பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 27, 2012

பதக்கம் எண் 13

             பதக்கம் எண் 13

    கம்பியூட்டர் தயார் நிலையில் இருக்கிறது. எனக்கு தேவையான வடிவத்தை உருவாக்கிவிட்டேன். அடர்த்தியான புருவம். தெளிவான கண்கள், மடங்கியும் மடங்காத காது, மழுங்கடிக்கப்பட்ட தாடை, நேற்றுதான் திருத்திய தோற்றத்தில் தலைமுடி, வயதை கணிக்கச் செய்யும் மீசை. எல்லாம் சரியாக இருக்கிறதா என ஒருமுறை பார்க்க வேண்டும் என்பது கட்டளை. பாதுகாப்பும் அதுதான். பார்த்தாகிவிட்டது.
     மீண்டும் ஒருமுறை எல்லா நாளிதழ்களிலும் வெளிவந்திருந்த செய்திகளை பார்வையிட்டேன். நேரம் குறித்தாகிவிட்டது. மலாக்காவிற்கு செல்வதற்கு தயாராய் வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டேன். காரில் இருந்து வந்த சத்தம் என்னை அவசரப்படுத்தியது. காருக்குள் நுழைந்ததும் கார் கதவு தானாகவே சாத்தப்பட்டது. காரை ஓட்ட வேண்டியவன் என் கட்டளைக்காகக் காத்திருந்தான். கட்டளையிட்டேன்.
    சீக்கிரமே மலாக்காவை அடைந்தாகிவிட்டது. கடலில் இருந்து நேரடியாக மீன்களை இங்கிருந்துதான் ஏற்றுவார்களாம். படகில் இருந்து கரைக்கு வந்தவுடனேயே, விற்பனையை தொடங்கிவிடுவார்கள்.
   கையில் வைத்திருந்த முகவரியின் தேவையின்றியே, கதையைச் சொன்னவுடன் வீட்டை அடையாளம் காட்டினார்கள். மாடிவீடு. எட்டாவது மாடி. நான்காவது வீடு. வீடு சாதாரணமாகத்தான் இருந்தது, வீட்டில் உள்ளவர்தான் பெருமிதமாக இருந்தார்@ தெரிந்தார்.
    உற்சாகமான வரவேற்பு. நேரம் நகரும் முன் வார்த்தைகளை விளையாடவிட்டேன்.
“வணக்கம் நாங்க ‘வேகம்’ன்ற பதிரிக்கைல இருந்து வரோம்...”
“ம்... தெரியும் தெரியும்... அதான் எல்லாத்தையும் போன்ல சொல்லிட்டிங்களே.... அந்த பதக்கத்தைப் பத்தி கேளுங்களேன் சொல்றேன்..”
“கண்டிப்பா; அதுக்குத்தானே வந்திருக்கோம். முதல்ல இருந்து சொல்லுங்க.... நித்திய ஆனந்தன் அவங்க சொல்ல சொல்ல குறிப்பெடுத்துக்குங்க.”
“நித்தி ஆனந்தன்..!, என்ன தம்பி பேரு புதுசா இருக்கு, ஏதும் சுவாமிஜியோட சீடரோ...”
“அய்யோ அப்படியெல்லாம் இல்லைங்க. பேருதான் வேற ஒன்னும் இல்ல.. இவரு புதுசு அதான் வேலை கத்துக் கொடுக்கறேன். அதுமில்லாம இவரு இந்த பழங்கால பொருள்களைப் பத்தியெல்லாம் தெரியும்.... இந்த பதக்கத்தை பத்தி எழுதறதுக்கு இவர்தான் சரியான ஆளு அதான்... ”
“அச்சச்சோ, தப்பா எடுத்துக்காதிங்க. சும்மாதான். சரி அவரை எழுதிக்க சொல்லுங்க. எப்போதும் எங்க வீட்டுக்காரர்தான் கடைக்கு போவாரு பாருங்க, அன்னிக்குன்னு பார்த்து எனக்கும் அவருக்கும் காலங்காத்தாலயே சண்டை, நீ ஆக்கறதா இருந்தா ஆக்கு இல்லன்னா போய் தூங்கு போ... நான் கடைல சாப்டுக்கறேன்னு போய்ட்டாரு, நானும்  நீங்க போனா போங்க எனக்கா கடைக்கு வழி தெரியாது, கல்யாணத்துக்கு முன்னுக்கு நான் தான் எங்க வீட்டுக்கு மார்க்கேட் போய்ட்டு எல்லாத்தை ஒண்டியா வாங்கிட்டு வந்து சமைச்சி போட்டேன், என்னம்மோ பேசறிங்களே... பார்க்கறேன் எத்தனை நாளா கடையிலையே சாப்டறிங்கன்னு பார்க்கறேன்னு சொல்லிட்டு, மார்க்கேட்டுக்கு கிலம்பிட்டேன்.”
   என்னால் மேலும் அவர் பேசுவதை கேட்க முடியவில்லை, நித்தி ஆனந்தன் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான், பேச்சை திசை திருப்ப,
“அக்கா, ஒரு நிமிசம். கொஞ்சம் தண்ணி கொண்டுவரிங்களா...?”
“அச்சச்சோ... இங்கப் பாருங்க... வீட்டுக்கு வந்திருக்கிங்க. உங்களுக்கு தண்ணியைக் கொடுக்காம நான் பாட்டுக்கு பேச ஆரம்பிச்சிட்டேன். அது ஒன்னிமில்லைங்க... ரெண்டு நாள் முன்னுக்கு ரெண்டு பேரு வந்திருந்தாங்க, வந்ததும் அரக்கப் பறக்க கதையைக் கேட்டுட்டு போய்ட்டாங்க... அவ்வளவு அவசரம் போங்க, அதான் அப்படியே கதையை ஆரம்பிச்சிட்டேன்...”
“தண்ணி..”
“அச்சச்சோ தண்ணி கேட்டிங்கல்ல.. இருங்க வரேன்..”
    நல்ல வேளையாக, விட்டில் அவர் மட்டும் இப்போது இருந்தார். வேறு யாரும் இருந்திருந்தால், குடிக்க தண்ணீர் வரும்போது கூட இடைவேளையற்ற பேச்சும் காது ஜவ்வு கிழித்திருக்கும்.
   கிடைத்த நேரத்தில் உடன் வந்திருந்த நித்தி ஆனந்தனின் குறிப்பை கவனித்தேன். ‘தப்பா எடுத்துக்காதிங்க’ தொடங்கி, முதல் ‘அச்சச்சோ’-வும் இரண்டாவது ‘அச்சச்சோவும்’ ஒன்றுவிடாமல் இருந்தது. திட்டவும் முடியாது. திட்டினாலும் புரியாது. வடிவமைப்பில் திட்டுகள் குறித்து எதனையும் இணைக்கவில்லை.
  தண்ணீர் வந்தது, உடன் கையில் அந்த பதக்கத்தையும் எடுத்துவந்தார் அந்த பெண்.
“தோ இந்தாங்க அந்த பதக்கம்.”
