பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 24, 2021

‘மலேசிய நாவல்கள்’ – ஐந்தாவது கட்டுரையை முன் வைத்து‘மலேசிய நாவல்கள்’ – ஐந்தாவது
கட்டுரையை முன் வைத்து

     தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார். 

   ஐந்தாவது கட்டுரையாக, ‘நெடுநாள் உயிர்த்துள்ள நெகிழிப்பூ ’ என்ற தலைப்பில் கா.பெருமாள் குறித்து எழுதியுள்ளார்.

'சிறுகதையில் எழுத்தாளன் வாழ்க்கையின் ஒரு புள்ளியை அறிந்துக்கொள்ள முயல்கிறான். நாவலில் வாழ்வின் எண்ணற்ற திசைகளை ஓர் ஒட்டுமொத்த பார்வையில் தொகுக்கப் பழகுகிறான்.' என நாவல் எழுதுவற்கும் சிறுகதை எழுதுவதற்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தை சொல்லி கட்டுரையை ஆரம்பிக்கின்றார்.  அதோடு ஜெயமோகனின் 'வெள்ளையானை' நாவலை முன்வைத்து மேற்சொன்னவற்றை விளக்குகின்றார்.

கா.பெருமாள் எழுதிய 'துயரப்பாதை' நாவலைப் பற்றி பலவீனமாக எழுதப்பட்டு பலகாலமாக கொண்டாடப்பட்ட நாவல் என்கின்றார். இத்தகையப் பார்வையை இக்கட்டுரையின் தலைப்பிலேயே உணர முடிந்தது.

246 பக்கங்கள் கொண்ட நாவலை நான்கே வரிகளில் சொல்லிவிடுகின்றார். மேற்சென்று நாவலின் பலவீனங்களைப் பேசுகின்றார்.

1958 சங்கமணி நாழிதழில் தொடர்கதையாக வெளிவந்த 'துயரப்பாதை' பின்னர் 1978ம் ஆண்டு நாவலாக வெளிவந்தது. அன்றைய சுழலில் இந்நாவலைப்பற்றி சொல்லப்பட்ட கருத்துகளை வாசிக்கையில் ஒரு பக்கம் அதிர்ச்சியும் இன்னொரு பக்கமும் குழப்பமும் வராமல் இல்லை.

புத்தகத்தில் இக்கட்டுரைக்கு பக்கங்கள் குறைவுதான். சிக்கல் இல்லாமல் வாசிக்கும்படி எழுதியுள்ளார் ஆசிரியர்.

ஒரு காலகட்டத்தில் கொண்டாடப்பட்ட படைப்புகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மீள்வாசிப்பு செய்வதும் அதுபற்றி பேசுவதும் அவசியம் என்பது இக்கட்டுரை வழி முக்கியத்துவம் பெருகின்றது. 

ஆனால் மீள்வாசிப்பில் அப்படைப்பை மட்டுமே கைகொள்ளாமல் அந்நாவல் எழுதபட்ட கால சூழலையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். 

ஏனெனில் ஒரு படைப்பை கொண்டாடும் மனநிலையை புரிந்துக்கொள்ள அது உதவும். அதனை ஒரு போதும் குறைத்து மதிப்பிடலாகாது. 

#தயாஜி

பிப்ரவரி 23, 2021

‘மலேசிய நாவல்கள்’ – நான்காவது கட்டுரையை முன் வைத்து


‘மலேசிய நாவல்கள்’ – நான்காவது
கட்டுரையை முன் வைத்து

     தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார். 

   நான்காவது கட்டுரையாக, ‘முதல் சுடர்’ என்ற தலைப்பில் எம்.குமாரன் நாவல் குறித்து எழுதியுள்ளார்.

    மலேசிய இலக்கியச் சூழலில் நிகழும் அரசியல் போலித்தனங்களால் எழுத்தில் இருந்து விரக்தி கொண்டு விலகியவர் பற்றிய கட்டுரை.போலிகளின் பளபளப்பால் பலரின் கண்கள் கண்டுகொள்ளத் தவறிய சுடர்தான்  எம்.குமாரன். அதற்கு ஏற்றார் போலவே தலைப்பும் அமைந்து விட்டது.

கு.அழகிரிசாமிக்குப் பிறகு நவீன இலக்கியம் என மலேசியாவில் உரையாடல்கள் தொடங்கிய இரண்டாவது காலகட்டத்தில் உருவான முக்கியமான எழுத்தாளர் எம்.குமாரன். 

எழுத்தாளரின் பின்புலத்தையும் அவர் முன்னெடுத்த முயற்சிகளையும் கட்டுரையாசிரியர் சொல்கிறார். இன்றைய தலைமுறைக்கு பயன்மிக்க ஒரு கட்டுரை. 

லட்சியவாதத்தையும் , கற்பனாவாதத்தையும், மிகை உணர்ச்சிகளையும், நம்பி எழுதப்பட்ட மலேசிய நாவல்களுக்கு மத்தியில் 1971-ல் எழுதப்பட்ட இருத்தலியல் தன்மையிலான 'செம்மண்ணும் நீல மலர்களும்' நாவல் தனித்து நிற்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

அந்நாவல் பற்றிய தன் விமர்சனப் பார்வையில்  ' குறிப்பிட்ட வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டிருந்தாலும் இவை அனைத்தும் ஒரு தனி மனிதனின் பார்வையில் அலசப்படுகிறது' என்கின்றார்
ஆசிரியர். அதோடு, 'எழுத்தாளர் தனக்குள் எழும் வினாவை விவாதமாக விரித்து நாவலுக்குள் நிகழ்த்தும்போது, தன்னையே பலநூறாக உடைக்கின்றார். வாழ்வு குறித்த சில புதிய அவதானிப்புகளைக் கண்டடைகிறார். அதன்வழி தன்னையும் கண்டடைகின்றார். அந்தக் கண்டடைவே நாவலைத் தாங்கிப் பிடிக்கிறது, தனித்துவமாக்குகிறது.' என்கிறார்.

