பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 29, 2020

ஸ்படிக கிரீடக்காரிகனத்த மழையின் நாளொன்றில்
நினைவிருக்கிறதா
நாம் சந்தித்துக்கொண்டோம்
அது சந்திப்புதானா என முழுமையாய்
புரியவில்லை

வேறெந்த பெயர் வைக்கவும் தெரியவில்லை
தைரியமுமில்லை
உன்னிடம் மட்டும் ஒரு குடை
மழையில் தன்னை நனைந்துக் கொண்டிருந்தது

பிரபஞ்சத்தின் கண்டுபிடிப்பாய்
உனக்கு
ஸ்படிக மழைத்துளிகளின் கிரீடம்
கொடுக்கப்பட்டிருந்தது
வைரம்போல அவை
மினுமினுத்தன

மெல்ல நீ நடந்து வந்தாய்
மழையை மதிக்காது நான்
ஏனோ உன்னைத் தொடர்ந்தேன்
எத்தனை முறை பார்த்தாலும்
அத்தனை முறையும்
நீ பிரமிப்பைக் கொடுக்கத் தவறுவதில்லை

அன்றும் அப்படித்தான்
அருகில் நான் வந்ததும்
குடையை மடக்கி வீசினாய்
இப்போது இருவரும் நனைவோம் என்றெண்ணினேன்

நீயோ
உன் வெண்சிறகை விரித்து
என்னை இழுத்து அணைத்து
மழையில் இருந்து காத்தாய்
மழைத்துளி படர்ந்த
உன் வெண்சிறகின் வாசத்தினை
உன் நினைவு தோன்றும்பொதெல்லாம்
முகர்ந்து சிலிர்க்கிறேன்

#தயாஜி

ஏப்ரல் 27, 2020

'எனக்கொரு வாய்ப்பு கொடு அன்பே என் நட்பே'


வாழ்ந்துவிட்டு போங்கள் 
என்கிறேன்
பார்த்துவிடவும் வேண்டாமென
மறைகிறேன்
கண்டுக்கொள்ளக்கூடாது என
கவனம் கொள்கிறேன்
உங்கள் போலிபுகார்களை காதில்
நுழையாமல் தடுக்கிறேன்

உங்களால் இழந்துவிட்டவைகளை 
நானே
கடன்களாக சுமக்கிறேன்
உங்கள் பச்சை 
துரோகத்திற்கு
வெண்மை பூசுகிறேன்

உங்கள் ஏமாற்று வேளைகளை
கணக்குப்பார்க்காமல் ஒதுக்குகிறேன்
உங்கள்
போலி முகம் குறித்த
வார்த்தைகளை கிள்ளிவிடுகிறேன்
ஆனால்

நீங்கள்
ஆனால் நீங்கள்
என் வாழ்வை 
இம்சிக்கவே யோசிக்கிறீர்கள்
உங்களிடம் வேண்டிக்கொள்வது 
ஒன்றுதான்
உங்களை மன்னிக்க உங்களை மறக்க
எனக்கு ஒரு வாய்ப்பு
ஒரே ஒரு வாய்ப்பு மட்டும்
கொடுத்துவிடுங்கள்
உங்களை மன்னிக்க

என்னால் உங்களை
இம்சிக்க முடியவில்லை
என்னால் உங்களை
தேடிப்பார்க்க முடியவில்லை
என்னால் உங்கள் முகநூலில்
மோப்பமிட முடியவில்லை
என்னால் உங்கள் 
புகைப்படங்களை
மீண்டும் மீண்டும் தேடி
எரித்துவிட முடியவில்லை

என் நினைவுகளில் எங்கல்லாம்
நீங்கள் இருக்கிறீர்களோ
அங்கெல்லாம் என்னால்
துரோகத் திராவகம் 
ஊற்ற முடியவில்லை
என்னால் உங்கள் 
நண்பர்களை 
உதாசினம்
செய்ய முடியவில்லை

நாம் சென்று வந்த இடங்களை
கல்லரைகளாக பார்க்க முடியவில்லை
நாம் பேசிக்கொண்ட நகைச்சுவைகளுக்கு
அழுது வைக்க முடியவில்லை
நாம் சேர்ந்து செய்த பிரார்த்தனைகளை
மூட நம்பிக்கைகளாக
மாற்ற முடியவில்லை
நாம் சேர்ந்துச் சுற்றிய ஊர்களை
திக்கற்றவை  
என நினைக்க முடியவில்லை
நாம் சேர்ந்து 
தின்ற பிராணிகளை மறந்து
சைவனாக மாற தெரியவில்லை
நாம் சேர்ந்து பேசியப் புரளிகளை
உண்மை என நம்ப முடியவில்லை

நிறைவாக என்ன சொல்ல
நிலமையைத் தவிர
ஆகக்கடைசியாக உங்களால்
என்ன செய்ய முடிந்தது

கூட்டணிக்கூடி
ஆள்வைக்கத்தான்  முடிந்தது
அறிவில் அல்ல
ஆயுளில் கெட்டிக்காரன் என்பதால்
அடித்த அடிகளில்
இடது கால் ஒடிந்தது
நெஞ்சு எலும்பு வீங்கியது
எடுத்த இரத்த வாந்திகளில்
பற்களின் சில துகள்கள் விழுந்தன

பாரமெடுத்த மண்டைக்காரன்
என்பதால் என்னவோ
அடித்த அடிகளில் மூளையின்
மேல்மட்ட நினைவுக்கூடம்
ஆட்டம் கண்டு
ஞாபகங்களை திட்டுத்திட்டாக
சிதற விட்டது

வங்கிப்பணமெல்லாம் மருத்துவமனை
மருந்துகளுக்கு மாறிக்கொண்டது

உயிரே
உயிரே
என்பதெல்லாம் காரணத்துடந்தானா?
காரியங்கள் முடிந்ததும்
கனவுகளை கொன்றுவிட
எல்லாமே வெறும் மயிர்கள்தானா…?

நான் சம்பாதித்துக் கொடுத்த
பணக்கூட்டங்களில் உங்களால்
என்ன செய்துவிட முடியும்

மேலும் மேலும்  முதலீடு செய்வீர்கள்
இன்னும் சில புத்தகங்களை 
வெளியிடுவீர்கள்
முன்பொருமுறை திட்டியவர்களுக்கு
எலும்புத்துண்டுகளை விருதுகளில்
கட்டி கூட்டி வருவீர்கள்

அதில் உங்கள் ஆட்டம் காட்டுவீர்கள்
புதியவர்கள் தேவை என
கூப்பாடு போடுவீர்கள்
பேசி  மயக்க முடிந்தவர்களை
டீ-க்கு அழைத்து போவீர்கள்

சம்பத்தப்பட்ட கணவர்களுக்கு
கண்ணாம்பூச்சி காட்டுவீர்கள்

ஒரு நிமிடம்
ஒரு வினாடி
ஒரு நொடி

உங்கள் வீட்டில் இடி விழுந்தால்
என்ன செய்வீகள்
உறவுகளில் உயிர் ஊசலென்றால்
என்ன செய்வீர்கள்
வேலையில் வேசம் கலைந்தால்
என்ன செய்வீர்கள்
ஒரு கை ஊனமானால்
என்ன செய்வீர்கள்
உங்கள் காலில்
யானை புகுந்தால்
என்ன செய்வீர்கள்

இத்தனை பயங்களுடந்தான்
உங்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
என் காதில் கிசுகிசுப்பதை நிறுத்துங்கள்
கெஞ்சி வேண்டுமானும் 
கேட்டுக்கொள்கிறேன்

ஒரு வாய்ப்பு
ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்
உங்களை மன்னித்துவிடுகிறேன்

-தயாஜி

ஏப்ரல் 25, 2020

மந்திரக்காரிநீ வரைவதற்கு கொடுத்திருந்த
காகிதங்களைக் காணவில்லை
வைத்த இடம் நினைவில் உண்டு
காகிதங்களைக் காணவில்லை

வரைவதற்கு நான் 
என்னை தயார்படுத்தித்
திரும்புகையில் 
காகிதங்கள் காணவில்லை
உன்னை எப்படி நம்பவைப்பது

இதோ இங்குதான் நீ கொடுத்தாய்
இதோ இங்குதான் நான் வாங்கினேன்
இதோ
இதோ இங்குதான் நான் வைத்தேன்