“என்னங்க போட்டோவை காட்டறிங்க... இதுவா நனையாம மீன் வயித்துல கிடைச்சது....?”
“அச்சச்சோ, இல்லைங்க. பதக்கமாதான் மீன் வயித்துல கிடைச்சது. அதை சாமி மேடையில வச்சிருக்கோம். வரவங்க எல்லாம் தொட்டு தொட்டு பார்க்கறாங்க... எனக்கே ஒரு மாதிரியா இருக்கு அதான் போட்டோ புடிச்சி கொடுத்திருக்காரு விட்டுக்காரு.”
“சாமி மேடையில வச்சிருக்கிங்கலா...?”
“ஆமாங்க, அது கடவுளா பார்த்து கொடுத்திருக்காருங்க...”
“கடவுள் மீன் வயித்துலதான், தபால் அனுப்பியிருக்காரா...?”
“அச்ச்ச்சோ, நீங்க என்னங்க இப்படி பேசறிங்க....”
“இல்லைங்க சும்மாதான். சரி நீங்க இன்னும் கதையை முழுசா சொல்லலையே....”
“அச்சச்சோ இன்னுமா கதையை சொல்லாம கதை பேசறேன்....சரி அவரை குறிச்சிக்க சொல்லுங்க..... எப்போதும் எங்க வீட்டுக்காரர்தான் கடைக்கு போவாரு பாருங்க, அன்னிக்குன்னு பார்த்து எனக்கும் அவருக்கும் காலங்காத்தாலயே சண்டை,......”
“அக்கா...அக்கா... அதெல்லாம் ஆரம்பத்துலயே சொல்லிட்டிங்க... அந்த மீனு வாங்கினதுக்கப்புறம் நடந்ததை சொல்லுங்க....”
“அச்சச்சோ, ஆமால்லா”
“இந்த; அடிக்கடி அச்சச்சோங்கிறது”
“அச்சச்சோ, நீங்களும் கேட்டுட்டிங்களா....? இது சின்ன வயசுல இருந்து பழகிடுச்சிங்க...அது என்ன கதைன்னாங்க....”
“அச்ச்ச்சோ....  அக்கா....”
“சொல்லுங்க தம்பி. பாருங்க உங்களுக்கு அச்சச்சோ ஒட்டிடுச்சி”
“இந்த கதையை முடிச்சிட்டு அந்த கதைக்கு போகலாமே....”
“அச்சச்சோ, சோரிங்க.... எப்போதும் போலதான் சுறாமீன் வாங்கலாம்னு மீன்களை அடுக்கி வச்சிருக்கற இடத்துக்கு போனேன். எல்லா மீனையும் பார்த்தேன் ஆனா பாருங்க ஒரு மீனை தொட்டதும் எனக்குள்ள என்னமோ வந்த மாதிரி இருந்துச்சி. மீனை கீழ வச்சிட்டேன். ஒன்னும் ஆகல.. அப்பறம் மறுபடியும் மீனை எடுத்தா, ஒடம்புல என்னமோ மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி இருந்தது. சரி மீன்ல அப்படி என்னதான் இருக்குன்னு தெரிஞ்சிக்க அந்த மீனை வாங்கினேன்.... தம்பி.... ”
“அந்த மீனை வாங்கிறதுக்கு எப்படி தைரியம் வந்ததுன்னு கேட்கமாட்டிங்க...”
“ஏன்..?”
“அன்னிக்கு வந்திருந்தவங்க கேட்டாங்க அதான்...”
“இல்லக்கா ஒவ்வொரு பத்திரிக்கை ஒவ்வொரு மாதிரி கேட்போம். சில பத்திரிக்கைல பெண் மானபங்கம் படுத்தப்பட்டாள்னு மட்டும் போடுவாங்க, இன்னொரு பத்திரிக்கைல செய்தியோட அந்த பொண்ணு இருக்குற இடத்தையும் அந்த பொண்ணு பெயரையும் போடுவாங்க... இன்னொரு பத்திரிக்கல அந்த பொண்ணு போட்டோவையும் தேர்த்து போடுவாங்க..... ”
“அச்சச்சோ!”
“என்னக்கா”
“நான் தானே தம்பி கதை சொல்லனும்... நீங்க சொல்றிங்க...”
“அச்சச்சோ....”
“தம்பி...”
“ஹிஹிஹ்.. அக்கா நீங்க கதை சொல்லுங்க.. இருங்க இருங்க... மீனை வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டிங்க... அப்பறம் நடந்ததை சொல்லுங்க...”
“அச்சச்சோ, நல்ல வேளை சொன்னிங்க... இல்லைன்னா சண்டைல இருந்து சொல்லியிருப்பேன்”
    அவர் சிரித்தார், நானும் சிரித்தேன். என் குறிப்பை உணர்ந்த நித்தி ஆனந்தனும் சிரித்தான். வடிவமைப்பில் சிரிப்பு இருக்கவேண்டியதின் முக்கியத்துவம் இப்போதுதான் தெரிந்தது. நாங்கள் சிரித்து அவன் சிரிக்காமல் இருந்திருந்தால் சந்தேகம் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
“என்ன தம்பி யொசிக்கிறிங்க...”
“அதெல்லாம் ஒன்னுமில்ல அக்கா.... நீங்க சொல்ல ஆரம்பிங்க..”
“இல்லப்பா; நீங்கதான் வந்ததுல இருந்து பேசிக்கிட்டே இருக்கிங்க... இவரு பேசமாட்டாரா.....”
“பேசுவாரே, ஏன் பேசமாட்டாரு, நித்தி அக்காகிட்ட ஏதாவது பேசேன் கேட்கறாங்கல்ல..”
“அந்த பதக்கம் எங்க, நாங்க பார்க்கனும்...”
“அச்சச்சோ”
எனக்கு தூக்கிவாரி போட்டது. எடுத்ததும் இப்படியா பேசுவான். காரியத்தையே கெடுத்துவிட்டான். இனி வேறு வழியில்லை. பையில் வைத்திருக்கும் மயக்க மருத்தை முகத்தில் வீசி பதக்கத்தை எடுக்க வேண்டியதுதான். அதற்குள்;
“என்னங்க..! இவருக்கும் உங்களுக்கும் ஒரே மாதிரியான குரல் இருக்கு..”
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், இதுதான் அதிர்ச்சிக்கு காரணமா.? சமாளிக்கனும்.
“அப்படியா சொல்றிங்க. எங்க ஆபிஸ்லயும் இதைத்தான் சொல்றாங்க.. அக்கா மணியாகுது, சீக்கிரம் சொன்னிங்கன்னா நாளைக்கே பேப்பர்ல போட்டிடலாம்.”
