பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 31, 2016

கதை வாசிப்பு 19 - 'கண்களை விற்றால் ஓவியம்'

கதை வாசிப்பு 19 – 'கண்களை விற்றால் ஓவியம்'


    இவ்வார (2016 ஜூலை 31 ) ஞாயிறு மக்கள் ஓசையில், டாக்டர்.முனீஸ்வரன் எழுதியிருக்கும் ’கண்களை விற்றால் ஓவியம்’ என்ற சிறுகதை வந்துள்ளது. கடிகாரக்கதை வரிசையில் ஜூலை மாதத்திற்கான கடைசி கதை.

கதை.
   கணவன் மனைவியை மையப்படுத்தியுள்ளது. மாமணிக்கு எந்த கெடுதலும் வரக்கூடாது என்றும் தங்களின் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென்றும் பூஜைகளில் ஈடுபடுகிறாள் மனைவி வடிவுக்கரசி. மனைவியின் அச்செயலே கணவனுக்கு எரிச்சலை கொடுக்கிறது. பெரும்பாலும் பூஜைகளை  முடித்து வீட்டிற்கு வருவதற்கு தாமதமாகிறது. பலமுறை கணவன் சொல்லியும் எல்லாம் குடும்ப நன்மைக்குத்தானே என தன் பக்க நியாயத்தை சொல்லிச்செல்கிறாள். திருமணமாகி இரண்டாடுகள் ஆனப்பின்னரும் பூஜை ,தீட்டு, தோன்றவில்லை போன்ற காரணங்களைச்சொல்லி குழந்தை பெறுவதை தவிர்த்து வந்தாள். குழந்தையின் வருகை அவளது பூஜைகளுக்கு தொந்தரவாக இருக்கும் என உள்ளுக்குள் நினைக்கிறாள். மார்கழி மாதம் அம்மா வீட்டிற்கு சென்ற வடிவுக்கு ஒருமாத காலம் எந்த தொல்லைகளும் இன்றி பூஜைகளில் ஈடுபட முடிந்தது. மார்கழி முடிந்தும் அவள் வீடு திரும்பவில்லை. இப்போது மாமணி மனதில் அவளுக்கு இடமில்லை என்று தெரிகிறது . ‘வாழாவெட்டி’ என அம்மாவிடம் திட்டு வாங்குவதைவிட வடிவுக்கு எந்த தொல்லைகளும் இன்றி சுதந்திரமாக பூஜைகளில் கலந்துக்கொள்ள முடிகிறது.

கதையைக்குறித்து;
   பலர் இக்கருவை கொண்டு ஒரு பக்க கதைகளாக நிறைய எழுதியுள்ளார்கள். இம்மாதிரி கதைகளில் சுவாரஷ்யம் முக்கியம். அப்படியில்லாமல் இக்கதையை சிறுகதையாக்க முயல்கையில் சிலவற்றை கவனித்து கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது. சுவாரஷ்யத்தையும் தாண்டி ஒரு தேடலோ ஒரு நிறைவோ இக்கதைகளில் இடம்பெற வேண்டும். 

    இக்கதையில் இரண்டு இடங்களில் மட்டுமே இந்தோனேசிய வீட்டுப்பணிப்பெண் வருகிறாள். வேலை முடிந்து வீட்டிற்கு வந்து மனைவி இல்லாததுக் குறித்து எரிச்சல் கொண்டிருப்பவனுக்கு சூடாக தேநீர் கொடுப்பதுதான் அவள் வேலை. அந்த பணிப்பெண் வடிவுக்கரசியின் இடத்தை பூர்த்தி செய்கிறாளா? கணவன் மனைவியிடம் ஏற்பட்டிருக்கும் இடைவெளியில் அவளுக்கான இடம் எதுவென கதையை கொண்டுச்சென்றிருந்தால் ஒருபக்க கதையாக இதனை கணிக்க முடியாதபடி அமைந்திருக்கும். இக்கதை சிறுகதையாக முழுமையடைந்திருக்கும் . இக்கதையினை வாசிக்கும் போதே கதையின் முடிவை கண்டுக்கொள்ள முடிவது பலவீனம். 

  திருப்பங்கள் இல்லாததும் சோர்வைக்கொடுக்கிறது. அதே சமயம் அச்சோர்வில் இருந்து வாசகர்களைக் காப்பாற்றுவது எழுத்தாளரின் வார்த்தை விளையாட்டுதான் . எள்ளல் நடையும் புதிய வார்த்தைகளும் வாகருக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது.  உதாரணமாக, ‘காப்பி ஆறிக்கொண்டிருந்தது, மாமணி சூடேறிக்கொண்டிருந்தான்’, மாமணிக்கு வேலைப்பளு வடிவுக்கரசிக்கு பூஜைப்பளு போன்றதைச் சொல்லலாம்.

