பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 28, 2022

- போர்க்கால பொம்மைகள் -

சாலை காலியாக இருக்கிறது. வண்ணங்கள் நிறந்த சாலையில் இப்போது சிவப்பும் சிதறிய உடல் பாகங்களுமே காய்ந்து கிடக்கின்றன.
ஒரே வாரத்தில் இவ்வளவு மாற்றங்கள். அவ்வபோது வானில் பறக்கும் விமானங்கள், உடைந்தும் உடையாமலும் இருக்கும் கட்டிடடங்களை அதிரச்செய்கின்றன. 

ஆங்காங்கு கைவிடப்பட்டிருக்கும், தோட்டாக்கள் இல்லாத துப்பாக்கிகளைச் சில சிறுவர்கள்,  தேடி சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை கொடுத்தால் தின்பதற்கு யாரோ ஒருவர் ரொண்டி துண்டுகளைக் கொடுப்பதாக சொல்லியுள்ளார்கள். அவசரத்தில் எங்காவது ஓடிவிடவும் மறைந்து கொள்வதும் சிறுவர்களுக்கு சிரமமில்லை. 

குடும்பத்தில் ஒரு சிறுவன் இப்படி செய்ய தயாராகிறான். சில குடும்பத்தில் வெறும் சிறுவர்களைத் தவிர யாருமில்லை. உடன் வாழ்ந்தோர் உடல்களைக் கூட அவர்களால் முழுமையாகப் பார்க்க இயலவில்லை. எல்லோரும் கதறுகிறார்கள். எல்லோரும் ஓடுகிறார்கள். எல்லோரும் சிதறுகிறார்கள். எல்லோரும் சிதைகிறார்கள். எல்லோரும் சாகிறார்கள். ஒரு சிலரே தப்பிக்கிறார்கள்.

தப்பித்தவர்களும் சிலருக்கு பயன்படுகிறார்கள். தப்பித்தால் தொடர்ந்து அவர்கள் பயன்படுவார்கள். காலி துப்பாக்கிகள் கிடந்த இடத்தில்தான் அவனுக்கு ஒரு பொம்மை கிடைத்தது. 

வீட்டில் தனியாக இருக்கும் தங்கைக்குக் கொடுக்கலாம். அப்பா அம்மாவை இழந்து அழுதுக்கொண்டிருப்பவளுக்கு இந்தப் பொம்மை ஆறுதலைக் கொடுக்கட்டும். ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் அந்தப் பொம்மையையும் எடுத்தான்.

தங்கையை நோக்கி ஓடத்தொடங்கினான். சில அடிகள் எடுத்து வைக்கவும் பொம்மை அதிரவும், அது வெடித்து அவனும் சிதறவும் சரியாக இருந்தது.....

பிப்ரவரி 26, 2022

- இயந்திரப்பறவை -

முதன் முறையாகப் பார்க்கிறார்கள். உற்சாகம் பொங்க ஆராவாரத்துடன் சிறுவர்கள் அதனைப் பின் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதன் சத்தத்திற்கு ஈடாக அவர்களும் ஆர்ப்பரிக்கிறார்கள்.

அதிகம் வெளி உலகம் அறியாத மக்களின் கூட்டமைப்பு. அவர்களே விதைத்து அவர்களே விற்று அதை அவர்களே பண்டமாற்றுச் செய்து வாழ்ந்து வருகிறார்கள். எப்போதாவது யாராவது எதையாவது அவர்களுக்குக் கொடுத்துச்செல்வார்கள்.

வானில் பறக்கும் பெரிய பறவையாய் இருந்த விமானம் அவர்களுக்கு ஆச்சரியம் கொடுக்காமல் என்ன செய்யும். சிறுவர்கள் சட்டையைக் கழட்டிவிட்டார்கள். வானில் தெரியும் அதிசயத்திற்குத் தங்களின் சட்டையைக் காட்டிக்கொண்டே ஓடுகிறார்கள்.

குடியிருப்பில் உள்ளவர்களும் குழந்தைகளின் குதூகலத்தில் கலந்துகொண்டார்கள். ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக்கொண்டார்கள்.

எப்படியாவது அந்தப் பறவையைப் பிடித்து விடும் முயற்சியில் ஒருவன் மட்டும் முன்னணியில் ஓடிக்கொண்டிருந்தான். ஊரே அவனுக்கு உற்சாகம் கொடுக்கவும், மற்ற சிறுவர்களும் போட்டிக்குத் தத்தம் வேகத்தை அதிகப்படுத்தினார்கள்.

இரண்டு மூன்று முறைச் சுற்றிவந்த விமானம் மேன்மேலும் உயரம் போனது. எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க, அந்த அதிசயப் பறவை சில முட்டைகளைப் போட்டது.

அந்த முட்டைகள் தங்களை நோக்கி வருவதைக் கவனித்தவர்கள் தங்களின் கைகளைத் தூக்கி முட்டை உடையாமல் பிடிக்க நினைத்துக் கொண்டிருக்க....

பிப்ரவரி 25, 2022

புத்தகவாசிப்பு_2022_7_நிலவழி

தலைப்பு – நிலவழி
எழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன்
வகை – கட்டுரை
வெளியீடு – தேசாந்திரி பதிப்பகம்
நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)

மாத இதழொன்றில் தொடராக வந்தபோது வாசித்தது. இப்போது புத்தகமாக மீள்வாசிப்பு செய்வதில் மகிழ்ச்சி. எஸ்.ராவின் மூலம் பல எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் தொடர்ந்து பலருக்கு அறிமுகமாகிக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே. இந்தத் புத்தகமும் அவ்வாறுதான்,  புத்தக முடிவில் எஸ்.ரா சொல்லியிருக்கும் செய்தி மிக முக்கியமானது.

சர்வதேச இலக்கியங்கள் நமக்கு அறிமுகமாகியிருக்கும் அளவிற்கு இந்திய இலக்கியம் அறிமுகமாகியிருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆங்கிலத்தின் வழி ரஷ்ய இலக்கியங்களும் ஐரோப்பிய இலக்கியங்களும் எளிதாக வாசிக்கக் கிடைகின்றன. குறைந்தது அதன் எழுத்தாளர் அப்படைப்பாக்கத்தின் உள்ளீடு என்கிற விபரங்களையாவது தெரிந்து வைத்திருப்போம். ஆனால் இந்திய இலக்கியங்கள் என அறியப்படும் மராத்தியிலோ, வங்காளத்திலோ, பஞ்சாபியிலோ எழுதப்பட்ட இலக்கியப்படைப்புகள் தமிழில் எதிர்ப்பார்க்கும்படிக்கு வாசிக்கக் கிடைப்பதில்லை. மொழிபெயர்ப்பாளர்களின் தேவை இந்தத் தேக்கத்தை தீர்ப்பது எத்துணை அவசியம் என புலப்படுகிறது. 

அவ்வகையில் எஸ்.ரா எழுதியிருக்கும் ‘நிலவழி’ என்னும் கட்டுரைத் தொகுப்பு நவீன இந்திய இலக்கிய வரிசையில் வெளியான சில முக்கிய நாவல்களையும் சமகால இந்திய இலக்கியத்தின் போக்கினையும் கவனப்படுத்துகிறது என சொல்லலாம். மொத்தம் பத்து கட்டுரைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. ஆனால், பல படைப்பாளர்கள் , அவர்களின் முக்கியமானப் படைப்புகள் என அதிகமாகவே இக்கட்டுரைகளில் நமக்கு கிடைக்கின்றன. உதாரணமாக ஒரு மொழியில் இருக்கும் படைப்பாளியைப் பற்று பேசும்பொழுது அவருக்கு முந்தைய படைப்பாளர்களையும் அவர்கள் எவ்வாறு மாற்றத்திற்கு காரணமாக இருந்தார்கள் எனென்ன சிக்கல்களை எதிர்க்கொண்டார்கள் எனவும் பேசுகிறார். இன்றையப் படைப்பு தொடர்ச்சியை நாம் விட்டுவிடாதபடிக்கு அது நமக்கு உதவவும் செய்கிறது. 

மலேசியாவில் இருக்கும் எங்களுக்கும் இவ்வாறான சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. இங்கு எழுதப்படும் மலாய் சீன படைப்புகள் குறித்தும் படைப்பாளிகள் குறித்து பெரிதாக பலருக்கு அறிமுகம் இருப்பதில்லை. மலாய் மொழி எங்கள் நாட்டின் தேசிய மொழி, நாங்கள் எல்லோரும் தமிழ்மொழி போலவே மலாய் மொழியையும் கற்றுக்கொண்டே வளர்கிறோம். மலாய் இலக்கியம் குறித்தும் படைப்புகள் குறித்தும் எங்களால் நேரடியாக வாசிக்கவும் அது குறித்து உரையாடவும் முடிகிறது. ஆனால் சீன மொழி இலக்கியம் அப்படியல்ல. அங்கு இலக்கிய முன்னெடுப்பாக என்ன நடக்கிறது. என்ன எழுதுகிறார்கள் என்கிற கேள்வியே எஞ்சி நிற்கிறது. ஒரு மொழியின் இலக்கிய உச்சங்களை அறிவதன் வழி அம்மொழியில் புழங்கும் மக்களின் பண்பாட்டு அறிவுத் தளத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியும். மலாய் மொழி பலருக்கு பரிச்சயம் என்றாலும் அதன் இலக்கிய முன்னெடுப்புகளை பெரும்பாலும் அறிந்திருக்கவில்லை. ஆனால் மலாய் மொழியில் மட்டும் எழுதி மலாய்க்காரர்களுக்கு நன்கு  அறிமுகமான தமிழ் எழுத்தாளர்கள் இருக்கவே செய்கிறார்கள். தனிக்குழுவாக தொடர்ந்து மலாய் இலக்கியம் படைத்து வருகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் அ.பாண்டியன் ‘அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’ என்று புத்தகம் எழுதினார். வல்லினம் பதிப்பகமும் (மலேசியா) சந்தியா பதிப்பகமும் இணைத்து இப்புத்தகத்தை வெளியிட்டார்கள். மலேசிய மலாய் இலக்கியம் குறித்த அறிமுகத்தையும் படைப்புகளின் போக்கையும் அப்புத்தகம் கொடுக்கும். அவ்வாறே சீன இலக்கியம் குறித்தும் தமிழில் புத்தகம் வரவிருந்தது; சில காரணங்களால் அம்முயற்சி தாமதமாகிக்கொண்டே இருப்பது கொஞ்சம் வருத்தம்தான்.

