பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 03, 2012

பட்டாம்பூச்சி பறந்தது....

“ஒரு முறைதான் குத்தினேன். இறந்துவிட்டான். கத்தி அவ்வளவு கூர்மையா என நான் பார்க்கவில்லை. அவனிடம் எனக்கு எந்த முன்விரோதமோ, எந்த கோவமோ இல்லை. இத்தனைக்கும் அவன் என் பால்ய நண்பன்.” வானொலியில் ஏதோ நிகழ்ச்சிக்காக கைதியொருவரை அதன் அறிவிப்பாளர் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். இவருக்கு என்ன தெரியும், பாதிக்கப்பட்டவர்களிடம் கேள்வி மேல் கேள்வி மட்டும் கேட்கத் தெரியும். அவனவன் கஷ்டம் அவனுக்குதானே தெரியும், ம்.. இப்படி யாராவது என்னை செய்திருந்தால் நிம்மதியாக போய் சேர்ந்திருப்பேன்..!அந்த சிந்தனைதான் இந்த நிகழ்ச்சி முடியும் வரை என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. அந்நிகழ்ச்சிக்கு இடையில் ஒலியேறிய தன்முனைப்பு பாடல்கள் எனக்கு ஆறுதல் கொடுத்தாலும், அந்த பாடல்களால் முழுமையாக என்னை மாற்ற முடியவில்லை. என்னால் மாற்ற முடியாத என்னை அந்த பாடல்களா மாற்றப் போகின்றது. இனியும் வாழ முடியாது. தற்கொலைதான் தீர்வு என்ற என் தீர்மானமில்லாத தீர்மானம்தான் நிறைவேறப்போகின்றது இன்று.இந்த தற்கொலை எண்ணம் எப்போது ஆரம்பித்தது என மிகச்சரியாக சொல்ல முடியவில்லை. இன்று.. நேற்று.. வந்த எண்ணம் அல்ல இது. யோசித்தவுடன் இதன் தொடக்கத்தை ஆராய்ந்து சொல்லிவிடுவதற்கு. ஆனாலும் இதைப் பற்றி யோசிக்கையில் எனக்கு வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்கள்கூட இதற்கு ஒரு வகையில் காரணம்தான். முக அமைப்பில் நான் ஒன்றும் அத்தனை அழகுக்குக் சொந்தக்காரன் இல்லை. தடித்த மூக்கு , வரிசையில் அடக்கமாய் அமர்ந்துக் கொள்ளாத பற்கள், இனிமைக்கு எதிர்பதமாய் விசித்திர குரல்.இதெல்லாம் பெரிய குறை இல்லைதான், வெளியில் இருந்து பார்க்கும் வரை. பள்ளியில் சக மாணவர்கள் முதல் பாடம் நடத்தும் ஆசியர்கள்வரை உங்களை ‘மூக்கன்’ என்றும் ‘பல்லன்’ என்றும் அழைத்து சிரித்தால் எப்படியிருக்கும்; வெளியில் எங்கும் போனால், எதையோ பார்ப்பது போல உங்கள் மீது பார்வையை செலுத்தும் கோணல் முகங்களை எப்படி சமாளித்திருப்பீர்கள். இதெல்லாம் என் தற்கொலைக்கு காரணம் என்றால் முட்டாள்தனம்தான்.இதுவரை என் எழுத்து நடையை கவனித்த நீங்கள் நான் எழுந்து நடக்கும் விதத்தை கவனிக்கவில்லை போலும். எப்படி நடந்தாலும் எதை பிடித்து நடந்தாலும் கொஞ்சம் தாங்கி..தாங்கி.. நடக்கவே முடிகிறது. அம்மாவிடம் விசாரித்தேன் இதேல்லாம் எனக்கு மட்டும் ஏன் என்று. நான் அவங்க வயித்தில் இருக்கும் போது பாட்டியுடன் போட்ட சண்டையில் , சொந்த பாட்டியே கொடுத்த சாபம்தான் இதுன்னு அம்மா சொன்ன பிறகு, நல்ல வேலை அந்த பாட்டி உயிரோட இல்லை.இப்படியெல்லாம் சொல்லி சமாளிச்ச அம்மா, நேத்து என்ன சொன்னாங்க தெரியுமா.. “நீ பொறந்த நேரம்தாண்டா இப்படி நம்ம குடும்பத்தையே படுத்துது; அப்பவே அந்த சாமியார் சொன்னாரு...! இந்த புள்ளையால உங்களுக்கு நல்லது ஏதும் நடக்காதுன்னு.. உங்க அப்பாதான் இதிலெல்லாம் நம்பிக்கையில்லாம உன்னை பெத்துகலாம்னு சொல்லி.. நீ பொறந்த நாலு வருசத்திலேயே போய்ட்டாரு.”
அந்த சாமியாரு இப்போ எந்த ஜெயிலில் இருக்காரோ தெரியலை இந்த அம்மா இன்னும் அதை நம்பறாங்க. கோவத்தில் இப்படி உண்மையெல்லாம் வெளிவரும்னு எனக்கு அப்பதான் தெரியும்.அம்மா கோவிப்பதற்கு ஒரே காரணம் இன்னமும் எனக்கு எந்த இடத்திலும் வேலை கிடைக்கவில்லை, அதன் காரணம் நான். எப்படியும் சொந்தமாக ஏதும் வியாபாரம் செய்யலாம்னு அம்மாகிட்ட இருந்த பணத்தை வாங்கி குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்களை வீடு வீடா விற்க ஆரம்பிச்சேன் , ஒரு மாதம் என்னன்னவோ முயற்சி செய்தும், இந்த முகத்தைப் பார்த்தவர்கள் என் முயற்சியைப் பார்க்கவில்லை. பாவாம் பார்த்து வந்தவர்களையும் ; உங்கள் பாவம் பட்ட பணம் வேண்டாம், என சொல்லியது அம்மாவுக்கு எப்படியோ தெரிஞ்சி வந்த கோவத்தில்தான் என் பிறப்பின் உண்மையை அவங்களே சொன்னாங்க.ஒரு வேலை அம்மா சொன்னது உண்மையா இருக்குமோ..? இந்த பாவம் செய்த புள்ளையாலதான் அம்மாவுக்கு இத்தனை கஷ்டம். நான் இல்லாமலே போய்ட்டா... அம்மா அனுபவிக்கற கஷ்டமெல்லாம் மறைஞ்சி போய்டும்.
நடக்க ஆரம்பிச்சேன், எங்க வீட்டிலிருந்து ரொம்ப தூரம் நடந்த உணர்வு... நடை நின்ற பாடில்லை. தொலைத்தவன் தொடர்ந்து தேடுவது போல... கிடைத்தவன் மீண்டும் தொலைப்பதுபோல.. சம்பந்த சம்பந்தமில்லா எதையெதையோ நினைத்துக் கொண்டேன். தொடர்ந்து நடந்தேன். துன்பத்தைதான் கடக்க இயலவில்லை, இப்படி தாங்கி தாங்கி, தற்கொலைகாவது நடக்க முடிகின்றதே என்று என்னை நானே சமாதானம் செய்தேன்.எப்படியும் வீட்டிலிருந்து ரொம்ப தூராம் வந்தவிட்டேன் என்பதனை உறுதி செய்துவிட்டேன். சாலையில் கார்கள் வந்த வண்ணமும் சென்ற வண்ணமும்தான் இருந்தன. எல்லாம் விலை உயர்ந்த கார்கள். ஒரே பரபரப்பு.இந்த நேரத்தில் இவர்கள் யாரை இடித்தாலும் கண்டுகொள்ளமாட்டார்கள் அவ்வளவு பரபரப்பு மிகுந்த சூழலில் வாழ்கின்றார்கள். பாருங்களேன், இவர்களுக்கென்று ஒரு வேலை, நல்ல சம்பளம், கார் வீடு. நானும் இவர்களை போல ஒரு மனிதன் தானே. மனிதன் தான், ஆனால் இவர்களை போல் அழகற்றவன். இவர்களை போல் நேராக நடக்காதவன், இவ்வளவுக்கும் மேல் அடுத்தவர்கள் பணத்தில் படித்து அதை கட்டமறந்தவன் இல்லை.படிக்கும்போதும் சரி வேலை தேடும் போதும் என் திறமை யாருக்கும் பயன்படவில்லை. என் முகமும் நடையும்தான் அவர்கள் கேலி செய்ய பயன்பட்டது. இனி இதற்கெல்லாம் விடுதலை. மரணம் பிறகு வாழ்க்கை இருக்கின்றதா என்பது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. மரணம் வரை வாழ்க்கை வாழ்வும் வலு இல்லை. அங்கே ஒரு சிகப்பு கார் வேகமாக வருகிறது. அருகில் வரவும் நான் சட்டென்று குறுக்கே செல்லவும் சரியாக இருக்கும்.
இன்னும் கொஞ்ச அருகில்..


