பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 28, 2019

நாங்கள் என்பதற்காக..... 'நாங்கள் என்பதற்காக'


என் நினைவுகளில்
அழிந்த கோப்புகளை
எப்போதும்
திறக்க கூடாத
பக்கங்களை வைத்திருந்தார்கள்

திறக்க எத்தனிக்கும்
எந்த சமயத்திலும்
முன்னெச்சரிக்கையாக
எங்கள்
முதுகில் சில கோடுகள்
கிழிப்பார்கள்

மருந்தும் தடவிவிட்டு
கட்டண தொகையை
எங்கள் கடன் பெட்டியில்
சேர்த்து வைப்பார்கள்

என் தாத்தாவில் இருந்து தொடங்கிய கடன் இத
அப்போது அவர்
வாழ்ந்துக்கொண்டு இருந்தாராம்
வாழ்தல் என்பதுதான்
எத்தனையொரு வரமென
அவரின் கதைகளில் இருந்து கண்டுகொண்டேன்
அன்றொரு தினம்

எங்கள் காட்டுக்குள்
ஜீப் ஒன்று வந்தது
எங்களை போல அல்லாமல்
முகத்தை மட்டும் காட்டிக்கொண்டிருந்தார்கள்

எங்கள் மொழி அவர்களுக்கு விளங்கவில்லை
எங்கள் பழக்கம் அவர்களுக்கு புரியவில்லை
வழி மாறி வந்துவிட்டவர்களுக்கு

உணவு கொடுத்தோம்
உடன் இரவை கழிக்கவிட்டோம்
வழிகாட்டியுடன் அனுப்பிவைத்தோம்
நன்றியை சுமந்துக்கொண்டு

மறுநாள் சரியாக
வந்து சேர்ந்தார்கள்
எங்கள் கைகளுக்கு
விலங்கிட்டார்கள்
எங்கள் மரங்களை வெட்டிக்கொண்டார்கள்
எங்கள் குழந்தைகளை
சிதைத்துப் பார்த்தார்கள்
எங்கள் கூரைகளை
எரித்து விளையாடினார்கள்
எங்கள் ஊதிரத்தின் நிறத்தை பரிசோதித்தார்கள்
உடல் முழுக்க கத்தியால்
கோடுகள் போட்டார்கள்

எங்கள் ஒவ்வொருவருக்கும்
எண்கள் கொடுத்தார்கள்
ஒவ்வொரு எண்களிலும்
எப்போதும் கொடுத்துத்தீராத
கடனை காட்டினார்கள்
எங்களிடமிருந்து பிடிங்கியதையே எங்களிடம்
விற்பனை செய்தார்கள்

மூன்று தலைமுறை வந்துவிட்டோம்                                                                                        மரங்களின் நிழல்கள் கூட அதிஷ்டத்தின்                                                                              பெயரிலேயே காணக்கிடைக்கிறது
இதோ எங்கள் பெண்களில்
பாதிக்குப் பாதி காணவில்லை
இதோ எங்கள் ஆண்களில்
பாதிக்கு பாதி கை கால் இல்லை

எங்களின்
கடைசி ஒரு பிடி மண்ணையும்
அவர்கள்
தோண்டி எடுக்கும் வரை
எங்களின் கடைசி மரத்தை
அவர்கள் பிய்த்துப்போடும் வரை
எங்களால் அவர்களுக்கு
லாபம் வருவது
முற்றாகும் வரையில்
எங்கள் உயிர் அவர்களின் உரிமை
எங்கள் மரணமே கூட அவர்கள் 

முடிவெடுக்கையில் முடிகிறது
எல்லாவற்றுக்கும் மேலாக
நாங்கள் வைத்திருக்கும்
வேட்டை கம்பு ஈட்டியைவிட
அவர்கள் வைத்திருக்கும்
வேட்டுத் துப்பாக்கி
பலசாலியாக உள்ளது
நாங்கள் உண்பதற்காக கொல்கிறோம்

அவர்கள்
நாங்கள் என்பதற்காக கொல்கிறார்கள்.....


-தயாஜி

நன்றி - வளரி மலேசியக் கவிதைச் சிறப்பிதழ்
கார்த்திகை 2019

டிசம்பர் 25, 2019

உயிர்நேசியின் உன்னத நாளில்...

'உயிர்நேசியின் உன்னத நாளில்..'

நம்பிக்கையுள்ளங்களை
நன்மக்களென 
ஆட்கொண்ட எங்கள்
பிரபுவே எங்கள்
பிதாவே
அன்பின் வழியில்
எங்கள்  கரம் பிடித்து 
புறக்கண்கள் மறைத்து
அகக்கண்கள் திறக்கருளி 
கரை காண் செய்பவரே 
இவ்வுலக இன்னல்கள்
யாவையும்
ஒவ்வொன்றாய் எக்கேள்விக்கும்
இடம் மறுத்து
உங்கள் சொல்லால் சுமப்பவரே
எங்கள் கண்ணீர்த்துளிகளுக்கு
உம் உதிரத்துளிகளால்
விடை கொடுக்கும் 
எல்லைகடந்த அன்பின் ஜீவனே
ஏதேதோ பாவங்களை
யார்யாரோ செய்த குற்றங்களை
சிலுவை சுமந்து
சுத்தப்படுத்திய பரிசுத்த பரமபிதாவே
முட்களைச்சூடி கிரீடமாக்கி
அதனையும்
மகிழ்வித்த ரட்சகனே
உங்கள் நாளில்
உங்கள் பெயரில்
புத்துயிர் பெற்று
புதுவாழ்வு கற்று வாழ
வகைசெய்யும் எங்கள்
பரலோக வாசியே
என்றைக்குமான 
எங்கள் உயிர் வாசியே
ஆண்டவரே
ஆமேன் 

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்