“அச்சச்சோ. சரிங்க... மீனை வாங்கிட்டு வீட்டுக்கு வந்ததும் ஓர் அதிசயம் நடந்துதுங்க, கோவமா போன எங்க வீட்டுக்காரு, வீட்டுல எனக்காக காத்திருந்து, என்னை பார்தத்தும், கட்டி புடிச்சி சாரி கேட்டாரு.... அப்பறம் நாங்க ரெண்டு பேரும் சமையல் அறையில வேலை செய்ய ஆரம்பிச்சிட்டோம். நான் தான் மீனை வெட்டனேன், சூறா மீனா இருக்கறதால சுலபா வெட்டலாம்னுதான் கத்தியை மீன் வைத்துல வச்சி வெட்டிக்கிட்டு இருந்தேன். ஏதோ இரும்பை அரக்கமாதிரி இருந்தது. வீட்டுக்காரர்கிட்ட சொன்னேன். அவர்தான் மீனை ரெண்டா பொளந்தாரு உள்ள என்னமோ கருப்பா இருந்துச்சு..... அச்சச்சோ தங்க காசுன்னு நெனச்சிதான் ஆசையாசையா வீட்டுக்காரரை கழுவ சொன்னேன். அப்புறம் பார்த்தா ஏதோ டாலர் மாதிரி இருந்திச்சி....”
“பதக்கம்..”
“ஆமாம் ஆமாம் பதக்கம். ரொம்ப பழைய பதக்கம்ன்னு வீட்டுக்காரு சொன்னாரு, ஏன்னா அந்த பதக்கத்தோட பின்னாலதான், வருசம் எழுதியிருந்தது. ம்....... 1512ன்னு போட்டிருந்தது. ஆமா; வீட்டுக்காரு சொன்னாரு இது 500 வருசதுக்கு முன்னாடி இருந்ததுன்னு. இது ராசியான பதக்கம் போல இருக்கு. சாமிமேடைல வைய்யுன்னு சொன்னாரு. யார் கிட்டயும் சொல்லாதன்னு சொன்ன மனுசன், அவரே ராத்திரி குடிச்சிட்டு தாமான் பூரா சொல்லி தொலைச்சிட்டாரு, மறுநாள் காலையிலேயே தாமான்ல உள்ள பாதிபேரு இங்கதான் இருந்தாங்க. எப்படியோ பேப்பர்காரங்களுக்கு தெரிஞ்சி, பத்திரிக்கைலலாம் வந்துருச்சி... இப்போ நீங்களும் வந்திருக்கிங்க... நாளைக்கு யார் வரப்போறாங்களோ தெரியலை.... அவ்வளவுதாங்க... ஏன் தம்பி போட்ட புடிக்க மாட்டிங்கலா...?”
“போட்டோதானே புடிப்போம், ஏன் கேட்கறிங்க..?”
“இல்ல, போன தடவை போட்டால நான் நல்லாவே இல்ல அதான்; நீங்களாவது நல்லா...”
 “நாங்க நல்லா புடிப்போம்... நீங்க போய் பௌடர் பூசிட்டு வாங்க....அப்படியே அந்த பதக்கத்தை எடுத்து வந்தா நாங்களும் பார்த்த மாதிரி இருக்கும்... ”
   பதக்கத்தைவிட பௌடர் அவருக்கு முக்கியமாக பட்டது அதனால்தான் முதலில் பௌடரையும் அடுத்ததாக பதக்கத்தையும் சொன்னேன். சிறிது நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட முகமாய் அந்த பெண் பூஜையறைக்குச் சென்றார். அந்த நேரத்தில் வீட்டின் வாசலில் ஓரு நிழல். உள்ளே வந்தவர் அந்த பெண்ணின் கணவராக இருந்திருக்க வேண்டும்.
  புருவம் உயர்த்திய படி என்னைப் பார்த்து ஆள்காட்டி விரலை நீட்டினார். போதை கண்ணில் இருந்தது. அவர் என்னை தாக்கப் போவதாக நினைத்த நித்தி ஆனந்தன் உடனே அவனது கையில் இருந்து நீல ஒளியை பாய்ச்சினான். அவர் அப்படியே சிலைபோல நின்றுவிட்டார்.
   எதிர்பாராதவிதமாய், பூஜையறையில் இருந்து வெளிவந்த அந்த பெண்ணும் இதை கவனித்துவிட்டார்.அதிர்ச்சியில் நின்ற அவரை, என் பையில் இருந்து நீல பொடியை தூவி சிலை போலவே நிற்க வைத்து  விட்டேன்.
   அவரின் கையில் பூஜை தட்டும், தட்டில் பதக்கமும் இருந்தது. என் கட்டளைப்படி நித்தி ஆனந்தன் பதக்கத்தை  எடுத்து பையில் வைத்தான்.
   சட்டென்று,  அவனது கண்கள் முழுக்க சிவப்பாய் மாறியது. அது ஆபத்திற்கான அறிகுறி. உடனே பதக்கத்தை பத்திரப்படுத்தச் சொன்னேன். செய்தான். பிறகு நான் கட்டளையிட்டது போல நித்தி ஆனந்தன் கார் சாவியை எடுத்து அவனது மூக்கின் உள் நுழைத்தான். நான் முதலில் வீட்டின் கதவை மூடினேன். பூட்டினேன். கார் சத்தம் ஜன்னலுக்கு அருகிள் கேட்டதும்  நித்தி ஆனந்தன் எந்த யோசனையும் இன்றி ஜன்னலில் பாய்ந்தான்.
   இரும்பு கம்பிகளும், கண்ணாடிகளும் உடைந்தன. பாய்ந்த அவன் மிகச்சரியாக திறந்திருந்த காரினுள் நுழைந்தான். இப்போது என் முறை. நித்தி ஆனந்தன் ஏற்படுத்தி வைத்திருக்கும் வழியிலேயே நானும் பாய்ந்தேன். காரின் கதவும் திறந்திருந்தது. உள்ளே நுழைந்ததும், கார் கிளம்பியது.
புறப்பட்டோம். வாகன நெரிசல் அற்ற வானவெளியில்.
    வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.  உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்கு முன் நித்தி ஆனந்தனை சரிசெய்ய வேண்டும்.
    அறையில் அவனுக்கான நாற்காலியில் அவனாகவே அமர்ந்துக் கொண்டான். கம்பியூட்டரை திறந்தேன். தலைக்கு மேல் இருந்து மஞ்சல் ஒளி நித்தி ஆனந்தன் உடல் முழுக்கப்பட்டது.
    இதுவரை அவன் செய்த உதவிக்கு நன்றி கூறி காற்றோடு காற்றாக அவனை மஞ்சல் நிற ஒளியில் கலக்கினேன். மீண்டும் தேவையென்றால் நித்தி என்கிற கோப்பை திறக்கலாம். ஆனால் அடுத்த முறை இவனுக்கு வேறு ஒருவரின் குரலை வடிவமைக்க வேண்டும்.
இனி பதக்கம் குறித்த வேலை.