உன் விரல்களைக் கொடு
காகிதங்கள் காணாமல் போன
மர்மத்தின் துகள்கள் ஏதும்
எஞ்சியுள்ளனவா என பார்த்துக்கொள்கிறேன்

இத்தனை மிருதுவான 
விரல்களைக் கொண்டா 
காகிதத்தைத் தடவிக்கொடுத்தாய்

மந்திரக்காரியே
இப்படி மாயம் செய்யலாமா

உன் கை தொட்ட
உள்ளாசத்தில் குளிர்ந்து
உலகின் எல்லைவரை எம்பி
குதித்துவிட்ட
காகிதங்களை எப்படி நான் தேடுவேன்
எங்கென்று நான் காணுவேன்

நம்பிக்கையில்லையா
பொய்யா சொல்கிறேன்

சரி வா
உனக்கும் வேண்டாம்
எனக்கும் வேண்டாம்

அருகில் வா
கட்டிப்பிடி
என் மார்பில் காது வை
கண்களை மூடு

நீ எத்தனை பெரிய 
மாய வித்தகி என
உனக்கே நான் காட்டுகிறேன்

வா
கட்டிப்பிடி
காகிதங்களைத் தேடவேண்டும்
வரைவதற்கு நேரமாகிக்கொண்டிருக்கிறது


#தயாஜி


ஏப்ரல் 24, 2020

கண்மணி அன்போடு காதலன்   'கண்மணி அன்போடு காதலன்'           கே.கவி நந்தன் இயக்கிய டெலிமூவி. நேற்றைய இரவு கண்மணியோடும் காதலோடும் கடந்தது.

  தலைப்பிற்கு ஏற்ற படம். சொல்லப்போனால் தலைப்புதான் முழு கதையுமே. ஆண்கள் தொட்டாலே மயங்கும் விழுந்துவிடும் விசித்திர நோய் கொண்டிருக்கிறார் நாயகி. அதனால் அவருக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போகிறது. தன் உடல் பருமனையும் அழகற்ற முகத்தையும் காரணம் காட்டிய காதல் தோல்வியால் மனமுடைந்துப் போகிறார் நாயன். திருமணம் எட்டா கனிதான் என நினைத்து அதனை வெறுக்கிறார். 

   இப்படி இருவித மனப்போக்கு கொண்டவர்கள் சந்திக்கிறார்கள். நட்புகொள்கிறார்கள். சொல்லிக்கொள்ளாமல் காதல் இருவர்க்குள்ளும் நுழைகிறது. 

       நாயகன் நாயகியின் நோய்மையைப் புரிந்துக்கொள்கிறார். அவளுடன் வாழ்வை பகிர முடிவு செய்கிறார். 

   ஆண்களிடம் இருந்து ஒதுங்கியே இருந்த நாயகி,  நாயகனின் குழந்தைத்தனத்தாலும் அன்பாலும் ஈர்க்கப்படுகிறார். 

   நாயகியின் ஆசைகளை நாயகன் நிறைவேற்றி பார்வையாளர்களையும் கவர்ந்துவிடுகிறார்.

   இருவர்க்குள்ளும் இருக்கும் காதல் மெல்ல மெல்ல பார்வையாளர்களை பரவசப்படுத்தும் பொழுது துரதிஷ்டவசமாக இருவர்க்குள்ளும் பிரிவு ஏற்படுகிறது.

   மீண்டும் தனது தாழ்மையுணர்ச்சியால் நாயகன் ஒடிந்துப்போகிறார். நாயகியிடமிருந்து ஒதுங்குகிறார். 

 அவர்களின் காதல் கைகூடியதா, காதலனும் கண்மணியும் சேர்ந்தார்களா என்பதுதான் மீதி கதை. சொல்லப்போனால் ஒரு சிறுகதை வாசித்த திருப்தியை உணர முடிந்தது.

   நாயகன் நாயகி அறிமுகம். அவர்களின் எதிர்ப்பார்ப்பு. காதல் மலரும் தருணம். திடீர் சிக்கல். மீண்டும் சேர்வார்களா என்கிறா ஆவல் என கணக்கச்சிதமாகக் கதை நகர்த்தப்பட்டிருக்கிறது.   நாயகனின் பெற்றோர்கள், நாயகியின் அம்மா ஆகியோரின் நடிப்பும் வசனங்களும் மிக எதார்த்தம். நாயகனின் கடையில் வேலை செய்யும் உறவுக்காரப் பையன் கவனிக்க வைக்கிறார். இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பு அவரிடம் நன்றாகவே தெரிகிறது.

   அடுத்து நாயகியின் தோழி. அவரின் கதாப்பாத்திரமும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் தேவையில்லாத பாத்திரம் போல காட்டப்பட்டாலும், இவர்தான் முக்கிய திருப்புமுனைக்கு காரணகர்த்தா.
நாயகி தன் கதாப்பாத்திரத்தை நன்கு உணர்ந்து தன்னை வெளிகாட்டியுள்ளார்.

  வர்மன் இளங்கோவனின் இசை, காட்சிகளில் லயிக்க வைக்கிறது.

   இயல்பாகவே, குறையுள்ள கதாப்பாத்திரத்தை வைத்து அழவைக்கும் காட்சிகளையும் சிரிக்க வைக்கும் காட்சிகளையும் வருந்தவைக்கும் காட்சிகளையும் எடுத்து விடலாம். ஆனால் அதற்கு அந்த கதாப்பாத்திர நடிகர் பாத்திரத்துடன் ஒன்றிப்போக வேண்டும். இல்லையென்றால் அவர் அழுகையில் நாம் சிரிப்போம். நம்மை அழ வைக்கவே அவர் சிரித்தும் வைப்பார். காதலன் பாத்திரத்தில் நடித்திருக்கும் குபேன் மஹாதேவனுக்கு ஒரு பெரிய சலியூட் போடலாம். எந்த வகையிலும் நாயகன் மீது பொய்யான கழிவிரக்கத்தை காட்டாமல் படமாக்கிய இயக்குனரைக் கட்டியணைத்துக் கை குலுக்கலாம்.

    தோய்வில்லாத காட்சியமைப்பு, தகுந்த நடிகர்கள், சரியான திரைக்கதை, உருத்தாத இசை என தேவையானது தேவனையான அளவில் போடப்பட்டுள்ள டெலிமுவி இந்த ' கண்மணி அன்போடு காதல்.

   நம் கலைஞனின் படம், என்பதைத் தாண்டியும் திறைமைசாலியின் படைப்பு என்று முன் நிற்கிறது. 
இயக்குனர் கே.கவி நந்தன்

நிச்சயம் குடும்பத்தோடு பார்க்கலாம். ரசிக்கவும் சிரிக்கவும்    
சக மனிதர்க்கும் மனமிருக்கு என்பதை புரிந்துக்கொள்ளாலாம்.

   படக்குழுவினர்க்கு பாராட்டுகள். தொடர் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

- தயாஜி

தற்காலிகத் தனிமை

   
   இன்னும் இரண்டு வாரங்கள். நேரலையில் பிரதமர் பேசி முடிக்கப்போகிறார். சுகுமாறனுக்கு அது மன உளைச்சலைக் கொடுத்தது. சுகுமாறனுக்கு மட்டுமா? சுற்றுவட்டார மாறன்கள் அனைவருக்கும்தான். முகநூலில் பலர் பதிந்த புலம்பல் போலவே தானும் பதிவு போட்டார்.

         பெரிய வீடுதான். ஒரு நாள் இரண்டு நாளென்றால் பரவாயில்லை. வீட்டையே சுற்றிப் பார்க்கலாம் ஆனால் மொத்தமாக இரண்டாவது மாதமாக இந்நிலை என்றால் பாவம்தானே. மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு. தேவையின்றி யாரும் வெளியேறக்கூடாது. வீட்டில் இருப்பதுதான் பாதுகாப்பு. உத்தரவை மீறினால் சிறை தண்டனையும் அபராதமும் உண்டு.

  பொழுது முழுவதும் கைபேசி, தொலைக்காட்சி, இணையம் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து மனம் குழம்பிப்போய்விட்டது.

