பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 30, 2020

#கதைவாசிப்பு_2020_15 'ஓணான்கள்'

#கதைவாசிப்பு_2020_15
கதை – ஓணான்கள்
எழுத்து – அம்ரிதா ஏயம்
புத்தகம் – விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடந்தைகள்
(சிறுகதை தொகுப்பு)


     காலந்தோரும் ஏதோ ஒரு வகையில் யுத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. யார் யுத்தம் செய்கிறார்கள். யாருக்காக யுத்தம் செய்கிறார்கள் என்கிற கேள்விக்கு இன்று வரை நிலையான பதில் கிடைக்கவில்லை. யுத்தம் தொடங்கியப் போது கொடுத்த பதிலுக்கும் யுத்தம் முடிந்தப் பின் நமக்கு  கிடைக்கும் பதிகளுக்கும் சமயங்களில் துளியும் சம்பந்தங்கள் இருப்பதில்லை.

      ஆனால் அது விட்டுச்செல்லும் துயரங்கள் இழப்புகள் அழிவுகள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கின்றன. ராஜராஜாக்கள் தொடுத்த போர் முதல் உலக யுத்தம், இன்றும் நம்மை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ‘நவீன பயோவார்’ என எல்லாவற்றையும் எழுத்துகளாக பலரும் பல இடங்களில் பதிவு செய்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்வதற்கு நம்மிடம் மிச்சம் இருக்கப்போவது என்னெவென்ற கேள்விகளின் குழப்பங்கள் சூழந்த வாழ்வும் சூழலும் நம்மை தள்ளிவிட்ட நிலையில் வரலாறுகளை திரும்பிப்பார்க்கையில் அதற்கான தீர்க்கத்தரிசனம் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

     யுத்தங்கள் செய்து வைத்த மானுட துரோகங்களை வாசிக்கையில் மனம் வலிக்காமல் இருப்பதில்லை. அப்படி ஒரு கதைதான் ஓணான்கள்.

    ஓணான்களை பிடித்து ஆய்வு செய்யும் மாணவன். அவனுக்கு ஓணான்களை பிடித்துக் கொடுக்கும் ஒரு நண்பன். ஓணானை பிடித்து அதனை பீடித்திருக்கும் ஒட்டுண்ணிகளை தனியே  எடுப்பதுதான் அந்த ஆராய்ச்சி. ஓணான்களில் உடலில் ஆங்காங்கு பீடித்திருக்கும் ஒட்டுண்ணிகளைப்போலவே நாட்டையும் பல வகைகளில் ஒட்டுண்ணிகள் பீடித்திருப்பதை கதையில் மிக எதார்த்தமாக கதாசிரியர் சொல்லியுள்ளார்.  

   ஓணான்களை கேட்பனும் ஓணான்களை பிடிப்பவனும் வாழ நிர்பந்திக்கப்பட்ட இரு வெவ்வேறான இடங்களும் அதில் அவர்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகளும் வாசிக்கையில் பரிதாபப்பட வைக்காமல் இல்லை. ஓணானை பிடித்து தரும் ‘சின்னான்’, யுத்தத்தில் தனக்கானவர்களை இழந்தவன். யுத்தம்  எவ்வாறான விளைவுகளை அவனுக்கு ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை. அதனை  மிக எதார்த்தமாக சொல்லியிருக்கிறார். இதே சிறுகதை தொகுப்பில்  இருந்த ‘கிருஸ்ணம்பிள்ளை’ என்கிற கதையும் கூட யுத்ததிற்கு பிறகே சிறுவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை சொல்லியுள்ளது. முன்னமே அக்கதை குறித்து எழுதியுள்ளேன்.
    
  இன்னும் எத்தனை கதைகள், எத்தனை பேர் யுத்தங்கள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் எழுதிக்கொண்டிருக்கப்போகிறார்கள். எனக்கூட ஒரு முறை நண்பர் கேட்டு குறைபட்டுக் கொண்டான். அவரைப் பொருத்தவரை கதைகள் வெறும் வாசிப்பு அனுபவத்திற்கு மட்டும்தான். எல்லோர்க்கும் அப்படியிருக்க வேண்டிய அவசியம் இல்லையே. நாம் எந்த சூழலில் வாழ்ந்து வந்தோம் வாழ்கிறோம் என்பதை, இப்படியெல்லாம்தான் அடுத்த பல தலைமுறைகளுக்குச் சொல்லவேண்டியுள்ளது.

-       தயாஜி


புத்தனாகி சிரியுங்கள் அல்லது குமட்டியாகி சிதறுங்கள்

29/03/2020 - தமிழ் மலர், ஞாயிறு இதழில் பிரசுரமானது. நன்றி


   ‘குமட்டிக்கா’ என்றதும் அவள் கொஞ்சம் அசூயையாகப் பார்த்தாள். ஒருவேளை அதை தர்ப்பூசணி அல்லது வாட்டர்மெலன் என சொல்லியிருந்தால் புரிந்திருக்குமோ என்னமோ? “நாங்கல்லாம் இதை குமட்டிக்கா இல்லன்னா கொம்டிக்கான்னுதான் சொல்லுவோம். நீங்கதான் தர்பூசணின்னு பேரை மாத்தி வச்சி குழப்பறிங்க” என்றேன். 

   கெடா போன்ற இதர மாநிலங்களில் பயன்படுத்திய வார்த்தைகள் கோலாலும்பூர் போன்ற பட்டிணத்தில் இருப்பதில்லை. தவறி அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்திவிட்டால், கோலாலும்பூர்காரர்களுக்கு ஒருவித நமட்டுச்சிரிப்பு வருவதை தவிர்ப்பதிற்கில்லை. ஏதோ ஒன்றென நினைத்து ஒரு குமட்டிக்காவை வாங்கி வந்தேன்.

   இப்போது மாதிரி இல்லை, சிறு வயதில் வீட்டில் சீன படங்களைகூட பார்த்து பொழுதை போக்கி வந்தோம். அதிலும் குறிப்பாக எக்கி எக்கி குதித்து வரும் சீன பேய்கள் மீது அத்தனை ஆர்வம் இருந்தது. கூடவே சண்டைகள் நிறைந்த சீன படங்களும் அவ்வபோது வரும். 

    பெயர் நினைவில்லாத சீன படம் ஒன்றில் ஒரு காட்சி இவ்வாறு வந்தது; ஒரு அழகிய பெண் பல மாடி கட்டிடத்தின் கடைசி மாடியில் நின்று தற்கொலை செய்யப்போவதாய் சொல்கிறாள். கீழே தீயணைப்பு வீரர்கள் அவர்களின் வண்டிகள், காவல் துறையினர், வழக்கம் போல வேடிக்கை பார்க்க பொது மக்கள் என இருந்தார்கள். இதே காட்சியை இப்போது படமாக்கியிருந்தால், கூட்டத்தில் பாதி பேர் அந்த நேரடி காட்சியை கைபேசியில் படமாக்கிக் கொண்டிருந்திருப்பார்கள். 

    கீழே இருந்து ஒலிபெருக்கியில் அந்த பெண்ணுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கும் நபரின் பேச்சை அந்த பெண் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. அந்த பெண் மேலிருந்து கத்துவதும் அழுது புலம்புவதும் கீழே யாருக்கும் விளங்கவில்லை. அந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக தற்கொலையை உறுதி செய்யும் வகையில் கால்களை முன்னெடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

    சட்டென அவள் நின்றிருந்த இடத்தின் பக்கத்து ஜன்னல் கதவு திறந்து ஒருவன் எட்டி அவளை பார்த்தான். தன்னை அவனால் நிச்சயம் காப்பாற்ற முடியாது தான் சாகத்தான் போகிறேன் என்கிறாள். அவளை பார்த்து “எனக்கு வேற வேலை இல்லைன்னு நினைச்சயா, நீ சாகறதுன்னா செத்துப்போ உன்னை எதுக்கு நான் தடுக்கனும்” என்கிறான். அவளுக்கு அது அதிர்ச்சியை கொடுக்கிறது. அதுவரை முன்னோக்கி அடிவைத்தவள் நிற்கிறாள். அவனையே பார்க்கிறாள்.