எஸ்.ரா எழுதியிருக்கும் ‘நிலவழி’ வாசிக்க வாசிக்க நாம் வாசிக்க வேண்டிய எழுத்தாளர்களின் பெயர் பட்டியல் நிறையவே செய்கின்றன. நேரடியாக அவற்றை வாசிக்க இயலாவிட்டாலும் அதன் சாரத்தை, எப்படி அது முக்கியமான படைப்பாக அறியப்படுகிறது போன்றவற்றை இப்புத்தகம் வழி நாம் அறிந்துகொள்ள முடிகிறது.  

- தயாஜி

(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)

- ஒற்றைச்சாபம் -


யாரோ இடும் கையெழுத்து
எங்கோ செல்கிறது
யாரோ சாகிறார்கள்

யாரோ வீசும் குண்டு
எங்கோ வெடிக்கிறது
யாரோ சாகிறார்கள்

யாரோ சுடும் துப்பாக்கி
எங்கோ சுடுகிறது
யாரோ சாகிறார்கள்

யாரோ யுத்தம் செய்கிறார்கள்
எங்கோ நடக்கிறது
யார்யாரோ சாகிறார்கள்

ஏனோ நம் கையிலும்
இரத்தம் படிகிறது
நம் மனதும் துடித்து
அழுகிறது

நாமும் சாகத்தான் போகிறோம்
அதற்குள்
எத்தனை மரண ஓலங்களை 
கேட்டு பைத்தியமாகப் போகிறோமோ

ஏன் வாழ்கிறோம் 
என்பதை விடவும்
ஏன் சாகிறோம்
எனத் தெரியாதது 
உலக உயிர்களின் 
ஒற்றைச் சாபம் போல....



- நிறுத்து... நிறுத்து... நிறுத்து... -

"உங்களுக்கு என்ன வேண்டும் ?" கேட்டோம்.

"அம்மா... "

"எனக்கு அப்பா.."

"எனக்கு எங்க வீடு.."

"எனக்கு என்னோட கால்.."

"எனக்கு என்னோட கண்ணு.."

"எனக்கு எங்க ஸ்கூலு டீச்சர்.."

"எனக்கு என் தங்கச்சியோட கரடி பொம்மை.."

" எனக்கு நான் ஸ்கூலுக்கு போகனும்.."

"நான் கொஞ்ச நேரம் தூங்கனும்..."

"எங்கப்பாவை ஒரு தடவையாச்சும் பார்க்கனும்.."

எல்லோரும் என்னவேண்டுமென கேட்டார்கள். ஒருவன் மட்டும் எதுவும் கேட்கவில்லை. அவனால் முடியவில்லை. கண்களில் இன்னமும் கலவரம் தெரிகிறது. குண்டு வெடித்து உடல் சிதறியத் தாயைப் பார்த்த அதிர்ச்சியில் பேச்சறுந்து போனவன் அவன்.

அவனுக்காகவும் அவர்களுக்காகவும் நமக்காகவும்,  நாம் கேட்போம்.

"யுத்தங்களை நிறுத்து..."

"யுத்தங்களை நிறுத்து..."

"யுத்தங்களை நிறுத்து...."

பிப்ரவரி 24, 2022

- நண்பர்களை அழைக்கிறேன் -

மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் 'இயலின் குறுங்கதைப்' போட்டியை நடத்தினோம்.

போட்டிக்கு முன்பதாக பங்கேற்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறையையும் வழிநடத்தினோம். மாணவர்கள் ஆர்வத்துடனும் எதிர்ப்பார்ப்புடனும் கலந்துகொண்டார்கள். ஒரு நாள் பயிற்சி பட்டறையில் அவர்கள் பெற்ற அறிமுகத்தைத் தொடர்ந்து ஆளுக்கொரு குறுங்கதையை எழுதி போட்டிக்கு அனுப்பி வைத்தார்கள்.

அத்தோடு நின்றுவிடாமல் தொடர்ந்து குறுங்கதைகளை எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள்.

ஆர்வத்துடன் இருக்கும் இதுபோன்ற இளம் தலைமுறைக்கு தம்மால் இயன்ற பங்களிப்பையும் பல இடங்களில் புதிய தொடக்கத்தையும் ஏற்படுத்தி கொடுத்துக்கொண்டிருக்கும் 'மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்திற்கு' எனது அன்பு.

25-02-2022-டில் நடக்கவிருக்கும் குறுங்கதைப் போட்டி வெற்றியாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நமது கைத்தட்டல்களும் மனதார சொல்லும் பாராட்டு வார்த்தைகளும் இளம் தலைமுறையினர்க்கு அவசியம் என்று நம்புகிறவன் என்கிற முறையும் உங்களையும் அழைக்கிறேன்.

மலேசிய இலக்கியச்சூழல் எப்படி இருக்கிறது என அமர்ந்து குறை பேசாமல், எப்படி இருக்க வேண்டும் என களத்தில் இறங்கி நிறை காணுவதற்கான காரியங்கள் சாதித்துக் கொண்டிருப்பவர்களில் நானும் சிறுபுள்ளி என இருப்பதில் மகிழ்ச்சி...

இக்குறுங்கதை போட்டியின் பயிற்றுனராக எனக்கு கிடைக்கப்பெற்ற கதைகளில் பலவும் புதிய பாணி, புதிய கதைக்களன்களைக் கொண்டிருந்தன. அவை பற்றி நாளை நிகழ்ச்சியில் பேசுகிறேன்.....

பிப்ரவரி 23, 2022

- அம்மா வருவேன் -


"அம்மா.... என்னை மன்னிச்சிடுங்கமா..."
"ஏன்யா... மன்னிப்பெல்லாம் கேட்கற.. உனக்கு ஒன்னும் ஆகாதுயா..."

"நீங்க ரொம்ப பாவம். இப்படி ஓர் அம்மாவை நான் பாக்கல... ஆனா நீங்க எனக்காக எல்லாமே செய்றீங்க... என்னால உங்களுக்கு ஒன்னுமே செய்ய முடியலம்மா..."
"பெத்த பிள்ளைக்கு செய்யாத அம்மா எங்கயா இருக்காங்க.. உனக்கு ஒன்னும் ஆகாது.. அம்மா இருக்கேன்.. உனக்கு ஒன்னுமில்ல.. நீ நல்லாய்டுவ.... மறுபடியும் அம்மாகூட கடைக்கு வருவ.. பேசுவ.. சமைக்க உதவி செய்வ.. சண்டை போடுவ.. விளையாடுவ..."

"அம்மா ரொம்ப வலிக்குதுமா...."
"கொஞ்சம் பொறுத்துக்கய்யா... இப்பதான் மருந்து சாப்டிருக்க கொஞ்ச நேரத்துல சரியாகிடும்.. ஆம்பிலன்ஸும் வந்துகிட்டு இருக்கு...."

"மா.. நீங்க போய் தூங்குங்க.. என் கூடயே இருக்கீங்க... சரியா தூங்கியே ரொம்ப நாள் ஆச்சிமா...."
"தூக்கமாய்யா முக்கியம்... உன்னையை இப்படி விட்டுட்டு அம்மாவால எப்படியா நிம்மதியா தூங்க முடியும்..."

"நானே உன் நிம்மதியைக் கெடுத்துட்டேன் மா... மன்னிச்சிடும்மா..."
"அப்படிலாம் பேசாதப்பா..."

"வலிக்குதும்மா...ரொம்ப வலிக்குதும்மா..."
"அம்மா மடில படித்துக்கப்பா.. எல்லாம் சரியாகிடும்... ஆம்பிலன்ஸும் வந்துகிட்டு இருக்கு...."

"ம்மா....ம்மா...."
"அம்மா இருக்கேன்.. உனக்கு ஒன்னும் ஆகாது.... "

"ம்மா....."
"தோ ஆம்புலன்ஸ் வந்துடிச்சி...."

ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. அவசரமாக இறங்கியவர்கள் கூடியிருந்த உறவினர்களை நகரச்சொன்னார்கள். பாதி மயக்கத்தில் இருந்தவனை கட்டிலில் தூக்கி வைத்தார்கள். அம்மா வாசலுக்கு சென்றுவிட்டார்.

அவர்கள் அவனை கட்டிலில் வைத்து வெளியே கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள். வாசலில் நின்றிருந்த அம்மாவின் வெண்புகையை ஊடுருவி அவன் கட்டிலில் கடந்து சென்றுக்கொண்டிருக்கிறான்.

"ம்ம்மா...மா..." முனகினான்.

"உனக்கு ஒன்னும் ஆகாதுயா.. நீ எப்ப கூப்டாலும் அம்மா வருவேன்.... உனக்கு ஒன்னும் ஆகாது...."

பிப்ரவரி 21, 2022

அடையாளம் காணுதல்


என் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. என்னை சிதைக்க முயன்றவர்களிடமிருந்தும் என்னைச் செதுக்க கற்றுக்கொள்வதற்கு அதுதான் காரணம்.

எல்லாவற்றையும் எழுதி கடக்க முயன்றே எழுதிக்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றிலும் பெரிய ஆறுதல் நீங்கள் என் எழுத்தை வாசிப்பதுதான். யாரோ ஒருவருக்கு ஒற்றைத்துளி நம்பிக்கையை அது விதைக்குமெனில் எனக்கு வேறென்ன வேண்டும்.

பொதுவாக இல்லாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் அழைப்பும் புலனச்செய்திகளும், என் எழுத்துகள் கண்டறிந்த வலியினை பலர் பகிர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமே தெரிந்த நியாயத்தின் மௌனத்தை அவர்கள் என் எழுத்தில் கண்டதாக சொல்கிறார்கள். யாரோ ஒருவரால் அந்த மௌனத்தின் பின்னனியை உணர முடிந்ததைச் சொல்லி கலங்கவும் செய்வார்கள்.

உங்களுக்கும் எனக்குமான இடைவெளியை எழுத்துகளால் நிரப்பிட முயன்று கொண்டே இருக்கிறேன்.

சிலர் மீது கோவம் இருக்கும் அதே சமயத்தில் அவர்கள் மீதான மரியாதையையும் வைத்திருப்பேன். சிலர் என்னதான் சீண்டிக்கொண்டிருந்தாலும் அவர்களைக் கண்டுக்கொள்ளவே மாட்டேன். சிலரை யாருக்காவும் விட்டுக்கொடுக்க முடியாது. சிலருடன் ஒட்டி உறவாட முடியாது.