    தனக்கு மட்டும்தான் இப்படியா என வீட்டில் ஒவ்வொருவரின் அறையையும் நோட்டமிட்ட தொடங்கினார். அப்போதாவது பொழுது கொஞ்சம் போகுமே என்பதற்காக.

    மகன் தன் அறையில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கிறான். வீடு பற்றி எரிந்தாலும் அவனுக்கு தெரியாது.

    மகள் தன் அறையில் பாடல்களைக் கேட்டுக்கொண்டே ஸ்கைப்பில் யாருடனோ சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்கிறாள். விட்டால் பேசியே வயதாகிவிடுவாள் போல.

     மனைவி மஞ்சளாய் எதையோ தடவிய முகத்துடன் யூடியூப்பில் அழகு குறிப்புகளைக் கேட்டுக்கொண்டுருக்கிறாள். இன்னும் எத்தனை கொடுமைகளை தான் அனுபவிக்க வேண்டும் என கண்கள் கலங்கினார்.

   நான்காவது, ஸ்டோர் ரூம் கதவை திறக்கிறார். உள்ளே, கட்டிலில் அமர்ந்தபடி திறந்த ஜன்னலில் எதையோ பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார். எந்த வித பதட்டமும் இல்லை, அவரின்  முகம் அத்தனை சாந்தமாக இருக்கிறது.

    சில ஆண்டுகளாக அம்மாவை இந்த அறையிலேயே வைத்திருப்பது சுகுமாறனுக்கு இப்போதுதான் சுருக்கென்றது. 

#தயாஜி

'அவளும் என் கவிதைகளும்'உன்னால் என் கவிதை
நூலுக்கு என்ன கொடுக்க
முடியுமென்பதே விவாதம்
எதுவும் பேசவில்லை
எழுந்தாள்
என் கவிதை நூல்களை
ஒன்றின் பின் ஒன்றாக கோர்த்தாள்
படுத்தவாக்கில் ஆளுயர நீளமாய் தெரிந்தன
மெல்ல முன் நகர்ந்தாள்
வெறுமனே நகரவில்லை
ஒவ்வொரு அடிக்கும்
நூல்களின் முகப்புகளைத்
தடவிக்கொண்டே போனாள்
தலை நூலை மட்டும்
சில நொடிகள் நீள
தொட்டுத்தடவி விட்டுச்சென்றாள்
சட்டென நூல்கள் மகுடி கேட்ட
பாம்புகளாக
உடல் நெளிந்து
வால் அதிர்ந்து
தலை தூக்கி அவள் பின்னே
ஊர்ந்ததுப் சென்றன
கைகளை நீட்டுகிறாள்
பாம்பாகிவிட்ட நூல்கள்
அவன் கையணைப்பில் குழந்தை போல உறங்கத் தொடங்கின
மெல்ல அதனை மேஜையில்
வைத்தவள்
கொஞ்ச நேரம் தடவிக்கொடுத்தாள்
மீண்டும்
ஒற்றை நூலை உருவி எடுத்து
நடுபக்கம் பிரித்தாள்
'பூவிதழ்' எனும் தலைப்புக் கவிதை தெரிந்தது
அருகிலிருந்த குவளையில் நீர் அருந்தியவள்
ஆழ்ந்த சுவாசத்தை உள்ளிழுத்து
பனிக்காற்றை ஊதினாள்
நூல்களில் பனி நீர் பரவ
ஏடுகளிலிருந்து எழுந்து வளர்ந்து
பூத்துக் குலுங்கின பூச்செடிகள்
அதிலொரு பூவைத் தொடவும்
அதுதன் இதழொன்றை அவளுக்கு எடுத்துக் கொடுத்தது
இன்னொரு புத்தகத்தை எடுத்து என்னிடம் கொடுத்து
திறக்கச்சொன்னாள்
எனக்கு உள்ளூர பயம்
என்ன செய்ய
இப்படி மாட்டிக்கொண்டேனே என பதறினேன்
என்னால் எழுத மட்டும் முடிகிறது
என்கிறேன்
நீ நினைத்தை எழுது
நீ எழுதியதை
நான் நினைக்க வைக்கிறேன் என்கிறாள்

புத்தகவாசிப்பு_2020_9 ‘ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள்’#புத்தகவாசிப்பு_2020_9  ‘ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள்’
புததகம் –ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள்’
எழுத்து – அதி. இராஜகுமாரன்
பதிப்பகம் – மழைச்சாரல் (மலேசியா)

       மலேசிய பத்திரிக்கைத் துறையில் எப்போதும் நினைவில் கொள்ளும் பெயர்களில் இவர் பெயரும் அடங்கும். இங்கு புதுக்கவிதைகள் அதிகரிக்க அதற்கான களம் அமைத்து பங்காற்றியவர்களில் ஒருவர். இன்றும் பல கவிஞர்கள் நன்றியோடு இவரை நினைக்க தவறுவதில்லை. ஆரம்பகால தமிழ்மலர் பத்திரிகை அதனை அடுத்து ஆதி.குமணனின் வானம்பாடி, தமிழோசை பத்திரிகைகளில் இருந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து தமது சொந்த இதழ்களான  நயனம் , நிலா போன்ற இதழல்களை சிறப்பாக வழி நடத்தியவர். காலச்சூழலில் நயனம் இதழ் இப்போது இல்லாவிட்டாலும், பலரின் படைப்புகளுக்கு அவ்விதழ்தான் தாய்வீடு. எளிமையானவர். யாரிடமும் அதிர்ந்துப் பேசாதவர். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இதுவொன்றும் மிகப்படுத்தல் அல்ல என்று அவரை அறிந்த எல்லோர்க்கும் தெரியும்.

      இச்சமயம் இன்னொன்றையும் இங்கு பதிவு செய்தாக வேண்டியுள்ளது. ஆங்கிலப் புலமையும் கணினி நுட்பமும் அறிந்தவர். ‘இணையம்’ என்ற சொல்லைத் தமிழ்கூறு நல்லுலகத்திற்கு வழங்கியவர் இவர்தான்.

       அவரின் ஆலோசனையின் பெயரில் கவிஞர் மீராவாணி, ‘மழைச்சாரல்’ எனும் புலனக்குழுவைத் தொடங்கினார். அதன் வழி பல படைப்பாளர்கள் வாசகர்கள் ஒன்றிணைந்தார்கள். அவ்வொரு படைப்பாளர்களும் தத்தம் படைப்புகளை அந்த புலனக்குழுவில் பகிர்ந்துவருகிறார்கள். அதற்கான விமர்சனமும் அதில் இடம்பெறும். அதன் அடுத்த முன்னெடுப்பாக அக்குழுவில் உள்ள பல படைப்பாளர்கள் புத்தகங்களை வெளியீடு செய்துள்ளார்கள். சமீபத்தில் இக்குழுவில் சிறுகதை போட்டி ஒன்றை நடந்தினார்கள். அதில் வெற்றி பெற்ற சிறுகதைகளைத் தொகுக்கின்ற அதே சமயத்தில் மறைந்த ஐயா ஆதி. இராஜகுமாரன் அவர்களின் சிறுகதைகளையும் தொகுத்து மீண்டும் பிரசுரம் செய்தார்கள்.

      1984-ம் ஆண்டில் ‘முகவரி தேடும் மலர்கள்’ என்கிற தலைப்பில் வெளிவந்த சிறுகதைகளை இப்போது மீள் பிரசுரமாக ‘ஆதி. இராஜகுமாரன் சிறுகதைகள் ’ என்று வெளியிட்டார்கள்.

      இனி புத்தக வாசிப்பிற்குச் செல்வோம்.

      படைப்புகளை வாசிக்கையில் அது எழுதப்பட்ட காலகட்டத்தை கவனிக்க வேண்டும் என்பது என் கருத்து. என்னதான் காலத்தையும் தாண்டிய படைப்பு என்றாலும் அது எழுதபட்ட காலக்கட்டம்தான் அந்த படைப்பை காலத்தைக் கடந்து பயணிக்க வைக்கிறது.

       இந்த தொகுப்பில் மொத்தமாக பதினாறு சிறுகதைகள் இருக்கின்றன.