    உண்மைதான் இந்த பதக்கம் வெறும் பதக்கமல்ல். பதிமூன்றாம் என் பதக்கம். ஐநூறு ஆண்டுகளுக்கு முன் உள்ள பதக்கம் இது. இது இருக்கவேண்டிய இடம் பூமியல்ல. எங்களில் பலர் இந்த பதக்கத்தை தேடித்தான் இத்தனை ஆண்டுகளாக பூமியில் ஆளுக்கொரு பெயரில் பிறக்கப்பட்டு வளர்க்கப்பட்டு கவனிக்கப்பட்டு வருகிறோம். எப்போது எங்கள் மீது எங்கள் குடும்பத்தினர்க்கு சந்தேகம் வருகிறதோ அப்போதே அவர்களுக்கு விதி முடிந்துவிடும். அதனால்தான் எங்களுக்கு கம்பியூட்டர் மூலம்  தேவையான உருவங்களை உருவாக்கிக் கொள்ள கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி தேவைப் பட்டு நான் வடிவமைத்த உருவம்தான் நித்தி ஆனந்தன். இந்த பெயர் என் முகநூல் நண்பனின் பெயர். இதில் எந்த உள்குத்தும் இல்லை.
‘தலைவருக்கு வணக்கம். நான் சொன்னது போல அது, அதே பதக்கம்தான். இனி நமக்கு தொல்லையில்லை. பதக்கத்தை கைப்பற்றிவிட்டேன். நீங்கள் உடனே பூமிக்கு வரவும். இப்படிக்கு உங்கள் உண்மையான சேவகன் எண் 3879.’
   செய்தியை அனுப்பிவிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பதிலோ அல்லது தலைவரோ கூட வரலாம். இந்த பத்தக்கம் பறிக்கப்பட்டதிலிருந்து எங்கள் ராஜ்ஜியமும் பறிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் எங்கள் சொந்த இடத்திலேயே அடிமைகளாகவும் பாதாள அறையில் யாருக்கும் சேவைசெய்யும் அடிமைகளாகவும் இருக்கிறோம். இந்த பதக்கம்தான் எங்கள் தலைவருக்கும் எங்களுக்கும் பழைய சக்தியினை திரும்பக் கொடுக்கும்.
   பூமியில் உள்ளவர்களுக்கு இது பதக்கம், அதிஷ்டம் அவ்வளவுதான் எங்களுக்கு இந்த பதிமூன்றாம் எண் பதக்கம்தான் உயிர், உயிர்க்கு மேலும். இதுவரை பூமியில் பல இடங்களில் இருந்து பன்னிரெண்டு பதக்கங்கள் வரையில் சேர்த்து ஓரளவு சக்தியினை சேர்த்துக் கொண்டோம்.
   நாங்கள் போரை தொடங்குவதற்கு மிக முக்கியமானது இந்த பதக்கம்தான். போருக்கு தகுதி வீரர்கள் மட்டுமல்ல இந்த பதக்கமும்தான்.
தலைவர் வந்துக் கொண்டிருக்கிறார்.
   ஆனால் பாருங்கள். இனி அவர் தலைவருமில்லை நான் சேவகனும் இல்லை. இங்கே வரும் அவருக்கு பதக்கம் கிடைக்கப் போவதுமில்லை. நான் கொடுக்கப் போவதுமில்லை. எத்தனை காலம்தான் நான் அடிமையாக இருப்பது.
   என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் தலைவர் நிச்சயம் ஆயுதங்கள் இன்றியும், காவலர்கள் இன்றியும்தான் வருவார். இந்த வீட்டினுள் நுழைந்ததும்.
   கொம்பர்களின் காவலர்கள் அவரை சிறைபிடிப்பார்கள். பதக்கத்தை கொம்பர்களின் தலைவரிடம் நான் ஒப்படிப்பேன். அவரும், பதக்கத்திற்கு பரிசாக என் தலையில் கைவைத்து கொம்பை உருவாக்குவார். கொம்பு வந்த பிறகு எனக்கு அவரது ஆட்சியின் கீழ் பதவி கிடைக்கும். அது போதுமே எனக்கு.
   எங்களுக்காக செத்தவர்கள், எங்களுக்காக போராடியவர்கள், எங்களுக்காக எல்லாத்தையும் துறந்தவர்கள். எவர் பற்றியும் எனக்கு அக்கரையில்லை. நான் வாழ வேண்டும். எனக்கு பதவி வேண்டும். நான் ஆட்சி செய்ய வேண்டும். அது போதுமே, நாளை கொம்பர்களுக்கு நான் ஒரு கதாநாயகனாக இருக்கப் போவதை நினைத்தால் உள்ளுக்குள் என்னவோ செய்கிறது.
    ஆம், அதோ சத்தம் கேட்கிறது. தலைவர் வந்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக அவரின் முகத்தைப் பார்க்கப் போகிறேன். பாவம் தலைவர். என்னை நம்பியப் பாவத்திற்கு அவர் சாக வேண்டுமே.
    தலைவர் வீட்டிலுல் நுழைந்துவிட்டார். நான் செய்கை காட்டினால் மட்டுமே ஆங்காங்கே மறைந்திருக்கும் கொம்பர்களும் கொம்பர்களின் தலைவனும் வெளிவருவார்கள். எங்கள் தலைவரின் கண் முன்னேயே பதக்கத்தை கொம்பர்களின் தலைவருக்கு ஒப்படைக்க வேண்டும். ம் .
   எல்லாம் நல்ல படியாக நடந்து முடிந்தது. நானும் தலைவரும் புறப்படுகிறோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் இருந்த வீடு வெடித்து சிதறப் போகிறது. வீட்டினுள் கொம்பர்களும் அவர்களின் தலைவனும் சிறைப்பட்டிருக்கிறார்கள். குழம்புகிறதா..?
ஆனால் திட்டத்தில் சின்ன திருத்தம்.
   எங்களுக்காக செத்தவர்கள், எங்களுக்காக போராடியவர்கள், எங்களுக்காக எல்லாத்தையும் துறந்தவர்கள். எவர் பற்றியும் எப்படி அக்கரையில்லாமல் இருப்பேன். நான் மட்டும் வாழ்த்தால் போதுமா. நம்பிக்கையை விட பதவி முக்கியமா என்ன. போராட்டவாதிக்கு ஏன் ஆட்சியும் அதிகாரமும். நான் நல்ல தொண்டனாகவும் நல்ல சேகவனாகவும் எங்களுக்காக போராடும் தலைவருக்கு இருப்பேன்.
  பதிமூன்றாம் எண் பதக்கத்துடன் , மீண்டும் சக்தி பெற்ற தலைவருடன் பூமியை விட்டு புறப்படுகிறேன். இந்த முறை போராட்டத்தில் நிச்சய வெற்றயல்ல சத்திய வெற்றி.
   காட்டிக் கொடுக்க நான் என்ன மனிதனா.....?