எழுத்தில் எனக்கு அறிமுகமாகி எனக்கு மிகவும் நெருக்கமானவர். அண்ணன் என உரிமையுடன் அழைப்பவர்களில் ஒருவர் அண்ணன் ஸ்ரீதர் ரங்கராஜன். முக்கியமான மொழிபெயர்ப்பாளர். ஹருகி முரகாமியை நான் கண்டுகொண்டது இவரின் மொழியாக்கத்தில்தான். என் வாழ்வில் ஏற்பட்ட மனஉளைச்சலின் ஆதாரப்புள்ளியை அடையாளம் காட்டியப் படைப்பாளி. 'தொ பாரு தம்பி..' என அவர் ஆரம்பிக்கும் போது நான் கற்றுக்கொள்ள தயாராகிவிடுவேன்.

வல்லினம் பதிப்பகம் வெளியீடு செய்த எனது முதல் புத்தகமான 'ஒளி புகா இடங்களில் ஒளி' புத்தகத்தை செறிவாக்கம் செய்த இருவரில் தோழர் ம.நவீனும் அண்ணன் ஸ்ரீதரும் அடங்குவர். அப்புத்தகத்தை எனது பெற்றோர் வெளியீடு செய்ய ஸ்ரீதர் அண்ணன் தான் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
நூல் அறிமுகத்தையும் செய்தவர் அவர்தான்.

யாருக்கும் இதுவரை முழுமையாய் சொல்லாத விடயம் ஒன்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் மனமொடிந்து வாழ்வை முடித்துக்கொள்ள நினைத்து கடைசி வார்த்தைகளை அவருக்குத்தான் அனுப்பினேன். உடனே என்னை அழைத்துப் பேசி, என் மனநிலையில் மாற்றத்தைக் கொடுத்து என் வாழ்வின் வழியை மடை மாற்றிவிட்டார்.

"தம்பி எல்லோரும் எழுதுவதையே நீயும் எழுதுவதாய் இருந்தால், நீ எழுத வேண்டாம். இன்னொருவர் எழுத முடியாத அனுபவமும் தேடலும் இருந்து நீ எழுதினால்தான் அது உனக்கான அடையாளமாய் மாறும். மறந்துவிடாதே"

என் அவர் சொல்லிய ஆலோசனையை ஒவ்வொரு முறையும் எழுதும் போதும் நினைத்துக்கொள்வேன்.

சமீபத்தில் வெள்ளைரோஜா பதிப்பகத்தை தொடங்கினேன். எங்கள் பதிப்பகத்தின்  முதல் புத்தகமும் எனது இரண்டாவது புத்தகமுமான 'அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல - 101 குறுங்கதைகள்' புத்தகத்தை அவருக்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தேன். பின்னர் அவரின் ஆலோசனையில் அடுத்த புத்தகத்திற்கான வேலையையும் தொடங்கினேன். அதுதான் எனது மூன்றாவது புத்தகமும் முதல் கவிதைத் தொகுப்புமான 'பொம்மி'.

சில நாட்களுக்கு முன் அண்ணன் ஸ்ரீதரை சந்தித்து 'பொம்மி' புத்தகத்தைக் கொடுத்தேன்.

அதோடு பலவற்றைப் பேசினோம். அதன் மையம் நாவல் எழுதுவது குறித்து அமைந்தது. நாவலுக்கு ஏற்றார்ப்போல என்னிடம் உள்ளவற்றை மெல்ல வெளி கொணர்ந்தார். எனக்கும் கூட அது ஆச்சர்யத்தைக் கொடுத்தது. சரி செய்திடலாம் என்கிற நம்பிக்கையும் வந்துள்ளது.

அவரைப் பற்றி இன்னும் கூட சொல்லலாம். அத்துணை முக்கியமானவர்.  இப்போது நம் அருகில் இருக்கிறார். பயன்படுத்திக்கொள்ளலாம். அவரின் மொழியாக்கங்களை வாங்கி வாசிக்கலாம்.

இதனை வாசிக்கும் நீங்கள் கூட என் வாழ்வில் ஏதாவதோர் பங்கினை செய்பவர்களாகத்தான் இருப்பீர்கள் என நம்புகிறேன். விரைவில் அதுபற்றியும் எழுதுவேன்.


- உப்பிட்டவரின் உள்ளளவு -

இரண்டாண்டுகளாக மருத்துவப்பரிசோதனைக்குச் சென்று வருகிறேன். ஆட்கள் மாறியிருக்கிறார்களே அன்றி, வியாதிக்காரர்கள் குறைந்த பாடில்லை. அவர்கள் கணவன் மனைவியாகத்தான் இருக்க வேண்டும். சர்க்கர நாற்காலியில் அவரை வைத்து என்னருகில் வந்து அமர்ந்தார்.

கணவன் ஏதோ முனகுவது கேட்டது. மனைவி சமாதானம் செய்துகொண்டிருந்தார். 'இதோ நமது எண்கள் வரப்போகின்றன. சீக்கிரம் மருத்துவரைப் பார்த்துவிடலாம்' என்பதே அதன் சாரம்.

அந்த அம்மாவின் முகத்திலும் காயம். கண்ணுக்குக் கீழ் கண்ணிப்போய் இருக்கிறது. இருவரும் ஏதோ விபத்தில் சிக்கியிருக்கக்கூடும் என, நலம் விசாரித்தேன்.

கணவருக்கு இனிப்பு நீர் வியாதியாம், இதயத்திலும் அடைப்பு வந்துவிட்டதாம். மேலும் அடுக்கிக்கொண்டே போகலானார். அவர் இன்னமும் சமாதானம் ஆகவில்லை. மனைவியை அருகில் அழைத்துத் திட்டவும் செய்தார்.

பாவம் அவர், அவரால் வலியைத் தாங்க முடியவில்லை. ரொம்பவும் கஷ்டப்படுகிறார் என்றார். வேறு எதுவும் பேசலாம் என நினைத்தேன்.

"முகத்தில் என்னம்மா காயம், விழுந்துட்டீங்களாம்மா" என்றேன்.

"இல்லப்பா.. நேத்து சாப்பாட்டில் உப்பு பத்தலைன்னு சொல்லி , அரைஞ்சிட்டாரு..."

" ஐயோ அப்பறம்..."

"அப்பறம் என்ன.. மூஞ்சியைக் கழுவிட்டு வந்து.. சாப்பாட்டில் உப்பு போட்டு, ஊட்டிவிட்டேன்."

"உங்களுக்கு வலிக்கலயாம்மா...?"

"வலி.. வலிதான் ஆனா அவருக்குப் பசிக்குதுல்ல...."

பிப்ரவரி 20, 2022

- யார் வாழ்க்கை யார் கையில் -

“இதோ பாருங்க… நான் நல்லாத்தான் இருக்கேன்.. காணாமல் எல்லாம் போகல.. யாரும் என்னைத் தேட வேண்டாம்.. என்னை நிம்மதியாக இருக்க விடுங்க.. உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை… “

“இதுக்கு முன்ன நீங்க எல்லாம் எங்க இருந்தீங்க… எங்கம்மாவைப் பத்தி எனக்கு தெரியாதா.... அவங்க என்னை எப்படியெல்லாம் வேலை வாங்கியிருக்காங்கன்னு உங்க யாருக்கும் தெரியுமா? எங்க அப்பா எப்படியெல்லாம் திட்டுவாருன்னு உங்க யாருக்கும் தெரியுமா..? உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை…” 

“எனக்கு என் வாழ்க்கையை வாழ்ந்துக்கத் தெரியும்.. நானே விரும்பிதான் வந்திருக்கேன்.. எங்க அப்பாவோ அம்மாவோ யாரும் என்னை தேட வேண்டாம்… போலிஸ்லயும் புகார் கொடுக்க வேண்டாம். உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை…”  

“உங்க யாருக்கும் நான் தொல்லை கொடுக்கல..  நீங்க ஏன் இப்படி என்னைக் கஷ்டப்படுத்தறீங்க.. உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை…” 

“எனக்கு புடிச்ச வாழ்க்கையை நான் தேர்ந்து எடுத்திருக்கேன்.. என் வாழ்க்கையை நான் பார்த்துக்கறேன்… என்னையும் அவரையும் நிம்மதியா வாழ விடுங்க.. உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை…”

“அவரு என்னையை நல்லா பார்த்துக்கறாரு.. எனக்கு அவர் முக்கியம்… அவர் ரொம்ப நல்லவரு… அவருக்கு ஏதும் ஆச்சுன்னா.. நானும் செத்துடுவேன்.. உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை…”

“உங்க எல்லோரையும் கெஞ்சி கேட்டுக்கறேன். எங்களை நிம்மதியா வாழ விடுங்க.. உங்களுக்கு ஏன் என் மேலே இவ்வளோ அக்கறை…”

அந்தக் காணொளியை அதற்கு மேல் பார்க்க முடியவில்லை. பதினைந்து வயது கூட ஆகாதவள் மீது அவளின் பெற்றோருக்கோ நமக்கோ அக்கறை இருக்கக்கூடாதா என்ன?


பிப்ரவரி 17, 2022

- தீக்குள் விரலை வைத்தால்.... -

அந்த ஒரு கேள்வி என் வாழ்வை அப்படியே திருப்பி போட்டது. தரிசனம் என சொல்வார்களே அதுதான் என் வாழ்வின் தரிசனம்.

புகழ்பெற்ற தன்முனைப்பு பேச்சாளர். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தலைப்பில் பேசுவார். அவர் பேசுகின்றார் என்றாலே கூட்டம் சேர்ந்துவிடும். அவரின் சிறப்புகளில் ஒன்று கர்த்தரைப்பற்றியும் பேசுவார் கந்தனைப் பற்றியும் பேசுவார் நபிகள் நாயகம் பற்றியும் பேசுவார். எது பேசினாலும் யாரை உதாரணமாகச் சொன்னாலும் அதனால் மனித சமூகத்திற்கு ஏதும் நன்மை உண்டா எனதான் அவர்  யோசிக்கிறவராக இருப்பார்.

நான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்  தவறாது சென்றுவிடுவேன். ஆனால் எனக்குள் ஏதோ ஒரு குறை இருந்தது. முழுமையற்ற குழப்பம் என்னைத் தொல்லைப்படுத்தி கொண்டே இருந்தது.

இன்று அவர் மகாகவி பாரதியின் கவிதைகளில் சிலவற்றை உதாரணம் கூறினார். "தீக்குள் விரலை வைத்தால்....." என்று பாடிக்கொண்டே மேடையில் இருந்த குத்திவிளக்கின் தீபத்தில் தன் கைவிரலை வைத்துவிட்டார். அவர் கைவிரல் சுடவில்லை. கவிதையை வாசித்து முடிக்கும்வரை கைவிரல் தீபத்திலேயே இருந்தது.

