- சாதல் கவிதைகள் -
பணத்தை
சம்பாதிப்பது எப்படியென
பாடம் எடுப்பவன்
நிஜமாகவே சம்பாதிக்கின்றான்
அதைக் கற்றுக்கொள்பவன்
மட்டும்
பிச்சை எடுக்கிறான்
சகாவே
நாங்களும் உங்களுக்கு
இதைத்தான் சொல்கிறோம்
காதல் கவிதைகளை
எழுதுவதற்கு முன்னமே
காதலியையோ காதலனையோ
நீங்கள்
கண்டடைந்துவிடுங்கள்
ஏனெனில்
எழுதத்தொடங்கிய பின்
கவிதைகள் வருமே தவிர
ஒருபோதும்
காதலனோ காதலியோ
வரமாட்டார்கள்
உங்கள் இதயத்தில்
கொஞ்சமும் இடைவெளியின்றி
காதல் கவிதைகள்
தன்னை நிரப்பிக்கொள்ளும்
காணும் காட்சிகளில்
எங்கெங்கும்
காதல் மயக்கம்
உங்களை ஆட்கொள்ளும்
போதைக்கடலில்
மூச்சுமுட்ட
குதித்து குளித்து கொண்டாடி
சுகம் காண்பவன்
கரைக்கேன் வரப்போகிறான்
அவனுக்கு
ஆள் தின்னும் சுறாவும் ஒன்றுதான்
தான் தின்னும் இறாலும் ஒன்றுதான்
0 comments:
கருத்துரையிடுக