                                                        - தயாஜி -

பிப்ரவரி 25, 2012

நாளிதழ்கள் நான்கு

நாளிதழ் 1
பெண் மானபங்கம் செய்யப்பட்டாள்
செய்தி மட்டும்

நாளிதழ் 2
பெண் மானபங்கம் செய்யப்பட்டாள்
செய்தி
தந்தையின் பெயர்
முகவரி
இவை மட்டும்

நாளிதழ் 3
பெண் மானபங்கம் செய்யப்பட்டாள்
செய்தி
தந்தையின் பெயர்
பெண்ணின் பெயர்
முகவரி
இவை மட்டும்

நாளிதழ் 4
பெண் மானபங்கம் செய்யப்பட்டடாள்
செய்தி
தந்தையின் பெயர்
பெண்ணின் பெயர்
பெண்ணின் புகைப்படம்
முகவரி
இவை மட்டும்

நாம்
படித்துக் கொண்டிருக்கிறோம்
செய்திகளாக மட்டும்
நம் பெண்
சம்பந்தப்படாதவரை
செய்தி மட்டும்தான்........
-தயாஜி-

பிப்ரவரி 17, 2012

வார்த்தைகளுடன் வாக்குவாதம்; வார்த்தையாகும் முயற்சி

இன்னமும் நான்
வார்த்தைகளை பிடித்து
தொங்கிக் கொண்டிருக்கவும்

வார்த்தைகள் எல்லாம்
என
தேங்கிக் கொண்டிருக்கவும்

என்ன
ஆதாரக் காரணம்
இருக்க முடியும்

இயலாமல்
அழும் போதும்
இயன்றவரை
அடக்கும் போதும்
வார்த்தைகளே முன்நிற்கின்றன

மூக்கின் கீழிருந்து
முன்னேருகின்றன

அவை எனக்கு
காவலா
நான் அவைக்கு
அடிமையா

வார்த்தைகள்

வாயினையும்
நாக்கினையும்
எச்சிலையும்
பல் இடுக்குகளையும்

பயன்படுத்தி பரவசமாகின்றனவா

என்னை பயன்படத்துகின்றனவா

எப்போது தீரும்
எனக்கும்
வார்த்தைகளுக்கு
மூண்டிருக்கும்
யுத்தம்

“போடா பொட்டை”

“நீயெல்லாம் மனுசனா”

“பொம்பள பொருக்கி”

“நாயே உனக்கு நல்ல சாவே வராது”

“பார்க்கறேன் நீ எப்படி வாழ்றேன்னு”

காதின் கதவு சாத்தியபடியால்
வாயின் வாசலில் வந்து
அனுமதிக்க சொல்லி
மறியலிட்ட வார்த்தைகளுடன்

“நன்றி அண்ணே”

“நல்லா இருப்பிங்க”

“உங்களைத்தான் எனக்கு தெரியுமே”

“நீங்க என்னோட அதிஷ்டம்”

“நல்ல நேரத்துல வந்திங்க”

காதின் கதவு திறந்திருந்தும்
வாயின் வாசலில் வந்து
அமர்ந்திருக்கும் வார்த்தைகளுடன்
பேச்சு வார்த்தை
எப்போதுதான் முடியுமோ

