பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 21, 2014

இன்னொரு கிளை முளைக்கிறது

           இன்னொரு கிளை முளைக்கிறது    அது போன்ற மரத்தை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள். நீங்கள் பார்த்த மரத்திற்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளியை என்னால் எளிதாக சொல்லிவிட முடியும். அப்படி சொல்லிச் செல்வதாலெல்லாம் ஏதும் நடந்துவிடாது என எனக்கு நன்றாகவேத் தெரியும். அந்த மரம் எப்போதும் தனித்தே தெரியும். அதன் தடிமனாகட்டும், இலைகளாகட்டும், அதில் தொங்கும் பிணங்களாகட்டும்.

   முதன் முதலாக தூக்கில் தொங்கியது ஒரு பெண்தானாம். அவளை தொடர்ந்து பலரும் மரக்கிளைகளில் ஆளுக்கு ஒன்றென தேர்ந்தெடுத்து தொங்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆச்சர்யம் என்னவென்றால்; முதல் நாள் சிரித்துப்பேசியவர்கள் கூட அந்த மரக்கிளையில் வெளிவந்த நாக்குடன் நாண்டுகிட்டதும் உண்டு.

   இன்னும் அந்த மரத்தை குறித்து பல கதைகள் எனக்கு தெரியும்.  யார் சொல்லியிருந்தாலும் நான் நம்பியிருக்கமாட்டேன். இக்கதைகளை எனக்கு சொன்னது அந்த மரம்தான். நம்புங்கள், கதைகளை சொன்னது அந்த மரமேதான். தன் கதைகளை என்னிடம் சொல்லும் அளவுக்கு மரமும் நானும் நெருங்க காரணமாக இருந்தவர் என் பாட்டிதான்.

பாட்டி.
  பார்ப்பதற்கு பாட்டி மாதிரியே இருக்காது. ஆனாலும் நாங்கள் பாட்டி என்று கூப்பிடுவதைதான் அவர் விரும்புவார். தாத்தாவும் அப்படித்தான் கூப்பிடுவார். இது எங்களுக்கு வேடிக்கையாகவே இருக்கும். வயதுக்கு ஏற்றார் போல கூன் வளைந்திருந்தாலும் தாத்தாவுக்கு என்னமோ இளமை ஊஞ்சலாடுவதாய் நினைப்பு. பாட்டிக்கு நிறைய கதைகள் தெரியும். தாத்தாவுக்கு தெரிந்தெல்லாம் ‘பாட்டி’, ‘பாட்டி’ மட்டும்தான். பாட்டியை இளமையாக வைத்திருப்பது அவர் வைத்திருக்கும் கதைகள்தான் என்று நினைத்துக்கொள்வேன்.

  தாத்தாவுக்கு போட்டி போடும் அளவுக்கு  பாட்டிக்கு நெருக்கமானது அந்த மரம். இன்னும் அந்த மரம் அப்படியே இருக்கிறது. கிளைகள் மட்டும் தூக்கில் தொங்குபவர்களுக்காக அவ்வபோது புதிது புதிதாக வந்துவிடும். தொங்கியவரை கீழே இறக்கும் போதே கிளையும் தானாக உடைந்துவிடும். அதுவரை தாங்கிய கிளை, முடிச்சினை அவிழ்க்கும் போது உடைவதன் காரணம் யாருக்கும் புரியவில்லை.
   இரவும் , விடியும் நேரமும் பாட்டி அந்த மரத்திடம் தனியேச் செல்வார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதைகளை பாட்டி சொல்வது அந்த மரத்திடம் இருந்து கேட்ட கதையாகத்தான் இருக்கும் என தோன்றியது எனக்கு. புத்தகங்களில் கூட படித்திருக்காத கதைகள் அவை.

பாட்டியின் கதைகளில், காடு, ஆதிவாசிகள், புலி, புல், மலை, மான் என இருக்கும். காடு மனிதர்களுடம் பேசும் .புலி இறகுகடன் பறந்துகொண்டே இறை தேடும். புல் நினைத்த நேரம் மரமாகும் பனி நேரம் புல்லாகும். மலை தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கும். மான், பூமிக்கடியில் வாழ்ந்துக்கொண்டிருக்கும். இப்படி பல.

