பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 30, 2020

சர்க்கஸ் துப்பாக்கி


    உண்மையில் சாகசம்தான். நூறு மீட்டர் தூரத்தில் இருந்தாலும் குறி தப்பவில்லை. நின்றிருக்கும் வட்ட மேஜையில் அவள் சுழன்றுக் கொண்டிருந்தாள். மிகச் சரியாக  கைக்கு அருகில், காலுக்கு அருகில், கழுத்திற்கு அருகில் என, சுடும் துப்பாகி குண்டு சரியாகப் பட்டது.

   அந்த துப்பாக்கி சுடும் சாகச விளையாட்டைப் பார்த்து பலர் மெய் மறந்தார்கள். ஆரவாரம் செய்தார்கள். ஆனால் ஒருவன் மட்டும் அந்த துப்பாக்கியையே ஒரு சாகசமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இருந்த இடத்திலிருந்து துப்பாக்கி ஓரளவிற்கு தெரிந்தது. ஏனெனில் அதில்தான் அவனது எதிர்காலம் இருக்கிறது.

    அவன் புதிய கொள்ளைக்காரன். அப்படித்தான் அவன் தன்னைச் சொல்லிக் கொள்கிறான்.  திருடுகள் முடிந்து அடுத்த படிநிலைக்கான சமயம். ஆனால்  அதற்கு ஒரு துப்பாக்கி வேண்டும். அது சுடவும் வேண்டும். இப்போதைய பொருளாதார சூழலில் துப்பாக்கிக்கான குண்டைக்கூட வாங்க முடியாது. எங்கிருந்து துப்பாக்கி!! திருடர்கள் அதிகமாகிவிட்டதால் தொழில் போட்டியை சமாளிக்க வேண்டிய கட்டாயம்.

    அப்போதுதான் அந்த சர்க்கசின் சாகச விளையாட்டு பற்றி தெரிந்தது. பாதி கிழிந்திருந்த சுவர் விளம்பரத்தில் 'நூறு மீட்டர் தூரத்திலும் குறி தவறாமல் சுடும் சாகசம்!!!' என இருந்தது. இந்த விளம்பரம் தான் அவனுக்கு அந்த துப்பாக்கி மீது ஆர்வத்தைத் தூண்டியது. தனது கொள்ளையடிக்கும் திட்டத்திற்கு இந்த துப்பாக்கி போதுமானது. அதோடு, சிக்கல் இன்றி திருடிவிடலாம். அன்றே தயாரானான்.

    திட்டம் வெற்றி. திருடி விட்டான். தனது அடுத்த கொள்ளையடிக்கும் திட்டத்திற்கு ஏற்ற 'உ-சிவமயம்' போடப்பட்டது.

   சர்க்கஸ் கூடாரத்தில் இருந்து வெளியேறும் சமயம். கோமாளி ஒருவன் பார்த்து சத்தம் போட, பாதி கலைத்த ஒப்பனை முகங்களுடன் அவன் முன் கலைஞர்கள் வந்துவிட்டார்கள். தப்பிக்க வேண்டும். நல்லவேளையாக இவன் முகத்திலும் ஒப்பனை இருந்ததால் சரியாக அடையாளம் தெரியவில்லை. அவனுக்கு இப்போது சுடுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை. 

   யாரும் அவனுக்கு பயப்படவில்லை. ஒரிஜினல் முகத்தில் வந்திருந்தாலாவது கொஞ்சம் பயம் காட்டியிருக்கலாம். கோவம் வந்துவிட்டது . கொஞ்சமும் யோசிக்காமல் துப்பாக்கியை எடுத்து எதிரில் நிற்பவரை சுட்டான். 

    வெடி சத்தம் பெரிதாகக் கேட்டது. எதிரில் நின்றவருக்கு சிறிதாகக்கூட காயம் ஏற்படவில்லை. ஆனால் சுட்டவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுகிறான்.

    அங்கு, 'பின்னால் சுடும் துப்பாக்கி' என்று அந்த விளம்பரத்தில் இருப்பது இப்போதுதான் அவன் கண்களுக்கு முழுவதுமாகத் தெரிகிறது...


#தயாஜி

ஜூன் 29, 2020

ஆளுக்கொரு ஆசை


     இன்னும் நான்கு எண்கள் உள்ளன. உள்ளே போனவர்கள் அங்கேயே தூங்கிவிட்டார்களா தெரியவில்லை. மீதமுள்ள நான்கு பேர்களும் உள்ளே சென்று வருவதற்குள் நான் தூங்கிவிடுவேன் போல. என முணுமுணுத்துக் கொண்டே இருந்தான் கேசவன்.

    கைராசியாக மருத்துவர். பலரும் இவரது மருத்துவத்தாலும் ஆலோசனைகளாலும் குழந்தைகளுடன் நடமாடும் சாட்சியாக இருக்கிறார்கள். கோவில் குளம் என மனைவி விரும்பினாலும், விஞ்ஞானமே விடை என நம்பும் கேசவன் இங்கு கூட்டி வந்து விட்டான். இப்போது கூட மனைவி, டாக்டர் நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறாள். 

    அவர்கள் முறை வந்தது. உள்ளே சென்றார்கள். இருவரையும் பேசவிட்ட மருத்துவர், உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார். அவரிடம் மெல்லிய சிரிப்பும் அவ்வபோது ஆமோதிக்கும் தலையசைப்பும் இருந்தது.

    அரைமணி நேரத்தில் அவர்களின் முறை முடிந்தது. கையில் மருந்துச் சீட்டையும் தலையில் பல ஆலோசனைச் சீட்டுகளையும் எடுத்துக் கொண்டு கேசவனும், நல்ல வழியை கடவுள் காட்டியுள்ளார் என்கிற ஒற்றை பிரார்த்தனையை மனைவியும் சுமந்துக் கொண்டு வெளியேறினார்கள்.

  குழந்தைப்பேறுக்காக தற்காலிய மருத்துவராக மாறியிருந்த கேசவன். தன் அறையில் மினி மருந்தகத்தை உருவாக்கியிருந்தான். 

    இரண்டு நாட்களில் அவன் அந்த அதிர்ச்சியை எதிர்ப்பார்க்கவில்லை. ஏதோ கோவிலில் அந்த கை ராசிக்கார மருத்துவர் விளக்கேற்றி வைத்து நின்றுக் கொண்டிருந்தார். கேசவனுக்கு கோவம் வந்துவிட்டது. இப்படி மருத்துவரே மூட நம்பிக்கையை சுமந்துக் கொண்டிருக்கலாமா? தன் வேலை வெட்டியை மறந்து மருத்துவரிடம் சென்றான்.

     மருத்துவர் அவனை கண்டதும், பழைய புன்னகையுடன் நலம் விசாரித்தார். மருந்து மாத்திரைகள் குறித்துக் கேட்டார். தானும் தன் மனைவிக்காகத்தான் இங்கு வந்திருப்பதாக கூறி, அவரை காட்ட முயன்றார். கேசவனுக்கு பொறுமை இல்லை. தன் மனதில் தோன்றியதை சட்டென போட்டு உடைத்துவிட்டான்.

   புன்னகையில் கொஞ்சமும் மாறுதல் இல்லாமல் மருத்துவர்,
"இதுல என்ன சிக்கல் இருக்கு... என் மருந்தை அவங்க எடுத்துக்கறாங்க.. அவங்க பிரார்த்தனையை நான் எடுத்துக்கறேன்." என்றார்.

"புரியல..டாக்டர்!!!" 

மருத்துவரின் புன்னகை ஆழமாகியது.

   "ம்.... என்னோட அறிவுக்கு மரியாதை கொடுக்கறவங்களோட நம்பிக்கைக்கு மரியாதை கொடுக்கறேன் அவ்வளவு தான்... ஏன்னா இது எங்க ரெண்டு பேரோட வாழ்க்கை... ரெண்டு பேருக்குமே சம பங்கும் இருக்கு, தனித்தனி அனுபவங்களும் இருக்கு.....

#தயாஜி

ஜூன் 28, 2020

நான் ஒரு பென்சில்


     நான் மிகவும் அழகாக இருப்பேன். நான் ஜப்பானின் பிறந்தேன். என்னுடன் பல வண்ணங்களில் நண்பர்கள் பிறந்தார்கள். நான் மஞ்சள் வண்ணமாக இருந்தேன். நாங்கள் பிறந்த சில நாட்களிலேயே எங்களை தனியாக பெட்டியில் அடைத்தார்கள். இருட்டாக இருந்தது. 

     கண் விழித்துப் பார்த்தேன். என்னைச் சுற்றியும் பலர் இருந்தார்கள். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அங்கிருந்து ஒருவர் என்னை வாங்கிக் கொண்டார்.

     என் மீது பல வண்ணக் காகிதங்கள் கொண்டு மடித்தார். அன்று யாருக்கோ பிறந்தநாள். நான் பிறந்தநாள் பரிசாக சென்றதில் மகிழ்ந்தேன். 

    அந்த பெண் என்னை பார்த்து மகிழ்ந்தாள். அப்படி ஒரு அழகியை நானும் பார்க்கவில்லை. எப்போதும் என்னை அவள் கையிலேயே வைத்திருந்தாள். அவளது ஸ்பரிசம் என்னிடம் பல மாற்றங்களைச் செய்தது. ஒரு நாள் என் இதயம் துடிப்பதை நானே கேட்டேன்.

     நான் மனம் விட்டு பேசுவதற்கு ஒரு நாள் கிடைத்தது. தனிமையில் எதையோ வாசித்துக் கொண்டிருந்தாள்.  இதுதான் சமயம் என நான் பேச ஆரம்பித்தேன். 

     அவளுக்கு கேட்டது. ஆனால் நான் பேசியதை அவள் கவனிக்கவில்லை. சத்தமாக கூப்பிட்டேன். அப்போதும் அவளுக்கு கேட்டது. ஆனால் பின்னால் யாரையோ தேடினாள். சட்டென யாரோ அவள் வாயை மூடினார்கள். அவளை அப்படியே  ஒரு பெரிய உருவம் தூக்கியது.

     அவள் துடித்தாள். அந்த உருவம் அவளை இறுக்கியது. என்னால் அவள் கதறித்துடிப்பதை கேட்க முடியவில்லை. ஒரு குதி குதித்தேன். நேராக சென்று அந்த உருவத்தின் கழுத்தில் நாலு குத்து குத்தினேன்.  

      அவன் பிடியை விட்டான். அவள் கீழே குதித்தாள். அவன் அப்படியே விழுந்தான். அவள் பயந்து ஓடிவிட்டாள். திரும்பவேயில்லை. நான் இன்றுவரை அவளுக்காக காத்திருக்கிறேன்.

*சிறார் மறுவாழ்வு மையத்தில் நடந்த கதை எழுதும் போட்டியில் தோல்வி கண்ட கதை.


#தயாஜி

ஜூன் 27, 2020

பூனைகளின் ராஜ்ஜியத்தின் உய்யலாலா...


    தம்பதிகள் கைகோர்த்தபடி அத்தனை நெருக்கமாக இருக்கிறார்கள். ஒவ்வொருவர் முகங்களிலும் பலவித எதிர்ப்பார்ப்புகள். இளம் தம்பதிகள் முதற்கொண்டு பல வயதுகளில் தம்பதிகள் இருக்கிறார்கள். அதோடு ஆண்கள் ஒரு குழுவாகவும் பெண்கள் ஒரு குழுவாகவும் இருக்கிறார்கள். ரசிக்கிறார்கள். லயிக்கிறார்கள். மிதக்கிறார்கள்.

   வாசல் கதவிற்கு மேல் அத்தனைப் பெரிய பூனை தலையும் ஆங்காங்கு பூனைகளில் புகைப்படங்களும் இருந்தன. வாசலில்  அவர்களின் தகுந்த அடையாளங்களை உறுதி செய்கிறார்கள். பின்னர் அந்த பிரம்மாண்டமான பூனை வாய் கதவு திறக்கப்படுகிறது.

