமா. அதுக்காவது நன்றி சொல்லனும்”

அதற்கு என் பதில்

“ எப்படி, திருட்டுப்பசங்க இருக்கறதால காவல் துறையினர் இருக்காங்க. அதுக்குன்னு திருட்டுப் பசங்களுக்கு நன்றி சொல்லலாமா...?”

மீண்டும் இந்த பதிவு, 7-ம் அறிவு குறித்த விமர்சனம் அல்ல. மார்தட்டும் தற்காலிக தமிழர்களுக்கு கேள்வி அவ்வளவே....

இது யாரையும் புண்படுத்தினால், புண்படுத்தினால்தான் நல்லதுதான் அப்போதாவது நாம் பண்படுவோம். உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து நம்மை நாமே தாழ்த்தி தலைகுனிவதை விடுத்து. புதைந்த புதயல்களை மீட்டெடுப்போம்.

அதற்குள் அடுத்த படத்திற்கு கிளம்பிவிடாதீர்கள்.

நவம்பர் 02, 2011

பேனாக்காரன்
பேனாக்காரன்

25.10.2011-ல் படிக்கத்தொடங்கி 31.10.2011-ல் படித்து முடித்த புத்தகம் பிரபஞ்சன் எழுதிய ‘தாழப் பறக்காத பரத்தையர் கொடி’ என்கிற கட்டுரை தொகுப்பு. உயிர்மை வெளியீடு. 2008லிருந்து 2009 வரையிலான பிரபஞ்சனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது.16 தலைப்புகளில் கட்டுரைகள் இதில் உள்ளன.

எனக்கு அறிமுகமான பிரபஞ்சனின் முதல் பிம்பம் தவறாகவே இருந்தது. அவரின் சந்திப்பிற்கு பிறகும்; அவரின் நேற்று மனிதர்கள் என்ற சிறுகதை தொகுப்பும் பிம்பத்தைத் தாண்டி பிரபஞ்சனை வெளிக்கொணர்ந்தன. அது குறித்து வல்லினம் அகப்பக்கத்தில் எனது ‘பயணிப்பவனின் பக்கம்’ என்ற தொடரில் எழுதியுள்ளேன்.

( http://www.vallinam.com.my/issue28/thayaji.html வெள்ளைக் காகிதங்கள் என்ற தலைப்பில் அந்த கட்டுரை. படிக்கவும்.)

தாழப் பறக்காத பரத்தையர் கொடி –யை படிக்க ஆரம்பித்தேன். சில கட்டுரைகளைப் படிக்கும் போது கடினம் போல தோன்றியது. இருந்தும் மறுவாசிப்பில் புரிதல் ஏற்பட்டது.

குமுதம் வார இதழில் வேலைக்கு சேர்ந்தது முதல் தன் அனுமதி இல்லாமலேயே தனது நாடகத்தை புத்தகம் போட்டு விற்ற பதிப்பகம் வரையில் பிரபஞசன் இந்த கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறார்.

கடினமான ஒன்றைக்கூட தனது எளிய மொழி நடையால் மனதிலுள் செலுத்துகிறார். தான் சொல்ல வந்தவற்றின் பின்புலம் குறித்து இவர் நினைவுக்கூர்ந்து சொல்வது அவருக்கே உரிய சிறப்பாவே எனக்கு படுகிறது. தன் அனுபவத்தை சொல்லும் வேளையில் அதன் நேர்மை நமக்கு புரிகிறது.