     ‘ஒரு தேவதை உறங்குகிறாள்’ என்னும் சிறுகதை மரம் வெட்டுபவனின் கனவை அடிப்படியாகக் கொண்டது. அது அவன் கனவு மட்டுமல்ல வாசகர்களையும் புதிய உலகுக்கு அழைத்துச் செல்லும் கனவு. சின்ன வயதில் இருந்தே கதைகள் கேட்டு வளர்ந்த நாயகன். காலப்போக்கில் தனக்குத்தானெ கதைகளைச் சொல்ல ஆரம்பிக்கின்றான். தனது தாத்தா சொல்லிய கதைகள் முடிந்துவிட்டபடியால் தானே கதைகளை உருவாக்க ஆரம்பிக்கின்றான். அவன் கதைகளில் அவனே நாயகன். நிகழ்காலத்திற்கும் கனவுலகிற்குமான பயணமாக அவனது கதை தன்னை அமைத்துக் கொள்கிறது. ஓர் அழகான மாளிகையைக் கட்டிவிட நினைக்கிறான், அதற்கு முன்பாக தனக்கு ஒரு வித்தியாசமான அழகு நயமிக்க அறையொன்றை கட்டிக்கொள்ள நினைக்கிறான். தானே அதனை கட்டிக்கொள்ள முடிவு எடுக்கிறான். அப்போது அவனுக்கு துணையாக வானிலிருந்து ஒரு பஞ்சவர்ணக் குதிரை வருகிறது.

     பஞ்சவர்ணக் குதிரை அவனுக்கு உதவுவதாகவும் ஆனால் அதற்கு ஒரு உறுதி மொழியையும் கேட்கிறது. அவன் வாழ்வில் காதலுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும், அப்படி எந்த பெண்ணிடமாவது இவன் மயங்கினால் அவனை அவ்விடத்துலேயே விட்டுவிட்டு பஞ்சாவர்ணக் குதிரை மறைந்துடும்.

      குதிரையின் மீதமர்ந்து அவனுக்கான அழகிய மாளிகையைக் கட்டத் தொடங்குகின்றான். குதிரை அவனது கட்டிடக் கலையைக் கண்டு பிரம்பிக்கிறது. ஆனால் அங்குதான் சிக்கல் ஆரம்பமாகிறது. ஒரு அழகிய தேவலோக மங்கையை காண்கிறான். அவர்களுக்குள் காதல் மலர்கிறது.     
  
      தேவலோக மங்கையின் தந்தை இதனை விரும்பவில்லை. நாயகனுக்கு அவன் காதலை நிரூபிக்க சில சவால்களை கொடுக்கின்றார். அதன் பிறகு கதை வேறு பக்கமாக பயணிக்கின்றது. அவனது கனவு கலைந்ததா அல்லது கனவு தொடர்ந்ததா  என்பதுதான் மீதி கதை.

       இக்கதையை நகர்த்திச் சென்ற விதம் ஆச்சர்யமாக இருந்தது. இன்று எழுதிய கதை போல  புதிதாகவே தெரிகிறது. இக்கதையில் ‘புள்ளினங்கள்’ என்கிற சொல்லாடலை ஆசிரியர் பயன்படுத்தியிருப்பார். குறுந்தொகை பாடலில் ‘புள்ளினங்கள்’ என்று பறவைக்கூட்டத்தை சொல்லியிருப்பார்கள். ஷங்கரின் 2.0 திரைப்படத்தில் நா.முத்துக்குமார் ‘புள்ளினங்காள்’ என்று பாடல் வரியை ஆரம்பித்திருப்பார். பலரும் அந்த வார்த்தைகளை சிலாகித்துச் பேசியிருந்தார்கள். ஆனால் அந்த குறுந்தொகை சொல்லாடலை முன்னமே தன் சிறுகதையில் பயன்படுத்தி தன் வாசிப்பை எடுத்துக்காட்டி இருக்கிறார். எனக்கும் இவ்வார்த்தையை வாசித்ததும் ஓர் பூரிப்பு தொற்றிக்கொண்டது. இப்படியாக கவனிக்க வேண்டிய படைப்புகளும் படைப்பாளர்களும் இங்கு இருக்கவே செய்கிறார்கள். சரியான் வாசிப்பும் சரியான விவாதங்களும் இல்லாமையே நாம் காணும் இங்குள்ள வெற்றிடத்திற்கு காரணம். ஒன்று சரியானவர்க்கு இடமில்லை, இன்னொன்று தேவையற்றவர்க்கு எல்லாவகையிலும் இடம் கிடைக்கிறது.

     ‘திரைகள்’ அழகான காதல் கதையாகத் தொடங்குகிறது. பேருந்து நிலையத்தில் பார்க்கின்ற பெண்ணின் மீது நாயகன் காதல் கொள்கிறான். வேலை முடிந்த உடனே கிளம்பிவிடுகிறான் நாயகன். நாள் தவறாமல் அவளை பார்க்கிறான். பேருந்து நிலையத்தில் அவள் ஒரு பக்கம் இவன் ஒரு பக்கம். ஒரு முறை கூட அவள் அவனை பார்க்கவில்லை. இப்படியாக அவனது காதல் கதை ஒரு மாதம் தொடர்கிறது. தன்னிடம் ஒரு கார் இருந்தால் எப்படி இருக்கும் என யோசிக்கிறான். ஆனால் அதற்காக பணத்தை சேமிக்க எத்தனை ஆண்டுகள் உழைக்க வேண்டும் என புலம்புகிறான்.  சமயங்களில் அவனது நண்பர்கள் அவ்வழியே காரில் சென்றால் அவனையும் அழைப்பார்கள். ஆனான் அவனோ அதனை தவிர்த்துவிடுவான்.  அவளிடம் எப்படியாவது தன் காதலை சொல்லிவிட காத்திருக்கும் நாயகன் எப்படி அந்த வாய்ப்பை நழுவ விடுவான். ஒரு நாள் ஒரு கார் வந்து நிற்கிறது. அவளுக்கு அருகில். அந்த பெண் காரில் ஏறிக்கொண்டாள். காரின் கதவை சாத்துவதற்கான ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் அவள் அவனைப் பார்க்கிறாள். அப்போதுதான் அவனுக்கு பொறி தட்டியதாக ஆசிரியர் சொல்கிறார். வாசகர்களுக்கு இந்நேரம் பொறி தட்டியிருக்கும். ஆக, இத்தனை நாளும் அவள் அவனை பார்க்காமல் இருக்கவில்லை. அவள் எதிர்ப்பார்ப்பில் நாயகன் இல்லை என்பதே அந்த பொறி.
     ‘தனிமரங்கள்’ சிறுகதை. உண்மைக்கும் நேர்மைக்கும் உரத்தக் குரல் தேவையில்லை என சொல்லும் கதை. அப்பா ஓடிப்போகிறார். பிள்ளைகளுடன் அம்மா தனியாகிறாள். அவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ய வருகிறார் சுப்பையா. பல புரளிகள் பல கிசுகிசுக்களுக்கு மத்தியில் அவர் அந்த குடும்பத்திற்கு உதவுகிறார். பிள்ளைகள் வளர்ந்தப் பின்னர், ஊரார்களில் புரளிகள் மீது அவர்களுக்கு சந்தேகம் வருகிறது. ஆளுக்கு ஆள் வேவ்வேறு திசைக்கு சென்றுவிடுகிறார்கள். ஒரு மகன் மட்டும் அம்மாவுடன் இருக்கிறான். அவன் மனதிலும் சந்தேகம் இல்லாமலில்லை. அவனது சந்தேகத்திற்கு அம்மா சொல்லும் பதில் என்ன என்பதுதன கதை.

      ‘அக்கரைப் பச்சை’ வெளிநாடுகளுக்கு சென்று பல அவமானங்களைச் சுமந்து சம்பாதிப்பது எதற்காக ? என்கிற கேள்விக்கான பதில் தான் கதை. ஆனால் இதுவரை யாரும் சொல்லி விடாத காரணம் என்பதுதான் இக்கதையைக் காப்பாற்றுகிறது. இக்கதை முக்கியமான கதையாக மாறுகிறது. வழக்கமாக வறுமை என்போம், கடன் என்போம். ஆனால் நாயகனுக்கு தேவை மரியாதை. ஒர் ஆசிரியர் போல ஒரு காவல் துரையினர் போல , வெளிநாட்டில் வேலை செய்பவர் என்கிற மரியாதை. அதன் ஊடே இங்கு நிலவும் சிவப்பு அடையாள அட்டையையும் சொல்லி இன்னும் தொடரும் அவலத்தை சுட்டிக்காட்டியுள்ளார் ஆசிரியர்.