   பூனைகளுக்கே உரிய அமானுஷ்ய வாசனை எவ்விடத்திலும் பரவியிருக்கிறது. வரம் தரும் கடவுள் போல பூனைகளைக் கண்டும் தொட்டும் வணங்கியும் தத்தம் வேண்டுதல்களை வைக்கிறார்கள். நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

   பலவித பூனைகள் வேடமணிந்தவர்கள் உற்சாகமாக துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவை செல்லும் வழிகளில் இருப்பவர்கள் தலை குனிந்து வழிவிட்டு மரியாதை செய்கிறார்கள். பின்னர் இவர்கள் பூனைகள் போலவே துள்ளி குதிக்கிறார்கள். 'மியாவ்'விக்கிறார்கள்.

    வரிசையாக பல கடைகள் இருந்தன. ஒவ்வொரு கடை வாசலிலும் அவரவர்க்கு பிடித்த பூனை சிலைகளும் பூனைகளின் புகைப்படங்களும் நிறைந்திருந்தன. 

     'மியாவ் மியாவ்' என்னும் கீதம் மெல்லிய பின்னணியில் ஒலித்துக கொண்டிருக்கிறது. அது சூழலை மேலும் தெய்வாதீனமாக ஆக்குவதை ஒவ்வொருவரும் உணர்கிறார்கள்.

    வருடத்தில் ஆறு  நாட்கள் மட்டுமே இங்கு கூடுகிறார்கள். கொண்டாடுகிறார்கள். இளமை விழா என்ற இன்னொரு பெயரும் உண்டு. இங்கு, கேட்கும் வரங்களைக் கொடுக்கும் பூனைகளின் ஆசீர்வாதத்திற்கு பஞ்சமே இருப்பதில்லை.  அதில் விஷேசமே குழந்தை பேரு தான். குழந்தைகளுக்காக பிரார்த்தித்தவர்கள் சில ஆண்டுகளிலேயே குழந்தைகளுடன் இங்கு வந்துவிடுகிறார்கள். 

    அதிஷ்டம் கொடுக்கும் பூனை உரோம சங்கிலி. வியாபார வெற்றிக்கு பூனை நக மோதிரம். குடும்ப நிம்மதிக்கு விசித்திர பூனை புகைப்படங்கள். இப்படி தனித்தனியே பல காரணங்கள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக எல்லாவற்றுக்கும் ஏற்ற ஒன்றும் உள்ளது. தம்பதிகளை என்றும் இளம் ஜோடிகளாக இணை பிரியாமல் இருக்க வைப்பதுதான் இவ்விடத்தின் சிறப்பு.

   மனம் கவர்ந்த பூனையை தேர்வு செய்யலாம். அதனுடன் சில மணிநேரம் கழிக்கலாம். விளையாடலாம். அதனை மகிழ்ச்சிப்படுத்தலாம். புகைப்படம் எடுக்கலாம். புறப்படுவதற்கு முன் ஏதாவது கடைக்குச் சென்று அந்த பூனையைக் கொடுத்துவிட வேண்டும்

   கொஞ்ச நேரத்தில் கடைக்காரர் தயாரித்துக் கொடுக்கும் அந்த பூனை தலை சூப்தான் இந்த பூனைகள் ராஜ்ஜிய விழாவின் முத்தாய்ப்பு. பூனைகளின் ஆசீவாதமும் கூட. அதற்காகவே வந்தவர்கள் திரும்பத்திரும்ப வருகிறார்கள் குழந்தைகளுடனும் குட்டிகளுடனும்....

#தயாஜி

ஜூன் 26, 2020

இருட்டு அறையில்..

   சுட்டித்தனத்திற்கு ஒரு அளவு வேண்டாமா. தினமும் இதே தொல்லைதான். இன்றும் சித்தி கோவத்தின் உச்சிக்கு சென்றுவிட்டார். இறங்கி வரத் தெரியவில்லை. அவனோ கைக்குக் கிடைக்காமல் ஓடிக்கொண்டே இருந்தான்.

   எப்படியாவது அவனை பிடித்து, அடித்து, உதைத்து , துவைத்து, பிழிந்து, காயப் போட்டுவிட துடித்தார். கைக்கு பக்கத்தில் வந்தவன் வேண்டுமென்றே சித்தியின் கையில் படாமல் ஓடிக் கொண்டிருக்கிறான்.

   அம்மா இல்லாத வருத்தம் வரக் கூடாதென்பதால் அப்பா கூட்டி வந்த இன்னொரு அம்மா. அம்மாவா..? இல்லையில்லை அப்படிச் சொன்னால் அவனுக்குப் பிடிக்காது. அவனுக்கு இருப்பது ஒரே அம்மாதான். வேறு யாரையும் அவன் அம்மாவென்று அழைக்கமாட்டான்.

   அம்மா இல்லாததால் சித்தி வந்ததாக சொல்லிக்கொண்டாலும் அம்மா இல்லாமல் போனதே சித்தியால்தான் என்பது யாருக்கும் தெரியவில்லை.

   சீக்கிரமே சித்தியின் கொடுமைகள் அரங்கேறின. முதலில் கண்டித்தார். பிறகு அடித்தார். இப்போது அதுவெல்லாம் இல்லை. வீட்டில் இருக்கும் பழைய ஸ்டோர் அறையில் தள்ளி பூட்டிவிடுவார். இருட்டு அறையில் இருந்தாவது புத்தி வரும் என்பதுதான். பல மணி நேரம் அவன் உள்ளேயே கிடப்பான்.

     ஆனாலும் யாரிடமும் சொல்லி அழவோ, சித்தியின் கொடுமைகளைக் காட்டிக் கொடுக்கவோ மாட்டான். அவனது சேட்டைகளைத் தாங்காது தினமும் அவனை இருட்டு அறையில் அடைக்கத் தொடங்கிவிட்டார் சித்தி.

     கைக்கு பிடிபட்டுவிட்டான். இறுக்கமாக பிடித்துக் கொண்டார். முரண்டு பிடித்தான். காதை திருகினார். இழுத்துக் கொண்டு அந்த இருட்டு அறையில் தள்ளிவிட்டார். கதவை படாரித்தார்.

    அறை முழுக்க இருட்டு. அவன் அழுவதை நிறுத்தினான். கண்களைத் துடைத்துக் கொண்டான். சிரிக்கலானான்.

    "அம்மா நான் வந்துட்டேன்...." என்றதும், சுவர் மேலிருந்து ஏதோ ஒன்று மகனை பார்ப்பதற்கு நிழலிலிருந்து எழுந்து வந்துக் கொண்டிக்கிறது.


ஜூன் 25, 2020

கடவுளும் கேள்விகளும்


   சில நாட்களாகவே ஆஸ்துமா அதிகமாகியிருந்தது. முச்சு விட சிரமம் ஏற்பட்டது. மருந்துகளுக்கும் மருத்துவருக்கும் அவை அடங்கியபாடில்லை. முத்தன நாள் நடு இரவில் மூச்சுத் திணறல் அதிகமாகிவிட்டது. எப்படியோ வீட்டில் உள்ளவர்கள் சமாளித்தார்கள்.

   இனி மருந்துகள் பயனில்லை. ஹீலிங் போகலாம். தனக்கு தெரிந்த 'பாஸ்டர்' பலருக்கு 'ஹீலிங்' செய்து குணமாக்குவதாக மனைவி சொல்லிக் கொண்டிருந்தாள்.

   எதையாவது எடுத்து வாய்க்குள் விட்டாவது சீராக மூச்சு விட்டுக்கொள்ளும் முடிவில் இருந்தேன். சரி வா போகலாம் என்றேன். 

   ஞாயிறு. சபையில் பிரார்த்தனைக் கூட்டம் நடந்துக்கொண்டிருந்தது. எல்லோரும் பாடிக்கொண்டும் கைகளை உயர்த்திக்கொண்டும் இருந்தார்கள். இதுவெல்லாம் முடிந்த பின்னர்தான் 'பாஸ்டர்' 'ஹீலிங்' செய்வார் என்றாள்.

   எது எப்படியோ எனக்கு குணமானால் போதும் என்றிருந்தேன். அப்போதுதான் கண்ணில் பட்டது.

   என் இடுப்பளவு உயரம். சரியாக பேச முடியவில்லை. தாங்கித்தாங்கி ஒரு பெண் நடந்து வந்தார். மருத்துவரைப் பார்க்காமல் இங்கு ஹீலிங் வந்திருக்கிறாரே என்னவொரு வேடிக்கை. மக்கள் எப்படியெல்லாம் பலவீனமனாவர்களாக இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். 

   பிரார்த்தனைக் கூட்டம் முடிந்தது. நோய் கண்டவர்கள் 'ஹீலிங்' செய்வதற்காக வரிசையில் நின்றார்கள். நானும் நின்றுகொண்டேன். அந்த பெண்ணைக் காணவில்லை. 

   என் முறை வந்தது. 'பாஸ்டர்' முன் நின்றேன். அவருக்கு அருகில் அந்த குட்டைப்பெண் நின்றுகொண்டிருந்தார்.  அங்கு அவர்தான் 'ஹீலிங்' செய்து வருகிறாராம். 'பாஸ்டர்' அவரிடம் ஏதோ சொல்கிறார். அந்த  பெண் என்னை முட்டி போட சொன்னார். செய்தேன்.

    என் தலையில் தண்ணீர் தெளித்தார். ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்தார். பேச்சு கூட வராதவர் ஏதோ முனகினார். தண்ணீரைக் குடிக்கச் சொல்லிக் கொடுத்தார். குடித்தேன்.

    நெஞ்சில் ஏதோ கரைவதாக தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் சீராக மூச்சு விட ஆரம்பித்தேன். ஆச்சர்யமாக இருந்தது. வரிசையில் அடுத்தடுத்து நோயாளிகள் வரிசையில் வந்துக் கொண்டே இருக்கிறார்கள்.

   குணம் கண்டவர்கள் "ஆண்டவருக்கு நன்றி... ஆண்டவருக்கு நன்றி" என அழவும் செய்கிறார்கள்.

   இந்த பெண்ணை அந்த ஆண்டவர் குணமாக்கவில்லையே என வருந்துவதா இல்லை அவரால் பலர் குணம் பெறுகிறார்களே என  மகிழ்வதா தெரியவில்லை.

#தயாஜி

ஜூன் 24, 2020

கடவுள் VS சாத்தான்


    தான் விளையாடிக் கொண்டிருப்பது கடவுளிடமென்ற பயம் கொஞ்சம் இல்லை. அந்த சாத்தானின் மனம் முழுக்க ஆட்டத்திலேயே இருந்தது. அதிஸ்டவசமாக    அது வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தது.

     எல்லாம் அறிந்திருந்தார் கடவுள். ஆடுபவர்களை முதலில் ஆடவிட்டு பிறகு ஆட்டத்தை முடித்து வைப்பது கடவுளுக்கு புதிதா என்ன.

     திடீரென சாத்தானுக்கு ஓர் ஐயம். தான் நினைத்தது போலவே கடவுள் காய்களை தனக்கு சாதகமாக நகர்த்திக் கொண்டிருக்கிறார். உண்மையில் தான் விளையாடிக் கொண்டிருப்பது கடவுளிடம்தானா. இப்படியா விளையாடத் தெரியாமல் கடவுள் விளையாடுவார். ஒரு வேளை இது கடவுளில் சித்து விளையாட்டாக இருக்குமோ. இனிதான் தான் கவனமாக காய்களை நகர்த்த வேண்டும் என்று முடுவெடுத்தது.

   மெல்லிய புன்னகையை உதிர்த்தபடியே கடவுள் மீண்டும் தன் காய்களை வெட்டக் கொடுத்தார். சாத்தானுக்கு மேலும் சந்தேகம் தோன்றியது. இப்படியே போனால் தான் ஜெயித்து விடுவேன். ஆனால் கடவுள் தோற்றுவிடுவாரே. ஏன் அவர் இப்படியெல்லாம் செய்கிறார். ஏதோ சூழ்ச்சி இருக்கிறது. நாம் ஜெயித்துவிடக்கூடாது. சாத்தான் வேண்டுமென்றே தன் காய்களை நகர்த்தி கடவுளிடம் வெட்டக்கொடுத்தது.