ம்..


5..


4..


3..


2..
“யாராவது இருக்கிங்களா..?”
திரும்பினேன், கறுப்பு கண்ணாடியுடன் வெள்ளைச்சட்டையுமாய் எனக்கு மிக அருகில், அடடே அந்த கார் போய் விட்டது. மீண்டும் யாரவது இருக்கிங்கலா என்ற கேட்கவும்.
“ஏன் உங்களுக்கு கண் தெரியாதா..?”
“ம்.. இருக்கிங்கலா.. ஆமாங்க, கண் தெரியாதுதான். சின்ன உதவி வேணும் செய்விங்களா..?”
“பணம் ஏதும் கேட்டுறாதிங்க. என் நிலமை அப்படி..”
“ஐயோ இல்லைங்க. நானும் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன். அதான் முதல் சம்பளத்துல சாமிக்கு மாலை வாங்கியிருக்கேன். இந்த சாலையில் எப்பவும் கார் வந்துகிட்டேதான் இருக்கும். யாராவது இருந்தா.. அவங்ககூட இந்த சாலையைக் கடந்துடுவேன்.. ரொம்ப நேரம் காத்திருக்கேன் யாரும் வந்த மாதிரி தெரியலை, உங்க பேச்சி சத்தம் கேட்டுச்சி அதான் கூப்டேன். எனக்கு இந்த சாலையைக் கடக்க உதவி செய்திங்கன்னா போதும், நான் கோவிலுக்கு போய்டுவேன் ”


அவரின் கையை பிடித்துக் கொண்டே, சாலையை கடக்க ஆரம்பித்தேன். முன்பு இடிக்க வேண்டிய கார்களைக் கவனமாக கடந்தேன். சாலையைக் கடந்ததும், அவருடன் கேட்டேன்,
“சரிங்க கொண்டுவந்து விட்டுட்டேன் , மறுபடியும் எப்படி சாலையைக் கடந்து அந்த பக்கம் போவிங்க..”
“ சாலையை கடக்கனும்னு வந்துட்டா கண்டிப்பா யாராவது உதவிக்கு வருவாங்க. இப்போ நீங்க எனக்கு கிடைச்ச மாதிரி மறுபடியும் யாரும் வருவாங்க..”
“எப்படி எவ்வளவு உறுதிய சொல்றிங்க..?”
“அதாங்க நான் கத்துகிட்ட பாடம். ஒரு காலத்துல இதே சாலையில் செத்திருக்க வேண்டியவன் நான். சம்பந்தமே இல்லாமல் ஒருத்தர் வந்தாரு, கை கொடுத்து காப்பாத்தி..என் வாழ்க்கை பாதையை மாற்றியமைச்சாரு.. அவர் முகத்தை கூட என்னால பார்க்க முடியலை ஆனா என அகம் அவரை கடவுளா பார்த்தது. இப்போ நான் என்ன வேலை செய்யறேன் தெரியுங்கலா..?”
“என்ன வேலை..?”
“பேசற வேலை.. புரியலையா..?”
“ஆமாம்.”


சிரித்தார். தன் பையிலிருந்து அவரின் அடையாள அட்டையைக் கொடுத்தார். அதிர்ந்தேன்...! அவர் வானொலி அறிவிப்பாளர்...! பல குரல் கலைஞன்...! அதிலும் பகுதி நேரமாக ஒரு பத்திரிக்கையில் வேலை செய்கின்றார்...! இதெல்லாம் ஒரு மாத காலத்தில் அவருக்கு ஏற்பட்ட மாற்றங்கள் என்பதை அவர் சொன்னதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பத்து இருபது ஆண்டுகள் வரை வராத வேகம் இப்படி ஒரு மாதம் எப்படி சாத்தியம் என குழம்பி அவரிடம் கேட்டேன். அவரின் பதில்,“மாற்றம் என்பது தீக்குச்சி போல.. சரியான நேரத்தில் அதை உணர்ந்து உரசப்பட வேண்டும். அப்போதுதான் அந்த மாற்றம் உங்கள் உள் உறங்கிக் கிடக்கும் திறமைகளை வெளிகொணரும்..அதற்கு நாம்தான் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அன்று முகம் பார்க்காத அந்த நபர் எனக்கு சொன்னதைதான் உங்ககிட்ட சொன்னேன்.ஆமா உங்களைப் பத்தி ஒன்னும் சொல்லலையே..?”என்ன சொல்வது இன்னும் கொஞ்ச நேரத்தில் சாக போகிறேன் என்றா..?சட்டென்று யோசனை. பத்திரிக்கைத் துறையில் வேலை தேடிக்கொண்டிருப்பதாகச் சொன்னேன்.“அப்படியா நான் பகுதி நேரமா செய்யற வேலைக்கு முழுநேர பணியாளர் தேவைப்படுது.. அந்த பெயர் அட்டையில் முகவரி இருக்கு. நாளைக்கு வாங்களேன் எங்க ஆசிரியர்கிட்ட அறிமுகப் படுத்தறேன். என் வாழ்க்கையை மாற்றியவர் உங்கள் வாழ்க்கையையும் மாற்றுவார். அவர் மூலமாகத்தன் எனக்கு வானொலியிலும் வேலை கிடைச்சது. உங்கள் திறமை உங்களைவிட உங்கள் மீது அக்கறை கொண்டவர்களுக்குதான் தெரியும்னு அடிக்கடி சொல்லுவார். ”அவருக்கு விடைகொடுத்து. மீண்டும் அதே சாலையைக் கடந்தேன். ஒரு கார் என்னை நெருங்கிவிட்டதை அப்போதுதான் கவனித்தேன். அப்போது அவர் சொன்னதை என்ணினேன்.“உங்களுக்கு பட்டாம்பூச்சி கதை தெரியுமா..? கூட்டுப்புழுவா இருந்து ஒவ்வொரு முடியை உதிர்க்கும்போதும் உயிர்போகும் வலி வலிக்குமாம்.. அதை தாங்கிக்கொண்டு மீண்டும் அடுத்தடுத்த முடியை உதிர்க்குமாம்..அந்த புழு. அப்பறம்தான் வண்ண பட்டாம்பூச்சியாய் பறக்குது.. இதையும் அவர்தான் சொன்னாரு..ம்.. ஒரு பட்டாம்பூச்சியே வலி தாங்கனும்னா நாமெல்லாம் எம்மாத்திறம்னு நான் நெனைச்சிதான் அவர்கூட என் புது வாழ்கையை தொடங்கினேன்”

சட்டென்று அந்த காரின் முன் கைகாட்டினேன். என் கையில் அவர் கொடுத்த பெயரட்டையில் ஒரு பட்டாம்பூச்சி பறந்தது.


நன்றி  'தினக்குரல்'.

ஆகஸ்ட் 12, 2012

யுவன் சந்திரசேகரின் ‘வெளியேற்றம்’ - உட்புகும் தேடல்


12.8.2102
      தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் நாவல்கள் வரிசையில் படித்து முடித்த நாவல், யுவன் சந்திரசேகர் எழுதிய ‘வெளியேற்றம்’.