    அவன் கையில் குமட்டிப்பழம் இருக்கிறது. அவள் பார்க்கிறாள், அவன் அந்த குமட்டிப்பழத்தை நன்றாக துடைக்கிறான். சட்டென மாடியில் இருந்து போடுகின்றான். அது கீழே விழுந்து உடைந்து சிதறுகிறது. மீண்டும் தன்னிடம் இருக்கும் இன்னும் சில குமட்டிப்பழங்களை ஒவ்வொன்றாக கீழே போடுகின்றான். நான்காவது குமட்டிப்பழத்தை போடும்போது அவனை நிறுத்தச்சொல்கிறாள். “இதென்ன பைத்தியக்காரத்தனம். குமட்டிப்பழங்கள் நல்லாத்தே இருக்கு எதுக்கு நாசப்படுத்தற” என்கிறாள். அதற்கு அவன், “நீயும்தான் இவ்வளவு அழகா இருக்க நீ மட்டும் குதிச்சி இப்படி அசிங்கமா சிதறி சாகலாமா..?” என்கிறான். அவன் சொன்னதை கேட்டு அவள் அப்படியே உட்கார்ந்து அழுகிறாள். சில நொடிகளில் அவள் தன் பின்னால் இருக்கும் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்படுகின்றாள்.

    தானும் குமட்டிப்பழம் போல சிதறுவதை அந்த பெண் விரும்பவில்லை. தன் அழகை யாரும் கண்டுக்கொள்ளாததும், தொடர்ந்து உதாசினம் செய்யப்பட்டதும் அந்த அழகிய பெண்ணின் தற்கொலை முயற்சிக்கு காரணமாக இருக்கலாம்.  

      ஏன் தற்கொலை எண்ணங்கள் வருகின்றன என எப்போதாவது நாம் யோசித்திருக்கின்றோமா? அல்லது நாம் எப்போது தற்கொலைக்கு முயன்றிருக்கிறோம் என திரும்பி பார்த்திருக்கிறோமா? நான் முயன்றிருக்கிறேன். நான் ஏற்றுக்கொண்ட  தோல்வி எனது தற்கொலை மட்டும்தான். மற்ற எந்த தோல்விகளையும் ஒப்புக்கொள்ளாது ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

      எல்லாம் கொஞ்சம் நேரத்தில் நடந்துவிட்டது போல இருந்தது. பார்த்திருந்த வேலையும் இல்லை, கையிலும் பத்து காசில்லை. நாலா பக்கங்களில் இருந்தும் வசைகளும் அறிவுரைகளும் வந்துக்கொண்டே இருந்தன. என்ன செய்வது ஏது செய்வது என எந்த வழியும் தெரியவில்லை. நம்பிக்கை கோட்டுக்கு அந்த பக்கம் ஒரு காலும் இந்த பக்கம் இன்னொரு காலும் இருந்தது. இவர்தான் காரணம், அவர்தான் காரணம் என நினைத்துப்பார்க்கும் நிலைமையில் நான் இல்லை. சாவது எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்  என இரண்டு கால்களையும் கோட்டுக்கு அந்த பக்கம் வைத்தேன்.  என்னென்ன வழிகளில் சாகலாம் என திரும்ப திரும்ப நினைத்துக்கொண்டேன். வீட்டில் எனது பழைய வேஷ்டி இருந்தது எடுத்து கழுத்தில் சுற்றினேன். கைகளால் முறுக்கினேன். இயல்பாகவே எனது தொண்டையில் குரல் வலை முட்டிக்கொண்டிருக்கும். ஆதாம் கடித்த ஆப்பிளின் ஒரு பகுதிதான் ஆண்களில் கழுத்தில் இப்படி முட்டிக்கொண்டிருக்கிறது என நண்பன் சொல்லியதை நம்பியிருந்தேன்.

       முடியவில்லை, இருமல் வந்ததே தவிர சாவு வரவில்லை. கத்திகளை ஒவ்வொன்றாக எடுத்த அதன் கூர்மையை பரிசோதித்தேன்.  எந்த கத்தியும் சரியாக வெட்டாது என தோன்றியது. காரை எடுத்துக் கொண்டு எதையாவது மோதி விபத்தில் சாகலாம் என்றால், காரை பழுது பார்க்கும் செலவும் இன்ன பிற அலைச்சலும் வீட்டில் உள்ளவர்களுக்கு வரும் என தயங்கினேன். தற்கொலை செய்ய வேண்டும் ஆனால் யாருக்கும் எந்த தொல்லையும் இருக்க கூடாது என ஒரே மூச்சில் சாகலாம் என மின்தூக்கியில் ஏறினேன். கடைசி மாடிக்கு சென்றேன். பால்கனியில் இருக்கும் தடுப்பு சுவர் என் நெஞ்சளவு இருந்தது. பக்கத்தில் இருந்த பூ ஜாடியை கொண்டு வந்து அதன் மேல் ஏறினேன். மேலிருந்து கீழே பார்க்க தலை சுத்த ஆரம்பித்தது. உயரம் என்றால் எனக்கு ‘ஃபோபியா’ என்பதையே மறந்துவிட்டிருந்தேன். முன்னாடி விழாமல் பின்னாடி விழுந்துவிட்டேன். பூ ஜாடி உடைந்துவிட்டது.

      பூ ஜாடியின் சொந்தக்காரனுக்கு தெரிந்தால் அவனே கொன்றுவிடுவானே என படியில் வேகவேகமாக கீழே இறங்கினேன்.

    பயந்து  ஓடி வந்ததால் மூச்சிச்ரைச்சல் அதிகமானது. ஏற்கனவே எனக்கு சுவாச பிரச்சனை இருக்கிறது. சுவாசிக்க சிரமமாகிவிட்டது. நெஞ்சில் வலியும் ஏற்பட்டது. அதிக சிரமப்பட்டே சுவாசித்தேன். வீட்டில் என் அறையில் வைத்திருந்த ஆஸ்துமா மருந்தை தேடி எடுத்து வாயில் அடித்துக் கொண்டேன். அப்படியே அசதியில் அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்துக்கொண்டேன். எதிரில் இருந்த மேஜையில் புத்தகங்களும் புத்தர் சிலையும் இருந்தது. உடலில் அதிர்வு இருந்தது. சுவாசிக்கும் போது உடம்பு மேலும் கீழும் வந்ததுக் கொண்டிருந்தது.

   அப்போதுதான் ஓர் அதிசயம் நடந்தது. இன்றுவரை முழுமையான விடைகிடைக்காத அதிசயம் அது. 
  
    அந்த தருணம் , புத்தனில் உதட்டில் சலனம் ஏற்பட்டது. சந்தன வண்ண புத்தன் உதட்டில் மட்டும் கொஞ்சம் சிவப்பு வண்ணத்தை பூசியிருந்தார்கள். அந்த சலனம் புத்தன் சிரிப்பதாய் காட்டியது நானும் சிரித்தேன். என் தற்கொலை முயற்சி தோல்வி கண்டதை நானும் புத்தனும் மாறிமாறி சிரித்து கொண்டாடினோம்.

