பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

ஏப்ரல் 10, 2021

புத்தகவாசிப்பு_2021 ஆரண்யம்

புத்தகவாசிப்பு_2021 ஆரண்யம்

தலைப்பு – ஆரண்யம்

வகை – கவிதை 

எழுத்து – கவிஞர் கயல்


   சமீபத்தில் வாசித்த கவிதை தொகுப்பு. ஆரண்யம். எழுத்து கவிஞர் கயல். மிகவும் ரசித்த கவிதை தொகுப்பு. ஆரண்யம் என்றால் வனம். காடு. இந்த புத்தகத்தின் தலைப்பு உள்ளடக்கத்திற்கு ஏற்ற தலைப்பு. வாசிக்கையில் கவிஞர் நம் கையைப் பற்றிக்கொண்டு வனத்திற்கு அழைத்துச் செல்வதாகவே தோன்றியது.

   எல்லோருக்கும் தங்களின் பால்யம் குறித்த நீங்காத நினைவுகள் இருக்கவே செய்யும். அதில் காடும் காடு சார்ந்த அனுபவங்களும் குறைவின்றியே இருக்கும். இக்கவிதைகள் காடு மீதான எனது நினைவுகளை மீள் செய்துள்ளது. காடு என்பது வெறும் காடு அல்ல என திரும்பத் திரும்பச் சொல்கிறது.

   கவிஞர் வனத்தை தாய்மை கொண்டு அணுகுகின்றார். குழந்தைபோல ரசிக்கிறார். தன்னை வண்ணத்துப்பூச்சியாக்குகிறார். தன்னை நதியாக்குகிறார். தன்னை மரமாக்குகிறார். நிறைவாக தன்னையே வனமாக மாற்றிக் காட்டுகின்றார்.

   அது வனம் மட்டுமல்ல நம் வாழ்வு. இயற்கையின் அன்னை. அதுவே இறைவன். இறைவனுக்கும் காதலுக்கும் இடைபட்ட இடைவெளியை வனம் நிரப்புவதை எழுதுகின்றார்.

   வனத்தைச் சொல்லும் போது யானையை மறக்க முடியுமா? இத்தெகுப்பில் யானை பற்றிய கவிதைகள் சில உள்ளன.

தன்னை அண்ணாந்து

பார்க்கும் சிறுமி,

தவறவிட்ட தன் குட்டியை நினைவூட்ட

சுரக்கும் பால் மடி கனக்கத்

தள்ளாடியபடி ஆசீர்வதிக்கும்

கோயில் யானை

   என்ற கவிதையை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியவில்லை. எனக்கு யானை பிடிக்கும் என்பதால் மட்டுமல்ல. யானையை கவிஞர் காட்டிய தருணத்தினால். நமக்கு தெரிந்ததெல்லாம் யானை மட்டுமே. அது யானைமட்டுமல்ல அதுவும் தாய்தான்.  

   எத்தனை பறவைகளின் பெயர்களை மறந்துவிட்டோம் என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது. கவிஞர் சொல்லும் ஒவ்வொரு பறவையின் பெயரும் குற்றவுணர்ச்சியைக் கொடுக்கிறது.

சாவுக்குருவி,

சாத்தான் குருவியென

வசவுகள் வாங்கி

சகுனத்துக்கு

ஏவல் பலிக்குப்

போக எஞ்சியவை மட்டுமே

வாழ்கிறோமென

நள்ளிரவில்

கதறும் ஆந்தைக் குரலை

உற்றுக் கேட்கையில்

ஒலிக்குமொரு கேள்வி

“இதில் , யார்

சாத்தான்?” என்று.

   இனி ஆந்தையின் அலறல் சத்தம் அபசகுணமாய் அல்ல நம் மனசாட்சியின் குரலாகவே ஒலிக்க வைக்கிறார் கவிஞர்.

   மனிதனின் சுயநலம் எத்தனையோ இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு இலாபம் கிடைக்க தான் முன்னேறி நடக்க எதனையும் செய்ய துணிந்துவிட்ட மனிதனிடம் இல்லாத குற்றவுணர்ச்சியை தேடவைக்கும் கவிதையாகவே,

தளும்பிச் சிரிக்கும் ஆறு

கிறங்கி நீந்தும் கூழாங்கற்கள்

வரவேற்கும் மரங்கள்

வனத்தின் குரலாய்ப்

புள்ளினத்தின் பாடல்

என

இருந்தன காடுகள்

மனிதன் கோடரி

செய்யக் கற்கும் வரை

   என்கிற கவிதையைச் சொல்லலாம். இக்கவிதைக்கு சற்றும் குறைவில்லாத வகையில் இன்னொரு கவிதையும் உண்டு. அது மனிதனின் சுயநலத்தில் தனக்கும் பங்குண்டு என மரங்கள் அழும் கவிதை. அது;

ஆதிக் கோடரிக்

கிளையொன்றின்

பாவந்த் தீர்க்க

இன்னும் எத்தனை

சிலுவை

எனக் கேவியழுகிறது

ஒவ்வொரு மரமும்

வெட்டுருகையில்.

போதும்….

   தன்னை முழுவதுமாய் இன்னொன்றாய் ஆக்கிவிட மனிதர்களால் முடிகிறது.  ஆனால் கவிஞர்களால் மட்டுமே அதனை முழு உணர்வுப்பிரக்ஞையுடன் செய்ய  முடிகிறது. தன்னை மரமாக மாற்றிக் காட்டும் கவிஞர் அதன்  வலியை இப்படிச் சொல்கிறார்.

என் உயிரைக் கொல்கிறது

நம்பிக்கையில்லாத் தீர்மானமாய்

எம் பக்கத்து மரங்களிலெல்லாம் பறவைகள்

வந்தமராதிருப்பது…

   மரத்திற்கு மட்டுமல்ல நமக்கும் கூட புறக்கணிப்பின் வலியை இக்கவிதை நினைவுப்படுத்துகிறது.

