- காரண மாயிரம் சூழ -
சகாவே
உன் மொழி எனக்கு
புரியவில்லைதான்
நீ சிரித்தால்
நான் உன்னை சந்தேகப்படுவேன்
நீ முறைத்தால்
நான் உன்னை வெறுப்பேன்
நீ ஒதுக்கினால்
நான் உன்னை விலக்குவேன்
நீ அழுதால்
உன் கண்கள் கலங்கினால்
நானும் உன்னுடன் அழுவேன்
இருவரும்
கட்டியணைத்து கொண்டு
கொஞ்ச நேரம் அழுவோம்
உன் துயரத்திற்கு நானும்
என் துயரத்திற்கு நீயும்
மாற்றி மாற்றி
அழலாம்
யாரின் கண்ணீர்
சீக்கிரம் வற்றுகிறதென
போட்டி வைத்துக்கொள்ளலாம்
இருவருமே
ஒரே சமயத்தில்
வெற்றி பெற
கண்ணீர்த்துளிகளை
ஆளுக்கு சரிசமமாக
பங்கிட்டு கொள்வோம்
துயரத்தைதான்
பங்கிட முடியாது
அது தரும் வலியையும்
வலி உற்பத்தி செய்யும்
கண்ணீரையும் நாம்
ஆளாளுக்கு எடுத்துக்கொள்வோம்
என் சகாவே
இது எவ்வளவு
பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது
என்ன சகாவே
நாம் அழுவதைத் தவிரவும்
வேறு
பைத்தியக்காரத்தனம் உண்டா
இதில்
மறைந்திருக்கும் மாயவித்தை
என்னவென்றால்
வலியே அழுகைக்கான காரணம்
அழுகையே வலிக்கான நிவாரணம்
0 comments:
கருத்துரையிடுக