     குமட்டிப்பழத்துக்கும் புத்தனின் சிவந்த இதழ் சிரிப்புக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்க முடியும். மன குழப்பத்தையும் , அதன் அழுத்தத்தையும் சட்டென ஒரு நொடியில் காணாமல் போயின. நாம் சக மனிதர்களிடம் எத்தெனையெத்தனை நொடிகளை கடத்துகிறோம். என்றாவது நமது வார்த்தையோ நமது செயலோ ஒருவரின் மன அழுத்தத்தையாவது குறைத்திருக்கிறதா? ஒருவரின் மன குழப்பத்தையாவது மறக்கடித்திருக்கிறதா?

   ஆனால் யாராவது தற்கொலை செய்திக்கொண்டார்கள் என தெரிந்தால் முதலில் அனுதாபப்பட்டு பின்னர் வெட்டி நியாயங்களையும், வீர வசனங்களை பேசி நாம் கிழித்த கதைகளையும் வாழ்க்கையில் ஜெயித்த கதைகளையும் பேசி சுய திருப்தி அடைந்துக் கொள்கிறோம்.

      சுருங்கச்சொன்னால், எங்கோ மூலையில் இருக்கும் நடிகர்களை கொண்டாடுவோம். வயதானாலும் ஹீரோ என உடம்பில் பச்சைக்குத்தி கொள்வோம். வீட்டில் அப்பாவின் இருமலுக்கு மருந்து வாங்கிக்கொடுக்க மறந்திருப்போம்.
   
     கைக்கெட்டிய தூரத்தில் உள்ளவர்களிடம் அன்பு செலுத்துவோம். அன்பான வார்த்தைகளை பயன்படுத்துவோம். நமக்குத்து தெரிந்தவர்களிடம் ஏற்படும் சின்ன சின்ன மன உளைச்சலையும் கவனத்தில் கொள்வோம். சரி தவறுகளுக்கு அப்பாற்பட்டு ஆறுதலான வார்த்தைகளை நம்மிடமிருந்து முதலில் கொண்டு வருவோம். 

  நிறைவாக சொல்வது என்னவென்றால் அன்று என்னை காப்பாற்றிய புத்தன் சிலை போல நீங்கள் காப்பாற்றவேண்டிய அன்பிற்குறியவர்கள் அதிகம் உள்ளார்கள் என புரிந்துக் கொள்வோம்.

   குறைந்த பட்சம், புத்தனை போல சிரிக்க வேண்டாம், ஆனால் அந்த சிதறிய குமட்டிப்பழம் செய்ததைக் கூடவா நம்மால் செய்ய முடியாமல் போய்விடும்.

- தயாஜி

மார்ச் 29, 2020

கவிதை வாசிப்பு - 1
சல்மாவின் கவிதைகள். காலச்சுவடு மார்ச் 2020-ல் வந்திருந்தது. தனியாக கவிதைக்கு தலைப்பு ஏதும் வைக்கவில்லை. மூன்று கவிதைகள். முதல் கவிதையில் ஒரு பகுதி வருகிறது.

///காற்றில் துடிக்கிறது
குருதியில் நனைந்த சிறுமிகளின்
குரல்///

வாசித்ததில் இருந்து மனதை நெருடுகிக் கொண்டிருக்கிறது.

கவிதைக்கு பயன்படுத்தியிருந்த 'வாரிஸ் டயர்'-ரின் ஓவியம் கவிதையை மேலும் புரிந்துக்கொள்ள வைத்தது. இவர் குறித்தும் இவரின் நாவலான 'பாலைவனப்பூ'  குறித்தும் ஓரளவு தெரிந்திருந்ததும் அதற்கான காரணமாக இருக்கலாம். கவிதையின் கடைசி வரியும் முக்கியம். யாரிந்த சகோதரிகள் , இன்னமும் எங்கோ இருக்கிறார்கள் என்பதுதான் மனதில் வலியைக் கொடுத்தது.

பெண்களை அவள் தன்மையில் இருந்து விலக்கி தங்களின் ஆதாயத்திற்கும் தங்களின் கௌரவத்திற்கும் பங்கம் வராதபடி பாவிக்கும் சமூகம் இன்னமும் உயிரோடும் துடிப்போடும் இருப்பது வேதனைதான். 

எத்தனை நாட்களுக்குத்தான் பெண்ணின் கால்களின் நடுவை வைத்து அரசியல் செய்யப்போகிறார்கள். என்ற கேள்வியை எழவைத்த கவிதை.

வரிகளில் வேதனையை வைத்து எழுதப்பட்ட கவிதை. மனதை. இன்னும் நெருடச்செய்கிறது.

-தயாஜி

மார்ச் 28, 2020

எளிய...

மீண்டும் மீண்டும் 
நடத்திக் காட்டுகிறோம்
எல்லா கொடுமைகளையும்
மீண்டும் மீண்டும்
உடைத்துக் காட்டுகிறோம்
எல்லா நம்பிக்கைகளுக்கும்
ஆனாலும்
மாற்றம் வருவதில்லை
அதற்கு யாரும்
தயாராவதுமில்லை
அரை அடி 
மேல் நிற்பதாய் நினைத்து
எத்தனைப் பேரை வேண்டுமானும்
அழிக்கலாமா என்ன
எளியவன் எப்போதுமே
அமைதியாகவா இருந்துவிடப்போகிறான்....

#தயாஜி

காத்திருத்தலின் வலி


  பொம்மி. அவனுக்கு அவள் வாழ்வு. அவளுக்கு அவன் உலகம். வாழ்வில் எந்த அனுபவமும் பெற்றுவிடாத குழந்தை அவள். வாழ்வின் எல்லா துயரங்களையும் சந்தித்துவிட்ட மனிதன் அவன். 

 இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கதவை திறக்கப்போகிறான். உள்ளே இவனைக் கண்டதும் பொம்மி துள்ளி குதித்து ஓடிவருவாள். இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் ஒரு நொடியில் மறையப்போகிறது. வார்த்தைகளில் சொல்லிவிட முடியாத தருணம் அது. சட்டென பனி மழையில் இமைகள் மட்டும் நனையும் சமயம்.


  சாவியை எடுத்தான். பூட்டைத் திறக்க எத்தணித்தான். ஏனோ கதவில் இருந்து சட்டென கையை எடுத்துவிட்டான். யாரோ அவனை பின் தொடர்ந்து வந்தது இப்போதுதான் புரிந்தது. சட்டென திரும்ப கூடாது என நினைத்தான். மெல்ல பின் வாங்குகிறான். கண்களை மூடி நீண்ட பெருமூச்சு விடுகிறான். 

  யாரோ அவன் அனுமதியின்றி அவன் தோலில் கைவைத்து அவனை முன்னகர்த்த முயல்கிறார்கள். அந்த அழுத்தம் அவனின் இதயத்தை இரட்டிப்பாய் துடிக்கச் செய்தது. அதோடு நிற்கவில்லை. அவன் காதில் ஏதோ முணுமுணுப்பு கேட்கிறது. தன் பலம் கொண்டு  பின்வாங்கினான். அது விடவில்லை. அவனும் விட நினைக்கவில்லை. மாடியில் இருந்து கீழே வேகமாக இறங்கினான். மோட்டாரில் ஏறினான். அப்போதும் அது அவனை விடவில்லை. தொடர்ந்தது. மோட்டார் புறப்பட்டது. மனதில் பல குழப்பங்கள் சூழந்தன.

 அருகில் இருக்கும் மருத்துவமனையைக் கண்டான். மோட்டார் அங்கே செலுத்தினான்.

 பலர் வரிசையில் நின்றுக் கொண்டிருந்தார்கள். மெல்ல முன்னகர்ந்து தான் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதைச் சொல்லி தன்னை பரிசோதிக்க வேண்டும் என்றான். அருகில் நின்றவர்கள் பின்னகர்ந்தார்கள். 'குரோனா வைரஸ்' பரிசோதனைக் கூடத்திற்கு அவனை அழைத்துச் செல்கிறார்கள். 