   மேலும் ஒரு கவிதையில் மரத்தைப் பற்றி சொல்கிறார் ஆறு வரி கவிதையில் ஆறுவரிகளுமே கவிதைகளாக பரிணமிக்கும் அதிசயத்தை காண முடிகின்றது, அது

-மரம்-

இறைமகளின் தரைச் சிங்காதனம்

தாக வேரின் மழைத் தூது

வனமங்கை இடையாடும் மரகதச் சீலை

எவர் அடியும் பணியாத் தலை

புவியில் பொன்வண்ணப் பூ விசிறி

பறவை ஒலியில் பேசுந் தெய்வம்

   மீண்டும் ஒரு முறை இந்த ஒவ்வொரு வரியும் என்னை எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. ஒரு புகைப்படம் போல, ஒரு அமானுஷ்யம் போல, ஒரு தேவதை போல, ஒரு வரம் போல.

   இத்தொகுப்பில் இன்னும் பல கவிதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் புதிதான உலகை நமக்கு காட்ட முற்படுகின்றது. ஆனால் அவ்வுலகில்தான் நாம் வாடகை கட்டாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மீண்டும் நியாபகப்படுத்துகின்றது.

எதிர்ப்பட்ட பின்

கடப்பது கடினம்

காதல்,

கடவுள்,

காடு

   என்னும் இக்கவிதை, இத்தொகுப்பை சுருக்கிச் சொல்வதாகவேப் படுகிறது. ஒரு முறை இக்கவிதைகளை வாசித்த பின், அது கொடுக்கும் நினைவலைகளை சாதாரணமாய் கடந்துவிட முடியாது. அவ்வகையில் கவிஞருக்கு என் நன்றியும் அன்பும்….

அன்புடன் #தயாஜி

மார்ச் 27, 2021

வெறிநாய்கள்

 


        இன்றும் தேடலானாள். ஆனால் கொஞ்சம் மும்முரமாக. அந்த நாய்களின் குரைப்புச் சத்தம் அவள் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. காதில் புகுந்த சத்தம் மூளையை குடைவதாக உணர்ந்துக் கொண்டிருக்கிறாள். இப்படியாக குரைக்கத் தெரிந்த நாய்களை அவள் இதுவரையில் பார்த்திருக்கவில்லை. இன்னும் குளிக்கவில்லை. வாசலுக்கு வந்து காத்திருந்த அம்மாவை திட்டிவிட்டுதான் உள்ளே வந்தாள். வழக்கமாக நடப்பதுதான். அம்மா அடுத்து செய்ய வேண்டியவற்றை செய்யலானார். மேஜை மீது சுலோச்சனாவுக்கு வேண்டிய இரவு உணவை வைத்தார்.  மகளின் அறையை ஒரு முறை தட்டி சாப்பிட அழைத்தார். கணினி திரையில் தேடிக்கொண்டிருந்தவள்,

     “எனக்கு தெரியும்மா…. இருங்க வரேன்… இப்ப அது ஒன்னுதான் இங்க குறைச்சல் இங்க..”

       மேற்கொண்டு அம்மாவிற்கு செய்ய ஒன்றுமில்லை. மேஜை மீது வைத்திருந்த உணவுகள் சரியாக மூடப்பட்டுள்ளதா என பார்க்கலானார். சமையல் அறை நாற்காலி மீது வைத்திருந்த சிறிய துணியை எடுத்தார். மேஜையை இன்னொரு முறை துடைத்தார். துடைத்தவர் அங்கேயே அமர்ந்தார். சுலோச்சனாவின் இந்த  குணத்திற்கு தானும் ஒரு காரணம் என நினைத்து வருந்தினார். அவள் எத்தனை அன்பானவளாக இருந்திருக்கிறாள் என்பதை அம்மா இன்னொரு முறை நினைத்துப் பார்க்கலானார். காலமும் சூழலும் எத்தனை மாற்றங்களைப் போகிற போக்கில் செய்துவிடுகின்றன.

        அப்பா இல்லாத குடும்பத்தை காப்பற்றத்தான் கடவுள் அவளுக்கு தம்பியைக் கொடுத்திருக்கிறார் என்பார். அதற்காகவே அம்மா, தம்பி மீது அதிக அக்கறை காட்டினார். சுலோச்சனாவிற்கும் அது புரிந்தே இருந்தது. அவளும் தம்பிக்காக பலவற்றை விட்டுக்கொடுத்தாள். ஒரு முறை தனக்கு கிடைத்த வெளிநாட்டு மேற்படிப்பிற்கான வாய்ப்பை தம்பிக்காகவே விட்டுக்கொடுத்தாள். அம்மாவால் வீட்டு வேலையைத் தவிர வெளி வேலை செல்ல முடியாது செய்யவும் முடியாது. அப்பாவின் மரணம் அம்மாவை மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் பாதித்து இருந்தது. அம்மா அதிக தூரம் கூட நடப்பது கூடாது என மருத்துவர் சொல்லிவிட்டார். யோசித்துப் பார்த்தால், நாள் ஒன்றுக்கு  அம்மா வீட்டில் நடந்த நடையை கணக்கிட்டாலே கூட தாமானை இரண்டு முறை சுற்றியிருப்பார்.

