பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 03, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘பேனாவுக்குள் அலையாடும் கடல்’

 

புத்தகவாசிப்பு_2021 ‘பேனாவுக்குள் அலையாடும் கடல்’

தலைப்பு –‘பேனாவுக்குள் அலையாடும் கடல்’

வகை – கவிதை

எழுத்து – கவிஞர் கலாப்ரியா

வெளியீடு – டிஸ்கவரி புக் பேலஸ்

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

 


கவிதைகளில் என்ன கிடைத்துவிட போகின்றது?, என்கிற கேள்விகளை எதிர்க்கொள்ளாதவர்கள் இருக்க முடியாது. ஒரே கேள்வியை யாரும் கேட்கலாம். கேள்வியில் மாற்றம் இருக்காது. ஆனால் இதற்கான பதில் ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆச்சர்யம் என்னவெனில் எந்த பதிலுமே தவறான பதிலில்லை என்பதுதான். ஒருவருக்கு கவிதை; காதல். ஒருவருக்கு கவிதை;கண்ணீர். ஒருவருக்கு கவிதை;துரோகம். ஒருவருக்கு கவிதை;தாய்மை. இப்படி ஆளுக்கொன்று கிடைத்துவிடுகின்றது கவிதைகளில்.

இப்படி கிடைக்கும் ஒவ்வொரு பதில்களையும் ஒருசேர கவிதைகளில் காட்டிவிட சில கவிஞர்களால் மட்டுமே முடிகின்றது. அத்தகைய கவிஞர்களில் ஒருவர் கவிஞர் கலாப்ரியா. முன்னமே இவரது ‘தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி’ என்கிற கவிதை தொகுப்பு குறித்த வாசித்து அனுபவத்தை எழுதியுள்ளேன். அதில் கவிஞர் குறித்த அறிமுகத்தையும் எழுதியிருந்தேன். ஆக, இம்முறை நேராக இக்கவிதை தொகுப்பிற்கு செல்வோம்.

கலாப்ரியாவின் கவிதைகளில் குழந்தைகள் எப்படியாவது நுழைந்துவிடுகின்றார்கள். கவிஞர் குழந்தையாகவே மாறிவிடுகின்றார். நம்மையும் மாற்றிவிடுகின்றார். இந்த தொகுப்பிலும் அப்படியாக சில கவிதைகள் இடம்பெறுகின்றன.

‘புத்தக மூட்டையுடன்’ (பக்கம் 29)  என ஒரு கவிதை. அம்மாவிடம் திட்டு வாங்கி புத்தக மூட்டையுடன் பள்ளி வாகனத்தில் குழந்தைகள் ஏறுகின்றன. அங்கிருந்து அம்மாவுக்கு கையசைக்கும் குழந்தைகள், நடந்த எதனையும் நினைத்திருக்கவில்லை என்கிறார். அதோடு நிற்கவில்லை. அந்த நொடியில் இருந்து நடந்த எல்லாவற்றையும் அம்மா சுமக்க ஆரம்பிப்பதாக சொல்கிறார். உண்மைதானே. குழந்தைகளால் நடந்தவற்றை நொடியில் மறந்துவிட முடிவதுதான் எத்தனை பாக்கியம். ஏறக்குறைய இதே மனநிலையில் இன்னொரு கவிதையைச் சொல்கிறார்.

‘அவசரமாகப்

பென்சில் சீவுகையில்

ஆழமாக வெட்டியிருப்பது

குழந்தை பள்ளிக்குப்

போன பிறகே

வலிக்கிறது அம்மைக்கு’ (பக்கம் 53)

குழந்தைகள் அருகில் இருக்கும் பொழுது நம்மையும் அந்த நொடியில் வாழ வைத்து விடுகின்றார்கள். ஆழமான காயம் பட்டும் அம்மைக்கு வலிக்கவில்லை. ஏனெனில் அவள் வெட்டுபட்டதும் வேதனை கொண்டதும் குழந்தைக்காகதானே. அந்த வேதனை குழந்தையைத் தாக்கிவிடுவதை அம்மாக்கள் விரும்புவதில்லையே.

வாழ்வின் அன்றாடங்களில் நாம் தவறவிட்ட தருணங்களை திரும்பவும் நமக்கே கொடுக்கின்றார். அவற்றை கவிதையாக்கி கொடுப்பதில் கவிஞர் கைத்தேர்ந்தவராக இருக்கின்றார்.