      படித்து முடித்திருந்த நாவல்களில் இந்த நாவலை நான் வேறு வகையாக உணர்கிறேன். வழக்கமாக இந்திரா சௌந்திரராஜன் கதைகளை தொடக்கத்தில் படித்து வளர்ந்தவன் நான். அதில் வரும் அமானுஷயம், சித்தர், மூலிகைகள், மர்மங்கள் எல்லாம் எனக்கு ஒருவகையில் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் கொடுத்தது. அவரது எழுத்துகளைத் தொடர்த்து வாசிக்க வாசிக்க அதன் கட்டமைப்பை புரிந்துக் கொண்டதாய் ஓர் நிறைவு. கடவுள் நம்பிக்கையை அடைப்படையாக கொண்ட எழுத்து வகை அது. அதனுடன் மூலிகைகள் தொடர்புடைய அற்புதங்கள் நிகழ்த்தும் சித்தர்களும் சேர்ந்துக் கொள்வார்கள்.
    பிறகு இந்திரா சௌந்திர்ராஜன் நாவல்களை படிப்பதை தொடரவில்லை. வருடம் முழுக்க ஒரே வழியில் செல்வதை என் மனம் விரும்புவதில்லை. இதன் வழி அவரை நான் குறைத்து மதிப்பிட்டதாய் எண்ணிட வேண்டாம். என் அடிப்படை வாசிப்பிற்கு அடித்தளம் அமைத்தவர்களில் அவரும் ஒருவர். ஆனால் அதே பாடசாலையில் அதே வகுப்பில் என்னை வைத்துக்கொள்ளவில்லை.
   
வெளியேற்றம் நாவல் முழுக்க ஒவ்வொரு காலக்கட்டங்களில் ஒவ்வொருவர் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம், ஒவ்வொரு கேள்விகள், ஒவ்வொரு குழப்பம். கதைகள் தனக்குள் கதைகளையே வைத்து ஊர்ந்துக் கொண்டிருக்கின்றன. ‘ஓடிப்போனவன்’ என்று சொல்லப்படுகின்றவர்கள் வெறுமனே ஓடி ஒளிந்துவிடுவதில்லை. இந்த வெளியேற்றத்தில் ஓடிப்போனவர்கள் மிளீர்கிறார்கள்.
    நான் படித்த நாவல்களில் இந்த நாவ்லதான் அதிக பக்கங்கள் என நினைக்கிறேன்.495 பக்கங்கள்.
      படிக்கப்படிக்க நாவலில் நடுப்பகுதியில் , தொடர்ந்து படிக்க வேண்டிமா என்ற வெறுமை தோன்றுகிறது. அதற்கு அடுத்த அத்தியாயத்தை படித்துவிட்டால், நாவலில் போக்கு நம்மை மீண்டும் நாவலுள் இழுத்துவிடுகிறது.
     
      நதியின் போக்கினை போல , ஆளுக்கு ஒரு திசையில் இருந்து அடித்து செல்லப்படுகிறார்கள். அவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய ‘பெரியவர்’ இந்த நாவலில் மிக முக்கிய கதாப்பாத்திரம். இதனையே மற்றவர் எழுதியிருந்தார் அவருக்கு சித்தர் என்ற பெயரை வைத்து காவி துணி கொடுத்திருப்பார்கள். ஆனால் யுவன் சந்திரசேகர் அந்த வழக்கத்தை தொடரவில்லை. தன் மரணத்தை நான் நினைத்தபடி சமாதியடையவிருக்கும் பெரியவருக்கு எந்த ஓரு ஆன்மீக சாயத்தை பூசாதது எனக்கு ஆச்சர்யத்தையே கொடுத்தது.
      மனித மனம் இத்தனை கதைகளை ஒன்றினைக்க முடியுமா என படிக்க படிக்க வியப்பு ஏற்பட்ட வண்ணம் இருந்தது. தேடல் என்பதின் உண்மை அர்த்தம் இந்த நாவலின் வழி அறியப்படும். வெறுமனே வாசக சுவாரஸ்யத்தையும் தாண்டிய ஒன்று இந்நாவலில் காணக்கிடைக்கிறது.
     இன்னும் கூட எழுதலாம் இந்த நாவல் குறித்து பக்கம் பக்கமாக ஆனால்; இந்நாவல் எனக்குள் முடக்கிவிட்டிருக்கும் கேள்விகளை எழுதுவது எனக்கு சாத்தியப்படவில்லை. இந்த நாவலும் தனக்குள் பல கதைகளை சுமந்துக் கொண்டே செல்கிறது, சொன்னதில் கொஞ்சம் சொல்லாததில் மிச்சம்.

- தயாஜி -

ஜூலை 10, 2012

வாங்கிய புத்தகங்கள்


7,8.7.2012-ல் வல்லினம் ஏற்பாடு செய்திருந்த இருநாள் மொழியியல் வகுப்பில், கே.பாலமுருகன் எழுதி மிகவும் கவனம் பெற்ற நாவலான ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ நாவலை வாங்கினேன். பாலமுருகனின், ‘தம்பி தயாஜிக்கு’ எனும் கையெழுத்திட்டார்.

1. நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்
- எழுத்து பாலமுருகன் கேசவன்.

9.7.2012-ல் ஜெயபக்தி சென்றிருந்தேன்.

2. வெளியேற்றம் - நாவல்

எழுத்து - யுவன் சந்திரசேகர்.
 

ஜெயமொகனின் புத்தகம் மூலம் அறிமுகமான யுவன் சந்திரசேகரின் சிறுகதைகளை சமீபத்தில் வாங்கியிருந்தேன். இன்னும் படிக்கவில்லை. தற்சமயம் தொடர்ந்து நாவல்களைப் படித்துவருவதால், யுவன் சந்திரசேகர் எழுதிய நாவல்களைத் தேடினேன், ‘வெளியேற்றம்’ நாவல் கிடைத்ததில் மகிழ்ச்சி.

3. பெயரற்ற யாத்ரீகன் - ஜென் கவிதைகள்

தமிழில் மொழிபெயர்ப்பு - யுவன் சந்திரசேகர்.
 

இயற்கையாகவே ஜென் என்றால் ஒருவகை ஈர்ப்பு எனக்கு இருக்கிறது, அதிலும் இது கவிதை. தமிழில் மொழிபெயர்த்திருப்பதின் கீழ் ஆங்கிலத்தில் அந்த கவிதை எழுதப்பட்டுள்ளது, உடன் எழுதிவரின் பெயரும் இருக்கிறது.

5. நான் பின் நவீனத்துவ நாடோடி இல்லை (கட்டுரை தொகுப்பு)

எழுதியவர் யமுனா ராஜேந்திரன்.

-பின்நவீனத்துவம், அதன் மீதான விமர்சனம், மார்க்கிசியம், பின்மார்க்கிசியம், சோஷலிசம், கிராம்ஸின் முக்கியத்துவம், போலி அறிவியலின் தோற்றுவாய்கள் போன்ற தலைப்புகளில் கட்டுரைகளும், உரையாடலும் அடங்கிய புத்தகம்.இப்படிக்கு தயாஜி....

ஜூலை 05, 2012

பயணிப்பவனி பக்கம் 19

பிடித்த ரஜினியும் பிடிக்காத காதலும்;  ஒன்றால்தான் இணைக்கப்பட்டிருக்கிறது

ரஜினியை பிடித்திருந்தது. ஏன் பிடித்திருந்தது. யோசிக்கையில்; பைத்தியமாகத்தான் இருந்திருக்கிறேன். எனக்கு எந்த ஒரு வகையிலும் நன்மை செய்திடாத எங்கோ இருக்கும் ரஜினி என்ற சினிமா பிம்பத்தை என் தூக்கி தலையில் வைத்து கொண்டாடியிருந்தேன். படிக்கும் அறையில், மேஜையின் மேல் ரஜினியின் படம். தலை முடியும் ரஜினியின் பாணி. பணப் பையிலும் என் படத்திற்கு அருகில், ரஜினியின் படம்.

இப்போது அவை எதுவுமே என்னிடம் இல்லை. ரஜினி மீது இருந்த கண்மூடித்தனமான ஈடுபாடும் இல்லை. முன்பு போல கேள்விகளுக்கு இல்லாத இடம் இப்போது இருக்கிறது.

இப்போது எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்கும் போது இருக்கும் கேள்விகள் இன்னமும் ஆழமாகிறது. ஒருவேளை ரஜினிக்கும் என்னைப்போல மூக்கு பெரிதாக இருப்பதோ, தப்புத்தப்பாய் ஆங்கிலம் பேசுவதோ, அகல நெற்றியோ, பரட்டை தலை முடியோ கூட காரணமாய் இருக்கலாம். ஆனால் ஏன் ரஜினி.