  தாத்தா தூங்கிய பிறகே பாட்டி மரத்திடம் செல்வது வழக்கம். அன்றைய தினம் நானும் தாத்தாவும் ஒரு விளையாட்டு விளையாடினோம். பாட்டிக்கு தெரியாமல் பின்னால் செல்லவேண்டும். ஏன் தாத்தாவுக்கு அப்படி ஒரு விளையாட்டு விளையாட தோன்றியது என தெரியவில்லை. இத்தனை நாளாய் ஏன் அந்த விளையாட்டை விளையாடவில்லை எனவும் தெரியவில்லை. எப்படியும் பாட்டிக்கும் மரத்திற்கும் இடையில் இருக்கும் ரகசியம் இன்று தெரியப்போகிறது என்ற நினைப்பே என்னை தூங்கவிடவில்லை. வழக்கத்துக்கு மாறாக தாத்தா அன்று அடிக்கடி சிரித்துகொண்டே இருந்தார். பாட்டியையும் கிண்டல் செய்துக்கொண்டே இருந்தார்.

   நாங்கள் தூங்குவதை பாட்டி உறுதி செய்தார். வீட்டின் பின்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. பாட்டி வெளியேறினார். தாத்தாவும் பாட்டி சென்றதை உறுதி செய்து, எழுந்தார். நானும் எழுந்துக்கொண்டேன்.

தாத்தா மெல்லியக்குரலில் “டேய் நீயும் தூங்கலையா..”

“பாட்டியை பாக்கலாம்னு சொன்னிங்க அதான் தூக்கமே வரல..”

“ச்சரி ச்சரி... சத்தம் போடாம என் பின்னாலயே வா...”

  தாத்தாவை பின் தொடர்ந்தேன். திறந்திருந்த பின்வாசக்கதவில் இருந்து தாத்தா எட்டி பார்த்தார். அடுத்து அவர் என்னை கூப்பிடுவார் என காத்திருந்தேன். தாத்தா கூப்பிடவில்லை. மெல்ல நானும் தாத்தாவுக்கு அருகில் சென்றேன். தாத்தா சிலை போல நின்றுக்கொண்டிருந்தார். தாத்தாவின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. வயதான பின்னர்கூட வந்திடாத நடுக்கம் அது. அது நடுக்கமா; பயமா.
மெதுவான குரலில் ‘தாத்தா..தாத்தா... என்ன பாக்கறிங்க.. நான் வரட்டா..?’
  
 தத்தாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. நடுக்கம் மட்டும் இருந்தது. இன்னும் அருகில் சென்றுவிட்டேன். தாத்தாவின் கையை பிடித்தேன். சுயநினைவு வந்தவராய் தாத்தா என்னைப் பார்த்தார். பார்த்தவர் திருப்பி மரத்தை பார்க்கவும். அவருக்கு எதிரில் பாட்டி நின்றுக் கொண்டிருந்ததும் தூக்கிவாரிப்போட்டது. அசாதாரண நடுக்கத்தை அவர் உடல் காட்டியது. அப்படியே என்னை பாட்டிக்கு தெரியாதது போல பக்கவாட்ட சுவரில் மறைத்தார்.

   விடிந்தது. தாத்தா இன்னமும் என் கையைத்தான் படித்துக்கொண்டே படுத்திருக்கிறார். எப்போதும் எழுப்பும் பாட்டியில் குரல் இன்று பல எதிரொலிகளாகக் கேட்டது. தாத்தாவும் பாட்டியும் பேசத்தொடங்கினர்.

“நீங்க கொடுத்த சத்தியத்தை மீறிட்டிங்க..”

“இல்ல பாட்டி, விளையாட்டுக்குத்தான்...”

“இதென்ன விளையாட்டு, சத்தியத்தை மீறிட்டு சாக்குபோக்கு சொல்றியா, நீ, விளையாட்டுன்னு...?”

முதன் முறையாக ஓர்மையில் அழைத்தார் பாட்டி.
“பாட்டி இதுவரைக்கும் நீ சொன்னதைதானே செய்தேன்..”

“போதும் போதும், நா அப்பவே உன்கிட்ட சொல்லிட்டேன்.... இதெல்லாம் நடக்கும்ன்னு, நீதான் சத்தியம் செய்றேன்...சாதித்துக் காட்டறேன்னு என்னை சம்ப்பதிக்கவச்ச..”