சொற்கிணற்றில்
தவளையாய்
தலைநிமிர்கையில்
வார்த்தைகளே
வரவேற்கின்றன

எப்படித்தான் இந்த
வார்த்தைகள்
என்னை அடையாளப்படுத்துகின்றனவோ
குழம்பிய குட்டையில்
மீன் பிடிக்கும் வார்த்தைகளுக்கு
வார்த்தைகளே
கிடைக்கின்றன மீன்களாய் - அவை வார்த்தைகள்

வடிவமற்ற
என் எழுத்துகளின்
வாசம் வீசும் வார்த்தைகள்
எதுகை உடன் மோனைகளை
எதிர்ப்பார்ப்பது இல்லை

என்
வார்த்தைகள்
ஆடையற்றவை

என்
கட்டுக்கும்

எந்த
திட்டுக்கும்

பயந்தவையல்ல

இவை போர் வீரர்கள்

நிர்வாணமேயானாலும்
நிராயுதபாணிகளல்ல

எத்தனை தூரத்தில்
எவ்வளவு துரத்தலில்

என்னை வைத்து விட்டுவந்தாலும்
எஞ்சியிருக்கும் வார்த்தைகள்
மீண்டும் மீண்டும் வார்த்தைகளையே
பிரசுரிக்கும்

எந்த புத்தகத்தை திறந்தாலும்
எந்த வார்த்தைகள் இருந்தாலும்

ஒவ்வொரு வார்த்தையும்
சங்கிலிக் கோர்வையாய்
நான் தொட
ஓரிடம் குவியும்
அதிசயம்

எனக்கும் ஆனந்தம்

அதனால்தான் என்னமோ
என் புத்தகங்கள்
இரவலை
விரும்புவதில்லை

ஏனெனில்
வார்த்தை குவிந்த
வாக்கிய அமைப்பை
படிக்கவும்
அந்த சொற்களை
ஒவ்வொன்றாக நுகரவும்

நீங்கள்
நானாக இருந்திடல் வேண்டும்

இல்லை வார்த்தைகள்
சபித்திடல் நேரும்

என் தீயென்ற வார்த்தை
தொட்டால்
சுடும்

என் நீரென்ற வார்த்தை
விரல்
நனைக்கும்

என் அழகியென்ற வார்த்தை
கண்ணை
மயக்கும்

என் காமமென்ற வார்த்தை
இரவில்
புணரும்

என் சோகமென்ற வார்த்தை
எல்லாம்
அழும்

என் காதலென்ற வார்த்தை
கணிதமற்ற
ஆழம்

எழுதவைப்பதும்
போதுமென்று
எட்டியுதைப்பதும்

நான் அல்ல
நானாக முயற்சிக்கும்
வார்த்தைகள்

வேறுவழியில்லை
வார்த்தைக்கும்
எனக்கும்
வித்தியாசம் வேண்டும்

இல்லையேல்
என் மனித தொடர்பு
தன்
கொஞ்சநஞ்ச
இருப்பையும்
மறந்திடும்

நானும் கோடான கோடி
லட்சத்தையும் தாண்டி

ஏதாவது மொழியில்
ஏதாவது ஊரில்
ஏதாவது கையில்
ஏதாவது காகிதத்தில்
ஏதாவது மையில்
ஏதாவது வாயில்
ஏதாவது பொய்யில்
ஏதாவது மெய்யில்
ஏதாவது எழுத்தில்

என்னை வைத்துவிடுவேன்
இன்னொரு வார்த்தையாய்


  -  தயாஜி -

பிப்ரவரி 16, 2012

காலக்கண்ணாடியும் கையாலாகதவனும் உடன் கடந்த காலம்

நினைவற்ற உன் பெயரை
நினைக்கையில் வற்றிய உறவை
பலமற்ற என் இதயம்
யோசிக்கிறது
விழியற்ற கண்ணில்
துளியற்ற நீரும்
தொடர்பின்றி தொடுகிறது - கண்ணீர்
தேடித் தேடி
மனதால்
ஓடியோடி
நினைவில் கிடைத்தேன்
நீ என்
நிஜம் காட்டும் கண்ணாடி
நான் உன்
கலங்கலான பிம்பம்
யாரிங்கு நிஜம்
கண்ணாடி
காலக்கண்ணாடி- தயாஜி -

இப்பொழுது வாசிப்பில்

(13.2.2012)
தற்போது படிக்கத் தொடங்கியிருப்பது
'புதிய காலம் - சில சமகால எழுத்தாளர்கள்'. எழுத்து ஜெயமோகன். நண்பர் நவின் முன்மொழிந்திருந்த மிக முக்கிய புத்தகம் இது.

சமகாலத்தில் கவனிக்கவேண்டிய ஆக்கங்களும் அதனை எழுதியவர்கள் குறித்தும் ஜெயமோகன் இதில் சொல்லியிருக்கின்றார்.
இப்போதுவரை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'உறுபசி', 'யாமம்' ஆகிய நாவல்கள் குறித்து ஜெயமோகன் சொல்லியிருப்பதை படித்து முடித்தேன். இப்போது எஸ்.ரா-வின் 'நெடுங்குருதி' பற்றி ஜெ.மோ சொல்லியுள்ளதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.


இந்த வரிசையில் ;
யுவன் சந்திரசேகர், மனுஷ்ய புத்திரன் , எம்.கோபலகிருஷ்ணன், ஜோ டி குரூஸ், சு.வெங்கடேசன், சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன், சாரு நிவேதிதா - ஆகியோர் குறித்தும் அவர்கள் ஆக்கங்கள் குறித்தும் சொல்லியுள்ளார் ஜே.மோ.
நிச்சயம் பயனுள்ள புத்தகம்தான்.

இப்படிக்கு ;
-தயாஜி-

பிப்ரவரி 15, 2012

கொடுத்தால் போதும் ! ; கொடுத்ததே போதும் !