  இதுவரை அவனை பின் தொடர்ந்த யாரோ தன் இயலாமையை நினைத்து அவன் காதில் அழுவது கேட்கிறது. அவனுக்கு மட்டும் கேட்கிறது. 

- தயாஜி

பழக்க (சந்)தோஷம்

  
    எதிர்ப்பார்க்கவில்லை. சட்டென கட்டியணைத்தாள். கன்னத்திலும் இதழ் பதித்தாள். சிரித்துக்கொண்டேச் சென்று விட்டாள். செல்வாவிற்கு ஒரே குழப்பம். எதையாவது தெரிந்துக் கொண்டாளா? இது என்ன எதற்கோ போட்டிருக்கும்  தூண்டிலா என உள்ளுக்குள் குழம்பினான். ஒரு  வாரமாக இவளின் சந்தேகத்தால் நொந்து நூலாகித்தான் போயிருந்தான். நல்லதற்கு என்றுதான் காலம் வருமோ என்று புலம்பலானான்.

      சமையல் அறையில் இருந்து மனைவியின் குரல் கேட்கிறது. 

     இன்றுதான் அவர்கள் இருவரும் காதலைச் சொல்லிக்கொண்ட நாள். சமீபத்திய மனக்கசப்பில் பேசிக் கொள்ளாமல் இருந்தார்கள். இந்த நாளை  கொண்டாடி உறவினை மீண்டும் புதுப்பிக்க அவள் எண்ணினாள். கணவனுக்கும் அம்மாதிரி எண்ணம் இல்லாமலில்லை.

   குரல் கேட்டு பரபரப்பு. வழக்கம்போல எல்லாவற்றையும் சரி செய்துக்கொண்டு,  காதலுடன் உள்ளே நுழைந்தான்.

     சற்று முன் அவள் கொடுத்திருந்த முத்தத்தில் லிப்ஸ்டிக் கறை கன்னத்திலும் இல்லை. குழம்பினாள். ஏதோ கேட்க வாயெடுத்தாள். அதற்குள்ளாக, 

“நீ என்ன.. யாரோ முத்தம் கொடுத்து நான் துடைச்சிட்டு வந்தது மாதிரியே எப்பவும் பாக்கற… இந்த சந்தேகத்தை எப்பதான் மாத்தப்போறியோ..” 

   என்று சில வாரங்களாக சொல்லிப் பழகிவிட்டதைச் சொல்லிவிட்டான்.

- தயாஜி

மார்ச் 27, 2020

லவ் ஹவுஸ்
காலையில் மருத்துவமனையில் இருந்து அழைத்தார்கள். குரலைக் கேட்டவுடன் சிரித்துவிட்டேன். அதே நர்ஸ்தான். எப்படி என் எண் கிடைத்திருக்கும். ஏன் அழைத்திருக்கிறார். என்ன கேட்கப்போகிறார் என மனம் பட்டாம்பூச்சியாய் படபடத்தது.

அவர் அதனை புரிந்திருக்க வேண்டும். தொடர்ந்தார். எனது மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்கு இன்னும் சில நாட்கள் இருக்கின்றன. அதன் முன்பதிவு நாளை உறுதி செய்துகொண்டார்.

சாப்பிடவேண்டிய மருந்துகள் இன்னும் எத்தனை நாட்களுக்கு வரும் என்றார். அது கிடக்குது, நாலஞ்சு பை நிறைய என்றேன். ஒரு மாதம் வரை வருமா என்றார். வரும் என்றேன். மருந்து சாப்பிடும் அவசியம் இல்லையா என்றேன். 

அப்படியொன்றுமில்லை, 'கொரோணா' பிரச்சனையால் எனது முன்பதிவு தினத்தை அடுத்த மாதம் வைக்கலாமா என்றார். 

அப்போதுதான் உரைத்தது. அப்படியொரு சிக்கலில் தானே எல்லோரும் சிக்கிக் கொண்டுள்ளோம்.

மீதமிருக்கும் மாத்திரைகளுக்கு ஏற்றபடி அடுத்த தேதியைக் கொடுத்து குறித்துக்கொள்ள சொன்னார்.  பின்னர் இப்போதைய என் உடல் நிலை குறித்தும், இன்னும் சில விபரங்களைக் கேட்டு சில ஆலோசனைகளைச் சொன்னார். விரைவில் நலமாகும் என  அவர் சொல்லும் வார்த்தையை மனம் முழுமையாக நம்பியது.

நிச்சயம் ஒரு நாள் நோயாளி நர்ஸ் ஆகியோரின் தொடர்பு துண்டிக்கப்படும். மறந்துவிடப்போகிறோம். ஆனால் நாம் எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு வகையில் மருத்துவமனை மருத்துவர்கள் தாதிகள் என இன்னபிற பல பணியாளர்களுக்கு கடமை பட்டுள்ளோம். அதில் ஒருவரின் முகமாவது நம் மனதில் தங்கியிருக்கும். இன்றைய சூழல், நம் அடுத்த தலைமுறைக்கு நாம் சொல்வதற்காக அன்பின் பேரொளியாய் பலர் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நர்ஸ் பேசி முடித்ததும். நான் அவர் நலம் விசாரித்தேன். அவரை கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி கேட்டுக்கொண்டேன். சொல்லப்போனால் என்னைவிட அதிகம் தெரிந்தவர் அவர்தான். ஆனால் நான் சொல்வதை எந்த இடையூறும் இல்லாமல் கேட்டுக்கொண்டார். ஒரு குழந்தைதாய் எல்லாவற்றுக்கும் அவர் தலையசைப்பதாய் தோன்றியது

விடைபெற்றோம். மருத்துவமனை எண்களை 'லவ் ஹவுஸ்' என சேமித்துக் கொண்டேன்.

அவருக்கு மட்டுமல்ல இந்நேரம் நம்பொருட்டு நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் அதைத்தான் கேட்டுக்கொள்ள நினைக்கிறேன். 
'கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்'.
இப்போது புரிகிறது இவ்வுலகமே காதலால்தான் ஆகியிருக்கிறது.
நம்மை நாம் காதலித்துக்கொள்ள, யார் இனி நம்மைத் தடுக்கப்போகிறார்கள்.

- தயாஜி

கதைவாசிப்பு_2020_14 'தொடுகறி'


#கதைவாசிப்பு_2020_14
கதை – தொடுகறி
எழுத்து – ஐ.கிருத்திகா
புத்தகம் – காலச்சுவடு மார்ச் 2020


    நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் சிக்கலை எதிர்கொள்கிறோம். விதிவிலக்கு யாருக்குமில்லை. ஆனால் அது தீர்க்கப்பட்டதா அல்லது தீயாகி பற்றிக் கொண்டதா என்பது அதற்கு நாம் கொடுக்கும் எதிர்வினையைப் பொறுத்தது. 

  பற்பசையை பின்பக்கத்தில் இருந்த அழுத்தாமல், மேல் முனையை அழுத்தி பற்பசையை பயன்படுத்தியதால்  ஒரு தம்பதிகள் மனமுறிவு வரை சென்றுள்ளார்கள். கணவனின் செயலுக்கு மனைவி கொடுத்த எதிர்வினையும் அதற்கு கணவன் கொடுத்த எதிர்வினையும்தான் காரணம்.

  அப்படியொரு விபரீதத்திற்கு செல்லவேண்டிய தம்பதிகள் தங்களின் சிக்கலை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் இக்கதை. வாசிப்பில் 'யார் தொட யார் கறி'யாகிறார்கள் என்பதை வாசகர்கள்  வாசித்து  முடிக்கையில் கண்டுகொள்வார்கள். அதுதான் 'தொடுகறி'

கதைச்சுருக்கம்;

   சிவநேசன் மீரா , இளம் தம்பதிகள். புதிய வாடகை வீட்டிற்காக முன்பணம், பொருட்கள், அதற்காக வாங்கிய கடன் என முடிந்தவரை மாசக்கடைசியை எப்படியாவது சமாளித்தாகவேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.

