பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 30, 2020

உன் வெளிப்பாடுதான் உன் மொழி


    நண்பர்கள் தொடர்ந்து zoom மூலமாக முக்கியமான சந்திப்புகளை முன்னெடுத்து வருகிறார்கள். நான்காவது நிகழ்ச்சியாக, தோழர் லீனா மணிமேகலையுடனான சந்திப்பாக அமைந்திருந்தது.

   முன்னமே தோழர் லீனா மணிமேகலை எனக்கு பழக்கம். அவரை கவிஞராகவும் இயக்குனராகவும் அறிந்திருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் அவர் மலேசியா வந்திருந்தார். அப்போது அவரின் இயக்கத்தில் வெளிவந்த 'செங்கடல்' திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. முதலில் என்னால் அதனை உள்வாங்க முடியவில்லை. மெல்ல நானும் ஒரு கதாப்பாத்திரமாக உள் செல்ல ஆரம்பித்துவிட்டேன். அதனை அடுத்து அவர் இயக்கிய சில ஆவணப்படங்களையும் வாங்கிக்கொண்டேன்.

    எந்த படைப்பாளியை சந்திக்க வேண்டும் என்றாலும் குறைந்த பட்சம் அவர் படைப்புகளை வாசித்திருக்க/தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் அவருக்கு நாம் கொடுக்கும் முதல் மரியாதை என நம்புகிறேன். இன்றளவும் அதனை தவறாது செய்தும் வருகிறேன். அப்படி தோழர் லீனா மணிமேகலையை சந்திப்பதற்கு முன்னதாக அவரின் படைப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். சினிமா சார்ந்து அவரது போராட்டங்களைத் தெரிந்துக் கொண்டேன். மெல்ல அவர் மீது இனம் புரியாத ஓர் அன்பு எனக்கு வந்திருந்ததை உணர்ந்தேன். இன்றளவும் அது தொடரவே செய்கிறது.

   ஒவ்வொரு முறை பேசும் போதும் நமக்குள் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரக்கூடியவர்.

   இன்று நடந்த zoom கலந்துரையாடலில் அவரை சந்தித்தேன். முதல் முறை பார்த்தது போலவே தெரிந்தார். அதைவிட முக்கியம் நான் இன்னமும் அவர் நினைவில் இருக்கிறேன்.

   தனது கடந்த காலம், இயக்கிய ஆவணப்படங்கள், 'மீ டூ'  சர்ச்சை என பலவற்றைப் பகிர்ந்துக்கொண்டார். சமீபத்தில் அவர் இயக்கிய 'மாடத்தி' திரைப்படம் குறித்தான பயணம் தொடர்பாக பேசினார்.  'மாடத்தி'யை குறித்தும் அந்த கதையில் மையத்தை எங்கிருந்து தான் பெற்றுக்கொண்டார் என்பதை பற்றியும் நேர்மையாக பகிர்ந்துக் கொண்டார். அப்படத்தைத் திரையில் காணவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டவே செய்கின்றது

  பார்வையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தோழர் லீனா மணிமேகலை கொடுத்த பதில்கள் ரசிக்க வைத்தன. 

"இயக்குனராக உங்கள் இலக்கு என்ன?"
என்கிற கேள்வியை முன் வைத்தேன்.

"தான் தேடி கண்டுணர்ந்ததைப் பகிர்ந்துக் கொள்வதுதான்...." என தொடங்கி மேற்கொண்டு பேசினார்.

   சிங்கப்பூரில் இருந்து நண்பர் ஒருவர் தான் வளர்ந்து வரும் இயக்குனர் என்றும், தனக்கான அறிவுரையை கேட்கலானார்.

"கலை என்பதே தனக்கான வழியை தானே தேடி கண்டடைவதுதான். தனக்கான குரலை தானே கேட்டுணர்வதுதான்" என்று மேற்கொண்டு பேசலானார்.  

   இடையில் அவர் கூறிய "உன் வெளிப்பாடுதான் உன் மொழி.." என்பது என் மனதோடு ஒட்டிக்கொண்டது. ஒரு மந்திரம் போல அதனை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்கிறேன்.

   அவருடைய சந்திப்பு மட்டுமின்றி, இந்த zoom நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனைவரின் உரையாடல்களையும் தொகுத்து விரைவில் மீண்டும் வெளிவரவிருக்கும் 'நேர்கோடு' இணைய இதழில் வெளியிடவுள்ளார்கள். அதன் பொருட்டே என்னால் இங்கு தோழர் லீனா மணிமேகலையின் சந்திப்பை குறித்து அதிகமாய் சொல்ல இயலவில்லை. 

   நேர்கோடு இணைய இதழில் நீங்கள் அதனை முழுமையாக வாசிக்கலாம்.

பின்குறிப்பு zoom உரையாடலில் தோழரின் சிரிப்பை கொஞ்ச நேரம் நிறுத்தி வைக்க முயன்றேன். அப்போது,


ஒரு கவிதையே
தன்னை 
வாசித்துக் கொண்ட - தாய்
தெரிந்தது...'


#தயாஜி

மே 28, 2020

100-வது பதிவு


         எனது வலைப்பூவில் இவ்வாண்டு தொடங்கி எழுதிய பதிவுகளில் இது 100வது பதிவு. கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத எண்ணிக்கை. இதில் அப்படியென்ன இருக்கிறது என்கிற கேள்வியும் சந்தேகமும் உங்களுக்கு மட்டுமின்றி எனக்கும் இருக்கவே செய்கிறது. அதனையே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

       மேலும் சொல்வதென்றால் நம்மை நாமே பார்த்து ‘நீயா செய்தாய்…’ என தோல் தட்டிக்கொள்ளும் செயல்பாடுதான். பலரைப் போலவே எனக்கும் பல கனவுகளில்தான் இந்த 2020 தொடங்க வேண்டியதாக இருந்தது. அதற்குள் விபத்து!!! . ஒரு மாத மருத்துவமனை கட்டில். அதன் பிறகு  வீட்டிலேயே முடங்க வேண்டியதாக்கிப் போனது. வாழ்ந்துக் கொண்டிருந்த அடுக்குமாடி வீட்டில் வசதி குறைவாக இருந்ததாலும், பார்க்கின்றவர்கள் பலரும் அந்த விபத்து!!! குறித்து நடத்திய விசாரணைகளாலும் இன்னொரு வீட்டில் தங்கவேண்டி வந்தது.

      எல்லா வித தொடர்பு எல்லைகளுக்கும் அப்பால் சென்றிருந்தேன். தனிமையும் காயங்கள் கொடுத்த வலியுமே எனக்கு துணையாக இருந்தன. காலில் அடிபட்டு ஊன்றுகோலுடன் அறையில் நடந்துக் கொண்டிருந்தேன். முதலில் கை முட்டிகள் ஒத்துழைக்க மறுத்தாலும் சில தினங்களில் பழவிவிட்டது. ஆனால் தலையில் அடிபட்டிருந்ததால் அடிக்கடி மறதி என்னைத் தாக்கியது. திரும்பத்திரும்ப எனக்கு நானே சொல்லிக்கொண்டும் குழம்பிக் கொண்டும் இருந்தேன். சில புத்தகங்களை பழைய வீட்டில் இருந்து ‘இல்லாள்’ எடுத்து வந்திருந்தாள்.  வாசித்த பக்கத்தையே திரும்பத்திரும்ப வாசிக்கவும் செய்தேன். ஒவ்வொரு முறையும் அதுவெல்லாம் எனக்கு புதிதாகவே தெரிந்தன. ‘இல்லாளைப்’ பார்த்து, ‘நமக்கு கல்யாணம் ஆகிடுச்சா?’ என கேட்டு அவளை கலங்கச் செய்த சம்பவங்களும் நடந்தது.  

         மருத்துவ உதவிகளாலும் சில பயிற்சிகளாலும் நிலமையை மெல்ல மெல்ல சரிகட்டிக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே வாசித்த புத்தகங்கள் பற்றிய நினைவுகள் மங்கலாகவே இருந்தன. அதோடு நான் எழுதியிருந்த படைப்புகளை வாசிக்கையில் எந்த சிந்தனையில் எதன் பொருட்டு எழுதினேன் என புரிந்துக் கொள்ள முடியவில்லை. ‘எழுதியவன் இறந்துவிட்டான் என்ற கோட்பாட்டை’ அப்போதுதான் உணர்ந்தேன். நானே ஒரு வாசகனாக, விரும்பி வாசிப்பவனாக அவற்றை படித்துப் பார்த்து பாராட்டினேன். கேலி செய்தேன். 

        நல்லவேளையாக வாசித்த புத்தகங்களைப் பற்றியும் சில அனுபவங்களைப் பற்றியும் எழுதியவற்றை தொடர்ந்து வாசிக்கையில் சில நினைவுகள் பிடிபட ஆரம்பித்தன. அதோடு தினமும் கனவில் சில உருவங்கள் தோன்றி பல விசித்திரங்களை நடத்திக் கொண்டிருந்தன. விசாரித்ததில் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மருந்துகளின் வீரியம் அதிகம் என்றும் அது உள்ளுக்குள் பல ரசாயன மாற்றங்களை செய்யும் என்றும் தெரிந்துக்கொண்டேன். சில நாட்களில் அவை விழித்திருக்கும் போதும் வரத் தொடங்கின.