       சுலோச்சனாவிற்கு தம்பி மீது பாசம் இல்லாமலில்லை. தனக்காக செலவு செய்வதைக் காட்டிலும் தம்பியின் தேவைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தாள். தம்பி மேற்படிப்பு படிக்கதற்காக தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டவள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். அவளின் வேலையிடத்தில், வேலையின் நுணுக்கங்கள் தெரியாதவர்கள் கூட இவளுக்கு மேலதிகாரிகளாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் தங்களுக்கு பின்னால் வைத்திருக்கும் படிப்பின் பெயர்தான். என்னதான் தான் அவ்வாறு தன் பெயருக்கு பின்னால் எந்த படிப்பின் பெயரையும் வைத்திருக்காவிட்டாலும், அவள் சொந்தமாகவே கற்று தேர்கிறவள், கற்றுக்கொண்டிருப்பவளும். எப்படியும் கொஞ்ச நாளில் தம்பி குடும்ப பொறுப்பை கையில் எடுத்துக் கொள்வான். தான் விட்ட படிப்புகளையெல்லாம் மீண்டும் தொடங்கலாம் இதே அலுவலகத்தில் தனக்கு தகுதியான இடத்தில் அமர்ந்துக் கொள்ளலாம் என தினமும் எண்ணிக்கொண்டிருந்தாள். அம்மாவும் அவளும் இதையேதான் அடிக்கடி பேசிக்கொண்டார்கள்.

       அவர்களுக்கான விடியல் ஒரு நாள் வந்தது. விடியவும் செய்தது. ஆனால் வெளிச்சம் இந்த குடும்பத்தில் விழவில்லை. மாறாக மேலும் இருள்தான் சூழத்தொடங்கியது.  தம்பியைக் காணவில்லை. யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டான். எங்கே போனான் என்ன ஆனான் என்பது யாருக்கும் தெரியவில்லை. தலை நிமிர வேண்டிய குடும்பத்தின் கழுத்தில், தான் நம்பியிருந்த தங்க சங்கிலி அறுந்து விழுந்தது மட்டுமின்றி கழுத்தையும் சேர்த்து அறுத்துவிட்டு விழுந்தது.

        அழுது முடிக்கக்கூட அதிக நேரம் கிடைக்கவில்லை. அவள் இன்னொரு சிக்கலை சந்தித்தாள். அலுவலகத்தில் அவளின் வேலை மீது குற்றச்சாட்டுகள் வரத்தொடங்கின. அவள் எழுதும் கடிதங்களில் எழுத்துப்பிழைகள். முறையாக கோப்புகளை அடுக்காததால் சில இழப்புகள் என ஒன்றின் பின் ஒன்றாக வந்தன. இச்சமயம் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடந்துக் கொண்டிருப்பதாக அவளின் ஆழ்மனம் சொல்லத்தொடங்கியது. தாமதிக்காது மற்ற இடங்களுக்கு வேலைக்கான மனுவை அனுப்பினாள். அவள் எதிர்ப்பார்த்த சம்பளத்தில் வேலையும் கிடைத்தது. ஆனால் வீட்டிலிருந்து தூரம். இப்போதைக்கு பொது பேருந்தில் செல்லலாம். பழைய வேலையிட சிக்கல்களில் இருந்து தப்பித்தாள். இன்னொரு சிக்கலில் சிக்கப்போவதை நினைத்துப் பார்க்கவில்லை.

       காலையில் கிளம்புகிறவள் திரும்ப வீடு வருவதற்குள் இருட்டிவிடும். வீட்டில் இருந்து கொஞ்சம் தூரம் நடந்துதான் பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல வேண்டும். இரவு அந்த வழியில் வீடு திரும்புவதுதான் அவளுக்கு பயத்தைக் கொடுக்கத் தொடங்கியது. அவ்வழியில் சில காலி வீடுகள் புதர் மண்டிக் கிடக்கின்றன. அங்கு சாலை விளக்கும் இல்லை. பேருந்தை விட்டு இறங்கியவுடன் மடமடவென நடந்துச் செல்வாள். சமயங்களில் யாரோ அவளை அழைப்பு போல தோன்றும். யாரோ தன்னை பின் தொடர்வதாகவும் தோன்றும்.  

         தினமும் இவ்வழியில் நடப்பது அவளுக்கு பொரும்பாடாய் இருக்கிறது.  தனது கைப்பையில் இருக்கும் ‘பெப்பர் ஸ்ப்ரே’-வை எடுத்து கையில் இறுக்கமாக பிடித்துக் கொள்வாள். அவளின் நடை வேகம் கூடும். வீடு வருவதற்குள் வியர்த்து வடிவாள். அம்மாவிடம் இதனைச் சொல்லவும் முடியாது. உடனே அவசரமாக காரை வாங்க சொல்லுவார். தினமும் பேருந்து நிலையம் வரை தான் வந்து காத்திருப்பதாக சொல்லுவார். அம்மாவின் உடல் நிலைக்கு இதுவெல்லாம் சரியாக வராது. தம்பியின் மேற்படிப்பிற்காக முன்னமே வாங்கியுள்ள வங்கி கடனால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்காவது வேறு எதற்கும் அவளால் கடன் வாங்க முடியாது எங்கிருந்து கார் வாங்குவது.

       இதற்கிடையில்தான் அவள் ஒன்றை கேள்விப்பட்டாள். அவள் வீட்டிற்கு வரும் இருள் சூழ்ந்த பகுதியில் சில வெறி நாய்கள் சுற்றிக்கொண்டிருப்பதாகவும், சிலரை கடித்திருப்பதாகவும் பேருத்து நிலையத்தில் ஒருவர் சொல்லிகொண்டிருந்தார். இயல்பாகவே நாய் என்றால் சுலோச்னாவிற்கு பயம்.

       பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது அவளை ஒரு நாய் துரத்தி அவள் கீழே விழுந்துவிட்டாள். நாய் அவளருகில் வருவதற்கு முன்னதாக தம்பி கையில் கட்டையுடன் ஓடி வந்து காப்பாற்ற முயன்றான். பயந்துவிடாத நாய் அவன் மீது பாய்ந்தது. அந்த கலவரத்தில் தம்பிக்கு கன்னத்தில் நகக்கீரல் ஆழமாக பதிந்துவிட்டது. ஆனால் கடையில் கட்டையில் அடி வாங்கிய நாய் ஓடிவிட்டது. நாய்களை நினைக்கும் போதெல்லாம் தம்பியையும் அவன் கன்னத்தில் பதிந்த தழும்பையும் அவளால் நினைக்காமல் இருக்க முடியவதில்லை. அன்று முதல் அவளுக்கு நாய்கள் என்றால் ஒவ்வாது. எத்தனை குட்டியாக எத்தனை அழகாக இருந்தாலும் நாய்கள் என்றாலே அவளுக்கு ஒவ்வாமைதான். அதனால்தான் இரு பெண்கள் இருக்கும் வீட்டில் காவலுக்கு நாய் வளர்க்கச்சொல்லி அம்மா கேட்டதற்கும் மறுத்துவிட்டாள். வீட்டில் இருக்கும் மின்சார அலாரம் நம்மை காப்பாற்றிக்கொள்ளும் என கூறிவிட்டாள்.

     இப்போது தினமும் நடந்து வரும் பாதையில் இப்படி ஒரு சிக்கலை அவள் எதிர்ப்பார்க்கவில்லை. அதனை நினைத்துக் கொண்டு வந்ததால் என்னமோ இன்று பல இடங்களில் நாய்களின் நிழல்களைக் கண்டாள். இந்த இருள் வழியில் சமீபகாலமாக தன்னை பின் தொடர்ந்து வந்ததும் அதில் ஒரு நாய்தான் என்பதை புரிந்துக் கொண்டாள். இதுகளுக்கு ‘பெப்பர் ஸ்ப்ரே’ போதாது வேறு ஏதாவது ‘ஸ்ப்ரே’ தான் தேவை என முடிவெடுத்தாள். வீட்டிற்கு வந்ததும் வராததுமாக அறையில் புகுந்து சாப்பிடக்கூட வராமல் கூகளிடம் நாய்களை விரட்டுவதற்காக ‘ஸ்ப்ரே’ எங்கே கிடைக்கும் என அலசிக்கொண்டிருக்கிறாள்.

      மறுநாள், பேருந்து தாமதமானது. அவளுக்கும் தாமதமானது. வழக்கத்தைவிட சில மணி நேரம் தாமதமாகத்தான் பேருந்து அவளை இறக்கிவிட்டது. விரைந்து நடக்கலானாள். வெறி நாய்கள் நிறைந்த வழியை கடக்க வேண்டும். எதற்கும் கையில் ‘பெப்பர் ஸ்ப்ரே’வை வைத்துக் கொள்ள நினைத்தவள் கைப்பையில் கைவிட்டாள். அது அதில் இல்லை. எங்கே விட்டாள் என நினைத்துப் பார்க்க நேரமில்லை. முழுவதும் பாதுகாப்பற்ற சூழல் அவளை சூழ்ந்தது. மேலும் அவளை பயம் காட்ட அவள் பின்னால் யாரோ நடந்து வருவது போல சத்தம் கேட்டது. அவள் பெயரையும் யாரோ அழைக்கிறார்கள்.

    நடையை  அதிகப்படுத்த முயன்றாள். அச்சமயம் அவன் முன்னே ஏதோ ஒரு பெரிய உருவம் குதித்து நின்றது. அவள் அலறுகிறாள். பின்னால் இருந்து ஒருவன் அவளது வாயை பொத்தி, அப்படியே அவளை தூக்குகிறான். முன்னே குதித்தவன் அவளின் கால்களை தூக்குகிறான். இருவரும் அவளை பக்கத்தில் இருக்கும் காலி வீட்டிற்கு தூக்கிச் செல்கிறார்கள். யாரோ பின் தொடர்வதாக தெரிந்துக் கொண்ட ஒருவன் “யார்டா அது?” என சத்தமிட்டான். அப்போது அந்த மூன்றாவது ஆள்…!

       ஒருவனின் காலை கடித்தது. அவளை பிடித்திருந்த கைகள் விட்டன. இமைக்கும் நேரத்தில் வெறி பிடித்த நாய் இருவரையும் கடித்து குதறத்தொடங்கியது. சுலோச்சனாவின் கண் முன்னே இருவரும் அலறிக்கொண்டு ஓடினார்கள். அவளுக்கும் என்ன செய்வது என தெரியவில்லை. சற்று நேரத்தில் அந்த வெறி நாய் அவளருகில் வந்து நின்றது. பயத்துடன் மெல்ல மெல்ல எழுந்தாள். நாய் வாலை ஆட்டியது. தனது ஆடையையும் தலை முடியையும் சரி செய்துக் கொண்டாள். மெல்ல நடக்கலானாள். அந்த நாயும் அவள் பின்னே நடக்கலானது.

       வழியில், மீண்டும் யாரோ அவள் பெயரைச் சொல்லி அழைக்கிறார்கள். அந்த குரல் அவளுக்கு மிக நெருக்கமான குரலென மனம் சொல்லிக்கொண்டது. அப்படியே நின்றுவிட்டாள். யாரோ பின்னால் நிற்பதை உணர்ந்தாள். திரும்பிப் பார்க்கிறாள். அந்த நாய் மட்டுமே வாலை ஆட்டிக்கொண்டிருந்தது. அதன் கன்னத்தில் எப்போதோ கடிபட்ட தழும்பொன்று பளிச்சிட்டது.

-       தயாஜி

     

 

மார்ச் 10, 2021

'மலேசிய நாவல்கள்’ – ஆறாவது கட்டுரையை முன் வைத்து


‘மலேசிய நாவல்கள்’ – ஆறாவது
கட்டுரையை முன் வைத்து

     தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார். 

   ஆறாவது கட்டுரையாக, ‘சென்று சேராத முன்னோடி ’ என்ற தலைப்பில் ஐ.இளவழகு குறித்து எழுதியுள்ளார்.லட்சியவாதம் என்கிற பதம் இங்கு எவ்வாறு புரிந்துக்கொள்ளப் படுகின்றது என்கின்ற அறிமுகத்துடன் கட்டுரை தொடங்குகின்றது. 