    சிறிய வீடு என்றாலும் புதுக்குடித்தனம் இன்பமாகவே இருக்கிறது. பக்கத்து வீட்டுக்கார மணியக்கா ஒரு முறை சிவனேசனைப் பார்த்து , தன் வீட்டில் வயசு பிள்ளைகள் இருக்கிறார்கள்,  இரு வீட்டிற்கும் இருப்பது ஒரு சுவர்தான் ஆக எதை செய்தாலும் பார்த்து செய்யும்படி சொல்லும் அளவிற்கு அவர்களின் புதுக்குடித்தனம் இருக்கிறது.

   கோவக்காரப் பெண்ணாக இருந்தாலும் உள்ளதை உள்ளபடி சொல்லிவிடும் குணமும் உதவும் குணமும் கொண்டவராக இருக்கிறார் மணியக்கா.

    ஒரு முறை கையில் காசில்லாத நேரத்தில் சிவநேசனும் மீராவும் தண்ணீரைக் குடித்துப் பசி தீர்க்க முயன்று படுக்கிறார்கள். நிலமையைப் புரிந்துக்கொண்ட மணியக்கா கதவை தட்டி அன்றிரவுக்கான உணவை கொடுக்கிறார். சிவநேசன் முதலில் மறுக்கிறான். தானும் இதையெல்லாம் கடந்துதான் வந்திருப்பதாகவும், இளம் தம்பதிகள் என்பதால் மீரா கருத்தரித்திருந்தால் அந்த கரு என்ன ஆகும் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

   சில நாட்கள் கழிகிறது. ஏதோ ஒன்று சிவநேசனை வதைக்கத் தொடங்குகிறது. மீராவுடனான நெருக்கத்தை தவிர்க்கிறான். இருவர் உறவும் பழையபடி இல்லாமல் போகிறது. சிவநேசன் இரண்டு நாட்கள் வேலைக்கும் போகவில்லை. 
அவனை நன்கு அறிந்திருந்த மீரா அவனிடம் அது குறித்து கேட்க சிவநேசன் ஒன்றுமில்லை என்கிறான். 

   வேலைக்கு செல்லும் மீராவை வழிமறைக்கிறார் மணியக்கா. வழக்கமான எந்த சத்தமும் வீட்டுச்சுவரைத் தாண்டி வராதது குறித்து நாசூக்காக கேட்கிறார். ஒன்றுமில்லை என்று மீரா சொல்கிறாள். தனது இருபது வருட அனுபவத்தில் இருந்து சில அறிவுரைகளை சொல்கிறார் மணியக்கா.

   சிவநேசன் மனதில் அறுவிக் கொண்டிருப்பது தங்கள் குடும்பத்தை குலைப்பதை மீரா விரும்பவில்லை. அவனை வெளியில் செல்வதற்கு அழைக்கிறாள். முதலில் மறுத்தவன் பிறகு செல்கிறான். அவன் மனதில் அன்று அந்த மலர் சொன்னது நிழலாடுகிறது. இவன் மேல் தவறில்லையென்றும் அவள்தான் இவனை பயன்படுத்திக்கொண்டாள் என சொல்கிறாள்.

   கடற்கரையில் மீராவும் சிவநேசனும் அமர்கிறார்கள். மீரா சிவநேசனிடம் வினவுகிறாள். அவனால் சொல்ல முடியவில்லை. அழுகிறான். முடிந்ததும் பேச தொடங்குகின்றான்.

  அன்றொருநாள், நண்பர்களுடன் குடிக்கையில் போதை அதிகமாகியுள்ளது. ஆட்டோ பிடித்து நண்பர்கள் அனுப்பியிருக்கிறார்கள். வழியில் மலரை சந்தித்திருக்கிறான். ஒரே இடத்தில் வேலை செய்பவள். காலத்தோடு திருமணம் செய்யாதவள். பேருந்து கிடைக்காததால் ஆட்டோவில் வீட்டிற்குச் செல்ல உதவி கேட்டிருக்கிறாள். பின்னர் வீட்டில் இறங்கும் போது ஆட்டோவிடம் முழு பணத்தையும் கொடுத்து சிவநேசனை தன் வீட்டிற்கு அழைத்து அவனை தன் ஆசைக்கு பயன்படுத்திக்கொள்கிறாள்.
முழுவதையும் சொல்லிவிட்டாலும், தன் மீதும் தவறு இருப்பதை ஒப்புக்கொள்கிறான். அன்று குடித்திருந்தததால்தான் தானும் நிலை தடுமாறியதாக சொல்கிறான். 

 மீரா அவனை மன்னிக்கப் போவதில்லை என முடிவு செய்து அழுகிறான். மீராவின் குணம் அவனுக்கு நன்கு தெரியும். 

   ஏதோ முடிவு எடுத்தவளாக அவனை அழைத்துச் செல்கிறாள். தங்கள் வீட்டு வரிசையில் இருக்கும் குளியலறையில் அவனை அமரவைத்து அவன் மீது தண்ணீரை ஊற்றி அவன் இனி சுத்தமான மனிதன் என்றும் அவனால் இனி தவறு செய்ய முடியாது எனவும் கூறுகிறாள்.

  சிவநேசன் ஏதோ சொல்ல முயல்கிறான். ஆனால் மீரா, அன்று மணியக்கா இவர்களின் பசிக்கு உணவு கொடுத்த போது வேண்டாம் என திருப்பி அனுப்பியிருக்கலாம் ஆனால் அப்படி செய்யவில்லை காரணம் அவர்களின் வயிற்றுப் பசி என்கிறாள். அதே போலதான் அந்த பெண் மலருக்கும், இன்னும் திருமணமாகாத முதிர்கன்னி, அவள் பசிக்கு அன்று விருந்தாக கிடைத்துவிட்ட சிவநேசனை எப்படி அவள் விட்டிருப்பாள் என அவனுக்கு ஆறுதல் சொல்கிறாள்.

     அன்று அவன்,  மலரின் பசியை ஆற்றி உதவி செய்ததாக சொல்லி அவனை சமாதானம் செய்கிறாள். அதோடு விடாமல் அடுத்து அவள் சொல்வதுதான் கதைக்கு முக்கியமான ஒன்றாக அமைகிறது.

   அவனது தவறுக்கு உதவி என்கிற முலாமை பூசி அவனை சமாதானம் செய்தாலும் அடிக்கடி அப்படி இருக்க முடியாது என கூறி, அன்று உணவு கொடுத்தது போல அடிக்கடி மணியக்காவிடம் உணவு கேட்டாள் அவர் 'வெளக்குமாத்தால்' அடிப்பார் என்கிறாள்.

   அவளில் உள்ளர்த்தத்தை சிவநேசன் புரிந்துக்கொண்டான்.

நிறைவாக ;

   மணியக்காவின் இரண்டுவிதமான முகத்தை கதையின் ஊடே சொல்லியுள்ளதால் கதை முடிவில் மீரா சொல்லும் உதாரணம் நமக்கும் புரிந்துவிடுகிறது. 
கதையின் முடிவு நிச்சயம் பலரையும் யோசிக்கவைக்கும் சமயங்களின் முரண்படவும் வைக்கும்.

