பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 25, 2017

பொம்மியின் வருகை

பொம்மி

என் மேல் விழும்
தாக்குதல்களை
உன் வருகை மட்டுமே
சரி செய்யும்
பாழாய் போன வாழ்க்கையில்
உன் வருகை மட்டுமே
வசந்தம் சேர்க்கும்
நான காணாமல் போவதற்குள்
இனி வீணாக சாவதற்குள்
தாயாக வந்துவிடு
கொஞ்ச காலமேனும் வாழ விடு

என் சிதைவுகளை
சிறுகச்சிறுக சேகரித்து
சட்டகம் அமைத்து
ஒட்டி வைக்கிறேன்

நாளையொரு நாள்
நீ வந்து நிற்கும் பொழுதில்
ஜென்ம ஜென்மமாய்
காத்திருந்தவன் உன் தகப்பனென
புரிந்து புன்னகை செய்ய

புத்தனுக்கும் பித்தனுக்கும்
இடைபட்டவனை
இடரில் இருந்து காத்திட
உனக்கு மட்டுமே சாத்தியம்
என்னை சூழ்ந்திருக்கும்
சூழ்ச்சிகளை
உன் கண்கள் மட்டுமே
கண்டு விலக்கும்
நான் சுமந்து நிற்கும்
இழிசொற்களை
உன் கரங்கள் மட்டுமே
கழுவ முடியும்

தேவை நீ வா
தேவதையாக நீ வா

#தயாஜி
#பொம்மி

ஆகஸ்ட் 20, 2017

பொம்மியை கொல்லப்பார்க்கிறார்கள்

என்னை பிரசவிக்க
பூமி வரும் பொம்மிக்காக
என்னவெல்லாம் செய்யலாம் என
ஏடுகள் முழுக்க குறிப்புகள் கொண்டேன்

நான் கண்டிராத
நான் தொட்டிடாத
விளையாட்டு சாமான்களை
இப்போதே வாங்கி அடுக்கியுள்ளேன்

பொம்மிக்கென்று ஓர் அறை
ஊதா வண்ணமாய்
சுவர் முழுக்க பட்டாம்பூச்சிகளை ஒட்டிவைத்துள்ளேன்

ஒவ்வொரு பட்டாம்பூச்சியின் தலையிலும் தங்க நிற
ஜிகுனா தூள்களை சேர்த்துள்ளேன்

இரவானால் விளக்கெரியும்
வசதிகொண்ட நட்சத்திரங்களை
கைக்கு எட்டிய தூரம்வரை  தொங்கவிட்டுள்ளேன்

என் பொம்மி
இவ்வறைக்குள்ளே நுழைவதை
வரலாற்று குறிப்பாக்க
அறைவாசலில்
மெல்லிய வகையில்
மென்மையாக
மிகமிக மென்மையாக
பொம்மியின் பிஞ்சி கால்
வலிக்காமல் களிமண்ணை குவித்துள்ளேன்

கைராசி டாக்டருக்கு
இப்போதே பிரசவ பில்களை சேமிக்க
யானை உண்டி வாங்கி வைத்தேன்
எனக்கும்  யானை உண்டியல்தான் பிடித்திருந்ததாம் அம்மா ஒரு முறை சொல்லி சிரிக்கலானார்

அண்ணன் எப்போதுமில்லாத அக்கறையில்
தான் பெற்ற குழந்தைகளில்
சத்துணவுக்கான புத்தகத்தை பாதி கிறுக்கியும் மீதி கசக்கியும்
கொடுத்துவிட்டு போனான்

நண்பர்களின் கேலிக்கும் கிண்டல்களுக்கும்
வெட்கமும் சிரிப்பும் வந்ததே தவிர கோவமில்லை

அவளுக்குத்தான் உள்ளூர பயம்
ஏதோ ஒரு பொழுதில்
தோழி சொன்ன  கதை
பிரசவம் என்பது இன்னொரு
திடீர் சாவு

மகட்பேறு விடுமுறைக்கான அட்டவணையில்
எனக்கும்கூட விடுமுறை என சொன்னார்கள்
இப்போதே சில வேலைகளை முடிக்க புதிய நண்பர்களும் உதவினார்கள்