மேலும் கட்டுரையை வாசிக்க வாசிக்க, அந்நாவலை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றது. ஆனால் தற்சமயம் அந்நாவல் கிடைப்பது அரிது. நானும் பல ஆண்டுகளாக தேடிக் கொண்டிருக்கின்றேன். சம்பந்தப்பட்டவர்கள் யாரும் அந்நாவலை மீண்டும் மீள்பிரசுரம் செய்வதற்கான வேலைகளை முன்னெடுக்க வேண்டுகின்றேன். இன்றைய தலைமுறை மட்டுமல்ல நாளைய தலைமுறையும் அறிந்துக்கொள்ள வேண்டிய சுடர் எம்.குமாரன் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

இம்மாதிரி தொடர் விமர்சனங்களால் ஆசிரியர் தன்னை முன்னிலைப்படுத்துவதாக குற்றம் சாற்றுபவர்கள் இருக்கிறார்கள். மூத்த படைப்பாளர்களை உதாசினம் செய்வதாகவும் கூறுபவர்கள் இருக்கிறார்கள். எவ்வாறு மூத்த படைப்பாளிகளுக்கு மரியாதை செய்ய வேண்டும் என பாடம் எடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை.  கூடுதலாக அவர்களிடம் ஒரு விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்கிற பட்டியலும் இருக்கிறது. ஆனால் அந்த பட்டியலில் எம்.குமாரன் போன்ற சுடரின் வெளிச்சம் சிறிதாகக் கூட இருக்கப் போவதில்லை.
#தயாஜி

‘மலேசிய நாவல்கள்’ – மூன்றாவது கட்டுரையை முன் வைத்து


‘மலேசிய நாவல்கள்’ – மூன்றாவது
கட்டுரையை முன் வைத்து

     தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார். 

 மூன்றாவது கட்டுரையாக, ‘பாலுணர்வின் கிளர்ச்சி’ என்ற தலைப்பில் எம்.ஏ.இளஞ்செல்வன் நாவல்கள் குறித்து எழுதியுள்ளார்.

  எம்.ஏ.இளஞ்செல்வன்,  மலேசிய தமிழ் இலக்கியத்தில் எத்தனை முக்கியமானவர் என்பதை கட்டுரையின் முதல் பக்கத்திலேயே தெரிந்துக்கொள்ளலாம். இங்கு புதுக்கவிதை வளரத் தொடங்கிய காலகட்டத்தில் அதற்கு ஆதரவாக மரபு கவிஞர்களின் விமர்சனத்திற்கு கடுமையான எதிர்வினையாற்றியவர். 

  அவர் பற்றிய மேலதிக விபரங்களை கட்டுரையாசிரியர் சொல்லியுள்ளார். அவை ஒவ்வொன்றும் கவனிக்கத்தக்கது. அவரின் காலகட்டத்தில் அவர் ஓர் நட்சத்திர   எழுத்தாளராக அறியப்பட்டவர்.  அதற்கான பின்னனியைக் கட்டுரையாசிரியர் சொல்கிறார். அது உண்மையும் கூடதான். எனக்கு நினைவு தெரிந்து வாசிக்க ஆரம்பித்த பொழுதில் எம்.ஏ.இளஞ்செல்வன் ஒரு இலக்கிய நட்சத்திரம் எனவே சொல்லப்பட்டார். 

   அவருக்கும் கட்டுரையாளருக்குமான ஆத்மார்த்தமான உறவை ஆசிரியர் கட்டுரையில் சொல்கிறார். ஆனால் அதுவெல்லாம் தன் ரசனை விமர்சனத்திற்கு ஒரு தடையாக வர அவர் அனுமதிக்கவில்லை. விமர்சனம் என்பது ஒரு பொறுப்பு. அதனை பழக்கமான முகங்களுக்காகவும் பழகிக்கொண்டதற்காகவும் அடகு வைத்துவிடக்கூடாது. இங்கு படைப்புகளின் பலவீனத்திற்கு முதல் காரணமாக இருப்பது மேம்போக்கான விமர்சனங்கள்தான். மருந்து கசக்கும் என்பதால் சீனி கலந்து கொடுப்பார்கள். ஆனால் மருந்து கசக்கக்கூடாது என்பதற்காக வெறும் சீனியையே கொடுத்து வந்தால் என்ன ஆகும்? அதுதான் இன்றைய பல படைப்புகளின் நிலை. 

  எம்.ஏ.இளஞ்செல்வன் பெற்றிருக்கும் வாசகர் பரப்பிற்கு பாலியலை தனது குறுநாவல்களில் அவர் ஆதாரமாக் கொண்டிருப்பதுதான் காரணம் என ஆசியர் கருதுகிறார். நிச்சயம் இதனை வாசிக்கையில் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது.

ஆனால் அந்த அதிர்ச்சியை தனது அடுத்தடுத்த விமர்சனம் கொண்டு கலையச் செய்கிறார் ஆசிரியர். 

நிச்சயம் வாசிக்க வேண்டிய கட்டுரை. ஒரு படைப்பை விமர்சனம் செய்வதற்கு நன்றியுணர்ச்சி அவசியம் இல்லை, ஆனால் பொறுப்புணர்ச்சி எந்த அளவிற்கு அவசியம் என கட்டுரை காட்டுகிறது. 

ஒருவேளை இக்கட்டுரையை வாசித்திருந்தால் ஆசிரியர் சொல்வது போல எம்.ஏ.இளஞ்செல்வன் மென்புன்னகையுடன் வரவேற்றிருப்பார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் அந்த நட்சத்திரத்தின் ஒளியை நானும் உணர்ந்துள்ளேன்.

#தயாஜி

பிப்ரவரி 22, 2021

‘மலேசிய நாவல்கள்’ – இரண்டாவது கட்டுரையை முன் வைத்து

 

‘மலேசிய நாவல்கள்’ – இரண்டாவது கட்டுரையை முன் வைத்து

தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார்.