    சில கருத்த உருவங்கள் அறை முழுக்க என்னை பின் தொடரச் செய்தன. ‘இல்லாள்’ ஒரு சாய் பாபா படத்தைக் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னாள். அதோடு வீட்டில் இருந்த சிலையொன்றையும் கொண்டு வந்து கொடுத்திருந்தாள். நாளடைவில் கருப்பு உருவங்கள் என்னுடன் சகஜமாக உரையாட ஆரம்பித்தன. எனக்கு நடந்தது விபத்து அல்ல, சூழ்ச்சி என பேசிக்கொண்டன. நடந்து முடிந்த சம்பவங்களை என் முன் திரைப்படம் போல காட்டத் தொடங்கின. யார் இதற்கெல்லாம் காரணம் என சில முகங்களைக் காட்டின. ‘கம்பியூட்டர் ஸ்கிரீன்’ போல ஒவ்வொரு முகத்திலும் கோடு கிழித்து அதன் மையத்தில் எதற்காக இப்படி செய்திருக்கக்கூடும் என எழுதினார்கள். காட்டிய முகங்களில் கணிதத்தில் வரும் கிட்டிய பத்து கிட்டாத பத்து போல, கிட்டாத காரணங்கள் கொண்ட முகங்களை ‘டிலேட்’ செய்து கிட்டிய காரணங்கள் கொண்ட முகங்களை ஒன்று இரண்டு என வரிசைப்படுத்தின. அந்த அதிர்ச்சியைச் சொல்வதற்கு வார்த்தையில்லாமல் போனது. அவரவர் செயல்களுக்கான சுமைகளை அவர்களே சுமப்பார்கள் என என் தோல் தட்டி ஒருவர் அன்பாகப் பேசினார். எனக்கு மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏதோ ஒரு வகையில் இந்த சுழற்சிக்கு சிறகசைத்த பட்டாம்பூச்சியாக நான் கூட இருந்திருக்கலாமோ என்று என்னை நானே சமாதானம் செய்துக் கொள்ள முயன்றேன். இவ்வளவு நேரம் சுவரையே வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தது வீட்டில் உள்ளவர்களை அச்சப்படுத்தியது. அவர்களும் அவர்கள் விரும்பும் தெய்வத்திடம் எனக்காக பிரார்த்தித்துக் கொண்டார்கள்.  

      மனதில் தோன்றுவதையெல்லாம் எழுத ஆரம்பித்தேன். கையெழுத்து கூட மனதிற்கு பரிட்சயம் அற்று இருந்தது. ஆனாலும் மனதில் தோன்றுவதை மறைவதற்கு முன்னதாகே எழுதிக் கொண்டேப் போனேன். எழுதி முடித்த பின் திரும்பத் திரும்ப அதனை வாசிக்கவும் செய்தேன். அவற்றை அப்படியே சேமித்தேன். சில நாட்கள் கழித்து மீண்டும் வாசித்ததில் அதில் எனக்கான செய்தி மட்டுமல்ல என்னை சுற்று உள்ளவர்களுக்கான செய்திகளும் இருப்பதாகப் பட்டது. அப்படியே சேமித்து வைத்தேன்.

     ‘இல்லாள்’ வேலைக்கு சென்று வருவதற்கு இரவாகிப்போனது.  அவள் இல்லாத தனிமையில் என்னுடன் உரையாட வந்திருந்த கருப்பு உருவங்கள் மெல்ல மெல்ல வெள்ளை உருவங்களாக மாறி என்னை சுற்றிக் கொண்டிருப்பது தெரிந்தன. பழைய சம்பவங்கள், நியாயங்கள், கோவம், பழி தீர்த்தல், ரகசியங்களை அம்பலபடுத்துதல், அடுத்து என்ன என்பது போன்ற பலவற்றைப் பற்றி உரையாடல் செய்தோம். முன்பு போல அந்த உருவங்கள் என்னிடம் கடினமான குரலில் பேசுவதில்லை. ஒவ்வொரு உரையாடல் முடியும் போதும், எனக்கும் உனக்கும் உள்ள தூரம் அன்பு மட்டுமே. அப்படித்தான் உனக்கும் மற்றவர்களுக்கு உள்ள தூரம் அன்பினால் நிரப்பு, என சொல்லி முடிப்பார்கள். அங்கிருந்து ஏனோ அன்பு என்னும் சொல் மீது எனக்கு அதீத காதல் தொற்றிக்கொண்டது. எல்லா இடங்களிலும் காற்று போல சூழந்திருப்பது அதுவாகத்தான் இருக்கிறது. காற்றே புகாத இடத்திலும் கூட அன்பு அதுவாகவே இருப்பதாகத் தெரிந்தது.

          ஒவ்வொன்றையும் கடந்து வருவதற்கு என்னைச் சுற்று உள்ளவர்கள் அவர்களாகவே வந்து உதவ ஆரம்பித்தார்கள். உடைந்துப் போன கைபேசிக்கு பதிலாக அம்மா ஒரு கைபேசியை வாங்கிக் கொடுத்தார். மீண்டும் அதில் தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன்.

   ‘இல்லாள்’ கொடுத்த புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். தனியே அமர்ந்து வாசித்த கதைகளைப் பற்றி பேச ஆரம்பித்தேன். அதில் எனக்கு எழுந்த கேள்விகளுக்கு சில வினாடிகளில் பதில் கிடைக்கவும் ஆரம்பித்தது.

     இந்த சமயத்தில்தான் ‘இல்லாளுடன்’ பழைய வீட்டிற்கு வந்தோம். அறை முழுக்க இருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து தூசு தட்டி சுத்தம் செய்தேன். பால்கனியில் வளர்ந்து வந்த செடிகள் காய்ந்துவிட்டிருந்தன. அதனை வீசிவிடச் சொன்னார்கள். அதற்கு மனமின்றி தினமும் தண்ணீர் ஊற்றி அவற்றுடன் பேச ஆரம்பித்தேன். கொஞ்ச நாளில் அவை மீண்டும் துளிர்த்தன. புதிய விதைகளில் இருந்தும் செடிகள் முளைவிட்டன. அதில் அப்பா அம்மா கொடுத்தனுப்பிய நித்தியக்கல்யாணி செடியும் அடக்கம். ஒன்றிலிருந்து இன்னொன்றாய் அவை இரண்டாவது தலைமுறைத் தொட்டுவிட்டன.

        பலதரப்பட்ட புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். இனி வாசித்த புத்தகங்கள் குறித்து பழையபடி சிறு குறிப்புகள் எழுத முடிவெடுத்தேன். அவ்வாறே மீண்டும் அவற்றை எனது ப்ளாக்கிலும் முகநூலிலும் பகிர ஆரம்பித்தேன். அவை சிறு குறிப்புகளுக்குள் அடங்காமல் வரத் தொடங்கின. கவிதைகள், சிறுகதைகள், குறுங்கதைகள், பத்திகள், வாசிப்பு அனுபவங்கள் என எழுதினேன். அவற்றில் சில இணைய இதழ்களிலும் சில பத்திரிகைகளிலும் வெளிவர ஆரம்பித்தன. ஒவ்வொன்றையும் எழுதி முடிக்கும் போது மனதில் அத்தனை மகிழ்ச்சி எழுந்தது. வாசித்தவை குறித்து முகநூலில் நேரலையாகவும் பேசி வருகிறேன்.

        இன்று பார்க்கையில், இந்த 2020-ல் மட்டும் வலைப்பூவில் 99 பதிவுகள் எழுதிவிட்டதை கவனித்தேன். இதில் எது சிறப்பு எது தேவையற்றது என்கிற கேள்விகளுக்கு இடம் கொடுக்காமல், என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பதை தொடர்ந்து செய்து வருகிறேன் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

    தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் குறுங்கதைகளை வாசித்தவர்கள் அதனை புத்தகமாக தொகுக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக   நான் நேசிக்கும் எழுத்தாளர் ஒருவரும் குறுங்கதைகளை வாசிக்கக் கேட்டார். வாசித்தவர், சிலவற்றை பகிர்ந்துக் கொண்டார். அதிஷ்டமிருந்தால் அவரே கூட அந்த தொகுப்பிற்கு முன்னுரை எழுதலாம் என நான் என்னைச் சுற்றி உள்ளவர்களிடம் சொல்லிக்கொண்டேன். சொல்லும் போதே அது அத்தனை அழகாக இருக்கிறது. யார் அந்த எழுத்தாளர் என்பது அவர் எழுதும் முன்னுரையில் இருந்து தெரிந்துக் கோள்ளலாம். இதற்கிடையில் மனம் கவர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் உடன் மின்னஞ்சல் வழி அவ்வபோது பேசி வருகிறேன். மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறது.


  2009-ல் எழுதத் தொடங்கிய வலைப்பூ 2018-ல் எதுவும் எழுதப்படாமல் இருந்தது. மற்ற ஆண்டுகளில் அவ்வபோது எழுதிவந்திருந்தாலும், 2012-ம் ஆண்டு முழுக்கவே 71 பதிவுகள்தான் செய்திருக்கிறேன். அப்படி திரும்பிப் பார்த்த பிறகு இந்த ஆண்டு பல இன்னல்களுக்கும் உடல் உபாதைகளுக்கும் இடையில் 100வது பதிவாக இதனை எழுதிக் கொண்டிருப்பதில் மனதிற்கு நெகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

      நான் எழுதுபவற்றை எனக்கும் என மனதிற்குமான உரையாடலாகப் பார்க்கிறேன், அவ்வுரையாடலை கொஞ்சம் சத்தமாகவேச் செய்கிறேன். அவைதான் நீங்கள் வாசிக்க கிடைக்கிறது. ஏனெனில் எனக்கும் உங்களுக்கும் இடையில் இருப்பது அன்பு ஒன்றுதான்.

 

-  தயாஜி

 

   

   


மே 27, 2020

வெறும் நாய்தான்...


   தீ வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. மின்சார கம்பிகள் வெடித்தன. பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ஏதோ சத்தம் கேட்டு ஓடி வந்தார்கள். தீயணைப்புப் படையினர்க்கு அழைத்தார்கள்.

   ஆயினும் காத்திருக்கக் கூடாது என்பதை புரிந்திருந்தார்கள். வெளியில் சென்றிருந்த மேரிக்கு அழைத்தார்கள். அவளில் வீடு எப்படியோ தீப்பிடித்து எரிவதைச் சொல்லவும் செய்தார்கள்.

   வெளியில் இருந்தவர்கள் முடிந்தவரை வாலிகளில் தண்ணீர் நிரப்பி,  தீயை அணைக்க முயல்கிறார்கள்.

   நல்லவேளை வீட்டில் யாருமில்லை. தப்பு. வீட்டிலிருந்து ஏதோ சத்தம் கேட்கிறது. வீட்டில் எரியும் தீக்கு  நடுவில் யாரோ மாட்டிக்கொண்டார்கள். வெளியில் அதற்கு ஆதாரமாய் சத்தம் கேட்கின்றன.