‘பானு உன் புத்தகப்பை அண்ணனிடம் இருக்கிறது’ என்ற கட்டுரையைப் படிக்கையில்; அதன் ஊடே செல்லச்செல்ல மனம் கணக்கிறது. பிரபஞ்சன் , அவரின் தங்கை பானு, தம்பி மூர்த்தி ஆகியோரின் பால்யம் குறித்த பதிவு. ‘எங்கள் மூவரின் விளையாட்டின் போது நாலாவதாய் ஒருவர் விளையாடுவதை நான் அறிந்திருக்கவில்லை. நாங்கள் ஒளிந்து விளையாடும் போது மரணமும் எங்களோடு ஒளிந்திருந்தது எனக்குத் தெரியாது.’- இப்படி பிரபஞ்சனின் வாக்கியங்கள் முன்னமே முடிவை சொல்ல நினைத்திருந்தாலும்; படிக்கப் படிக்க.. கண் கலங்குகிறது.

‘தாய்ப்பாலும் தென்னம்பாலும்’ என்ற கட்டுரையில் காலங்காலமா நமது தாத்தா பாட்டி நம் குடும்பம் குறித்து சொல்லிவரும் புனைவுகளைப் பதிகிறார். நெஞ்சு ‘பகிர்’ ஆகிறது.

‘இரண்டு பிரஞ்சுப் பெண்கள்’ என்ற கட்டுரை. இரண்டு பிரஞ்சு பெண்கள் குறித்த கட்டுரை. இதில் பின்னோக்கி சொல்லியிருக்கும் வரலாற்றுக் குறிப்பு பிரம்மிப்பை ஏற்படுத்தினாலும் என்னால் அவர்களை முழைமையாக உள்வாங்க முடியவில்லை. தொடக்கம் முதலே வரலாற்றுப் பாடங்கள் எனக்கு ஒரு தடவையில் புரிந்தது இல்லை.

‘அதிகாரத்துக்கு எதிரான சில குரல்கள்’ , ‘உலக தமிழ் மாநாடு செய்ய வேண்டியது என்ன்..?’ மற்றும் ‘4 பேராசிரியர்களும் ஒரு பதிப்பகமும்-இலட்சியக் கூட்டணி’ என்ற மூன்று கட்டுரைகளும் எனக்கு, நண்பர் நவினை நினைவுப்படுத்தியது. நவின் தன் வலைத்தளத்திலும் சமீபத்தில் வல்லினம் அகப்பக்கத்திலும் மலேசிய எழுத்தாளர் சங்கம் குறித்த எழுதிய கட்டுரைகளுக்கும் பிரபஞ்சனின் இந்த மூன்று கட்டுரைகளுக்கும் மெல்லியதொரு ஒற்றுமை இருக்கிறது.

‘ஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல்’ என்ற கட்டுரையில் பிரியா பாபு எழுதியிருக்கும் ‘மூன்றாம் பாலின் முகம்’ என்ற நாவல் குறித்து பேசுகிறார். வெறுமனே இந்த நாவலை மட்டுமே சுற்றிவராமல்; தான் சேர்த்த அனுபவத்தை வார்த்தைகளால் கோர்க்கிறார். தமிழ் இலக்கணங்களான தொல்காப்பியமும் நன்னூலிலும் திருநங்கைகள் குறித்து சொல்லுவதை பட்டியலிடுகிறார். அடுத்து கிரேக்கர்கள் குறித்தும் அவர்களின் ஓரின சேர்க்கைக் குறித்த கதைகள் குறித்தும் எழுதியிருப்பது பிறமொழி இலக்கியம் பற்றி சிந்திக்க வைக்கிறது. ஒரு வாக்கியத்தை இப்படி சொல்கிறார்; “காலம் காலமாகப் பெண்களின் பிறப்புறுப்புகளுக்கு ஆக கனமான பூட்டுகளை போட்டு, சாவியைத் தம் இடுப்பில் சொருகிக் கொண்டு அலைந்தார்கள் கிரேக்க ஆண்கள்”. இந்த வாக்கியம் எனக்கு ஏற்கனவே டாக்டர் ஷாலினி எழுதிய ‘பொண்களின் மறுபக்கம்’ எனற உளவியல் புத்தகத்தில் அறிமுகமாயின.(இந்த புத்தகத்தை இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை.)