‘உன்னையடைந்து

உன்னைப் பாதிக்கும்

கவிதை வரிகளில்

நீயறியாமல்

உன் பெயர்

எழுதப்பட்டிருக்கிறது’ (பக்கம் 56)

ஏதாவது ஒரு வகையில் நாம் ஏமாற்றப்படுகின்றோம். நம்பிப்பழகியவர்கள்தான் நம்மை அத்தனை எளிதாக ஏமாற்றிவிட்டு போகிறார்கள். யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரவர் நிலைக்கு ஏற்றார் போல நாம் அதனை கடந்துவிட முயல்கிறோம். சமயங்களின் அழுதும் விழுகின்றோம். ஆனால் கவிஞர், ஏமாந்தவர்களின் மனநிலையில் அதற்கான காரணத்தை கவிதைகளில்  கண்டறிய முயல்கின்றார்.

காலகாலமாய் காகங்களுக்குத்

தெரிவதே இல்லை

நரிகளின் பாஷை (பக்கம் 20)

 #####

கற்கள் பொறுக்கிப்

போட்டது

காகம்

ஆந்தை வந்து

நீரருந்திப் போயிற்று (பக்கம் 25)

பெண்களை புரிந்துக் கொள்வது சுலபமா என்ன? கவிஞன் அதை விளையாட்டாய் கடந்து போக நினைப்பவன். அதனை கண்டறிய முயல்பவன். இத்தொகுப்பில் கவிஞரும் அவ்வாறான முயற்சியில் இறங்கியுள்ளார்.

தரவும் மாட்டாள்

விடவும் மாட்டாள்

எல்லாம் தெரியும்

எதுவும் தெரியாமல் இருப்பாள் (பக்கம் 32)

    இவ்வாறாக தனது கண்டுபிடிப்புகளை அடுத்த பக்கங்களிலும் அடுக்கிக்கொண்டே போகின்றார்.

புகழ் போதை மனிதனை பீடித்துக் கொண்டால் விடுவது சுலபமில்லை. கிடைத்துவிட்ட புகழை பாதுகாக்கவே பல இழப்புகளை சந்திக்க வேண்டிவரும். அது பயணத்திற்கு தடைபோட்டுவிடுகிறது.  அத்தகைய புகழ் போதைக்கும் ஒரு கவிதை சொல்லியுள்ளார்.

வெளிச்சம் உன் மீதே

விழுந்து கொண்டிருந்தால்

கருகிப் போய்விடுவாய்

காட்சிகளை மாற அனுமதி (பக்கம் 39)

இத்தொகுப்பில் கூடுதல் கவனத்தை ஈர்ப்பது குரு சிஷ்யன் பற்றிய கவிதைகள். மெல்லிய பகடியை அக்கவிதைகள் பேசினாலும் அதிலிருந்து வேறொரு பரிணாமத்திற்கு நம்மை அழைக்கின்றது.

அவர் கரையேறிய பின்

ஆற்றில் நீந்திக் களிக்கும்

சீடர்களை அதிசயமாகப் பார்க்கிறார்

அது தெரியாத குருநாதர் (பக்கம் 63)

பாருங்கள். இக்கவிதையில் இருக்கும் பகடி, சிரிக்க மட்டுமா வைக்கிறது. இங்கு யாருக்கு யார் குரு என கேட்கவும் வைக்கின்றது. இப்படியாக பல  கவிதைகள் அடங்கியுள்ளன.

            வாசகர்களின் நினைவுகளுடன் விளையாடும் கவிதைகள் கொண்ட தொகுப்பு. வாசிக்க வாசிக்க நாமும் நம் அன்றாடங்களில் மறைந்திருக்கும் கவிதைகளைக் கண்டுகொள்ள உதவும் புத்தகம். இவ்வளவுதானா கவிதைகள் என சத்தமாக கேட்கவும் வைக்கின்றன, இந்த கவிதையை ஏன் கண்டுகொள்ளாமல் போனோம் என்கிற சுய பரிசோதனைக்கு நம்மை அழைத்தும் செல்கின்றன. கவிஞருக்கும் நன்றியும் அன்பும்.

