பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 20, 2019

நிலங்களின் நெடுங்கணக்கு - கூட்டலாம் கழிக்கலாம்

நிலங்களின் நெடுங்கணக்கு – கூட்டலாம் கழிக்கலாம்


    சமீபத்தில் மதியழகனின் நாவல் ஒன்று வெளியீடு கண்டது. ஆச்சர்யம் என்னவெனில் தொடர்ந்து சில வாரங்களுக்கு அந்நாவல் குறித்து பலர் தத்தம் வாசிப்பு  அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். இது வழக்கமானதுதானே இதிலென்ன ஆச்சர்யம் உனக்கு என்கிற கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கும்.

   வழக்கமான இங்கு வெளியிடப் படக்கூடிய புத்தகங்களுக்கு உடனுக்குடன் விமர்சன கட்டுரையோ வாசிப்பு அனுபவ கட்டுரைகளோ வருவது குறைவு. அதுவும் நம்முடைய எழுத்துகளை எழுத்தாளர் மதிப்பாரா என்கிற ஐயமும் கூடவே இருக்கிறது. 

“ஆமா அந்த கதைய படிச்சியா?”

“படிச்சேன் படிச்சேன்”

“எப்படி எழுதியிருக்காரு?”

 “என்னத்த சொல்ல எப்போதும் போலதான் சொதப்பியிருக்காரு… நல்ல கரு வேற மாதிரி கொண்டு போய்ருக்கலாம்…”

“ஒ.. சரி அதை பத்தி நீ எதாச்சும் எழுதி அனுப்பேன்..”

 “நான் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கல அப்படித்தானே… என்னமோ நாம எழுதினத படிச்சிடற மாதிரியும்… அதை ஏத்துக்கற மாதிரியும்ல நீ பேசற….”

 “ஆமா…. புத்தகத்தை வாங்களையே தமிழ் சமூகம் உருப்படுமான்னு ஒப்பாரி ஒரு பக்கம்… அதை படிச்சி ஏதாச்சும் நாம எழுதிட்டா… இதை படிச்சி புரிஞ்சிக்கற அளவு நமக்கு அறிவில்லைன்னு பேசறது…”

    இந்த உரையாடல் கற்பனைதான் என்றாலும் அதிலுள்ள அர்த்தம் உங்களுக்கு புரிந்திருக்கும் ஏனெனின் நீங்கள் எல்லாம் அறிவு உள்ளவர்கள் !

   சரி நம்ம கதைக்கு வருவோம். இப்படியான சூழலில்தான் மதியழகனின் ‘நிலங்களில் நெடுங்கணக்கு’ நாவல் வெளியீடு கண்டு சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்யப்பட்டு வாசித்தவர்கள் ஆங்காங்கே அந்நாவல் குறித்து ரசனை கட்டுரைகளை பகிர்ந்து வருகிறார்கள்.

   அப்படியென்ன முக்கியமான நாவல் இது என்ற சந்தேகம் வருவதில் தவறில்லை. அதே சமயம் அப்படியொன்றும் நீங்கள் வாசித்தேயாகவேண்டிய அதி முக்கியமான புத்தகம் அல்ல. ஆனால் இதன் தேவை இப்போது இருக்கிறது.

இது ஒரு மர்ம நாவல்.

    ஆனால் வாசிக்கின்றவர்களை சில பக்கங்களிலேயே கட்டிப்போட்டு விடும் அளவுக்கு சுவாரஷ்யமான நாவல். மலேசிய நாட்டை பின்புலமாக கொண்டாலும் அதை தாண்டியும் நம்மை நகர்த்துகின்றது. நாவலில் கூறப்பட்ட விபரங்கள் ‘கூகலிடம்’ கேட்டால் , அதுவும் உண்மைதான் என்பதற்கான கட்டுரைகளும் காணொளிகளும் உள்ளதை நமக்கு காட்டுகிறது.