‘மனதில் புகுந்தது மா மத யானை’ கட்டுரையில் தெருக்களைப் பற்றிப் பேசுவது, தமிழர்களின் தொடக்க வாழ்க்கை நினைத்து தலை நிமிரச் செய்தது. தமிழர்களின் வீடு தெருவில் இருந்து தொடங்குகிறது என்ற தகவல் வாசல் அழகின் முக்கியத்துவத்தைச் சொல்கிறது.

‘அபாயகரமானது கவிதை’ என்ற கட்டுரையில் ‘திசையெல்லாம் தமிழ்க் கவிதை’ என்னும் புத்தகத்தை பற்றி பேசுகிறார். புலம் பெயர்ந்தவர்களின் கவிதைத் தொகுப்பு இந்த புத்தகம். சில கவிதைகளை மேற்கோல் காட்டுகிறார். அதில் ஒன்று

‘மூக்கு சிந்துவதற்காக
எங்கள் மார்புக் கச்சைகளை
அவிழ்த்துக் கொள்பவர்கள்’ - இப்படியாக அமைகிறது.
கட்டுரையின் முடிவில் சொல்கிறார்; பாப்லோ நெருடா மரணப் படுக்கையில் இருந்த ஒரு நாள் , எதிர்ப்புரட்சி ராணூவம் அவர் வீட்டைச் சோதனை இட வந்தது. அவரைக் கைது செய்யவும்தான். நெருடா சொன்னார் “நாலா பக்கமும் பாருங்கள். உங்களுக்கு அபாயபரமான ஒரே ஒரு பொருள்தான் இங்கு இருக்கிறது. அதாவது கவிதை”.

நிறைவானக் கட்டுரையாக ‘தாழப் பறக்காத பரத்தையர் கொடி’ என்ற தலைப்பில் கட்டுரை வருகிறது. அதன் தொடக்கம் இவ்வாரு; ‘ஒரு பெண்ணைச் சிட்டி அவள் பரத்தை அல்லது விபச்சாரி என்று சமூகம் விதிக்குமானால், அந்த பெண்ணின் மீது இரண்டாயிரம் வருஷ்த்து அபவாதங்கள் சுமத்தப்படுகிறது என்று பொருளாகும்.’ - இதனை படிப்பதால் மட்டுமே ஒவ்வொருவரும் உள்வாங்க முடியும். புத்தகத்தை படித்து முடித்துவிட்டேன்.

படித்து முடித்த பின்னரும் பிரபஞ்சனின் விரல்வழி வந்த வார்த்தைகள் என்னுள் சுற்றிக்கொண்டிருப்பதன் அடையாளமாய் இந்த பத்தியைக் கருதுகிறேன்.

இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் சுந்தர ராமசாமியின் ‘இறந்த காலம் பெற்ற உயிர்’ என்ற புத்தகம். 1995 முதல் 2003 வரை சு.ரா எழுதிய கட்டுரைகள், முன்னுரைகள், மதிப்புரைகள், விவாதங்கள், அஞ்சலிகள், வாசகர் கடிதங்கள் ஆகியவற்றின் தொகுப்பு. இப்போதுதான் நான்காவது கட்டுரையைப் படிக்கப் போகிறேன் அதற்குள்

http://tayagvellairoja.blogspot.com/2011/11/blog-post.html


என் தறுதலை புத்தி என்ற பதிவை எழுதிவிட்டேன். இன்னும் இதில் படிக்க வேண்டிய கட்டுரைகளும் காத்திருக்கும் புத்தகங்களும் அழைக்கும் சத்தம் கேட்கிறது. சென்று படிக்கிறேன். நிறைய எழுத வேண்டியிள்ளது.

இப்படிக்கு தயாஜி.

என் தறுதலை புத்தி..........