நான் உட்பட அரங்கமே கைத்தட்டியது. எங்கள் கண்கள் கலங்கின. எப்படியான மனோசக்தியை அவர் கைவரப் பெற்றிருக்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்தத் தீ எப்படி இவர் விரலை சுடவில்லை என சட்டென கேட்டுவிட்டேன். அவர் என் கண்களை ஆழமாகப் பார்க்கலானார். என்னை அருகில் அழைத்தார்.

"என் விரலை நல்லா பார்த்தீங்களா ?" என்றார்.
"சார் நான் உங்க விரலை மட்டும்தான் பார்த்தேன்.. எப்படி நெருப்பு சுடவில்லை...?"
"இந்தப் பக்கத்தில் என் விரலை மட்டுமல்ல.. அந்தப்பக்கம் இருந்த தீபத்தையும் நீங்கள் கவனித்திருக்கனும்'
"ஏன் சார்...?"
"ஏன்னா.. அது தீ உள்ள தீபம் அல்ல. மின்சார விளக்கு பொருத்திய குத்துவிளக்கு...."

சொல்லிவிட்டு சிரித்தபடி விடைபெற்றார்.  அவரின் அந்த பதில் தரிசனமாக மாறி என் வாழ்வை மாற்றியது. இப்போதெல்லாம் என் மனம் தேவையில்லாமல் குழம்புவதில்லை.

நந்தலாலா...நந்தலாலா......


பிப்ரவரி 16, 2022

- பாவத்தின் சம்பளம் -

பேயைப் பார்த்தால் யார்தான் பயப்படமாட்டார்கள். அதனால்தான் இன்று இருவரும் இங்கு வந்திருக்கிறார்கள். 
எப்படியாவது எவ்வளவு செலவு செய்தாவது அந்தப் பேயிடமிருந்து தப்பிக்க வேண்டும். 

இறந்த சில நாட்களில் இப்படி பேயாக வந்து நிற்பாள் என அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. தெரிந்திருந்தால் தங்களின் முகங்களை அவளிடம் காட்டாமலேயே அவளை சிதைத்திருப்பார்கள். அல்லது பணத்தையும் பலத்தையும் காட்டி மிரட்டி விட்டிருப்பார்கள்.

இப்போது செத்து பேயாக வந்து நிற்கிறவளை எப்படி மீண்டும் சாகடிப்பது. அவர்களால் முடியாது. அதனால்தான் இங்கு வந்திருக்கிறார்கள். மொத்தமாக ஆளுக்கு பத்தாயிரம் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு ஏற்ற பூஜை நடந்துகொண்டிருக்கிறது.

இரண்டு மணிநேரத்தில் பூஜை முடிந்தது. ஆனால் பூஜை முழுமையாக நிறைவு பெற,  பூஜையில் கொடுக்கும் தண்ணீரை வீட்டைச் சுற்றியும் தெளிக்க வேண்டும். ஆனால் அதற்கு அந்தப் பேய் விடாது. அது இவர்களை நெருங்காதபடிக்கு இருவர் நெற்றியிலும் விபூதியை வைத்துவிட்டார்கள்.

நெற்றியில் விபூதி இருக்கும்வரையில் அந்தப் பேய் இவர்களை எதுவும் செய்யாது. அதற்குள் அவர்கள் வீட்டிற்கு சென்று பூஜை நீரை வீட்டில் தெளிக்க வேண்டும். 

பணமும் பூஜையும் கொடுத்த நம்பிக்கையில் வீட்டை அடைந்தார்கள். வீட்டைவிட்டு சற்று தூரத்தில்தான் வாகனத்தை நிறுத்த முடிந்தது. கையில் பூஜை தண்ணீருடன் இருவரும் மெல்ல நடக்கலானார்கள்.

ஏதோ ஒன்று, இருவர் தலையிலும் சொட்டியது. என்ன இதுவென மேலே பார்க்கவும். மறு நொடியில் பேய்மழை. அடுத்த அடி வைப்பதற்குள் இருவரும் முழுக்க நனைந்துவிட்டார்கள்...

பிப்ரவரி 15, 2022

- 6 சிறியது 5 பெரியது -

இன்னும் எவ்வளவு தூரம்தான் ஓடும். ஓட முடியும். ஓட வேண்டும். மானின்  வேகத்தை எது முடிவு செய்கிறது. அதன்  கால்களா அல்லது துரத்தும் சிறுத்தையின் கால்களா.?

அதிவேக சிறுத்தைக்கு சாமர்த்தியமாக போக்கு காட்டுகிறது மான். ஓடிய வேகத்தில் சட்டென மான் நின்றுவிடுகிறது. இதனை எதிர்ப்பாக்காத சிறுத்தை மானைத் தாண்டியும் ஓடுகிறது. மீண்டும் இன்னொரு திசையை நோக்கி மான் துள்ளி குதிக்கிறது. ஒருமுறையல்ல, தொடர்ந்து மூன்று நான்கு முறைக்கும் அதிகமாகவே மான் தன் சாமார்த்தியம் காட்டினாலும்  புரிந்து கொள்ளாத சிறுத்தை தோற்றுக்கொண்டே இருக்கிறது.

இவ்வோட்டம், மானுக்கு சிறுத்தைக்குமான ஓட்டமல்ல. பசிக்கும் பயத்திற்குமான போட்டி.  எது முந்தும் எது பிந்துமென முன் யூகங்கள் அந்தந்த நேர வலிமையின் பொருட்டு மாற்றப்பட்டுகொண்டே இருக்கும். 

அதோ, பயத்தை பசி வீழ்த்திவிட்டது. ஆனால் பசி முழுமையாக வென்றிடவில்லை. கைப்பிடியில் சிக்கிய  மானை சிறுத்தை ஏதும் செய்யவில்லை. அதனால் முடியவில்லை. மானை நன்கு முகர்ந்த சிறுத்தை தன் இறுக்கத்தை  தளர்த்தியது. பிடியை விட்டுவிட்டது. ஒரு முறை மானின் வயிற்றை தன் நாவால் தடவி கொடுத்ததும் சிறுத்தை மெல்ல நகர்ந்தது. மான் எழுந்து நிற்கிறது.

எங்கிருந்தோ வந்த துப்பாக்கியின் தோட்டா, உயிர் பிழைத்து நின்ற மானின் வயிற்றில் நுழைந்து அதன் கருவின் குருதியுடனும் வெளியில் தெறிக்கிறது....


பிப்ரவரி 14, 2022

- பெயரில் என்ன இருக்கிறது? -

செல்வனுக்கு ஒரு வித்தியாசமானத் தேடல் இருந்தது. என்னதான் பகுத்தறிவு பகலவன்களாய் ஜொலித்தாலும்

திருமணத்திற்கு ஜாதியை எப்படியாவது பார்த்துவிடுபவர்களின் மத்தியில் செல்வனின் தேடல் உண்மையிலே வித்தியாசமானதுதான்.

அவன் தேடுவது அதை மட்டும்தான். ஆமாம், அது ஒன்றைத்தான். வேறெதுவும் செல்வனுக்கு முக்கியமாகப்படவில்லை.

அழகு - அது வயதைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்.

படிப்பு - கல்யாணத்திற்கு பிறகு கூட படிக்கலாம்.

குடும்பம் - குழந்தை குட்டி என ஆனப்பிறகு சரியாக அமைத்துக்கொள்ளலாம்.

பொருத்தம் - ஜோதிடத்தை முழுமையாக நம்பவேண்டியதில்லை.

பணம்/வரதட்சணை - தேவையில்லை; உழைத்து சம்பாதித்துக் கொள்ளலாம்.

செல்வன் எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருந்தான். மற்ற எல்லாவற்றிலும் அவனால் சமரசம் செய்ய முடிந்தது. ஒன்றைத்தவிர. அது பெயர். ஆமாம் பெயர் மட்டும்தான். அந்தப் பெயரில்தான் அவனுக்கு மனைவி வேண்டும்.

ஒரே மாதத்தில் ஆசை நிறைவேறியது. அவன் தன்னை அதிஸ்டசாலியாக உணர்ந்தான். பல ஆண்டுகளாக தன் வலது பக்க மார்பில் பச்சை குத்தப்பட்டப் பெயரை இனி எப்போதும் அவன் அழிக்கவேண்டாம். யாருக்கும் காரணம் சொல்லவேண்டாம்.


பிப்ரவரி 13, 2022

- தனிமையிலே இனிமை காண... -

யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது. தோள் மீது கையைப் போட்டு எனக்கு அறிவிரையும் கூற முடியாது. அப்படியாக யாரையும் நான் விரும்பவில்லை. யாருக்கும் நான் அப்படியிருக்க விருப்பமில்லை. 

தனிமையைக் கொண்டாடும் மனம் எனக்கு. மற்றவர்களின் துணை எதற்கு. நான் தனிக்காட்டு ராஜா. சம்பாதிக்கிறேன் செலவு செய்கிறேன். கொண்டாடுகிறேன்.
எனக்கு என்ன தேவையோ அதை நானே முடிவெடுக்கிறேன். நானே செயல்படுத்துகிறேன்.

யாரும் என்னிடம் வந்து எதும் பேசவில்லை. யாருடனும் நான் இல்லை. நம்மை தாண்டி மற்ற யாராலும் நம்மை புரிந்துகொள்ள முடியாது. இன்னொருவர் என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என நான் தலையிடுவதில்லை. அதே போல் என்னிடமும் யாரும் தலையிட நான் அனுமதிக்கவில்லை.

தனிமை என்பது எத்துணை இன்பமானது. இதனை அணு அணுவாக ரசித்து வாழ்பவன் நான். வாழ்ந்தவன் நான்.

ஆனால் தனிமை என்பது எல்லா சமயமும் இனிமையைக் கொடுப்பதில்லை என்பதை அறிந்துகொண்டிருப்பவனும் நானே.

பிப்ரவரி 12, 2022

- மனம் ஒரு.... -


பத்துமலை கோவில். வண்ணமடித்த படிகளில் வெள்ளைக்காரர்கள் வேட்டி சட்டை , புடவையில் நடந்து கொண்டிருந்தார்கள். சிலர் நேர்த்திக்கடனுக்காக படியேறிக்கொண்டிருந்தார்கள். சிலர் தங்களின் பூர்த்திக்கடனுக்காக படியிறங்கிகொண்டிருந்தார்கள். இரண்டுக்கும் இடையில் சிலர் டிக்டாக்கில் ஆடி கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து படியோறங்களில் இருந்த குரங்குகளும் ஆட முயன்றன. அவை நன்றாகவும் ஆடின.