 
 
‎59-வது வயதில்
அடையாள அட்டை
கிடைத்ததாம்
மகிழ்ச்சி,
பாராட்டு,
... பூரிப்பு,
ஆதரவு,
அக்கறை,
கவனிப்பு,
பாசம்

என்ற
அடுக்கள்கள் தொடர்கின்றன
ஒவ்வொரு குரல்களில் வெளிப்பாடாய்

கடந்து வந்த 59 ஆண்டுகளின்
வலி,
உதாசினம்,
ஏமாற்றம்,
கேலி,
தீண்டாமை,
அறியாமை,
புரியாமை

குறித்த
கேள்விக்கு நேரமில்லை
கேட்பதற்கு ஆளுமில்லை
கேட்டாலும் பதில்லை

கேட்ப்போர்க்கும் கதியில்லை........


-தயாஜி

பிப்ரவரி 13, 2012

சு.ரா

தற்போது, இம்மாத 'உயிர்மை' இதழில் 'நினைவின் நிழல்கள் சுந்தர ராமசாமி' எனும் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கிறேன். எழுதியவர் 'மணா'.
சு.ராவின் சில எழுத்துகளைப் படிக்க ஆரம்பித்த பிறகு அதில் ஒரு தேடல் தோன்றியது. சு.ரா-வின் கட்டுரைகள், சிறுகதைகளின் முழு தொகுப்பையும் ஓரளவுக்கு படித்திருந்தாலும் அவரின் நாவல்கள் பக்கம் இன்னும் செல்லவில்லை. இவ்வாண்டுக்குள் அந்த குறைபாட்டையும் நிவர்த்தி செய்து விடுவேன்.-தயாஜி-

பிப்ரவரி 10, 2012

திரைப்பார்வை - மெரினா


மெரினா - படம் பார்த்தேன்.

கண்டுவந்த கடற்கரையில் கவனிக்காத மனிதர்களின் கதையும் கதை சார்ந்த உணர்வும் அதன் ஊடே கல்வியில் முக்கியத்துவமும் சேர்ந்த கலவையாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

சிறுவர்களும் மத்தியில், வயோதிகர்களின் எதிர்ப்பார்ப்புகளும் நன்றாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

குறும்படத்தை பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் தற்காலிக இளசுகளின் காதல்.

எதார்த்தமாய் வந்து போகும் வசனம். குபீர் சிரிப்புக்கும் திடீர் வலிக்கும் உத்திரவாதம்.

அதிகாரப் பந்தலில் அமர்ந்திருக்கும் அதிகாரிகளின் பொறுப்பற்றத்தனமும் ஒருங்கே காட்டப்படுகிறது.

மெரினா - குழந்தைகள் உல்கத்தில் குழந்தைகள் மட்டும் இருப்பதில்லை.

-தயாஜி-

பிப்ரவரி 09, 2012

முகமற்றவன் பதவியுற்றவன்அடையாளம் தெரிந்த வார்த்தைள்
சேர்ந்து
அடித்து உதைக்கின்றன....

வலியை பொருக்க முடியவில்லை
கேள்விக்கு மேல் கேள்விகள்
கேட்க கேட்க

வெட்கமின்றி

இளிக்கிறேன்

வேறென்ன செய்ய்

வலக்காதில் நுழைந்து
இடக்காதில் வெளியாகின்றன

காதடைத்த உத்தம பிம்பம்
உடைந்து
ரத்தம் ஊட
புத்தன் போர்வையும்
வழிகிறது.......

போட்டிருந்த வேடமும்
காத்து வந்த பட்டமும்

குடல் பிடுங்கும்
நாற்றத்துடன்
காதில் வழிந்து
துவாரத்தைத் தேடி
ரோமங்களை விலக்கி
மூக்கை நுகர்கின்றன

நுகர்ந்து நுகர்ந்து
மூளையை நகர்த்துகின்றன

கொஞ்சம் கொஞ்சமாக
மூளை குலைகிறது

அதன் வீச்சம் கண்களை
பிதுக்குகிறது

கண்கள் வெளிவரும் முன்னமே
மூளையும் மூளைசார்ந்த
நரம்புகளும்

மூக்கின் துவாரம் வழியே
முன்னேறுகின்றன

என் நாற்றம்
என்மீதான நம்பகத்தன்மையை
சந்தேகிக்கிறது

சேர்த்து வந்த கூட்டமெல்லாம்
சில அடிகள் தாமதிக்கின்றன

அவர்கள் விழிக்கும் முன்னமே
என் நாற்றத்தில் அவர்களுக்கும்
பங்களிக்க வேண்டும்

மூக்கின் வழியே வடியும்
மூளையை

அவர்கள் வாயின் வழியிலே
நுழைத்திட்டால் போதும்

நாங்கள் வித்தியாசம் மறப்போம்

நான் தொடர்ந்து அவர்களை அல்லது அதுக்களை
வழிநடத்துவேன்

அதிகம் செலவில்லை

ஒற்றை மேடை

ஒரேயொரு மைக்

வழக்கமான வாக்குறுதி @ கள்

அவ்வளவுதான் அவ்வளவுதான்

அத்தனை பேரும்
அத்தனை பேரும்

எத்தனை கேள்விகள்
வரினும்
எத்தனை சாட்சிகள்
வரினும்

உத்தமன் நான் என்பர்
புத்தனும் யான் என்பர்

எப்படியும் நம்புவர்
வழிகளற்றவர்

நாற்றம் வழிந்தும்
முகச்சாயம் அழிந்தும்
மூளை குலைந்தும்
மூக்கில் வழிந்தும்
வீச்சம் தொடர்ந்தும்

நானே தலைவன்
இனியும்
நான்தான் தலைவன்

எனகென்ற
மனசாட்சி
அது
மயிரா போச்சி

-தயாஜி-

பிப்ரவரி 06, 2012

கருத்திட்டவரின் கண்களின் வழிப்பாதை

ஆபாசம் என
ஒதுக்கியதை
ஆராயும் போது
விபரம் விளங்கியது
ஆபாசம்தான்
கருத்து சொன்னவரின் கண்களின்
வழியில்.....