பதின்ம வயதில் ரஜினி என்பது என்னை இயக்கிய ஆளூமையாகவே எண்ணி வந்திருக்கிறேன். அதே விறுவிறு நடை. சத்தமாக சிரிப்பது. சினிமாவில் ரஜினி பேசிய வசனங்களை பேசிச் கண்ணாடி முன் என் முகத்தையே உற்றுப் பார்ப்பது. இதுவெல்லாம் இப்போது நினைக்கையில் கேலிக் கூத்தாக இருக்கிறது. ஆனால் அப்போது அதைத்தான் நான் அன்றாட வாழ்வின் அடிப்படையென்றே நம்பி வந்திருக்கிறேன்.

ரஜினி போலவே நெற்றியில் பட்டையெல்லாம் அடித்த காலம் அது. அந்த பிம்பம்தான் எனக்கு கடவுள்கள் மீது பற்றிக் கொண்டது. அவ்வபோது ரஜினியின் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு அதிசயங்களும் என் வாழ்விலும் நடக்க வேண்டும். நானும் ஒரு ரஜினியாக வேண்டும் என்பதே லட்சியம் . அந்த எண்ணமே பக்தியாக மாறியது.

காலண்டரில் இருக்கும் சாமி படங்களை எல்லாம் வெட்டி வெட்டி புத்தகங்களில் ஒட்டிவைப்பது. தூங்கும் போது சாமி படத்தை சட்டைப் பையில் வைத்து படுப்பது. பள்ளியிலும் நண்பர்களிடம் இருந்து சாமி படங்களை காசு கொடுத்து வாங்குவது. பத்திரிகையில் வரும் கடவுள் சம்பந்தமான விபரங்களை சேகரித்து வைத்திருந்தேன். இந்த விந்தை செயலுக்கு என்ன காரணம் இருக்கும்.

இந்த வகை செயல்களில் என் காதலையும் நான் வைக்க நினைக்கிறேன், உடன் நண்பர்களையும்.

படிக்கும் போதினில் எனக்கு பல நண்பர்கள் இருந்தார்கள் அதிலும் நண்பிகள் அதிகம். போதாதற்கு பேய்க்கதை சொல்வதின் நான் மன்னனாக இருந்த நேரம் அது. ஆண்களை பேய்க்கதை சொல்லியும் பெண்களை கவிதைகள் சொல்லியும் சுலபமாக நம்வழிக்கு கொண்டு வந்துவிடலாம். கொண்டும் வந்தேன்.

இப்போது அந்த காதலும் இல்லை, எந்த நண்பனும் நம்பியும் உடன் இல்லை. ஒவ்வொன்றையும் யோசிக்கும் போது நடந்து வந்த ஒவ்வொன்றுக்கும் ஏதோ ஒரு மெல்லிய சம்பந்தம் இருப்பதாகவே படுகிறது. ஏன் சேர்ந்தோம் பிரிவதற்குத்தானோ. ஏன் காதலித்தோம் வெறுப்பதற்குத்தானோ.

அது எப்படி நண்பர்களும் பகைவர்களாகி விடுகிறார்கள். காதலிகள் துரோகிகளாகி விடுகின்றார்கள்.

எத்தனை நண்பர்கள் இருந்தாலும் நாம் மனம் வந்து பேசும் நண்பன் ஒருவனாகத்தான் இருப்பான். எனக்கும் இருந்தான். அவன் இளவரசன். நண்பர்கள் நாங்கள் தனி ஆளுமைகளாக வளர நேரிட்டது. கோவமும் சண்டையுமே உருவானவனாக அவன் ஆனான். கோவமும் சமாதானமும் சேர்ந்தே நான் ஆனேன். நான் அப்படியே என் அப்பா. அவன் அப்படியே அவன் அப்பா.

எங்களுக்குள் இயற்கையாகவே பிளவு ஏற்பட்டது. காரண காரியம் இல்லாதது போல அப்போது தோன்றினாலும் இப்போது அதன் காரணம் விளங்கும் நேரம் நெருங்குவதை உணர முடிகிறது.

தனியாளுமை வளர காரணமாய் அமைவதே கருத்துகள்தானே. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். இல்லாவிட்டாலும் தங்களுக்கு பிடித்த கருத்துகளுக்கு தலையாட்டிவிடுவார்கள். அப்படி அமையும் கருத்துகளுக்கு தங்களை இயற்கையாகவும் செயற்கையாகவும் தயாராகிறார்கள். கருத்துகளின் வலிமையே ஆளுமையாக உருமாறுகிறது. அப்படித்தான் நண்பர்கள் நாங்கள் பிரிந்தோம்.

தனித்தனி கருத்துகள் வழியே நாங்கள் அறிய விரும்பியிருக்கிறோம். எங்கள் அடையாளமே அதுதான் என நினைத்திருந்தோம். பெரிய புரட்சியெல்லாம் இல்லை. ‘‘நான் சொல்வதை நீ கேள்’’, என்ற வாசகம்தான் இலைமறைக்காயாக எங்களை இயக்கிக் கொண்டிருந்தது.

எத்தனை பிளவுகள் எத்தனை பிரிவுகள். எல்லாமே நாங்கள் எங்களுக்கு என தேடிக் கொண்ட கருத்துகளும், காட்ட நினைத்த எங்கள் ஆளுமைகளும்தான். ஆனால் அவை எல்லாமே ரஜினி படங்கள் போல விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் நிறைந்தவை ஆனால் போலியானவை. ரஜினியைப்போலவே மிகைப்படுத்தபட்ட கருத்துகள் அவை. ஆனால் ஏன் அதிலேயே தேங்கியிருந்தோம்.

அப்படித்தான் எங்கள் காதலும் இருந்தது. எனக்குத் தெரிந்து உடன் படித்த தோழனும் தோழியும் சமீபத்தில்தான் திருமணம் செய்துக் கொண்டார்கள். இவர்கள் காதலிக்கும் போது தோழி குறித்து தோழனும், தோழன் குறித்து தோழியும் மற்றவரிடம் குறை சொல்லாமல் இருந்திருக்கவில்லை.

பெரிய பெரிய பிரச்சனைகளையெல்லாம் சந்தித்தார்கள். எல்லாம் அவர்களுக்கும் இருக்கும் ஈகோ பிரச்சனைகள்தான். இப்போது கணவன் மனைவியாகி விட்டார்கள். எப்படி சாத்தியம் என விசாரித்தால் புரிகிறது. அவர்களின் திருமணம் கூட ஈகோவால்தான் நடந்தேறியதாம்.

பிரிய நினைத்த சமயம், ஊரென்ன சொல்லும், உலகம் என்ன சொல்லும் என்ற காரணத்தால் இணைந்திருக்கிறார்கள். தனக்காக வாழாமல் ஊருக்காக வாழ வைக்கும் காதல் இப்போது வேண்டுமானால் இனிக்கலாம். நாளையும் இனிக்குமா?

ரஜினி ஏற்படுத்திய மாயை போலவே எனக்கு ஒரு காதலி ஏற்படுத்திய மாயையும் இருந்தது. எந்த எதிர்வினையோ தெரியவில்லை. நான் தூக்கியெறிந்துவிட்டேன். நண்பர்களும் சுற்றமும், இதனை பெரும் குற்றமாகவே கருதி என்னை ஒதுக்கினர்.

இப்படி ஒதுக்கி தள்ளுகிறவர்களெல்லாம் ஒரு குணத்தின் அடிப்படையில் சேர்க்கலாம். எப்படி கெட்டவனை அடையாளம் காட்டுகிறவன் மற்றவர் கண்களுக்கு நல்லவனாக தெரிகிறானோ அப்படித்தான். உண்மையில் இவர்கள் இப்படிக் காட்டிக் கொடுப்பது கூட தாங்கள் நல்லவர்கள் என்று பிரகடணப்படுத்தத்தான். இது அரசியலுக்கும் பொருந்திவருகிறது. ஒரு ஊழலை இன்னொரு ஊழல் ஊருக்குக் காட்டி ஓட்டுக் கேட்கிறது!

காதல் என்ற மாயையில் நான் விழித்தது ஓர் ஆச்சர்யம்தாம். எந்த பொழுதில் என யூகிக்க முடியவில்லை. நிச்சயம் நடந்திருந்த ஒவ்வொரு சம்பவத்திற்கும் என் முடிவிற்கும் சம்பந்தம் இருந்திருக்க வேண்டும். இப்படி ஒன்றின் பின் ஒன்றாக நடக்கும் ஒவ்வொன்றும் அதன் விளைவை நோக்கி நாம்மை நகர்த்திக் கொண்டே இருக்கிறது. எந்த நொடியில் எந்த பொழுதில் அது நமக்கு விழிப்பைக் கொடுக்கும் என தெரியவில்லை. எல்லோர்க்கும் விழிப்பு வருவதும் இல்லை.