   மேரியும் அலறிக்கொண்டே வந்துச் சேர்கிறாள். அக்கம் பக்கத்தினர் அவளிடம் விசாரிக்கிறார்கள். 
உள்ளே அவளது நாய்க்குட்டி இருப்பதைச் சொல்லி அழுகிறவள் உள்ளேச் செல்லப் பார்க்கிறாள். யாரும் அவளை அனுமதிக்கவில்லை.

   தொடர்ந்து அருகில் வசிப்பவர்கள் ஒரு சேர  தீயை அணைக்க முயல்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் தீயணைப்புப் படையினர் வந்துவிடுவார்கள். அதற்கான அபாய ஒலி கேட்கத் தொடங்கியது.

    உள்ளே இருக்கும் நாய்க்குட்டியின் சத்தம் அதிகமாகிறது. மேரிக்கு எங்கிருந்து வந்த வேகமோ தெரியவில்லை. எல்லோரையும் தள்ளிவிட்டு வீட்டு வாசலை நோக்கி ஓடுகிறாள். அருகில் இருந்த பூ ஜாடியை எடுக்கிறாள். ஜன்னலில் வீசுகிறாள். மெல்லிய கம்பிகள் அப்படியே பிய்ந்து பின்னால் விழுந்தன.

   யோசிக்காது உள்ளே குதிக்கிறாள். வீடு முழுக்க புகையாகவும் அனலாகவும் இருந்தது. தீயின் எரிச்சல் அவள் உடலை சுட்டது. எப்படியோ அவளது நாய்க்குட்டியைக் கண்டுபிடித்துவிட்டாள்.

   வெண்ணிற பஞ்சு நாய், இப்போது ரோமங்கள் பொசுங்கி பீதியுடன் துடித்துக் கொண்டிருந்தது. தன்னைக் காப்பாற்றிய தோழியின் முகத்தை ஈரப்படுத்த முயன்ற குட்டியை மேரி கட்டியணைத்துக் கொண்டாள்.

   அவள் வந்த வழி இப்போது தீயினால் சூழ்ந்துவிட்டது. எப்படியோ வாசல் கதவை திறக்க முயல்கிறாள். பாதி கதவு மட்டும் உடைந்து விழுகிறது.

   உள்ளே, தீ எல்லாவற்றையும் விழுங்க ஆரம்பித்து விட்டது. வேறு வழி தெரியவில்லை. பாதி உடைந்த கதவின் வழியே தனது குட்டியை முதலில் தூக்கி வீசுகிறாள். அது அங்கிருந்து வெளியே புல் தரையில் உருண்டுபோய் விழுகிறது.

    உள்ளே  வெடிப்பு. மேரி மீது ஏதோ பலம் கொண்டு மோதுகிறது. அலறுகிறாள். 

  வெளியில் விழுந்த, குட்டி தன் தோழியின் அலறல் சத்தம் கேட்டு, வெளியேறிய வேகத்தைக் காட்டிலும் அதிக வேகமாக மீண்டும் பாதி உடைந்த கதவின் வழி உள்ளே குதிக்கிறது.

     மீண்டும் பெரிய வெடிப்பு ஏற்பட அருகில் இருந்தவர்கள் ஆளுக்கொரு பக்கமாக ஓடுகிறார்கள்.

#தயாஜி

மே 25, 2020

BMW-வும் Viva காரும்


  காலையிலேயே கடனைக் கட்டச் சொல்லி குறுஞ்செய்தி வந்திருந்தது.  வரிசையாக நான்கு நாட்களாக வந்துக் கொண்டிருப்பதுதான். அதற்காகவே தயாரானவன் போல வேகமாக கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

   கேசவனுக்கு ஊரைச் சுற்றி கடன். இப்போதைக்கு பார்த்துக் கொண்டிருந்த வேலையும் இல்லை. என்ன செய்வது என்றே பிடிபடவில்லை. யோசித்துக் கொண்டே தனது வீவா காருக்குச் சென்றான். காருக்கு ஊற்றிய பத்து வெள்ளி எண்ணையில் கடந்த நான்கு நாட்களாக ஒவ்வொரு இடமாக காரை மாற்றி மாற்றி நிறுத்தி வருகிறான். 

    எப்போது வேண்டுமானாலும் தவணை கட்டாத தனது காரை யாராவது இழுத்துக் கொண்டுப்போக வாய்ப்புள்ளது. அதற்காகவே தினம் தினம் காரை வெவ்வேறு இடமாக நிறுத்திக் கொண்டிருக்கிறான். யார் கண்ணுக்கும் சட்டென தெரியாத இடத்தைதான் கேசவன் தேர்ந்தெடுப்பான்.

    வீட்டு வாடகை, மளிகை சாமான் கடன், வாகன தவணை என சில மாதங்களாக  'நாளைக்கு..' 'நாளைக்கு..'  என்றே நான்கு மாதங்களை கடத்திவிட்டான். 

   போதாததிற்கு நண்பர்களிடம் கடனும் வாங்கிக் கொண்டிருக்கிறான். நிலமை எப்படியும் சரியாகும் என அவனது மனைவி சொல்வது ஆறுதலாக இருந்தது. ஆனாலும் அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் இல்லாமலில்லை.

  எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டே தனது வீவா காரை மறைவான இடத்தில் நிறுத்திவிட்டான். காரை விட்டு இறங்கினான். இப்போதுதான் கவனித்தான். அவனது காருக்கு பக்கத்தில் வெள்ளை நிற பி.எம்.டபள்யு. அத்தனை அழகு. அதன் வடிவம் அதன் வளைவு அதன் அந்தஸ்த்து என நின்றவாக்கிலேயே ஆசையாசையாகப் பார்த்துக் கொண்டிருந்தான். தன் வீவா-வை அங்கு நிறுத்துவது அவனுக்கு அவமானமாக இருந்தது. காரின் கறுப்பு  கண்ணாடியில் உள்ளே இருப்பது எதுவும் தெரியவில்லை.

   கேசவனின் முகத்தையே கண்ணாடி பிரதிபலித்தது.  கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருந்தான். அந்த  அசிங்கமான கடன்கார முகத்தை அவனால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. 

    தன்னால் எப்போதும் வாங்க முடியாத கார் அது. அதன் அருகில் கூட தன்னால் நிற்க முடியாது என நினைத்தான். கோவப்பட்டான். ஏதாவது செய்ய வேண்டும் என அவனது கைகள் அரித்தது.

   கீழே கிடந்த கல்லொன்றை எடுத்து பி.எம்.டபள்யூ-வில் ஒரு கோடு கிழித்தான். யாரும் பார்ப்பதற்குள் விறுவிறுவென நடக்கலானான். 

    தூரத்தில் நடந்துக் கொண்டிருக்கும் கேசசனை அந்த பி.எம்.டபள்யூ காருக்குள்ளே இருந்து ஒருவன் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது கண்களில் எந்த சலனமும் இல்லை. அவனது உடம்பில் எந்த அசைவும் இல்லை. கடன் தொல்லையால் தன் காரிலேயே விஷம் குடித்து அவன் தற்கொலை செய்து இன்றோடு மூன்றாவது நாள் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.


#தயாஜி

Children of Heaven


       இந்த நேரத்தில் இதனை பார்த்திருக்க கூடாது. மனதை கலங்கடித்துவிட்டது. உண்மையில் அவர்கள் சொர்க்கத்தின் குழந்தைகள்தான். அந்த சிறுவனின் கண்களில்தான் எத்தனை வலி. அவனது தங்கையில் முகத்தில்தான் எத்தனை கேள்விகள்.

     
   காணாமல் போவது அவர்களது காலணி மட்டுமல்ல. என் நிகழ்கால துக்கங்களும்தான். இப்போது இவர்களுக்காக கண்கள் கலங்குகின்றன.

     ஒரு படைப்பு சக மனிதர்கள் மீது அன்பை விதிக்கின்றன என்பதுத்தான் எத்தனை நிதர்சனம்.


    இப்போதைய மனநிலையில் என்னால் மேற்கொண்டு ஏதும் எழுத முடியவில்லை. மீண்டும் சொர்க்கத்தின் குழந்தைகளை நினைக்குக் கொண்டிருக்கிறேன்...

#தயாஜி

இரத்தக்கறை..... (Sharing is killing)


   மிகவும் அசந்துவிட்டான். கண்கள் கலங்கி இருந்தன. தலை முடிகலெல்லாம் எங்கெங்கோ பார்த்துக் கொண்டிருந்தன. கால்கள் நடந்து நடந்து பலமிழந்துவிட்டன. தூக்க கலக்கத்தில் கண்கள் சொருகியது. கலங்கிய கண்களில்  இருந்து கண்ணீர்தான் வழிந்ததேத் தவிர தூக்கம் வருவதற்கு வழியில்லை.

  தன்னைச் சுற்றிலும் நடந்துக் கொண்டிருப்பதை அவனால் உணரவும் உள்வாங்கவும் முடியவில்லை. வீசி எறிந்திருந்த கைபேசியைப் பார்த்தான். ஏதோ ஓர் கறுத்த உருவம் கைபேசியில் மேல் அமர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. அதிர்ந்தேப்போனான்.

   சூதாரித்துக் கொண்டுப் பார்க்கிறான். அங்கு கைபேசி மட்டுமே இருந்தது. மீண்டும் அந்த வாடையை அவன் உணர்ந்தான். அவனுக்கு குமட்டியது. கைகளைப் பார்க்கிறான். இரத்தம். ஆமாம் இரத்தம் அவனது இரண்டு கைகளில் இருந்தும் வழிந்துக் கொண்டிருந்தது.

  பதறியடித்துக் கொண்டு எழுந்தான். மீண்டும் கழிவறைக்கு ஓடினான். குழாயைத் திறந்தான். அதிலும் இப்போது இரத்தம் வரத் தொடங்கியிருந்தது. பீதி அவனை பீடித்துக் கொண்டது. முன்னே இருந்த கண்ணாடியில் ஏதோ அசைவதாகத் தெரிந்தது. நிமிர்ந்தான். அவன் முகம் முழுக்க இரத்தமாக இருந்தது.  இரத்தம் வழிந்து அவன் மேலாடை முழுக்கவும் சிவப்பாக்கிக் கொண்டிருக்கிறது.