கதைக்காரர்கள் கவனிக்க

எழுதி முடித்திருக்க
வெண்டிய
கதையொன்றின் நாயகன்
அவன்

எழுதுகின்றவனையே
எதிர்த்து குரலெழுப்பி
கூட்டம் சேர்க்கிறான்

துணையாய்
அதே கதையின்
ஏனைய பாத்திரங்களின் படையெடுப்பு

வேறு வழிகளற்ற
நிலையில்

என் கதையில்
அந்நாயகனை
அவன் படி

வடிக்கிறேன்

அடுத்த கதைக்காரர்கள் கவனிக்க......
 
 
-தயாஜி-

பிப்ரவரி 03, 2012

பகுத்தறிவு முகமுடியில்; பயிற்சியாளர்கள் நிஜமுடிகள்நாங்கள் மீசையுடன்
தாடியை மழுங்கடித்திருப்போம்...
மண்டையைத் தவிர
வேறெங்கினும் மயிர் முழைத்தால்
அளிக்கப்பட்ட பயிற்சி வீண்
அம்மா முதல் தங்கை அண்ணி
பக்கத்து வீட்டு பாட்டி ஆண்டி
என
அனைவரையும்
மூச்சு முட்ட கட்டியணைப்போம்
அப்படியே கவிழ்த்தும் பிடிப்போம்
அங்கும் அதுதான்
அப்பா முதல் அண்ணன் தம்பி
பக்கத்து வீட்டு தாத்தா அங்கல்
என
அனைவரையும்
மூச்சு முட்ட கட்டியணைத்து
கவிழ்த்து பிடித்து காதோடு மூக்கை உரசி
பயிற்றுவிக்கப்பட்டதை செய்து
பரவசமடைவோம்
பக்கத்தில் இருப்பவர்
யாரெனினும் கவனம் குறைப்போம்
இதுவரை காத்ததாய்
சொல்லி வந்த
கடவுளையும் கடவுள் சார்ந்த கதைகளையும்
தூக்கியெறிவோம்
ஜாதி மட்டும் பாக்கேட்டில்
பத்திரமாய்
அம்மா கேட்டாலும் அப்பாதான் கேட்டாலும்
நீங்கதான் முட்டாள் நாங்களுமா
என மூக்குடைப்போம்
அதிகம் பேச்சில்லை
வெளியே விரட்டு
கதவடைப்போம்
எங்கள் பயிற்சியில்
பாவமில்லை
புண்ணியமில்லை
உட்புகுவது சோறு
வெளித்தள்ளுவது மலம்
தத்துவமல்ல
பயிற்சி
திருவள்ளுவர் கூட தவறிக் குறிப்பிட்ட
வார்த்தை - முயற்சி
தமிழ் உருப்பட
தமிழர்கள் உயர்ந்திட
முயற்சி வார்த்தையை
மூட்டைக் கட்டுகிறோம்
செய் இல்லை சாவு
இதுதான் நாங்கள்
நினைவுருத்தல்
இது
தத்துவமல்ல
வேதமல்ல
தப்பான குறளல்ல
தவறிச் செல்லும் மதமல்ல
படித்திடாத வேதமல்ல
பயிற்சி
பயிற்சி
பயிற்சிதான்
கடவுளை வணங்குதல் தவறென்போம்
சிலை உருவிலும்
பட வடிவிலும்
கடவுளுமில்லை
கண்றாவி ஏதுமில்லை
என்றுதான்
ஊரூராக செல்வோம்
குழுவாக
மாட்டிக்கொண்டவர்களின்
மண்டையை மணியடித்ததாய்
புரட்சிக் கருத்தில் கழுவி
கை கோர்த்து நடந்திடுவோம்
பயிற்சிபடி அவர்களை நடத்திருவோம்
பயிற்சியாளர் வருவார்
வெண்மை உடையில்
அதே முடியில்
அவரின்
முகம் பொறித்த பட்டைகளை
கோட்டு சூட்டில் தொங்கவிடுவோம்
வீட்டில் கூட அவர் போட்டொ சிரிக்கவிடுவோம்
தாலி மட்டும் ஆகாதவர்க்கு
கழட்டி எறிவதே தமிழகர்களின்
தலையாக கடமையென்பார்
அவர் மதம் சிலுவை என்றும் குறிப்பிடுவார்
ஆமோதிக்கும் அரைப்பாவாடைகாரிகள்
மூலைக்கு நான்கு நாற்காலியில் குந்தியிருக்கும்
தேவையில்லாததற்கெல்லாம் கைதட்டும்
வந்திருப்போரும் அதைச் செய்வர்
கடவுளை கிண்டுவோம்
அரைப்பாவாடைகள் ஆமோதிக்கும்
வந்திருப்போரும் அதையே செய்வர்
இப்படி இப்படியாக சேர்ந்த கூட்டம்தான்
எங்கள் கூட்டம்
நீங்களும் சேரலாம்
ஆனால் சிலவற்றை செய்தால் மட்டும்
சேர்த்துக் கொள்வோம்
தாலியைக் கழட்டுங்கள்
சாமி படங்களை ஒடித்தெறியுங்கள்
திருக்குறளே தவறென்றெண்ணுங்கள்
எல்லாம் மனம்தான் சொல்லுங்கள்
எல்லாம் மனம்தான்
பயிற்சியாளர்க்கு
கட்டணம் செலுத்திடுங்கள்
அவர் முகம் பொறித்த படங்களை வீட்டில் மாட்டுங்கள்
அவர் போட்டோக்களை சட்டை காலரிலும்
பாக்கேட்டிலும் குத்தி வைக்க தயாராகனும்
முடிவாக
யாரும் யாரும் வணக்கம் சொல்லவோ
ஒருவரை மதித்து ஒருவர் வணங்குதல்
இழுக்கு
குனிந்து தலை உயர்த்தி
உங்களை என்னுள் மதிக்கிறேன் என்றே
சொல்லி நிமிரனும்
இத்தனை சொல்லிட்டேனே
இனியாவது எங்களுடன்
கைகோருங்கள்
புதிதாக மாத இதழ் ஒன்றையும்
தொடங்கிட்டோம் தெரியுமா
நிறைவாக
ஒன்று
‘டைனமிக்’ என்றால் அர்த்தம் தெரியுமா
எனக்கு தெரியாது
தேடிக் கொண்டிருக்கிறேன்
கவனிக்க
- றேன்
- றோம்
அல்ல........
-தயாஜி-


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்