சுந்தரம் தனது பிரார்த்தனைகளை முடித்துவிட்டார். கையில் சில வாழைப்பழங்களுடன் படி இறங்குகிறார். வழக்கம் போல குரங்குகள் அவரையும் சூழ்ந்தன. அவரும் ஒவ்வொன்றுக்கும் ஒரு வாழைப்பழத்தைப் பாதிப்பாதியாகப் பிய்த்து கொடுத்துக் கொண்டே நடக்கலானார். 

படிகளின் நடுவில் நின்றார். ஒரு தட்டை தரையில் வைத்தார். அடுத்து அவர் செய்யப்போவதை குரங்குகள் ஆவலாய்ப் பார்த்தன. தன் பையில் இருந்த பெரிய பாட்டில் பசும்பாலைத் தட்டில் ஊற்றினார்.

ஆசையாய் குரங்குகள் கூடின. தட்டின் அகலத்தைவிடவும் குரங்குகள் கூட்டமாக இருந்ததால் சீக்கிரமே பாலை குடித்து முடித்தன. வள்ளல் பரம்பரைக்கான மிடுக்குடன் மீண்டும் தட்டில் பசும்பாலை ஊற்றினார். ஒரு குட்டிக்குரங்கு தவறுதலாகத் தட்டில், வாய்க்கு பதிலாக இரு கைகளையும் வைத்துவிட்டது. தட்டு அப்படியே கவிழ்ந்தும் விட்டது. பால் கீழே ஊற்றியது.

பசும்பால் இப்படி வீணானதால் கோவம் கொண்டார் சுந்தரம். அவரால் அதை ஜீரணிக்க முடியவில்லை. இந்தக் குரங்குகளே இப்படித்தான். கையில் இருந்த பெரிய பாட்டில் பசும்பாலை பக்கத்து பாறையில் வீசி உடைத்தார்.

 "ச்சீ அறிவுகெட்டதுங்க.." என்றார். யாரைச் சொல்கிறார் என அந்தக் குரங்குகளும் தேடின.


பிப்ரவரி 11, 2022

- தவறவிடக் கூடாதக் குறுங்கதை -

நீங்கள் வாசித்து விட்டீர்களா?. நான் வாசித்த குறுங்கதையிலேயே மிக முக்கியமானது அதுதான். கதையல்ல அது ஒரு காவியம். என்ன ஒரு வார்த்தை வருணனை. எப்படியானக் கற்பனைத்திறன். எல்லையற்றக் கற்பனை எதுவரையும் செல்லும் என எடுத்துக்காட்டும் கதை.

ஆயுள் ரேகையைவிட அறிவு ரேகை அழுத்தமாக இருப்பவரால்தான் இப்படியொன்றை எழுத முடியும். அந்தக் கதையின் தொடக்கமே வித்தியாசமாக இருந்தது. கதைப்போக்கு "ஆஹா.. ஓஹோ..' என சொல்லும்படி இருக்கும். இல்லையில்லை சொல்லியே ஆகவேண்டும் என்றபடி இருக்கும். ஒரு பக்கத்தில் ஓராயிரம் செய்திகளை சுமந்திருக்கும் கதை.

தனித்தன்மையுள்ள ஒருவரால்தான் இப்படியானக் கதையை எழுதியிருக்க முடியும். ஏதோ வாசிக்கலாம் எனதான் ஆரம்பித்தேன். யார் யாரோ குறுங்கதைகள் எழுதுகிறார்கள்தான் ஆனால் இந்தக் கதை அதன் வடிவத்திற்கே சவால்விடும் கதை. இக்கதை ஒரு முன்மாதிரியானக் கதை. 

இது கதையல்ல காவியமென ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டாலும், இப்போதும் சொல்லலாம். அதில் யாரும் குற்றம் காண முடியாது. 

இன்னும் படிக்கவில்லையா. என்ன சொல்கிறீர்கள். எப்படி அதியர்ப்புதக் கதையைத் தவற விட்டீர்கள். சரி விடுங்கள்.

அது போனவாரம் நான் எழுதிய குறுங்கதைதான். இனி நீங்களே வாசித்துப் பார்த்து சொல்லுங்கள்...

பிப்ரவரி 10, 2022

புத்தகவாசிப்பு_2022_6 'பா.வெங்கடேசன் கதையும் புனைவும்'

பா.வெங்கடேசன் கதையும் புனைவும்
தலைப்பு – பா.வெங்கடேசன் கதையும் புனைவும் (புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்)
எழுத்து – த.ராஜன், பா.வெங்கடேசன்
நேர்காணல் – த.ராஜன்
வகை – நேர்காணல்
வெளியீடு – எதிர் வெளியீடு
நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)


    புத்தகம் குறித்து பேசுவதற்கு முன்பாக சிலவற்றை தெளிவுபடுத்த வேண்டுமென நினைக்கிறேன். ஏனெனில் இந்த புத்தகத்தைப் பற்றியும் பா.வெங்கடேசன் பற்றியும் சிலருடன் பேசும் பொழுது வேள்பாரியை படித்தது குறித்து பேசினார்கள். எழுத்தாளரின் பெயரில் ஏற்பட்ட குழப்பமாக மட்டுமே இதனைப் பார்க்க முடியவில்லை. புத்தகங்களை வாசிக்காமல் யார்யாரோ சொல்வதை அரைகுறையாகக் கேட்டுப்பேசுவதால் ஏற்பட்ட சிக்கலாகவும் பார்க்கிறேன்.
 
    அதற்காகவேணும் பா.வெங்கடேசன் குறித்து சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
 
    பா.வெங்கடேசன், முக்கியமானத் தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், கட்டுரை என்று பல தளங்களில் செயலாற்றுபவர். ‘ராஜன் மகள்’, ‘தாண்டவாரயன் கதை’, ‘பாகீரதியின் மதியம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
 
    ஒரிஜினல் நியூஸ் ரீல் சிறுகதைகள் இவரின் சிறுகதைத் தொகுப்பு. 1996-ஆம் ஆண்டுவாக்கில் வெளிவந்தது. பல ஆண்டுகளாக அச்சில் இல்லாமல் இவ்வாண்டு (2022) அச்சில் வந்துள்ளது.
 
    இன்னும் சில வீடுகள், எட்டிப்பார்க்கும் கடவுள், நீளா ஆகியவை   இவரின் கவிதைத்தொகுப்புகள்.
 
    ராஜன் மகள், பகீரதியின் மதியம், வாரணாசி, தாண்டவராயன் கதை போன்றவை இவரின் புதினங்கள் ஆகும்.
 
    பா.வெங்கடேசனின் எழுத்து பற்றி சொல்லும் போது; தான் எடுத்துக்கொண்ட  புனைவுப் பரப்பைத் தன்னுடைய அசாத்தியமான கற்பனையாலும் தீவிரமான சொல்முறையாலும் பிரம்மாண்டமாக்கும் கதைசொல்லி.
இனி புத்தக பற்றிய வாசிப்பு அனுபத்திற்கு செல்வோம்.
 
    சமீபத்தில் நான் வாசித்த புத்தகங்களில் என்னை சிரமத்தில் ஆழ்த்திய புத்தகம். எடுத்த வேகத்தில் வாசிக்க முயன்றும், பல இடங்களில் தடுமாறவே செய்தேன். தொடர்ந்து புனைவுகளை வாசித்தும் எழுதியும் பேசியும் வருவதால் அ-புனைவைச் சட்டென உள்வாங்க முடியவில்லை. ஆனால், மெல்ல மெல்ல இலக்கிய வாசிப்பு குறித்த வேறொரு பார்வையை இந்நூல் கொடுத்தது.
 
    கெட்டி அட்டையில் 150 பக்கங்களில் நேர்த்தியாக இந்நூலை எதிர் வெளியீடு , வெளியிட்டுள்ளார்கள். முழுக்கவும் பா.வெங்கடேசனின் நேர்காணல். மூன்று பகுதிகளாக நூலின் பகுதிகளைப் பிரித்திருக்கிறார்கள்.
 
    முதல் பகுதியை புனைவும் கற்பனையும் என்றும், இரண்டாவது பகுதியை புனைவாக்கச் செயல்பாடு என்றும் மூன்றாவது பகுதியை வாசிப்பும் அரசியலும் என்று பிரித்திருக்கிறார்கள்.
 
    த.ராஜன் எழுதியிருக்கும் முன்னுரையில் இப்புத்தகத்தின் அவசியமும் அதற்கான உழைப்பையும் தெரிந்து கொள்ள முடிகிறது. ‘சில வார்த்தைகள்’ என்ற தலைப்பில் நேர்காணலுக்கு முன்பாக பா.வெங்கடேசன் சிலவற்றை எழுதியுள்ளார். அவ்வுரை இப்புத்தகத்தை வாசிப்பதற்கு நம்மை தயார் செய்கிறது. ‘இங்கே உரையாடலுக்கு எடுத்துக்கொண்டிருப்பது புனைவாக்கத் தொழில்நுட்பத்தின் கருத்தாக்கரீதியான பின்புலத்தைப் புரிந்துகொள்ளும் சில வழிமுறைகளை மட்டும்தான்’ என்று அவர் கூறுவதிலிருந்து இதனை நாம் புரிந்துகொள்ளலாம்.
 
    பா.வெங்கடேசனின் எழுத்துகளை இதுவரையில் வாசிக்காததும் இந்நூலை வாசிப்பதில் எனக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு ஒரு வகையில் காரணம்தான். ஆனால் வாசிக்க வேண்டிய முக்கிய புனைவாளர் என்பதில் மாற்று கருத்து இல்லை என்பதே இந்த அ-புனைவு நமக்கு நினைவூட்டுகிறது.  
 
    த.ராஜனின் கேள்விகளுக்கு பா.வெங்கடேசன் கொடுக்கும் பதில்கள் சில இடங்களின் நமக்கு குழப்பத்தைத் தருகின்றன. எப்படி தெளிவு பெறலாம் என யோசித்து தொடர்ந்து வாசிக்கையில், அடுத்த கேள்வியை நம் ஐயத்தைப் பற்றியதாகத்தான் கேட்டிருக்கிறார் த.ராஜன். ஒரு வாசகனுக்கு எவ்விடத்தில் குழப்பம் ஏற்படும், எவ்விடத்தில் வாசகனுக்கு மேலதிக விளக்கம் வேண்டும் என்பதை நன்கு அறிந்து இந்த நேர்காணல் தொகுக்கப்பட்டிருக்கிறது.
 