    பாட்டியின் குரல் கரகரத்தது. தங்க நிற முகம் நீல வண்ணமாகியது. அவளில் கண்களில் இதுவரை நான் பார்த்திடாத வன்மம் அரங்கேறியது. கண்கள் சிவந்தன. வானவில்லின் வண்ணங்கள் எல்லாம் அழிந்து , சிவந்த நிற கோடாய் மாறியது அவளது புருவம். கன்னங்கள் அதிர்ந்தன. அவள் உடல் உதரத்தொடங்கியது. தலையை ஆட்டவும் கழுத்துவரையிருந்த முடி பூமியைத்  தொடுமளவு வளர்ந்து கரு அலையென கூந்தல் பொங்கியது. நகங்கள் கூர்மையாகின. அவளின் உடல் வழக்கத்தைவிட பன்மடங்காகியது. உடுத்தியவைகள் கிழிந்தன. எப்படி, இத்தனை கரு நீலமாக இருக்க முடியும் உடல். நாக்கை அவள் நீட்டவும் அது, பூமிவரை வந்தது. நாக்கிலிரும்ந்து வழிந்துக் கொண்டிருக்கும் இரத்தம் அதன் வீச்சத்தை வீசியது.   கைகளை அகல நீட்டினாள். அவள் உஷ்ணமானாள். அது, பக்கத்திலிருப்பதையெல்லாம் பொசுக்குகிறது.

  தாத்தா தன் தவறை ஒப்புக்கொள்ளும் விதமாக மண்டியிட்டார். கைகளை கட்டிக்கொண்டு தலையை கவிழ்த்தார். எங்கிருந்து வந்ததென தெரியாமல் ஒரு கத்தி.. கத்திதான் என சொல்லிட முடியாது. மரத்தின் கிளை போலவும் இருந்தது. வலது கை உயர்ந்தது. மின்னலின் வேகமாய் தாத்தாவின் தலை துண்டிக்கப்பட்டது. தாத்தாவின் சுடு இரத்தம் என் முகத்தில் தெரித்தது.

   கூச்சல் சத்தம் திடுக்கிட வைத்தது.

  வீட்டிற்கு வெளியில்தான் கூட்டம் கூடியிருந்தது. தாத்தாவும் நானும் வியர்வையின் நனைந்துதான் எழுந்தோம். தலை இன்னமும் கழுத்தில் இருக்கிறதாவென தாத்தா தடவிப்பார்த்துக்கொண்டே எழுந்தார். நாங்கள் வாசல் கதவை திறந்தோம். கூட்டமாகத்தான் இருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் கூச்சல் சத்தம் ஒப்பாரியாக மாறியது. அவர்களின் பார்வை மரத்தை நோக்கியே இருந்தது. எந்த சலனமுமின்றி தாத்தாவும் மரத்தை நோக்கி நடக்கலானார். நானும்.
  
 மரத்தின் கிளையொன்றில் பாட்டி தொங்கிக்கொண்டிருந்தாள். அழகிய முகம் இன்னமும் அழகாக தெரிந்தது. சிரித்த முகமாய் செத்திருந்தாள் பாட்டி. எல்லோரும் பாட்டியையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். தாத்தா, பாட்டி தொங்கிகொண்டிருக்கும் கிளையையே பார்த்துக்கொண்டிருந்தார்.

  அந்த கிளை இதுவரை இங்கு இருந்ததில்லை. ஒரே நாளில் எப்படி முளைத்தது. அதும் பாட்டியின் உடலை தாங்கும் அளவுக்கு ஒரே நாளில் கிளை முளைத்ததா. தத்தாவின் கண்கள் இன்னும் அந்த கிளையிலேயே இருந்தது. அது பாட்டியல்ல, கிளையால் தாத்தாவின் தலையை வெட்டிய ஏதோ ஒன்று. அவருக்கு பித்து பிடித்ததாய் பேசிக்கொண்டார்கள். கைத்தாங்களாக சிலர் தாத்தாவை சிலர் அப்படியே நாற்காலியில் அமர செய்தார்கள். பாட்டி இன்னும் தொங்கிகொண்டுதான் இருக்கிறாள். அது தற்கொலையா இல்லை, மரத்தின் ஊஞ்சலாட்டமா என தெரியாதவாரு காற்றில் பாட்டி கயிற்றுடன் ஆடிக்கொண்டிருந்தாள்.

  சில நாட்களில் தாத்தாவும்  கிளையில் தொங்கினார். முகம் வீங்கி, நாக்கு வெளியே தள்ளியபடி பயங்கரமாக இருந்தார். பாட்டி தொங்கிய கிளைக்கு பக்கத்தில் ஒரு புது கிளை அது.

