- மயிற்பீலி -
பழைய புத்தகக்கடையில்
வாங்க வேண்டிய புத்தகம்
போல
வாங்கவே கூடாத புத்தமும்
இருக்கிறது
அப்படியொன்றை வாங்கிவிட்டேன்.
டைரி
பழைய டைரி
யாரோ ஒருவரின் பழைய டைரி
அழகிய வேலைப்பாடுகளை
முகப்பில் கொண்ட
தடியான டைரி
முதல் பாதி
அப்படியே இருக்க
மறு பாதி முழுக்கவும்
எழுதி எழுதி
எழுதியதை திருத்தி திருத்தி
திருத்தியதை கிறுக்கி கிறுக்கி
பல வண்ண மைத்துளிகள்
தண்ணீரோ கண்ணீரோ
பட்டு
ஏடுகள் முழுக்க
பரவியிருந்தன
எழுதி முடித்தவன்
ஏனோ கிறுக்கியிருக்கிறான்
கிறுக்கி முடித்தவன்
ஏதற்கோ அழுதிருக்கிறான்
அழுது முடித்தவன்
ஏதோ ஓரிடத்தில்
தன்னை மறைத்திருக்கிறான்
இடைபட்ட இடத்தில்
ரொம்ப
நாள்பட்ட மயிற்பீலி
ஒன்று
இன்னமும் உயிரோடு இருக்கிறது
நான் தொட்டதும்
கைகால்களை அசைத்து
பரவசமாகியது
அதற்காகவேணும்
அவன் உயிரோடிருப்பான்
என நம்புகிறேன்
சொல்ல முடியாத
முதற்பகுதி வாழ்க்கைக்கும்
சொல்லிச்சொல்லி அழுத
மறுபகுதி வாழ்க்கைக்கும்
நிகழ்காலத்தை குதூகலிக்கும்
மயிற்பீலிக்கும்
என்னை
சாட்சியாக ஆக்கிவிட்டு
தன்னை எங்கோ
மறைத்து கொண்டான்
டைரி எழுதியவன்
அப்படித்தானே
நானும் உங்களை
என் கவிதைகளுக்கு
சாட்சியாக நிற்க வைக்க
எழுதிக்கொண்டிருக்கிறேன்...
0 comments:
கருத்துரையிடுக