இது கதை என்று நான் முன்னெச்சரிக்கையாக சொல்கிறேன். படித்து முடித்ததும் முதல் வாக்கியத்தின் சத்தியமின்னையை நீங்கள் கண்டுக்கொள்வீர்கள். ஏனெனில் நீங்கள் பாதிக்கப்பட்டவரில் ஒருவர் அல்லது பாதிப்பை கொடுப்பதில் ஒருவர்.
இதனை எழுதுவதால் எனக்கு ஏற்படப்போகும் பிரச்சனைக்கு நான் மட்டும் பொறுபல்ல. என்னுடன் சுந்தர ராமசாமியும்தான் பொறுப்பு. அவரின் கட்டுரை ஒன்றில் புதுமை பித்தனை இப்படி குறிப்பிடுகின்றார்;
“சுற்றிவரக் காணக்கிடைத்த சகல கோலங்களிலும் ஒளிந்துக் கொண்டிருக்கும் ஊனங்களை அவர் அம்பலப்படுத்திக் கொண்டே வந்திருந்தார். லௌகீகத்தின் தளத்தில் இதுதான் கடைந்தெடுத்த தறுதலை புத்தி. இலக்கியத் தளத்தில் இதுதான் ஆகப்பெரிய பண்பாடு. உண்மையை அறிந்த நிமிஷத்தில் போட்டு உடைப்பது. அக்கம் பக்கம் பார்க்காமலும், அனுசரணையான காலத்திற்காகக் காத்துக்கொண்டிருக்காமலும் உடைப்பது.” - அதைத்தான் செய்யப்போகிறேன்.
படிப்பதும் எழுதுவதும் எனக்குப் பிடித்தவை. என் 13வது வயதில் பத்திரிக்கையில் பிரசுரமான மூன்று வரிகளில் என் எழுத்துப் பயணம் தொடர்ந்தது. இன்று உள்ளூர் இசையமைப்பாளர் ஆர்.லாரன்ஸ் இசையில் மூன்று பாடல்களை எழுதும் அளவிற்கு வந்திருக்கிறது.
எழுதுவதன் மூல எப்போதாவது சிறிய தொகை கிடைக்கும். அதனுடன் என் சொந்த பணத்தையும் சேர்த்தே புத்தகங்களை வாங்கிவிடுவேன். முடிந்த தீபாவளிக்கு அப்படி ஒரு வாய்ப்பு வந்தது. நிகழ்ச்சி ஒன்றிர்க்கு “ஸ்க்ரிப்ட்” எழுத வேண்டும். ஒரு ஆண் ஒரு பெண் சேர்ந்து அறுவிப்பு செய்யும் நிகழ்ச்சி அது. அந்த ஆண் என் நெருங்கிய நண்பன். அந்த பொண் நான் கேள்விபட்ட திறமைசாலி பெண்.
முதலில் ‘ஸ்க்ரிப்ட்’ எழுதுவதற்கு சம்பளம் எவ்வளவு என்று சரியாக தெரியாத நிலையில் நானும் அந்த பெண்ணும் ஆளுக்கு 200 ரிங்கிட் அல்லது 250 ரிங்கிட் சேர்த்து 500 ரிங்கிட்டை கொடுப்பதாக நெருங்கிய நண்பர் சொன்னார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே போல நிகழ்ச்சி ஒன்றில் ‘ஸ்கிரிப்ட்’ எழுதியதற்காக எனக்கு 750 ரிங்கிட் கொடுத்ததாக நான் குறிப்பொட்டேன். உடனே பதிலாய் வந்த வார்த்தை இது “தெரிலடா... இருக்கும்னு நினைக்கறேன். எதுக்கும் உன்னோட bank number கொடு , நான் மொதல்ல 500 ரிங்கிட் போடறேன் அப்பறம் செக் கொடுத்தோன்ன எவ்வளவுன்னு பார்த்துட்டு, மீதியைக் கைல கொடுத்திடறேன்.” உடனே நான் “பரவாலைடா.. தீபாவளிக்கு வீட்டுக்கு போறேன், எப்படியும் காசை செலவாக்கிடுவேன். லீவு முடிஞ்சி வந்ததும் வாங்கிக்கறேன்”
மறுநாள் அந்த நண்பன் “டேய், கேட்டுட்டேன் 500 ரிங்கிட் கொடுக்கறாங்களாம். என்னோட பேங்கல போடுவாங்களாம். நான் உன்கிட்ட கொடுத்தடறேன்.”