    மலேசியர்கள் மட்டுமல்லாது வெளி நாட்டவரும் புரிந்துக்கொள்ளும் வகையில் கதையோட்டத்தை ஆசிரியர் கையாண்டிருக்கின்றார்.

    நம்மை சுற்றி நடந்துக் கொண்டிருக்கும் ஒவ்வொன்றின் பின்னாலும் ஓர் அரசியல் இருப்பதையும் நாம் எப்போதும் யாராலோ கவனிக்கப்படுகின்றோம் என்ற பய உணர்வை  வாசகன் மனதில் இந்நாவல் வைக்கிறது. 

    உதாரணமாக , இரவில் வீடு வந்து சேர்ந்த நாயகன் வரவேற்பறையில் அமர்ந்து எதிரே இருக்கும் கடிகாரத்தை பார்க்கிறார். எப்போதும் போல செய்யவேண்டியவற்றை செய்துவிட்டு உறங்கச் செல்கிறான். மறுநாள் அந்த பூட்டிய வீட்டினுள் வரவேற்பறையில் இருந்த எல்லாமே வேறு மாதிரி மாற்றி அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அது நாயகனை பதட்டமடையச் செய்கிறது.

   வாசிக்கையில்; இவ்விடத்தில் நம்மால் அதிர்ச்சியை அடக்காமல் இருக்க முடியாது. இம்மாதிரி பல மர்மங்கள் பரபரப்பும் அடங்கியதுதான் இந்த நாவல். ஒவ்வொரு அத்தியாயத்திலும் நம்மை கட்டிப்போடுகின்றார் நாவலாசிரியர்.

   காணாமல் போயிருக்கும் தொல்பொருள் ஆராய்ச்சியாளரை நாயகன் தேடிச் செல்கிறான். அவனது பயணத்தில் அவன் சந்திக்கும் சவால்களும் மர்மங்களும்தான் கதை.

   இந்நாவலை வாசிக்கையில் எனக்கு செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் நினைவுக்கு வந்தது.

    அப்படத்தை இடைவேளை வரை இருக்கையை விட்டு நகராமல் ரசித்தேன். காணாமல் போன தந்தையை அதிகாரிகள் உதவியுடன் தேடிச்செல்லும் மகள். அவளின் பயணமும் உடன் வருபவர்கள் சந்திக்கும் சவால்களும் இன்னல்களும் நன்றாகவே சொல்லப்பட்டிருக்கும். 

   கடைசியில் மூன்று பேர் மட்டும் தங்கிப்போவார்கள். அவர்களின் தொடர் பயணத்தின் வெற்றியாய் சோழ ராஜ்ஜியத்தை கண்டுபிடித்து விடுவார்கள். அங்கே ஒரு நபர் இவர்களை பின்தொடர்வார். வெற்றிக்களிப்பில் இடைவேளை என்று போடுவார்கள்.

    என் வரையில் அதுவரையே அது நல்லதொரு கதையாக பார்ப்பவரை கட்டிப்போடும் கதையாக இருந்தது. அதே போலத்தான் இந்த முழு நாவலும் அமைந்திருக்கிறது.

    நாவலில் முடிவில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் இப்போது அதைப்பற்றி பேசுவது புது வாசகர்களின் சுவாரஷ்யத்தை குறைக்கக்கூடும்.

    மொத்தத்தில் வாசிப்பின் ருசியை இந்த நாவலில் நாம் கண்டறியலாம். தங்குதடையின்றி வார்த்தைகளை எழுத்தாளர் கையாண்டிருக்கிறார். இன்றைய பரபரப்பு சூழலில் ஒரு மாற்றத்துக்காக இந்நாவலை வாசிக்கலாம்.

 சொல்லப்போனால் பெரிய பட்ஜெட் கொடுக்க யாரும் முன்வந்தால் இந்நாவலை சினிமாவாக கூட மதியழகன் மாற்றிக்காட்டுவார் என படிக்கையில் நம்ப வைக்கின்றார்.


- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்