            இரண்டாவது கட்டுரையாக, ‘மெல்லுணர்ச்சிகளின் பூஞ்சணம்’ என்ற தலைப்பில் ரெ.கார்த்திகேசு நாவல்கள் குறித்து எழுதியுள்ளார்.


            ரெ.கார்த்திகேசு ஒரு வணிக எழுத்தாளர் என ஆசிரியர் கட்டுரையைத் தொடங்குகின்றார். அதென்ன வணிக எழுத்தாளர். வணிகம் என்பது வியாபாரம் என நன்கு தெரியும். ரெ.கார்த்திகேசு எழுதி எழுதி வியாபாரம் செய்து சம்பாதித்தாரா? அப்படி எழுதி எழுதி சொத்துகள் ஏதும் சேர்க்க முடியுமா என்ன ? என சிலரை  கேள்வி கேட்க வைக்கிறது.  அவர்களும் அதனை ஒரு அறிவார்த்த கேள்வியாக நம்பி கேட்கவும் செய்கிறார்கள்.

            தீவிர  இலக்கியம் வணிக இலக்கியம் என்கிற இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரிகின்ற வரை அல்லது அதனை அறிந்துக் கொள்ள முயலாதவரை அர்த்தமற்ற கேள்விகளும் அதையொட்டிய அர்த்தமற்ற விவாதங்களும் தொடரத்தான் செய்யும்.

            இதனை அறிந்துக் கொண்டதாலும் தனது முன் அனுபவத்தாலும் கட்டுரையாசிரியர்  வணிக  எழுத்துகள்  குறித்து  தெளிவு செய்கிறார். வணிக எழுத்துகளை சாகசக் கதைகள், குற்றவியல் கதைகள், மெல்லுணர்ச்சிக் கதைகள், லட்சியவாதக் கதைகள்  என நான்காக பிரிக்கின்றார். ‘பொதுவாக வியாபார நோக்கம் கொண்ட அவை மக்களுக்குப் பிடித்ததை அவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மட்டுமே எழுதுவதால் ஜனரஞ்சக இலக்கியம் என சொல்லப்படுகின்றது’ என்கிறார். தான் கூறும் நான்கு பிரிவுகளுக்கும் ஏற்ற எழுத்தாளர்களையும் மேற்கோள் காட்டுகின்றார். இதன் மூலம் அவர் சொல்லவருவதை வாசகர்கள் எளிதாக புரிந்துக் கொள்ளலாம்.

            வணிக இலக்கியத்தையோ தீவிர இலக்கியத்தையோ பற்றிய விளக்கங்கள் என்னதான் கொடுத்துக் கொண்டிருந்தாலும் இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசங்களை சொல்லித்தான் ஆகவேண்டியுள்ளது. அவ்வாறே இக்கட்டுரையும் அமைந்துள்ளது.

            ஒருவர் எழுதுவது வணிக இலக்கியமோ தீவிர இலக்கியமோ, அது அவரவர் தேர்வு. ஆனால் தான் எழுதுவது என்ன வகை என தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பதுதான் முரண்நகை. அதுவாவது பரவாயில்லை, இன்னொரு ரகமும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு தாங்கள் எழுதுவது வணிக  எழுத்து என நன்றாக தெரியும் ஆனால்  தங்கள் மீது தீவிர இலக்கியவாதிக்கான போர்வையை போர்த்திக் கொள்ள  எல்லாவகையான காரியங்களையும் செய்கிறார்கள்.  அதன் பின்னால் இருக்கும் அரசியல் கவனிக்க வேண்டிய ஒன்று. இவர்களைப் போன்றவர்கள்தான்  சிக்கல்களுக்கு மூல காரணமாக இருக்கிறார்கள்.

            ரெ. கார்த்திகேசு எழுதிய,  வானத்து வேலிகள்,  தேடியிருக்கும் தருணங்கள், அந்திம காலம், காதலினால் அல்ல, சூதாட்டம் ஆடும் காலம் என்ற ஐந்து நாவல்களைப் பற்றியும் இக்கட்டுரை பேசுகிறது. ஐந்து நாவல்களின் சுருக்கத்தையும் ஆசிரியர் சொல்லிவிட்டு அந்நாவல்களின் பலம் பலவீனங்களை ஆராய்கின்றார். யோசிக்கையில் இதற்கு அதிக நேரமும் உழைப்பும் தேவையாயிருக்கிறது. வெறுமனே ஒரு படைப்பையோ அவர் மீதான  பிம்பத்தையோ கணக்கில் கொள்ளாமல்,  ஒரு முழுமையான பார்வையைக் கொடுக்க அவர் மேற்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது. ரெ.கார்த்திகேசு  மீது மரியாதை உள்ளதாகச் சொல்லிக்கொள்பவர்களோ, அவர் முக்கியமான படைப்பாளி என முன்மொழிகின்றவர்களோ அவரது படைப்புகளை முழுமையாக வாசித்துள்ளார்களா என்பது ஐயம் கொடுக்கும் கேள்விதான்.

            ‘பெரும்பாலும்  மலேசிய எழுத்தாளர்கள் செய்யும் அடிப்படைத் தவறுகள் இல்லாமல் ரெ.கா-வின் நாவல்கள் உள்ளன. வசனங்களின் புழங்கு மொழி, பிற இன மக்களிடம் பேசும்  வசனங்களின் நேர்த்தியான  மொழி, காலங்களில் குழப்பம்  இல்லாமை என தன்னை ஒரு சிறந்த பேராசிரியர் என நிரூபித்துள்ளார்’ என்கிறார்.

            ரெ.காவின் புனைவின் தரத்தை மட்டுமே இக்கட்டுரை ஆராய்கிறது. வாசிக்கின்றவர்களுக்கு அது புரியும் வகையிலும் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

            அவரின் இதர செயலூக்கத்தினால் உருவாகியிருக்கும் ஆளுமையைக் கொண்டு அவரது புனைவுலகை மதிப்பிட்டுக் கொண்டிருக்காமல் இரண்டுக்குமான வித்தியாசத்தை கண்டறிய இக்கட்டுரை உதவும். இக்கட்டுரையை மூழுமையாக வாசிக்கின்றவர்களுக்கு அது புரியும் என எதிர்ப்பார்க்கலாம்.