1. சமூகப் பொறுப்புணர்வை அதிகம் வலியுறுத்துவது.
2. சித்தாந்த பலம் இல்லாத எழுச்சிக்கனவுகளை உருவாக்குவது.
3. அன்பு, கருணை, காதல், மனிதாபிமானம், என அனைத்திலும் மிகையான வெளிப்பாடுகளைக் கொண்டது. 
4. வாழ்வை எளிமைப்படுத்திக் காட்டுவது.

என இலட்சியவாத எழுத்துகளை வரையறை செய்கிறார் கட்டுரையாசிரியர்.

இக்கட்டுரை ஐ.இளவழகு எழுதிய 'இலட்சியப் பயணம்' எனும் 424 பக்க நாவலைப் பற்றி விரிவாக பேசுகிறது.  இந்நாவல் பின்புலத்தை சொல்லும் போது, மலேசிய எஸ்.பி.எம் தேர்வுக்கு தெர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலேசிய நாவல் என்கிறார். அதோடு மாணவர்களின் பிரதிக்காகத் தணிக்கை செய்யப்பட்டு சுருக்கப்பட்டதையும் குறிப்பிடுகின்றார்.

இந்நாவலின் சிறப்பம்சமாக, 
1. தோட்ட வாழ்வின் அத்தனை அம்சங்களையும் விரிவாக சொன்ன பாங்கு.
2. மையமாக மாதவன் எனும் கதாபாத்திரம் இருந்தாலும் அவனுக்கு ஈடாக அவன் தந்தை ஆண்டியப்பன் மற்றும் இதர கதாப்பாத்திரம் வந்து பல்வேறு மனோநிலைகளை வெளிப்படுத்துகின்றனர்.  

அடுத்ததாக இந்நாவல் கொண்டுள்ள பலவீனப்பகுதிகளை பேசுகின்றார் ஆசிரியர். கதாப்பாத்திரம் அடையும் மாற்றம் குறித்து தெளிவான சித்தரிப்பு இல்லாமை முக்கிய பலவீனம் என்கிறார். 
 
படைப்பாளர்களுக்கு அரசியல் புரிந்துணர்வு எத்தனை அவசியம் என கோடிட்டுக் காட்டுகின்றார். அதுதான் தெரிந்தோ தெரியாமலோ படைப்பில் வெளிவந்துவிடுகிறது. பலர் வழிந்தே தங்களில் அரசியலை படைப்புகளில் புகுத்துகின்றார்கள். சிலர் தங்களையும் அறியாமல் எழுத்தின் வழி தங்களை காட்டிக் கொடுத்துக் கொண்டுவிடுகிறார்கள். 

ஐ.இளவழகு எழுதியிருக்கும் 'லட்சியப் பயணம்' எனும் இந்நாவல், எழுத்தாளருக்கு தெளிவான அரசியல் பார்வை இல்லாததால் அது அடைய வேண்டிய இடத்தை அடையாமல் சரிந்துவிடுகிறது என்பதனை புரிந்துக்கொள்ள முடிகின்றது.

படைப்பை நோக்கி வைக்கப்படும் விமர்சனம் படைப்பாளரை நோக்கி திரும்புவது இயல்புதான். அதனையும் கவனிக்க வேண்டியுள்ளது. ஆனால் படைப்பாளர் ஒன்றை நம்பி அதனை படைப்பில் புகுத்துகின்றாரா? அல்லது அத்தகைய (அன்றைய)சூழல் அவருக்கு கொடுத்த தெளிவற்ற சிந்தனை படைப்பில் புகுந்துவிடுகின்றதா என கவனிக்க வேண்டியுள்ளது. 

ஏனெனில், சில காரணங்களால் 'இந்நாவல் ஒரு வரலாற்று மோசடி. அதனை எண்ணி எழுத்தாளன் தலைகுணிந்துதான் ஆகவேண்டும்' என்கிறார் கட்டுரையாசிரியர். இவ்வாறு சொல்வது ரசனை விமர்சனத்திற்கு அவசியம்தான என கேட்க தோன்றுகிறது.

ஒருவேளை இந்நாவலில் எழுத்தாளர் புகுத்தியுள்ள அரசியல் பார்வையால் அவர் லாபம் அடைந்து பொருள் ஈட்ட அதனை மேற்கொண்டார் என நிரூபனம் ஆகியிருந்தால் கூட மேற்சொன்ன கூற்றை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். அப்படி நிரூபனம் ஆகிடாத ஒன்றை, எழுத்தாளரின் அன்றைய சூழலில் தெளிவற்ற அரசியல் பார்வையை இன்றைய சூழலில் இருந்து பார்க்கையில் அதனை விமர்சனப்பூர்வமாக அணுகலாமே தவிர  அதனை எழுதியதற்காக எழுதியரை 'தலைகுனிய' சொல்வதெல்லாம் அநாவசியமாகவே தோன்றுகிறது. 

இருந்தும் '..... சிறுசிறு இடையூறுகளால் நாவலைப் புறக்கணிப்பது நம் வரலாற்றின் ஒரு பகுதியைப் புறக்கணிப்பதும் தான்'  என சொல்வதன் வழி இன்றைய தலமுறையினர் இந்நாவலை தேடும் வழி செய்கிறார் கட்டுரையாசிரியர்.


#தயாஜி

பிப்ரவரி 24, 2021

‘மலேசிய நாவல்கள்’ – ஐந்தாவது கட்டுரையை முன் வைத்து‘மலேசிய நாவல்கள்’ – ஐந்தாவது
கட்டுரையை முன் வைத்து

     தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார். 

   ஐந்தாவது கட்டுரையாக, ‘நெடுநாள் உயிர்த்துள்ள நெகிழிப்பூ ’ என்ற தலைப்பில் கா.பெருமாள் குறித்து எழுதியுள்ளார்.