    இருந்தும் கடவுள் எப்போதும் போல தோல்வி அடைந்துக் கொண்டே இருக்கிறார்.

    கடைசியில் ஆளுக்கு இரண்டு காய்கள் மட்டுமே எஞ்சின. இது கடவுளின் ஆட்டம். கொஞ்சமும் யோசிக்கவில்லை. பழையபடியே தனது காயை தவறாக நகர்த்திவிட்டார். 

    சாத்தானின் ஆட்டம். கடவுள் நகர்த்திய காயை சாத்தான் வெட்ட வேண்டும். ஆனால் அதன் கை நடுங்கத் தொடங்கியது. இந்த வெற்றிக்குப் பின்னால் கடவுள் ஏதோ சூழ்ச்சியை வைத்திருப்பதாக அதன் மனம் சொல்லியது. 

    சாத்தான் கடவுளிடமே கேட்டுவிட்டது.
கடவுள் தன் சூழ்ச்சியை ஒப்புக் கொண்டார். சாத்தானால் மேற்கொண்டு கடைசி காயை நகர்த்த முடியவில்லை. விளையாட்டில் இருந்து விலகிக் கொண்டது.

   கடவுள் சொன்னார், "நீ நினைப்பது போல எல்லாமும் நடக்க ஆரம்பித்து விட்டால் நீ உன்னையே கூட சந்தேகப்பட செய்வாய்... இதற்குத்தான் மனிதர்களிடம் அதிகம் பழகாதே என்கிறேன்..."

#தயாஜி

ஜூன் 22, 2020

அந்த கண்கள் விற்பனைக்கல்ல...

   பல பெண்களை கடந்துவிட்டான். அவர்களின் பல கண்களை கடந்துவிட்டான். ஆனாலும் எந்த கண்களும் அவனுக்கு கொடுக்காததை இந்த கண்கள் கொடுத்தன.

   கண்கள் என்ற பெயரில் காந்தத்தை வைத்திருந்தாள். முதல் பார்வையிலேயே முழுவதும் ஈர்க்கப்பட்டான். இன்றுவரை அப்படியே. கொஞ்சமும் மாற்றமில்லை.

  கண்களுக்கென்றெ உள்ளது பிரித்தியேக மொழி. சத்தமில்லாத மொழி. காதுகளுக்கு கேட்காத மொழி. கண்களில் இறங்கி இதயத்துடன் பேசும் விசித்திர மொழி.

   அவனுக்கு தூக்கம் வரவில்லை. அந்த கண்கள் மீண்டும் மீண்டும் அவனை ஈர்த்தன. சில நாட்களிலேயே அவை இம்சையாக மாறின. தன் நிலை மறந்தான். தன் செயல் மறந்தான். தன் ஆழ்மனத்துடன் சண்டையிடவும் செய்தான்.

   சில நாட்களாக வேலைக்கும் செல்லவில்லை.  எதை எடுத்தாலும் நடுங்கும் கைகளைக் கொண்டு என்னதான் செய்துவிட முடியும்.

   அந்த கண்களைத் தவிர அவனது கண்கள் வேறெதையும் அவனுக்குக் காட்டுவதாயில்லை. வெண்மையும் மெல்லிய சாக்லேட் நிறமும் மையத்தில் வகைப்படுத்த முடியாத நிறமும் கொண்டிருந்த கண்களைக் கொண்டவள் தேவதையாகக் கூட இருக்கலாம்.

   தினமும் காலை அந்த கண்களே அவனுக்கு ஆகாரம். அதுவே அவனது வாழ்வின் ஆதாரம்.

    இப்போது கூட அந்த கண்களைத்தான் பார்க்கிறான். தான் எத்தனைப் பெண்களை கொன்றிருந்தாலும், இந்த கண்களை மட்டும் அவனால் ஏதும் செய்ய முடியவில்லை.

   அந்த விசித்திர கண்கள் இரண்டும் கண்ணாடி பாட்டிலில் பத்திரமாக மிதந்துக்கொண்டிருக்கின்றன.

#தயாஜி


ஜூன் 20, 2020

ஆண்பால் பெண்பால் அன்பால்


ஒரு நாள் இன்பத்திற்கென
இன்னொரு பால்
முகம் கொண்டு
நீள் கூந்தல்
வில் வடிவ புருவம்
மெல்லிய உதடு
மெலிதான வெட்கம்
தனக்கே தனக்கான புகைப்படங்களைப்
பகிர்ந்து மகிழத்
தெரிந்த நமக்கு
இன்னொரு பால்தான்
தன் பால் என அன்பால்
அதன் பால்
தன் மொத்த வாழ்நாளையும்
சுமந்து நிற்பர்வர்களை
எப்போதும் உணரத்தெரிவதில்லை...


அதனதன் இருப்பும் அதனதன் இயல்பும்

-அதனதன் இருப்பும் அதனதன் இயல்பும்-


       அப்போதுவரை பணக்காரர்கள் என்றாலே திமீர் பிடித்தவர்கள் என்றுதான் நினைத்திருந்தான். அந்த குளிரடிக்கும் கார்காரரின் பேச்சு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. பறவைகளை பிடித்து வந்து விற்பதுதான் தற்போதைய ஒரே தொழில். அடுத்தவர் காலுக்கு கீழ் வேலை செய்யாமல் தன் கைக்கு எட்டியவரை உழைத்து வாழ்வது உத்தமமாக இருந்தது.

          இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காட்டிற்குச் சென்று பறவைகளைப் பிடித்து வந்து விற்று தன் குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தான். சமயங்களில் அரிய வகை பறவைகள் கிடைத்துவிடும். விற்பனையில் நல்ல லாபமும் கிடைக்கும். இன்றும் அப்படித்தான் இதுவரை பார்த்திடாத மாதிரி அழகான சின்னச்சின்ன வண்ணப் பறவைகள் கூட்டத்தோடு சிக்கிக்கொண்டன. வழக்கமான இடத்திற்குக் கொண்டு சென்றான். பலரும் அவனது வித்தியாசமான பறவைகளை ஆர்வமாகப் பார்த்தார்கள். இன்றைய அதிஷ்ட தேவதை அவனுக்குத்தான் மாலை போட்டுவிட்டாள் என்றார்கள். அது உண்மைதான் போல.

       முதல் முறையாக அங்கு ஒரு பெரிய கார் வந்து நின்றது. காரின் கருப்பு கண்ணாடியில் தெரிந்துக் கொண்டிருந்த அவனது முகம் மெல்ல மெல்ல கீழே போனது. இப்போது முற்றிலும் வேறு முகம் அங்கு இருந்தது.  கருப்பு கண்ணாடி. வாயில் மின் சுருட்டு. கண்ணுக்கு தெரிந்த கை விரல்கள் மூழுக்க குண்டு மோதிரங்கள்.

      அவன் தூக்கிக்காட்டிய கூண்டில் ஆங்காங்கு பறந்துக் கொண்டிருந்த பறவைகள் அந்த பணக்காரருக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அனைத்திற்கும் ஒரு விலை சொல் என்றார். அதிர்ச்சியில் ஏதோ உளறி ஏதோ குழப்பி ஒரு தொகையை பறவைகளுக்கு நிர்ணயித்தான்
      “பறவைகளோட இயல்பே பறக்கறதுதான் அதை போய் கூண்டில் அடிச்சிருக்கயே.. எல்லாத்தையும் நான் வாங்கிக்கறேன். கூண்டைத் திறந்துவிடு…”.

        அவனால் அந்த வார்த்தைகளைத் தாங்க முடியவில்லை. இன்று கிடைக்கும், அவர் கொடுக்கப்போகும் பணத்திற்கு பிறகு பறவைகளைப் பிடிப்பதில்லை என்று சத்தியம் செய்தான். அவருக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவனது கைகளினாலேயே பறவைகளை திறந்துவிடச் சொன்னார். பறவைகள் ஒவ்வொன்றாக பறக்கத் தொடங்கின. ஏழை பணக்காரர் இருவர் கண்ணிலும் ஒரே மாதிரி ஆனந்தத்தைக் காண முடிந்தது.

     பிறகு அவர் பணத்தை எண்ணலானார். அசுத்தமும் பாவமும் நிறைந்துவிட்ட கைகளைக் கழுவ நினைத்தான். பாட்டிலில் இருந்த தண்ணீரைக் கொண்டு கைகளைக் கழுவியப் பின் இடுப்பில் இருக்கும் துணியில் துடைத்துக்கொண்டான். நிமிர்ந்துப் பார்க்க அந்த குளிரடித்த காரையும் அதிலிருந்த ஆளையும் காணவில்லை.

       கண்ணுக்கெட்டிய தூரம் ஒன்றும் தெரியவில்லை. கை கழுவியப்போதே அவன் செய்த சத்தியமும் போயிருக்கும்தானே என தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறான்.


#தயாஜி


வெட்டுக்கிளிகள்


- வெட்டுக்கிளிகள் - 

       அம்மாவின் அறைக்குச் சென்று பல மாதங்கள் ஆகிவிட்டன. அந்த மரணத்தை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அப்பாவிடம் முகம் கொடுத்துக்கூட பேசுவதில்லை. அவ்வபோது ஆறுதல் சொல்ல வரும் பெண்களிடம் அவன் பேசுவதில்லை. பணக்காரர்கள் எல்லாம் நிம்மதியானவர்கள் என்ற சொன்னவர்களை நினைத்துப்பார்க்கிறான்.
     
         பெரிய வீடு. தனக்காகவே ஒரு அறை. புத்தக அலமாரி. கணினி. வீடியோ கேம். கேட்பது எல்லாமே கிடைத்துவிடுவதிலும் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது.  அப்போதெல்லாம் தினமும் அம்மாவின் அறைக்குச் செல்லாமல் அவனால் இருக்கவே முடியாது. ஒரே பிள்ளை. செல்லப்பிள்ளை. அம்மாவின் திடீர் மரணத்தை அவனால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. 
    
       அப்பா என்னதான் சமாதானம் செய்தாலும் அவன் உடன்படவில்லை. இப்படியே சில மாதங்கள் கழிந்தன.  இவனை சமாதானம் செய்யவே அப்பாவின் தோழியும் அடிக்கடி வீட்டிற்கு வர ஆரம்பித்தார். அவன் பிடி கொடுக்கவில்லை. அவனுக்கென  இருந்த ஒருவரும் இப்போது இல்லை. அவன் தன்னை அனாதையாகவும் பாதுகாப்பற்றவனாகும் உணர்ந்துக் கொண்டிருந்தான். 

        பல ஆண்டுகளாக அவன் வீட்டில் இருக்கும் வேலையாளிடம் மட்டுமே அவன் அவ்வபோது பேசினான். இரண்டாவது தலைமுறை முதலாளியம்மாவின் மரணம் அவரையும் பாதித்திருக்க வேண்டும். நாளுக்கு நாள் அவனது பயமும் பதட்டமும் அதிகமாகிக்கொண்டேப் போனது. அம்மாவின் அறையை மட்டுமல்ல அவ்வழியே நடந்துப் போவதையும்  தவிர்த்தான். 

          வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு பல நாடுகளில் வரத்தொடங்கிய சமயம்.. அவற்றை அழிப்பதற்கு பலரும் பல ஆலோசனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இன்று வீட்டிலும் அது பற்றிய பேச்சு எழுந்தது. அவன் நாற்காலியில் அமர்ந்து சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை சாப்பிட அழைத்துக் கொண்டிருந்தான் வேலையாள். பக்கத்து மேஜையில் அப்பாவும் அவரது தோழியும் ‘ரெட் வைன்’ குடித்துக்கொண்டு வெட்டுக்கிளிகள் பற்றிய சுவாரஷ்யமான தகவல்களைப் பேசிக்கொண்டார்கள்.

       அப்பா, சட்டென வேலையாளிடம், "நீதான் விவசாயம் தெரிஞ்சவானாச்சே... எங்க அந்த  வெட்டுகிளிகளை எப்படி வெறட்டலாம்னு சொல்லு பாக்காலாம்"  என்றார்.  சிரித்தார். அவரைக் காட்டிலும் அவரது தோழி அதிகமே சிரிக்கிறாள். 