    எது கற்பனை அது எப்படி புனைவாக மாறுகிறது என விளக்கும் பா.வெங்கடேசனின் பதில் நம்மையும் யோசிக்கத்தான் வைக்கிறது. அதனை சுருக்கமாக ‘ கதை நாம் எப்படி இருக்கிறோம் என்பதைச் சொல்கிறதென்றால் ஒரு ‘புனைவு’ நாம் எப்படியெல்லாம் இருக்க சாத்தியங்கள் இருக்கின்றன என்பதை உணரவைக்கிறது’ என்கிறார்.
 
    நாம் வாசிக்கும் பிரதியில், எழுத்தாளரின் பேனா மையில் யார் கதை சொல்கிறார் என்பதை கண்டறிவது அரசியல் வாசிப்பின் நோக்கம் என்கிறார். வாசிப்பும் அரசியலும் என்கிற மூன்றாவது பகுதியில் இது பற்றி விரிவாக உரையாடியுள்ளார்கள்.
 
    மேற்கொண்டு நாம் புரிந்து கொள்வதற்காக இதர படைப்பாளிகளின் படைப்புகளையும் நமக்கு அறிமுகம் செய்து தேடலை ஏற்படுத்துக்கிறார். குறிப்பாக, ஜெயகாந்தனின் சிறுகதையான  ‘அக்கினிப் பிரவேசம்’ பிற்பாடு விரிந்து அவரே எழுதிய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற நாவலாக எப்படி மாறியிருக்கிறது என சொல்லுமிடம் நமக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது.
 
    புனைவு குறித்த உங்களது அபிப்பராயங்களை மறுபரிசீலிக்கவும் ; உங்களது வாசிப்பையும் எழுத்தையும் மெருகூட்டவும் இந்தப் புத்தகம் கொஞ்சமேனும் உதவும் என்கிறார் நேர்காணல் கண்ட த.ராஜன். அவர் சொல்வது உண்மைதான் ஆனால் அது கொஞ்சமல்ல என்பது வாசித்து முடித்ததும் தோன்றுகிறது.
 
    ஒற்றை  வாசிப்பில் பெற்றதைவிட மீள் வாசிப்பில் இன்னும் பலவற்றை அறிந்து கொள்ளும் அனைத்து சாத்தியங்களைக் கொண்ட புத்தகமாக ‘பா.வெங்கடேசன் கதையும் புனைவும்’ புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்) என்பதில் சந்தேகமில்லை.
 
- தயாஜி
 
(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)

- வேர் தேடும் மரம் -

யார்தான் அவள். அவ்வப்போது காணக்கிடைக்கிறாள். அழுக்காக இருக்கிறாள். கையில் எப்போதும் ஒரு பை இருக்கிறது. அவளைவிடவும் அவளது பை அழுக்கடைந்ததாக இருந்தது. எதையோ தேடுபவள் என முதல் பார்வையிலேயே அவளை அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு முறையும் அவளை ஏதாவது ஒரு மரத்தின் அருகில் பார்க்கலாம். ஒரு நாள் பூங்காவில் உள்ள மரத்தில், ஒரு நாள் வாசலில் இருக்கும் மரத்தில், ஒரு நாள் குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் உள்ள மரத்தில்.

நாங்கள் இந்தப் புதியக் குடியிருப்பிற்கு வந்து சில நாட்கள் ஆகின்றன. என்னைப்போல பலரும் அவளை அவ்வப்போது பார்த்திருக்கிறார்கள். அவளிடம் பேச யாரும் முயன்றதில்லை. அவளும் அதற்கு ஏதும் மெனக்கெடுவதாகத் தெரியவில்லை.

ஏன் எப்பொழுதும் ஏதாவது மரத்தின் அருகில் நின்று ஏதோ செய்துக்கொண்டிருக்கிறாள். மனநலம் பாதிக்கப்பட்டவளோ. ஆனால் எப்படி சரியான மணிக்கு  தென்படுகிறாள்.

சிலர் அவள் பற்றி ஏதோ புகார் கொடுத்திருக்கிறார்கள். குடியிருப்பு காவலாளிகளிடம் இனி அவளை உள்ளே அனுமதிக்க கூடாது என்று முறையிட்டுள்ளார்கள். நாங்கள் சொல்வதைக் கேட்பதுதானே அவர்களின் வேலை. அப்படியே செய்தார்கள்.

இன்றோடு ஒரு மாதகாலம் ஆயிற்று, அவளைப் பார்த்து. அப்படியொருத்தி அவ்வப்போது இங்கே நடமாடினாள் என்பதையே இங்கு பலரும் மறந்துவிட்டார்கள். நானும்தான்.

இன்று அவளை நினைக்க ஒரு காரணம் கிடைத்தது. அவள் வந்து போகும் வரை செழிப்பாக இருந்த மரங்கள் ஒவ்வொன்றும் பட்டுபோய் இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் வேரோடு பிடுங்கி விழலாம் என்கிற நிலையில் இருக்கின்றன.

இது, காட்டை அழித்து கட்டியக் குடியிருப்பு என்பதற்கும் இங்கு நடப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று ஞாயிற்று கிழமை சந்திப்பில் மேனேஜர் ஒரு பேசிக்கொண்டிருக்கிறார். அதோ அங்கொரு மரம் வேறோடு விழுகிறது....


பிப்ரவரி 09, 2022

உனக்கு 20 எனக்கு 20


ஒருத்தரிடமிருந்து 20 ரிங்கிட் கிடைத்தால் 100 பேரிடமிருந்து ஒரே நாளில் 2000.00 வெள்ளிவரை சம்பாதிக்கலாம் என்றார். 

கணக்கு சரிதான் ஆனால் எங்கிருந்து 100 பேர்களைத் தேடுவது?

"முதலில் நண்பர்கள், உறவினர்கள் என பட்டியல் போடுங்க... கைப்பேசி எதுக்கு இருக்கு அதிலிருந்து எடுங்க... முயற்சிதான் முக்கியம்.... சும்மா உட்கார்ந்துகிட்டு இருந்தா காசு சம்பாதிக்க முடியாதுங்க..."

அவரின் பேச்சு, இரண்டு நாட்களாக மண்டையைக் குடைந்து கொண்டே இருந்தது. கைப்பேசியை எடுத்தேன் ஒவ்வொருவருக்காக அழைத்தேன். என்னை நம்பாதவர்கள் எத்தனைப்பேர் என தெரிந்து கொண்டேன். 

இவர்களெல்லாம் எப்படி முன்னேறப்போகிறார்கள். பணத்தின் அருமை தெரியாதவர்கள். கண்ணுக்கு முன்னே அருமையான திட்டத்தைக் காட்டினாலும் முயற்சிக்கவே மாட்டார்கள். ஒரு நாள் ஒரே ஒரு நாள் இவர்களை அவரிடம் பேசவிட்டால் எல்லாம் சரியாகும். ஆனால் முழுமையாக என் உழைப்பு இருந்தால்தான் எனக்கு மரியாதை என்று சொல்லியுள்ளார். அவரின் ஆலோசனையைப் பின்பற்றினேன்.

கடைசியாக வீட்டில் உள்ளவர்களை முதலில் இணைத்துக்கொண்டேன். பிறகு நெருங்கிய நண்பர்களிடம் பேசிப்பேசி இணைத்தேன்.

ஒவ்வொருவரும் இணையும் போது என் வங்கியில் 20 ரிங்கிட் சேர்ந்தது. அதே போல அவர்களும் ஆட்களை இணைக்கும் போது 20 ரிங்கிட் சேரும். ஒரே நாளில் (உழைக்கும் வேகத்தைப் பொருத்து) இரண்டாயிரம் வெள்ளி சம்பாதிக்கலாம் என்றால் முதலீடு ஆயிரம் கொடுக்க யார்தான் தயங்குவார்.

ஒரே வாரத்தில் முதலீட்டை விட பல மடங்கு பணம் சேர்ந்தது. அவர் சொன்னது போலவே செய்தேன். எல்லாமே சரியாக நடந்தது. இன்று அவர் சொல்லாததும் நடந்தது. 

கடைசியில் என் வங்கி கணக்கில் 20.00 ரிங்கிட்தான் மிஞ்சும் என அவர் சொல்லவேயில்லை.

பிப்ரவரி 08, 2022

- நான் பாதி ; நீ பாதி -

முகநூல் விளையாட்டில் நானும் பங்கெடுத்தேன். நம்மிடம் யாரும் கேள்வி கேட்கலாம். தனிப்பட்ட முறையில் வரும் கேள்விகளை நாம் விரும்பினால் பொதுவில் பகிரலாம்.

 நண்பர்களிடமிருந்து கிண்டல்கள் நிறைந்த கேள்விகளும் சிலரிடமிருந்து என் செயல்பாடுகள் பற்றிய கருத்துகளும் வந்தன. வழக்கமானதுதான். ஆனால் ஒரு கேள்வி மட்டும் என் கைப்பேசி எண்ணுக்கு வந்தது. புதிய எண்.

ஒரே கைப்பேசி எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்துகிறேன். பழகிய நண்பரில் யாரோதான் விளையாடுகிறார்கள் என யூகித்தேன். அடுத்த நொடியில் அது யாரோ அல்ல என புரிந்துகொண்டேன்.

'நல்லாத்தான இருந்தோம் என்ன ஆச்சி நமக்கு...'

மீண்டும் மீண்டும் அதையே வாசிக்கிறேன்.  குற்றத்தை என்மீது மட்டும் போடாமல் இருவருக்கும் சமமாக அதை பிரித்துக்காட்டியது அந்தக் கேள்வி. 

ஏதேதோ நம்பிக்கை முளைக்கிறது. ஏனோ அதுவே மறைகிறது. யாரோ ஒருவரின் கையைப் பிடித்துக்கொண்டு முகத்தைப் பார்த்துக்கொண்டே கடைசிவரை வாழ நினைக்கிறோம். அதே கையை உதரிவிட்டு, அந்த முகத்தை இனி வாழ்நாளில்  பார்க்கவே கூடாது என்கிறோம்.

வாழ்க்கை நம்மை எங்கோ அழைக்கிறது. நாமும் செல்கிறோம். எவருடன் பயணம் எதுவரை பயணம்   என்ற கேள்விக்கு வாழ்க்கையிடமும் பதிலில்லை வாழ்பவர்களிடமும் பதிலில்லை. 

நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்றுதான். நடப்பது எதுவாகினும் அதில் சம பங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒப்புக்கொள்ள வேண்டும். 

'என்ன ஆனாலும் நல்லாத்தானே இருக்கிறோம்' என்ற பதிலை அனுப்பிவிட்டேன்.

பிப்ரவரி 07, 2022

- குறுங்கதை எழுதுவது எப்படி? -

பக்க அளவு இருக்கிறதா?