 

#தயாஜி

#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மே 01, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘தஸ்தயெவ்ஸ்கி கதைகள்’

புத்தகவாசிப்பு_2021 ‘தஸ்தயெவ்ஸ்கி கதைகள்’

தலைப்பு –‘தஸ்தயெவ்ஸ்கி கதைகள்’

வகை – கதைகள்

எழுத்து –தஸ்தயெவ்ஸ்கி

தமிழாக்கம் – எம்.ஏ.சுசீலா

வெளியீடு – நற்றிணை பதிப்பகம்

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

 

 


ரஷ்ய இலக்கியத்தில் மட்டுமின்றி உலக இலக்கியத்தின் மீது இன்றளவும் ஆதிக்கம்  செலுத்தும்  எழுத்தாளர்  பியோதர்-தஸ்தயெவ்ஸ்கி. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை  வாசிப்பவர்கள் நிச்சயம் தத்தம் வாசிப்பு தளத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள்.  அவரின்  அறிமுகங்கள் வழி நாம் அறிந்துக்கொள்வது அதிகம். எஸ்.ராவும் சரி ஜெயமோகனும் சரி தஸ்தயெவ்ஸ்கி பற்றி தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகின்றார்கள். அவர்களின் அறிமுகங்களின் வழி தமிழ் வாசகர்கள் மத்தியில் ரஷ்ய இலக்கியம் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றது.

இவர்கள் வழி அல்லாமல், தஸ்தயெவ்ஸ்கி எவ்வாறு அரைகுறையாக எனக்கு அறிமுகமானார் என்பதை நினைவுக்கூறுகின்றேன்.

அரசியல் காரணங்களால், சில நபர்கள் கைதாகின்றார்கள். அவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகின்றது. வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொருவரையும் சுடுகின்றார்கள். தன்னுடன் நிற்கவைத்திருக்கும் மனிதர்கள் ஒவ்வொருவராய் சுடப்படுவதை அந்த மனிதன் பார்க்கின்றான். அடுத்ததாய் சுட வேண்டிய மனிதனை நோக்கி துப்பாக்கி குறிவைக்கப்படுகின்றது. சாகப்போகின்ற மனிதனுக்கு வாழ்வில் எல்லாம் முடிந்ததாய் தோன்றுகின்றது. கடைசி நொடியில் அந்த மனிதனுக்கு விடுதலை கிடைக்கின்றது. அந்நொடி அந்த மனிதனின் வாழ்வை புரட்டிப்போடுகின்றது. பின்னாளில் உலக இலக்கியத்தில் தனக்கென்ற அடையாளத்தை அடைந்த தஸ்தயெவ்ஸ்கிதான் அந்த மனிதன்.

இப்படித்தான் ரொம்பவும் மேலோட்டமாக தெரிந்துக் கொண்டேன். அப்போதிருந்தே அவரின் எழுத்துகளை வாசிக்க தேடினேன். கண்ணுக்கு கிட்டியதெல்லாம் மிகவும் தடித்த புத்தகங்கள். அதோடு அதிக பணம் கொடுத்து வாங்கும் சூழலிலும் நான் இல்லை.  வாசிப்பு வேறு பக்கம் நகர்ந்துக் கொண்டே இருந்தது. அதன் பிறகு எஸ்.ராவின் கட்டுரைகளில் டால்ஸ்டாய் மற்றும் தஸ்தயெவ்ஸ்கி பற்றி அதிகம் தெரிந்துக் கொள்ளவும் அவர்களின் படைப்புகளைப் பற்றி புரிந்துக் கொள்ளவும் முடிந்தது.

அவர்களின் படைப்புகளை தேட ஆரம்பித்தேன். அதற்காக சேமிக்கவும் ஆரம்பித்தேன். முதலில் அவர்களின் கதைகளை வாசிக்கத்தொடங்கினேன். ஆனால் மனம் என்னவோ தஸ்தயொவ்ஸ்கி மீதே மையம் கொள்ளத் தொடங்கியது. அந்த மனிதனிடம் என்னமோ இருப்பதாக மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.

அப்போதுதான் தஸ்தயொவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’  நாவலை வாசித்தேன். அதில் உள்ள காதல் முதலில் பிடிபடவில்லை என்றாலும் அதற்கான இடைவெளியைக் கொடுத்த போது புரிந்துக்கொள்ள முடிந்தது. 1821-ல் பிறந்த தஸ்தயெவ்ஸ்கிக்கு இவ்வாண்டு 200ம் ஆண்டு பிறந்த நாள் வருவதை கனலி.காம் இணைய பக்கம் மூலம் அறிந்தேன். மேலும் அவரது படைப்புகளை தேட அச்செய்தி உற்சாகத்தைக் கொடுத்தது.