 வேலையாள்,  "கொஞ்ச வெட்டுக்கிளிகளை பிடிச்சி வந்து....." முடிப்பதற்குள்,

     "பிடிச்சி வந்து பொறிச்சி சாப்டனுமா...?"  என அப்பா முந்திக்கொண்டார். தோழியால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. குடித்துக் கொண்டிருந்த ரெட் வைன், அவளது வாயிலிருந்து வழியக்கூடச் செய்தது. விட்ட இடத்தில் இருந்து வேலையாள் தொடர்ந்தான், 

      "பிடிச்சிட்டு வந்த வெட்டுக்கிளிங்களை பாத்திரத்தில் போடனும். அப்பறம் அது முழுக்க தண்ணி ஊத்தனும். அதுங்கல தண்ணீல போட்டு சாகடிச்சி, அந்த தண்ணிலயே ரெண்டு நாள் அதுங்கல ஊற வெச்சிடனும்..."

அப்பாவும் அவரின் தோழியும் கவனமானார்கள். 

     "ரெண்டு நாள் கழிச்சி.. அந்த தண்ணிய கொண்டு,  எங்கல்லாம் வெட்டுக்கிளிங்க வரக்கூடாதுன்னு நினைக்கறமோ அங்கல்லாம் அந்த தண்ணிய நல்லா ஊத்திவிடனும்.... "

"ஊத்திட்டா...?"

"அங்க வெட்டுக்கிளிங்க வராது...."

"என்ன  முட்டாள்தனமா இருக்கு.. எங்கயாச்சும் லாஜிக் இருக்கா....?"

      வேலையாளால் மேற்கொண்டு ஏதும் பேச முடியவில்லை. இதுவரை அமைதியாக இருந்த மகன் எழுந்தான், வேலையாள் தோல் மீது எக்கி கையை வைத்தான்.

      "எந்த உயிரும்,  கொல்லப்படும் போது, அதோட உடம்பிலிருந்து ஒரு கெமிக்கலை வெளியாக்கும். அது அந்த இடம் முழுக்க பரவும். செத்த வெட்டுக்கிளிங்களோட அந்த கெமிக்கல் அந்த தண்ணி முழுக்க கலந்திருக்கும். அந்த தண்ணிய எங்க ஊத்தறமோ அங்க அந்த இனம் வராது... ஏன்னா தன்னோட இனம் கொல்லப்பட்ட இடத்திற்குள் வந்தால் அதுங்களும் கொல்லப்படும்னு அதுங்களுக்குத் தெரியும்..."

      அப்பாவும் அவரது தோழியும் பேயறைந்தது போல ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். வேலையாள் தன்னையறியாமல் வழிந்தக் கண்ணீரைத் துடைக்கிறான். 
மகன் எழுந்து நடக்கலானான். அந்த வழி அவனது அம்மாவின் அறையை நோக்கியிருக்கிறது.

- தயாஜி

ஜூன் 17, 2020

பேயாவது பிசாசாவது...


   முதலில் பயம் இருந்தது. இப்போது இல்லை. முழு வீடியோ காட்சியையும் பார்த்துவிட்டாள். பிறகு எதற்கு பயப்பட வேண்டும். 

   ராஜ் வாங்கிக் கொடுத்த கரடி பொம்மை அவ்வபோது நகர்ந்து அமர்ந்து மாயாவிற்கு பயத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஒரு முறை பார்த்தால் ஒரு வாக்கிலும் ஒன்னொரு முறை பார்த்தால் இன்னொரு வாக்கிலும் நகர்ந்திருக்கிறது. அது பற்றி சொன்னாள், ராஜ் நம்பவில்லை. "பேயாவது பிசாசாவது.." என சிரிக்கவும் செய்தான்.

   நகர்ந்து அமரும் கரடியை நிரூபிக்க ஒரு ஏற்பாடு செய்தாள். கரடி பொம்மையைப் பார்த்த வாக்கில் கைபேசி கேமராவை மறைவாக வைத்தாள். குளித்தாள். 

   வெளியில் வந்துப் பார்த்தாள். கரடி பொம்மையின் கை வேறு பக்கமாக இருந்தது. பயந்தவாக்கிலேயே கைபேசியை எடுத்து வெளியே வந்தாள்.

   அவள் குளித்துக் கொண்டிருந்த சமயம், ராஜ் மெல்ல உள்ளே வந்து கரடியின் கையை வேறு பக்கம் வைக்கிறான். எல்லாமே பதிவாகியிருந்தது.

   மாயாவிற்கு பயம் மறைந்து ராஜ் மீது கோவம் வந்தது. காதலியுடன் இப்படியா பயம் காட்டி விளையாடுவது. அதனால்தான் ஏனோ அவள் சொல்வதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்கே மறைந்திருக்கிறான் என வீட்டின் ஒவ்வொரு அறையாக தேட ஆரம்பித்தாள்.

   யாரோ வாசல் கதவை பலமாக தட்டுகிறார்கள். யாராக இருக்கும் என கதவை பாதி திறந்து பார்க்கிறாள்.

    "வீட்டு சாவியை மறந்துட்டேன்... உனக்கு போன் பண்ண கிடைக்கல... கதவை திற..." என்று ராஜ் நின்றுக்கொண்டிருந்தான்.

   கதவை முழுதாகத் திறப்பதற்கு முன் ஏனோ திரும்பி பார்க்கிறாள். 

   அவளது அறையில் இருந்து அந்த கரடி பொம்மை சுவரில் மறைந்து பாதி முகத்தில் அவளைப் பார்த்து கொண்டுருக்கிறது.

#தயாஜி

ஜூன் 16, 2020

உரையாடல்


   வீட்டிற்கு வந்தாள். கைபேசியை எடுத்து வைத்தாள். கையில் கொண்டு வந்திருந்த எதையோ மேஜையில் வைத்தாள். நாற்காலியில் அமர்ந்திருப்பவனுக்கு எதும் எந்த சலனத்தையும் கொடுக்கவில்லை. கைபேசியில் வேகவேகமாக எதையோ எழுதிக் கொண்டும் சத்தமின்றி சிரித்துக் கொண்டுமிருந்தான்.

 அவளும் அவனை சட்டை செய்யவில்லை. குளித்தாள். சாப்பிட்டாள். காலையில் சமைப்பதற்கான எல்லாவற்றையும் தயார் செய்தாள். துணிகளை துவைக்கப்போட்டாள். நேற்று காயப்போட்ட துணிகளை எடுத்தாள். மடித்தாள். அடுக்கினாள். இத்தனை நடந்தும் எந்த சத்தமும் வரவில்லை.

  அவ்வீடு முழுக்கவும் மௌனமே சூழ்ந்திருந்தது. அவளிடம் மட்டுமல்ல அவனிடமும். அப்போதுதான் அவனது கைபேசி அதிர்ந்தது.  எடுத்தான். பால்கணிக்கு சென்றான். மெல்லிய குரலில் பேசவும் செய்தான். பேசுவதற்கே காத்திருந்தவன் போல அவனது கண்களில் ஒளி தெரிந்தது. 

  அது கூட அவளுக்கு வாய்ப்பதில்லை. வீட்டிற்கு வந்ததும் அவள் செய்யும் முதல் வேலை கைபேசியை முடக்குவதுதான்.

   அமைதியின் இரைச்சலுக்கு மத்தியில் இருவரும் பேசி வந்த வார்த்தைகள் மெல்ல மெல்ல ஒலி மங்கி இப்போது இல்லாமலேயே போய்விட்டது. எண்களின் வரிசை போல ஒரு மாறாத வரிசையில் சிக்குண்டவர்கள் போல வீட்டில் அவர்கள் சிக்கிக்கொண்டார்கள்.

   நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்தாள். முன்பு மேஜையில் வைத்த எதையோ எடுத்துப் பார்த்தார்.

 'கால் செண்டரில்' அதிக வாடிக்கையாளர்களிடம் பேசியதற்கும், இலக்கை அடைந்ததற்காகவும் உள்ள பரிசு,  மூன்றாவது முறையாக அவளுக்குக் கிடைத்திருக்கிறது.

#தயாஜி

ஜூன் 15, 2020

முகத்தைத் தேடி    ஆமாம். அது முகம் தான். பார்த்தீர்களா? நீங்களும் பார்க்கவில்லையா. ஓ மை காட். காலையில் இருந்து தேடிக் கொண்டிருக்கிறேன். விசாரித்துக் கொண்டும் வருகிறேன். யாருமே பார்க்கவில்லையாம். உண்மையைத்தான் சொல்கிறார்களா இல்லை. அவர்களும் பயப்படுகின்றார்களா தெரியவில்லை.

    ஏன் பயப்பட வேண்டும். நம் முகத்தை நம் விருப்பப்படி வைக்கும் உரிமை கூட இல்லையா நமக்கு. என் நெற்றியில் இவர்கள் செதுக்கி வைத்த எண் எனக்கு வேண்டாம். உங்களுக்கு வேண்டுமானால் அந்த எண் மீது பயமும் மரியாதையும் இருக்கலாம். எனக்கு இல்லை. இருக்கவும் போவதில்லை.

    நன்றாகவே நினைவில் இருக்கிறது. எப்போதோ எனக்கு ஒரு பெயர் இருந்தது. உங்களுக்கும்தான். நாம் பெயரால்தான் அறியப்பட்டோம். எண்களால் அல்ல.

    ஆட்சி என்ற பெயரிலும் அதிகாரம் இருக்கும் கைகளாலும்  இவர்கள் என்னென்னவோ செய்கிறார்கள். இனிமேலும் விடக்கூடாது.

    முதல் எண்ணிலிந்து இவர்கள் கொடுக்க ஆரம்பிக்கும் எதுவும் கடைசிவரை வருவதில்லை. அவர்கள் எல்லாவற்றையும் நாசம் செய்கிறார்கள். நாம் எல்லாவற்றுக்காகவும் அடித்துக்கொண்டு சாகிறோம். 

    இப்போதாவது கேளுங்கள். நம் முகத்தில் எண்கள் போடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நம் சுதந்திரத்தை பறிக்கிறார்கள். இன்னமும் நம்மை அடிமையாக வைத்திருக்கிறார்கள். ஏன் திரும்பத்திரும்ப எண்களை புதுப்பிப்பதிலேயே கவனம் கொள்கிறீர்கள். 

    தயவு செய்து கேளுங்கள். ஓ... எண்கள் இல்லாத எந்த முகத்தின் பேச்சையும் கேட்கமாட்டீர்களா?

    இது அவர்களின் சூழ்ச்சிதான். எப்படியோ என் முகத்தை திருடிவிட்டார்கள்.  அவர்களுக்கு தேவை எண்களின் வரிசைதான். அவர்களின் பலமும் நமது பலவீனமும் அவர்கள் செதுக்கும் எண்கள்தான்.

#தயாஜி
ஜூன் 14, 2020

அம்மாவின் நட்ச்சத்திரம்- அம்மாவின் நட்ச்சத்திரம் -


    அந்த நபரின் பெயர் மறந்துவிட்டது. காலையில் நண்பர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவர் அவனிடம் வந்தார். அவனது அம்மாவின் பெயரைச் சொல்லி, அவரது மகனா என கேட்டார். அவனும் ஆமாம் என்றான்.
அம்மாவும் அவரும் பள்ளித் தோழர்கள் என்றுச் சொல்லி அவரை அறிமுகம் செய்துக்கொண்டார். அம்மாவைப்பற்றி விசாரித்தார். அவர்களின் பழைய குறும்பு நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்டிருந்தார். 

   அந்நேரம் அவனது கைபேசி ஒலித்தது. அவசரமாக எழுத்தவன் அவருக்கு கை கொடுத்தான். மனதில் சுருக்கென்றது. எழுந்துச் சென்றவன் பேசி முடித்ததும் வந்துப்பார்க்க அவர் அங்கு இல்லை.