ஆம்.

வார்த்தை எண்ணிக்கை வேண்டுமா?
ஆம்.

தலைப்பு அவசியமா?
ஆம்.

வசனங்கள் கட்டாயமா?
ஆம்.

கதை சொல்லி வேண்டுமா?
ஆம்.

இவைதான்; இவை மட்டும்தான் குறுங்கதையா?
ஆம்.

- பின்குறிப்பு

ஆம் என்று சொன்ன எல்லாவற்றையும் இல்லை என்று சொல்வதுவும் குறுங்கதைகள்தான்..

#தயாஜி

பிப்ரவரி 06, 2022

நன்றி நவில்தல்

மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றம்,  நூலிழை குறுங்கதை பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அதன் வழி குறுங்கதைகள் பற்றியும் எங்கெல்லாம் குறுங்கதைகளைக் காணலாம் என்றும் பேசினேன். இம்முறை மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாய் இருந்தது. பலரும் எழுதுவதில் ஆர்வமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒன்று தடுக்கிறது என்பதை உணர முடிகிறது.

பேசி முடித்ததும் கேள்வி நேரத்தில் பங்கேற்பாளர்கள் கேட்ட கேள்விகள் சில வழக்கமானதாக இருந்தன, சில முக்கியமான கேள்விகளும் இருந்தன. இரண்டிற்கும் பதிலளித்தேன்.

எழுத்தில் ஆர்வம் உள்ளவர்களைப் பார்க்கும் போது நானும் உற்சாகமாகிவிடுகிறேன். நானே அதை பல முறை உணர்ந்திருக்கிறேன்.

என்னைப் பொருத்தவரையில் எழுத ஆர்வம் உள்ளவர்கள் குறுங்கதையில் இருந்து தொடங்கி குறுங்கதையிலேயே பெரிய பாய்ச்சலைக் கொடுக்க முடியும்.

இன்று ஆர்வத்துடன் பங்கெடுத்தவர்களுடன் மீண்டும் ஒரு சந்திப்பிற்கும்  தொடர் உரையாடலுக்கும் வழி சமைத்திருக்கும் மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடக்கும் நல்லவற்றில் நம் பங்கும் சிறிதேனும் பயனாக அமைவதில் எனக்கும் எப்போதும் மகிழ்ச்சியே...


#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

- பிக்கபூ -


மூவாயிரம் வெள்ளி. ஆனால் வெறும் ஐநூறு வெள்ளிக்கு கிடைத்தது. முழங்கை அளவுள்ள கிளி. நீலவண்ண இறகுகள் கொண்டது. கணவனின் மரணத்திற்கு பின் அவரின் செல்லப்பிராணியை மனைவியால் பார்க்க முடியவில்லையாம். அதனாலேயே குறைந்த விலையில் விற்றார். இதுதான் சமயமென வாங்கிவிட்டேன்.

நன்றாக பயிற்சி அளிக்கப்பட்ட கிளிதான். ஆங்கிலத்தில் பேசினால் அதற்கு புரிகிறது. அதற்கு ஏற்றார் போல கத்தவும் செய்கிறது. 

அதனிடம் எனக்கு மிகவும் பிடித்தது அதன் சத்தம். ஏதோ ஒரு இசையை நினைவுப்படுத்தும். குறிப்பாக அதன் கூண்டின் அருகில் நின்று, முகத்தை மறைத்தும் காட்டியும் 'பிக்கபூ' என்று சொன்னால் பதிலுக்கு அதுவும் 'பிக்கபூ' என்று சொல்லும். முந்தைய பராமறிப்பாளர் கற்றுக் கொடுத்திருக்கிறார். 

ரொம்பவும் பாசமாகத்தான் வளர்த்திருக்கிறார் போல. அவருக்கு பின் இப்படி விற்கப்படுமென நினைத்து பார்த்திருக்க மாட்டார்.

எனக்கு இப்போது ஒரு கேள்வி, வீட்டில் எல்லோரும் தூங்குகிறார்கள் நானும் என் அறையில் பாதி தூக்கத்தில் இருக்கிறேன். வரவேற்பறையில் தனியாக இருக்கும் கிளி, யாருடன் இப்போது 'பிக்கபூ' விளையாடிக் கொண்டிருக்கிறது?

பிப்ரவரி 05, 2022

- தொழில் ரகசியம் -

நேற்று காலை , ஏதும் சாப்பிடாமல் வேலைக்குப் புறப்பட்டேன். பத்து மணி வாக்கில் பசி மயக்கம் வயிற்றில் தொடங்கி காதுகளை அடைத்தது. செல்லும் வழியில் இருந்த கடையில் அமர்ந்தேன். அவ்விடம் செல்லும் போது பல சமயங்களில் அங்குதான் காலை உணவு எடுப்பேன்.

வழக்கமாக காலையில் இஞ்சி டீ குடிப்பது பிடித்த ஒன்று. இம்முறையும் இஞ்சி டீக்கு ஆடர் கொடுத்து அடுத்து செய்ய வேண்டியவற்றை குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன்.

இஞ்சி டீ வந்தது. சுடச்சுட ஒரு மிடறு குடித்தேன். தூக்கம் கலைந்து மண்டைக்குள்ளாக மணியடிக்கத் தொடங்கியது. அடடே இப்படியான இஞ்சி டீயை குடித்தது இல்லை. நல்ல காரம். வாய் முழுக்கவும் உணர முடிந்தது. புதிதாக ஏதோ சேர்த்திருக்கிறார்கள். 

இஞ்சி பவுடரை போடாமல், டீயில் இஞ்சியை இடித்து போட்டிருக்கிறார்களோ என தோன்றியது. பணம் கட்டும்போது டீயின் ருசி குறித்து பாராட்டி அதன் காரணத்தைக் கேட்கலாம் என்றிருந்தேன்.

டீ குவளை பாதி காலியானது. இஞ்சி டீ குவளையுடன் சின்ன கரண்டியும் கொடுப்பார்கள். அவ்வபோது கிண்டி கீழிருக்கும் இஞ்சை கலக்குவதற்கு ஏதுவாய் இருக்கும்.

பாதி இஞ்சி டீயை கலக்க தொடங்கினேன். இஞ்சி டீயின் காரமும் அதன் காரணமும் மேலே வந்து நின்றது, குட்டி கரப்பான் பூச்சியின் தலையாய்....

பிப்ரவரி 04, 2022

- வாழ்வின் வலி நிவாரணி -

அந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன். அது மிகவும் கேவலமானது. அருவருப்பானது. என்னை மட்டுமல்ல என் குடும்பத்தையும் அது அவமானப்படுத்தும்.

ஆனால், என் தலையின் பாரம் என்னைக் கொல்கிறது. மருந்துகளும் மருத்துவர்களும் இரண்டு நாட்களுக்குத்தான் பயன்படுகிறது/கிறார்கள். மூன்றாம் நாள் மீண்டும் தலை பாரமாகிவிடுகிறது. இன்னும் கூடுதல் வலி.

நடக்க முடியவில்லை. அன்றாடத் தேவைகளைக் கவனிக்க முடியவில்லை. சாப்பிடுவதெல்லாம் செரிமானம் ஆகாமல் வெளிவானம் பார்த்துவிடுகிறது. நினைவில் அடுக்குகள் கலைந்துவிட்டன. முன்னுக்கு பின்னும், பின்னுக்கு முன்னும் குழம்பி போயிருக்கிறேன். 

கோவமே முதன்மையாகிறது. எதிரில் யார் வந்தாலும் ஏதேதோ பேசிவிடுகிறேன். தலை வலிக்கிறது. உள்ளுக்குள் யார்யாரோ இருந்து, மூளையைக் கசக்குகிறார்கள். என்னால் தாங்க முடியவில்லை.

ஏதோ ஒன்று தலையை முழுவதுமாய் அழுத்துகிறது. கைகளும் கால்களும் நடுங்குகின்றன. என்னால் இனியும் அடக்க முடியாது. தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன். அவமானத்தையும் அடைந்து கொள்கிறேன். கேவலத்தையும் எடுத்துக் கொள்கிறேன்.

இதோ, கண்களில் இருந்து அது வழியத்தொடங்கிவிட்டது. முதன் முறையாக நடக்கிறது. நான் அழுகிறேன். என் தலையின் பாரம் குறைகிறது. நினைவுகள் நேராகின்றன. ஆம் நான் குணமாகிக் கொண்டிருக்கிறேன்.

அழுகை என்பது ஆண்களுக்கும் உரியதுதான். அழுவது அசிங்கம் என்று சொல்லி எங்களை அழித்துவிடாதீர்கள்.

#தயாஜி 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம் 
#குறுங்கதை

பிப்ரவரி 03, 2022

புத்தகசவாசிப்பு_2022_5 ' மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்'

மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்

தலைப்பு – மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்

எழுத்து – டயான் ப்ரோகோவன்

தமிழாக்கம் – ஆனந்த்

வகை – குறுநாவல்

வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம்

நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)

 

டயான் ப்ரோகோவன், ஃப்ளெமிஷ் எழுத்தாளர். அவரின் ‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’ என்னும் நாவல் உலகின் பல மொழிகளில் மொழியாக்கம் கண்டு அதிக வரவேற்பையும் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. ஜெர்மன் மொழியில் மட்டும் இந்நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

வித்தியாசமான கதைக்களன் கொண்ட நாவல்.  இறந்துவிட்ட மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாளை கழிக்கிறார் அவர் மனைவி. எதிர்ப்பாராத மரணத்தை எதிர்க்கொள்வது என்பது தனிமையில் இருப்பவர்களுக்கு அவ்வளவு எளிதல்ல. என்னதான் அறிவார்ந்தவர்களாக இருந்தாலும் உடனடியாக ஒருவரின் இறப்பை ஏற்றுக்கொள்வது சிரமம்தான். அச்சிரமம் இந்நாவல் முழுவதும் வருகிறது. ஒரு கட்டத்தில் இருவர் இருக்கும் வீட்டில் நாமும் ஒரு நபராக நுழைந்துவிடுகிறோம்.

கணவரின் உடலை வீட்டில் வைத்தவாரே அவருடனான நினைவுகளில் அன்றைய நாளை கழிக்கிறார் மனைவி. அவை நல்ல நினைவுகள் மட்டுமல்ல, மனதை ரணப்படுத்தும் நினைவுகளும் வருகின்றன.