   முன்னமே சொன்னதுதான் நாம் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு நாம் கொடுக்கும் எதிர்வினையைப் பொறுத்தே அச்சிக்கல் தீர்வை நோக்கி செல்வதும் தீயாகி எரிவதும் அமைகிறது. 
குடும்பத்தில் ஏற்பட்டுவிடும் தவறுகளுக்கு தண்டிக்கத்தான் வேண்டும் என்கிற அவசியம் இல்லை
மன்னித்தும்விடலாம். சொல்லப்போனால், தண்டனை பெற்றவர் கூட மீண்டும் தவறு செய்யலாம் ஆனால் மன்னிப்பு பெற்றவர்  மீண்டும் தவறு செய்ய இரண்டு தடவையாவது யோசிப்பார். 

   இக்கதையில் தன் கணவனின் சிக்கலை கெட்கும் மனைவி அதிக பதட்டமில்லாமல் அவனை முழுமையாக பேச அனுமதிக்கும் போதே அவள் தன் வாழ்வில் அவசர முடிவு எடுக்க விரும்பவில்லை என்பதைக் காட்டிவிடுகிறது. 

    அதோடு , கணவன் மீது தண்ணீரை ஊற்றி "இனி நீ சுத்தமாயிட்ட.. இனி உன்னால எந்த தப்பும் செய்ய முடியாது.." என சொல்லி பயம் காட்டியுள்ளாளே தவிர,  'இனி நீ எந்த தப்பும் செய்யக்கூடாது" என கட்டளையிடவில்லை. மனைவியின் சாமார்த்தியம் இங்குதான் இருக்கிறது. அதுதான் இக்கதையைப் பற்றி எழுதத் தூண்டியது.


- தயாஜி

மார்ச் 22, 2020

சிரிக்கும் பொம்மை
      காலை மணி 8.00. சாமியாரும் அவரது சிஸ்யர்களும் வரவேண்டிய நேரம். முன்னமே குறிப்பிட்ட பொருட்கள் தயாராய் உள்ளன. இனியாவது நிம்மதியாக வாழலாம் என சூர்யாவின் குடும்பம் நினைத்தது. சில நாட்களாக ஏதேதோ நடந்துவிட்டது. குடும்பம் மொத்தமும் நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். உறவினர் ஒருவரின் ஆலோசனைப்படி சாமியார் அறிமுகமானார்.

   மறுநாள், சாமியாரைச் சந்திக்க சென்றிருந்த சூரியாவிற்கு அதிர்ச்சி. சூர்யாவின் வீட்டில் நடந்த ஒவ்வொன்றையும் சூர்யாவிடமே சொல்லிக்கொண்டிருந்தார் சாமியார். நன்கு பழக்கமான யாரோ ஒருவர் வைத்த சூனியம்தான் காரணம் என்பதை கண்டரிந்தார். உடனே நிவர்த்திக்கு என்று சில பரிகார பொருட்களைச் சொல்லி தாமதித்தால் ஏற்படும் விளைவுகளையும் முன்கூட்டியே சொல்லிவிட்டார்.

  இன்றே வரமுடியுமா என கேட்டதற்கு, சாமியார் கண்கள் மூடி எதையோ யாரிடமோ கேட்டுக்கொண்டிருந்தார். கண்கள் திறந்தவர். அத்தனை சாதாரண காரியம் அல்ல, முதல் நாள் சில முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. முடிந்தவுடன் மறுநாள் வீட்டிற்கு வருகிறேன் என்றார்.

     மறுநாள், வீட்டு வரவேற்பறையில் பூஜை அமர்க்களமாக நடந்தேறியது. கண்கள் மூடி தியானம் செய்திருந்த சாமியார், சட்டென எழுந்தார், தனது சிஷ்யபிள்ளையும்  அழைந்துக்கொண்டு வீட்டு பின்புறம் வேகமாக நடந்தார்கள்.

      சிஷயன் அவரை மிகச்சரியாக ஓரிடத்தில் நிறுதினான். தோண்டும் படி சைகை செய்தார். எல்லோரும் பரபரப்பானார்கள். காற்றின் வேகம் கண்களுக்கு தெரிந்த மரம் செடிகளை அசைத்துக்கொண்டிருந்தது. சாமியார் மந்திரத்தை சத்தமாக ஜபிக்கத் தொடங்கினார். குழி தோண்ட ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில், சிஷ்யனுக்கு ஏதோ தட்டுப்பட்டது. ஜபித்துக்கொண்டே சாமியார் சிஷ்யன் தோண்டிய குழிக்குள் கைகளை விட்டார்.

      முதல் நாள் இரவு யாருக்கும் தெரியாமல் வைத்த ஊசி குத்திய பொம்மையை, இன்று எல்லோர்க்கும் தெரியும்படி எடுத்தார் சாமியார். ஆனால் அங்கு ஒரு பொம்மைக்கு பதிலாக இரண்டு பொம்மைகளும் உடன் இன்னும் சில ஆணிகளும் இருந்தன. அதில் ஒன்று அந்த சாமியாரைப் பார்த்து சிரிக்கத்தொடங்கியது. சாமியார்…..

மார்ச் 19, 2020

நீங்கள் வீட்டிலேயே இருந்துவிடுங்கள்
கேளுங்கள்
ஏன் அவசரப்படுகிறீர்கள்
வீட்டிலேயே இருந்துவிடுங்கள்

உங்களுக்காக
உங்கள் குடும்பத்தினர்க்காக
உங்கள் அடுத்த தலைமுறைக்காக
உங்கள் எதிர்காலத்திற்காக
நாங்கள் 
எங்கள் உயிரை பணையம்
வைத்து நடுமாடுகிறோம்
அதற்கொரு மதிப்பளியுங்கள்
அதனால்தான் சொல்கிறோம்
நீங்கள் 
வீட்டிலேயே இருந்துவிடுங்கள்

கண்முன்னே உயிருக்கு போராடும் உடல்களைப் பார்க்கிறோம்
காப்பாற்ற சொல்லி அழும் கண்களைப் பார்க்கிறோம்
உயிர் பிரியும் போதும்
உடன் யாருமில்லாத கொடுமையை பார்க்கிறோம்
உங்களுக்கும் அந்நிலை வேண்டாம்
அதனால்தான் சொல்கிறோம்
நீங்கள்
வீட்டிலேயே இருந்துவிடுங்கள்

சொந்த ஊருக்கு போவதாக சொல்லி
எமனையும் 
உங்கள் உறவுகளுக்கு அழைத்துப் போகாதீர்கள்
எந்த இடத்தில் இருக்கிறீர்களோ
அந்த இடத்திலேயே அமைதி காணுங்கள்
கைகளை அவ்வபோது கழுவிக்கொள்ளுங்கள்
சுவாசத்தில் மாசு கலக்காது
முக கவசம் அணியுங்கள
கொஞ்சமாவது காது கொடுத்து கேளுங்கள்
இது அபாயமல்ல ஆனால் அதனை வரவைத்துவிடாதீர்கள்
அதனால்தான் சொல்கிறோம்
நீங்கள்
வீட்டிலேயே இருந்துவிடுங்கள்

பல பொய்கள் சொல்லி விடுமுறை எடுத்துள்ளோம்
ஒரு முறையாவது உண்மைக்கென விடுமுறை எடுத்துக்கொள்வோம்
சம்பளம் 
பாதியோ மீதியோ
வருமோ வராதோ
நிச்சயம் உங்களால் நிலமையை சரிசெய்ய முடியும்
கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்
ஒரு நாள் ஆசைக்காக
வாழ்நாளை இழந்துவிடாதீர்கள் அதனால்தான் சொல்கிறோம்
நீங்கள்
வீட்டிலேயே இருந்துவிடுங்கள்