   மாலை, அம்மாவிடம் அவர் பற்றி பேசலானான். பள்ளி நண்பர்கள் எனவும், அம்மா செய்ததாய் சொன்ன குறும்புகளையும் சொல்லிச் சிரித்தான். அம்மாவிற்கு எதுவுமே நினைவில் இல்லை. தான் ஒருபோதும் அவ்வாறு செய்ததில்லை என்றுக்கூறி, 
"உங்கப்பா வர நேரமாச்சு.. மேற்கொண்டு எந்த பொய்யும் சொல்ல வேண்டாம். போ.. போய் வேற வேலை இருந்தா பாரு.." என்று எரிச்சலடைந்தார்.

  எழுந்து நடக்கலானான். பெயர் நினைவில் இல்லாததுதான் அம்மாவின் நம்பிக்கையின்மைக்கு காரணம் என புரிந்தது. இன்னொன்று சட்டென நினைவிற்கு வந்தது.

    அம்மாவின் வலது கை கட்டைவிரலுக்கு மேல் இருக்கும் நட்சத்திர வடிவ பச்சையைத்தான் அந்த நபரும் குத்தியிருந்தார் என்பதை அம்மாவிடம் சொல்லலாம் என திரும்பினான்.

  அம்மா தனியே அமர்ந்து, ஏதோ சிந்தனையில் தன் கட்டை விரல் பச்சையைத் தடவிக் கொண்டிருக்கிறார்.

#தயாஜி

சீ.முத்துசாமியின் 'மண்புழுக்கள்'

சீ.முத்துசாமியின் மண்புழுக்கள் (மலேசிய) நாவல் குறித்து..வழக்கமாக நம் நாட்டு படைப்பாளிகளால்  எழுதப்படும் படைப்புகளில், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அக்காலக்கட்ட தமிழக தாக்கங்கள் ஓரளவேனும் இருந்துவிடுகிறது. திராவிட எழுத்தின் எழுச்சி மொழி, மு.வ மொழி என ஒப்பிட்டுப்பார்த்து இந்த நிலைப்பாட்டை அறிய முடியும். அதற்கான காரணம் வாசிப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்டு படைப்பாளி இயங்குவதாகவும் இருக்கலாம். ஒருபடைப்பு அதன் அசல் தன்மை குன்றாமல் இருக்க அதனை எழுதுகின்ற படைப்பாளியிடம் அவர் மண் சார்ந்த அனுபவம் இருக்க வேண்டும் எனதான் தோன்றுகிறது. அது அனுபவமாகவும் இருக்கலாம்; மண் மீதான பிடிப்பாகவும் இருக்கலாம். அந்த பிரியம் படைப்பாளியின் மொழியின் ஊடே தன்னை காட்டிக்கொள்ள தவறுவதில்லை. அதனால்தான் நூல்கள் மூலம் மட்டுமே இலக்கியம் கற்று அதை எழுதுகின்ற படைப்பாளிகளின் ஆக்கங்கள் பாடநூல்களை ஒத்து திட்டமிடப்பட்ட கட்டுச்செட்டான படைப்புகளாக தங்கிவிடுகின்றன. வாழ்விலிருந்து உருவி இலக்கியமாக எழுதப்பட்ட படைப்புகள்தான் தனித்துவமான இடங்களைத் தொடுகின்றன.

மண்புழுக்கள், சீ.முத்துசாமியின் தன் மண் மீதான பிரியத்துடன், தோட்ட வாழ் மக்கள் மீதான அக்கறையுடன், அவர்களின் எதிர்காலம் குறித்த ஐயப்பாடுகளுடன்  மண்ணுள் நுழைந்து அலையும் ஒரு மண்புழுவைப்போலவே தோட்டத்தில் அலைந்து திரிந்த பச்சை மணம் மாறாமல் எழுதியுள்ளார்.

கோழிகளை கே.எஃ.சியிலும், மீன்களை சீன சாப்பாட்டு கடைகளிலும் பார்த்துத் தெரிந்து கொள்கின்ற நவநாகரீக சமூகத்தினராக நாம் ஆகிவிட்ட நிலையில், ஒன்று – இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் சென்று பார்த்து, நாம் வாழ்ந்த வாழ்வை தெரிந்துக்கொள்ள இப்படைப்பு ஒரு ஆவணம். மலேசிய தோட்டத்தின் பாட்டாளிகளின் கதைகள் அவர்களின் வாழ்வியல் முறைகள் அவர்களின் மொழி அவர்களின் நம்பிக்கை அவர்களின் மனித நேயம், அவர்கள் மிருக குணம் என ஒரு முழுமையான படைப்பாக மண்புழுக்கள் நாவல் தன்னை வெளிக்காட்டுகிறது.

ஆட்டுக்காரன் வீட்டில் ஆட்டோடு ஆடுகளாக வளரும் ஒரு ஆட்டுக்குப் பெயர் சாமி கெடா. ஆடுகள் வழக்கமாக இலை தழைகளைச் சாப்பிடும். இந்த சாமி கெடா  தோட்டத்தில் திறந்திருக்கும்  வீடுகளில் நுழைகிறது. சமையல் அறைவரை சென்று அங்கிருக்கும் உணவுகள் அத்தனையையும் தின்றுவிட்டு ஏப்பாம் விடாத குறையாக மிடுக்காக உலா வருகிறது. அதனை விரட்டவும் முடியாமல் திட்டவும் முடியாமல் மறக்காமல் வீட்டை பூட்டிவிட்டு அங்குள்ளவர்கள் தத்தம் வேலைகளைச் செய்கிறார்கள். இவ்வாறு தோட்ட மக்களின் இயல்பான வாழ்வியலை விலங்குகளின் வழியும் இந்நாவல் விளக்கிச் செல்கிறது.

இந்நாவலில் தனித்து தெரிவது சீ.முத்துசாமியின் மொழி. மண்ணின் மணம் கொண்ட மொழி அது.  அந்தந்த கதாப்பாத்திரங்கள் போலியற்ற உணர்ச்சிகளால் தங்கள் மொழியைப் பேசிச்செல்கின்றார்கள். அவை தமிழ்தான் என்றாலும் அந்த வகை தோட்ட மொழியில் இருந்து  நாம் நம்மை  எவ்வளவு தூரம் துண்டிந்துக்கொண்டு வந்துவிட்டோம் என நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. தமிழகத்தில் கோயம்புத்தூர் தமிழ், திருநெல்வெலி தமிழ், மெட்ராஸ் மொழி என்று பேச முடிகின்ற- அப்படி பேசினாலும் புரிந்துகொள்கிற- நாம்தான் நம் முன்னோர்கள் பேசிய தோட்ட மொழியில் உருவான ‘மண்புழுக்களை’ சிக்கலான மொழிநடை என்கிறோம்.  நாம் நமது வட்டார மொழியில் இருந்து அந்நியமாகிவிடவில்லை; நமது வேரில் இருந்தே நம்மை துண்டித்துக்கொண்டு எங்கோ ஓடிக்கொண்டிருக்கிறோம். மூச்சுவாங்க நின்று பார்க்கும் போது கடந்துவிட்ட தூரத்திலும் நமக்கு ஒன்றும் தெரியாது; கடந்துப்போக வேண்டிய தூரமும் கண்ணுக்குத் தெரியாது அந்தரத்தில் அந்நியனாக நிற்கிறோம். இந்நாவல் நாம் இழந்துவிட்ட மொழியினூடாக இறந்தகாலத்தில் பயணிக்க கொஞ்ச நேரத்தில் நம்மையும் உள்ளே இழுத்துவிடுகிறது. மூதாதையரின் உயிரணுக்களின் வேலை போல அது. நாவல் வாசிக்கையில் சாத்தியமாகிவிடுகிறது. இன்னும் சில காலம் கழித்து தோட்ட மொழிகள் குறித்து யாராவது தெரிந்துக் கொள்ள முயன்றால் மண்புழுக்கள் முதன்மையாக தரவாக இருக்கும். உதாரணமாக தீம்பார், பாசா, ஆம்பர், வங்குசா, தாசா கத்தி, குசினி, மணக்கட்டை, தக்கர், ச்சின்னாங்கு, ஜின்னு என அடுக்கிக்கொண்டு செல்லலாம்.  இவை  தமிழும் ஆங்கிலமும் மலாயும் கலந்துவிட்ட புதிவித வட்டார மொழியாக நாவல் முழுக்க பின்னிக்கிடக்கின்றன. இவை அசல் தோட்ட மக்கள் பயன்படுத்தி அவர்களின் வாழ்வியல் மொழி.

ஆட்டுக்காரன் சின்னக்கருப்பன் குறித்த அறிமுகத்தோடு நாவல் தொடங்குகின்றது. நாவலில் நிறைவு அத்தியாயத்தில் ஆட்டுக்காரன் தற்கொலை செய்துக்கொள்கிறான். ஆனால் நாவலில் கதாநாயகன் அவனில்லை; வேறு எவரைச் சொல்வதென்றும் தெரியவில்லை. ஆட்டுக்காரனில் தொடங்கி ஒவ்வொரு கிளையாக நாவல் தன்னை வளர்த்துக்கொண்டே போகிறது. ஒருமுறை நாவலில் வந்தவர்கள் மீண்டும் வருவது அறிதாகவே இருக்கிறது. ஆனாலும் அவர்கள் யாரென்றும் எப்படியானவர்கள் என்றும் அவர்களின் வாழ்வையும் நாவலாசிரியர் சொல்லிவிடுகின்றார்.

அதில் ஒருவர் சாலபலத்தார். வெற்றிலை கொள்ளை வைத்திருப்பவர். இன்றும் கூட வெற்றிலை கொடி வைப்பதற்கு கைராசிக்காரராக இருக்க வேண்டும் என சொல்வது உண்டு. ஒருபடி மேலே போய், ஒத்துக்கொள்ளாதவர்கள் யாரும் வெற்றிலை கொடி நட்டால் அது அவர்களுக்கே பாதகமாக அமைந்துவிடும் என்ற அதீத கற்பனை கதைகளும் தோட்டங்களில் உண்டு. தோட்டங்களில் முக்கியக் கதாபாத்திரமாக இருக்கும் இதுபோன்ற வெற்றிலைக்காரர்கள் வழி சீ.முத்துசாமி நாவலை உயிர்ப்பாக்குகிறார். அதேபோல முனியனின் மனைவி.

பாகவதர் திரைப்படத்தை லயித்து ரசித்து பார்க்கக்கூடியவள். வேறெந்த தேவையும் எதிர்ப்பார்ப்பும் அவளிடம் இல்லை. ஒரு முறை எரிச்சல் கொண்ட கணவன் இப்படி பைத்தியமாக பாகவதர் படம் பார்க்கிறயே, அதில் என்னதான் இருக்கு என கேட்க, “ஆமாண்டா  நா அவர புருஷனாதான் நெனக்கறேன்… நீ குடிச்சிட்டு வந்து அடிச்சி தொவச்சி நாயா உளுந்து பொரள்ரப்ப நா அவரதான்டா நெனைச்சி படுத்து கெடக்கறேன்… ஏன்டா அதுல என்ன குத்தம் ? பொம்பளங்க மேல அவருக்கு எத்தன மதுப்பு. அன்னக்கு பார்த்தயே படம்.. கட்டன பொண்டாட்டிய கண்ணு கலங்காம பார்த்துக்க எத்தன கஷ்டப்பட்டாரு அதில…நீ செய்வியாடா..?” என மனதில் பேசி முடிக்கின்றார். இந்நாவலில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வாறு உள்ளத்தில் உள்ளதை பேசியிருப்பது இவ்விடத்தில் மட்டும்தான் . ஒருவகையில் இந்தக் கதாபாத்திரம் தோட்டத்தின் பல பெண்களின் கூட்டு மனமாக வருகிறாள்.

