பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 28, 2021

- நிழற்குடை -

 #குறுங்கதை 2021 - 9

- நிழற்குடை -


"குழந்தைகள்னா அப்படிதான் இருக்கும்..."

"இல்ல டாக்டர்....."

"பாருங்க குமார். கவலைப்பட ஒன்னுமில்ல. முதல் முதலா நிழலை பார்க்கற குழந்தைங்களுக்கு பயம் ஏற்படறது இயல்புதான்...."

"ஆனா டாக்டர், இவன் சின்ன குழந்தை இல்லையே..."

    "உங்களுக்குத்தான் அப்படி தோணுது. எங்களுக்கு குழந்தைகள்தான். அப்படிதான் நாங்க அணுக முடியும். எனக்கு என்னம்மோ உங்களைதான் செக் பண்ணனும்னு தோணுது.."

    மேற்கொண்டு பேச்சை இருவரும் வளர்க்கவில்லை. அது தேவையில்லாத சிக்கலைக் கொடுக்குமென குமார் தெரிந்துக்கொண்டார். வெளியில் காத்திருக்கும் மகனை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.

" சிவா... டாக்டர் மருந்து கொடுத்திருக்காங்க... சாப்டனும் சரியா.."

" எனக்கு மட்டும்தான் கொடுத்தாரா..? "

" இப்படிலாம் பேசக்கூடாதுன்னு சொல்லிருக்கேன் தான..."

" என் பிரண்டுக்கும் தானப்பா காய்ச்சல்.. அவன் பாவமில்லையா.. இருமிகிட்டே இருக்கான்..."

    இருவரும் வீட்டிற்குள் வந்தார்கள். அங்கும் இங்கும் சில உருவங்கள் கிடந்தன. ஓர் உருவம் ஆர்வமாய் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கிறது. ஓர் உருவம் கைபேசியில் எதையோ நோண்டிக் கொண்டு இருக்கிறது. ஓர் உருவம் கண்ணாடி முன் தன்னை அழகுப்படுத்தி கொண்டிருக்கிறது. வந்தவர்களை யாருமே கவனிக்கவில்லை.

    இருவரும் எந்த சத்தமும் எழுப்பாமல் மெல்ல நகர்ந்தார்கள். சுவரின் ஓரத்தில் அவர்களுக்கான இடத்தில் கரையலானார்கள். ஒரு சிறுவன் இருமலுடன் சுவர் பக்கம் வருகின்றான். அவனைப்போலவே அசைந்துக் காட்டிக்கொண்டிருந்தது சிறு நிழல்.

    வழக்கம் போல அந்த நிழலைப் பார்த்து பேசத் தொடங்கினான். சுவரில் இருந்து குரல் வந்தது,
"டாக்டர் உனக்கு மருந்து கொடுக்கலயாம்... சாரி பிரண்ட்.. என் மருந்தை நீ சாப்டுக்கோ...."

- கடைசி காபி -

#குறுங்கதை 2021 - 8


- கடைசி காபி -

        எத்தனை நாட்கள்தான் தாங்கிக்கொள்ள முடியும். இதுதான் முடிவு. வேறு வழி இல்லை. கணவனிடம் சொல்லியும் பலனில்லை. இதுவெல்லாம் மாமியார் மருமகளுக்கு நடப்பதுதான். கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என்று விட்டுவிட்டார்.

       வேலைக்கு போகக்கூடாது. ஆனால் வீட்டில் எல்லா வேலையையும் ஒருவரே செய்து முடிக்க வேண்டும். மருமகள் போல இல்லாமல் வேலைக்காரியை விடவும்
கீழாக நடத்துகிறார். மூச்சுக்கு முன்னூறு தடவையல்ல ஒவ்வொரு மூச்சுக்கும்,

"சாந்தா...!",

"சாந்தா...!!",

"சாந்தா..!!!" தான்.

    அவளும் எதைத்தான் செய்து முடிப்பாள். ஒரு வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னமே பல வேலைகளின் பட்டியல் வந்துவிடும்.

    எந்த கடுப்பில் இருந்தாரோ, காலையில் இருந்து சாந்தாவை படுத்தி எடுத்துவிட்டார். அவளால் இனி முடியாது. முடியவே முடியாது. வயதாகிவிட்டது. விட்டுக்கொடுக்க நினைத்தாள். ஆனால் அந்த எல்லையை மாமியார் தாண்டி விட்டார்.

    கண்கள் கலங்கிய நிலையில் கனவுகள் கலைந்து விட்ட நிலையில் காபியில் விஷத்தைக் கலக்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கு தேவை நிம்மதி. அது கிடைத்தால் போதும் என்கிற நிலைக்கு வந்துவிட்டாள். காபியைக் குடிக்க எடுத்தாள்.

"சாந்தா...!"

"சாந்தா...!!"

"சாந்தா.....!!!"

    மாமியார் ஆரம்பித்துவிட்டார். கடைசியாக அவருக்கு எதையாவது செய்துவிட நினைத்தாள். அருகில் சென்றாள்.

    கையில் காபி இருப்பதை பார்த்த மாமியார், "இதுக்குத்தான் கூப்டேன். பரவாயில்லையே. கையோடவே எடுத்து வந்துட்ட... மருமகள்னா இப்படிதான் இருக்கனும்... கொடு.."