இந்த உரையாடல்களுக்கு பிறகு நடந்தவற்றை சொல்வதற்கு முன் ஸ்க்ரிப்ட் எழுதியதை நான் சொல்லியாகவேண்டும்.
இரண்டு நாள்கள் சரியான தூக்கம் இன்றி, எழுதினேன். அதில் திருத்தம் செய்யவேண்டும் என்றார்கள். இரவு வேலையை முடித்து அவர்கள் இருக்கும் இட்த்திற்குச் சென்று அங்கேயே ஒரு மணிநேரம் திருத்தி இன்னும் சொல்லப்போனால் முற்றிலும் புதிய ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதினேன். ஒவ்வொரு வாக்கியத்தையும் எழுதும் போது ஆண் பெண் இருவரிடம் சொல்லிக்காட்டி அவர்களுக்கு பிடித்த ஒன்றையே எழுதினேன். இருவரும் திருப்தி அடைந்தார்கள். எழுதி முடித்த்தும் அந்த பெண் “தயா, இதை 100% நாங்க பயன் படுத்தமாட்டோம். ஏன்னா இது நேரடி நிகழ்ச்சி பாருங்க, கடைசி நேரத்தில ஏதும் சொன்னாங்கன்னா நாங்க சேர்த்துக்கறொம் சரியா..” அதற்கு நான் “அது வழக்கமா நடக்கறதுதானே இதைன் நீங்க வழிகாட்டியா வச்சிக்கலாம்.. உங்க பாணியிலேயே இதை பேசலாம்..”
எழுதிக் கொடுத்த ஸ்க்ரிப்ட்டைப் பற்றி மறுநாள் நண்பனிடம் கேட்டேன். “நல்லா இருக்காம்டா.. கேட்டு எல்லாம் சிரிக்கிறாங்க, நீதான் எழுதினேன்னு சொன்னேன்..ஓகேதான்னு சொன்னாங்க”. நிகழ்ச்சி தயாரிப்பாளர் மலாய் பெண்மணி என்பதால்; என் ஸ்கிரிப்டை அப்படியே மலாய் மொழியில் எழுதி கேட்டார்கள். அப்போதுதான் எனக்கு செக் கொடுக்க வசதிப்படும் என்றார்கள். அதைனையும் இரவு தூங்காமல் செய்தேன். அனுப்பினேன்.
அந்நிகழ்ச்சிக்கு 2 நாள்கள் முன்பு பிறந்தகம் புறப்பட்டேன். எந்த நேரத்திலும் ஸ்கிரிப்ட் சம்பந்தமாக என்னை கூப்பிடலாம் என சொல்லியே சென்றேன்.
இன்னும் சிறிது நேரத்தில் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்; முகநூலில் அந்நிகழ்ச்சி குறித்தும் என் ஸ்கிரிப்ட் குறித்தும் எழுதினேன். நண்பர்கள் வாழ்த்தினார்கள்.
நிகழ்ச்சி தொடங்கியது. நான் எழுதியதை பேசினார்கள். எனது நான்கு ஐந்து வாக்கியங்களை சுருக்கி 2 வாக்கியங்களாகப் பேசினார்கள். என் ஸ்கிரிப்ட்டில் 30% நான் எழுதாத அறிவிப்பாளர்களே பேசிய வசனமும் இருந்தன. நிகழ்ச்சி முடிந்தது.
4 நாள்கள் விடுமுறை கழித்து அலுவலகம் வந்தேன். அன்றும் இரவு வேலை. நண்பனைச் சந்தித்தேன். “நிகழ்ச்சி நல்லா இருந்திச்சிடா... என்ன டெக்னிக்கல்தான் கொஞ்சம் சரியா அமையலை...” என்றேன். “என்னடா செய்றது கேமரா மேன்க்கு தமிழ் தெரியலை அதான் இப்படியாச்சி, ஆங் உனக்கு 500 ரிங்கிட்-டா... பேங்க்ல போட்டுட்டாங்களாம் நாளைக்கு எடுத்துக் கொடுத்தடறேன்..”. “ஓ, அவ்வளோதான் கொடுத்தாங்களா...?” என்றேன். “ஆமாண்டா” என்றான்.