அப்படித்தான் ‘தஸ்தயெவ்ஸ்கி கதைகள்’ புத்தகத்தை எடுத்தேன். எம்.ஏ.சுசீலா அவர்கள் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். இப்புத்தகம் மட்டுமல்லாது அவர், தஸ்தயெவ்ஸ்கியின் முக்கியமான இதர படைப்புகளை தமிழாக்கம் செய்துள்ளதை அறிந்து ஒவ்வொன்றையும் சேகரித்து வருகின்றேன்.

இனி வாசிப்பு அனுபவத்திற்கு செல்வோம். இந்த புத்தகத்தில் மூன்று கதைகள் உள்ளன. அவை,

 

1.    கிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்

2.    நேர்மையான திருடன்

3.    ஒரு மெல்லிய ஜீவன்

 

முதல் கதை, ‘கிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்’ அளவில் சிறியது. ஆனால் அது இன்றளவும் நாம் சந்திக்கும் சிக்கலை சுற்றியே வருகின்றது. பெண்ணின் எதிர்காலத்தை யார் நிர்ணயிக்கின்றார்கள். அவளின் எதிர்காலம் என்பது யாரை சார்ந்துள்ளது என்கிற அக கேள்வியைக் கொடுக்கின்ற கதை. பெற்றோர் கௌரவத்திற்காகவும் பணத்திற்காகவும் மகளை பணக்காரனுக்கு திருமணம் செய்துக் கொடுப்பதுதான் கதை. கதை சொல்லப்பட்ட விதம் அத்தனை நுணுக்கமாக இருந்தது. கதாப்பாத்திரங்களின் வடிவமைக்கு அவர்களின் குணநலன்களை காட்டிவிடுகின்றது. இறுதியாக அந்த பெண்ணின் வாழ்க்கையை நினைத்து நம்மை வருந்தமடையும் செய்கின்றது.

இரண்டாவது கதை, ‘நேர்மையான திருடன்.’ கதையின் தலைப்பு நீதி கதைகளுக்கு ஏற்றார் போல அமைந்திருப்பது மறுப்பதற்கில்லை. ஆனால் இன்று வாசிக்கையில்; வேறொரு பரிணாமத்தைக் கொடுக்கின்றது. ஒருவன் திருடனாக இருக்கும் போது நேர்மையாக இருக்க முடியுமா? ஒருவன் நேர்மையை கடைபிடித்தால் அவனால் திருட முடியுமா? என்கிற கேள்விகளுடந்தான் கதையை வாசிக்க ஆரம்பித்தேன். கடைசி வரி வரை அந்த கேள்வி பின் தொடர்ந்து வரவும் செய்தது. எந்த குற்றவாளியும் முழுமையான குற்றவாளியாக இருப்பதில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டுதான் வாசித்து முடித்தேன். குடிகாரனாக அறிமுகம் ஆகி திருடனாக தெரிய வரும் மனிதனுக்கு நம்மை அழவும் செய்துவிடுகின்றார் ஆசிரியர்.

மூன்றாவது கதை, ‘ஒரு மெல்லிய ஜீவன்’ . புத்தகத்தில் சற்றே நீள்மான கதை. நீளமான கதை என சொல்வதைக் காட்டிலும் ஒரு மனிதன் நம்முடன் செய்யும் அக உரையாடல் என்பது பொருத்தமாக இருக்கும். நம்மையும் பல இடங்களில் குற்றவுணர்ச்சிக்கு தள்ளிவிடும் உரையாடல் அது. இக்கதையைப் பற்றி மேலும் பேசினால் என்னுள் இருக்கும் இன்னொரு நான் என்னும் குற்றவுணர்ச்சிகளின் உரு வெளிவந்துவிடும் என்கிற அச்சத்தையும்  அதனால் என்ன நானும் மனிதன் தானே, தவறுகள் செய்வதும் பின் வருந்துவதும் அத்தனை பெரிய குற்றமல்ல என சொல்லிக்கொள்ளவும் செய்கின்றேன்.