   வெளியே ஓடி வருகிறான். கீழே கிடந்த கைபேசியை எடுக்கிறான். அதில் அவனது முகநூல் பக்கம் திறந்தே இருந்தது. அவன் பகிர்ந்திருந்த அந்த பெண்ணின் 'டிக்டாக்' வீடியோவை அழிக்க முயன்றான். 

  அவன் அழிக்க அழிக்க அடுத்த நொடியில் அதே வீடியோ அவனது முகநூலில் மீண்டும் மீண்டும் பதிவாகிக்கொண்டே இருந்தது. அந்த பெண் மீண்டும் மீண்டும் டிக்டாக்கில் ஆடிக்கொண்டே இருக்கிறாள்.

  யாரோ அழுகிறார்கள். நிமிர்கிறான். நின்றுவிட்ட காற்றாடியில் அந்த 'டிக்டாக்' பெண் தூக்குமாட்டி தொங்கிக் கொண்டிருக்கிறாள். 

  அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. மண்டியிட்டு கதற ஆரம்பித்தான்.

" ஐயோ என்னைய மன்னிச்சிடு நான் சும்மாதான் உன் வீடியோவை போட்டேன்... நீ யார்னு தெரியாமலே உன்னை பத்தி தப்பு தப்பா எழுதிட்டேன்.. உன் சாவுக்கு நான் காரணமில்ல.. நிறைய பேரு அப்படிதான் எழுதனாங்க... உன் சாவுக்கு நான் மட்டும் காரணமில்ல.. என்னைய விட்டுடு......'

  அவன் அறை முழுக்க மீண்டும் அந்த வாடை ஆரம்பமானது. அவன் உடல் முழுக்க இப்போது இரத்தம் வழியத் தொடங்கியது.

     தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தவள் தொங்கியவாரே அவனைப் பார்க்கிறாள். அந்த டிக்டாக் வீடியோவில் செய்த பாவனையை மீண்டும் செய்யத் தொடங்கினாள்.

  அதிலிருந்து தப்பிக்க வேகமாக ஓடியவன் முன்னே, பதினாறாவது மாடி ஜன்னல் திறந்தே இருந்தது...

#தயாஜி

மே 23, 2020

அனாதை   ரேணுகா தனியாய் இருந்தாள். அவளுக்கு அம்மாவின் மீது அத்தனைக் கோவம். ஏன் இந்த அவசரம். "இப்படி அனாதையாய் விட்டுப்போகவா பெத்துப்போட்டாய்", என அவள் மனம் கொதித்தது. யார் யாரோ அழுதார்கள். ஆனால் அவளுக்கு அழுகை வரவேயில்லை. அம்மா தன்னை அனாதையாக்கி இப்படி ஒரு துரோகம் செய்துவிட்டதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.

    கோவிட் 19 காரணமாய் எல்லா இடத்திலும் ஊரடங்கு. நன்கு அறிமுகமான அம்மாவின் இறுதி நாளில் இருபது பேர் மட்டுமே கலந்துக்கொண்டனர். பலரால் வரமுடியவில்லை என்ற தகவல்கள் மட்டுமே தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தன.

   அம்மாவின் இறுதி சடங்குகளெல்லாம் முடிந்தன. வந்திருந்த சொந்தங்கள் ஒவ்வொன்றாக விடைபெற்றார்கள்.  ஆயிரம்தான் இருந்தாலும் இறப்பு நடந்த வீட்டில், ஒரு பெண் பிள்ளையை தனியாய் விடுவதில் யாருக்கும் விருப்பம் இல்லை. இந்த வட்டாரத்தில் சில திருட்டு பயல்கள் இருப்பதை அறிந்திருந்தார்கள். அதற்காகவே அருகில் வசிக்கும் உறவினர்களை சில நாட்களுக்கு இங்குத் தங்கச்சொல்லி பேசிமுடித்தார்கள்.

   என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. இன்று தங்குவதாக வாக்களித்தவர்களும் கடைசி நேரத்தில் ஏதோ காரணம் காட்டி காலையில் வருவதாகச் சொல்லி கிளம்பிவிட்டார்கள்.

   வெளியில் இருந்து, வீட்டில் நடப்பதையே சில கண்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தன. இப்போது வீட்டில் ரேணு மட்டுமே. 

      பின்னிரவு மணி 1. வீட்டில் ஏதோ சத்தம் கேட்டது. அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. எழுந்தவள் கைபேசியை எடுத்தாள். 'ச்சார்ச்' போட மறந்திருந்தாள். பேட்டரி இன்னும் 2 சதவீதம் மட்டுமே இருந்தது.

    மெல்ல எழுந்தாள். அறைக் கதவில் காதை வைத்து கவனமாகக் கேட்டாள். யாரோ நடமாடிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவளுக்கு வியர்த்தது. அம்மா தன்னை அனாதையாக்கிய முதல் நாளிலேயே இப்படியொரு ஆபத்தா.! மீத வாழ்க்கை என்னாகுமோ? இனி என்ன நடக்குமோ? என அவளின் மனம் பதட்டம் கொண்டது.

     பேச்சுக்குரல் கேட்க ஆரம்பித்தது. எந்த இடத்தில் என்ன இருக்கிறது என நன்கு தெரிந்த ஆட்கள்தான் போல இருந்தார்கள். ஆனாலும் அந்த குரலை அவளால் அடையாளம் காண முடியவில்லை.

    வீட்டு வரவேற்பறையில் அம்மாவின் புகைப்படம் உள்ளது. அதன் கீழ் அம்மாவின் அனைத்து நகைகளையும் உறவினர்கள் கொடுத்த உதவிப்பணத்தையும் வைத்திருந்தாள். 

     பொருட்கள் உடையும் சத்தம் கேட்கிறது. பக்கத்து அறை கதவை உடைத்து திறக்கிறார்கள். அடுத்து அவளது அறைக்குத்தான் வருவார்கள்.

    'படீர்'. எதைக்கொண்டோ கதவை அடித்தார்கள். கதவு திறந்துக் கொண்டது. ரேணுகா அப்படியே பின்னால் விழுந்தாள். ஒருவன் உள்ளே நுழைந்தான். கையில் நீண்ட கத்தியை வைத்திருந்தான். நேராக அவளது கழுத்தில் வைத்து அவளை வெளியே வரவைத்தான்.

    வரவேற்பறையில் ரேணுகாவை நிற்க வைத்தார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளும் தன் அம்மாவிடம் செல்லப் போவதை நினைத்துக் கொண்டு கண்களை மூடினாள்.

    "ஐயோ...!!" அலறல் சத்தம். அவனது கத்தி கீழே விழுந்தது. ரேணுகா கண்களைத் திறக்கிறாள். முகமூடி அணிந்த இரு உருவங்கள் எதையோப் பார்த்து தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள். 

    அவள் அம்மாவின் நகைகளைப் பார்க்கிறாள். அவை பணத்துடன் அங்கேயே இருந்தன. ஆனால், அம்மாவின் புகைப்படம் மட்டும் வைத்த வாக்கில் இல்லாமல், அவர்கள் ஓடிய திசையைப் பார்த்துக்கொண்டிருந்தது.

   இனி எப்போதும் ரேணுகா தான் அனாதையல்ல என்பதைப் புரிந்துக்கொண்டாள். அவள் கண்கள் கலங்கிக் கொண்டிருந்தன.

#தயாஜி

மே 20, 2020

உன் கதைதான் என் கதையும்


   ராகவனுக்கு ஒரே துள்ளல். தனது மானசீக ஆசான் வீட்டு முகவரி கிடைத்துவிட்டது. எத்தனை நாள் அவரின் எழுத்துகளில் தன் தூக்கம் தொலைத்திருக்கிறான். நண்பகளின் பார்வையில் ஒன்றுமில்லாத கதைகளில் கூட அவனால் பல படிமங்களை கண்டுபிடிக்க முடிந்தது. அதுமட்டுமல்ல, கண்டுபிடிப்புகளை பல அடுக்குகளாக அடுக்கி ஒவ்வொன்றுக்கு. ஒவ்வொரு தன்மை இருப்பதாக சொல்லிக் கொண்டே போவான்.

   அவனது பைத்தியம் முற்றிவிடுவதற்கு முன் வைத்தியம் செய்ய நினைத்த நண்பர்கள். அந்த எழுத்தாளரின் முகவரியை பெரும் முயற்சிக்கு பிறகு கண்டுபிடித்தார்கள். 

    ராகவன் தனியாகவே கிளம்பிவிட்டான். எழுத்தாளரைச் சந்திக்க வெறும் கையுடன் போகலாமா?. சமீபத்திய தன் கவிதைகள் அனைத்தையும் ஒரு கோப்பில் வைத்து, எடுத்துச் சென்றான்.

 எழுத்தாளரையே பார்த்துக் கொண்டிருந்தவனை அவரது குரல் நினைவுக்கு வர வைத்தது. அவரின் எழுத்துகள் அதன் படிம விபரங்கள் அதன் உட்கூறுகள் வெளிக்கூறுகள் புதிது புதிதாக பேசத் தொடங்கினான். ஒருவழியாக ராகவன் பேசி முடிக்க எழுத்தாளர் கேட்டு முடித்தார். இப்படி ஒரு வாசகனை நிச்சயம் அவர் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்.

    தன் அதீத புரிந்துணர்வைப் பேசி முடிக்க மனமில்லாத ராகவன். தன் கையில் இருந்த கோப்பைக் கொடுத்துவிட்டு, தன் கவிதைகளைப் படித்துப் பார்க்கச் சொன்னான். 
எழுத்தாளர் அதனை வாங்கிக்கொண்டு அதிலுள்ள சில கவிதைகளைப் படித்துப் பார்த்தார்.

  பின் எழுந்து உள்ளேச் சென்று சில தடித்த புத்தகங்களைக் கொடுத்துப் படித்து பார்க்கச் சொன்னார். ராகவன் அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு இரண்டு நாளில் வருவதாக கூறிவிட்டு கிளம்பினான்.

  இரண்டு நாட்களாக இரவு பகல்  என  அந்த புத்தகங்களை இப்படியும் அப்படியும் படித்து, ஒன்றும் புரியவில்லை. கண்கள் வீங்கிப்போனதுதான் மிச்சம். மூன்றாம் நாள். மீண்டும் எழுத்தாளர் வீட்டிற்குச் சென்றான்.