தலைப்பு,
     பலமுறை படிக்கவேண்டியதாக இருந்தது. அதெப்படி ’கண்களை விற்றால் ஓவியம்’ என வரும். ஒருவேளை கண்களை விற்றால்தான் ஓவியம் வாங்க முடியும் என சொல்கிறதோ ?. இக்கதைப்படிப் பார்த்தால் ‘கண்களை விற்று ஓவியம்…’ என்பதுதான் சரியாக வரலாம் என எண்ணத்தோன்றுகிறது. 

   இங்கு கதைகளுக்கு தலைப்பு வைப்பதில் சிலருக்கு அதிக சிக்கல் இல்லை. ஏதாவது ஒன்றை வைத்துவிடுகிறார்கள். சிலர் அதிகம் சிரத்தை எடுத்துக்கொண்டு தலைப்பை கெடுத்துவிடுகிறார்கள். ஒரு சிலருக்கே தலைப்புகளில் இருக்கும் சூட்சுமம் பிடிகொடுக்கிறது.

நிறைவாக,
   இது டாகடர். முனீஸ்வரின் சமீபத்திய கதையாகத் தெரியவில்லை. அவரின் பல கதைகளைப் படித்திருக்கும் வாசகன் என்ற முறையில் இது எப்போதோ எழுதி நான் படிக்கத்தவறிய கதையாக இருக்கலாம்.

-தயாஜி-


ஜூலை 17, 2016

கதை வாசிப்பு -15 ' திருநங்கையின் மகள்'

கதை வாசிப்பு -15 ' திருநங்கையின் மகள்'

     ஜூலை மாத (2016) உயிர்மையில் இந்து மேனன் எழுதிய சிறுகதையை ஸ்ரீபதி பத்மா 'திருநங்கையின் மகள்' என்று மொழிப்பெயர்த்துள்ளார்.
சீக்கிரத்தில் கதைக்குள்ளே செல்ல முடியவில்லை. கவனமாக படிக்கவேண்டியுள்ளது. பெண்ணின் மன உணர்வில் இருந்து கதை தொடங்கி தொடங்கிய இடத்தில் முடிகிறது. அதற்குள்ளாக ஒருத்தியில் வாழ்க்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

   திருநங்கையால் காப்பாற்றபடும் சிறுமி எந்த நொடியில் தன்னை திருநங்கையின் மகள் என அறிவிக்கிறாள் என்பதுதான் கதை நிறைவு பெறும் இடம். ஆனாலும் கதை அங்கிருந்து பின் வழியாக கதையின் தொடக்கதை நோக்கி வாசகரை அழைத்து செல்கிறது.

   கதையின் நடை அவளின் மனவோட்டம் போல பிடிகொடுக்காமல் முன்னோக்கி போய்க்கொண்டே இருக்கிறது. இதுதான் கரு இதுதான் கதை என வாசகரை முடிவெடுக்க இக்கதை சிரமப்பட்டுத்துகிறது. அதுவே இக்கதையின் சுருக்கத்தை எழுத தடையாக அமைந்துள்ளது. மீண்டும் கதையை படித்தாலன்றி அது பிடிகொடுக்காது.

    ஏன் அப்படி செய்தாள், எதனை அவள் நிரூபிக்க தன் உடலையே ஆயுதமாக்குகிறாள் என வாசகரை சிந்திக்க வைப்பதில் கதை தன்னை காப்பாற்ற எத்தனிக்கிறது.

- தயாஜி

கதை வாசிப்பு 18 –ம் ‘கெத்துவா கம்போங் முனுசாமி’கதை வாசிப்பு 18 –ம்கெத்துவா கம்போங் முனுசாமி


    இவ்வார மக்கள் ஓசையில் (17 ஜூலை 2016) எம் கருணாகரனின்கெத்துவா கம்போங் முனுசாமிஎன்னும் சிறுகதை இடம்பெற்றுள்ளது.
 கதைக்குச்செல்வதற்கு முன்பாக;

   கெத்துவா கம்பங் முனுசாமி என்பது மலாய்ச்சொல், தமிழில் கிராமத்தலைவர் முனுசாமி என்று கொள்ளலாம். கதையின் தலைப்பை பார்த்ததும் மகிழ்ச்சியும் பதட்டமும் ஒருங்கே தோன்றிவிட்டது. அதனை தவிர்க்க இயலவில்லை.