      ‘போராட்டாங்கள்’ . இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்துவிட்ட கதை. வாசித்து முடித்ததும் அன்றைய தினம் முழுக்க இக்கதையே என் நினைவுகளில் இருந்தது. மனசுக்குள் பல கேள்விகள். கதையின் கரு சிறியதுதான் ஆனால் அது எழுப்பும் கேள்வி ரொம்பவும் பெரியது. தனக்கு வரவிருக்கும் மரணத்தை எப்படி ஒரு வீரனாக நாயகன் எதிர்க்கொள்கிறான் என்பதுதான் கதை.

      ‘இரவுகள் வெளிச்சமானவை அல்ல’. சில கதைகளை மட்டுமே வாசித்த உடன் அருகில் இருப்பவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளத் தோன்றும். இக்கதை அந்த வகையைச் சார்ந்ததுதான். நாம் பிறரின் நன்மைக்காக செய்யும் செயல் அவர்களுக்கு பெரும் தீமையைக் கொடுத்துவிடவும் கூடும் என்பதுதான் கதை. அவளுக்கு தன் உருவ அமைப்பால் திருமணம் தடுங்களாகிப் போகிறது. ஆனால் அவளுக்கு பார்வையற்ற ஒருவரை திருமணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. முதலில் மனம் வலித்தாலும்  பின்னர் தன்னைத்தானே சமாதானம் செய்துக் கொண்டு புது வாழ்க்கைக்கு தயாராகிறாள். தனக்கு பார்த்திருக்கும் பெண் மிகவும் அழகானவள் என்பது போன்ற விபரங்கள் மாப்பிள்ளைக்குக் கிடைக்கிறது. பார்வையற்ற ஒருவனை திருமணம் செய்து அந்த பெண் அவள் வாழ்வை வீணாக்க வேண்டாம். அவளாவது நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என திருமணத்தை வேண்டாம் என்கிறார். ஒரு பார்வையற்றவருக்குக் கூட தனக்கு வாழ்க்கைத் தர முன்வரவில்லையே என அப்பெண் தற்கொலைச் செய்துக் கொள்கிறாள். சமயங்களில் பிறருக்கு நாம் செய்யும் நன்மைகள் நமக்கே பெருந்துயரத்தைக் கொடுத்துவிடுகின்றன.

     ‘சராசரி’ என்ற கதை கணவன் மனைவியின் உரையாடலிலேயே நகர்கிறது.  அவர்களுக்குள் ஏற்படும் சிக்கல்தான் கதை.

      ‘வானம் பழுப்பதில்லை’ அம்மாவின் மரணத்தின் பிறகு தன் உடல் உழைக்க ஒத்துழைக்காததால் பிச்சை எடுக்க ஆரம்பிக்கிறான் மகன். அம்மா தனக்கு பாடிய தாலாட்டு பாடல்கள்தான் அவருக்கு மூலதனம். அது தொடர்கதையா இல்லை மாற்றும் வருகிறதா என்பது கதை.

     ‘சீசர்கள் குருசோக்கள் தான்’. கொள்கை பிடிப்புள்ள ஒருவர் காலமாற்றத்தால் எதிர்க்கொள்ளும்  ஏமாற்றமும் புறக்கணிப்பும்தான் கதை.

      ‘ஞானரதம்’. நாயகனுக்கு, எதிர்பாராத சந்திப்பில் தற்கொலைக்கு தயாரான ஒருவனுடனான உரையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. தனக்குத்தானே சொல்லவேண்டியதை எதிரில் உள்ளவருக்கு நாயகன் சொல்கிறார். கதையின் முடிவை கொஞ்சம் மாற்றியிருந்தால் கதை சிறப்பாக கதையாக மாறியிருக்க வாய்ப்பு உள்ளது. அதாவது, அறிவுரை கேட்டவரும் சொன்னவரும் ஒருவர்தான் என்பது போன்ற முடிவைக் கொடுத்திருக்கலாம்.

       ‘எரியாத நட்சத்திரங்கள்’ சுதந்திரம் பெற்றதிலிருந்து எதிர்நோக்கும் சிக்கல், சிவப்பு அடையாள அட்டை. இக்கதை அதன் சிக்கலை சொல்கிறது. மலேசியாவில் பெரும்பாலான கதைகள் இதனை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து எழுதப்படுகிறது. சொல்லுகின்ற விதத்தில் மட்டுமே அக்கதை கவனத்தை பெறுவதும் தோல்வியடைவதும் அமைகிறது.

       ‘மனக்குதிரை’. தற்கொலைக்கு தயாராகும் நாயகனின் வீட்டிற்கு நண்பனின் குடும்பத்தினர் வருகிறார்கள். பிள்ளைகளுடன் ஒரு வாரம் தங்குகிறார்கள். நாயகனுக்கு என்ன தேவை என்கிற தெளிவு கிடைக்கிறது. நாயகனின் தற்கொலை எண்ணம் மாறியதா என்பதுதான் மீதி கதை.

      ‘என் வாரிசுகள்’. கதை அழகாக சொல்லப்பட்டுள்ளது. தனது இறுதி காலத்தின் நிறைவில் முன்னாள் எழுத்தாளர் தன்னைப்பற்றி நினைவுக்கூர்கிறார். யார் யாரையெல்லாம் சந்தித்தார். ஏன் சந்தித்தார் என்பதுதான் கதை. கதையின் முடிவு வாசகர்கள் வருந்தமடைய வைக்கிறது.

       ‘நான் தனியாக இல்லை’. நாற்பது வயதில் பணி ஓய்வு பெற்றுக்கொள்ளும் நபர் அதற்கான நியாயத்தையும் அதன் தேவையையும் சொல்லிச்செல்கிறார். அவரின் வாழ்க்கை அதன் பிறகுதான் அவருக்கான வாழ்க்கையாக மாறும் என நம்புகிறார். தன் குடும்பத்தினரையும் அதற்கு பழக்குகிறார்.

       ‘பழைய தரையில் புதிய படுக்கைகள்’ வீட்டு வேலைக்கு வந்து சிரமப்படும் பொண்ணின் கதை. இவ்வாறான கதைகளின் முக்கியத்துவம் இன்றளவும் இருக்கிறது.

        ‘மனமெல்லாம் கைகள்’. தனது வீட்டில் புறக்கணிப்பை எதிர்க்கொள்ளும் நாயகன் அதற்கு மாற்றாக என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பது கதை.  நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது.

நிறைவாக;

      ஆதி. இராஜகுமாரன் குறித்தும் இந்த சிறுகதை தொகுப்பு குறித்தும் இன்னும் அதிகம் சொல்லலாம். சொல்ல வேண்டும். ஆனால் இக்கதைகளை பலரும் வாசித்து பேச வேண்டும் என்பதுதான் என் அவா. குறிப்பாக மலேசியாவில் எழுத விரும்புகின்றவர்கள் எழுத்தாளர்கள் இவரின் கதைகளை வாசிப்பதன் மூலம் நம்மிடையும் நல்ல கதைகளும் நல்ல கதைசொல்லிகளும் இருக்கிறார்கள் என மேற்கொண்டு பேசலாம். மகிழ்ச்சிக் கொள்ளலாம். மண்ணுலகில் மறைந்தாலும் மலேசிய இலக்கிய உலகம் என்றும் ஆதி.இராஜகுமாரன் பெயர் இருந்துக்கொண்டே இருக்கும்.

-      தயாஜி
  
      


ஏப்ரல் 22, 2020

நன்றாக இருங்கள்       யாஹூ என்னும் மின்னஞ்சல் முகவரி உங்கள் யாரிடமும் இருக்கிறதா. அதன் நினைவாவது உள்ளதா ?. என்னிடமும் இல்லை. நேற்றுவரை.

       எனது பழைய நண்பன் ஒருவனை சந்தித்திருந்தேன். உரையாடலின் முடிவில் ‘யாஹு இ-மெயிலை நீயாவது வச்சிருக்கயா இல்ல மறந்துட்டயா?’ என மீண்டும் ஆரம்பித்தான். அப்படியே எங்கே எப்போது எனத் தொடர்ந்தவன் மதியத்தில் முடித்தான். வீடு வந்த நான், கணினியில் அவன் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தேன்.

