பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 04, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் 2/20 -


‘தினம் ஒரு பெருமாள்முருகன் சிறுகதை – பொண்டாட்டி 2/20

பெருமாள்முருகனின் ‘பொண்டாட்டி’ சிறுகதை, கொஞ்சம் கிலுகிலுப்பான கதை என்று சொல்லலாம். ஆனால் கதையின் போக்கில் கிலுகிலுப்பைவிடவும் இன்னொன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கும். அதனை வாசிக்கும் வரை அப்படியொன்று நடக்கும் என நம்மால் யூகித்திருக்க முடியாது.

ஒரு சிறுகதையில் அதன் எழுத்தாளர் ‘எழுதுகிற இடம்’ எவ்வளவு முக்கியமோ அதே போல அல்லது அதைவிட ஒருபடி மேலேயே அந்த எழுத்தாளர் ‘எழுதாமல் விட்ட இடமும்’ முக்கியத்துவம்  பெறுகிறது என்பதற்கு இச்சிறுகதை ஒரு சான்று.

கதையின் நாயகன் முருகேசுவிற்கு காதலியிடமிருந்து குறுஞ்செய்தி வருகிறது. அவனுக்கு தலைகால் புரியவில்லை. இதற்குத்தான் இத்தனை நாட்களாய் ஏங்கியிருந்தான். பலமுறை முயன்றும் சாத்தியப்படுத்த முடியவில்லை. இன்று மதியம் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள்; மதிய உணவை சாப்பிட தன் வீட்டிற்கு அவனை அழைத்திருந்தாள் காதலி. முதலிரவுக்கு தயாராகும் மாப்பிள்ளை போல தயாராகிறான்.

சீக்கிரமே காதலியின் வீட்டை அடைந்துவிட்டான். அவள் கேட்டுகொண்டதன்படி யார் கண்ணிலும் படவில்லை. அவளும் ஆசையாக அவனை வரவேற்று இனிதான் சமைக்க வேண்டும் என்கிறாள். இருவரும் சமையல் அறைக்கு செல்கிறார்கள். அவள் அவனை ‘புருசா’ என அழைக்கவும் அவன் அவளை ‘பொண்டாட்டி’ என அழைக்கவும் இருவருக்குமெ இனம்புரியாத இன்பம். 

அவன் இறுக்கமாக இருப்பதை உணர்ந்த அவள் அவளின் தந்தையின் கைலியை எடுத்து கட்டிக்கொள்ள சொல்கிறாள். அவளும் குளித்துவிட்டு வருவதாய்ச் சொல்கிறாள். இருவருமே அறைக்குள் நுழைகிறாகள். 

இத்தனை நாட்களாய்க் காத்திருந்த இரு உள்ளங்களும் மெல்ல மெல்ல இணையப்போகும் அந்தத் தறுவாயில்தான் யாரும் எதிர்ப்பாராத ஒரு சம்பவம் நடக்கின்றது. அவளது அக்கா அறைக்கு முன் நின்று கத்துகின்றாள். தன் தங்கையை அறையில் இருந்து இழுத்துப் போட்டு அடைக்கவும் செய்கிறாள். 

முருகேசனுக்கு காதலியின் அக்காவை முன்னமே தெரியும். அது அவனது காதலிக்கும் தெரியும். சொல்லபோனால் அவளைத்தான் முதன்முதலாகப் பார்த்தான். 

கொஞ்சம் சிரிக்காத அவளின் முகம் அவனை கவர்ந்தது. அவளை பின் தொடர்ந்தவன் ஒருநாள் அவளிடம் பேச முயன்றான். அவளோ “மூடிகிட்டு போ… இந்த வேலையை என்கிட்ட வச்சிக்காத...” என்று திட்டிவிட்டு சென்றிருக்கிறாள். இதுபற்றி தன் நண்பனிடம் சொல்லும் போது நடக்கும் உரையாடலை எழுத்தாளர் நாம் சிரிக்கும்படி எழுதியிருப்பார்.