எப்படியும் நீங்கள் எங்களை மறக்கத்தான் போகிறீர்கள்
சமயங்களில் எங்களை திட்டத்தான் போகிறீர்கள்
உங்கள் அறிவாளித்தனத்தை காட்டத்தான் போகிறீர்கள்
பொறுத்துக்கொள்வோம்
இத்தனை நாள் போல
இனிமேலும் பொறுத்துக்கொள்வோம்
ஆனால்
இன்று மட்டும் எங்கள் பேச்சு கேளுங்கள்
அபாயத்தை தோள்மீது போட்டுக்கொள்ளாதீர்கள்
எங்களைப்போல கொரோனாக்காள் பொறுமை காட்டாதுகள்
அதன் காரிய காலம் 14 நாட்கள்தான்
அதன் காரணம்
நீங்கள் உங்களுக்கு காரியம் செய்துக் கொள்ளாதீர்கள்
உங்கள் அன்பானவர்களுக்கு
நீங்கள்தான் உள்ளீர்கள்
அதனால்தான் சொல்கிறோம்
நீங்கள்
வீட்டிலேயே இருந்துவிடுங்கள்

உங்களையும் நாங்கள் எங்களென நேசிக்கிறோம்
அதனால்தான் உங்களுக்காக நான் வேலையில் இருக்கிறோம்
எங்களிடம் இருக்கும் ஒரே காரணம்
அன்பு 
அதனை புரிந்துக்கொள்ளுங்கள்
அதனால்தான் சொல்கிறோம்
நீங்கள்
வீட்டிலேயே இருந்துவிடுங்கள்....

#தயாஜி


மார்ச் 15, 2020

'அஸ்வமேதா’ எனும் அதிஸ்டம்…

       பெரியம்மா பார்ப்பதற்கு நல்ல லட்சணமாக இருந்தார். சிலரிடம் பல ஆண்டுகள் பழகினாலும் இல்லாத ஓர் ஒட்டுதல் சிலரிடம் பழகிய சில நாட்களில் ஏற்பட்டுவிடும். ஒருவரை நம்மை என்னவாக பார்க்கிறார் என்பதனை கண்டறிவது இப்பொழுதெல்லாம் எனக்கு சுலபமாகிவிட்டது. வாங்கிக்கட்டிக் கொண்ட அனுபவங்கள் அப்படி. 

      வார்த்தைகள். ஆம் வார்த்தைகள். ஒருவர் நம்முடன் உரையாட பயன்படுத்தும் வார்த்தைகளில் நாம் அவருக்கு என்னவாக இருக்கிறோம் என்பதை நாம் தெரிந்துக் கொள்ளலாம். நீங்களும் இதனை முயன்று பாருங்கள் தெரியும்.

      பெரியம்மா எனக்கு தூரத்து சொந்தம். இப்போதுதான் பழக்கம். ஆனாலும்  அத்தனை நெருக்கம். பேசினால் பேசிக்கொண்டே இருப்பார். நாம் பேசுவதைக் கேட்டால் கேட்டுக்கொண்டே இருப்பார். குறிப்பிட்ட வயதை கடந்தவர்களிடம் எந்த தலைப்பில் வேண்டுமானாலும் நாம் பேசலாம். நம் அறிவாளித்தனத்தை காட்டாமல், அவர்களின் அனுபவத்தையொட்டிய தலைப்பாக இருக்கும் பொழுது, சுவாரஷ்யமான பலவற்றை நாம் அறிந்துக் கொள்ளலாம். அப்படித்தான் அவரும் நானும் பலவற்றை பேசிக்கொண்டிருப்பேம். ஒரு சமயம், அவரின் இளமைகால நினைவுகளைப் பேசலானார். சிறுவயதில் பின்னல் வேலைப்பாடுகளுக்காக அவர் முதல் பரிசு வாங்கியதைப் பகிர்ந்துக்கொண்டார். 

      அப்போது அவருக்கு வயது பதினைந்து இருக்கலாம் என்றார். இப்போது எல்லாவற்றையும் புகைப்படமாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துக் கொண்டு நமது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை நாம் சேமிக்கின்றோம். அப்போதுள்ளவர்களுக்கு எல்லாமே நினைவுகள்தானே.  இன்று கூட என்னால் என் பிறந்த மணிநேர கணக்கையும் கிழமையையும் சரியாக நினைவுப்படுத்த முடியவதில்லை. ஆனால் என் அம்மாவிடம் கேட்டால் சில நொடிகளில் கூடுதல் தகவல்களோடு விபரங்கள் கிடைத்துவிடும். 

         பெரியம்மா தான் பொற்ற வெற்றியை மிகவும் மகிழ்ந்த கண்களின் வழி பகிர்ந்தார். இன்றுதான் அப்பரிசு கிடைத்தது போல பூரிப்புடன் பேசலானார்.

       அப்போது எதார்த்தமாக கைவினைப்பொருட்கள் குறித்து பேச்சு வந்தது. துணி தைப்பது, கோலம் போடுவது, பின்னல் பின்னுவது என கைவசம் பல கைவினை திறமையை வைத்திருக்கிறார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சுவரில் இருந்த ஒரு குதிரை பின்னல் ஓவியத்தைக் காட்டினார்.

        அதனை தனது இளைய மகள் பின்னினார் என்றார். பார்க்க அழகாக இருந்தது. புகைப்படங்களில் பார்த்து பழகிவிட்ட குதிரையை பின்னல் ஓவியமாகப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அதனிடம் ஏதோ இருப்பதாகவே மனதில் தோன்றியது. 

      பெரியம்மா முதன் முதலாக பின்னிய பின்னல் இன்று அவரிடம் இல்லாமல் போன கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

       ‘அஸ்வமேதா.. அஸ்வமேதா….’ என மெல்லிய குரலில் எதையோ ஏங்கிக் கூப்பிட்டார். இந்த பெயரை சிறிய வயதில் ஏதோ புராணத்தில் படித்ததாய் நினைவு என கூறினேன். வெண்குதிரையைத் தான் அப்படி அழைப்பார்கள் என்றார். 

       திருமணம்  ஆகியிருந்த சமயம். கற்றுக்கொண்ட கலைகள் ஒவ்வொன்றாக ஒரு வடிவம் எடுத்து வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்த சமயம். இடுப்பு உயர ப்ரேமில் வெண்ணிற குதிரை ஒன்றை அவர் பின்னியிருக்கிறார். பார்ப்பதற்கே அத்தனை அழகாய் அது வந்திருந்ததை அவர் சொல்லும் போது அவரின் குண்டு குண்டு கண்களும் சொல்லி பிரகாசித்தன. முதல் பின்னல் ஓவியமே இப்படி அற்புதமாக வந்துவிட்டதை அனைவரும் பாராட்டியதாகவும் சொன்னார். வீட்டில் அதனை மாட்டுவதற்கான சரியான இடத்தை தேர்ந்தெடுத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். அந்நேரம் வீட்டிற்கு விருந்தினராக நண்பரை அழைத்து வைத்திருக்கிறார் கணவர். 

         வந்திருந்த நண்பருக்கு அந்த பின்னல் ஓவியத்தின் மீது கண் விழுந்திருக்கிறது. எங்கே வாங்கினார்கள் என்ற விபரங்களை விசாரிக்க, வாங்கவில்லை வீட்டிலேயே மனைவி செய்திருக்கிறார் என கணவரும் தன் காலர் இல்லாத சட்டையை தூக்கிக் காட்டியிருக்கிறார். அதனை தன்னிடம் விற்கும்படி நண்பர் கேட்ட, பெரியம்மா அதை விற்க விரும்பவில்லை. திருமண ஜோடிகள், தங்கள் வீட்டை அழகுபடுத்த எத்தனை சிரத்தை எடுப்பார்கள். அதிலும் கைவினை பொருட்கள் செய்யத் தெரிந்தவர்கள் ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து தானே செய்வார்கள். அப்படி பெரியம்மா மனைவியாக வந்து முதன் முதலா செய்த வெண்குதிரை பின்னல் ஓவியம் அது. அதற்கு கீழ் அவரையே அறிந்திடாமல்தான் ஏதோ நினைவில் அஸ்வமேதா என்று பெயரையும் பின்னியிருக்கிறார்.