       கடவுச்சொல் நினைவில் இல்லை. ஆனாலும் இன்னமும் அதே எண் கொண்ட கைபேசிதான் உபயோகத்தில் இருந்ததால் அதன் மூலம் சில விப்ரங்களைப்பெற்று பழைய மின்னஞ்சலில் புதிய காதலியில் பெயரில் நுழைந்தேன். நான்காயிரம் மின்னஞ்சல்கள் வரை திறக்காமல் இருந்தன.

     பல மாற்றங்களை கொண்டு வந்திருந்தார்கள். இவற்றையெல்லாம் அப்போதே செய்திருந்தால் எத்தனை வசதியாக இருந்திருக்கும் . நேற்று கூட புதிதாக ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது. ஆச்சர்யம்தான்.

      அதைவிடவும் ஆச்சர்யம் என்னவெனில், ஒரே மின்னஞ்சலில் இருந்து சமீபமாக தொடர்ந்து மின்னஞ்சல்கள்  வந்துகொண்டே இருந்திருக்கின்றன. ஆர்வமானது.  அந்நபர் அனுப்பிய முதல் மின்னஞ்சலுக்குச் சென்றேன். நான்காண்டுகளாக அது வந்திருந்தது.

   ‘வணக்கம் ஐயா, இன்று உங்கள் நிகழ்ச்சியில் காலை மணி 10 மணிக்கு 26 நிமிடத்தில் 13 வது வினாடியில் பாடலை ஒலிபரப்பிக் கொண்டிருந்தீர்கள். வழக்கம் போல என்னால் அந்த பாடலை கேட்க முடியவில்லை.  ஏதோ எனக்குள் இசைக்கத் தொடங்கிவிட்டது. அதன் வரிகள் எனக்கே எனக்காக மட்டுமே எழுதப்பட்ட பாடல் போல இருந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் நான் அழுதேவிட்டேன். பாதியில்  இருந்து கேட்ட பாடல் என்பதாலும் மெய்மறந்து எங்கோ சென்றுவிட்டதாலும் என்னால் அப்பாடல் குறித்த எந்த விபரங்களையும் அறிய முடியவில்லை… தயவு செய்து அந்தப் பாடலை எனக்கு சீடியில் போட முடியுமா.. மின்னஞ்சல் அனுப்ப முடியுமா.. என்ன பாடல், என்ன திரைப்படம் என சொல்ல முடியுமா..? அதற்கு பணம் தேவையென்றாலும் சொல்லுங்கள்.. தயவு செய்து உதவுங்கள்…’ உடன் அந்நபரின் கைபேசி எண்ணும் இருந்தது.

    வானொலி பணியைவிட்டு வலகி ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கும். உந்துதலில் பேரில் அதில் இருந்த கைபேசிக்கு அழைத்தேன். அந்த எண்  இப்போது பயன்பாட்டில் இல்லை என்று வந்தது.

   அந்நபர் நேற்று அனுப்பிய கடைசி மின்னஞ்சலைத் திறந்தேன்.

‘வணக்கம் ஐயா உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி. எல்லோர்க்கும் எல்லாமும் கிடைத்துவிடாதுதான்.. என்னிடம் சொல்வதற்கு எதுவும் இல்லை… நன்றாக இருங்கள்…நன்றி ’


    மீண்டும் மீண்டும் இந்த மின்னஞ்சலைப் படிக்கிறேன். அவர் எழுதியிருக்கும் ‘நன்றாக இருங்கள்’ என்ற வார்த்தையில் என்னமோ இருப்பதாகவே மனம் நடுங்க ஆரம்பித்தது.

-தயாஜி
   

ஏப்ரல் 20, 2020

மது மாது சூது....     குழப்பம். நடப்பதை கவனித்துக் கொண்டே இருந்தான். இன்னமும் போதை தெளியவில்லையா என்று தன்னைத்தானே கேட்டும் கொண்டான். வேறு வழியில்லை. கேட்டுவிடுவதுதான் சரி.

“செல்லம்…”

“சொல்லுங்க…”

“கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காத..?”
“தப்பா எடுத்துகிறதுக்கு என்ன இருக்கு.. கேளுங்க..”

  “நேத்தும் நான் குடிச்சிட்டுதான் வீட்டுக்கு வந்தேன், வந்தவுடனே படுத்துட்டேன்னு நினைக்கறேன்..”
“ஆமா.. வந்தோன்ன, படுத்துட்டிங்கதான்.. அதுக்கு என்ன இப்போ..?”

  “எப்பவும், குடிச்சிட்டு வந்த மறுநாள், நீ மூஞ்சிய தூக்கி வச்சிக்குவ.. சரியா பேச மாட்ட.. கூப்டா கூட தெரியாத மாதிரி இருப்ப.. இப்ப என்னடான்னா.. சிரிச்ச முகமா இருக்க.. கூப்டா பதில்லாம் சொல்ற.. காலையிலேயே பசியாற வேற செஞ்சுகிட்டு இருக்க…”

  குழப்பத்தில் இருந்தவனுக்கு, நேற்று நடந்ததை அவள் சொல்ல ஆரம்பித்தாள்.

  “நேத்துதான் நீங்க குடிச்சிட்டுதான் வந்தீங்க.. ரொம்பவும் நிலை தடுமாறியும் இருந்திங்க.. வந்தவுடனே சப்பாத்தியக் கூட கழட்டாம படுத்துட்டிங்க.. போனா போகுதுன்னு உங்க சப்பாத்தையும் சட்டையையும்  கழட்டி வைக்க நான் முயற்சி செய்தேன்.. அப்போ நீங்க என்ன செய்தீங்க தெரியுமா..?”

“…!”

   “ஏய் கிட்ட வராத.. எனக்கு கல்யாணம் ஆச்சி.. அழகான ‘வைப்’ இருக்கா.. நான் அவளை ரொம்ப ‘லவ்’ பண்றேன்னு சொன்னீங்க.. அதைவிட எனக்கு வேறு என்னங்க வேணும்.. அவ்வளவு போதைலதும் உங்க மனசுல நான் தான் இருக்கேன்.. இனி நீங்க எங்க வேணும்னாலும் போங்க எவ்வளவு வேணும்னாலும் குடிங்க… ஒன்னும் சொல்ல மாட்டேன்..”

    அங்கிருந்து வந்து தன் ஆசை கணவனுக்கு காபி-யைக் கொடுத்தாள். தன் அறைக்கு சென்றாள். அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் மெல்ல நகர்ந்தான்.

    தன் கைபேசியை எடுத்து, ‘ப்ரோ நம்ம ப்ளான் சக்ஸஸ்’ என நண்பனுக்கு செய்தி அனுப்பினான். போதையில் இருப்பது போல் நடித்து அந்த வசனத்தை பேசும் சூதை அந்த 'ப்ரோ'தான்  இவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தான்.

- தயாஜி


பொண்டாட்டி சாபம்
   மெல்ல நினைவை இழந்துக் கொண்டிருந்தான். செல்வனுக்கு அந்த கடைசி நினைவுகள் மட்டுமே இப்போது இருந்தன. தலையில் பலத்த காயம். மருத்துவர்கள் இனி காப்பாற்றுவது கடினம் என சொல்லிவிட்டார்கள்.

      அவளின் சாபம் இத்தனை வேகத்தில் பலிக்கும் என அவளும்தான் நினைக்கவில்லை. அவர்களின் காதல் திருமண வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்து.

     எந்த குறையும் இல்லை. ஆனால் ஏனோ செல்வனுக்கு சீதா மீது இருந்த காதல் கரைந்து கீதா மேல் ஈர்ப்பாக வளரத்தொடங்கியது.

     அன்றுதான் அந்த சம்பவம் நடந்தது. கொஞ்ச கொஞ்சமாக இருந்து வந்த சண்டை அன்று அதன் எல்லையைத் தாண்டியது. இனி சீதா தனக்கு வேண்டாம். கீதாவுடன் தான் வாழப்போவதாக செல்வன் சொல்லிவிட்டான்.

        சீதாவால் அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. சண்டை முற்றியது. செல்வன் அவன் கட்டிய தாலியை அவனே இழுத்து அறுத்தான். அன்று அவள் பார்த்தக் கணவன்  வேறு யார் போலவோ இருந்தான்.