 கொஞ்ச நாள் , தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தார் தாத்தா. அவ்வபோது,
“இந்த சத்தியத்தை நான் காப்பாத்தியிருக்கனும்...நான் காப்பாத்தியிருக்கனும்... என்ன மன்னிச்சிடு”

   என்றே புலம்பலானார். தினம் இரவில் திடுக்கிட்டு எழுத்து தன் தலை, கழுத்தில் இன்னமும் இருக்கிறதாவென்று தடவிப்பார்ப்பதை அப்பாவும் கவனித்ததாய் சொல்லிக்கொண்டிருந்தார். பாட்டியின் இறப்புக்கு வந்திருந்த அம்மாவும் அப்பாவும், என்னை இனியும் அங்கு வைத்திருப்பது நல்லதல்லவென்று பள்ளி விடுமுறைக்கு முன்பே கூட்டிப்போவதாக சொல்லிக்கொண்டார்கள். தாத்தாதான்;

  “நான் இருக்கபோறது என்னமோ கொஞ்ச நாள்தான்.. அதுக்குள்ள ஸ்கூலு லீவு முடிஞ்சிடாது... மொல்லமாவே பேரனைக் கூட்டிப்போங்க” என்று என் கைகளை பிடித்துக்கொண்டு சொல்லுவார்.

   தாத்தாக்கும் பாட்டிக்கும் இடையில் என்ன சத்தியம் இருந்திருக்கும். பாட்டிக்கும் மரத்திற்கும் என்ன சம்பந்தம். அன்று, தாத்தா எதை பார்த்து ஸ்தம்பித்து நின்றார். என் கனவில் வந்தது போலவே அவர் கனவில் தலை துண்டிக்கப்படுப்வது வருகிறதா..? பாட்டியின் இறப்பை விட, பாட்டி தொங்கிய மரக்கிளை தாத்தாவிற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது ஏன். இப்படி கேள்விகளுக்கு மேல் கேள்விகள் உள்ளுக்குள் இருக்க. அப்பாவி முகத்துடன் தாத்தாவுடன் நேரத்தை கடத்தினேன்.

  அப்பா தனியே அழைத்து, “அய்யா, தாத்தாக்கும் மனசு சரியில்ல... கொஞ்சம் பார்த்துக்கோ நாளைக்கு நானும் அம்மாவும் போகனும்... ஸ்கூலு லீவு வரைக்கும் இங்க இருந்துக்கோ... அப்பறம் தாத்தாக்கு ஒரு வழியை ஏற்பாடு செய்துடறோம். என்ன பார்த்துக்கறயா...? பயமா இருக்கா..?”

     பதிலையும் அவராகவே நினைத்துக்கொண்டு; அம்மாவுடன் மறுநாள் புறப்பட்டார்.
..................................................................................................................................

கார் புறப்பட்டது.

   ‘என்னங்க... இந்த வயசுல போய் உங்கம்மா தூக்குமாட்டிருக்காங்களே... பையனை வேற அந்த வீட்டுலயே விட்டுடு வந்திருக்கோம்... உங்க அப்பாவை   நினைச்சா... ’

  “என்ன.. என்ன சொல்ல வர.. எங்க அப்பாவை நினைச்சா... பைத்தியம் மாதிரி தோணுதா... மணிக்கு எதும் ஆகிடும்ன்னு நினைக்கறியா...?”

“அதான் உங்களுக்கே தெரியுதே நான் வேற சொல்லனுமா..”

   “தோ பாரு, அம்மா செத்துட்டாங்க... விதி முடிஞ்சிபோச்சி... அது தூக்குல போனா என்ன எவனாவது தூக்கிட்டு போனா என்ன.. போற வயசுதானே...அப்பாவே சொல்ராரு இன்னும்   எவ்வளவு நாள் இருப்பேனோ தெரியலைன்னு.... மணி ஒன்னும் சின்ன பையன் இல்ல... அப்படி ஒன்னும் மணிக்கு நடந்திடாது...”

   “எனக்கு என்னமோ மனசே சரியில்லங்க... அந்த மரத்தை பார்த்தாலே பயமா இருக்கு... பெசாம அதை வெட்டிட வேண்டிதானே...?”