    முதல் முறையாக மாமியாரின் பாராட்டுகள் அவளை சிறகடிக்க வைத்தது. காபியை அவரிடம் கொடுத்துவிட்டு. சமையலறைக்கு வந்துவிட்டாள். அடுத்து மாமியாரை மேலும் அசத்த சமைக்க ஆரம்பித்தாள்.

    அதோடு, காபியை பற்றி ஏதாவது சொல்லுவார் என காத்திருக்கிறாள். மாமியாரிடமிருந்து எந்த சத்தமும் வரவில்லை.

புத்தகவாசிப்பு_2021 ‘கவிதையின் கையசைப்பு’

புத்தகவாசிப்பு_2021 ‘கவிதையின் கையசைப்பு’

தலைப்பு –‘கவிதையின் கையசைப்பு’

வகை – கட்டுரைகள்

எழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன்

வெளியீடு – தேசாந்திரி

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

 

எஸ்.ரா எப்போதும் எனக்கு விருப்பமான எழுத்தாளர். மனம் சோர்ந்த போதும் அவரது எழுத்துகளை வாசிக்கையில் மீண்டு வரலாம். தன் அனுபவத்தை வாசகர்கள் மனதில் கடத்தி அனுபவத்திற்கு இன்னொரு பரிணாமத்தைக் கொடுக்ககூடியவர். தனக்கென்ற ஒரு தனி வாசக பரப்பை உருவாக்கிக்கொண்டவர்.

‘கவிதையின் கையசைப்பு’ கட்டுரை தொகுப்பு 2019-ல் வெளிவந்தது. தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். உலகக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைகள் விகடன் தடம் இதழில் தொடராக வந்தது குறிப்பிடத்தக்கது. 12 பிறமொழி கவிஞர்களையும் அவர்களின் கவிதைகளையும் நமக்கு இக்கட்டுரைகள் வழி அறிமுகம் செய்கின்றார்.

கவிஞர்கள் தேவதச்சன், சமயவேல் இருவரும் இக்கட்டுரை தொகுப்பில் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார்கள். ஒவ்வொரு கட்டுரைக்கு நிறைவாக கவிஞர்களின் கவிதைகள் இடம்பெறுகின்றன.

பிறமொழி கவிதைகளை புரிந்துக் கொள்ள அக்கவிஞர்கள் பற்றிய புரிதல் தேவை என்பதை எடுத்துக்காட்டுகின்றார். அதோடு அவர்களின் பின்னணியைப் பற்றியும் தெரிந்துக் கொள்ளவேண்டியதின் அவசியத்தை அழகாய் காட்டியுள்ளார் எஸ்.ரா.

கட்டுரை முழுக்கவும் கவிதைகளை எப்படி அணுகுவது கவிஞர்களின் மனநிலையை எது நிர்ணயம் செய்கின்றது போன்றவற்றை முக்கியமான கேள்விகளுக்கு விடைகளை தந்துக்கொண்டே இருக்கின்றார். “கவிதை, எப்போதும் நாம் அறிந்த உலகை அறியாத உலகமாக்குகிறது. கூடவே, அறியாத உலகை நெருக்கமான அனுபவமாகவும் மாற்றுகிறது. கண் வழியே பதிவாகும் அனுபவங்களை, சொற்களைக் கொண்டு சிதறடிக்கிறது.” என்கிறார்.

12 கவிஞர்கள் குறித்து பேசும் போது, அவர்கள் விரும்பிய அவர்களுடன் எழுதிய இன்ன பிற கவிஞர்களையும் சிறு சிறு குறிப்புகளாக அறிமுகம் செய்கின்றார்.

 பிறமொழி கவிதைகளில் சொல்லப்படும் அன்றாட வாழ்க்கையை வாசிக்கையில் இதில் கவிதையாவதற்கு என்ன இருக்கின்றது என்கிற சந்தேகம் எழுவது இயல்பு. புத்தகத்தில் இடம்பெற்ற கட்டுரையில் இருந்து ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம்.

‘மேஜையின் மீது வைக்கப்பட்ட ரொட்டி

ஒரு குவளை நீர்

அல்லது ஒரு துளி உப்பு

போன்றதே கவிதையும்’

    என்கிறார் ரூபஸின் என்னும் கவிஞர். இக்கவிதையில் பெரிதாக என்ன வந்துவிட்டது என்கிற சிந்தனை வரலாம். இக்கவிஞருக்கு 1998-ல் புதிதாக கண்டறியப்பட்ட சிறிய கிரகம் ஒன்றிற்கு ‘ரூபஸ்’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஒரு கவிஞனுக்குச் செய்யப்பட உயரிய மரியாதை இதைவிட வேறு என்ன இருக்க முடியும் என்கிறார் ஆசிரியர். அவரின் பின்னணி, அவர் வாழ்ந்த சூழல் , அவரின் சமூகம் எதிர்கொண்ட சிக்கல்களை தெரிந்தவர்களுக்கு மேற் சொன்ன அவரது கவிதையின் வரும் ரொட்டியும் குவளை நீரும், உப்பும் அத்தனை எளிய பொருள் அல்ல என புரிந்துவிடும். இவ்வாறாக கட்டுரை முழுக்கவும் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியவற்றின் அடிப்படைகளை விளக்கமாகச் சொல்லிக்கொண்டேப் போகின்றார் ஆசிரியர்.