     இத்தலைப்பை படிக்கையில் இயல்பாகவே கிராம தலைவர் குறித்து ஏதோ இருப்பதாக தோன்றி கவனம் பெற்றதில் மகிழ்ச்சி. இதென்ன தமிழ் நாளேட்டில், தமிழ் சிறுகதையில் இப்படி மலாய் மொழியை தமிழில் எழுதி தமிழை கொலை செய்கிறாரே இந்த எழுத்தாளர் என எந்த முகநூல் போராளியாவது கிளப்பிவிடுவாரோ எந்த வீடியோவிலாவது கிளம்பி வருவாரோ என்ற பதட்டம் இன்னமும் எனக்கு இருக்கிறது. அதற்கான சாத்தியங்கள் குறைவுதான் என்பதை சிறிது நேர யோசனையில் கண்டுகொண்டேன்

      இங்கு தமிழ்ச்சார்ந்த இயக்கங்கள் பல உள்ளன, நல்ல தமிழை நடைமுறை படுத்த அவர்களும் அதன் அங்கத்தினரும் தொடர்ந்து செயல்பட்டுவருவது நாம் அறிந்ததுதான். பாராட்டத்தக்க ஒன்றாகவே இதனை பார்க்கிறேன். ஆனால் அவர்களில் செயல்கள் மீதான நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் சிதைப்பதற்காவே ஓர் கூட்டம் அங்கொன்றும் இங்கொன்றும் இருப்பதை காணவே முடிகின்றது. அதில் பெரும்பாலும் முகநூல் போராளிகளாக இருப்பது அவர்களை அடையாளப்படுத்த நமக்கு கிடைத்திருக்கும் நல்லதொரு சாதனம்.

    தமிழ்ச்சார்ந்த எந்த நிகழ்ச்சிகளிலும் அவர்களை காணவியலாது, எந்த தமிழ்ப்பத்திரிக்கையும் அவர்களின் முகவரிக்கு வந்து சேராது. தமிழ்ச்சமூகம் முன்னெடுக்கும் எந்த ஆரோக்கிய நடவடிக்கைகளிலும் அவர்களை கண்டு கலந்தாலோசிக்க முடியாது.

     ஆனால், அவர்களுக்கு நம் நாட்டில் வெளிவரும் மலேசிய திரைப்படங்களுக்கு தமிழ் பெயரை வைக்காதது மட்டும்தான் மாபெரும் போராட்ட தூண்டுதலாக அமையும். உதாரணமாக சமீபத்தில் திரை கண்ட ஜகாட்என்ற மலேசிய திரைப்படத்தை சொல்லலாம்.

     ’என்னப்பா ஆளுக்கு ஆள் படம் நல்லாருக்கு, தமிழர்களோட வன்முறை கலாச்சாரத்தின் தொடக்கத்தை காட்டிருக்காங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கிங்கமுதல்ல அதுக்கு தமிழ்ல பேரு வைக்க சொல்லுங்கப்பாஎன்று புலனத்துக்கு அனுப்பி தங்களில் தமிழ் பற்றை காட்டினார்கள். முகநூலிலும் அதற்காக ஒரு பெரிய கருத்துக்களமே வந்திருந்தது.

      தலைப்பு என்பது எதற்கு ? கதைக்கு ஏற்றார் போலவா இல்லை இம்மாதிரி போலி போராட்டவாதிகளுக்கு கிச்சிகிச்சி மூட்டவா.? என்றாவது இவர்கள் திரைப்பட விவகாரங்களை விட்டு இதர தமிழ்ச்சார்ந்த அமைப்புகளுக்கு உதவி செய்திருப்பார்களா என்றால் இல்லையென்றே நினைக்கத்தோன்றுகிறது.

     சரி மலேசிய படங்களுக்கு தமிழில் பெயர் வைக்காத்தால புறக்கணிக்கிறோம் என வீட்டுக்குள்ளேயோ கைபேசிக்குள்ளேயோ முகநூல் வழி போராட்டம் செய்கின்றவர்களை பார்த்து நாம் தாரளமாக ஒன்றை கேட்கலாம்.