  தடித்த புத்தகங்களை அவரிடம் கொடுத்துவிட்டு, "மன்னிச்சிடுங்க சார், ரெண்டு நாள் தூங்காம கண்ணு வலிக்க வலிக்க படிச்சேன். ஒன்னுமே புரியல சார்...?"

  அதற்கு அவர், "உங்களுக்கும் புரியலயா... சரி விடுங்க.. இந்தாங்க உங்க கவிதைகள்.." என அவனது கோப்பை அவனிடம் கொடுத்தார்.

  அப்போதுதான் ராகவன் கவனித்தான் அவரது கண்களும் தூக்கமில்லாமல் சிவந்திருந்தன.

#தயாஜி

மாயங்களின் அரசன்


   வாசிப்பது எஸ்.ராமகிருஷ்ணனின் 'வாசக பர்வம்'. அதில் கோணங்கி பற்றிய தன் அனுபவத்தை 'கோணங்கி:மாயக்கதையாளன்' என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார்.

   கோணங்கியுடன் ஏற்பட்ட சந்திப்பு. இருவரும் சேர்ந்து பயணம் மேற்கொண்ட விபரங்கள். அவரின் இயல்பு என மிக நேர்த்தியாகச் சொல்லிச்செல்கிறார்

 கோணங்கி அவர்களுடன் பழகியுள்ளதால், என்னால் எஸ்.ரா சொல்வதின் மிகையற்ற தன்மையைப் புரிந்துக்கொள்ள முடிகிறது.

   சொல்லப்போனால், கோணங்கி செய்த விளையாட்டுகளை வாசிக்கையில் இயல்பாகவே என் மனம் குதூகலிக்கிறது. வயது வித்தியாசமற்ற அவரின் நட்பும் அவர் பாராட்டும் அன்பும்  இன்றளவு அவருக்கான வாசகர்களை நேசிக்கின்றவர்களை அவர் பக்கம் கவர்ந்து இழுக்கத்தான் செய்கிறது.

   'அவரது சட்டை, பேனா, பை என எதை எவர் கேட்டாலும் உடனே தந்துவிடுவார்' என சொல்கிறார் எஸ்.ரா.

  எனக்கும் அவ்வாறான அனுபவம் உண்டு. நண்பர்களுடன் தமிழகம் சென்றிருந்த சமயம். அதற்கு முன்னமே அவரின் 'கல்குதிரை' சிற்றிதழலில் எனது 'இன்னொரு கிளை முளைக்கிறது' சிறுகதை பிரசுரமாகியிருந்தது. அதன் மூலம் அவர் என்னை அறிந்திருந்தார். என்னைப் பற்றி பலருடன் பேசியுமிருந்தார். மலேசியாவில் அவருடன் எனக்கு ஏற்பட்ட  அனுபவங்களையும் பூர்வகுடி கிராமத்தில் நாங்கள் இருவரும் செய்துகொண்ட பிரார்த்தனைகளைக் குறித்து எழுத இன்னும் அந்த மாயவித்தை  கைகூடவில்லை. விடயம் அதுவல்ல.

  தமிழகத்தில் நண்பர்களுடன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். மூலஸ்தானத்தை விட அதனை சுற்றியிருந்த கற்சிற்பங்களையும் அதன் மீது பட்டு அசையும் தீபத்தின் ஒளியையும் என்னிடம் காட்டிக்கொண்டிருந்தார். ஏனோ எங்களுக்குள் வயது ஒரு பொருட்டாக தெரியாமலாயிற்று. அப்போது  விபூதி தட்டு கொண்டு வரப்பட்டது. விபூதியை எடுக்கும் போது அவரது கைகுட்டை கீழே விழுந்தது.

  அதனை எடுத்தேன். அவரிடம் கொடுத்தேன். அதனை வாங்கிக்கொண்ட அவர், "உனக்கு பிடிச்சிருக்கா?" என கேட்டார்.  நானும் "அதன் வண்ணம் பிடித்திருக்கிறது" என்றேன். யோசிக்காமல் அதனை மடித்து என் கால்சட்டைப் பையில் வைத்துவிட்டு.

   "இது உனக்கு நான் கொடுக்கும் பரிசு.. வச்சிக்கோ.. நிறைய எழுதனும் சரியா.." என்றார்.

   இன்றும் எனக்கு ஏதும் சஞ்சலம் ஏற்பட்டால், கோணங்கியின் அந்த கைகுட்டையை எடுத்து நன்றாக திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்ச நேரத்தில் மனம் இலகுவாகிவிடுகிறது. சமயங்களில் அவரை அழைத்தும் பேசிவருகிறேன். அவர் சொல்லிக் கொடுக்கும் மந்திர வார்த்தை ஒன்றுதான்,
"எழுது.. எழுது.. எழுது.. அதான் உனக்கான தேவதை..."

   எஸ்.ராவின் இந்த கட்டுரை எனக்கு, கோணங்கியுடனான சந்திப்புகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளாதாகத் தோன்றுகிறது. இப்போது கூட கோணங்கி என் அருகில் அமர்ந்து, "டேய் தம்பி.. என்ன எழுதிகிட்டு இருக்க.. " என அன்பு சூழ்ந்த வார்த்தைகளை என் மீது தெளிப்பதாக உணர்கிறேன்.

 உண்மையில் கோணங்கி எழுதிக் கொண்டிருப்பது மட்டுமல்ல அவரும் கூட மாயங்களின் அரசன் தான். அட்சய பாத்திரம் போல அவருடனான அனுபவங்கள் அள்ள அள்ள வெவ்வேறு பரிணாமங்களில் வந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

#தயாஜி

மே 19, 2020

அடங்கா நினைவு     எஸ்.ராவின் 'வாசக பர்வம்' வாசித்துக் கொண்டிருக்கிறேன். 'அடங்க மறுக்கும் நினைவு' என்ற தலைப்பில் ப.சிங்காரம் குறித்த தன் அனுபவத்தை எழுதிதுள்ளார். புத்தகத்தில் நான் முதலில் படித்தது இந்த கட்டுரையைத்தான். 

     வாசித்து முடிக்கையில் மனதில் துக்கம் தொற்றிக்கொண்டது. காலத்தால் அழியாத 'கடலுக்கு அப்பால்' , 'புயலிலே ஒரு தோணி' போன்ற படைப்புகளைக் கொடுத்த ப.சிங்காரம் எத்தனை துயரங்களைச் சுமந்திருக்கிறார். உள்ளுக்குள் எத்தனை பெரிய தனிமை தீயால் தன்னைத்தானே எரித்துக் கொண்டிருந்தார் என நினைக்கையில் வருத்தமே எஞ்சுகிறது.

    எஸ்.ராமகிருஷ்ணனும் கோணங்கியும் தான் ப.சிங்காரத்தைப் பார்க்கச் சென்றிருக்கிறார்கள். அப்போது உரையாடலில் கோணங்கி கேட்கிறார்,

   "ஒரு எழுத்தாளர் இங்கிருக்கிறார் என்பது இங்குள்ளவர்களுக்கு தெரியுமா.?".

அதற்கு ப.சிங்காரம், 

    "அதெல்லாம் ஒரு ஆளுக்கும் தெரியாது. அப்படி நான் சொல்றதும் இல்லை. சொல்ற மாதிரி என்ன எழுதியிருக்கேன்" என்று கேட்டுள்ளார்.

    இது வெறுமனே ஏதோ உரையாடல் போல தெரியலாம். ஆனால், 'கடலுக்கு அப்பால்', 'புயலிலே ஒரு தோணி' போன்ற நாவல்களை வாசித்தவர்களுக்கு ப.சிங்காரத்தின் அந்த வார்த்தைகளில் மறைந்திருக்கும் வலியும் புறக்கணிப்பும் நிச்சயம் தெரியும்.

  ஒரு வாசகனாக ப.சிங்காரத்தை எப்போதும் நினைவில் வைத்திருப்பது தான் என் நன்றியாக எண்ணுகிறேன்.

#தயாஜி

மே 10, 2020

அன்பின் தாய்மொழிநான் அதிகம் 
பொய்யாய் சிரித்தது 
அம்மாவிடம்தான்
ஒவ்வொரு முறையும்
அதில் தோல்வி மட்டுமே 
எனக்கு எஞ்சியது

நான் அதிகம் 
என்னை மறைத்துக் கொண்டது
அம்மாவிடம்தான்
ஒவ்வொரு முறையும்
ஓயாது என்னை தேடிக்
கண்டடைந்துவிடுவார்

பிள்ளைகளின் புன்னகை 
மனதில் இருந்து
வருகிறதா
ரணத்தில் இருந்து
வருகிறதா
என அம்மாக்களின் கண்கள்
கண்டுபிடித்துவிடுகின்றன

அப்பாவிற்கு மட்டுமல்ல
பிள்ளைகளுக்கேத் தெரியாமல்
பிள்ளைகளைக் காப்பாற்றுவது 
அம்மாக்களால் மட்டுமே முடிகிறது

பெண்களிடம் ரகசியம்
தங்காதென்றதை பொய்யாக்கியப் பெருமை 
அம்மாக்களையே சேரும்
பூதங்களை விட
அம்மாக்கள் காத்துக்கொண்டிருக்கும்
ரகசியங்கள்தான்
எத்தனை பிரளயத்திற்கானது

வெறும் தட்டில் பசி தீர்க்க முடிகிறது
தூக்கமின்றி காவல் காக்க முடிகிறது
காயங்களைக் கண்டுக்கொள்ள முடிகிறது
நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது
எந்த நோயையும் எதிர்த்து நிற்க முடிகிறது
ஏதாவது பொந்தில் பணம் சேர்க்க முடிகிறது
அம்மா வினோதங்களின் வினோதம்
அம்மா ஆச்சர்யங்களின் ஆச்சர்யம்
அம்மா மருத்துவத்தின் மருத்துவம்
அம்மா தெய்வதின் தெய்வம்

பெற்றாலும்
பெறாவிட்டாலும்
அன்பின் இருப்பிடம் 
அம்மாக்களின் மடி
நாம் எல்லோர்க்கும் தாய் மடி

அம்மா என்பது பொதுமொழி
அன்பிற்கு அதுவே தாய்மொழி

#அன்னையர்_தின_வாழ்த்துகள்_2020
#தயாஜி

மே 08, 2020

தாத்தாவின் இளமை"கிழவனுக்கு வந்த வாழ்வை பார்த்தியா..?"