'சிறுகதையில் எழுத்தாளன் வாழ்க்கையின் ஒரு புள்ளியை அறிந்துக்கொள்ள முயல்கிறான். நாவலில் வாழ்வின் எண்ணற்ற திசைகளை ஓர் ஒட்டுமொத்த பார்வையில் தொகுக்கப் பழகுகிறான்.' என நாவல் எழுதுவற்கும் சிறுகதை எழுதுவதற்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தை சொல்லி கட்டுரையை ஆரம்பிக்கின்றார்.  அதோடு ஜெயமோகனின் 'வெள்ளையானை' நாவலை முன்வைத்து மேற்சொன்னவற்றை விளக்குகின்றார்.

கா.பெருமாள் எழுதிய 'துயரப்பாதை' நாவலைப் பற்றி பலவீனமாக எழுதப்பட்டு பலகாலமாக கொண்டாடப்பட்ட நாவல் என்கின்றார். இத்தகையப் பார்வையை இக்கட்டுரையின் தலைப்பிலேயே உணர முடிந்தது.

246 பக்கங்கள் கொண்ட நாவலை நான்கே வரிகளில் சொல்லிவிடுகின்றார். மேற்சென்று நாவலின் பலவீனங்களைப் பேசுகின்றார்.

1958 சங்கமணி நாழிதழில் தொடர்கதையாக வெளிவந்த 'துயரப்பாதை' பின்னர் 1978ம் ஆண்டு நாவலாக வெளிவந்தது. அன்றைய சுழலில் இந்நாவலைப்பற்றி சொல்லப்பட்ட கருத்துகளை வாசிக்கையில் ஒரு பக்கம் அதிர்ச்சியும் இன்னொரு பக்கமும் குழப்பமும் வராமல் இல்லை.

புத்தகத்தில் இக்கட்டுரைக்கு பக்கங்கள் குறைவுதான். சிக்கல் இல்லாமல் வாசிக்கும்படி எழுதியுள்ளார் ஆசிரியர்.

ஒரு காலகட்டத்தில் கொண்டாடப்பட்ட படைப்புகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மீள்வாசிப்பு செய்வதும் அதுபற்றி பேசுவதும் அவசியம் என்பது இக்கட்டுரை வழி முக்கியத்துவம் பெருகின்றது. 

ஆனால் மீள்வாசிப்பில் அப்படைப்பை மட்டுமே கைகொள்ளாமல் அந்நாவல் எழுதபட்ட கால சூழலையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். 

ஏனெனில் ஒரு படைப்பை கொண்டாடும் மனநிலையை புரிந்துக்கொள்ள அது உதவும். அதனை ஒரு போதும் குறைத்து மதிப்பிடலாகாது. 

#தயாஜி

பிப்ரவரி 23, 2021

‘மலேசிய நாவல்கள்’ – நான்காவது கட்டுரையை முன் வைத்து


‘மலேசிய நாவல்கள்’ – நான்காவது
கட்டுரையை முன் வைத்து

     தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார். 

   நான்காவது கட்டுரையாக, ‘முதல் சுடர்’ என்ற தலைப்பில் எம்.குமாரன் நாவல் குறித்து எழுதியுள்ளார்.

    மலேசிய இலக்கியச் சூழலில் நிகழும் அரசியல் போலித்தனங்களால் எழுத்தில் இருந்து விரக்தி கொண்டு விலகியவர் பற்றிய கட்டுரை.போலிகளின் பளபளப்பால் பலரின் கண்கள் கண்டுகொள்ளத் தவறிய சுடர்தான்  எம்.குமாரன். அதற்கு ஏற்றார் போலவே தலைப்பும் அமைந்து விட்டது.

கு.அழகிரிசாமிக்குப் பிறகு நவீன இலக்கியம் என மலேசியாவில் உரையாடல்கள் தொடங்கிய இரண்டாவது காலகட்டத்தில் உருவான முக்கியமான எழுத்தாளர் எம்.குமாரன். 

எழுத்தாளரின் பின்புலத்தையும் அவர் முன்னெடுத்த முயற்சிகளையும் கட்டுரையாசிரியர் சொல்கிறார். இன்றைய தலைமுறைக்கு பயன்மிக்க ஒரு கட்டுரை. 

லட்சியவாதத்தையும் , கற்பனாவாதத்தையும், மிகை உணர்ச்சிகளையும், நம்பி எழுதப்பட்ட மலேசிய நாவல்களுக்கு மத்தியில் 1971-ல் எழுதப்பட்ட இருத்தலியல் தன்மையிலான 'செம்மண்ணும் நீல மலர்களும்' நாவல் தனித்து நிற்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

அந்நாவல் பற்றிய தன் விமர்சனப் பார்வையில்  ' குறிப்பிட்ட வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டிருந்தாலும் இவை அனைத்தும் ஒரு தனி மனிதனின் பார்வையில் அலசப்படுகிறது' என்கின்றார்
ஆசிரியர். அதோடு, 'எழுத்தாளர் தனக்குள் எழும் வினாவை விவாதமாக விரித்து நாவலுக்குள் நிகழ்த்தும்போது, தன்னையே பலநூறாக உடைக்கின்றார். வாழ்வு குறித்த சில புதிய அவதானிப்புகளைக் கண்டடைகிறார். அதன்வழி தன்னையும் கண்டடைகின்றார். அந்தக் கண்டடைவே நாவலைத் தாங்கிப் பிடிக்கிறது, தனித்துவமாக்குகிறது.' என்கிறார்.