விடிந்ததும் அலுவலகம் சென்றேன். நிகழ்ச்சி முடிந்ததும் என் நண்பன் பேசிய வசனம் வாய்கள் மாறி என் காதில் விழுந்தது, “1300 ரிங்கிட் கொடுத்தாங்க..ம்... அந்த அண்ணன் ஸ்கிரிப்டை திருத்தினாரு, அவருக்கு கொஞ்சம் கொடுக்கனும், இவன்கிட்ட 500 வெள்ளிதனே பேசினேன். அவ்வளோ கொடுத்திடுவேன்.”
எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை; நிகழ்ச்சியை நான் முழுமையாகக் கேட்டேன், எழுதியதில் குறித்து பேசினார்களே தவிர சிறப்பாக எதனையும் எழுதியிருக்கவில்லை. பின் எப்படி காசு கைமாறும் என்ற குழப்பம் மேலோங்கியது.
மறுநாள் நண்பனிடன் காலையிலேயே கேட்டேன். தெரியலையே என்று பதில் சொன்னவன். தொடர்ந்தான் “தெரியலடா..இன்னும் சொல்லலை; அந்த பொண்ணு பேங்க்ல போட்டுட்டாங்களாம். அதைத்தான் கேட்கனும்.”. நான் “சரி நீ போன் நம்பர் கொடு நான் கேட்டுக்கறேன்”.
தொலைபேசி எண் கிடைத்தது; பேசினேன். அந்த பெண் சொன்ன பதில் “தயா, ஸ்கிரிப்ட்டுக்கு 1300 ரிங்கிட் கொடுத்தாங்க.. (நண்பனை பெயரைச் சொல்லி ஏதும் சொன்னாரா.. சொல்லலையா. ஓ, என்கிட்ட சொன்னாரு தயாக்கு 500 ரிங்கிட் போது அப்பறம் (பாடகர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு) அவரு ஸ்கிரிப்டை கொஞ்சம் மாத்தினாராம் அவருக்கு கொஞ்சம் பணம் கொடுக்கனுமாம்.”
உடன் நான் “அப்படி எதும் மாத்தின மாதிரி தெரியலையே” என்றேன். அவள் “எனக்கு தெரியலை தயா, (நண்பனின் பெயர் சொல்லி) அவர்தான் சொன்னாரு. (பாடகர் பெயரைச் சொல்லி) அவரு இப்படி காசை கேட்கமாட்டாரு. ஆனா எப்படி கேட்டாருன்னு தெரியலை.. ”
சரியென்று விடைகொடுத்து; நண்பனிடம் சொன்னேன். எனக்கு 1300 ரிங்கிட் கொடுத்தாங்களாம், நாளைக்கு பேங்கல போடறாங்களா, பேங்க நம்பர் கேட்டாங்க கொடுத்துட்டு வந்தேன் என சொல்லி அலுவலகம் கிளம்பினேன்.
கடுப்பான முகத்துடன் நண்பன் தனியே அழைத்தான்.
“1300 ரிங்கிட்தான். ஆனா அவரு கொஞ்சம் திருத்தினாரு அவருக்கு கொஞ்சம் கொடுக்கனும்”
“அவரு கேட்டாரா..?”
“அப்பறம் காலையிலேயே எப்போ காசு போடுவிங்கன்னு கேட்டாரு. நாளிக்குன்னு சொல்லியிருக்கேன்”
“ஸ்கிரிப்ட்டை எழுதினது நான் தானே..”
“ஆமா ஆனா நிகழ்ச்சி அப்போ நீ வீட்டுக்கு போய்ட்ட.. அவர்தான் கொஞ்சம் ஐடியா கொடுத்தாரு.. அதன் காசு கேட்டாரு.”
“ஓ அப்படியே.. சரி நீ அவரோடா போன் நம்பர் கொடு”
“எதுக்கு..”
“இல்ல நான் கேக்கறேன். எதுக்கு அவருக்கு காசுன்னு”
“இது தேவையில்லாத பிரச்சனை தயா”
“எது தேவையில்லாத பிரச்சனை..?”
“அப்பறம் உனக்கு நான் 500 ரிங்கிட் தானே பேசினேன்..”
“ஆமா பேசினே... எவ்வளவுன்னு தெரியாதப்போ 500ன்னு சொன்னே.. இப்பதான் எனக்கு 1300 ரிங்கிட்டுன்னு கொடுத்திருக்காங்களே கொடுக்கவேண்டிதானே..”