மனதின் இருளை கண்டுகொள்ளும் அதே சமயம் அதனை வெளிச்சம் நோக்கி அனுப்பி வைக்கும் தூதுவன் போலவே தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்துகளைப்  பார்க்கிறேன்.  மனம் எப்படி சமாளிக்கும் எப்படியெல்லாம் சமாதானம் சொல்லிக்கொள்ளும் எங்கே பிடிபடும் என யாரும் கேள்வி கேட்டால், இந்தா பிடி என ‘ஒரு மெல்லிய ஜீவன்’ என்கிற கதையை கொடுத்துவிடுவேன்.

தஸ்தயெவ்ஸ்கியை வாசிக்க நினைப்பவர்கள் இந்த புத்தகத்தில் இருந்து தொடங்கலாம். மொழியாக்கம் செய்தது போல அல்லாமல், தஸ்தயெவ்ஸ்கி தமிழிலேயே எழுதியது போல சிரத்தை எடுத்து மொழியாக்கம் செய்துள்ளார் எம்.ஏ.சுசிலா. அவருக்கு நன்றியும் அன்பும்.


 #தயாஜி

#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


- ஊதா நிற பட்டாம்பூச்சிகள் -

 #குறுங்கதை 2021 - 12

- ஊதா நிற பட்டாம்பூச்சிகள் -

    எங்கிருந்து வந்தன என யோசிக்க முடியவில்லை. அத்தனை பட்டாம்பூச்சிகளை ஒரு சேர பார்த்தப்பின் வேறெதை யோசிப்பது. சின்ன வயதில் பட்டாம்பூச்சி பிடிக்க செல்லும் சிறுவர்களின் மனநிலைக்கு ஆளாகிவிட்டோம். ஒவ்வொருவரும் குதித்து குதூகலம் அடைந்தார்கள்.

    ஒவ்வொருவர் மீதும் பல பட்டாம்பூச்சிகள் அமர்ந்துவிட்டு சிறகசைக்கின்றன. கட்டைவிரல் அளவு பட்டாம்பூச்சிகள். ஊதா நிற சிறகை படபடக்கும் போது மேலும் அழகாகின்றன.

    என் கைவிரலில் கூட ஒரு பட்டாம்பூச்சி அமர்ந்தது. சில நொடி தாமதத்தில் பல பட்டாம்பூச்சிகள் என் மீது வந்தமர்ந்தன. உடல் முழுக்க ஊதா சிறகு முளைத்தவன் போல மிதக்கின்றேன். கனவாக இருக்குமோ என யோசிக்கவும் செய்தேன். சுற்றிலும் மனிதர்கள் ஊதா சிறகை அசைத்து மகிழ்ந்துக் கொண்டிருந்தார்கள்.

    மெல்ல மெல்ல வித்தியாசமான வாசனையை உணர்ந்தேன். உணர்ந்தோம். ஏதோ விபரீதம் ஏற்படப்போவதாக உணர்ந்தேன். உணர்ந்தோம். ஒவ்வொருவரும் இன்னொருவரிடம் பேச முயன்றோம். யாருக்கும் எதுவும் கேட்கவில்லை. பேச முடியவில்லை. நாக்கில் ஏதோ ஒட்டிக்கொண்டது. வாய் திறக்க முடியவில்லை.

    உடல் பலமிழந்தது. கால்கள் தரையில் படவில்லை என உணர்ந்த சமயம். கட்டைவிரல் அளவு சுருங்கினோம். மிதக்க ஆரம்பித்தோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஊதா நிற மேகம் சூழ்ந்தது போல தெரிகின்றது.

    எல்லோரும் ஊதா நிற சிறகை அசைத்துக் கொண்டே அடுத்த இலக்கை நோக்கி படபடக்கலானோம்.

#புத்தகச்சிறகுககள்_வாசிப்பாளர்_குழு 

- மாணிக்கங்களும் பாட்ஷாக்களும் -

 #குறுங்கதை 2021 - 11

- மாணிக்கங்களும் பாட்ஷாக்களும் -

    இருவரும் நெருங்கிய நண்பர்கள். மாணிக்கம் கொஞ்சம் பயந்த சுபாவம். பாட்ஷா எதைப்பற்றியும் கவலை இல்லாதவன். அதே சமயம் துடுக்குத்தனம் உள்ளவன்.

    இப்படித்தான் விளையாட்டுத்தனமாய் என்றோ எப்போதோ ஏதோ செய்துவிட்டான் பாட்ஷா. ஏற்கனவே சில முறை பிடிபட்டவன் என்பதால் இம்முறையும் பிடிபட்டான். இப்போது அவனுடன் வெறுமனே நடந்துக் கொண்டிருந்த மாணிக்கமும் பிடிபட்டான்.