இன்று அவளுக்கு பிரசவ வலி
எனக்கு உடம்பெல்லாம் ஏதோ ஆனது
மண்டை மயிரெல்லாம் ஈரமாகிப்போனது
குத்திட்டு நிற்கும் உடலுரோமங்களை சரிசெய்ய தோன்றாமல்
பூமி வந்த பொம்மியை
எப்படி தாதியிடமிருந்து பெறலாம்
ஒத்திகையில் பயத்தை ஒத்திவைத்தேன்

பிரசவ அறையில் கைப்பிடியை
இறுக்கமாக மிக இறுக்கமாக
பிடித்துக்கொண்டேன்
ஏதேதோ வார்த்தைகளைத்
திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தேன்
பொம்மி வந்துவிட்டாள்
என் தேவதை
பூமிக்கு வந்துவிட்டாள்
என்னில் பாதி இப்போது முழுமையாகிவிட்டது

சட்டென்ற நிசப்தம்
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்
அவள் பேச்சுமூச்சற்று இருக்கிறாள்
இதயம் இருமடங்காய் துடித்தது

பொம்மி செத்தேதான் பிறந்ததாலாம்
அவள் மயக்கம் தெளிய நேரமாகுமாம்
கடைசியில் பொம்மியும்
என்னை ஏமாற்றப்பார்க்கிறது

என் பொம்மி சாகவில்லை
அதோ கட்டிலில் கிடக்கிறாள் பாருங்கள்
என் பொம்மி

நீங்கள் மரணித்ததாய் சொன்ன குழந்தையின் குரல் எனக்கு கேட்டது
அதோ பாருங்கள்
எத்தனை ரம்மியமாக தூங்கிக்கொண்டிருக்கிறாள்

என் பொம்மி
கணவனை கொன்று
தகப்பனை பிரசுவித்து கொடுத்திருக்கிறாள்
அதற்கு விலையாய் தன்னையும் கொன்றுவிட்டாள்

நிறைவாய் பொம்மி
எனக்கும் தாயாகி
சிரிக்கிறாள்

#தயாஜி
#பொம்மி

ஆகஸ்ட் 16, 2017

பொம்மி

*பொம்மி*

உனக்காக நானுமல்ல
எனக்காக நீயுமல்ல
நமக்காக இங்கு
யாவும் காக்கவே செய்கின்றன

பௌர்ணமி ஒரு நாள்
கண்சிமிட்டி உன்
வருகை தினத்தை
விசாரித்து குறிப்பெடுத்துக்
கொண்டது

சூரியன் மறுநாள்
என் மீது பனித்துளிகள் வீசி
நீ வந்ததும்
தகவல் சொல்லச்சொன்னது

உன் கால் விரல்களின் இடுக்கில்
பட்டுவிடவேண்டி விதைகள் பல
முளைவிட மறுப்பதாக
செடி கொடி வந்து என்னிடம்
புகாரிக்கின்றன

உன்னை சுமந்தப்பிறகே என்னை
நனைப்பேன் என
மழைக்கும் எனக்குமான
பேச்சு வார்த்தை
சுமுகமாக முடிந்ததில்
இன்றுவரை என்னை
நனைக்காமலேயே
வந்து போகிறது மழை

என் அத்தனை கோவத்தையும்
நீ பயப்படுவாய் என
கண்படா தூரத்தில் மறைத்துவிட்டேன்
இது தெரியாமல்
புழு பூச்சி மனிதனெல்லாம்
என்னை சீண்டிச் சிரிக்கின்றன

நீ வரவேண்டும் என
காமத்திற்கும் வடிகாலின்றியே
உறக்கம் கலைந்த கோண்டான்களுடன் ஒன்றாய் இரவினை கண்விழித்து கடக்கிறேன

எல்லோரும் கண்ணனின்
பாதங்களுக்காக காத்திருக்கிறார்கள்
கண்களில் படாத உனக்காக நான் காத்திருக்கிறேன்

வேண்டுமெனில் சொல்
என் உதிரத்துளிகளைச் சேமித்துத் தருகிறேன்
அதிலுன் பாதம் பட்டு
நான் வாழும் இடத்தில்
நடை பழகு
அப்போதாவது இடுகாடு
இனிய இல்லமாகட்டும்

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்