மூன்றாவது பாத்திரம் புட்டுக்காரன். தமிழகத்தில் இருந்து சஞ்சிக்கூலியாக வந்த கதையை தொப்புளானிடம் பேசுவது நமக்கு எளிய வரலாற்றுச்சித்திரத்தைக் கொடுக்கிறது. வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருந்த நிலமையும் அதன் பின் நாட்டை கைப்பற்றவிருக்கும் ஜப்பான்காரர்களின் அராஜாகம் வரைக்கும் அவர் சொல்லிச்செல்கிறார். இவ்வாறு தோட்ட மக்களின் பிரதிநிதிகளாக அறிமுகமாக இவர்களுக்கு நாவலின் மையத்தில் முக்கிய இடம் இல்லாவிட்டாலும் தோட்டம் எனும் நிலத்தின் வரலாற்றில் முக்கிய இடம் உண்டு.

தோட்டத்தில் வாழ்தவர்களுக்கென்றே பிரித்தியேகமான ஆமானுஷ்ய அனுபவங்கள் இருக்கும். செழிப்பாக இருந்து, பின் ஒரு காலகட்டத்தில் ஆங்கிலேயர்களாலும் ஜப்பானியர்களாலும் தன் சொந்த இனத்தாலும் கொல்லப்பட்ட மனிதர்களின் ஆன்மா அவ்வளவு சீக்கிரத்தில் அம்மண்ணை விட்டு விலகிடாது எனும் நம்பிக்கை ஆழமானது. சமயங்களில் தோட்டத்தில் ஏற்பட்ட அமானுஷ்யமோ அல்லது பேய் பற்றிய அனுபவத்தையோ இப்போது பகிர்ந்தால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இவ்வனுபவங்கள்தான் தோட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பச்சையம். ஆட்டுக்காரனின் தங்கை அஞ்சலை தற்கொலை செய்துக்கொள்கிறாள். அவளே பேயாக வருவதாக நாவலில் வருகிறது. சமயத்தில் இருளாண்டி மனைவிக்குப் பேய் பிடிக்க, பூசாரியை அழைக்க ஓடுகிறார்கள். ஆனால் பூசாரியையும் பேய்கள் விட்டுவைப்பதில்லை. இருட்டில் யாருக்கோ காத்துக்கொண்டிருக்க வேப்பில்லையை ஒடிக்கச்சென்ற வயித்தன் வருவதாக புசாரி குரல் கொடுத்திருக்கிறார். சலனமின்றி அரிக்கேன் விளக்கை யாரோ தூக்கிகொண்டு பூசாரியை நோக்கி வருகிறார்கள். சற்று அருகில் வந்ததும் தன் கையில் பிடித்திருந்த அரிக்கேன் விளக்கில் தனது முகத்துக்கு அருகில் வைத்து கண்களை சுருக்கிப் பார்க்கிறார்கள். பூசாரி யாரோ தூக்கிக்கொண்டு வந்தது போல தெரிந்த அரிக்கோன் விளக்கு அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. அந்தரத்தில் இருந்த அரிக்கேன் விளக்கு சற்று நேரத்தில் அப்படியே தீப்பந்தம் போல மரத்தின் உயரத்தின் எரியத்தொடங்குகிறது. மயங்கி விழுகிறார் பூசாரி. தோட்ட பின் புலத்தில் உள்ளவர்களால் இந்த மாதிரியான அரிக்கேன் விளக்குகள் மாதிரியான சம்பவங்களை உள்வாங்கிவிட முடியும். உச்சி நேரத்தில் தன்னந்தனியாக தீம்பாருக்கு போகின்ற சமயத்தில் கடவுள் பெயரை சொல்வார்களோ இல்லையோ எப்போதொ இறந்து அங்கு ஆவியாக நடமாடுவதாக சொல்லப்படும் காத்துகருப்புகளிடம் “தோ பாரு நான் பாட்டுக்கு இப்படியா வேலையா போறேன்.. நீ பாட்டுக்கு நீ இரு… நான் உன்னை தொந்தரவு செய்யல நீயும் என்னை தொந்தரவு செய்யாத” என பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.

தோட்டத்து கோவிலில் எதையோ பாறிகொடுத்தது போல புதியவர் ஒருவர் அமர்ந்திருக்கின்றார்.  யாரென்றே அறிமுகம் இல்லாதவர். பிரம்மை பிடித்தவர் போல இருக்கிறவர். ஆனாலும் ஆட்டுகாரனின் கண்களில் பட்டதும் அவரை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறான். பத்து நாட்களாக ஏதும் பேசாமல் அந்த புதியவரும் ஆட்டுக்காரன் கொடுப்பதைச் சாப்பிட்டு வாசலிலேயே கிடக்கிறார். ஒரு நாள் அவரை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்க்கிறார்கள். கடைசியில் மாட்டு கொட்டகையில் மாடுகளுடன் பேசிக்கொண்டிருக்கிறார். மாடுகளும் புதியவர் என்று முரண்டு பிடிக்காமல் சகஜமாகவே இருக்கின்றன.

ஆட்டுக்காரனின் மூத்த மகள், மனிதர்களை விட பிற உயிர்கள் மீது பாசமிகுதியாய் இருக்கிறாள். அவள் இருக்கும் சமயத்தில் மட்டும் வந்து போகின்ற பசி எடுத்த கோழிகள், அவள் மீது அன்பை காட்டும் ஆடு மாடுகள் என அவளைச்சுற்றிலும் அன்பு மயத்தை ஏற்படுத்திக்கொள்கின்றாள். அறுந்துவிட்ட செருப்புடன் காடுகளுக்கு ஆடு மேய்க்க செல்வதும் முகத்தில் எப்போதும் சிரிப்பை சுமந்தவளாகவும் இருக்கிறாள். நாவலாசிரியர் அவள் குறித்து சொல்லும் போதெல்லாம் தோட்டத்தில் நமது தோழி ஒருத்தியை நம்மால் நினைவுக்கூராமல் இருக்க முடியாது. அப்படியானவள் ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாக ஆடுகளுடன் வீடு திரும்பவில்லை. வீடும் தோட்டமும் கலவரமடைகிறது.
ஆட்டுக்காரனின் மகள் பிணமாக கண்டெடுக்கப்படுகிறாள். வன்புணர்வு செய்யப்பட்டு கித்தப்பாலை சேமிக்கும் குவளையால் தலையில் அடிக்கப்பட்டு மண்டை உடைந்து கண்டெடுக்கப்படுகிறாள். கொஞ்ச நேரத்தில் அந்த மிருகச்செயலை செய்தவன் கசியடி முனியன் என சந்தேகத்தின் பேரில் கைதாகிறான். ஆட்டுக்காரன் மீதிருந்த கோவத்தை அவனை பழிவாங்குவதற்காகவே இவ்வாறு செய்திருப்பதாக அவனுக்குள்ளாகவே அவன் பேசிக்கொள்கிறான். முதலில் கசியடி முனியன் மீது நமக்கு கோவம் வருகிறது. அந்த மிருகத்தை தண்டிக்க வேண்டும் என நினைக்கின்றோம். பாதிக்கப்பட்டவர் குரலாக மட்டும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தியவரின் குரலாகவும் நாவலாசிரியர் பேசுகிறார். மான்குட்டியின் நியாயம் அதற்கு என்றால், ஓநாயின் நியாயம் அதற்கு என்பதாக இன்னொரு தரப்பில் இருந்து, கசியடி முனியன் தரப்பில் இருந்து கதை சொல்லப்படுகிறது. இங்குதான் முத்துசாமி அசல் கலைஞராகிறார். இங்குதான் மண்புழுக்கள் நவீன இலக்கியத்தரத்தை அடைகிறது. அது கறுப்பு வெள்ளை, நல்லது கெட்டது எனும் நீதிகளை முன்வைத்து எழுதப்பட்ட இலக்கியமாக இல்லாமல் நம் முன் வாழ்வின் அந்தரங்கமான தருணங்களை சீண்டிவிடுகிறது. அதன் உச்சமாக  கொலைகாரனாக தெரிந்த கசியடி முனியன் கம்யூனிஸ்டுகளுடன் சேர்வதும் தோட்டத்தில் யார் கண்ணிலும் பட்டுவிடாத தெய்வத்திற்கு நிகராக பேசப்படும் ராஜ நாகமாக மாறுவதும் இந்நாவல் தொடும் உச்சங்களில் சில.

ஆட்டுக்காரனுக்கு காலில் காயம்பட்டு காலை எடுக்கும்படி ஆகிறது. காலை எடுத்தது ஒரே வரியில் சொல்லப்பட்டாலும் அதன் பிறகு ஆட்டுக்காரன் வாழ்வு ஆட்டம் காண்பதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. ஏற்கனவே மகள் இறந்ததற்கு கணவன் தான் காரணம் என பழி சுமத்திய மனைவி இப்போது கால் இன்றி கையாலாகாதவனாக ஆகிவிட்ட ஆட்டுக்காரனை மொத்தமாகவே ஒதுக்கு வார்த்தைகள் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கிறாள். ஆட்டுக்காரனின் இளைய மகள் மட்டுமே தந்தைக்கு உணவு தருவதும் பேசுவதுமாக இருக்கின்றாள். ஆட்டுக்காரன் தன் நிலை அறிந்து தினம் வேதனையில் தூக்கம் இன்றி தவிக்கின்றான். சமயங்களில் வாழ்வு நமக்கு துரோகம் செய்துவிடும். நம் மீதே நமக்கு வெறுப்பு வரும்படி சதி செய்துவிடும். நம்மை சுற்றியிருந்த நமக்கானவர்கள் என நம்பிக்கொண்டிருந்த எல்லாரையும் நமக்கு எதிராக திருப்பி விடும். வாழ்வின் மீது நம்பிக்கையற்ற ஒரு முடிவைத்தான் நாவலில் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனாலும் இப்படியெல்லாம் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது என சொல்லிவிடுவதும் படைப்பாளியின் வேலை.ஒரு தோட்டப்பாட்டாளியின் எழுச்சியும் அவனது வாழ்வின் வீழ்ச்சியும்தான் இந்நாவல். இதன் ஊடே அசலான தோட்டத்தையும் அம்மக்களின் வாழ்வையும் கண்முன்னே எந்த பாசாங்கும் இன்றி காட்டியுள்ளார் நாவலாசிரியர்.

நிறைவாக இந்நாவல் நல்ல நாவல் என சொல்வதற்கு இந்நாவல் இவர் நல்லவர் என்றும் இவர் கெட்டவர் என்றும் தீர்பினை சொல்லாமல் இருப்பதுதான் காரணம்.மனிதர்களுடன் அவர்கள் வாழும் நிலத்தினையும் நம் கண்முன்னே காட்டி ஒரு வாழ்வை அதன் போக்கில் பாசாங்கு இன்றி சொல்கிறது.

அடுத்ததாக, இந்நாவலில் இருக்கும் வட்டார மொழி ஒவ்வொன்றும் தோட்டத்தை மீட்டுணர வைக்கிறது.மீண்டும் அவ்வாழ்விடம் நோக்கி நாம் செல்லவோ வாழவோ முடியாது ஆனால் அதன் பதிவுகளை அதன் வரலாற்றை நிதர்சனமாக மீண்டும் அடுத்த தலைமுறை தெரிந்துக்கொள்ளமுடியும்.

இறுதியாக சீ.முத்துசாமியின் இந்நாவல் சில இடங்களில் சொல்லும் யூ.பி தோட்டத்தில் பிறந்தவன் நான். இருபத்தியோரு வயதுவரை அங்கு வாழந்தவன். மண்புழுக்கள் நாவலில் சொல்லிய நிலமும் , மனிதர்களும் நான் வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவந்தன. பால் மரங்கள் எல்லாம் அகற்றப்பட்டு தொழிற்சாலைகள் கட்டப்பட்டன. பால் சீவ அதிகாலை சேவல் கூவி எழுந்தவர்கள் தற்போது அலாரம் அடிக்க எழுத்து தொழிற்சாலை செல்கிறார்கள். நான்கு சுவர் தடுப்பில் இயந்திரங்களுடன் இயந்திரமாக மாறிவிட்டார்கள்.கோவில் திருவிழாக்கள், ஒன்று கூடும் தோட்டப்பாட்டாளிகள்  இப்போது இல்லை, மஞ்சள் நீர் விளையாட்டில் யார் யார் மீதோ மஞ்சள் நீரை ஊற்றி விளையாடும் வெகுளித்தனம் இப்போது இல்லை, ஒன்றாக அமர்ந்து கதை பேசி இரவு உணவு சாப்பிட்ட உறவுகள் இல்லை.