“உனக்கு புரியல தயா..”
“என்ன புரியல..நீ அவரோட நம்பர் கொடு ?”
“இப்போ எதுக்கு டா.... உன்கிட்ட சொன்ன 500 ரிங்கிட்தான் கொடுக்கறேன்னு சொல்றேன்ல... நீ அவர்கிட்ட பேசினா பிரச்சனைதான்”
“நான் ஒன்னும் பிரச்சனை பண்ணலையே.. போன் பண்ணி கேட்கறேன். என்னோட ஸ்கிரிப்ட்டுல என்ன அவரு திருத்தினாருன்னு நானும் தெரிஞ்சிக்களாம்தானே..”
“இப்போ நீ கேட்டா எனக்குதான் பிரச்சனை; அப்பறம் அடுத்த நிகழ்ச்சிக்கேல்லாம் என்னை கைகழுவிடுவாங்க..”
“உனக்கென்ன பிரச்சனை..”
“இந்தா நம்பரு. பேசு. அப்பறம் TV-ல எனக்கு எந்த வாய்ப்பும் இல்லாம போகும், அப்பறம் அவ்வளோதான்..”
“சரிடா நான் பேசல... போதுமா... எனக்கு 500 ரிங்கிட்தானே கொடுக்கபோற.. கொடு”
வந்துவிட்டேன். அவனுக்கான பணம் முழுவதும் அவனது வங்கியில் சேர்ந்துவிட்டது.
என் நண்பனுக்கு என் நிலை நன்றாக தெரியும். பெரும்பாலும் நான் வெளிநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதை விரும்புவதில்லை. அதிலும் இம்மாத இறுதியில் எனக்கு திருமணம். இதுவரையிலான என் சேமிப்புதான் கல்யாணத்திற்கு கொடுத்து வருகிறேன். அப்பாவும் அம்மாவும் குறைந்த வட்டிக்கு வேறு பணம் வாங்கியிருக்கிறார்கள். தீபாவளிக்கு வீட்டிற்கு சென்றதால் இதனை தெரிந்துக் கொண்டேன்.
என் குடும்ப சூழல் முதல், பணப்பிரச்சனை வரை நான் பகிருந்துக் கொண்ட நண்பன் ஒருவனே இப்படி செய்ததை என்னால் ஜீரணிக்க முடியவைல்லை. இதனை எழுதும் போது பின்னிரவு மணி 3.10. இன்னும் நான் தூங்கவில்லை. அவனது செயல் என் நெஞ்சை ஏதோ செய்கிறது. ஆளுக்கு பாதி பாதி என சொல்லியிருந்தால் நானே கொடுத்திருப்பேன்.இத்தனைக்கும் அவன் பணக்காரன்தான். பணத்திற்காக ஒரு நண்பனையே இப்படி புலம்ப வைக்கலாமா...?
அவனைபோல நான் வெளி நிகழ்ச்சிகள் செய்து சம்பாதிப்பவன் இல்லை.
நான் விழுந்தால் நானேதான் எழவேண்டும். அவனுக்கு ஒரு பட்டாளமே இருக்கிறது.
கடன் வாங்கக்கூடாது என்ற உறுதியால் பல தடவை சாப்பிடாமல் இருந்திருக்கிறேன்.
இதையெல்லாம் எழுதக் காரணம் உங்களிடம் இருந்து அனுதாபமோ பண உதவியோ பெறுவதற்கு அல்ல.
நாட்டை திருத்த; மாநிலம் திருந்த வேண்டும்; மாநிலத்தை திருத்த; வட்டாரம் திருந்த வேண்டும்; வட்டாரத்தை திருத்த ஊர் திருந்த வேண்டும்; ஊர் திருந்த; உறவுகளை திருந்த வேண்டும்;உறவுகள் திருந்த குடும்பத்தை திருந்த வேண்டும்; குடும்பம் திருந்த நான் என்ற ஒருமை திருந்த வேண்டும்.......... அதற்கு சுந்தர ராமசாமி சொல்லியது போல இப்படி கடைந்தெடுத்த தறுதலைத் தனங்களை செய்து..... நம்மை சுற்றியிருக்கும் ஊனங்களை அம்பலப்படுத்த வேண்டும்.