            ‘கவிதையின் கையசைப்பு’ என்னும் இக்கட்டுரை தொகுப்பு, கவிதை மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு நிச்சயம் பயனான புத்தகம். வாசித்தப்பின் அக்கவிஞர்களின் பிற கவிதைகளை தேடி வாசிக்க வைக்கின்றது.

 

#தயாஜி

 

ஏப்ரல் 26, 2021

'வான் பறப்போம் வா'சகோ
இவர்கள் தரும்
பாராட்டும் பட்டமும்
அறிவுரையும் அங்கிகாரமும்
விருதும் விளம்பரமும்
தங்கமாய் ஜொலிப்பவை

தங்கக்கவசங்களை
அழகு பார்த்து
அடகு வைக்கலாமே தவிர
அச்சுமை சுமந்து
வான் பறக்க முடியாது

வலி துயர் சுமந்தும்
பறந்துப்பழகிய நம்
சிறகுகள்
தங்கம் சுமக்க தயாரில்லை

அவர்களை அவர்களாகவே
விட்டுவிட்டு
வழக்கம் போல
துயர் சுமந்தே
வான் பறப்போம் வா

உதிர்ந்து விழும்
நம்
உதிரச்சிறகுகளை வைத்துக்
கொண்டு ஒப்பாரி
வைக்கட்டும்
நம் கண்ணீர் மழையில்
இவர்கள் நனைந்துக் கொள்ளட்டும்

நம் போன்றவர்களுக்கு புது
நம்பிக்கை துளிர்க்கட்டும்....

அன்புடன் #தயாஜி

'பூக்கும் கவலைகள்'


பெரிதாக
கவலைகளை சூடிக்கொள்ள
வேண்டாம்

தானாய் மலர்ந்து
தானாய் மடியும்
கவலைகளுக்கு ஏன்
இடம் கொடுக்க வேண்டும்

யார் ஊற்றும்
நீருக்கும்
வேர் விடும்
வெட்கம்கெட்ட கவலைக்கு
ஏன் மதிப்பளிக்க வேண்டும்

உதிரும் இலைகள்
போல
அவிழும் மொட்டுகள்
போல
அதுவே அதுவாக
அடுத்தடுத்து நகர்ந்துவிடும்

நாம் எதற்கு
தலை கொடுக்க வேண்டும்
அதற்குள்ளே தலையிட வேண்டும்

தானாய் முளைக்கும்
புல் போல
வீணாய் முளைக்கும்
கவலைக்கு
முகம் காட்ட வேண்டாம்

மாறும் பருவம்
போல
தானும் மாறும்
கவலைக்கு மதிப்பளிக்கனுமா
நம் மதிப்பிழக்கனுமா

நிழலில் இருந்து
நகர்ந்திருப்போம்
நிச்சயம் மாறும்
நடந்திருப்போம்...

அன்புடன் #தயாஜி

புத்தகவாசிப்பு_2021 ‘மேற்கின் குரல்; உலக இலக்கியக் கட்டுரைகள்.’

புத்தகவாசிப்பு_2021 ‘மேற்கின் குரல்; உலக இலக்கியக் கட்டுரைகள்.’

எழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு - தேசாந்திரி பதிப்பகம்
பக்கங்கள் - 108 பக்கங்கள்
புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +6016 - 473 4794 (மலேசியா)

    எஸ்.ராவின் 'மேற்கின் குரல்'. உலக இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பு. பல்வேறு தலைப்புகளில் 24 கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன.


    எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து அது குறித்து பேசுகின்றோம் விவாதிக்கின்றோம். ஆனால் அத்தகைய படைப்பை உருவாக்க அந்த படைப்பாளர் மேற்கொண்ட சிக்கல்கள் எழுத்தாளரின் வாழ்க்கை பின்னனி போன்ற பல தகவல்களை இந்நூலில் எஸ்.ரா பகிர்ந்துள்ளார். இலக்கியம் மட்டுமின்றி சினிமா மீது ஆர்வம் கொண்டவர்கள் அத்துறையில் கவனிக்க வேண்டிய கட்டுரைகளையும் தொகுப்பில் இணைத்துள்ளார். சத்யஜித் ரே, அகிரா குரசேவா, சிட்னி லூமட் , வெர்னர் ஹெர்சாக் போன்றவர்கள் அதில் அடக்கம்

    வழக்கம் போல பல எழுத்தாளர்கள் பல புத்தகங்கள் என நேர்த்தியாக அறிமுகம் செய்துள்ளார். ஒரு புத்தகம் பல புத்தகங்களை தேட வைக்கிறது.ஏப்ரல் 23, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘வேட்டுவம் நூறு’

புத்தகவாசிப்பு_2021 ‘வேட்டுவம் நூறு’

தலைப்பு –‘வேட்டுவம் நூறு’

வகை – கவிதை

எழுத்து – மௌனன் யாத்ரிகா

வெளியீடு – லாடம் வெளியீடு

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

 