 

#தயாஜி

           

             

பிப்ரவரி 15, 2021

‘மலேசிய நாவல்கள்’ – முதல் கட்டுரையை முன் வைத்து

 

‘மலேசிய நாவல்கள்’ – முதல் கட்டுரையை முன் வைத்து


தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார்.

            முதல் கட்டுரையாக, ‘புனைவின் துர்கனவு’ என்ற தலைப்பில் கோ.புண்ணியவான் நாவல் குறித்து எழுதியுள்ளார்.
            கோ.புண்ணியவான் ‘நொய்வப்பூக்கள்’, ‘செலாஞ்சார் அம்பாட்’ ஆகிய இரு நாவல்களை எழுதியுள்ளார். சிறுகதைகளுக்கே உரிய ஒருமையும் நாவலில் இருக்க வேண்டிய உள் இழைகளும் கொண்ட குறுநாவல்கள் இங்கு நாவல்களாக அங்கிகரிக்கப்படுவதைச் சொல்லி இவ்விரு நாவல்களையும் அத்தகைய பட்டியலில் இருப்பதைச் சுட்டிகாட்டுகிறார்.

            ‘நொய்வப்பூக்கள்’ நாவலின் பலவீனம் கருதியும் அது  ஜனரஞ்சக வாசிப்பிற்கானது என்பதாலும் அதனை சில வரிகளிளேயே சொல்லிவிட்டு அடுத்த நாவலுக்குச் செல்கிறார். ‘செலாஞ்சர் அம்பாட்’, கோ.புண்ணியவானின் இரண்டாவது நாவல்.  மலேசியாவில் அதிகம் கவனம் ஈர்த்த நாவலும் கூட.

            1983-ல் நடந்த உண்மை சம்பவத்தை  அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.  இக்கட்டுரை அந்நாவல் கொண்டுள்ள பலவீனங்களையே முன்னிலைப்படுத்துவது போல முதல் வாசிப்பில் தெரியலாம். மறுப்பதற்கில்லை, ஆனால் அந்நாவலையும் அதனை எழுதியவரையும் மறந்து மீண்டும் இக்கட்டுரையை வாசிக்கும் போது,  வரலாற்று பின் புலம் கொண்ட நாவலையோ கதைகளையோ எழுதுவதற்கு எத்தனை மெனக்கெடல்கள் வேண்டும் என்பதைக் காட்டும் முக்கியமான கட்டுரை.

            அதற்கான பல உதாரணங்களை கட்டுரையாசிரியர் இந்நாவலில் இருந்தே எடுத்துரைக்கின்றார்.  நாவலுக்கு களப்பணி இன்றியமையாத ஒன்று. சிறு தகவல் பிழையும் படைப்பைக் கேலிப்பேச்சுக்கு ஆளாக்கிவிடும் என்கிற எச்சரிக்கை உணர்வை இக்கட்டுரைக் கொடுக்கின்றது.

            நாவலுக்கான நுட்பம் எங்கே உள்ளது. எங்கிருந்து கணக்கிடப்படுகின்றது என்பதை சில கேள்விகளின் வழி சொல்ல முற்படுகின்றார். சொல்லாமல் விடுவதாலும் அல்லது சுருங்கச் சொல்லுவதாலும் நாவல் அதற்கான நம்பகத்தன்மையை இழந்துவிடுகின்றது. விரிவாக சொல்ல அனுபவமும் அறிதலும் அவசியமாகின்றது. அதற்கான கள்ப்பணி மிக முக்கியமானது.

            நாவலின் பலவீனங்களையே அதிகம் இக்கட்டுரை பேசியிருந்தாலும், ‘தமிழர்கள் கொத்தடிமைகள் அக்கப்பட்டு எந்தச் கூலியும்  இல்லாமல் நிலத்தைப் பண்படுத்தி பெரும் லாபம் ஈட்டும் வளமாக மாற்றி, அதில் எந்த பலனும் அனுபவிக்காமல் இருந்துள்ளதற்கான சான்றுதான்  ‘செலஞ்சார் அம்பாட்’ என்று சொல்வதன் வழி நாவலை வாசிக்க தூண்டுகின்றார்.

 

#தயாஜி

 

பிப்ரவரி 14, 2021

‘மலேசிய நாவல்கள்’ – தொடக்கமாக ….

 


‘மலேசிய நாவல்கள்’ – தொடக்கமாக ….

தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார். 116 பக்கங்களில் அவ்வாறு இருபத்து நான்கு நாவல்கள்  பற்றி எழுதியிருப்பது ஆச்சர்யம்தான். அதைக்காட்டிலும் அத்தனை நாவல்களை வாசித்திருப்பது அதைவிடவும் ஆச்சர்யம்.

தொடக்கமாக ‘மலேசிய நாவல்களும் ரசனை விமர்சனமும்’ என்கிற கட்டுரையை எழுதியுள்ளார். இந்த தொகுப்பிற்கான காரணத்தையும் அதன் தேவையையும் இதன் வழி தெளிவுபடுத்த முயன்றுள்ளார். முக்கியமான கட்டுரையாகவும் இது அமைந்துள்ளது. பொதுவாக ரசனை விமர்சனம் மீதான பார்வையை பலரும் பலவாறாக புரிந்துக் கொள்கிறார்கள். அதனை குறைத்தும் மதிப்பிடுகின்றார்கள். இக்கட்டுரை ரசனை விமர்சனம் மீதான பார்வை பலப்படுத்தியுள்ளது.
‘…. அதன் நோக்கம் உரையாடல்களையும் விவாதங்களையும் உருவாக்குவதுதான். ரசனை இலக்கிய விமர்சனம் என்பது ஒரு வாசகன், ஒரு புனைவின் மேல் சிறந்த வாசிப்பை வழங்கும் முயற்சி. அவன் அதில் உள்ள காட்சிகளைக் கற்பனையால் நிகழ்த்திப் பார்க்கின்றார். மேம்பட்ட ஒரு பார்வையை வைக்கிறார். அது விவாதமாகின்றது. பின்னர் அங்கிருந்து புதிய வாசிப்பு முறை உருவாகிறது.’  என்று கட்டுரையாசியர் கூறுவதில் இருந்து ரசனை விமர்சனத்தின் அவசியத்தை நாம் புரிந்துக் கொள்ளலாம்.