 “சரிங்க பாஸ்…! படத்துக்கு தமிழ்ல பெயர் வைக்கல அதனால போய் பாக்கலஆனா இங்குள்ள எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் (எல்லோருமே என்றும் சொல்லிக்கொள்ளலாம்) அவர்கள் வெளியிடும் புத்தகங்களுக்கு தமிழில்தானே தலைப்பு வைக்கிறார்கள். தமிழ் கதைகள்தானே எழுதுகிறார்கள்இதுவரை எந்தெந்த புத்த வெளியீட்டுக்கு சென்றுள்ளீர்கள்…. அட எத்தனை புத்தகங்களை வாங்கியுள்ளீர்கள்…. அடடே எத்தனை பேருக்கு நம்மவர்களில் புத்தகங்களை வாங்கிக்  கொடுத்திருப்பீர்கள் ”  என்றால் முறைத்துப்பார்த்து முனகுவார்களே தவிர இதோ அதோ என ஆதாரம் காட்டமாட்டார்கள்

      ஏனெனில் முகநூலின் பகிர்வுக்கு அரை நொடி போதும். மற்ற எல்லாவற்றுக்கும் கொஞ்சமேனும் உழைப்பு தேவை. முகப்பூச்சு மனிதர்கள் எப்போது குளிர்சாதனத்தை முகர்ந்துக்கொண்டிருப்பார்கள்தவறியும் வெளியேறினால்  அவர்களில் முகப்பூச்சு கரைந்து மறைந்து நிஜ முகம் தெரிந்து விடும். ஏற்கனவே இருக்கும் தமிழ்ச்சார்ந்த இயக்கங்களிடமாவது இவர்கள் கொஞ்சமாவது சமூக பொறுப்பைக் கற்றுக்கொள்ளலாம்.

இப்போது கதை சுருக்கத்துக்கு போகலாம்

கம்போங் கெத்துவா முனுசாமி இறந்துவிட்டார். அவர் ரொம்ப நல்லவர். அவரின் இறப்புக்கு மலாய் சீன இனத்தவர்களும் வந்திருக்கிறார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னமே மலாய் பெண்ணுக்கு உதவியிருக்கிறார். அவரின் பையன் இப்போது மகட்பேறு மருத்தவராக  உள்ளார். கம்பத்துக்கு வரும்போதெல்லாம் முனுசாமியை பார்க்க தவற மாட்டார். தன் கம்பம் தவிர மற்ற கம்பங்களுக்கு உதவியுள்ளார். அப்படி விரட்டியடிக்கப்பட இருந்த ஒரு கம்பத்தை காப்பாற்றி அந்நிலங்களை அவர்களுக்கே பட்டாபோட்டு கொடுத்திருக்கிறார். அவர்கள் இவரின் பெயரை கம்பத்துக்கு வைக்க கேட்டும் இவர் அதனை தவிர்த்துவிட்டார். யாருக்கெல்லாம் என்னென்ன உதவிகள் தேவையோ அதையெல்லாம் அரசாங்கத்திடம் இருந்தோ மற்றவர்களிடம் இருந்தோ வாங்கிகொடுத்துவிடுவார். சில மாதங்களாக அங்கு பரவியிருந்த காய்ச்சலில் சில பலியாக பலரை முனுசாமி காப்பாற்றி கடைசியில் அவர் அவ்வியாதிக்கு பலியாகிவிட்டார். இங்கு தமிழர்கள் மட்டும் இருப்பதால்தான் அரசாங்கம் நோய் பரவியும் கண்டுகொள்ளவில்லை என சந்தானம் புலம்புக்கிறார். அதோடு இப்போது சுற்றுவட்டாரத்தில் குடியேறியிருக்கும் சட்டவிரோத குடியேறிகள் சொந்த நாடு போல நடந்துக்கொள்ப்கிறார்கள், அடிதடி கொலை வரை போகிறார்கள், அவர்கள்தான் வியாதிக்கு காரணம் என்கிறார். அப்போதுதான் கம்போங்க் கெத்துவா அவ்விடத்தில் மண்டபம் கட்ட வட்டிக்கு பணம் வாங்கியது தெரியவந்தது. அமைச்சர் சொன்னது போல பணம் கொடுக்கவில்லைஅந்த மண்டபம் குறித்து சொல்கிறார் கதைச்சொல்லி. தன்னையும் அங்கு வகுப்பு நடத்த சொல்ல கேட்டதை நினைவுகூருகிறார். ஆனால் வெளியில் வகுப்பு எடுத்தால் பணம் கிடைக்குமே என இதுவரை தவிர்த்து வந்திருக்கிறார். இனி கதைச்சொல்லி இலவசமாக அங்கு வகுப்பு எடுக்க முடிவெடுக்கிறார். இறப்பு வீட்டில் நடக்கவிருப்பதை சில பத்திகளில் சொல்லி, முனுசாமியின் பிள்ளைகள் குறித்து சொல்கிறார். ஐந்து பெண்கள். மூத்தவருக்கு நாற்பது வயது. யாருக்கும் திருமணம் ஆகியிருக்கவில்லை. அப்போது பக்கத்தில் டத்தோ சுரேந்திரன்  நிற்கிறார். கதைச்சொல்லியின் பால்ய நண்பன். இக்குடும்பத்துக்கு தான் கடமைப்பட்டிருப்பதாக சொல்கிறார். கதைச்சொல்லி அவரைப்பார்த்து இறுகக் கைபிடிக்கிறார். கதை முடிகிறது.