கவிஞர் மௌனன் யாத்ரிகாவின் கவிதைகளை அவ்வபோது முகநூலில் வாசித்துள்ளேன். அது கொடுத்த உணர்விற்கும் இப்போது புத்தகமாக வாசிக்கையில் கிடைக்கும் உணர்விற்கும் பெரிய வித்தியாசத்தை உணர முடிந்தது. வேட்டுவம் (hunting) சொல்லும் கவிதைகளின் நாமும் சேர்ந்து வேட்டைக்கு கிளம்பிவிடுகின்றோம். தேர்ந்த வேட்டைக்காரரின் வழிகாட்டுதலில் நாமும் வேட்டையில் ஈடுபடுகின்றோம். வேட்டை வாழ்வியல் குறித்த முழு சித்திரத்தையும் பார்த்துவிட்ட அசதியில் வாசித்து முடிக்கும்போது களைப்பும் திருப்தியும் வந்துவிடுகின்றது. ஆனால், திருப்தி கொள்ள வைக்காதபடிக்கு குழம்படி சந்தங்கள் காதில் கேட்கின்றன. அதுதான் இக்கவிதைகளின் தன்மையென நினைக்கிறேன்.

இந்த கவிதை தொகுப்பில் ஆழந்து சிந்திக்க வைத்த கவிதைகள் போலவே அதிலுள்ள ஓவியங்களும் அதன் பங்கை செய்ததுள்ளது. கவிதையை வாசிக்க நேரம் ஒதுக்குவது போல ஓவியங்களையும் கவனித்து அதில் பயணிக்க வேண்டியுள்ளது. கவிதை கொடுக்கும் அனுபவமும் ஓவியங்கள் கொடுக்கும் அனுபவமும் வெவ்வேறாக தொடங்கி ஒரு மையப்புள்ளியை அடைந்துவிடுகின்றது. கவிதை தொகுப்பிற்கு பயன்படுத்தப்படும் ஓவியங்களோ புகைப்படங்களோ எத்தனை அவசியமானவை. இன்னமும் ஏதோ வைக்க வேண்டும் போலவே அவற்றை பயன்படுத்திக் கொள்கிறார்கள். சொல்லப்போனால் பல கவிதை புத்தகங்களில் எழுதப்பட்ட கவிதைகளை விடவும் அதிலுள்ள ஓவியங்களும் புகைப்படங்களும் கவிதைகள் செய்யவேண்டிய வேலையை செய்துவிடுகின்றன.

‘வேட்டுவம் நூறு’ முகப்பு அட்டையில் நான்கு வேட்டைக்காரர்கள் பன்றியை வேட்டையாடுவதாக காட்டப்படும். புத்தத்தை வாசித்து முடிக்கையில் அந்த நால்வருடன் நாமும் சேர்ந்து ஐந்து வேட்டைக்காரர்கள் ஆகிவிடுகின்றோம். ‘ஏலே பங்காளி’ என ஒவ்வொரு முறையும் கவிதையில் கவிஞர் அழைக்கும் போதும் எழுந்து அவர்களுடன் ஓடத்தோன்றுகின்றது.

இனி கவிதைகளுக்கு செல்வோமா…

வேட்டை என்பது உயிர்களைக் கொன்று தின்பது மட்டுமே என இன்று மறுவி விட்டது. ஆனால் அது நம் மூதாதையரின் வாழ்வியல் என்பதை இக்கவிதைகள் நினைவுப்படுத்துகின்றன. அந்த மனிதர்களிடம் இருக்கும் அன்புதான் பேரன்மாக வடிகிறது என கண்களைக் கலங்கச் செய்கின்றன இக்கவிதைகள்.

கொல்வது பாவமெனில் உலகின் உணவு சங்கிலியை உடைப்பது பெரிய பாவமில்லையா என கேட்க வைக்கிறது. ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருந்தவரை எல்லாமே நல்லபடியாக இருந்தது. ஆக்கி சமைக்க ஆரம்பித்த பின்னரே எல்லாம் உடையத்தொடங்கின. பணம் உள்ளே நுழையும் போது எல்லாமே சிதைந்துப் போயின. ஆக முன்னேற்றமே தவறா என்றால்; இல்லை. ஆனால் அதற்கு நாம் பலிகொடுத்தவைகளுக்கு கொஞ்சமேனும் நன்றி காட்ட வேண்டாமா?

இத்தொகுப்பில் உள்ள நூறு கவிதைகளுக்கும் தலைப்புகள் இல்லை. வேட்டைக்குச் செல்பவன் இரையை முன் தீர்மானமா செய்கிறான். வேட்டைக்குத்தானே செல்கிறான். அவனுக்கான இரையை பயணத்தின் போதுதானே காண்கிறான். அவ்வாறே தலைப்பற்ற கவிதைகளை வாசிக்கையில் நமக்கான அனுபவம் அதன் வாசிப்பில் கிடைக்கின்றது. அதுவே தலைப்பாக மாறிவிடுகின்றது.

‘குருதி வீச்சம் மூக்கில் ஏறக்

கறியைத் தீயில் வாட்ட வேண்டும்…..’

 என்று தொடங்கும் முதற்கவிதை இவ்வாறாக முடிகின்றது;

‘வேட்டைக் கருவியைத் தூக்குடா என் பங்காளி

காட்டில் கொட்டிக் கிடக்குது வாழ்க்கை…..’