   அவளால் தாங்க முடியவில்லை. ஒட்டுமொத்த சாபத்தையும் அவன் மீது வீசினாள். அவனை எதுவும் பாதிக்கவில்லை. வெளியேறினான்.
இனி தான்,  அர்த்தமின்றி வாழக் கூடாது என சீதா தீர்மானம் செய்தாள். வெறும் கழுத்தைத் தடவிக்கொண்டே பால்கனிக்கு வந்தாள். ஆறாவது மாடியில் இருந்து கீழே பார்த்தாள். அந்த பக்கம் ஒரு லாரி வேகமாக வந்துக் கொண்டிருந்தது. இந்த பக்கம் கையில் தாலியுடன் செல்வன் வெளியேறுகிறான்.

     அவன் கண்முன்னே தற்கொலை செய்ய அரைநொடியில் முடிவெடுத்து அடுத்த நொடியில் பால்கனியில் இருந்து குதித்தாள்.

     அவள் குதிக்கவும் லாரி வரவும் செல்வம் கடக்கவும் சரியாக இருந்தது. செல்வம் முன்னே லாரி எமெர்ஜென்சி பிரேக் போட்டு நிற்க, செல்வம் அதை பார்த்து அப்படியே நிற்க, அவன் தலையிலேயே சீதா விழுந்தாள்.

     மருத்துவமனை படுக்கையில் செல்வம் இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருந்தான். சொர்ப்பக் காயங்களுடன் அவன் அருகில் சீதா நின்றுக்கொண்டிருந்தாள். அவளுக்கு அழுகை வரவில்லை. அவளின் வலது கை அவளின் வெறும் கழுத்தைத் தடவிக்கொண்டு இருந்தது.

- தயாஜி


ஏப்ரல் 19, 2020

புத்தகவாசிப்பு_2020_8 ‘நீலலோகிதம்’        நாம் வாசிப்பதற்கான கதைகளை நாமே தேர்ந்தெடுக்கின்றோம். இது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு, கதைகளையும் அதற்கான வாசகர்களைத் தேர்ந்தெடுத்துவிடுகின்றன. நாம் வாசிக்கின்ற கதைகள் நமக்கு பிடிக்கின்றதா இல்லையா என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையாக நான் நினைப்பது ரசனை. எப்போது நாம் வாசித்து நமக்கு பிடிக்காமல் போன, நமக்கு புரியாமல் போன பல கதைகள் இன்று நமக்கு பிடிக்கின்றன புரிகின்றன. காரணம் குறிப்பிட்ட இடைவேளி நம்மையும் நமது ரசனையையும் வளர்த்திருக்கிறது.

        இப்படி என் நூலகத்தில் பல புத்தகங்கள் பாதி படித்த நிலையில் அப்படியே இருக்கின்றன. அதில் சிலவற்றை இப்போது வாசிக்கையில் ‘அட…இது அப்போது புரியாமல் போயிற்றே..’ என என்னை நானே நினைத்துச் சிரித்துக் கொள்கிறேன். ஆனால், முதல் வாசிப்பில் எனக்கு கிடைத்த அனுபவத்தை மிகவும் சுறுக்கமாக புத்தகத்தில் குறிப்புகளாக எழுதி வைத்திருப்பேன். இனி அவ்வாறான முதல் வாசிப்புக் கொடுக்கும்  அனுபவத்தையும் எனது வலைப்பூவிலும் முழுமையாக புரிந்தவரை எழுதலாம் என நினைக்கிறேன். இதனை வாசிக்கின்ற இதர நண்பர்கள் இதைப்பற்றி மேற்கொண்டு உரையாடவும் அது ஏதுவாக என் புரிதலுக்கு உதவியாக இருக்கும்.  ஒரு இடைவெளி கடந்தப்பின் மீண்டும் வாசிக்கும் போது அதனை எழுதுகையில் இரண்டு இரசனைக்கும் உள்ள வித்தியாசத்தை நானும் நீங்கள் அறிந்துக் கொள்ளலாம். 

      சில நாட்களுக்கு முன்பாக ஷீபா இ.கே-வின் ‘நீலலோகிதம்’ மலையாளச் சிறுகதை புத்தகத்தை வாசித்தேன். கவிஞர் யூமா வாசுகி மொழிப்பெயர்த்திருந்தார். இதுவரை ஷீபா இ.கே குறித்து எனக்கு எந்த அறிதலும் இருக்கவில்லை. ஆதலால் எந்த முன் முடிவுகளும் இல்லாமல் சிறுகதைகளை வாசிக்க எத்தனித்தேன்.

       மொத்தம் 23 சிறுகதைகள் இருந்தன. முழு தொகுப்பையும் படிக்கும் மனநிலையில் வரவில்லை. முதல் இரண்டு கதைகளில் ஏதோ குறைவதாக தோன்றியது. மேலும் மூன்று கதைகளை வாசித்தேன். இப்போதைக்கு இது போதும்  என தோன்றிவிட்டது.

      முதல் கதை ‘ஆட்டோகிராப்’. பிரிந்துவிட்ட காதலர்கள் ஆளுக்கொரு வாழ்க்கையை வாழ்கிறார்கள்.  காதலனுக்கு தாம்பத்தியம் நினைத்தது போல இருக்கவில்லை. காதலிக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன். மேற்படிப்பு படிக்கும் மகளை அழைத்துச் செல்ல காதலி வரவேண்டியுள்ளது. காதலனுக்கு தெரிவிக்கிறார். இருவரும் அங்கு ஒரு விடுதியில் தங்குகிறார்கள். என் அனுமதி இன்றி என்னை தொடாதே என்று காதலி சொல்லிவிடுகிறாள். அறையில் கட்டிலும் இரண்டாக இருக்கிறது. அவள் திரும்பி படுத்திருக்கிறாள். இருவரும் உள்ளுக்குள் ஏதும் நடந்துவிடாதா என்கிற எதிர்ப்பார்ப்பில் மனம் கணக்கிறார்கள். விடிகிறது காதலி மகளை அழைத்துப்போக புறப்படுகிறாள். பேருந்து நிலையத்தில் காதலன் அமர்ந்திருக்கிறான். ஏமாற்றத்தின் கரையான்கள் மிச்சப்பட்ட காதல் தாளையும் அரித்துத்  தின்னத் தொடங்கியிருக்கின்றன என சொல்லி கதையை முடிக்கின்றார். வெறும் சம்பவங்களாகவே இக்கதை தொடங்கி முடிந்துவிட்டது. சமீபத்தில் திரைகண்ட 96 திரைப்படத்தின் காட்சி போல இக்கதை அமைந்திருக்கும். ஆனால் இக்கதைதான் முதலில் வந்தது. ஏன் அவர்கள் ஆளுக்கொரு கட்டிலிலேயே அன்று உறங்கிவிட்டார்கள் என வாசகர்களை கதாசிரியர் தேட வைக்கிறாரோ என்னவோ.

      இரண்டாவது கதை, ‘சேஷம் சிந்த்யம்’ 60 வயதை கொண்டாட தயாராகிக்கொண்டிருக்கிறார் லஷ்மியம்மா. கணவர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் தன் பேரழகிக்கு ஷஷ்சிப்தப் பூர்த்தியாடா என சொல்லியிருக்கலாம். வழக்கம் போல ஆற்றுக்கு குளிக்கச் செல்கிறார். ஆற்றிலிருந்த லஷ்மியம்மாவை  ஒரு பையன் பிடித்து இழுக்கிறான். தன் கழுத்து நகைக்குத்தான் அவன் இழுக்கிறான் என நினைக்கிறார். கழட்டிக் கொடுக்கிறார். அந்த பையன் அதனை உதறிவிடுகிறான். வன்கலவி  செய்யத் தொடங்குகிறான். அடுத்த கொடுமையாக லஷ்மியம்மாவின் கழுத்தை அழுத்திக் கொல்கிறான். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தயாரான வீடு மரண ஓலத்தைக் கேட்கப்போகிறது. 