நன்றி
 http://www.vallinam.com.my/issue43/thayaji.html
இதழ் 43
ஜூலை 2012

‘அந்திம காலம்’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன்


     

அந்திம காலம்’ - நாவல் படித்த வாசகன் நான் - கேள்விகளுடன்


 (6.6.2012)
    இன்றுதான், ரெ.கார்த்திகேசு எழுதிய அந்திம காலம்நாவலை படித்து முடித்தேன். 1998-ல் எழுதப்பட்ட இந்நாவல் 2007 இல் மறுபதிப்பு வந்தது.  ரெ.கா-வின் மூன்றாவது நாவல் இது.

      மனைவி ஆசிரியர் பயிற்சி கழகத்தில் படித்த சமயம், திறனாய்வு செய்த நாவல் இதுவென அறிமுகம் செய்தார். இந்நாவலை படிக்கும் முன்  ரெ.கா-வின் சில சிறுகதைகள் தவிர (அதுவும் இப்போது நினைவில் இல்லை)எந்த எழுத்துகளும் எனக்கு பரிச்சயம் இல்லை.

    சுஜாதாவின் தொடர்கள், பின்னாளில் புத்தகமாக வெளிவந்தது. அதை தீவிரமாக வாங்கி படித்தேன். அவ்வாறே இந்திரா சௌந்தரராஜன், ஆர்னிகா நாசர் உடன் ராஜேஷ்குமார் அதில் அடங்குவர். ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் ஒரு எதிர்பார்ப்பும் முடிச்சுகளும் இருக்கும். பரப்ப்புக்கு கொஞ்சமூம் பஞ்சம் இருக்காது.  நாவலின் வடிவமைப்பு இப்படித்தான் இருக்குமனெ எனக்குள் நானே முடிவெடுத்துக் கொண்டேன். தன்னையே தனக்கு குருவாக நினைப்பவன் முட்டாள்என விவேகானந்தர் சொன்னதை படித்திருந்தாலும் அதன் உள் அர்த்தம் புரிந்திருக்கவில்லை.

     கால போக்கில் எழுத்துகளில் இருக்கக் கூடிய வித்தியாசங்கள் வாசிப்பின் வழி தானாகவே புரியத் தொடங்கியது. அதன் காரணமாகவே சில காலம் வரை உடன் சுற்றிவந்த பலரிடம் இருந்து விலகும்படி ஆனது. முரண் படுவதால் மட்டுமே என்னை முட்டாளாக்கி வேடிக்கை காட்டியவர்களும் உண்டு. வெறும் பெண் என்ற அமைப்புகளால் மட்டுமே கொண்டாடப்பட்டவரும் உண்டு. ஜால்ராக்களின் சத்தம் சந்தமாய் ஒலிப்பதால் கூட்டம் கூடியவர்களும் உண்டு.

     கடந்த சில மாதங்களாக ஜெயமோகன் எழுத்துகளை படித்து வந்ததில் இருந்து அவர் அறிமுகம் செய்த கதைகளையும் முன்மொழிந்த எழுத்தாளர்களையும் தேட ஆரம்பித்தேன். ஜெ.மோ தன் புத்தகத்தில் நாவல்கள் குறித்து எழுதியதை/ படிக்கும் போது எனக்கும் நாவல் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதற்கு அடித்தளமாக அமைந்தது, ஒருமுறை வல்லினம் கலை இலக்கிய விழாவில் கலந்து கொண்டு நாவல்கள் குறித்து அமைந்த ஜே.மோ-வின் பேச்சுதான் எனலாம்.
 
   பின்னாளில் வல்லினம் அகப்பக்கத்தின் ஆசிரியர் நவினுடன் நட்பு கிடைத்த பிறகு பலவற்றைப் பகிரும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒன்றுதான் அன்று பேசிய ஜெ.மோவின் பேச்சு
.
   சிற்றிதழ்கள் குறித்து பேசும் பொருட்டு , மலேசியாவிற்கு வருவதற்கு முன்பே தலைப்பும் கொடுக்கப்பட்டிருந்ததாம். திடீரெனத்தான் நாவல்கள் குறித்து பேசும்வடி ஆனது. அந்த பேச்சினை இப்போதுகூட நீங்கள்   ‘யுடியூப்’-ப்பில் கேட்கலாம். அதிகம் பேரால் கேட்கப்படும் ஜெ.மோவின் பேச்சுகளில் அதுவும் ஒன்று.

    நல்ல கதைகள் தன்னைத்தானே எழுதிக் கொள்வது போலத்தான் என்னவோ நல்ல பேச்சுகள் தனக்கான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றன போலும்.

   சமீபத்தில் தொடர்ந்து நாவல்களை படிக்கும் வாய்ப்பைக் காலமும் நேரமும் எனக்கு வழங்கியது. ஆர்வம் என்ற பெயரில் எனக்கு நானேப் பெருமை சேர்க்க   விரும்பவில்லை.

   தொடர்ந்து சுந்தர ராமசாமியின் ஒரு புளிமரத்தின் கதை’, தகழி சிவசங்கர பிள்ளை மலையாளத்தில் எழுதி சுந்தர ராமசாமி தமிழில் மொழிபெயர்த்த தோட்டியின் மகன்’, சாரு நிவேதிதா எழுதிய எக்ஸிடென்சியலிசமும் பேன்ஸி பனியனும்’, எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உறுபசி’, வைக்கம் முகமத்து பஷீர் எழுதியஆனைவாரியும் பொன்குருசும்’- (நெடுங்கதை) போன்ற நாவல்களில் மூழ்கியிருந்த பல கேள்விகளை எனக்குள் கேட்டுக் கொண்டே அடுத்த நாவலை எடுக்கும் பொழுதுதான் , மனைவி அந்திம காலம்நாவலை அறிமுகம் செய்தாள்.

    தொடர்ந்து படித்த ஐந்து நாவல்களைக் குறித்து எழுத வேண்டும் என எண்ணினாலும் எழுத்துரு இன்னமும் கிடைக்கவில்லை. அதற்கு ஏன் இந்த அவசரம் அந்திம காலம்குறித்து எழுத..?

   தெரியவில்லை. சில முடிவுகளை நானாக எடுப்பது குறைந்து தானாக நடக்கத் தொடங்கியிருக்கும் நேரம் இது.

   இனி அந்திம காலம்’- நோயாளியில் நெடுந்துயரம் என சொல்லலாமா? அல்லது வயோதிகத்தின் பாவப் பரிகாரம் எனப்  பொருள் கொள்ளலாமா?

  கதையில் நாயகன் சுந்தரம் , தன் வயோதிக காலத்தில் தனக்கு மூளைப் புற்று நோய் இருப்பதைக் தெரிந்துக் கொள்கிறார். அங்கிருந்துதான் நாவல் தொடங்குகிறது.

   தொடக்க அத்தியாயம் வியப்பை எற்படுத்தும் வகையில் எழுதியிருக்கின்றார். குறிப்பாக, ‘காரின் கூரையில் விழுந்த மழை நீர் கண்ணாடியில் ஆறாக வழிந்து கொண்டிருந்தது, அகலாமான கண்ணாடியெங்கும்  மழை வரைகின்ற ஓவியங்கள். காரின் வைப்பர் அந்த ஓவியங்களை இடைவிடாது அழித்துக் கொண்டிருந்தன. டடக்.....ட்டக்... டடக்... அழிக்க அழிக்க/ புதிதாக ஓவியங்கள். அழிவது பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத மழை. அழிப்பதைப் பற்றி குற்ற உணர்ச்சியும் தயக்கமும் இல்லாத வைப்பர். ’ .