அவ்வரிதான் நம்மை வேட்டைக்கு அழைக்கிறது. சொல்லப்போனால் அக்கவிதைதான் காட்டின் வாசலாக அமைந்திருக்கிறது.

            காடு, நம் மூதாதையர்களோடு எத்தனை நெருக்கமானது. எந்த அளவிற்கு அதன் தாய்மையும் அன்பும் கருணையும் கண்டிப்பும் நிறைந்தது என பல கவிதைகளில் காட்டுகின்றார். அதில் காடென்னும் தாயின் இழப்பும் வலியுமே கூட இருக்கிறது.

‘இன்று உனக்கு இவைதான் இரையென்று

காசு சில நாற்றத்தை அனுப்பும்

அந்த மனத்தைப் பின்தொடர வேண்டும்’ (பக்கம் 20)

 

‘தன் ஆற்றாமையை நம்மிடம் மட்டுமே

காடு இன்னும் காட்டவில்லை

தன் கண்ணீரை நம்மிடம் மட்டுமே அழுது கொட்டவில்லை

களைப்பைப் பார்க்காதே மேலும் தொடர்ந்து நடப்போம்

காட்டுக்கு நம் வயிற்றின் சுருக்கம் தெரியும்…’ (பக்கம் 21)

 

‘புலி தாண்டும் அளவுக்கு உயர்ந்த வேலிகள் இருந்த காடு

ஓர் எலி தாண்டும் அளவுக்குக்கூட இல்லாதிருப்பது காண்

இது சுருங்கிவிட்ட வேக்காடு…’ (பக்கம் 51)

 

‘ஒரு புழுவைப்போல் ஞானம் கொள்

காசு பசியாலும் தாகத்தாலும் ஒருபோது நம்மைச் சாகவிடாது..’ (பக்கம் 66)

 

‘கன்ணுக்குத் தெரியாத ஒரு வேலியைக்

காட்டில் கட்டத் தெரிந்தவனே வேட்டுவன்

காடு சில நேரம் விலங்கின் பக்கமும்

சில நேரம் நமது பக்கமும் நிற்கும்

விலங்கு தப்பிக்கும் எனில் அதற்குக்

காடு உதவுயிருக்கிறது என்று பொருள்

இரையாகி விட்டதெனில்

காடு நம் தலைமை வேட்டுவனாய்

மாறியிருக்கிறதென்று பொருள்..’ (பக்கம் 85)

மனித வளர்ச்சியையும் வனத்தில் அழிவையும் தன்  கவிதையில் ஆவணம் செய்கிறார் கவிஞர். அது;

ஆலைக் கழிவுகள் புதிய வேட்டைக் கருவிகளாகிவிட்டன

சுற்றி வளைக்கப்படாமல், துரத்தப்படாமல்,

வீழ்த்தப்ப்படாமல் விலங்குகள் மடிகின்றன. (பக்கம் 77)

வளர்ச்சியடைந்த மனிதன் காடுகளில் நடமாடுவது எந்த இடத்தை அழிக்கலாம் எந்த மரத்தை பிடுங்கலாம் எத்தனை இலாபம் சம்பாதிக்கலாம் என்பதற்காகத்தான். நம் மூதாதையர்கள் காட்டில் எப்படி நடமாடினார்கள் என்பதனை;

‘இந்தக் காட்டின் மீது

நெஞ்சு நிறையக் காதல் உண்டு

வயிற்றுக்கு மீறிய ஆசையோடு

இதுவரை இங்கு வந்ததில்லை…’ (பக்கம் 91)

அதே கவிதையில் அவர்கள் உணவுச்சங்கிலிக்கு கொடுத்த மரியாதையையும் காட்டிற்கு காட்டும் நன்றியையும் இப்படிச் சொல்கிறார்.

‘இது காடுபோல் விருந்து கிடக்கும் தெய்வத்தின் இதயம்

இதோ தோள்மீது கிடக்கிறது அதன் பெருங்கருணை

பதுக்கி வைத்துக் கொண்டு தின்னப் பழக்கம் இல்லாத நாம்

அந்தச் சிறிய விலங்கு புல் கொரிப்பதைக்

கொஞ்ச நேரம் ரசிப்போம் வா.. (பக்கம் 91)

இப்படியாக பல கவிதைகளை இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது. வாசிக்க வாசிக்க வனத்தின் நடுவில் நிற்பது போலவும் நம்மைச் சுற்றி மிருகங்கள் உலாவுவதைப் போலவும், சுத்தமான காற்றை தாவரங்கள் தந்து கொண்டிருப்பதாகவும் தோன்றுகின்றது. ஒரு வேட்டை பயணம் போல இக்கவிதை வாசிப்பு அமைந்துவிட்டது. நமது வாழ்வையும் அதன் சரிவையும் நம் கையாலாத்தனைத்தையும் சொல்லும் கவிதைகளால் நம் மூதாதையர்களுக்கும் ஆரண்யத்திற்கும் மட்டியிட்டு வணக்கம் சொல்லவே தோன்றுகின்றது. வேட்டை என்பது உயிர் எடுப்பதல்ல ஒன்றுடன் ஒன்றாய் தொடர்பு பற்றி வாழ்வது. உண்மையில் அதுதான் வாழ்வது. இப்போதெல்லாம் நாம் வாழ்கிறோமா என்ன? சமைப்பதற்காகவே கருவாக்கி உருவாக்கி வளர்க்கும் கோழிகள் போன்றவற்றை தின்று தின்று தொப்பையில் தொலைந்துக் கொண்டிருக்கின்றோம்.