கதை குறித்து;

    கதை முழுக்க சவப்பெட்டியில் இருக்கும் முனுசாமியை பார்க்க வருகின்றவர்களுக்கு எப்போதோ முனுசாமி செய்த உதவிகளை கதைச்சொல்லி சொல்லிக்கொண்டே வருகிறார். நம் காதுகளில் சோக இசையும் கண்களில் அனுதாப கண்ணீரும் வராத்துதான் மிச்சம். நல்லவன் ஒருவன் வாழ்ந்தான். அவன் நல்லவனாகவே வாழ்ந்தான். அவனின் இறப்பு இன்னும் சிலரை நல்லவனாக்கியுள்ளது

    உண்மையில்  அதுவல்ல கதை, சிறுகதை அப்படியாக வந்திருக்க கூடாது. இங்கு பல இடங்களில் முக்கியமான சிறுகதைகள் வெளிவர முயன்று முடியாமல் போய்விடுகின்றன.
உதாரணமாக;

1.        1.   எப்படி கிராம மக்களுக்கு நிலப்பட்டா கொடுத்தார். ஏனெனில் அங்குதான் சதி செய்து நிலங்களை பெற்று தந்தார் என கதைச்சொல்லி சொல்கிறார். நல்லவனாக இருக்கும் ஒருவர் எப்படி சதி செய்து நல்லது நடந்தும் அதன் உளச்சிக்கலில் மாட்டிகொள்கிறார் என்பதை சொல்லியிருக்கலாம்.

2.       2.    தமிழர்கள் அதிகம் இருப்பதால் நோய் பரவியும் அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என சந்தானம் சொல்வதை கதையாகியிருக்கலாம்.


3.         3.  கள்ளக்குடியேரிகளாக நாட்டிற்கு வந்தவர்கள் காட்டில் மறைந்து வாழ்ந்த காலம் மாறீ  இப்போது இந்நாட்டை சொந்தம் கொண்டாடும்விதமாக வியாபரங்கள் செய்வது  சாலையோரமாக அனுமதியின்றி உணவு கடைகள் நடத்துவது இங்குள்ளவர்களுடன் சண்டையிட்டு கொலை, வழிப்பறிகளில் ஈடுபடுவதை போன்றவற்றை கதையாக்கியிருந்தால் இக்கதை முக்கிய கதையாக கவனம் பெற்றிருக்கும். இக்காலத்துக்கு இது குறித்தான விழிப்புணர்வுக்கு இக்கதை மூலமாகியிருக்கும்.

4.        4.   எப்போதும் நல்லவராக இருக்கும் கெத்துவா கம்போங் முனுசாமிக்கும், அதற்கு எதிராக இருக்கும் சந்தானத்துக்குமான முரன்களை கதையாக்கியிருக்கலாம். அது இச்சிறுகதை வேறொரு தளத்திற்கு கொண்டிவிட்டிருக்கும்.


5.       5.    எல்லாவற்றுக்கும் மேலாக ஊருக்கெல்லாம் நல்லது செய்தவர் தன் வீட்டில் இருக்கும் ஐந்து பெண்களுக்கு திருமணம் செய்ய முடியாமல் இருப்பது குறித்து பேசியிருக்கலாம். நாற்பது வயதான மகளை வீட்டில் வைத்துக்கொண்டு அவரும் படும் மன அழுத்தமோ அல்லது மகளின் மனமாகவோ கதை வெளிவந்திருக்கலாம்.கதையின் சிக்கல்;

   காரியம் செய்ய வரும் சாங்கியக்காரின் தொந்தியைப்பார்த்து தனது தொந்தியை தடவி , வயிறை குறைக்க வேண்டும் என சொல்லும் கதைச்சொல்லியைக்கூட நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இவ்வளவு நடந்தும் இன்னமும்  டத்தோவை நம்புவதாக கதைச்சொல்லி தன்னை அடையாளம் காட்டுவது அபத்தம். இதற்கு பதிலாக இறந்த கெத்துவா கம்போங்க் முனுசாமி எந்த  மாயமந்திரம் செய்தாவது பிழைத்து வந்திருக்கலாம்.

-          தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்