    நாவலின் தொடக்க அத்தியாயத்தில் வந்திருக்கும், இந்த வரிகள் முழு நாவலின் சாரத்தை ஓரளவேனும் சொல்லியிருக்கிறது எனவே மனதில் பட்டது. அந்த வைப்பர் போலத்தான் வாழ்க்கையும். வாழ்க்கை எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தயக்கமும் இல்லாமல் ஒவ்வொருவரையும் பாடாய்ப்  படுத்துகிறது. மழையால் ஓவியம் போலக் காட்சியளிக்கும் தண்ணீரெல்லாம், எந்த ஒரு பாரபட்சமுமின்றி அழிக்கப்படுவதும். பின் புதிதாக வரையப்படுவதும் இறப்பையும் பிறப்பையும் சொல்கிறதோ ? பிறக்கிறார்கள் இறக்கிறார்கள். இறக்கிறார்கள் பிறக்கிறார்கள். இதுதான் வாழ்க்கையா..?

    பிறப்பையும் இறப்பையும் மிக சுலபமாகச் சொல்லிவிடலாம். ஆனால் இரண்டுக்கும் இடையில் இருக்கும் அனுபவம் எத்தனை வலிகள் நிறைந்தவை. எப்படி அந்த வலியை கணக்கெடுப்பது? வயது மட்டுமே வலியை/ குறித்த பிரக்ஞையை கொடுக்கிறது.

    ‘அந்திம காலம்நாவலில் வயோதிகர் சுந்தரத்திற்கு வந்திருக்கிற அதே புற்றுநோய் அவரது பேரன் பரமாவிற்கும் வந்திருக்கிறது. மரண வாசலில் இருக்கும் இருவரையும் படிக்கும் போதே வயதின் பிரக்ஞை புரிகிறது.

    தலைமையாசிரியராக  இருந்து பதவி ஓய்வு பெற்ற இரண்டாம் ஆண்டில் அவர் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் யாரும் எதிர்பாராதது. சுந்தரத்தின் மனைவி ஜானகி. மகள் ராதா, மருமகன் சிவமணி, மகன் வசந்தன், பேரன் பரமா.

     அவ்வபோது சுந்தரத்தின் பழைய நினைவுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சுந்தரம் ஜானகி இருவரின் அறிமுகமும்  , திருமணம் நடந்த கதையெல்லாம் சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இவர்களின் அன்பான வாழ்க்கை முறைக்கு முற்றிலும் மாறுபட்டிருந்தாள் மகள் ராதா. ராதாவும் கணவன் சிவமணியும் காதலித்துத்தான் திருமணம் புரிந்திருந்தார்கள் என்றாலும், தன் தாய் தந்தையைப் போல இல்லாமல், மனமுறிவுக்கு செல்கிறார்கள். ராதாவால் சிவமணியின் மிருகக் குணம் பொறுக்க முடியாமல் 3 வயது பரமாவை தன் பெற்றோரான சுந்தரம் ஜானகியிடம் கொடுத்துவிட்டு மறுநாள் வெளிநாடு சென்றுவிடுகிறாள். தனக்கு ஒரு வெள்ளைக்காரனைப் பிடித்திருப்பதாகவும் அவரும் தன்னை விரும்புவதாகாவும் , விரைவில் பரமாவை அங்கே கொண்டு செல்லப்போவதையும் கடிதம் வழி சொல்லியிருந்தாள். மேற்கொண்டு முகவரியோ தொலைபேசி எண்ணோ இருக்கவில்லை. அவளே அடிக்கடி அழைப்பதாக எழுதியிருந்தாள்.

    சுந்தரத்துக்கு நல்ல நண்பனாக இருக்கிறார் ராமச்சந்திரன். நல்ல நட்பிற்கு அடையாளமாக இவர்கள் இருவரையும் சொல்லலாம்.

    சுந்தரத்தின் மறுமகனான நேசமணி மிருகக் குணத்தில் இருந்து, தன் குழந்தை பராமுக்கு எற்பட்டிருந்த நோயால் மனிதனாகின்றான். தன் மாமனாரிடம் அவன் மன்னிப்பு கேட்கும் நேரம் படிக்கும் போதே மனதைக் கனக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் பரமா இறந்துவிடுகிறார். குழந்தையின் மரணத்திற்குக்  காரணம் தங்களின் ஓயாத சண்டைதான் என உணர்கிறார்கள் நேசமணியும் ராதாவும். சண்டைபோட்டு ஆளுக்கு ஒரு புறம் இருந்த நேரங்களுக்கு பதிலாக குழந்தையை கவனித்திருந்தால் , நோயின் அறிகுறி தொடக்கத்தில் இருந்தே கண்டு கொண்டு சிகிச்சை கொடுத்திருக்கலாம்.

    சுந்தரத்தின் குடும்பத்தில் இருக்கும் மற்ற இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை/ சொல்லவேண்டும். ஒருவர் சுந்தரத்தின் அக்கா அன்னபூரணி,  மற்றொருவர் சுந்தரத்தின் அத்தை.

    எல்லா சமயமும்  சூழ்நிலைக் கைதி ஆகாமல் பதட்டமில்லாமல் ஒவ்வொன்றையும் செய்துவருகின்றார் அக்காள் அன்னபூரணி.

    இளம் விதவையான சுந்தரத்தின் அத்தை, கணவன் நீரில் மூழ்கி இறப்பதைப் பார்த்து பீதிக்குள்ளாகி, மனப்பாதிப்பை அடைகிறார். தன் வாழ்நாளில் கடைசி வரை, ‘தண்ணி பக்கம் போகாதேஎன இதையே சொல்லி வருகிறார். துணிகளை துவைப்பது முதல் சமைப்பது வீட்டைச் சுத்தம் செய்வது என எதைச் செய்தாலும் அதற்கான பலனைத் தேவையில்லாமல் போனது அத்தைக்கு. ஒரு தேர்ந்த ஞானியைப் போலவே இவர் எனக்கு தெரிகிறார். வீட்டில் இறப்பு நடந்த சமயம் , சுந்தரத்துக்குப் புற்றுநோய் எனத் தெரிந்த பொழுதும் என எல்லா காலகட்டமும்  மந்திர உபதேசம் போல  ‘தண்ணி பக்கம் போதான்னு சொன்னே கேட்டியாஎன்பதையே கேட்கிறார்.  ஞானிகள் இப்படித்தானோ  

    தனக்கு கடமையாக்கப்பட்டதை  செய்த பிறகும் செய்யும் பொழுதும் மனம் ஒன்றையேதானே நினைத்திருக்கும்..!

   நோயின் பிடியில் ஒவ்வொரு மாறுதல்களியும் சுந்தரத்தின் மூலம் நாமும் தெரிந்து கொள்ள முடிகிறது. படிப்பவர்களுக்கு ஓரளவேனும் புற்று நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பலாம்.

    என்னை/ கவர்ந்த கதாபாத்திரம்  என மதர் மேகியை/ சொல்லலாம். நோயாளிகளுடன் உரையாடவும் தொண்டூழியம் செய்யவும் இருக்கிறார் இவர். அவ்வ/போது நோயாளியான சுந்தரத்துக்கு இவர் சொல்லும் அறிவுரைகள் அனைவருக்கும் பொருந்தும் படி இருக்கிறது.

    சுந்தரம் சொல்லும் கதையில், அவ்வபோது கதை சொல்லியும் கதை சொல்கிறார். சில இடங்களில் விளைவுகளைச் சொல்லிவிட்டு அடுத்த பத்தியில் அதன் சம்பவங்களைச் சொல்வது ரசிக்கும்படி இருந்தது. இடையிடையில், சுந்தரம் படிக்கும் நூல்களில் இருந்த மேற்கோள்களைப்  
 படிப்பது, சுவாரஸ்யமாக இருக்கிறது.

    புற்றுநோய் ஆராய்ச்சியாளராக வரும் மருத்துவர் ராம்லியின் கதாபாத்திரம் திருப்பத்தைக் கொடுக்கும் என எதிர்ப்பார்க்க/பட்டு இயல்பாகவே இறுதிவரை செல்கிறது. சுந்தரத்தின் பழைய மாணவர்தான் இந்த ராம்லி. அப்போது, கட்டொழுங்கு ஆசிரியரான சுந்தரத்திற்கும் பிரச்சனை கொண்ட மாணவனான ராம்லிக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனை நேர்மைக்கு அதிகாரத்திற்கும் ஏற்படும் போராகச் சொல்லலாம். அதனை நல்ல சிறுகதையாக கணக்கெடுக்கலாம். நல்ல கதை சொல்லல், திருப்பம், சரளமான நடை.