வாசிக்க வேண்டிய கவிதை புத்தகம் என சொல்லும் அளவிற்கு தொகுப்பினை வழங்கியுள்ள கவிஞர் மௌனன் யாதிரிகாவிற்கு அன்பும் நன்றியும். முன்னுரையில் அவர் சொல்லியுள்ளது போல நம்முள்ளும் நம் மூதாதையரின் ஆவி புகுந்து கவிதை வழி காட்டில் சஞ்சாரிக்க வைத்துவிட்டது.

மீண்டும் செல்ல முடியாத காலத்தின் நினைவுகளுக்கு மரியாதை செய்யும் விதமாக வீட்டிலாவது பச்சையம் வளர்ப்போம். அதன் அருகில் நின்று கண்கள் மூடி தியானித்திருப்போம்.

- தயாஜி


ஏப்ரல் 21, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘பெர்னுய்லியின் பேய்கள்’

புத்தகவாசிப்பு_2021 ‘பெர்னுய்லியின் பேய்கள்’

தலைப்பு –‘பெர்னுய்லியின் பேய்கள்’
வகை – நாவல்
எழுத்து – சித்துராஜ் பொன்ராஜ்
வெளியீடு – அகநாழிகை
புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

‘பெர்னுய்லியின் பேய்கள்’ நாவலை எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள் எழுதியுள்ளார். இந்நாவல் 2016-ம் ஆண்டு வெளிவந்தது. இது    ஆசிரியரின் முதல் நாவல்.  சிங்கப்பூர் பாரம்பரிய பேய்க்கதைகளை அடிப்படையாகக் கொண்ட நாவல். பேய் இருக்கிறதா இல்லையா என்கிற வழக்கமான கேள்வியை பின்புலமாகக் கொண்டு வழக்கத்திற்கு மாறாக நகரும் நாவல். 

பேய் ஓட்டுகின்றவரின் மகளான மேனன், ‘பாரம்பரிய சிங்கப்பூர் பேய்கக்கதைகள்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்யும் புஷ்பலதா, காலேஜ் படிக்கும் தாரா அவளது தோழி, பந்தினி என்னும் இறந்தவர்களுடன் பெசுகின்ற ஊடாடிகளின் குடும்பத்தில் பிறந்த ஆப்பரிக்க  பெண், பீட்டர் யூ, ஹுசேன் ஆத்தா போன்ற குறைந்த கதாப்பாத்திரங்களச் சுற்றியே   நாவல் நகர்கின்றது.

ஆவிகள் பேய்கள் போன்ற அமானுஷ்யங்களை மட்டுமல்ல அறிவியல் தகவல்களையும் இடத்திற்கு ஏற்றார் போல ஆசிரியர் கையாண்டுள்ளார். ஆனால் இரண்டையும் சம அளவில் பயன்படுத்திய பின்னணியில் ஒரு காரணத்தையும் வைத்திருக்கின்றார். 

நம்மில் பலருக்கு தெரிந்த ஒரு கதை இருக்கிறது. ஒரு குறும்புக்காரர் தான் சட்டைப்பையில் வைத்திருக்கும் குருவி உயிடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா    என சொல்லச்சொல்லி ஒரு போதகரிடம் கேட்பார். அவர் அந்த குருவி உயிருடன் உள்ளது என்று சொன்னால் அந்த நபர் குருவியைக் கொன்றுவிடுவார். போதகர், அந்த குருவி இறந்துவிட்டது என சொன்னால், அந்நபர் அந்த குருவியை உயிருடன் எடுப்பார். மொத்தத்தில் அந்த போதகரை ஏமாற்றுவதுதான் அந்த நபரின் திட்டம்.

 அதோ போல ஒரு விளையாட்டை இந்நாவலில் பார்க்க முடிகின்றது. பேய் என்பது இல்லை என நாம் நினைக்கும் போது ‘இதோ என்னமோ இருக்கிறது’ என பயம் காட்டுகிறார். பிறகு பேய்கள் பிசாசுகள் எல்லாம் இருக்கிறது என நாம் நினைக்கும் போது ‘அப்படியெதுவும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை’ யோசிக்க வைக்கின்றான். இந்த விளையாட்டு நாவலின் கடைசி வரி வரை தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.

பேய்க்கதைகளில் பயம் காட்டுவது மட்டும் முக்கியமல்ல வாசிக்கின்றவர்களை பயத்தில் வைத்திருப்பதுதான் முக்கியம். அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க வைத்து அதனை நகர்த்தி வைத்துவிட்டு அதற்கு ஈடாக இன்னொன்றை காட்டுவது வாசிப்பு சுவாரஸ்யத்தை கூட்டுகின்றது. 