இறந்த மனிதனின் வீட்டில் எப்போதும் போல வருகிறான் டேவிட். டேவிட் ஆட்டிஸம் குறைபாடு உள்ள மாணவன். மிஸ்டர் ஜூல்ஸுடன் வழக்கம் போல சதுரங்கம் விளையாட வருகிறான். அவனால் அசைவற்று இருக்கும் மனிதரை புரிந்து கொள்ள முடியுமா, இறந்த கணவரின் உடலை என்னவென்று காட்டுவார் மனைவி என்கிற கேள்விகளுக்கு எதிர்ப்பாராத விதத்தில் பதிலை சொல்லிவிடுகிறார் எழுத்தாளர்.

நான் வாசித்து தமிழில் ஆட்டிஸம் குறைபாடு பற்றிய கதைகள் குறைவே (இல்லையென்றே தோன்றுகிறது). கவிதைகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. சினிமாவாக கார்ட்டூன்களாக கட்டுரைகளாக வந்திருக்கின்றன. ஆனால் புனைவு வெளிகளில் இன்னும் ஆழமாக அக்குறைபாடு பற்றிய அறிதல் கொடுக்கக்கூடிய கதைகள் இல்லை என்பது இந்நேரம் எனக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது.

மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள், 71 பக்கங்களே கொண்ட குறுநாவல்தான். எளிதாக வாசித்து விடலாம் என்ற எண்ணமே இந்நாவலை எடுக்க வைத்தது. ஆனால் அதன் அடர்த்தியும் அதன் நகர்தலும் வாசிப்பைத் தாமதப்படுத்தியது. சில சமயம் என்ன கதை இது வெறுமனே உயிரற்ற உடலுடன் எத்தனை மணிநேரத்தை கடத்துவார் என யோசிக்க வைக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் அந்த மனைவியின் துக்கம் நம்மையும் சூழ்ந்து கொள்கிறது.

‘அவள்  யாரிடமும் சொல்லாதவரையில் அவர் இன்னும் இறந்து போகவில்லை’ என்று நாவலில் ஒரு  வரியை எழுதியிருக்கிறார் ஆசிரியர். அதற்குள் இம்முழு நாவலையும் அடக்கிவிடலாம். சொல்லிவிடுவதற்கும் சொல்ல தயங்குவதற்கும் ஊடாக இருக்கும் மனப்போராட்டத்தை மனைவியின் மூலமாக வாசகர்களுக்கு ஏற்றிவிடுகிறார் நாவலாசிரியர்.

          சில ஆண்டுகளுக்கு முன், ‘காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படம் வந்திருந்தது. காதலி இறந்துவிடுகிறாள். காதலன் மன அழுத்தம் தாங்காது அவள் உயிருடன் இருப்பதாக நினைத்து பிணத்தை தன் உடலில் கட்டிக்கொண்டு வாழ்வதற்கு ஓடுவான். காதலனின் பார்வையில் காதலி உயிரோடு இருப்பதாகவே தெரியும். இக்கதை அத்திரைப்படத்தை நினைக்க வைத்தது. ஆனால் இரண்டு மணி நேரத்தில் திரைப்படத்தைப் பார்த்து கடத்துவது போல. எளிதாக இந்நாவலை வாசித்து கடத்த இயலாது. அதுதான் இந்நாவலின் தனித்தன்மை. மனித மனங்களில் மாய வித்தையை அறிந்துள்ள எழுத்தாளரின் எழுத்தில் இந்நாவலை வாசிப்பது நமக்கு பயிற்சியாகவும் பயனாகவும் அமையும் என நம்புகிறேன்.

எந்த மனிதனும் இன்னொரு மனிதன் தனக்களித்த நினைவுகளை, தான் சாகும் வரையில் சுமந்திருக்கிறான். அதுவே அவனுக்கு, மீத வாழ்க்கையை வாழ்வதற்கான வேகத்தையும் அழுகையையும் கொடுக்கிறது.  

- தயாஜி


(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)

- என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா -

நள்ளிரவு. தூக்கம் வரவில்லை. ஏதாவது வாசிக்கலாமென வரவேற்பறையில் அமர்ந்தேன். எப்போதும்  பால்கனியைப் பார்த்தவண்ணம் அமர்ந்து புத்தகம் வாசிப்பேன். இப்போதும் அப்படித்தான்.

வாசிப்பதற்கென்றே மெல்லிய ஒளி தரும் விளக்கையும் சொடுக்கிவிட்டேன். வாசிக்கலானேன். 'அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல' என்ற புத்தகம், எல்லாமே குறுங்கதைகளாம். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி சுவாரஸ்யமாக இருப்பதாக சொன்னதால், வாங்கினேன்.

உண்மையில் அப்படித்தான் இருந்தன. பல குறுங்கதைகளின் முடிவை யூகிக்க முடியவில்லை. போதாக்குறைக்கு பேய்க்கதைகளையும் சேர்த்திருக்கிறார் எழுத்தாளர். அவரசப்பட்டு இந்த நேரத்தில் இதை வாசிக்க ஆரம்பித்தது மனதில் லேசான அச்சத்தைக் கொடுத்தது. ஆனாலும் நான் தைரியசாலி என்பதால் நெற்றியில் கொஞ்சமாக விபூதியைப் பூசிக்கொண்டேன். மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன். சொல்லி வைத்தார்ப்போல இப்போதும் பேய்க்கதைதான் வந்தது.

வாசிப்பதை நிறுத்திவிட்டேன். ஏதோ ஒன்று பின்னால் இருப்பதை உணர்ந்தேன். என்னால் அசைய முடியவில்லை. இதயம் வேகமாக துடிக்கலானது. மெல்ல அதன் அசைவு தெரிந்தது. எந்தக் கடவுளைக் காப்பாற்ற அழைப்பது என முடிவெடுப்பதற்குள் உஷ்ணக்காற்று என் மேல் படர்ந்தது. முதன் முறையாக இதை அனுபவிக்கிறேன். எழுந்து ஓட நினைத்தேன். முடிய்வில்லை. கால்களை யாரோ பற்றிக்கொண்டார்கள்.

நல்லவேளையாக என் அறைக்கதவு திறந்தது. மனைவிதான். "என்னங்க இன்னும் தூங்கலயா..? மணி என்ன ஆச்சி.. வாங்க... வந்து தூங்குங்க..."

சொல்லிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள். இதயம் இயல்பானது. கை கால்களை அசைக்க முடிகிறது. புத்தகத்தை மூடிவிட்டு உடனே எழுந்தேன். அறைக்கு விரைந்தேன். நல்ல வேளையாக மனைவி காப்பாற்றிவிட்டாள்.

என்னது மனைவியா..? எனக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே...!!!!

பிப்ரவரி 02, 2022

-'சிங்கியா மங்கியா' என்றொரு நாடு-

பலரும் நன்கு அறிந்த சிறு நாடு. பரப்பளவு எவ்வளவு இருந்தாலும் நாட்டையும் நாட்டு மக்களையும் நல்வழிப்படுத்த அரசாங்கம் அவசியம்தானே. அங்கும் ஓர் அரசாங்கம் அமைந்திருந்தது.

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த குற்ற விசாரணையால் 'சிங்கியா மங்கியா' நாடு மிகவும் பிரபலமானது. அரசாங்கப் பணியில் இருக்கும் முக்கிய அதிகாரியும் அரசியல்வாதியுமானவர் செய்த பண மோசடி அம்பலத்திற்கு வந்தது. என்னதான் அரசாங்கத்தின் முக்கிய பணியில் உள்ளவரென்றாலும் பொது மக்களின் பணத்தை கையாடல் செய்தது அந்நாட்டில் பெருங்குற்றம்.

'சிங்கியா மங்கியா' நாட்டு அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம். மக்களை எப்போதும் குழப்பத்தில் விடாத அரசாங்கம். மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் அரசாங்கம்.

அந்த அரசாங்கம், இவ்வாறான குற்றத்திற்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமையவேண்டும் என்ற ஒற்றைக்குறிக்கோள் கொண்டவர்களின் கூடாரம்.

அதிகப்படியான விசாரணைகள் ஏதுமின்றி, உடனடி தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசாங்க அதிகாரியும் அரசியல்வாதியுமாகியவரின், அனுமதியின்றி அவர் செய்த பண மோசடிகளைக் கண்டறிந்த  அவரின் பணியாளருக்கு ஆயுள்  தண்டனை கிடைத்தது. என்ன இருந்தாலும் பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் மீதான நன்மதிப்பு குலையக் காரணமான நபர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படதான் வேண்டும் என்றும் ஆளுக்கு ஆள் கூறிக்கொண்டார்கள்.

அதன் பின் எந்தக் குற்றமும் 'சிங்கியா மங்கியா'வில் பதிவாகவில்லை என்பது தனிவரலாறு.

அந்த தீர்ப்பிற்கு பிறகுதான் 'சிங்கியா மங்கியா' என்ற நாடு காலப்போக்கில் காணாமல் போனது. யாருக்கு தெரியும் அந்நாடு இப்போது வேறொரு பெயர் வைத்துக்கொண்டிருக்கலாம்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்
#குறுங்கதை

பிப்ரவரி 01, 2022

- எளிய கேள்விகள் எப்போதும்... -

"அம்மா, அப்பா அந்த ஆண்டிகிட்ட ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தாங்க.."

" யாருங்க அது....?"

###############

"குட் மார்னிங். இது என்னோட ரெசிமி"
"அது அங்கயே இருக்கட்டும், உங்களுக்கு முன் அனுபவம் இருக்கா..''
" இதான் சார் என் முதல் இண்டர்வியூ"
"நான் அதைக் கேட்கல...."

###############

"சத்தியமா நான் உன்னைத்தான் கல்யாணம் செய்துக்குவேன். இப்போ இந்தக் குழந்தை வேண்டாமே..?

###############

அவள் "அன்னது தங்கச்சியா, தங்கச்சிதான் இப்படி செல்பி புடிச்சி அனுப்புமா?"

###############

" அவர் ரொம்ப நல்லப் பையன். அவரைத்தான் நான் காதலிக்கிறேன்"
"அவர் நல்லப்பையன் தான், அவருக்கே ஒரு பையன் இருக்கான் தெரியுமா?"

###############

அவன் " ஆமா ஏன் எப்பவும் போன் பாஸ்வெட்டை மாத்திகிட்டே இருக்க...?"

###############

"இன்னுமா நீ என்னைய  நம்பற..."

##############

" இப்பதான் இன்னொரு ஆளுக்கு உதவியா கொடுத்தேன். ஏன் டா.. நேத்தே கேட்டிருக்கலாமே...?"

##############

எளிய கேள்விகள் எப்போதும் ஆபத்தானவை......


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்