அந்தச் சம்பவம் நடந்து ஆறேழு மாதங்கள் கழித்துதான் அவளது தங்கை என்று தெரியாமலேயே  இவளுடம் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. அவர்கள் இருவரையும் சந்தித்த அக்கா; அவன் தன்னிடம் செருப்படி வாங்கி சென்றவன் என்றும் இவளை கர்ப்பமாக்கிவிட்டு ஓடப்போகிறான் என்றும் சொல்லி தட்டிக்கழிக்கின்றாள். ஆனாலும் தந்தைக்கு அந்த வார்த்தைகளின் மீது நம்பிக்கை இல்லை. நேரடியாக காதலனிடம் அதுபற்றி கேட்கிறாள். நடந்ததை சொல்கிறான். இருந்தும் அவனுடம் பழகுவதை அவன் கை தன் மீது படுவதை எச்சரிக்கையாகவே கையாண்டாள்.

இதற்கிடையில் இருவருக்குள்ளும் பூத்த காதல் அடுத்த கட்டத்திற்கு நகர தயாரானது. யாருமில்லாத சமயம் வீட்டிற்கு அழைத்து அக்காவிடம் இப்போது அடி வாங்கி கொண்டிருக்கின்றாள். 

காதலி அடி வாங்குவதை தாங்காது அங்கிருந்து ஓடக்கூடாது என்று நினைத்து அக்காவை தடுக்கின்றான். அவள் என் பொண்டாட்டி என்றும் சொல்லி காதலியை தன்பக்கம் இழுக்கின்றான். 

அது அக்காவை மேலும் கோவப்படுத்தியிருக்கக்கூடும். அவனையும் கன்னத்தில் பளார் என்று அறைகிறாள். இதுவரை அக்காவிடம் அடிவாங்கி காதலனுக்கு பின்னால் மறைந்து கொண்ட காதலிக்கு சட்டென ஆவேசம் வந்துவிட்டது. ‘புருசா…புருசா..’ என மந்திரத்தை உச்சரித்தபடி அக்காவை பிடித்து இழுத்து தள்ளுகிறாள். அக்காவோ சுவரில் மோதி இரத்தம் ஒழுக கீழே விழுகிறாள் என கதை முடிகின்றது.

இச்சிறுகதையை வாசித்து முடித்தபின் மீண்டும் சிலவற்றை நினைத்துப் பார்த்தேன். தன் காதலன் தன்னை விட்டு தப்பித்து ஓடாமல் ‘அவ என் பொண்டாட்டி’ என சொன்ன பிறகுதான் அவளுக்கும் அந்தச் சூழலை எதிர்கொள்ள துணிச்சல் வந்திருக்கிறது. அங்கு இருவரையும் காதல் காப்பாற்றியது என்றும் சொல்லலாம்தான்.

ஆனால்; இன்னொன்றையும் யோசிக்கும் போதும் மனம் ஏனோ பதட்டமடைகிறது. காதலி வீட்டிற்கு அழைத்திருக்கிறாள். சமையல் அறைக்கு வரவும் அப்பாவின் கைலியைக் கட்டும் அளவிற்கு விடுகிறாள் என்றால் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள் என உறுதியாய்த் தெரிந்து வைத்திருப்பாள். அப்படி இருந்தும் அக்கா அங்கு எப்படி சரியான நேரத்திற்கு வந்தார். 

அதுவும் அதுவரை அக்கா எங்கிருந்திருப்பாள். ஏன் அக்கா அத்தனை ஆவேசம் வந்தவளாய் தங்கையைப் போட்டு அடிக்கின்றாள் என யோசிக்கும் போது; கிலுகிலுப்பு என நினைத்த கதை அதையும் தாண்டி இன்னொரு இடத்திற்கு செல்லத் தொடங்குகிறது.

 அது நாயகன் தன்னிடம் பேச வந்த முதல் நாளுக்கு பின் அவன் வராத நாட்களை நினைத்து அக்கா ஏங்கிய நாட்களாக இருக்கலாமோ என நமக்கு தோன்ற வைக்கிறது.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்