   நாகலெட்சுமி சொல்லி முடிக்கவும், கார் எதையோ மோதித்தள்ளவும் சரியாக இருந்தது. கார் டயர் தேயும் அளவு சத்தம் கேட்டு, நிறுத்தப்பட்டது. அவளும் குமாரும் அதிர்ச்சியில் கொஞ்ச நேரம் காரைவிட்டு இறங்கவில்லை. அந்த சாலையும் சரியான விளக்கொளி இல்லாமல் அனாதையாகிக்கிடக்கிறது. எதை மோதினோம் யார்..என்ன.. போன்ற குழப்பத்தில் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறார்கள். தைரியத்தை வரவைத்துக்கொண்டு குமார், காரைவிட்டு இறங்கினான். பின், திரும்பி;

   “பயப்படாம இரு, நான் என்னன்னு பார்த்து வந்திடறேன்... கதவை லாக் செய்துக்கோ... பயப்படாத”

   இறங்கியவன் சில நிமிடங்கள், வியர்த்த முகமாய் காரில் ஏறினான். காரின் குளிர்சாதன பட்டன் அதன் கடைசி எல்லையை தொட்டிருந்தாலும் இன்னமும் கழுத்தில் வியர்வை திட்டுகள் இருக்கின்றன.

  “என்னங்க எதை மோதிட்டிங்க... பூனையா நாயா..?”

  “ஏன் மோதினது மனுசனா இருக்ககூடாதா..” என்றே சர்வ சாதாரணமாய் கேட்டான் குமார். சில சமயம் இப்படி பேசி தன் பயத்தை மூடி மறைப்பதில் கைத்தேர்ந்தவன் அவன் என்பதை இன்னும் அவள் புரிந்துக்கொள்ளவில்லை.

  “நாய் மாதிரிதான் தெரியுது”

என்றவன், வானொலியை திறந்த சத்ததை அதிகமாவ வைத்தான். மனைவி எரிச்சலில் ஒரு முறை பார்த்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு, கைகுட்டையை முகத்தில் போர்த்திகொண்டாள். வானொலி சத்ததை குறைத்தவன், சில சம்வங்களை மனதில் நினைக்கலானான். இதன் காரணம் காரைவிட்டு இறங்கியவன் பார்த்த காட்சிதான்.

  இறங்கியவன், முதலில் காரின் முன் சக்கரத்தைதான் கவனித்தான் அப்படியொன்றும் இருப்பதாய் தெரியவில்லை. ஒரு முறை மனைவியைப் பார்த்துவிட்டு பின்னாள் சென்றான். அங்குதான் நின்றுக்கொண்டிருந்தது அந்த மரம். அம்மா அடிக்கடி போய் பேசும் அதே மரம்தான். குமாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எப்படி அந்த மரம் இங்கு வந்திருக்கும். அம்மா தொங்கிய அதே கிளைதான் அவனைப் பார்த்து அசைந்தது. இல்லை அசைத்தது.
   அந்த மரமே மாபெரும் மாயையாக தெரிந்தது. மாயையை எப்படி வகைப்படுத்துவது. மாயமா, மர்மமா, மாபெரும் உண்மையா, நிலைத்தன்மையா , புதிர் பிம்பமா.
   இருட்டிலும் ,இருட்டிக்காமல் அந்த மரம் நின்றுக்கொண்டிருந்தது. ஜொலிக்கவில்லை. ஆனால் மற்ற எதையும் தவிர தன்னை மட்டும் ஒளியால் சூழ்ந்திருந்தது அந்த மரம். மாய மரம். அம்மா அப்படித்தான் சொல்லிச் சென்றால்.

  “அது மாய மரம் அதான்... போ போ போய் படிக்கற வேலையைப்பாரு... இனிமேலும் அந்த மரத்துகிட்ட போய் விளையாடாத...”

   சிரித்துக் கொண்டே அம்மா சொல்லிச் சென்றால். அப்பா அந்த வழியே வந்தாலும். காது கேட்காது போல வேறெங்கோ பார்த்துக் கொண்டுச் சென்றார். அம்மா அப்பா வெளியில் செல்லும் வரை அங்கேயே நின்றுகொண்டிருந்தாள். அம்மாவும் குசுனிக்கு சென்றாள்.

   இனிமேல் அந்த மரத்துக்கு அருகில் செல்வது என்ன.. அந்த மரத்தை பற்றி யாரிடமும் சொல்வதுமில்லை என முடிவெடுத்துக்கொண்டேன்.