எல்லார் வீடுகளிலும் வாசலைத்தாண்டி சாலை வரை வேலி போடப்பட்டு கட்டாயம் பூட்டு பூட்டப்பட்டது.காலை முதல் மாலை வரையும் இரவு வரையும் தொழிற்சாலைகளில் வேலை செய்தவர்கள் வேலை முடிந்ததும் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் வீடியோ கேசட்டுகளில் ஐக்கியமானார்கள். ஞாயிறு விடுமுறை நாளில் மட்டுமே ஒருவரை ஒருவர் பார்த்து கொஞ்சமாக புன்னகைக்க முடிந்தது.

என் வாழ்வில் ஏற்படும் அனுபவத்திற்கு ஏற்றார்போல வாழ்வு மீது எனக்கு  இருக்கும் நம்பிக்கையும் எதிர்ப்பார்ப்பும் மாறிக்கொண்டே இருக்கிறது.என் வாழ்வின் அனுபவத்தின் ஒரு பகுதி வாசிப்பின் ஊடாகவும் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. மண்புழுக்கள் நாவல்  மனிதர்கள் மீது ஈரம் கொண்ட என் மூதாதையரின் உயிரணுக்கள் என்னுள்ளும் இருப்பதை நினைவுப்படுத்துகிறது.

- தயாஜிஜூன் 13, 2020

மீசை...


   வலது பக்கத்தில் ஒரு கோடு. இடது பக்கத்தில் ஒரு கோடு. அழகாக அமைந்துவிட்டது. அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் இது போதுமா என தெரியவில்லை. அப்பாவின் முகத்தை நன்றாக நினைவுக் கூர்ந்தாள். கொஞ்சம் மொத்தமாக இருக்க வேண்டும். ஆக இந்த கோடுகள் போதவில்லை என்பதை உணர்ந்தாள்.

  மகள் என்னதான் செய்துக் கொண்டிருக்கிறாள் என்ற ஆர்வம், தன் முகத்தை அசைக்காமல் வைத்திருக்கச் செய்தது. மண்டியிட்டு மகளின் உயரத்திற்கு வந்து சிலை போல இருந்தார் அம்மா.

   அவள் நினைத்தது போல வந்துவிட்டது. தான் வரைந்த ஓவியத்தை அப்பாவும் பார்க்க வேண்டுமே. அம்மாவின் கையைப் பிடித்து அப்பாவிடம் கூட்டிச்சென்றாள். 

   வழக்கம் போல அப்பா தன் கைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். தன் பக்கம் மகளும் மனைவியும் நிற்பதை உணர்ந்தவர். மெல்ல நிமிர்ந்துப் பார்த்தார். அவருக்கு சிரிப்பும் வந்துவிட்டது.

   "என்ன பாப்பா அம்மாவுக்கு போய் மீசை வரைஞ்சிருக்கே... ஏண்டி அதான் சின்ன பிள்ள உனக்கு இதெல்லாம் சொல்லத் தெரியாதா..?"

   "அப்பா..... அம்மாக்கும் மீசை வந்துரிச்சி.... இனிமேல அம்மாவை நீங்க திட்டக்கூடாது அடிக்கக்கூடாது சரியா.."

  அப்பாவிற்கு சுருக்கென்றது. அம்மாவின் கை மகளின் கையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டது. அவரின் கண்கள் கலங்கிக் கொண்டிருந்தன.

#தயாஜி

ஜூன் 12, 2020

கருப்பும் வெளுப்பும்


"அன்னிக்கு திடீர்னு இருட்ட ஆரம்பிச்சது. மழை வரும்னுதான் முதல்ல நினைச்சோம். ஆனா அது மழை மேகத்துனால வந்த கருப்பு இல்ல.."

"அப்பறம்..?"

"எங்களை அழிக்க வந்த கருப்பு."

"ஹையோ...!!"

"அந்த இருட்டு அனல் போல ஒவ்வொன்னா பொசுக்கத் தொடங்கிச்சி.. நாங்க எல்லாம் ஆளுக்கு ஒரு மூலைக்கு ஓடினோம். ஆனா அந்த இருட்டு இன்னும் வேகமா பூமிக்கு வந்தது..... வீட்டுக் கூரை வரைக்கும் வந்துகிட்டே இருந்தது. கொஞ்ச கொஞ்சமா கூரையில் இருந்து அந்த இருட்டு கீழே வழியத் தொடங்கிச்சு."

"என்னது இருட்டு வழிஞ்சிச்சா..?"

"ஆமா.. இருட்டு மெல்ல மெல்ல வழிஞ்சிகிட்டே வந்தது. அந்த இருட்டோட அனல்  படும் மரங்கள் எல்லாம் அப்படியே சாம்பல் போல காற்றோட கரைய ஆரம்பிச்சது. வீடுகளும் காற்றில் சாம்பலாக கரைந்துகிட்டு இருந்துச்சு.... நாங்களாம்..."

"நீங்களாம்.. சொல்லுங்கப்பா நீங்களாம்..?"

"நாங்கெல்லாம் எங்க வாழ்க்கை இதோட முடிஞ்சதுன்னு நினைச்சி ஓடறதையும் ஒழியறதையுன் நிறுத்திட்டோம். அப்படியே ஒரே இடத்துல நின்னோம். அந்த அனல் எங்களையும் சுட ஆரம்பிச்சது ."

"உங்க மேலலாம் இருட்டோட அனல் பட்டதாப்பா.. நீங்களும் காற்றோட கரைஞ்சிட்டீங்களாப்பா...?"

"இல்ல... அப்பதான் ஓர் அதிசயம் நடந்தது."

"அதிசயமா..? என்னப்பா அது?"

"எங்க மேல இருட்டும் அந்த இருட்டோட அனலும் படாத மாதிரி சில பேரு எங்கள் கட்டிப்பிடிச்சிகிட்டாங்க..."

"உங்க மேல இருட்டும் அனலும் பட்டிருக்காது.. ஆனா அவங்க மேல அனல் பட்டிருக்குமே.. ஐயோ அவங்கல்லாம் மறைஞ்சிட்டாங்களாப்பா..?"

"அதான் இல்ல..... மற்றவங்களை காப்பாற்ற தங்களோட உயிரையும் கொடுக்க நினைச்ச அவங்க கிட்ட அந்த இருட்டு தோத்துப்போச்சி.. அது அப்படியே அவங்கக்குள்ள அடைங்கிடுச்சி.. அதனாலதான் அவங்களாம் கருப்பா ஆகிட்டாங்க..."

"ஓ அதான் அவங்கல்லாம் கருப்பா இருக்காங்களாப்பா...?"

"ஆமாம், அது அவங்களோட நல்ல மனசுக்கு கடவுள் கொடுத்த அடையாளம். எங்களை காப்பாத்திவிட்ட மக்களை நாமதானே காப்பாத்தனும்...?

"ஆமாம்ப்பா..."

"அதுக்கு பொம்மி என்ன செய்யனும் சொல்லு..?"

"அவங்க கருப்பா இருக்காங்கன்னு கிண்டல் செய்யக்கூடாது.. எப்பவும் அவங்களை ஒதுக்கக் கூடாது... அவங்ககூட ஒன்னா இருக்கனும் அப்பதான் கடவுளுக்கு நம்மையும் புடிக்கும்.." 

#தயாஜி

ஜூன் 10, 2020

ஊஞ்சலாட்டம்   முதலில் அவள் நம்பவில்லை. அவன் அதை எதிர்ப்பார்க்கவும் இல்லை.  பள்ளியில் இந்த கதையைச் சொன்னபோது எல்லோரும்தான் சிரித்தார்கள். 

   கடைசியில் அவள் அதனை நம்பவும் செய்தாள். அது அவனுக்கு ஆனந்தத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. தன்னிடம் யாரும் விளையாடவில்லை என்கிற காரணத்தால் அவன் உருவாக்கிய கதை. இருந்தும் அவளை ஏமாற்ற அவன் விரும்பவில்லை.

   வானம் வரை செல்லும் ஊஞ்சல் எங்காவது உள்ளதா என அம்மாவையும் அப்பாவையும் கேட்டான். இவர்களும் அவனது வெகுளித்தனத்தைக் கண்டு சிரித்தார்கள். அவனைக் குறித்து இன்னுன் அறியாமல் இருக்கிறானே என்கிற வருத்தமும் வந்தது.

      அவனால் அவன் சொன்ன கதை போல, எந்த ஊஞ்சலும் வானம் வரை செல்லாது மேகத்தை உரசாது என தெரிந்துக் கொண்டான். சிரித்தவர்கள் மத்தியில் தன்னை நம்பியவளை ஏமாற்ற அவன் விரும்பவில்லை.

   அவன் சொன்னதில் இருந்த சுவாரஷ்யம் அவளுக்குப் பிடித்திருந்தது. எப்படியாவது அவளை ஊஞ்சலில் அமர வைத்து பலம் கொண்டு இழுத்து விட நினைத்தான். அப்படியாவது வானம் வரை அல்ல, பாதி வரையாவது செல்லுமே என நம்பிக்கொண்டான்.

   பள்ளி முடிந்தது. இருவரும் ஒன்றாக நடந்தார்கள். ஊஞ்சலில் ஏறி வானம் பார்க்க அவள் ஆவளாய் இருப்பது அவனுக்கு புரிந்தது. சிரிக்கிறாள். துள்ளி குதிக்கிறாள். கொஞ்சம் விட்டால் இப்போதே மேகம் தொட்டுவிடுவாளோ என்கிற பயம் அவனுக்கு வந்துவிட்டது.

   நல்ல வேளையாக வழியில் இரண்டு ஊஞ்சல்களைக் கண்டார்கள். இத்தனை நாள் எப்படி இந்த ஊஞ்சலை தவறவிட்டாள் என கேட்டுக்கொண்டாள். அது ரொம்ப நாளாவே இங்கதான் இருக்கு நமக்குத்தான் தெரியல என சமாளித்தான். அப்போதுதான் ஏதோ நடக்கப்போவதை அவள் உணர்ந்தாள். 

   இன்று வேண்டாம். இன்னொரு நாள் ஊஞ்சலில் வானம் தொடலாம் என்றாள். அவனுக்கு இந்த வாய்ப்பை தவறவிட மனதில்லை. அவளை பேசி சமாளிக்க வைத்தான்.

    முதலில், அவள் ஊஞ்சலில் அமர்ந்தாள். வேகமாக அவளை இழுத்துவிட்டான். சீக்கிரமே திரும்ப வந்துவிட்டாள். அவள் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.

   ஏதேதோ பேசிக்கொண்டே தன் முழு பலம் கொண்டு அவளை இழுத்துவிட்டான். எந்த மாற்றமும் இல்லாத ஏமாற்றமே அவள் முகத்தில் தெரிந்தது. 

   மனதில் ஏதோ தோன்றியது போல அவனது உடல் ஒரு நொடி சிலிர்த்தது. கொஞ்ச நேரம் இருவருமே ஊஞ்சலில் ஆடலாம் என்றவன் பக்கத்து ஊஞ்சலில் அமர்ந்தான்.

   இருவரும் அமர்ந்தவாக்கிலேயே ஊஞ்சலுடன் பின்னோக்கி நகர்ந்தார்கள்.
கால் கட்டை விரல் மட்டுமே இப்போது பூமியில் பட்டது. இருவரும் வானம் தொட தயாரானார்கள். 

"ஓ" 

   என்ற உற்சாக குரலில் கால்களை முன்னே தூக்கி உடலை பின் சாய்த்தார்கள். எங்கிருந்து வந்த வேகமோ தெரியவில்லை. ஊஞ்சல் காற்றாக பறந்தது.

   மேலே சென்ற ஊஞ்சல்கள் கீழே வந்ததன. அவள் மட்டும் அமர்ந்திருந்தாள். இன்னொரு ஊஞ்சல் காலியாக இருந்தது. அதன் பிறகு அவள் ஆடவில்லை. ஊஞ்சலில் இருந்து இறங்கிக்கொண்டாள். இரண்டு ஊஞ்சல்களும் மெல்ல மறையத்தொடங்கின. 