ரசனை விமர்சனம் எப்போதும் நிலையான முடிவை சொல்வது அல்ல. அது வாசகர்களுக்கு பல புதிய திறப்புகளைக் கொடுக்கின்றது. அதன் மூலம் ஏற்படும் உரையாடல் மிக அவசியமான ஒன்று.

அவ்வாறான ரசனை விமர்சனத்தை புறக்கணிப்பதின் வழி யாருக்கும் ஆவப்போது ஒன்றுமில்லை. ஆனால் அதனை நம் பார்வையில் இருந்து சொல்வதற்கு உழைக்க வேண்டியுள்ளது , அப்படைப்பை வாசிக்க வேண்டியுள்ளது.

  இப்புத்தகத்தை வாசித்து, எழவிருக்கும் கேள்விகளை ஒரு வாசகனாக இருந்து நான் கவனிக்க வேண்டியுள்ளது. ஏனெனின் சொல்லப்பட்டிருக்கும் நாவலை வாசிக்காமல் நாவல் பற்றிய விமர்சனத்தை வாசிப்பது சமயங்களில் அந்நாவல் வாசிப்பில் இருந்து என்னை அந்நியப்படுத்திவிடும் வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் இக்கட்டுரைகளையொட்டிய என் கேள்விகளுக்கு ‘முதலில் நாவலை வாசிங்க அப்பறமா பேசலாம்..’ என யாரும் சொல்லிவிட்டால் பிறகு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் அக்கேள்விகள் என் சுய வாசிப்பிற்கு மிக அவசியமானது.

இனி ஒவ்வொரு கட்டுரையையும் வாசிக்க வாசிக்க, அது  குறித்து நாம் பேசலாம்….

#தயாஜி

 

சலூன் கடைக்காரரின் சயின்ஸ்


 #குறுங்கதை 2021 - 7


- சலூன் கடைக்காரரின் சயின்ஸ் -

    "இன்னும் ஒருத்தர் இருக்காரு தம்பி..." என்றார். சரி அதுவரை நாளிதழ் வாசிக்கலாமே என காத்திருக்கலானேன். நாற்காலியில் அமர்ந்திருப்பவர் தான் பார்த்த பலரின் தலை முடி வெட்டு குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

    கடைக்காரரும் "ஆமாம்" போட்டுக் கொண்டே அவருக்கு ஏற்றார்போல முடியைக் கத்திரித்துக் கொண்டிருந்தார். அமர்ந்திருப்பவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி சொல்லவே நேரம் ஆகிக்கொண்டே இருந்தது.

    கடைக்காரர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அமர்ந்திருப்பவரின் தாடியை கவனித்து, "தம்பி உங்களுக்கு தாடி இப்படிதான் விட்டு விட்டு வளருமா?" என்றார்.

    "அதான் ணே... வீட்டுல எனக்கு மட்டும்தான் இப்படி இருக்கும். எங்க அண்ணனுக்கும் அப்பாக்கும் தாடி அவ்வளோ அடர்த்தியா இருக்கும்... ஏன் கேட்கறீங்க..."

"ஒன்னுமில்ல தம்பி" என்று ஏதோ யோசித்தார்.

"பரவால சொல்லுங்க அண்ண... ஏதும் மருந்து இருக்கா..?"

    "அதுக்கில்ல தம்பி.. தாடி இப்படி விட்டு விட்டு வளர்ந்தா கர்ப்பப்பைல ஏதோ பிரச்சனை இருக்கும் அதான் கேட்டேன்.."

" ஐயோ என்ன சொல்றீங்கண்ண... !!!! எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல...."

அவர்கள் தொடர்ந்தார்கள்.

    எனக்கு பகீரென்றது. எனக்கும் தாடி விட்டு விட்டுதான் வளர்ந்திருக்கும். எனது கர்ப்பபையில் என்ன பிரச்சனை இருக்குமோ என பயம் வந்தது. அமர்ந்திருப்பவரை விட எனக்குத்தான் இப்பொழுது பீதி அதிகமாகியது.

    கைபேசியை எடுத்து காதில் வைத்தேன். எழுந்தேன். பேசுவது போல பாவனை செய்தேன். அப்படியே கடையைவிட்டு வெளியேறினேன்.

    "இன்னிக்கு முடி வெட்டன மாதிரிதான்.." என சொல்லிக்கொண்டெ நடக்கலானேன். அவர் சொன்னது காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. வலது கையால் வயிற்றைத் தடவுகிறேன். பொறி தட்டியது.

ஒரு நிமிஷம்..!!!. "ஆமா ஆம்பளைக்கு ஏது கர்ப்பப்பை...!!"

கடவுளின் குரல்

 #குறுங்கதை 2021 - 6


- கடவுளின் குரல் -

"இன்று பலி கொடுத்துவிடுவேன்" என உறுதியாகச் சொன்னார் அம்மா.

    "ஆம். இன்றுதான் அதற்கான நாள். இனி நீ கேட்டது எல்லாம் உனக்கு கிடைக்கப் போகிறது. இனி நீதான் ஆள்வாய். நீதான் பேரழகியாய் திகழ்வாய்.. நீதான் நிரந்தரமானவள்... தயாராகு... தயாராகு... பலி கொடுக்கத் தயாராகு..." அந்த அசரீரி அடங்கியது.