    மாணிக்கத்திற்கு எந்த குற்ற பின்னணியும் இல்லை என்பது உறுதியானது. இருந்தும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

    விசாரணை ஐந்து நாட்களாக தொடர்ந்தது. ஆறாம் நாள் பாட்ஷா வெளியானான். நேராக தன் நண்பன் மாணிக்கத்தைப் பார்க்கச் சென்றான். தன்னால் சம்பந்தமே இல்லாமல் மாணிக்கமும் விசாரணைக்கு அழைத்து வந்ததில் தன் வருத்தத்தை சொல்ல நினைத்தான்.

    மாணிக்கத்தின் வீடு இன்று வேறுமாதிரி இருந்தது. வழக்கம் போல உள்ளே சென்றான். அம்மா ஒரு மூலையில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தார். அங்கு, மாணிக்கத்தின் புகைப்படத்தில் மாலை அணிவித்திருந்தார்கள்.

    பாட்ஷா நிலைகுத்திப்போனான். அன்று விசாரணையில் மாணிக்கத்திற்கு இதற்கும் எந்த சம்பந்தம் இல்லை என தான் சொன்னதும், அவனை விட்டுவிடுவதாக சொல்லித்தான் பாட்ஷாவை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். ஐந்து நாட்களில் அப்பாவி பாட்ஷாவிற்கு என்ன ஆனது என அவனுக்கு புரியவில்லை. அவனுக்கும்.....

- உயிரோவியம் -

 #குறுங்கதை 2021 - 10


- உயிரோவியம் -

    இன்னும் இரண்டு நிறுத்தங்கள்தான் உள்ளன. இறங்க வேண்டியவர்களுக்கு ஆர்வம் அதிகமானது. நல்ல வேளையாக இரயிலில் ஆட்கள் இன்று அதிகமில்லை. இருப்பவர்கள் அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இறங்குவதற்குள் வரைந்துவிடுவானா?

    அந்த ஓவியன் எதனையும் கண்டுகொள்ளவில்லை. இவ்வளவு அழகாய் ஒருத்தி எதிரில் அமர்ந்திருக்க கவிஞனுக்கும் ஓவியனுக்கும் கண்ணும் கவனமும் வேறெங்கே செல்லும். ஒரு நொடியும் தாமதிக்காமல் வரைய ஆரம்பித்தான் ஓவியன்.

    முதலில் அவனின் ஆடையையும் நடவடிக்கைகளையும் விசித்திரமாய் பார்த்தவர்கள் மெல்ல மெல்ல அவன் வரைந்துக் கொண்டிருந்த ஓவியத்தால் கவரப்பட்டார்கள்.

    எந்த சலனமும் இன்றி நொடிக்கு நொடிக்கு நொடி எதிரில் எதிர்ப்பட்ட தேவதையைப் பார்த்துப்பார்த்து வரைந்துக் கொண்டிருந்தான். ஓவியம் முழுமையடைவதற்குள் தத்தம் நிறுத்தம் வந்தவர்கள் அரைகுறை மனதுடனும் பலப்பல கேள்விகளுடனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே இறங்கினார்கள்.

    ஓவியன் வரைந்துக் கொண்டே இருந்தான். கடைசி நிறுத்தம் வரப்போகிறது. பயணிகளுக்கான அறிவிப்பை செய்துவிட்டார்கள். ஓவியம் முழுமையானது.

    பயணிகள் அனைவரும் ஓவியத்தை லயித்து பார்த்தார்கள். பைத்தியத்தால் இப்படி வரைய முடியுமா என்கிற சந்தேகமும் சிலருக்கு வந்தது. எழுந்த ஓவியன் எதிரில் இருப்பவளிடம் சென்றான்.

அவள் எழுந்தாள். சிரித்தாள். ஓவியத்தை வாங்கிக்கொண்டாள்.

    யாருமில்லாத இருக்கையில் ஓவியன் ஒற்றையாளாய் நின்றுக் கொண்டு பேசுவதை எல்லோரும் அதிர்ச்சியாய் பார்க்கலானார்கள். அவன் முன், வெற்றிடத்தில் ஓவியம் அப்படியே மிதந்துக் கொண்டு நிற்பது அதைவிட ஆச்சர்யத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்