பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 18, 2025

- வைத்தியக்காரர்கள் -


சில பைத்தியங்களை

அவ்வப்போது சந்திக்கின்றோம்.


ஒருவன் பக்கத்து நாற்காலியில்

பரபரப்பாக எதையோ விவரிக்கின்றான்

ஒருவன் டீ கடையில்

எதிரே ஒரு டீயை வைத்து எதையோ பேசுகிறான்


ஒருவன் இரயிலில் இரு இருக்கைகளுக்கு டிக்கட் வாங்கி

ஆமாம் போட்டுக்கொண்டே அமர்கிறான்


ஒருத்தி ஆழமாக எதையே கேட்டு

புருவம் உயர்த்தி 

தாழ்ந்த குரலில் பதில் சொல்கிறாள்

ஒருத்தி எதை கேட்டாலோ 

சட்டென தலை குனிந்து வெட்கப்படுகிறாள்


ஒருத்தி தன் பக்க நியாயங்களை

எழுதி எடுத்து வந்து

எதிரில் வைத்து உரையாடுகிறாள்


ஆனால் உங்களுக்கு

தெரியுமா?

அவர்கள் தனியாக இருக்கிறார்கள்

தனியாகவே இருக்கிறார்கள்

தன்னந்தனியாகவே இருக்கிறார்கள்


இந்தப் பிரபஞ்சம்

அவர்களுக்கென ஒரு வாசலை

திறந்து அவர்களுக்கானவர்களை

அவர்களிடம் அனுப்பி வைக்கிறது


பலநூறு ஆண்டுகளாய்

அவர்களின்

ஆன்மா சேகரித்து வைத்த

கேள்விகளைக் கேட்கிறார்கள்

பதில்களைச் சொல்கிறார்கள்


அவர்கள் அனைவரும் ஒவ்வொரு

காலகட்டத்தின் உலகின் புகழ்மிக்க

கவிஞர்கள்


அவர்கள் இப்படி பேசுவது

நமது எதிர்காலத் தருணத்தில்தான்

நம்மோடுதான்


அது தெரிய

நமக்கு இன்னும் அனுபவங்கள்

வாய்க்கவில்லை

நம் காதுகளுக்கு இன்னும்

அந்தக் கொடுப்பினை

கிடைக்கவில்லை ...





Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்