  என்றுதான் அந்த இளைஞர்களில் ஒருவன் ஆரம்பித்தான். கேலியும் கிண்டலும் சத்தமின்றி இருந்தது. ஆனாலும் இரண்டாவது நாற்காலிவரை கேட்கவேச் செய்தது..

    கடைக்காருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. நாசூக்காக இளைஞர்களிடம் எதையோச் சொல்லிவிட்டி அவரின் வேலையைப் பார்க்கலானார்.

    நெல்சன். வயது 65-க்கு மேல். ஆனாலும் பார்த்து வயதை கணிக்க முடியாதத் தோற்றம். மிடுக்கான நடை எப்போதும் எனக்கென்ன என பார்க்கும் பார்வை. ஆனாலும் தன்னை எப்போதும் இளமையாய் வைத்திருப்பதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வார். அதற்காகவே வாரம் ஒருமுறை சலூனுக்கு வந்துவிடுவார். 

   ஆங்காங்குத் தெரியும் தலைமுடிக்குக் கூட டை அடித்துக் கொள்வார்.

   இன்றும் வந்திருந்தார். ஆனால் அவருக்கு பின்னால் வந்த இளைஞர்கள் இவரைக் கண்டதும் எரிச்சல் அடைந்தார்கள். சலூன் கடைக்காரர் தனது வாராந்திர கஸ்டமருக்கு நேரம் எடுத்து தலை முடியைத் திருத்திக் கொண்டிருந்தார். இதற்கு பின் தான் மை பூச வேண்டும். எப்படியும் நேரம் எடுக்கும்.

   ஏற்பட்ட எரிச்சலை, நெல்சன் மீதான கேலி கிண்டலாக இளைஞர்கள் மாற்ற முயன்றார்கள்.

"எந்த பொண்ணை மயக்க இந்த பேஷன் கட்டுதுனு தெரியலயே.."

"நாமலே தோத்துடுவோம் போல.."

"இதெல்லாம் வீட்டுக்கும் பாரம் பூமிக்கும் பாரம்.."

  நெல்சனிடம் எந்த சலனமும் இல்லை. அவரது கண்கள் கண்ணாடியில் தெரியும் தன் பிரதிபலிப்பையேப் பார்த்துக் கொண்டிருந்தார். சலூன் கடைக்காரருக்கு வயிற்றில் எதோ கரையத் தொடங்கியது.

  எல்லாம் முடிந்தது. நெல்சன் நேராக அவர்கள் முன் வந்து நின்றார். குரலை சரி செய்துக் கொண்டார். இளைஞர்களுக்கு அவரது ஆழ்ந்தப் பார்வை பயத்தைக் கொடுக்க செய்தது. சலூன் கடைக்காரர் எதையோ எதிர்ப்பார்க்கலானார்.

"தம்பிங்களா... நீங்க பேசனதெல்லம் எனக்கு கெட்காமயில்ல... நான் என் வயசை காட்ட விரும்பல... ஏன் தெரியுமா..? எனக்கு உங்களை மாதிரி ரெண்டு பசங்க இருந்தாங்க.. இருந்த காசையெல்லாம் எடுத்து கல்யாணம் பண்ணி வச்சேன். போனவங்க போனவங்கதான். யாரும் திரும்ப வரல. நானும் என் மனைவியும்தான் வீட்டுல இருக்கோம். என்னை நம்பி இருக்கற என் மனைவிய நான் பார்த்துக்கனும். அதுக்கு எனக்கு ஒரு வேலை வேணும். என் வயசு வெளிய தெரிஞ்சா என்னால 'கார்ட்' வேலை செய்ய முடியாது... இந்த கிழவன் எப்படி வேலை செய்வான்னு சிரிப்பாங்க..  இப்ப நீங்க சிரிச்சிங்களே அதே மாதிரி.... நீங்களாச்சும் உங்க அப்பா அம்மாவை கொஞ்சம் பார்த்துக்கோங்க... ஏன்னா எல்லார் உடம்பும் எல்லா சமயத்திலும் அவங்க பேச்சை கேட்கும்னு சொல்ல முடியாது...   நீங்க இப்ப வந்ததுக்கூட உங்கப்பா கொடுத்த காசுலதான..? ஆனா நான் இன்னமும் என் சொந்த காலுல நிக்கறேன்.. சொந்த காசுல சாப்டறேன்... "

#தயாஜி

நித்தியாவின் ஓவியம்


       ஆடம்பர வீடு. அழகான குடும்பம். வீட்டு வாசலில் உயர் ரக நாய். இரண்டு கார்கள். வீட்டு வாசலில் ஒரு காரும், வெளி வாசலில் ஒரு காரும் இருக்கும்.

  வீட்டில். நித்தியா வரைந்துக் கொண்டிருந்தாள். அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொரு கணினியில் உலக நண்பர்களுக்கு 'ஹாய்' 'பாய்' அடித்துக் கொண்டிருந்தார்கள். வரவேற்பறை சுவரில் மாட்டியிருந்த திரையில் ஏதோ ஆங்கிலப்படம் ஓடி ஆடிக் கொண்டிருக்கிறது.

   என்னதான் நாள் முழுக்க வேலை என இருந்தாலும் நித்தியாவிற்காக ஒவ்வொரு ஞாயிறும் வீட்டில் அவளுடன் நேரத்தைச் செலவு செய்வார்கள்.

   ஆனால் நித்தியா, ஞாயிறு விடுமுறைகளில் மட்டும் தனிமையை உணர்வாள். இதற்கு பதிலாக பள்ளியிலேயே அவளைச் சுற்றி ஒரு பட்டாளமே இருக்கும். அன்று பள்ளியில் ஒவ்வொருவரும் தங்களின் குடும்பத்தினர் குறித்து பேசிப் பகிர்ந்துக் கொண்டார்கள். நித்தியாவிற்கு தன் குடும்பத்தைப் பற்றி பகிர்வதற்கு ஒரு நிமிட கதை கூட இருக்கவில்லை.

    அன்றைய தினத்தில் பள்ளியில் வரைந்த ஓவியத்தை மீண்டும் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

   மகள் அசையாமல் ஓவியத்தையே பார்த்துக் கொண்டிருந்ததை கடைசியாக அப்பாவும் அம்மாவும் கவனித்தார்கள்.

"செல்லகுட்டி என்ன வரைஞ்சிருக்கீங்க..?"

"பத்தியா நம்ம பொண்ணு எவ்வளவு அழகா வீடு வரைஞ்சிருக்கா.. அழகா இருக்குல்ல..."

"நித்தி.. என்னம்மா வீட்டுக்கு பக்கத்துல சின்னதா இன்னொரு வீடு வரைஞ்சிருக்கீங்க..?"

    நித்தியா தான் வரைந்த ஓவியத்தை தூக்கிக் காட்டி,

''இது நம்ம வீடு.. நாம் இந்த வீட்டுல இருப்போம்.. பக்கத்துல இருக்கே.. இது நம்ம பாட்டி தாத்தா வீடு.. நீங்கதான் அவங்கள வீட்டுல சேர்க்கமாட்டீங்களே....

"!!"

"!!"

- தயாஜி


மே 07, 2020

பசித்திருக்கும் மனது..   குமாரை எனக்கு நன்றாகத் தெரியும். குமாராகவும் தெரியும் குண்டு குமாராகவும் தெரியும். சின்ன வயதில் இருந்து ஒன்றாய் படித்தோம். குமாருக்கு சாப்பிடுவது என்றால் வை. நல்ல சாப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு புத்தகமே எழுதிக் கொடுப்பான். அதனாலேயே ஒல்லிபிச்சானாக இருந்தவன் ஊதி பெருத்துவிட்டான்.

  விளையாட்டாய் அழைக்கப் போய், பின்னர் குண்டு குமார் என்பதே அவனது நிரந்தர பெயராகிவிட்டது. வயதும் அறிவும் வளர வளர, நல்ல வேளையா ரெண்டும் ஒன்றாய் வளர்ந்து வந்தன. ஒருவரின் உடலையும்  அவரின் முகத்தையும் நிறத்தையும் வைத்து நக்கல் செய்வதும் ஒரு வகையில் 'வன்பகடி' என புரிந்துக்கொண்டேன். உள்ளுக்குள் எத்தனை வேதனையை குமார் சுமந்து வெறுமையான சிரிப்பை எங்களுக்குக் கொடுத்திருப்பான். குமாரிடம் மன்னிப்புக் கேட்கத் தோன்றியது.

  நீண்ட இடைவேளைக்குப் பிறகு குமாரைச் சந்திக்க வந்திருக்கிறேன். நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் உணவகம். பழைய ஆட்களே இன்னும் இருந்தார்கள். குமார் வரத் தாமதமாகிக் கொண்டிருந்தது. அதற்குள் எனக்கு ஒரு இஞ்சி டீயை சொல்லிவிட நினைத்தேன். அழைத்தேன்.

  வந்திருந்த பணியாளர் எனக்கு அறிமுகமானவர்தான். ஆனால் இன்று ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தார். அன்று பார்க்கும் போது தடித்து வாட்டசாட்டமாக இருந்தார். இன்று துரும்பாகியிருந்தார். ஆச்சர்யமாக இருந்தது.

 "என்ன அண்ணா... டயட்டா... இப்படி ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டீங்க..?"

   சிரித்துக் கொண்டே எனக்கான தேநீரை ஆடர் எடுத்துவிட்டுச் சென்றார். திரும்பி தேநீருடன் வந்தார். அவரிடம் டிப்ஸ் வாங்கி குமாருக்கு கொடுக்கத் தோன்றியது.

   "அண்ணே... உடம்பு எளைச்ச டிப்ஸ் கொடுத்தா நானும் கொஞ்சம் சைஸ் குறைச்சிக்குவேன்ல..."