    அம்மா கண்ணாடியைப் பார்த்து சிரிக்கலானார். இனி அவர் நினைத்தது எல்லாம் நடக்கப்போகிறது. கடவுளே பேசி விட்டதால் அவளால் மறுக்க முடியவில்லை. அதற்கான ஒரு பிள்ளையை என்ன, எத்தனை பிள்ளைகளையும் பலி கொடுக்கலாம் என்கிற நிலைக்கு வந்துவிட்டார்

    முதல் அசசீரி கேட்கும் போது அம்மா பயந்துதான் போனார். நாளாக நாளாக கடவுளே தன்னிடம் பேசுவதை கண்டறிந்தார். கணவன் இல்லாமல் , ஒரு மகளுடன் வாழ்வை கழித்தவளுக்கு நிச்சயம் இது வரம்தான்.

அதற்காக மகளையா பலி கொடுப்பார்கள். கேட்டது கடவுளாச்சே மறுக்க முடியுமா என்ன..?

    அந்த அசரீரி அம்மாவின் மனதை தன் வசம் இழுத்திருந்தது. அம்மா தன் நிலை மறந்து ஏற்பாடுகளைச் செய்துக் கொண்டிருந்தார்.

    இன்றோடு மகளுக்கு 10 வயது பூர்த்தியாகிறது. பலி கொடுக்க சரியான நாள். எல்லாம் தயார்.

    அறை முழுக்க சாம்பராணி புகையும் புதுவித நறுமணமும் சூழ்ந்திருந்தது. ஆள் உயர நிலைக்கண்ணாடி முன்பு அம்மா மகளை அமர வைத்தார். மகளும் ஏதோ மயக்கத்திற்கு ஆட்பட்டவள் போல கண்களில் பாதி மயக்கத்தில் இருந்தாள். அப்படியே கண்களை மூடினாள்.

    அந்த அசசீரி மீண்டும் ஒலித்தது. அம்மா கையில் கத்தியை எடுத்தார். மகளின் கழுத்தில் ஒரு முறை வைத்துப் பார்த்தார். குரல்வளையில் குறி சரியாக இருக்கிறது.

பலி கொடுப்பதற்கு முன் , அம்மா கண்களை மூடி அசரீரியின் ஒப்புதலைக் கேட்கலானார்.

    கண்களை திறந்த மகள், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தாள். அம்மாவில் வயிற்றில் குத்திக்கிழித்தாள். அம்மா அதிர்ச்சியில் அப்படியே சரிந்தார்.

    "ஏன்மா.. கடவுள் உன் கிட்ட மட்டும்தான் பேசுவாறா...? என்கிட்டயும்தான் பேசுவார்..." என்று மகள் சிரிக்கலானாள்.

#தயாஜி

பாவம், செல்லமுத்து அண்ணன்

 

#குறுங்கதை 2021 - 5


- பாவம், செல்லமுத்து அண்ணன் -

    நள்ளிரவு மணி 12ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது விடுதிக்குள் நுழைய அனுமதி இல்லை. ஆனால் உள்ளே செல்ல வேண்டும். எப்படி? வாசலில் காவல் காக்கும் செல்லமுத்து அண்ணனை ஏமாற்றுவது தவிர வேறு வழியில்லை. அவர் ஒரு வெகுளி. இருப்பதிலேயே சுலபமானது அதுதான்.

    சிவனும் செல்வாவும் திட்டம் போட்டார்கள். மோட்டார், வாசலில் வந்து நின்றது. கடிகாரத்தில் மணியைப் பார்த்துக்கொண்டே செல்லமுத்து அண்ணன் வந்தார்.

"இவ்வளவு நேரமாவா வெளியில் சுத்துவீங்க.. மணி என்ன தெரியுமா தம்பி...?"

"சாரிணா...நான் கடிகாரம் கட்டலணா..?" என்றான் சிவன்.

    "நீங்க கட்டலன்னா என்ன தம்பி.. அதான் பின்னால இருக்கற தம்பி கட்டியிருக்கே கேட்டு சொல்லுங்க...? என்றார் நக்கலாக.

சிவன் அதிர்ச்சியானான். செல்லமுத்து அண்ணனும் அதனை கவனித்தார்.

"அண்ண.. என்ன சொல்றீங்க...?"

"அந்த தம்பிகிட்ட மணி கேட்க சொன்னேன்.."

"ஐயோ அண்ண விளையாடாதீங்க.. நான் மட்டும்தான இருக்கேன்.. வேற யாரு இருக்கா....?"

    சிவன் மீண்டும் திரும்பிப்பார்த்தான். ஏற்கனவே திட்டமிட்டபடி , யாரும் அங்கு இல்லாதது போல நடிக்கலானான். ஆனால் பின்னால் அமர்ந்திருக்கும் செல்வா, வைத்த கண் வாங்காமல் செல்லமுத்து அண்ணனையேப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு கணம் சிவன் கூட பயந்துவிட்டான். ஆனாலும் அவர்களின் நாடகம் நின்றபாடில்லை.

"தம்பி நிஜமாவே உங்க கண்ணுக்கு யாரும் தெரியலையா...?"

    "அண்ண.. இனி லேட்டா வரமாட்டேன்.. இப்படி பயமூட்டாதீங்க... என்னமோ மாதிரி இருக்கு..."

    "சரி சரி.. தம்பி பின்னால யாருமில்ல.. நான் சும்மாதான் கேட்டேன்.. நீங்க உள்ள போங்க.. தம்பீ.. ரூம்குள்ள போனதும் முதல் வேலையா கை கால் கழுவிடுங்க..."

"குளிச்சிடறேன் ணா போதுமா..? நான் போகவா...?"

    சிவன் புறப்பட்டான். மோட்டார் மறையும் வரை செல்வா செல்லமுத்து அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    "டேய் டேய்.. போதும்டா.. அந்த அண்ணன் பாவம்.. நீ பாக்கறதைப் பார்த்தா எனக்கே பயமா இருக்கு..." என்று சிவன் சொல்லவும் இருவரும் சிரித்துக்கொண்டு அறைக்கு சென்றனர்.