        விழுந்தது ஆசையில் மண். விருந்தாளிக்கு தேநீர் ஏற்பாடு செய்யச் சொல்லி பெரியம்மாவை சமையலறைக்குச் செல்ல சொல்லிவிட்டார். அவர் உள்ளேச் சென்ற சமயத்தில் கர்ணனாகத் தன்னை காட்டிக்கொள்ள நினைத்திருக்கிறார்  கணவர்.  இடுப்பு உயர அஸ்வமேதா பின்னல் ஓவிய ப்ரேமை தூக்கிக் கொடுத்துவிட்டார். வாங்கிக்கொண்ட நண்பர் பின்னல் ஓவியம் இருந்த இடத்தில் நூற்று ஐம்பது வெள்ளியை வைத்து போனவர் போனவர்தான்.

       இது வரை பேசிய பெரியம்மா, கண்கள் கலங்க மௌனமானார். ஆசையாசையாகப் பின்னிய ஓவியம் அது. அவ்வளவு அழகா இருந்தது. எப்படித்தான் தோன்றியதோ அதற்கு சரியான பெயரையே வைத்துவிட்டேன் என்றார். அந்த மௌனத்தை தொடர எனக்கு விருப்பம் இல்லை.

    எடுத்துச்சென்றவர் திரும்ப வந்தாரா என கேட்டேன்.

       “எப்படி வருவார்?” என என்னையே பெரியம்மா திரும்பக் கேட்டார். புரியவில்லை. 

        அஸ்வமேதாவை எடுத்துச்சென்ற தினத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் அவருக்கு நம்பர் அடித்துக்கொண்டு இருந்ததாச் சொன்னார். அத்தனை ராசியான ஓவியம் அது என்றார். அதுமட்டுமல்ல, பல அதிஸ்ட குழுக்களில் அவருக்கு பலவித பொருட்களும் பணமும் கிடைத்ததாக கூறினார். அதன் பின் அவரால் இன்னொரு குதிரை ஓவியத்தை பின்ன முடியாமல் போனதை சொல்லி வருந்தினார். அவரை சமாதானம் செய்ய நினைத்தேன்.

      கையில் கைபேசியை தடவ ஆரம்பித்தோம். கைவினை பொருளட்ளின் பாதியை மறந்தே போனோம். கைவினையா? அப்படியென்றால் என்னவென்று கேட்கும் காலத்தில் நிற்கின்றோம் இல்லை பயணிக்கின்றோம். ‘செய்வினை’  தெரிந்த அளவிற்கு ‘கைவினை’ பற்றி தெரியாமல் போனோம்.  ஆனாலும் கூட கைகளில் உள்ள ரேகையின் தத்தம் எதிர்காலத்தை தேடிக் கொண்டிருக்கறோம். 

       பெரும்பாலான கடைகளில் கழுதையின் புகைப்படம் வைத்திருப்பதை கவனித்திருப்போம். அழகான கழுதை தன் முதுகில் பொதியைச் சுமந்துக் கொண்டு நிற்கும் அந்த படத்திற்குக் கீழ் ‘என்னைப் பார் யோகம் வரும்’ என எழுதியிருக்கும். இதற்கும் யோகத்திற்கும் என்ன சம்பந்தம். தினமும் காலையும் மாலையும் அந்த கழுதையைப் பார்த்துவிட்டு அமர்ந்துக் கொண்டால் யோகம் வந்துவிடுமா என்ன?. 

       ஆனால் அதனை வைத்திருக்கும் பலர் வியாபாரத்தில் பண்மடங்கு லாபம் சம்பாதிதிருக்கிறார்கள்தான். நாமும்தான் தினமும் கழுதையை பார்க்கின்றோம் (இதில் குறிப்பிடும் கழுதை உண்மையில் கழுதைதான் என உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.) என்னத்தை பெரிதாக சாதித்துவிட்டோம்.

   கழுதையின் படத்தை பார்ப்பது அதிஷ்டம்தான். எப்படி? தொழிலில் கழுதை போல உழைக்கத்தொடங்கினால் அது சாத்தியம்.  அந்த ‘என்னைப் பார் யோகம் வரும்’ கழுதை சொல்லும் சங்கதி அதுதான். அதன்  உழைப்பைத்தான் நாம் பார்க்கவேண்டுமே தவிர அதன் புகைப்படத்தை அல்ல. புத்தன் காட்டிய கையை வணங்கியவர்கள் அங்கேயே நின்று விட்டார்கள். கைகாட்டிய இடத்திற்கு பயணித்தவர்கள் புத்தனை அடைந்தார்கள். நாம் கைகாட்டிய இடத்தை நின்று வணங்குகின்றோமா இல்லை, கைகாட்டிய இடத்தை நோக்கி பயணிக்கின்றோமா என்பதில் இருக்கிறது மீதி வாழ்க்கையின் சுவாரஷ்யம்.

        பேசி முடித்ததும் பெரியம்மா முகத்தில் கொஞ்சம் திருப்தி இருந்தது. ஏதோ எப்படியோ அந்த நண்பருக்கு அதிஷ்டம் அதன் இஷ்டப்படி வந்துவிட்டது என புரிந்துக் கொண்டார்.

      புறப்படும் சமயத்தில் மூளைக்குள் ஒரு மின்சாரம். இப்போது பெரியம்மாவின் மகள் பின்னி  வைத்திருக்கும் குதிரை பின்னல் ஓவியத்தை உற்றுப்பார்க்கலானேன். 

        “பெரியம்மா, பெரியப்பாவின் கூட்டாளி நூற்று ஐம்பது வெள்ளிதானே கொடுத்து அந்த குதிரையை எடுத்துட்டு போனாரு..?” என கேட்டுக்கொண்டே என் பணப்பையை எடுத்தேன்.

     “ஆமாம்” என்றார். 

      நல்லவேளையாக அவ்வளவுதான் என்னிடமும் இப்போது இருந்தது. அதனை எடுத்து முன் பாக்கேட்டில் வைத்துவிட்டு பின்னல் ஓவியத்திடம் கைகளைக் கொண்டுச்சென்றேன். 

       ஏதோ நினைவுக்கு வந்தவராய் பெரியம்மா, “அப்பறம் சொல்ல மறந்துட்டேன். அஸ்வமேதாவை எடுத்துட்டுப்போனவர் ரெண்டு மாசத்துல அடிபட்டு இறந்துட்டாரு…. என்ன நேரமோ தெரியல…” என்றார்.
“அங்க என்ன தயா செய்ற..?”

     “ஒன்னுமில்ல பெரியம்மா, இந்த அஸ்வமேதாவுல தூசு அதான் துடைச்சிவிடறேன்”. எனறேன். இருவரும் சிரித்தோம். 

    பெரும்பாலும்  தனியாய் இருக்கும் பொரியம்மாவுக்கு வீட்டில் இருக்கும் அவரே செய்த கைவினை பொருட்கள்தான் பல சமயங்களில் பேச்சுத்துணையாக இருப்பதை அறிவேன். யோசித்துப் பார்க்கையில் அந்த அஸ்வமேதாவை விட இப்படி ஒரு பெரியம்மா கிடைத்த நான் தான் உண்மையில் அதிஷ்டசாலி என நினைத்து அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டேன். 

   புரிந்துக் கொண்டால் இங்கு எல்லாருமே அஸ்வமேதாக்கள்தான்.

-தயாஜிPopular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்