     மேற்கொண்டு சொல்ல பல இருந்தாலும், நீங்களே இந்நாவலைப் படிக்கும் போது கிடைக்கவிருக்கும் அனுபவத்தை நான் கெடுக்க விரும்பவில்லை.

    இந்நாவலை எழுதி ரெ.கா-விற்கு, இந்நாவலை வாசித்தவன் என முறையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆனால் அவரிடம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். இதுதான் உங்கள் எழுத்துகளின் முதல் நாவலாக நான் படித்தது என்பதால் உங்கள் எழுத்துகளும் கதை சொல்லும் முறைகளும் எனக்கு  பரிச்சயமில்லை. அதனால் இந்த/ கேள்விகள் என நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அல்லது வாசித்தவன் முன் வைக்கும் சந்தேகங்கள் எனவும் நீங்கள் பொருள் கொள்ளலாம்.


1.   சுந்தரத்தின் மகனாக சில இடங்களில் மட்டும் சொல்லப்படும் வசந்தன்  என்ன ஆனான்.? தொடக்கத்தில் அவன் குறித்து/ சொல்கிறீர்கள் அதன் பின் இடையில் ஒரு முறை, அடுத்து கடைசி அத்தியாயத்தில்  வருகிறான். தந்தைக்குப் புற்று நோய் என எல்லாருக்கும் தெரிந்த பிறகும் கூட வெளிநாட்டில் இருக்கும் மகனுக்கு தெரியாதா என்ன..?2.    300 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை நான் 8 நாள்களில் படித்து முடித்துவிட்டேன். ஆர்வம் மட்டும் காரணமல்ல, உங்கள் கதை சொல்லும் முறையிலும்தான். இப்படி விரைவாகப் படிக்கும் படி இயல்பாக கதை கொண்டு சென்ற நீங்கள் ஏன் கடைசி அத்தியாயத்தில் அப்படி ஒரு காரியத்தைச் செய்தீர்கள்? கடைசி பத்தொன்பதாவது அத்தியாத்தில் நீங்கள் ஐந்து பக்கங்களில் எழுதியிருந்ததை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தீர்களா..? ஏன் அப்படி ஒரு நாடகத்தன்மை (இவ்வார்த்தை புண்படுத்தினால் மன்னியுங்கள் எனக்கு வேறு வார்த்தை கிடைக்கவில்லை). நீண்ட கதையின் சுருக்கம் போல ஏன் அப்படி அவசரத்தில் முடித்துவிட்டீர்கள்.? யாரோ கதையை முடிக்கும் படி ஒரு மணிநேரம் கொடுத்தது போல அல்லவா  நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்?

3.    ஒருவேளை நாவலில் முடிவு உங்கள் எழுத்தின் பாணியோ..?4.  சீதை பதிப்பகம் வெளியீடு செய்த நாவலைத்தான் நான் வாசித்தேன். இதில் உள்ள சில மலாய் வார்த்தைகளுக்கு தமிழிலும் அதன் அர்த்தத்தை கீழ் எழுதியிருக்கலாமே..?


வாசகன் என்ற முறையின் படித்த நாவல் குறித்து பதிவு இது.
இப்படிக்கு, தயாஜி.

ஜூலை 02, 2012

ஐம்பது கிலோ நமிதாவும், காணாமல் போன நயன்தாராவும்


    நீங்க எவ்வளவு நேரம் தூங்குவிங்க  ?  நாம சொல்ற  பதிலை வச்சே நம்மை சில பேர் கணிச்சிருவாங்க. சோம்பேறி, தூங்குமூச்சி, அதுக்கும் மேல உருப்படாதவன். சொல்றவங்க என்னத்த உருப்பட்டாங்கன்னு தெரியலை. கேட்டாலும் சொல்ல மாட்டாங்க. அது வேற கதை.

   சரி நம்ப கதைக்கு வருவோம். மனிதனோட சராசரி தூக்கம் ஆறு மணிநேரம்னு யாரு சொல்லியிருப்பா ? எதுக்காக எல்லோரும் அதையே கடைபிடிக்கறாங்கன்னு எனக்கும் தெரியலை. அந்த ஆறு மணிநேர தூக்கத்தையும் தாண்டியும் உங்களைத் தூங்க சொன்னா சுமாரா எத்தனை மணி நேரம் தூங்குவிங்க சொல்லுங்க.
    ஒரு மணிநேரம். ரெண்டு மணிநேரம் . என்னங்க , அவ்வளவு நேரம்தானா. நான் எவ்வளவு நேரம் தூங்குவேன்னு தெரியுமா? ஒரு நாள் முழுவதும். வெளிய இருந்துப் பார்க்கத்தான் இது தூக்கம். ஆனா தூங்கற எனக்கு இது ஒருவகை பயணம். டிக்கட் செலவில்லை, லக்கேஜ் அளக்கவில்லை  துணையாகத் தொல்லை யாரும் இல்லை. தனியான பயணம் ஆனால் சுவையான பயணம். இந்த பயணத்தை நீங்க புரிஞ்சிக்கனும்னா, ஒரு வழி இருக்கு.
   ரொம்ப சாதாரணமான கேள்விகளை நான் கேட்கறேன் பதில் சொல்றிங்களா...? பதிலை மனதில் நினைச்சிக்கோங்க. அது கூட போதுமானதுதான். நமக்கு தேவை நினைப்பு.
கேள்வி 1.
ரஜினியுடன் கோச்சடையானின் நடிக்க ஆசையா..?
கேள்வி 2.
50 கிலோ நமிதாவுடன் நடனம் ஆட ஆசையா..?
கேள்வி 3.
நினைத்த பெண்களின் ஒரே நாயகனாக ஆசையா..?
கேள்வி 4.
காணாமல் போன நயன்தாராவை தேடிக் கிடைக்க ஆசையா..?
கேள்வி 5.
தமிழர்களெல்லாம் தமிழ் பேசிக் கேட்க ஆசையா..?
கேள்வி 6.
எழுத்தாளர் சங்கத்துல இருக்கறவங்க எல்லோரும் வாசிக்கனும் யோசிக்கனும் விவாதிக்கனும் எழுதனும்னு ஆசையா...?
கேள்வி 7.
ஒரு பத்திரிகையும் இன்னொரு பத்திரிக்கையும் மக்களுக்காக மட்டுமே பாடுபடனும்னு ஆசையா...?
கேள்வி 8.
கதையை கதையா மட்டும் பார்க்கற பயபுள்ளைங்க பக்கத்துல இருக்கனும்னு ஆசையா..?

   எட்டு  கேள்விகளோடு நிறுத்திக் கொள்கிறேன். இரண்டு காரணம் இதற்கு உண்டு;
ஒன்று; எனக்கு எட்டு எண் ராசி.
மற்றொன்று; அதுதான் ஏழரையைத் தாண்டி வந்திருக்கு.