   வானத்தைப் பார்த்து கை காட்டியப் படியே தன் பள்ளிப்பையை எடுத்துக் கொண்டு நடக்கின்றாள்.


#தயாஜி

ஜூன் 08, 2020

பசித்திருக்கும் ஓநாய்கள்


  இன்று பொம்மியின் முறை. பௌர்ணமியும் கூட. இன்றைய நாள் அதிக பசியெடுக்கும். அதற்குள்ளாகப் பாட்டி வீட்டை அடைந்துவிட வேண்டும்.

   ஒத்தையடிப் பாதையில் தைரியத்தையும் பயத்தையும் ஏற்ற இறக்கமாய் சுமந்தபடி நடந்துக் கொண்டிருக்கிறாள். கையில் பிடித்திருக்கும் விளக்கின் வெளிச்சம் குறைந்தது பத்து அடிகள் வரை மட்டுமே இருளை விலக்கி உதவுகிறது.

  அவ்வபோது பிடித்திருக்கும் விளக்கையும் உணவுக் கூடையையும் கை மாற்றிக் கொள்கிறாள். பாதை மீது கவனத்தை வைத்துக் கொள்கிறாள்.

     பாட்டிக்கு உடல் நலமில்லை. தினம் ஒரு ஆள் அவருக்கு உணவையும் மருந்துகளையும் கொண்டுச் செல்ல வேண்டும். இந்த ஒத்தையடி பாதை மட்டுமே பாட்டி வீட்டிற்கு விரைந்து செல்லும் வழி. மற்ற வழிகளில் பயங்கர மிருகங்களின் தொல்லைகளும் மனிதர்களைத் தின்னும் சூனியக்காரியும் இருப்பதாக மக்கள் சொல்லிக் கொண்டார்கள்.

    இந்த குறுக்கு வழியில் ஒரே ஒரு சிக்கல், பசித்திருக்கும் ஓநாய்கள்தான். ஆனால் அந்த ஓநாய்களுக்கு விளக்கு வெளிச்சம் என்றால் அச்சம். இருபது அடிவரை வெளிச்சத்திலிருந்து தன்னை மறைத்து பதுங்கியே பின் தொடரும்.

  அவ்வபோது ஓநாய்களின் பசித்திருக்கும் மூச்சுக் காற்றை பொம்மி உணரவேச் செய்தாள். அவளது முதுகிலும் மாட்டிவிட்ட விளக்கின் வெளிச்சம் அவளைச் சுற்றிலும் ஒரு ஒளி வட்டத்தை பாதுகாப்பு கவசமாக வைத்திருந்தது.

    மெல்ல மெல்ல அவளது விளக்கின் ஒளி மங்கத் தொடங்கியது. நடந்தவள் ஓடத்தொடங்கினாள். விளக்கு மங்கி மறையவும் பாட்டி வீட்டு வாசலில் அவள் நுழையும் சரியாக இருந்தது.

   அந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரு ஓநாய், அவளறியாது வீட்டிற்குள் நுழைந்துவிட்டது. 

     சில நிமிடங்கள் அவ்வீடு முழுக்க பெரிய அலறல் சத்தம் கேட்டு அடங்கியது. இரத்த வாடை அவ்வீடு முழுவதையும் ஆக்கிரமிப்புச் செய்துக்கொண்டது.

      பாட்டி கட்டிலில் படுத்திருக்கிறார். அவர் முன் அவருக்கான சாப்பாடு இருக்கிறது. பாட்டி மெல்ல எழுந்து சாப்பிடுகிறார்.

   பொம்மி தனக்குப் பிடித்த ஓநாயின் தொடை இறைச்சியைக் கடித்து இழுத்துக் கொண்டிருக்கிறாள்.  ஓநாயின் தலை, நாளைக்கான காலை உணவுக்கு பாத்திரத்தில் காத்திருக்கிறது. 

   "உண்மைதான் பாட்டி. மனுசங்களை விட ஓநாய் தொடை இறைச்சி ரொம்பவே நல்லாருக்கு பாட்டி..." என்கிறாள் பொம்மி.

#தயாஜி

வாங்க... வாங்க...   ராணி இனி வரமாட்டாள். ராஜனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.  ஆனாலும் அவனால் அழாமல் இருக்க முடியவில்லை. ஒவ்வொருவரும் அவனுக்கு ஆறுதலைச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
    "வீட்டுக்கு யார் வந்தாலும் வாங்க வாங்க என்ன சாப்டறீங்கனு கேட்பியே , இன்னிக்கு உன்னைப் பார்க்க இத்தனை பேரு வந்திருக்காங்களே ஏதும் கேட்கமாட்டியா...?" என ராஜன் அழுதான். வந்திருந்தவர்களும் அழுதார்கள். 

   இறப்பு சடங்குகள் முடிந்தன. வந்திருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக சொல்லிக்காமல் கிளம்பினார்கள். மூன்றாம் நாளில் ராஜன் தனியாள் ஆனான். அவனும் அதைத்தான் விரும்பினான்.

   கைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். வீட்டில் ஏதோ சத்தம் கேட்டது. என்னவென்று தெரியவில்லை. 

   வாசல் அழைப்பு மணி அடிக்கிறது. எழுந்தவன் தலைமுடியை சரி செய்துக் கொண்டான். கதவை திறந்ததும் யாரும் கவனிக்கிறார்களாக என ஒரு பார்வைப் பார்த்தான்.

செல்வியை உள்ளே அழைத்தான். 

   இருவரும் மிக நெருக்கமாக அமர்ந்தார்கள். தங்களின் திட்டப்படி எல்லாம் சுமூகமாக முடிந்தது பற்றி சிலாகித்தார்கள். கொஞ்ச நாளில் திருமணம் செய்துக்கொள்ளும் ஏற்பாடுகள் குறித்தும் பேசிக்கொண்டார்கள்.

   செல்வி எழுந்தாள். "குடிக்க ஏதும் கொண்டு வரேன்" என்றவள் சமையலறைக்கு செல்கிறாள். 

   சில நிமிடங்களில் வாசல் அழைப்பு மணி சத்தம் கேட்கிறது. ராஜன் எழுந்து வாசலுக்குச் சென்றான். கதவை திறந்தான் அங்கு செல்வி நின்றுக்கொண்டிருந்தாள். அவனுக்கு அதிர்ச்சியானது. வெளியில் காட்டிக்கொள்ளாமல். அவளை உள்ளே அழைத்தான்.

   இருவரும் நாற்காலியில் அமர்கிறார்கள். அப்போது,  

"வாங்க.. வாங்க.. என்ன சாப்டறீங்க...?" என்ற குரல் சமையலறையில் இருந்து கேட்கிறது.

#தயாஜி

ஜூன் 07, 2020

பின் தொடரும் பிசாசு...   மூன்று முறை குளித்தாள். இருந்தும் அந்த மையை அவளால் அழிக்க முடியவில்லை. நேற்று இரவு. இரண்டு மணி இருக்கும். அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. விழித்துக் கொண்டாள். அவளின் கட்டிலுக்கு அருகில் ஒரு கருப்பு உருவம். 

   அவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் வாயில் இருந்து எச்சில் வழிகிறது. அவளுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. கத்துகிறாள். அந்த அசைவுகளில் எந்த ஓசையும் எழவில்லை. 

   மெல்ல மெல்ல அது அவளருகில் வரத்தொடங்கியது. நல்ல வேளையாக அலாரம் அடித்தது. சட்டென அந்த கருப்பு உருவம் காணாமல் போகிறது.

   பயத்துடன் எழுந்தவள் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். குளிக்கும் போதும் , ஆடை மாற்றும் போதும் அவள் தனியாக இல்லை என்பதை அவள் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.

   யாரோ அவளை சில நாட்களாகப் பின் தொடர்ந்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். யாரிடம் சொல்வதென தெரியவில்லை. சொல்ல நினைக்கும் போதெல்லாம் அவள் உடலில் ஏதோ ஒன்று பரவுகிறது.

   காலை மணி 6.45. மாணவர்கள் ஒவ்வொருவராக மினி பேருந்தில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். வேண்டுமென்றே அவள் கடைசியாக நின்றுக் கொண்டாள். அவள் நடக்க நடக்க அந்த கருப்பு உருவம் அவளைத் தொடர்கிறது. அவள் கழுத்தில் கை வைத்து வருடுகிறது. அதன் மூச்சுக் காற்று அவளின் காதுகளை உஷ்ணப்படுத்தியது. அவளின் கண்கள் கலங்கின. தன் உடல் முழுக்க கருப்பு மை படர்வதை உணர்ந்தாள். 

    அவளிடம் உள்ள மாற்றத்தை கவனித்த டிரைவர் அவளை அழைக்க, பயத்தில் அவளும் அங்கு சென்றாள். 

அந்த டிரைவர் அவள் மீது.....

"படார்...!!"

    அவளின் எதிர்ப்பாராத அறையில் அந்த டிரைவர் கலங்கிவிட்டான். அதுவரையில் அவளுக்காக மறைந்திருந்த அவளது சக தோழிகள் பலமாய் கைத்தட்டினார்கள்.

  பாதிக்கப்பட்ட மாணவிகள் செய்த புகாரில் அந்த டிரைவர் கைது செய்யப்பட்டான். 

   அன்றிலிருந்து எந்த கருப்பு உருவமும் அந்த மாணவிகளை பின் தொடர்வதில்லை.


#தயாஜி

ஜூன் 03, 2020

ஆயிரம் பொன்னைக் கொன்றீர்கள்...


நீ நம்பியிருக்கக் கூடாது
இந்த பாழாய்ப்போன
மனிதனை
நீ நம்பியிருக்கவேக் கூடாது

அவன் உன் பசிக்குக் கொடுக்கவில்லை
தன் தலைமுறைகளுக்கான பாவத்தைப் பெற்றுக்கொண்டான்

அன்னாசியில் வைத்த வெடியில்
வாய்க்கிழிந்துப் போனவளே
அடிவயிற்றுக் குழந்தைக்கு
உஷ்ணம் ஆகாது என்றோ
ஆற்றுக்குள் நுழைந்துக்கொண்டாய்

நீயும் உன் குட்டியும்
ஆகக்கடைசியாக 
என்ன பேசியிருப்பீர்கள்

"அம்மா நான் மனிதர்களைப் பார்க்க மாட்டேனா?"

"நீ அவர்களைப் பார்க்காததற்கு ஒருபோதும் வருந்த மாட்டாய் குழந்தாய்.."

அம்மா சொல்வதை நம்பு குட்டி
இங்கு மனிதன்
ரொம்பவும் மோசமானவன்
இங்கு மனிதன்
ரொம்பவும் ஆபத்தானவன்
இங்கு மனிதன்
ரொம்பவும் கொடுரமானவன்
இங்கு மனிதன்
ரொம்பவும் கேவலமானவன்

இப்போது கூட
ஆற்று நீர் அசுத்தமானதே என
குதிப்பானேத் தவிர
குருதியுடன் உனைக் கொன்ற
குற்றத்தை ஒருநாளும்
ஒப்புக்கொள்ள மாட்டான்

இனி நீ 
என்றென்றுமே
அம்மாவை இங்கு அழைத்து வராதே
யார்க்கேனும் கருவாகவும் தோன்றிவிடாதே

அன்னாசியில் வெடிவைத்த
கரங்களின்
ஆசனவாயிலில் வெடிவைத்து
தண்டிக்க 
இங்கேதும் சட்டங்கள் இல்லை

ஆனால்
எல்லா தண்டனைகளையும்
சட்டம் மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கவுமில்லை

அழாதே
அமைதி கொள்
அம்மாவிற்கு ஆறுதல் சொல்

உன்னை 
பூமிக்கு அழைக்க முடியாத
அவளை
நீ சொர்க்கத்திற்கு கூட்டிசெல்
குழந்தாய்
இனி நீதான் அவளுக்குத் தாய்....


#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்