    அறையில் யாரும் தூங்கவில்லை. ஏதோ பீதியில் இருப்பதாகத் தெரிந்தது. சிவனும் செல்வாவும் விசாரித்தனர்.

    "என்ன ஆச்சோ தெரியலை. நம்ம செல்லமுத்து அண்ணன் மத்தியானம் தூக்கு போட்டுகிட்டாருடா..!! ச்சே.. நல்ல மனுஷன்...." என்றான் ஒரு நண்பன்.

    சிவனுக்கு தூக்கி வாரிப்போட்டது. திரும்பி செல்வாவைப் பார்க்கிறான். செல்வா வாசலில், எதையோ வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான். அங்கு செல்லமுத்து அண்ணன் நின்றுக்கொண்டிருக்கிறார்.

கதைச்சொல்லும் தாதி

 


#குறுங்கதை 2021 - 4


- கதைச்சொல்லும் தாதி -

    வந்துவிட்டார். கையில் மருந்துகளுடன் கதை புத்தகமும் இருந்தது. நான்காவது கட்டிலில் இருப்பவர் நிலைமைதான் இன்று மோசமாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள்.

    மருத்துவர் நாள் குறித்துவிட்டார். ஆனால் வீட்டில் இருந்து இன்னும் யாரும் வரவில்லை. சில நாட்களாக இந்த தாதிதான் அவ்வபோது பார்த்துவிட்டு பேசிவிட்டு செல்கிறார். வழக்கமாக செய்வதுதான். யாரும் தாதியை தடுக்கவோ தடைபோடுவதோ இல்லை. அது அவர்களால் முடியவும் முடியாது.

    தாதியிடம் கதையைக் கேட்பதற்காகவே இங்கு பலரும் உயிரை பிடித்து வைத்திருக்கிறார்கள். இன்று தாதியைக் கண்டதும் அவருக்கு உற்சாகம் மேலிட்டது. அணையபோகும் விளக்கு என்பதாலோ என்னவோ அவர் முகத்தில் பிரகாசம் தெரிந்தது.

    தாதி அவரின் மருத்துவ குறிப்புகள் எல்லாவற்றையும் ஒரு முறை பார்க்கலானார். நிலைமை எத்தனை மோசம் என தெரிந்தது. இனி மருந்துகளால் பயனில்லை. தாதியால் முடிந்தது இப்போதைக்கு கதை சொல்வதுதான்.

    தாதி கதைச் சொல்ல ஆரம்பித்தார். கட்டிலில் இருந்தவர் மெல்ல மெல்ல கதைக்குள்ளாகவே செல்லலானார். அவரின் இதயத்துடிப்பு அதிகமானது. அவர் உடல் மெல்ல மெல்ல அதிரத்தொடங்கியது. மருத்துவரும் சில தாதிகளும் ஓடி வந்தனர்.

    தாதி, கதைச் சொல்வதை நிறுத்தவில்லை. வந்தவர்களுக்கு ஒரே குழப்பம். மோசமான நிலைமையில் உள்ளவர் மெல்ல இயல்பு நிலைக்கு வந்தார். மீண்டும் அதிசயம் நடந்து எல்லோரையும் குழப்பியது.

    ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்துக்கொண்டனர். கதைச் சொல்லி முடித்த தாதி, மிதந்துக்கொண்டே அடுத்த அறைக்குச் செல்கிறார்.

    அங்கு, மோசமான நிலைமையில் ஒருவர் தாதியைப் பார்த்ததும் புன்னகைத்து கதை கேட்கத் தயாராகிறார்.

ஆளுக்கொரு தீனி

 #குறுங்கதை 2021 - 3


- ஆளுக்கொரு தீனி -

    படபிடிப்பு தொடங்கிவிட்டது. கதாநாயகியைக் காணவில்லை. என் போதாத காலம், நான் தான் வசனகர்த்தா. கதாநாயகிக்கு வசனத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஏற்கனவே அந்த நாயகி குறித்து பலரும் பலவாறாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

    இயக்குனர் மட்டுமல்ல, முழு படபிடிப்புமே கூட அவருக்காக காத்திருக்குமாம். அப்படித்தான் மயக்கி வைத்துள்ளாராம். எனக்கு அதெல்லாம் தெரியாது. எனக்கு இது முதல் வாய்ப்பு என்பதால் நானே அவரை தேட ஆரம்பித்தேன்.

    தேடி கிடைக்கவில்லை. வெளியில் அவரது கார் இருப்பதைத் தெரிந்துக்கொண்டேன். சென்றேன். அருகில் செல்லச்செல்ல கார் லேசாக குலுங்குவதை கவனித்தேன். நின்றுவிட்டேன்.

    அதே நேரம் நாயகி காரில் இருந்து இறங்கினார். அந்நேரம் காரில் ஒரு இளைஞன் இருப்பது தெரிந்தது. கார் வேகமாக கிளம்பியது. என்னைக் கண்டதும் நாயகி வேறு பக்கம் திரும்பினார். முகத்தைத் துடைத்துக் கொண்டு சிரித்தவாறே என்னிடம் வந்தார்.

    "சாரி கொஞ்சம் லேட் ஆச்சி..." என்றவர் என்னை முந்திக்கொண்டு சென்றார். அவருக்கான வசனங்கள் என்னிடம் இருந்தன. நானும் அவர் பின்னால் ஓடினேன்.

    இப்படியே படபிடிப்பு முழுக்க நடக்கலானது. நாயகி காணாமல் போவது. கார் காத்திருப்பது. நான் வெளியில் செல்வது. நாயகி முகம் துடைப்பது. கார் கிளம்புவது.

    இப்போது நாயகி என்னுடன் நெருக்கமாகிவிட்டார். படபிடிப்பு வசனங்களைத் தாண்டியும் பலவற்றை பேச ஆரம்பித்தோம். ஏதோ ஒரு தைரியத்தில் அவரிடம் அந்த குலுங்கும் கார் குறித்து கேட்டுவிட்டேன்.