    தூக்கம் வெறும் உடல் சோர்வுக்கு மட்டுமில்லைங்க. அதையும் தாண்டிய சூட்சுமம் நிறைந்தது. சூட்சுமம்னு நான் சொன்னதும், இது ஏதோ மர்மக்கதை ஆவிக்கதைன்னு படிக்க ஆரம்பிச்சிடாதிங்க. அப்பறம் தேவையில்லாம என்னை திட்டுவிங்க. அப்படியே போகிற போக்குல படிச்சோமா போனோமான்னு இருங்க. அதான் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது. இல்லைன்னா மேல கேட்ட கேள்விகளுக்கேகூட நீங்க என்னை கடுமையான முறையில் விமர்சிப்பிங்க.
    ஒன்னு கவனிச்சிருக்கிங்களா, கருத்தை கவனிக்காம அதை சொன்னப் பாவத்துக்காக பாடாய் படுத்தப்பட்டவங்க நம்மவங்கத்தான். படுத்தறவங்களும் நம்மவங்கத்தான். ஊர்ல உலகத்துல நடக்கறத சொல்லைங்க, எனக்கு தெரிஞ்ச கொஞ்சூண்டு இலக்கியத்துல சொல்றேன். கோவிச்சிக்காதிங்க.
    தூங்கி எழுந்திருக்கும் நேரத்துக்கு முந்தைய பதினைஞ்சு முதல் முப்பது  நிமிடங்களுக்கு, ஆல்பா நிலைன்னு பேரு, தெரியுமா. ஆல்பா நிலை தியானம்னு கூட இதை சொல்றாங்க. இந்த நேரத்துலதான், நம்முடைய மனம் ரொம்ப இலகுவா இருக்குமாம். இலகுன்னா என்னன்னு கேட்கறிங்களா..?
    தனக்கு ஓட்டு போடுவாங்கன்னு தெரிஞ்ச நண்பர்களை , அவங்க தகுதியானவங்களோ இல்லையோ அதெல்லாம் கணக்கில் சேராது. அவங்களை சங்கத்துல சேர்த்துக்கிட்டு வருசா வருசம் தேர்தல் நடத்தற தலைவரா இருக்கறதே கூட இலகுவான காரியம்தான். என்ன ஒன்னு, இந்த பிம்பமெல்லாம் கொஞ்சம் நாள் கம்பத்துல ஏறிடும்.
    இதை படிச்சிட்டு நேரா, அவர்கிட்ட சொல்லிடாதிங்க. ஏற்கனவே எனக்கும் அவிங்களுக்கும் வாய்க்கா தகராறு இருக்கு.  என்ன தகராறு....? சரியா சொன்னிங்க ‘எனக்கும் அவிங்களுக்கும் வாய்க்கா தகராறு இருக்கு’. ஆனா ஒன்னு அதே வழிமுறைய நீங்க திறம்பட கத்துக்கிட்டிங்கன்னா, வருசத்துக்கு என்ன மாசத்துக்கு ஒரு தடவைகூட தேர்தல் வைக்கலாமே. நீங்கதானே எப்படியும் தலைவரா வருவிங்க, அப்புறம் என்ன கவலை.
    நான் பாருங்க, ஆல்பா-வை விட்டுட்டு அந்த பக்கம் போய்ட்டேன். அந்த பக்கம்னு நான் சொல்றதை அவர் பக்கம்னு புரிஞ்சிக்காதிங்க. அந்த பக்கம் அவ்வளோதான்.
   அந்த ஆல்பா நிலையில நாம தூங்கியும் தூங்காமலும், எழுந்தும் எழாமலும் இருப்போம். இலகுவா இருக்கற மனசுகிட்ட நீங்க எதை தொடர்ச்சியா சொல்றிங்களோ அதையே மனசு கப்புன்னு புடிச்சிக்குமாம். எப்படி.... தொடர்ந்து தலைவரா இருக்கற மாதிரியான்னு கேட்டு என்னை சிக்கலில் மாட்டிவிட்டுடாதிங்க. அது இலகு என்பதற்கு இலகுவா நான் சொன்ன உதாரணம்.
    தொடர்ந்து ஆல்பா நிலையில மனதிடம் பேச பழகிட்டா, மனம் நம் வசமாகிடுமாம். இதில் என்ன ஒரு கஷ்டம்ன்னா, நமக்கு அந்த நேரத்துலதான் கனவு மேல கனவா வரும். அந்த கனவுகளுக்கு காரணம் இருக்கு, அவை வெறும் கனவுகள் அல்ல. மாறாக அவை எல்லாம் நம் ஆழ்மனதின் செயல்பாடு.
    அந்த கனவு எப்படிப்பட்டது தெரியுமா..? அதற்கான பதில்களை பார்ப்போம்.
பதில் 1.
ரஜினியுடன் கோச்சடையானில், அவருக்கு இணையான வில்லனாக நடித்துக் கொண்டிருப்பீர்கள்.
பதில் 2.
50 கிலோ நமிதாவை, அப்படியே தூக்கி இடுப்பில் உட்கார வைத்து பாடல் முழுக்க ஓடி வருவீர்கள்.
பதில் 3.
நினைத்த பெண்களின் நாயகனாக நடந்துவருவீர்கள்.
பதில் 4.
காணாமல் போன நயன்தாராவைத் தனியாளாய் தேடி கண்டு பிடித்துவிடுவீர்கள்.
பதில் 5.
தமிழர்களெல்லாம் ஒருவருக்கொருவர் தமிழைப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
பதில் 6.
எழுத்தாளர் சங்கத்துல இருக்கறவங்க எல்லோரும் தாங்கள் வாசித்ததை, எழுதியதையும் தகுதியானவர்களோடு விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.
பதில் 7.
ஒரு பத்திரிகையும் இன்னொரு பத்திரிக்கையும் மக்களுக்காக மட்டுமே பாடுபடுவது நினைத்து பெருமிதம் கொள்வீர்கள்.
பதில் 8.
கதையை கதையா மட்டும் படித்து அதன் உள்ளடக்கத்தை நேர்மையான முறையில் விமர்சித்துக் கொண்டிருப்பார்கள்.
    இது போன்ற கனவுகள்தான் ஒன்றின்பின் ஒன்றாக வந்துக் கொண்டிருக்கும். கூர்ந்து கவனித்துப் பார்த்தால், மேலே என் கேள்விகளுக்கும் உங்கள் கனவுகளுக்கும் இருக்கும் ஒற்றுமை புலப்படும். எப்போதோ நீங்கள் ஆசைப்பட்ட ஒன்று, எப்போதோ நீங்கள் எதிர்ப்பார்த்த ஒன்று, எப்போதோ நீங்கள் விரும்பிய ஒன்று, அதிகாலை ஆல்பா நிலையில் பதிந்திருக்கிறது.
   அதுவே கனவாக மாறியிருக்கிறது. பின்னர் தொடர் கனவாகிவிட்டிருக்கிறது. அந்த கனவினை நினைவாக்க நீங்கள் நினைத்தால் மட்டுமே முடியும். இதைத்தான் பிரம்ம முகுர்த்தம் என சொன்னார்களோ என்றுகூட எனக்கு சந்தேகம் இருந்தது. தமிழில் வரும் பிரம்ம முகுர்த்தமும், ஆங்கிலத்தில் வரும் ஆல்பா தியானமும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் ஆங்கிலத்தில் சொல்லபடும் ஆல்பாகுத்தானே மதிப்பு அதிகம்.
    யோசித்து பாருங்கள் முன்னமே நான் பிரம்ப முகுர்த்தம் என சொல்லியிருந்தால், கனவின் ஆழத்தை விடவும் கல்யாண வேலைகள்தான் உங்கள் நினைவுக்கு வந்திருக்கும். ஐயார் பெயரில் சில பொய்யர்களை  பணம் கொடுத்துக் கூட்டிவந்திருப்போம். அவரும் மனனம் செய்ததை அர்த்தம் புரியாமல் ஒப்புவிப்பார். கல்யாணத்தை கவனிக்காமல் கண்டகண்ட கதைகளை பேசிக் கொண்டிருக்கும் பெண்கள், அரை தூக்கத்தில் இருக்கும்  ஆண்கள், உழைத்துக் கொண்டிருக்கும் நண்பர்கள். உட்கார்ந்திருக்கும் உறவுகள் இப்படி இல்லாததையும் பொல்லாததையும்  மட்டுமே நினைத்திருப்பீர்கள்.
    நான், ஆல்பா என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்ததும் ஊருக்கும் உலகத்துக்கும் ஏதோ சொல்லவறேன் பேர்விழி மாதிரி என்னை கவனிக்க ஆரம்பிச்சிங்க. நானும் உங்க நினைப்ப முடிந்தவரை காப்பாத்தியிருக்கேன்னு நினைக்கறேன்.
   அது என்னமோ தெரியலைங்க, வெள்ளைக்காரனுங்களை விட நாமதான் அவன் மொழியை நேசிக்கிறோம். இதுவும் ஆல்பா நிலையில் வந்த எண்ணமாக இருக்கலாமோ?
    இருங்க, இருங்க எனக்கு தூகம் வர மாதிரி இருக்கு. இவ்வளவு நேரம் முழிச்சிருந்ததே பெரிய ஆச்சர்யம். நயன்தாராவைத தேடனும் அப்பறம் மிக முக்கியம் கோச்சடையான் இல்லை; நமிதா. அதுவும் ஐம்பது கிலோ. அல்பா.. ஐம்பது கிலோ.. அல்பா.. 50 கிலோ.. ஆல்லோ.. 50 கில்பா.... நமீம்மிம்மிம்மிமிமிம்மிம்ம்.......- தயாஜி -

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்