மீண்டும் சிரித்துக் கொண்டே, 

  "தம்பி, மொதலாளி... கடைல ரெண்டு நாளுக்கு ஒரு வேலதான் எங்களுக்கு சாப்பாடு போடறாரு.. நீங்களும் ரெண்டு நாளுக்கு ஒரு தடவை மட்டும் சாப்டா குறைஞ்சிடலாம்..."

  என்றவர் சிரித்துக்கொண்டே அடுத்த மேஜைக்குச் சென்றுவிட்டார்.

தினம் தினம் உணவுகளையேப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த நிலை!
என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.

  ஒருவர் சாப்பிடுவதை கேலி செய்வது வன்பகடியெனில், ஒருவருக்கு சாப்பிடக் கொடுக்காமல் வதைப்பது எத்தனை பெரிய வன்முறை.

- தயாஜி

உன்னோட பொம்மி

அப்பா, 
நீ எப்படி இருக்க
நல்லாருக்கயா
நான் இங்க இருக்கறது 
உனக்கு 
தெரியுமா இல்லையான்னு 
எனக்கு தெரியல
ஆனால் என்னை நீ 
கட்டியணைச்சு சந்தோசப்படப்போற 
அந்த நாளுக்காக நான் 
ரொம்ப ஆவலா காத்துகிட்டு
இருக்கேன்
இப்போ நான் ரொம்ப ரொம்ப 
குட்டியாதான் இருக்கேன்
அதனால நான் பேசறது 
உனக்கு சரியாக்கூட 
கேட்குமா கேட்காதான்னு 
எனக்குத் தெரியல
நான் இங்கயே இருப்பனா
நான் இங்கயேதான் வளரப்போறனா
எனக்கு சொல்லத் தெரியல
ஆனா அப்பா 
ஒன்னு சொல்றேன்
கேட்டுக்கோ
உனக்காகவும் அம்மாவுக்காகவும்
என்னால முடிஞ்சவரைக்கும் 
போராடி நான் இங்கயே 
வளர்ந்து வெளிய வருவேன்
நீ எதுக்கும் கவலைப்படாத
ஏன்னா நான் உன்னோட பொம்மி..

- தயாஜி

மே 06, 2020

முகத்தை காட்டுவீங்களா..?   லிங்கேஸ்வரன் இன்று கோவமாக இருந்தார். எப்போதுதான் கோவம் வரவில்லை என அவருக்கேக்கூட தெரியாது. சமயங்களில் கோவம்தான் நமது பாதுகாப்புக் கவசம். அது இருக்கிற வரையில் நாம் பாதுகாப்பாக இருப்போம். 

  வாங்க வேண்டிய எல்லாம் வாங்கியிருந்தார். மீண்டும் ஒரு முறை சரி பார்க்க வேண்டும். ஏனெனில் இன்றைய பயணத்தில் மீண்டும் திரும்ப வருவதில் சிக்கல் உள்ளது. 

    ஆள் நடமாட்டக் கட்டுப்பாடு. காரண காரியமின்றி வெளியில் உலாவக்கூடாது. பிடிபட்டால் சிறையும் உண்டு அபராதமும் உண்டு. மந்திரி மகனாக இல்லாத பட்சத்தில் சட்டத்திற்கு பயப்படத்தான் வேண்டியுள்ளது. 

   குறிப்பிட்ட இடத்திற்கு உணவு பொட்டலங்களுடன் சென்றுச் சேர்த்தார். வசதி குறைந்தோர்க்கு, அவர்களின் வீட்டிற்கேச் சென்று தேவையான உணவு மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார். 

அப்போது ஒரு வீட்டில்,

"தம்பி என்னைய போட்டோ பிடிப்பீங்களா?"

"நீங்க விரும்பலன்னா போட்டோ எடுக்க மாட்டோம். எடுத்தாலும் முகத்தை மறைச்சிடுவோம். உங்களுக்கு அடுத்தடுத்த உதவிகள் கிடைக்கனும் அதான் எங்க நோக்கம். உங்களை அவமானப்படுத்துவது இல்ல..."

"இதுல என்ன அவமானம் கெடுக்கு தம்பி, போட்டோ எடுங்க, என் முகத்தை எல்லார்க்கும் காட்டுங்க.. அப்பதான் நான் எவ்வளவு கஷ்டப்படறேன்னு என்னை சுத்தி இருக்கறவங்களுக்குத் தெரியும். ஏன்னா, நானும் என் பிள்ளைங்களும் ரெண்டு நாளா சாப்டல.... வெறும் பச்ச தண்ணியத்தான் குடிச்சிகிட்டு இருக்கோம்.. இது பக்கத்து வீட்டுக்காரருக்குக் கூடத் தெரியல.. நேத்து அவ்வளோ ரொட்டித் துண்டுகளை குப்பைல போட்டிருக்காங்க. என் போட்டோவை பார்த்தாவது நாங்க கஷ்டப்படறோம்னு தெரிஞ்சிகிட்டு அவங்க சாப்பாட்டை இப்படியெல்லாம் வீணாக்க மாட்டாங்கல்ல......"

  உதவியை புகைப்படம் எடுப்பது தேவையா தேவையில்லையான்னு பேசிகிட்டு இருக்கற இந்த சமயத்துல, உதவி செய்ய  கைகொடுப்பதுதான் அவசியம். அந்த உதவிக்கரம் நம் பக்கத்து வீட்டில் இருந்துக்கூட தொடங்கலாம் என நினைத்துக்கொண்டே பட்டியலின் அடுத்த வீட்டிற்கு பொட்டலங்களுடன் லிங்கேஸ்வரன் புறப்பட்டார்.- தயாஜிமே 03, 2020

அன்பின் மாற்று வன்முறையல்ல...

3மே2020 தமிழ் மலர் ஞாயிறு பதிப்பு
  வணக்கம். நலமா? தொடர்ந்து என் எழுத்துகளை வாசித்து அவ்வபோது என்னை அழைத்து கருத்துகளை பறிமாறுவற்கு நன்றி. நான் எழுதியவை பலருக்கு அவர்களில் நினைவுகளை மீட்டெடுத்ததாக சொல்லியிருந்தீர்கள். சிலர் அவர்களின் அனுபவத்தையும் என்னிடம் பகிர்ந்து என்னை எழுத சொன்னீர்கள். எழுதிவர்க்கும் வாசிப்பவர்க்கும் ஏற்படும் உறவு உண்மையில் விசித்திரமானது. எங்கோ இருக்கும் சிலரில் எழுத்துகளை, எப்போதோ எழுதிய எழுத்துகளை இப்போது வாசித்து நான் மகிழ்ந்ததும் உண்டு அழுததும் உண்டு. 

   "நீ கொடுத்து வச்சவன், உனக்கு நல்லா எழுத வருது" என நண்பர் ஒருமுறைக் கூறினார்.  எழுதுவது ஒரு வகையில் கொடுத்து வைத்ததுதான். ஆனால் அதனையும் தாண்டி பெரும் பொறுப்பை சுமந்துக் கொண்டிருப்பது. மேலும் அந்த பொறுப்பை சுமந்துத் திரிவது அத்தனை எளிதானது அல்ல. ''சும்மா எழுதிகிட்டே இருக்கீங்க.. என்னத்த சாதீச்சீங்க.." என எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் கேள்விக்கு உட்படுத்தப்பட்ட ஒருவரின் எழுத்துகள் இன்று நாம் வாசிக்க நம் துன்பத்தைத் துடைப்பதோடு நமக்கு ஆறுதல் சொல்வதையும் நம்மை முன்னகர்த்துவதையும் நாம் கடந்துதான் வந்துக் கொண்டிருக்கின்றோம்.

     என் எழுத்துகளை வாசித்து என்னுடன் உரையாட நினைப்பவர்களை நான் ரொம்பவும் நேசிக்கின்றேன். ஏனெனில் நான் பேசுவது அவர்களுக்குக் கேட்கிறது சொல்லப்போனால் நான் அவர்களுக்காகவே பேச முயல்கிறேன். நீங்கள் அனைவரும் என் அன்பிற்கு உரியவர்கள்.

 அன்பு என்பது எத்தனை உன்னதமானது என யோசிக்கிறேன். ஆனால் அது உன்னதமானது மட்டும்தானா எனவும் சந்தேகிக்கிறேன்.  உண்மையில் அன்பை நாம் சரியாகத்தான் புரிந்துக் கொண்டிருக்கிறோமா என எப்போதாவது யோசித்தது உண்டா. இதில் யோசிக்க என்ன இருக்கிறது. அன்பு என்பது அன்பு மட்டும்தானே என சொல்கிறீர்களா. சரி அன்பு என்பது அன்பு மட்டும்தான என்கிற கேள்வியைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாமா?

  நீங்கள் யாரை அல்லது எதன் மீது அதிக அன்பு இருப்பதாக நினைக்கின்றீர்கள்?.  கொஞ்சம் யோசியுங்களேன். இப்போது நீங்கள் ரொம்பவும் நேசிக்கும் யாராவது ஒருவரின் பெயரை நினைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் உங்கள் கணவனையோ மனைவியையோ நினைத்துக் கொள்ளுங்களேன் அவருடன் எப்படியெல்லாம் அன்பை பறிமாறிக் கொண்டீர்கள். இருவருக்குமாக எத்தனை உன்னதமான தருணங்கள் சேர்ந்து வைத்திருக்கிறீர்கள்.

   எல்லாம் இருந்தும், ஏதோ ஒரு நாளில் நீங்கள் அவர் மீது கை நீட்டியது இல்லையா. அவர் மனம் வலிக்க நீங்கள் திட்டியதில்லையா. இது சரியா தவறா என்கிற பட்டிமன்றத்தை ஒத்திவைத்து விடுங்கள். 'ஆமாம்', 'இல்லை  என்கிற இரண்டு பதில்களில் ஒன்றை மட்டும் கொடுங்கள்.

 அதனையே கொஞ்ச நேரம் யோசித்தவாறே ஒன்றை பகிர்கிறேன் கேளுங்கள்.