வழக்கமான பேய்க்கதைகளில் இருந்து இந்த நாவல் மாறுபட்ட வாசிப்பிற்கு ஏற்றது. முதலில் ஏமாற்றம் தரலாம். ஆனால் கதை நகர நகர நம்மையும் உள்ளுக்குள் இழுத்துவிடுகிறது. நம்மையும் தேட வைக்கின்றது. நாவலில் வரும் ஒவ்வொருவரின் மீதும் நம் கவனத்தை கொடுக்க வைக்கின்றார் ஆசிரியர்.

 வித்தியாசமான கதைக்களம். மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் அதன் சிக்கல்களையும்  எதார்த்தமாக காட்டியுள்ளார். 

நாவல் சில இடங்களில் சுஜாதாவின் ‘கொலையுதிர்காலம்’ நாவலை எனக்கு நினைவுப்படுத்தியது. ஆனால்  ‘பெர்னுய்லியின் பேய்கள்’ முற்றிலும் வேறொரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்ததை மறுப்பதற்கில்லை.

#தயாஜி

ஏப்ரல் 19, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி’

புத்தகவாசிப்பு_2021 ‘தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி’

தலைப்பு – தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி’

வகை – கவிதை

எழுத்து – கவிஞர் கலாப்ரியா

வெளியீடு – டிஸ்கவரி புக் பேலஸ்

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794

 

கவிதையை எழுதிவிடலாம். ஆனால் வாசிப்பது சிரமம். எதையாவது எழுதி ஒன்றில் கீழாக ஒன்றை அடுக்கு இதுதான் கவிதை என சொல்லிக்கொள்ளலாம். ஆனால் கவிதையை வாசித்து அதில் பயணிப்பது அத்தனை எளிதல்ல. எழுதியது கவிதைதான் என அடுத்தவரை நம்பவைக்கலாம். ஆனால் எழுதிய/வாசித்த கவிதைக்குள் எத்தனை தூரம் நாம் அகப்பயணம் செய்துள்ளோம் என்கிற கேள்விக்கு நாம்தான் பதில் சொல்ல வேண்டும். இதில் இன்னொருவருக்கு வேலை இல்லை. நமக்குத்தான் வேலை அதிகம். நமக்கு கிடைத்த பதிலை பகிரும் போது அது மேலும் மேலும் விரிவடையும் ரசவாதத்தை கவிதைகள் நிகழ்த்திக் கொண்டே இருக்கும்.

அவரவர் அனுபவத்திற்கும் பார்வைக்கும் ஏற்றார் போல தன்னை மாற்றி காட்டும் வித்தை தெரிந்தது கவிதைகள். அதோடு புதிய அனுபவத்தையும் பார்வையையும் கொடுப்பவையும் கவிதைகள்தான்.

கவிதை என்றாலே மனதின் தோன்றும் கவிஞர்கள் ஏராளம் அதில் நிச்சயம் இடம்பெறும் பெயர் கவிஞர் கலாப்ரியா. கலாப்ரியா கவிதைகள் மனதிற்கு நெருக்கமானவை. எப்போதும் கவிதைகள் முதல் வரியில் இருந்து தொடங்கும். ஆனால் கலாப்ரியாவின் கவிதை அவரின் பெயரில் இருந்தே தொடங்கிவிடுகிறது. சொல்லப்போனால்  இளைஞர்களுக்கு மிக நெருக்கமான அனுபவங்கள். வாழ்விற்கான மற்றொரு பார்வை. படிமம். ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு தாவுதல், போன்ற பல வித்தைகள் தன் கவிதைகள் கொண்டுள்ளார்.

சமீபத்தில் அவரது ‘ தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி’ என்னும் கவிதை தொகுப்பை வாசித்தேன். வாசித்தேன் என்பதைக் காட்டிலும் மிதந்தேன் என்பது பொருத்தமாக இருக்கும் என வியக்கிறேன்.

இது புத்தக விமர்சனமோ கவிதை விமர்சனமோ அல்ல. கலாப்ரியாவின் கவிதைகளின் நான் மிதந்து கழித்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள முற்படுகின்றேன். ‘நீங்களும் வாங்க’  என அழைக்கிறேன்.

கவிஞன் என்றாலே குழந்தைகளைக் காணாது எப்படி. குழந்தைகளைப் பாடாமல் எப்படி. குழந்தைகள் வெறும் குழந்தைகள் அல்ல என்பதை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது கவிஞர்கள்தானே. இத்தொகுப்பில் இருபதுக்கும் அதிகமான கவிதைகளில் குழந்தைகள் வருகிறார்கள். அவர்கள் குழந்தைகளாக வருகிறார்கள். நம்மை குழந்தைகளாக்கிவிட்டு செல்கிறார்கள்.