நாயகி சட்டென மௌனமானார். அவரின் கை என் கையைப் பிடித்தது. அவர் பேசலானார்.

    "அது என்னோட மகன், இருபத்து நாலு வயசாகுது... எப்படியோ போதை பழக்கத்துக்கு ஆளாகிட்டான் தினமும் அவனுக்கு காசு வேணும். அம்மா சாப்டாங்களா தூங்கனாங்களான்னு அவனுக்கு அக்கறை இல்லை. என்னோட கண்ணீரைவிட இப்போதைக்கு அவனுக்கு காசுதான் முக்கியம்...."

" உங்களுக்கு இத்தனை வயசுல மகன் இருக்கறதே எனக்கு தெரியாது..."

    " உங்களுக்கு மட்டுமில்ல. யாருக்கும் தெரியாது. தெரியாம இருக்கிற வரைக்கும்தான் நான் ஹெராயின். இல்லன்னா நான் ஹீரோயின்க்கு அம்மா."

"ஆனா என்கிட்ட சொல்லிட்டீங்களே...?"

    "நீங்கதான் முதன் முதலா என்கிட்ட இதை பத்தி கேட்டீங்க.. மத்தவங்க எல்லாம் ஆளாளுக்கு என்ன வேணுமோ அதை நினைச்சிகிட்டாங்க..... நானும் விட்டுட்டேன்..."

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - நிறைவாக

 


நிறைவாக,

    சு.வேணுகோபால் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' வாசித்து முடித்தேன். 13 இலக்கிய ஆளுமைகள் பற்றிய திறனாய்வு அடங்கிய தொகுப்பு.
    ஒவ்வொரு கட்டுரையையும் வாசித்து முடித்த பின் அது குறித்த வாசிப்பு அனுபவத்தை எழுதி வந்தேன். இப்போது நிறைவாக சிலவற்றை சொல்ல வேண்டியுள்ளது.
    நம் காலத்து மூத்த ஆளுமைகளின் படைப்புகள் பற்றிய இக்கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை.
    அவர்கள் எவ்வாறு தனித்திருக்கிறார்கள் எவ்வாறு ஆளுமைகளாக கருதப்படுகின்றார்கள் என்பதனை கட்டுரையாசிரியர் விளக்கமாக சொல்லியுள்ளார்.
    இதன் வழி, அவர்களின் படைப்புலகை வாசகர்கள் எளிதில் புரிந்துக்கொண்டு தங்களின் வாசகப்பார்வையை விசாலப்படுத்தலாம்.
    அதோடு கதைகளை எப்படியெல்லாம் அணுகலாம். எங்கிருந்து கண்டுகொள்ளலாம் போன்ற நுணுக்கங்களை இக்கட்டுரைகள் வழி அறிந்துக் கொள்ளலாம்
மீள்வாசிப்பு செய்யவும் புதிய வாசகர்கள் கதைகளைத் தேடி வாசிக்கவும் இந்த திறனாய்வு பெரிதும் உதவும் என நம்புகின்றேன்.
    இப்படியான புத்தகத்தை கொடுத்தமைக்கு ஐயா சு.வேணுகோபால் அவர்களுக்கும் தியாகு நூலகத்திற்கும் நன்றியும் அன்பும்.

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - பதிமூன்றாவது கட்டுரையை முன்வைத்து

 

பதிமூன்றாவது கட்டுரையை முன்வைத்து...

    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *பதிமூன்றாவது கட்டுரையாக 'கி.ராஜநாராயணன் : கிராமியப் பன்மைத்தன்மையிலிருந்து சாராம்சததை தொகுக்கும் எழுத்துக்கலை' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
    இந்த புத்தகத்தின் கடைசி கட்டுரை. நிறைவான கட்டுரையும் கூட. கி.ராஜநாராயணன் அவர்களை கரிசல் நிலத்தை எழுதியவர் என செல்வது வழக்கம். அவர் கரிசல் வட்டார மனிதர்களைப் பற்றியே அதிகமும் எழுதியுள்ளார்.
    இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து கிராம மக்களின் அன்றாட இயக்கம் எப்படிப்பட்டதாக இருந்தது என்று காண முனைவோருக்கு கி.ராவிப் எழுத்துகள் முதல் ஆவணமாக அமையும்.
    இவ்வரிகள் என்னை யோசிக்க வைத்தன. நம் நாட்டில் எழுதும் கதைகளில் பெரும்பாலான கதைகள் தோட்ட வாழ்க்கையை மையப்படுத்தியே இருக்கும். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இதையே எழுதப்பொகிறார்கள் என்கிற ஏளன பேச்சு பேசுகின்றவர்களும் உண்டு. நம் வாழ்க்கையை நாம் எழுதாமல் வேறு யார் எழுதுவார்கள் என கேட்பவர்களும் உண்டு.
    ஆனால், இன்னும் 50 ஆண்டுகள் கழித்து அக்கதைகள் நம் தோட்ட வாழ்வு பற்றிய ஆவணமாக அமையுமா என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. என்ன சொல்கிறோம் என்பதைக் காட்டிலும் எவ்வளவு ஆழ்ந்து ஆழமாக சொல்கிறோமோ அதுதான் பின்னாளில் பேசப்படும் என்பதில் எனக்கு நம்பிககை உண்டு.
    கி.ரா தன் கதையுலகில் காட்டும் மனிதர்கள் பற்றிய கட்டுரையாளர் சிறப்பாகவே சொல்லியுள்ளார். பல கதைகள் குறித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    அனுபவம் கதையாகும் போது அது எப்படி கலையாகிறது என்பதை இக்கட்டுரைவழி அறிய முடிகிறது. சொல்லப்போனால் வாசிக்க வாசிக்க முடிந்துவிடக் கூடாதே என்கிற ஆசையுடந்தான் கட்டுரையை வாசித்து முடித்தேன்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்