 பத்துமலை. தைபூசம் முடிந்தும் ஆங்காங்கு பக்தர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். கடவுளுக்கும் எனக்கும் கொஞ்சம் கொடுக்கள் வாங்கள் இருக்கிறது. அதனால் நேர்த்திக்கடனுக்குச் சென்றிருந்தேன். உதவிக்கு நண்பர்களும் வந்திருந்தார்கள். அவரவர் கடன்களை அவரவர் சுமந்துச் சென்று, முதன்மை சன்னிதானத்தில் சேர்ப்பித்தோம். வழக்கமாக கொஞ்ச நேரம் அங்கு உலாத்திவிட்டு படியிறங்கிக் கொண்டிருந்தோம்.

  வழக்கமாக படிகளில் வந்து விளையாட்டு காட்டிச் செல்லும் வானரங்கள் அப்போது குறைந்திருந்தன. இருந்தும் சில வானரங்கள் அங்குட்டும் இங்குட்டும் ஆட்டங்களைக் காட்டின. பழக்கமில்லாதவர்கள் பயந்தும் ஒதுங்கியும் சென்றுக் கொண்டிருந்தார்கள். சில வெள்ளைக்காரர்கள் மட்டும் பழைய நண்பர்களைச் சந்திப்பது போல வானரங்களிடம் உரையாடுகிறார்கள். விளையாடுகிறார்கள். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். அவர்களை விடவும் வானரங்களே அழகாக போஸ்கள் கொடுக்கின்றன.

  படியின் தொடக்கத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றிலும் சில வானரங்கள் இருந்தன. பார்க்கையில் எங்களுக்கு அது ஆச்சர்யத்தைக் கொடுத்தது. அவர் கையில் வானரங்களுக்கு கடலையைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.  ஒரு கையில் பால் பாட்டிலை வைத்திருந்தார். இன்னொரு கையில் கடலைகளை மொத்தமாக வைத்திருந்தார். வானரக்குட்டிகள் அவரின் கையிலிருந்து கடலைகளை எடுத்துக் கொண்டிருந்தன. கையில் வைத்த கடலையும் முடிந்தது. அவரும் கருணை பார்வைக் கொண்டு அவற்றுடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் ஒரு குவளையைக் கீழே வைத்தார். பால் பாட்டிலைத் திறந்து குவளையில் பாலை ஊற்றிக் கொண்டிருந்தார். ஒரு குட்டி வானரம் அதனைக் குடிக்கத் தொடங்கியது. அவரின் முகத்தில் அப்படியொரு அன்பு அப்படியொரு கருணை வழிந்துக் கொண்டிருந்தது.

   இதுவரை அங்கிருந்த இன்னொரு குட்டி வானரம் ஒன்று சட்டென அந்த குவளையைத் தட்டிவிட்டது. பால் முழுக்க கீழே கொட்டிவிட்டது. அவர் என்ன நினைத்தாரோத் தெரியவில்லை. படாரென அந்த குட்டி வானரத்தை அடித்தார். கையில் வைத்திருந்த பாட்டில் பால் முழுவதையும் கீழே கொட்டிவிட்டார். அப்போது அவர் முகத்தை பார்த்திருக்க வேண்டும்.  அத்தனை கோரமாக மாறிவிட்டிருந்தது. அதுவரை அவர் அருகில் இருந்த  வானரங்கள் மட்டுமல்ல, அதுவரை அருகில் நடந்துக் கொண்டிருந்தவர்களும் ஒதுங்கி நடக்கலானார்கள்.

   என் மனதில் அந்த காட்சி அப்படியே பதிந்துவிட்டது. என்னுள் சில கேள்விகள் எழ ஆரம்பித்தன. எது அந்த நபரின் உண்மை முகம் என கேட்டுக்கொள்கிறேன். எது அவரை சட்டென அத்தனை கோவக்காரராக மாற்றியது. கருணை மொழியில் பேசிக்கொண்டிருந்த வானரங்களிடம் ஏன் முரடனாக நடந்துக் கொண்டார். யோசியுங்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அன்புதான் என்றால் நம்புவீர்களா?. நம்பதான் முடியுமா?

   'நாம் அன்பு வைக்கும் ஒன்றின் மீது நாம் நமது வன்முறையைக் காட்டிவிட தயங்க மாட்டோம்' எனும் கூற்றில்தான் எத்தனை உண்மை.

   உறவுகளாக இருக்கட்டும், வளர்ப்பு பிராணிகளாக இருக்கட்டும், அன்பு வைத்திருக்கும் நாமே அதற்கு மாறான வன்முறை காட்டிவிடுகிறோம்.  நாம் அன்பு வைக்கும் ஒருவர் மீதோ அல்லது ஒன்றின் மீதோ நாம் நம் முழு அதிகாரத்தைக் காட்டிவிட முனைகிறோம். இது எத்தனை வேடிக்கை.

  அன்பு வைப்பது என்பது அவரை அவராகவே ஏற்றுக்கொள்வதுதானே. 

  முதலில் சொன்ன அந்த நபருக்கு வானரங்களில் குணம் தெரிந்திருக்கும் தானே, ஆனால் ஏன் அவர் அப்படி நடந்துக் கொண்டார். அவர் வானரங்கள் மீது அன்பு காட்ட நினைக்கிறார். அதற்காக வானரங்களுக்கு சாப்பிடக் கடலைகளைக் கொடுக்கிறார். பாலையும் அதற்கு அருந்தக் கொடுக்கிறார். தான் அன்பு காட்டிய வானரங்களை அவர் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைக்கிறார். நடக்கும் காரியமா அது. நடக்கவில்லை. அது அவருக்கு கோவத்தைக் கொடுத்தது. வானரங்களை அடிக்கவும் செய்தார். அவரைப் பொறுத்தவரை அவர் அன்பு காட்டிய அவை, அவரின் உரிமையாகிவிடுகின்றன.

  நாம் நமது வாழ்வில் அப்படித்தான் புரிதலைக் கொண்டு நம்மையும் காயப்படித்தி அடுத்தவர்களையும் கஷ்டப்படுத்துகிறோம்.

   சுருங்கச் சொன்னால், நாம் அதிகம் நேசிக்கும் ஒரு பொருளை அதீத கோவத்தில் நாம் உடைக்கவும் செய்கிறோம். கவனித்தீர்களா. அதனை உடைத்து வீசும் மனநிலைக்கு என்ன காரணம். அதனை நாம் விரும்புகிறோம் அதனால் அதனை உடைத்து வீசும் உரிமையை நாம் எடுத்துக்கொள்கிறோம்.

   கணவன் மனைவி மீதோ, மனைவி கணவன் மீதோ, பெற்றோர் பிள்ளைகள் மீதோ என அடுக்கிக்கொண்டே போகலாம். நாம் யார் மீது அன்பு வைத்திருக்கிறோமோ, யாரை நேசிக்கின்றோமோ அவர் மீதுதான் வன்முறை செலுத்தும் உரிமையை நாம் எடுத்துக் கொள்கிறோம்.

  நாம் நேசிக்கும் ஒருவர், நமக்கு ஏற்றார்போல இருக்க வேண்டும் எதிர்ப்பார்ப்பது எத்தனை சிறுபிள்ளைத்தனம். நம்மை போலவே அவருக்கும் சொந்த சிந்தனை, அனுபவங்கள் ஆசைகள் இருக்கிறதுதானே. 

  இதற்காக அறிவுகளைக் கூடவா சொல்லக்கூடாது என்றில்லை. அவர்களிடம் நாம் பேசும் மொழி வன்முறையாகக் இருக்கக்கூடாது. இருந்துவிடக்கூடாது.

  அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்வோம். அதற்கு பெயர்தான் அன்பு செய்வது. 

*நன்றி தமிழ் மலர் ஞாயிறு பதிப்பு

- தயாஜி

மே 01, 2020

உனக்கு எங்க வலிக்குது...?

  என்றாவது மகன் திருந்துவான். அப்படித்தான் அம்மா நினைத்துக் கொண்டிருந்தார். நினைத்தது மட்டுமல்ல. நினைத்து நினைத்து பிரார்த்திப்பதும் அதைத்தான். கணவனை இழந்த வீட்டில் எஞ்சி இருப்பது மகன் மட்டும்தான்.

 அவனையும் இழக்க அம்மா விரும்பவில்லை. சொல்லித்தான் ஆகவேண்டும். ஆனால் அவன், அப்பாவைப் போலவே கோவக்காரன். அவர் போலவே அற்ப ஆயுளில் போய்விடக்கூடாதே.

        வேறு வழி கிடைக்கவில்லை. அன்று ரகு பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தான். 
மனதில் தைரியத்தையும் அக்கறையையும் வரவைத்துக் கொண்டார். அம்மா மெல்ல அவனிருக்கும் அறை வாசலில் நின்றார்.

      மோட்டாரில் அவன் இறக்கைக் கட்டிப் பறப்பதைக் குறித்து கேட்டுவிட்டார். ரகுவிற்கு வந்ததே கோவம். பூசிய பௌடரையும் தாண்டி ரகுவின் முகம் சிவக்கத் தொடங்கியது. 

   "நான் மோட்டர்ல வேகமா போனா உனக்கு எங்க வலிக்குது... இந்த வயசுல இப்படி வண்டி ஓட்டாம வேறெப்ப ஓட்டறது.. சும்மா இதை செய்யாத அதை செய்யாதன்னு சொன்னா எனக்கு புடிக்காதுன்னு உனக்கு தெரியும்தான.. இதனாலதான் நான் வீட்டுலயே இருக்கறது இல்ல.."

சில நாட்களுக்கு பிறகு. 

 அவனது மோட்டார் நான்கு துண்டுகளாக பிரிந்து வாசலில் இருந்தது. ரகு படுக்கையில் இருந்தான். கட்டிலில் கை கால்களில் கட்டு போட்டு படுத்துக் கிடந்தான். அம்மா, மெல்ல அவனது காயங்களுக்கு மருந்து தடவிக்கொண்டிருந்தார். காயம் ஆழமாக இருந்திருக்க வேண்டும். ரகுவின் முகத்தில் அது தெரிந்தது. அதனை பார்த்த அம்மா,

    ''இப்ப உனக்கு எங்க வலிக்குது..?'' என கேட்டுக் கொண்டே காயத்தை கவனிக்கலானார். 

    காயத்தை விடவும், அந்த வார்த்தை அவனுக்கு அதிக வலியைக் கொடுக்கத் தொடங்கியது.

- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்