எங்கள் காலத்தில்

சோத்துப் பசை தேய்த்த

தீப்பெட்டிப் படங்கள்

இப்போதையக் குழந்தைகளுக்கு

ஸ்டிக்கர் படங்கள்

எவ்வளவு ஒட்டினாலும்

எங்காவது இடம் தரும்

மூடிய கதவுகளின்

விசால மனம்

வீட்டை விடப் பெரியது

என வருகிறது ஒரு கவிதை. ஐயா கி.ராவின் கதவு சிறுகதையை இக்கவிதை நினைவூட்டுகின்றது. எல்லா காலத்திலும் குழந்தைகள் தங்களுக்கான இடத்தை கிடைக்கப்பெறுகின்றார்கள். யாரின் அனுமதியும் அவர்களுக்கு தேவைப்படுவதில்லை. அவர்கள் அவர்களாக இருப்பதுவே அதற்கான காரணம். வளர்ந்தவர்களுக்கு வீடே வசதியில்லாமல் போகும் போது குழந்தைகளுக்கு மூடிய கதவுகளில் கூட வீட்டை விட விலாசமான இடம் கிடைத்து விடுகிறது. குழந்தைகளுக்கு கதவுகளுக்கும் எப்போது நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சமயங்களில் அவர்களின் எல்லைக்கோடு அதுதான். அவர்களை பயமூட்டும் பூச்சாண்டி கதவுக்கு பின்னால்தான் இருப்பான். யாருமில்லாத போதும், கதவுகள் அவர்களின் நண்பனாகி ஊஞ்சல் ஆட்டுவான்.

குழந்தைகளை கண்டித்தும் அவர்களை ஓரிடத்தில் அமரவைப்பதுமே ஒழுங்கு, ஒழுக்கம் என பழக்கப்படுத்திக் கொண்டிருக்கும் காலத்தில் குழந்தைகளின் குதி ஆட்டத்தை இப்படிச் சொல்கிறார் கவிஞர்;

அருவிக்குக் கால் முளைத்தது போல்

ஆட்டம் போடுகின்றன

குளிக்கும் குழந்தைகள்

            அருவியின் ஆளுமையை குழந்தைகளின் ஆட்டத்தில் பார்க்கும் மனம்தானே கவிதை. குழந்தைகளை எதனுடன் ஒப்பிடுகின்றோம் என்பதில் நாம் கவிஞரின் குழந்தை மனதை கண்டறியலாம். அப்படியான இன்னொரு கவிதை வருகிறது இப்படி;

அடைத்த கோயில்

மணியில் ஒளிந்திருக்கும்

மௌனம் போல

குழந்தைகள்

வந்து போன

கோடை வீடு

என்கிறார் கவிஞர். இன்னொரு கவிதையில்,

           நிகழ்ச்சி முடிந்ததும்

          மகிழ்வுடன்

உரைக்குள் புகுந்து கொள்ளும்

இசைக்கருவி போல

கதை கேட்ட குழந்தை

தூக்கத்திற்குள்


என்கிறார்.

           குழந்தையிடம்

கத்தியை

எடுத்து வரக் கேட்டுவிட்டு

தோட்டத்தில்

தவிப்புடன் நிற்கிறது

தாய்க் கவிதை

குழந்தைக்கு நம்மால் எதுவரை கற்றுக்கொடுத்துவிட முடியும். எதையெல்லாம் குழந்தைகள் கற்றிருக்கிறார்கள், என்பது கவனிக்க வேண்டிய கேள்விகள். தோட்டத்தில் காத்திருக்கும் தாயொருத்தி கவிதையாக மாறிக்கொண்டிருந்தாலும், குழந்தையையும் கத்தியையும் வாழும் சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்கவே தோன்றுகின்றது. கையில் பிடித்திருக்கும் கத்தியால் தனக்கோ அல்லது யாருக்கும் ஆபத்தை விளைவிக்க கூடிய சாத்தியங்கள் நிறைந்துக் கொண்டிருக்கும் சூழலில் மனம் பயப்படத்தான் செய்கிறது.

பலவற்றைப் பேசும் கவிதைகள் இத்தொகுப்பில் இருந்தாலும் என மனம் மீண்டும் மீண்டும் குழந்தைகள் பற்றிய கலாப்ரியாவின் கவிதைகளையே  வாசிக்க வைக்கிறது. குழந்தையாகவே இருந்திருக்கலாம் என எண்ணிக்கொண்டிருப்பதும் கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். வாசிக்க வாசிக்க இயல்பிலிருந்து நாம் கவனிக்க மறந்த தருணத்தை கவிதையாக்கி நம்மை பார்க்கச் செய்யும் மாயத்தினை தன் கவிதைகள் வழி நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார் கவிஞர்.

நிறைவாக,

பயணிகள் ரயிலில்

அசாத்தியக் கூட்டம்

எழுந்தால் இடம்

பறி போய் விடும்

விக்கலுடன்  போராடும்

யாரோ பாட்டி

தண்ணீர் கேட்கிறாள்

இருவது ரூபாயில்லா

புருவம் உயர்த்துகிறார்கள்

அம்மையும் அப்பனும்

பாட்டிலைத்

தந்து சிரிக்கிறது குழந்தை.

இக்கவிதையில் கவிஞர் பெரிதாக என்னத்தை சொல்லிவிட்டார். ஒரு பேருந்து, கூட்டம், பாட்டி, தாகம் , தாய்தந்தை குழந்தை அவர்களிடத்தில் ஒரு சம்பவம் அவ்வளவுதானே. ஆனால் யோசிக்கையில் நாம் குழந்தையா இல்லை அந்த அம்மையப்பனா என்று மனசாட்சியை கேள்விக்குட்படுத்துகின்றார். அங்குதான் அவர் கவிஞராக நிற்கின்றார்.


- தயாஜி

                                               

 

-        

           

 


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்