   விளையாடிக்கொண்டிருந்தோம். ஓடிப்பிடித்து விளையாடுவது. போலிஸ் திருடன் என்பது அதன் பெயர். எங்கள் குழுவில் யாரும் விளையாட்டில் கூட போலிஸாக விரும்புவதில்லை. காளிதாஸின் அப்பாவை போலிஸ்காரர்கள் கூட்டிச்சென்று, கொன்று விட்டார்கள் என்றதும் அதன் காரணங்களில் ஒன்று. இன்னொன்று, போலிஸ்தான் பிடிக்கவேண்டும். திருடர்கள் ஓட வேண்டும். எங்களுக்கு எப்போதும் ஓடத்தான் பிடிக்கும். விசுவின் அம்மாவும் இந்தோநேசியக்காரனுடன் ஓடியிருக்கிறார். பல ஆண்கள் ஆகியும் பிடிபடவில்லை.
  
 ஆளுக்கொரு இடத்தில் மறைந்துக்கொண்டார்கள். எப்படியோ பேசிப்பேசி பாலாவை போலிஸாக்கிவிட்டோம். சீக்கிரத்தில் அவன் கையில் மாட்டி போலிஸாக விரும்பவில்லை. ஆகவேதான் அவன் யோசிக்காத இடமாக இருக்கும் மரத்திடம் சென்றேன். இயல்பாகவே எங்களுக்கு அந்த மரத்திடம் பயமிருப்பதால். நான் அங்குதான் மறைவேன் என பாலா யோசித்திருக்கமாட்டான். எனக்கே ஆச்சர்யமாக தோன்றிய ஐடியா அது.

   என்னைப்போல இரண்டு மூன்று பேராவது ஒரு புறம் நின்றால், மறுபுறம் தெரியாது. அவ்வளவு அடர்த்தி அந்த மரம். அப்படியிருந்தும், மறைந்தது போதாதென்று. மரத்தில் ஏறலாம் என நினைத்தேன். ஏறினேன். கடினமாகவேத் தெரியவில்லை. யாரும் பின்னால் இருந்து தள்ளினார்களா.. யாரும் முன்னால் இருந்து இழுத்தார்களா என்றெல்லாம் தெரியவில்லை. ஏறுவது அவ்வளவு இதமாக இருந்தது.

   இலைகளுக்கு நடுவில், பெருத்த கிளையொன்றின் வளைவில் அமர்ந்துக்கொண்டேன். கை சும்மா இருக்கவில்லை. கிளையின் காய்ந்த மட்டைகளை பிய்த்துக்கொண்டிருந்தது. மரம் சமபந்தம் இல்லாமல் குலுங்கும்போதே எச்சரிக்கையாகியிருக்கலாம். அமர்ந்திருந்த கிளை சட்டென முன்னோக்கி உருண்டது. அபப்டியே கீழே விழப்போனேன். தரைவரை போய்விட்டேன். இதயம் ஸ்தம்பிக்கும்படி இலைகளால் சூழப்பட்டேன். இறகு  முளைத்த இலைகள் அவை. அப்படியே என்னை தாங்கின. அப்படியே மேலே கிளைவரை கொண்டு போனது. நான் பிய்த்து போட்ட காய்ந்த மரப்பட்டைகள். நெளிந்துக்கொண்டு மீண்டும் மரத்திலேயே ஒட்டிக்கொண்டது. பாலாவின் குரல் கேட்டது. இறகு முளைத்த இலைகள் என்னை எந்த சேதமுமில்லாமல் கீழே இறக்கிவிட்டன.

   விளையாட முடியாமல். வீட்டிற்கு சென்று அம்மாவிடம் சொன்னதும்தான் அம்மா அப்படியொரு பதிலும் அப்பா கண்டுக்கொள்ளாமல் சென்றார். அந்த மரம் எங்களை காக்கும் தெய்வம் போல நினைத்தாலும். அதன் அருகில் செல்வதை தவிர்த்தேன்.

   அந்த நம்பிக்கையை அம்மாவின் தற்கொலை கொலை செய்தது.
“மணி... மணி...”

“என்னங்க தூங்கிட்டிங்களா... வந்து எவ்வளவு நேரம் ஆச்சோ....”