மேலும் கட்டுரையை வாசிக்க வாசிக்க, அந்நாவலை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றது. ஆனால் தற்சமயம் அந்நாவல் கிடைப்பது அரிது. நானும் பல ஆண்டுகளாக தேடிக் கொண்டிருக்கின்றேன். சம்பந்தப்பட்டவர்கள் யாரும் அந்நாவலை மீண்டும் மீள்பிரசுரம் செய்வதற்கான வேலைகளை முன்னெடுக்க வேண்டுகின்றேன். இன்றைய தலைமுறை மட்டுமல்ல நாளைய தலைமுறையும் அறிந்துக்கொள்ள வேண்டிய சுடர் எம்.குமாரன் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

இம்மாதிரி தொடர் விமர்சனங்களால் ஆசிரியர் தன்னை முன்னிலைப்படுத்துவதாக குற்றம் சாற்றுபவர்கள் இருக்கிறார்கள். மூத்த படைப்பாளர்களை உதாசினம் செய்வதாகவும் கூறுபவர்கள் இருக்கிறார்கள். எவ்வாறு மூத்த படைப்பாளிகளுக்கு மரியாதை செய்ய வேண்டும் என பாடம் எடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை.  கூடுதலாக அவர்களிடம் ஒரு விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்கிற பட்டியலும் இருக்கிறது. ஆனால் அந்த பட்டியலில் எம்.குமாரன் போன்ற சுடரின் வெளிச்சம் சிறிதாகக் கூட இருக்கப் போவதில்லை.
#தயாஜி

‘மலேசிய நாவல்கள்’ – மூன்றாவது கட்டுரையை முன் வைத்து


‘மலேசிய நாவல்கள்’ – மூன்றாவது
கட்டுரையை முன் வைத்து

     தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார். 

 மூன்றாவது கட்டுரையாக, ‘பாலுணர்வின் கிளர்ச்சி’ என்ற தலைப்பில் எம்.ஏ.இளஞ்செல்வன் நாவல்கள் குறித்து எழுதியுள்ளார்.

  எம்.ஏ.இளஞ்செல்வன்,  மலேசிய தமிழ் இலக்கியத்தில் எத்தனை முக்கியமானவர் என்பதை கட்டுரையின் முதல் பக்கத்திலேயே தெரிந்துக்கொள்ளலாம். இங்கு புதுக்கவிதை வளரத் தொடங்கிய காலகட்டத்தில் அதற்கு ஆதரவாக மரபு கவிஞர்களின் விமர்சனத்திற்கு கடுமையான எதிர்வினையாற்றியவர். 

  அவர் பற்றிய மேலதிக விபரங்களை கட்டுரையாசிரியர் சொல்லியுள்ளார். அவை ஒவ்வொன்றும் கவனிக்கத்தக்கது. அவரின் காலகட்டத்தில் அவர் ஓர் நட்சத்திர   எழுத்தாளராக அறியப்பட்டவர்.  அதற்கான பின்னனியைக் கட்டுரையாசிரியர் சொல்கிறார். அது உண்மையும் கூடதான். எனக்கு நினைவு தெரிந்து வாசிக்க ஆரம்பித்த பொழுதில் எம்.ஏ.இளஞ்செல்வன் ஒரு இலக்கிய நட்சத்திரம் எனவே சொல்லப்பட்டார். 

   அவருக்கும் கட்டுரையாளருக்குமான ஆத்மார்த்தமான உறவை ஆசிரியர் கட்டுரையில் சொல்கிறார். ஆனால் அதுவெல்லாம் தன் ரசனை விமர்சனத்திற்கு ஒரு தடையாக வர அவர் அனுமதிக்கவில்லை. விமர்சனம் என்பது ஒரு பொறுப்பு. அதனை பழக்கமான முகங்களுக்காகவும் பழகிக்கொண்டதற்காகவும் அடகு வைத்துவிடக்கூடாது. இங்கு படைப்புகளின் பலவீனத்திற்கு முதல் காரணமாக இருப்பது மேம்போக்கான விமர்சனங்கள்தான். மருந்து கசக்கும் என்பதால் சீனி கலந்து கொடுப்பார்கள். ஆனால் மருந்து கசக்கக்கூடாது என்பதற்காக வெறும் சீனியையே கொடுத்து வந்தால் என்ன ஆகும்? அதுதான் இன்றைய பல படைப்புகளின் நிலை. 

  எம்.ஏ.இளஞ்செல்வன் பெற்றிருக்கும் வாசகர் பரப்பிற்கு பாலியலை தனது குறுநாவல்களில் அவர் ஆதாரமாக் கொண்டிருப்பதுதான் காரணம் என ஆசியர் கருதுகிறார். நிச்சயம் இதனை வாசிக்கையில் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது.

ஆனால் அந்த அதிர்ச்சியை தனது அடுத்தடுத்த விமர்சனம் கொண்டு கலையச் செய்கிறார் ஆசிரியர். 

நிச்சயம் வாசிக்க வேண்டிய கட்டுரை. ஒரு படைப்பை விமர்சனம் செய்வதற்கு நன்றியுணர்ச்சி அவசியம் இல்லை, ஆனால் பொறுப்புணர்ச்சி எந்த அளவிற்கு அவசியம் என கட்டுரை காட்டுகிறது. 

ஒருவேளை இக்கட்டுரையை வாசித்திருந்தால் ஆசிரியர் சொல்வது போல எம்.ஏ.இளஞ்செல்வன் மென்புன்னகையுடன் வரவேற்றிருப்பார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் அந்த நட்சத்திரத்தின் ஒளியை நானும் உணர்ந்துள்ளேன்.

#தயாஜி

பிப்ரவரி 22, 2021

‘மலேசிய நாவல்கள்’ – இரண்டாவது கட்டுரையை முன் வைத்து

 

‘மலேசிய நாவல்கள்’ – இரண்டாவது கட்டுரையை முன் வைத்து

தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார்.

            இரண்டாவது கட்டுரையாக, ‘மெல்லுணர்ச்சிகளின் பூஞ்சணம்’ என்ற தலைப்பில் ரெ.கார்த்திகேசு நாவல்கள் குறித்து எழுதியுள்ளார்.