எனக்கு நாட்டை திருத்த நாளாகளாம்; இதனை எழுதுவதால், நான் விழிப்படைந்திருக்கிறேன் என பிரக்ஞை பிறக்கிறது புதிய உதயமாய்......................

இப்படிக்கு தயாஜி..............
(2.11.2011)

நவம்பர் 01, 2011

கிடக்கும் மனிதனில் நடக்கும் பிணம் நான்


நடைப்பயணம்

வழி நெடுக்க
பிணங்கள்

நடமாடியும்

நடனமாடியும்

அறிமுகமற்ற

ஆடையற்ற

ஆட்கள் மன்னிக்கவும் பிணங்கள்

அக்குல்களில் வாடையுடன்
வரவேற்புக் கைகளுக்கு
இடையில்

நான்

ஆற்றைக் கடக்காமலே
முதலையின் முதுகில் கால் வழுக்கினேன்

காப்பாற்றி கரைசேர்க்கிறது
பிணம் ஒன்று

ஏறக்குறைய என் சாயல் கொண்ட
பிணமது

நானாகவும் இருக்கலாம்

நாங்கள் கைகுழுக்கினோம்

இந்த முறை அக்குல் வாடை
பழகிவிட்டது

எனக்கும் வாடை
வீசத் தொடங்கியது

நடந்துக் கொண்டிருக்கும்
பிணங்களின் வருசையில்

காலி இடமொன்றுத்
தெரிய...

பிணமான நானும்
இணை சேர்ந்தேன்

எல்லாம் சரி

எப்போது நான் பிணமானேன்

பயணத்தின் பொழுதா

முதலை மேல் வழுக்கிய பொழுதா

என்போல் பிணம் கைகொடுத்த பொழுதா

அக்குல் வாடையை ஏற்ற பொழுதா

காலி இடத்தில் இணைந்த பொழுதா

பதில் அல்லது பதிகள்

தெரியும்வரை
விழித்தல் கூடாது

இடையில்
விழித்தாலோ

உடல்
அசைந்தாலோ

வாடை
மறைந்தாலோ

மீண்டும்
மனிதனாவேன்

பயமாய்
இருக்கிறார்கள்

மனிதர்கள் (மட்டுமே)

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்