    கண்விழித்தவனுக்கு விடிந்தது அப்போதுதான் தெரிந்தது. எப்போது வந்தோம் எப்போது தூங்கினோம் என்றே தெரியவில்லை. வீட்டு வாசலிலிருந்த காரிலிருந்து இறங்கினார்கள்.

“ஆமா மணி எங்க...”

“என்ன விளையாடறிங்களா... நீங்கதானே மணி லீவு முடியர வரைக்கும் உங்க அப்பாகூட இருக்கட்டும்ன்னு சொன்னிங்க...”

“நானா சொன்ன..?”
“இல்ல... செத்துப்போன உங்க தாத்தா சொன்னாரு...”

   என்று தான்பட்டுக்கு, காரிலிருந்த பொருள்களுடன் வீட்டிற்கு சென்றாள். குமாருக்கு குழப்பமாகவே இருந்தது. சட்டென மாய மரம் கண்முன் தோன்றி மறைந்தது.

   அம்மா தொங்கிகொண்டிருக்கிறாள். மீண்டும் ஒரு கிளை முளைக்கிறது. அதிலிருந்து இலைகளே கயிறாக ஒன்றினைகிறது. அதன் நுனி மரத்தை ஒரு சுற்று சுற்றியப்பிறகு வீட்டிலுள் சென்றது.

   “என்னங்க.. என்ன செய்றிங்க.. சாமான்களை எடுத்துட்டு வரிங்களா..”

........................................................................................................

“நீங்க இனிமேல என்ன பாட்டின்னு கூப்பிடனும் சரியா..?”  

   “எனக்காக நீ வந்திருக்கும் போது உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்யத் தயாரா இருக்கேன்...”

“ஏன்னு கேட்க மாட்டிங்களா...”

  “ஏன் கேட்கனும்... நீ யாரு... இந்த காட்டு ராணி. நீ மட்டுமில்லன்னா என்னை இதே இடத்துல கொன்னு, உங்க ஆளுங்க சாப்பிட்டிருப்பாங்க...”

  “வேணாம் அதை பத்தியும் இனிமேல பேச வேண்டாம். நாம் உடனே இங்கிருந்து போகனும். சொன்ன வாக்கை காப்பாத்துவிங்களா...?”

  “என்னோட தலை என் கழுத்துல இருக்கிற வரைக்கும்... எதைப்பத்தியும் உன்கிட்ட கேட்க மாட்டேன்..”

   பாட்டி, கையை நீட்டினாள். அவன் கையை பற்ற முயற்சிக்கும்போது. பக்கத்திலிருந்த மரம் தன் கிளையை அவள் கையுடன் வைத்து பற்றியது. அவள் அந்த கையை இறுக பற்றினாள். அந்த கிளை கொஞ்சம் கொஞ்சமாம அவள் கைப்பிடியளவு கிளையை விட்டு பாதியை தானே முறித்து, உடைத்து மீண்டும் மரத்துக்கே திரும்பியது.

   அவள் , தன்  மார்பை மறைந்திருந்த தடி இலையை கழுத்து வழியே வெளியேடுத்தாள். தங்கமென வர்ணிக்கும் வகையை சார்ந்த தங்கம் அது. மார்புக்கு மத்தியில் கையில் கிடைத்த கிளையை வைக்கிறாள். சதை பிளந்து கிளை மார்புக்கூண்டுக்குள் அடைக்களமாகியது.

..............................................................................................................................

     யாருக்கும் தெரிந்திருக்காத ரகசியம் அது. உங்களுக்கு மட்டும் சொல்ல நினைக்கிறேன். கேளுங்கள். அதற்கு முன் பாருங்கள் அந்த மாய மஹா மரத்தில் புது கிளை முளைக்கிறது. நம்மில் யார் நாக்கு தொங்கி சாகப்போகிறோம்.

   விட்டுவிடுங்கள் நாம் காத்துக்கொண்டிருக்கும், மறைத்துக் கொண்டிருக்கும். நினைத்து நினைத்து சிரித்தும் அழுதும் கொண்டிருக்கும் ரகசியங்களுடன் இதனையும் சேர்த்துக்கொண்டு நிம்மதியாக தூங்குங்கள். தொங்குவதற்கு முன்பாவது கொஞ்சம் தூங்கலாம்.


எழுத்து - தயாஜி  

மே 2014 'கல் குதிரை'யில் வெளிவந்த எனது சிறுகதை. 
நன்றி கோணங்கி, 
நன்றி நண்பர் லஷ்மி சரவணக்குமார்
Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்