            ரெ.கார்த்திகேசு ஒரு வணிக எழுத்தாளர் என ஆசிரியர் கட்டுரையைத் தொடங்குகின்றார். அதென்ன வணிக எழுத்தாளர். வணிகம் என்பது வியாபாரம் என நன்கு தெரியும். ரெ.கார்த்திகேசு எழுதி எழுதி வியாபாரம் செய்து சம்பாதித்தாரா? அப்படி எழுதி எழுதி சொத்துகள் ஏதும் சேர்க்க முடியுமா என்ன ? என சிலரை  கேள்வி கேட்க வைக்கிறது.  அவர்களும் அதனை ஒரு அறிவார்த்த கேள்வியாக நம்பி கேட்கவும் செய்கிறார்கள்.

            தீவிர  இலக்கியம் வணிக இலக்கியம் என்கிற இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரிகின்ற வரை அல்லது அதனை அறிந்துக் கொள்ள முயலாதவரை அர்த்தமற்ற கேள்விகளும் அதையொட்டிய அர்த்தமற்ற விவாதங்களும் தொடரத்தான் செய்யும்.

            இதனை அறிந்துக் கொண்டதாலும் தனது முன் அனுபவத்தாலும் கட்டுரையாசிரியர்  வணிக  எழுத்துகள்  குறித்து  தெளிவு செய்கிறார். வணிக எழுத்துகளை சாகசக் கதைகள், குற்றவியல் கதைகள், மெல்லுணர்ச்சிக் கதைகள், லட்சியவாதக் கதைகள்  என நான்காக பிரிக்கின்றார். ‘பொதுவாக வியாபார நோக்கம் கொண்ட அவை மக்களுக்குப் பிடித்ததை அவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மட்டுமே எழுதுவதால் ஜனரஞ்சக இலக்கியம் என சொல்லப்படுகின்றது’ என்கிறார். தான் கூறும் நான்கு பிரிவுகளுக்கும் ஏற்ற எழுத்தாளர்களையும் மேற்கோள் காட்டுகின்றார். இதன் மூலம் அவர் சொல்லவருவதை வாசகர்கள் எளிதாக புரிந்துக் கொள்ளலாம்.

            வணிக இலக்கியத்தையோ தீவிர இலக்கியத்தையோ பற்றிய விளக்கங்கள் என்னதான் கொடுத்துக் கொண்டிருந்தாலும் இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசங்களை சொல்லித்தான் ஆகவேண்டியுள்ளது. அவ்வாறே இக்கட்டுரையும் அமைந்துள்ளது.

            ஒருவர் எழுதுவது வணிக இலக்கியமோ தீவிர இலக்கியமோ, அது அவரவர் தேர்வு. ஆனால் தான் எழுதுவது என்ன வகை என தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பதுதான் முரண்நகை. அதுவாவது பரவாயில்லை, இன்னொரு ரகமும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு தாங்கள் எழுதுவது வணிக  எழுத்து என நன்றாக தெரியும் ஆனால்  தங்கள் மீது தீவிர இலக்கியவாதிக்கான போர்வையை போர்த்திக் கொள்ள  எல்லாவகையான காரியங்களையும் செய்கிறார்கள்.  அதன் பின்னால் இருக்கும் அரசியல் கவனிக்க வேண்டிய ஒன்று. இவர்களைப் போன்றவர்கள்தான்  சிக்கல்களுக்கு மூல காரணமாக இருக்கிறார்கள்.

            ரெ. கார்த்திகேசு எழுதிய,  வானத்து வேலிகள்,  தேடியிருக்கும் தருணங்கள், அந்திம காலம், காதலினால் அல்ல, சூதாட்டம் ஆடும் காலம் என்ற ஐந்து நாவல்களைப் பற்றியும் இக்கட்டுரை பேசுகிறது. ஐந்து நாவல்களின் சுருக்கத்தையும் ஆசிரியர் சொல்லிவிட்டு அந்நாவல்களின் பலம் பலவீனங்களை ஆராய்கின்றார். யோசிக்கையில் இதற்கு அதிக நேரமும் உழைப்பும் தேவையாயிருக்கிறது. வெறுமனே ஒரு படைப்பையோ அவர் மீதான  பிம்பத்தையோ கணக்கில் கொள்ளாமல்,  ஒரு முழுமையான பார்வையைக் கொடுக்க அவர் மேற்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது. ரெ.கார்த்திகேசு  மீது மரியாதை உள்ளதாகச் சொல்லிக்கொள்பவர்களோ, அவர் முக்கியமான படைப்பாளி என முன்மொழிகின்றவர்களோ அவரது படைப்புகளை முழுமையாக வாசித்துள்ளார்களா என்பது ஐயம் கொடுக்கும் கேள்விதான்.

            ‘பெரும்பாலும்  மலேசிய எழுத்தாளர்கள் செய்யும் அடிப்படைத் தவறுகள் இல்லாமல் ரெ.கா-வின் நாவல்கள் உள்ளன. வசனங்களின் புழங்கு மொழி, பிற இன மக்களிடம் பேசும்  வசனங்களின் நேர்த்தியான  மொழி, காலங்களில் குழப்பம்  இல்லாமை என தன்னை ஒரு சிறந்த பேராசிரியர் என நிரூபித்துள்ளார்’ என்கிறார்.

            ரெ.காவின் புனைவின் தரத்தை மட்டுமே இக்கட்டுரை ஆராய்கிறது. வாசிக்கின்றவர்களுக்கு அது புரியும் வகையிலும் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

            அவரின் இதர செயலூக்கத்தினால் உருவாகியிருக்கும் ஆளுமையைக் கொண்டு அவரது புனைவுலகை மதிப்பிட்டுக் கொண்டிருக்காமல் இரண்டுக்குமான வித்தியாசத்தை கண்டறிய இக்கட்டுரை உதவும். இக்கட்டுரையை மூழுமையாக வாசிக்கின்றவர்களுக்கு அது புரியும் என எதிர்ப்பார்க்கலாம்.

 

#தயாஜி

           

             

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்