     சுருங்கச்சொன்னால், 60 வயது மூதாட்டியை ஒரு பையன் வன்கலவி செய்கிறான். அவன் கையால் சாவதற்கு முன்பாக அந்த பாட்டி என்னென்ன நினைக்கிறார் என்பது கூட சரியாக சொல்லப்படவில்லை. கதையில் தொடக்கத்தில் கடவுள் லஷ்மியம்மாவின் கதையை எழுதுவதாகத் தொடங்கி அவரே முடிவையும் எழுதிக்கொண்டிருப்பதாக கதாசிரியர் கதையை முடிக்கின்றார். இப்படியான ஒரு செய்தியை நானும் கேட்டிருக்கிறேன். தனியாக இருந்த ஒரு மூதாட்டியிடன் கொள்ளையடித்த இரு இளைஞர்கள், பதினெட்டு இருபது வயதுள்ளவர்கள், அந்த மூதாட்டியை வன்கலவியும் செய்திருக்கிறார்கள். இது வெறும் செய்திதானே இதில் என்னத்தை நாம் சொல்லிவிட முடியும். இலக்கியம் என்பது உள்ளதை அப்படியே சொல்வதா அல்லது அதன் உளவியலையும் காரணத்தையும் சொல்வதா என்கிற கேள்வி இங்கு எழுகிறது. இக்கதையில் அந்த பையனின் செயலுக்கான காரணத்தையும் அதன் பின்னனியையும் சொல்லியிருந்தால் இது முக்கிய கதையாக மாறியிருக்கும். ஆனால், அந்த ஆறு பகுதியில் கள்ளும் கஞ்சாவும் குடிக்கும் ஒரு தலைமுறை இருக்கிறது என்கிறார். இதுமட்டும் போதுமானது என நினைத்துவிட்டாரோ. கதைகளுக்கு வைக்கும் தலைப்பு மிக முக்கியமானது. இக்கதையின் தலைப்பு ‘சேஷம் சிந்த்யம்’, அதன் அர்த்தம், பிறகானது சிந்திக்க வேண்டியது. கதையை வாசித்து முடித்ததும் பிறகானது என்னவென்று வாசகரை சிந்திக்க வைத்து இக்கதையில் கதாசிரியர் சொல்லாமல் விட்டுவிட்டதாக நாம் குறைபட்டுக்கொள்ளும் எல்லாவற்றையும் நம்மையே தேட வைக்கிறார்.

   மூன்றாவது கதை ‘விடுமுறைக் காலம்’ . தான் சிறுவயதில் செய்த ஒன்று எத்தனை வேதனையைக் கொடுக்கிறது என்பது கதை.  உண்மையில் நல்ல கதை நல்ல கரு. பால்யத்தில் நடந்த அர்த்தம் புரியாத சம்பவங்களுக்கு பிறகொருநாள் நமக்கு பதில் கிடைக்கும். அந்த சமயம் நாம் அர்த்தம் புரியாமல் செய்துவிட்ட காரியத்தின் விஸ்வரூபம் எடுத்து நின்று நம்மை பயமூட்டும்.

     நான்காவது கதை ‘ராதாமோகனன்’. அதற்கு ‘ராதையை வசீகரிப்பவன்’ என்று பொருள். விரக்தியும் வாழ்வில் பெரிய பிடிமானம் இல்லாமல் இருக்கும் ராதாவை காகம் வசீகரிக்கிறது. கனவுகளாக கேள்விகளாக அவளும் காகத்தை தேடுகின்றாள். ஆனால் சொல்லவந்ததை முழுமைபடுத்தவில்லை. அவசரமாக கதையைத் தொடங்கி அவசரமாக கதையை முடித்துவிட்டதாக தோன்றுகிறது.

    இத்தொகுப்பில் நிறைவாக நான் வாசித்தது ‘நீலலோகிதம்’ என்னும் புத்தகத்தின் தலைப்புக் கதை. லோகிதாவிற்கு விவாகரத்து ஆகியிருந்தது. அவளின் அதீத பாலுறவு அவளின் விவாகாரத்திற்கு காரணமாகிறது. அதன் பிறகு, மனைவி பிள்ளைகள் இருக்கின்ற லோகிதாவிற்கும் நஜீமிற்கும் தொடர்பு ஏற்படுகிறது.

    மனைவி பிள்ளைகள் வீட்டில் இல்லாத சமயங்களில் இருவரும் கூடி மகிழ்கின்றனர். நண்பன் மூலமாக, மாணவர்கள் ஆபாசப்படங்களை கைபேசியில் வைத்துக் கொள்வதையும் அதனை தன் கடையில் வந்து பதிவிரக்கம் செய்வதையும் தெரிந்துக் கொள்கிறான். ஏனோ லோகிதாவையும் அவ்வாறு கைபேசி கட்டத்திற்குள் அடைத்து நண்பர்களுடன் பகிர நினைக்கிறான்.

    கட்டிலின் மேலே கேமராவை வைக்கிறான். அவளின் நிர்வாண  மேனி கேமராவில் புகுந்து கைபேசிகளுக்கு பரவ தொடங்குகிறது. தன் வீட்டிற்கு சகோதரியின்  பதின்மூன்று வயது மகன் வருகிறான். அவனிடம் இருந்த மெமரி கார்டை எடுத்து பாடல்களை ஏதும் உண்டா என பார்க்கும் நேரத்தில், அவளையே அவள் முழு நிர்வாணமாக பார்த்து அதிர்ந்துப்போகிறாள்.

     தன் வாழ்வை நினைத்து அழுகிறாள். ஆனாலும் நஜீமின் மீது அவளுக்கு இருக்கும் காதலை புரிந்துக்கொள்கிறாள். மேலும் அவனை நேசிக்க ஆரம்பிக்கின்றாள். அவனை மீண்டும் அவன் வீட்டு கட்டிலுக்கு தன்னை அழைக்க ஏற்பாடுகள் செய்கிறாள். அவ்வாறே வீட்டில் யாருமில்லாத சமயம் அவளை அழைக்கிறான். அவளும் ஆசையுடனும் கையில் பழக்கூடையுடனும் வருகிறாள்.

        இருவரும் இன்பத்தில் மூழுகுகிறார்கள். உடல் தாகம் தீர்ந்தப்பின் பழக்கூடையில் இருந்த கத்தியை எடுக்கிறாள். நஜீம் அலறுகிறான். அவனை லோகிதா சமாதானம் செய்கிறாள். ‘நீ வாழ வேண்டும்.. வாழ்ந்தே ஆக வேண்டும்’ என சொல்கிறாள். அதோடு ஆம்புலன்ஸ்கு அழைக்கிறாள்.

   அவனுடைய ஆண்மையுடன் ரத்தத்துடனே நடந்துச் செல்கிறாள்.

      இதனை வாசித்து முடிந்தததும் எனக்கு மாலினி பாளையங்கோட்டை என்கிற திரைப்படம் நினைவிற்கு வந்தது. முதலில் மலையாளத்திலும் பிறகு தமிழ்லிலும் வெளிவந்தது. தன்னையும் மற்ற பெண்களை ஏமாற்றியது போல ஏமாற்றிய காதலனின் ஆண்குறியை நாயகி வெட்டி எடுத்து அங்கே தையல் போட்டுவிடுவாள். அக்கதைப்படி அப்பாவி பெண்ணொருத்தி எடுத்திருக்கும் அடுத்தகட்ட அவதாரமாக அமைந்திருக்கும். வெறுமனே அப்படி வெட்டி எடுத்து தையல் போட முடியாது என்று தர்க்கம் செய்தாலும, கதையில் அதன் முடிவு அப்பெண்ணிற்கு கிடைத்த நீதியாகவே தெரிந்தது.

       ஆனால் லோகிதா அப்படியில்லையே. அவளுக்கு அதீத பாலுறவு வேட்கை இருப்பதாக சொல்லி கணவன் விவாகாரத்து வாங்குகிறான். அவளி அழகில் மயங்கி அவளை வசீகரிக்கிறான் நஜீம். நஜீமிற்கு மனைவி பிள்ளைகள் உண்டு. இருந்தும், அவனுடன் குற்றவுணர்வின்றி தொடர்பு கொள்ளும் நாயகி தனக்கு துரோகம் செய்தவிட்ட நஜீமின் ஆண்மையை வெட்டுகிறாள். நஜீமின் மனைவிக்கு லோகிதா செய்த துரோகத்திற்கு என்ன தண்டனை பெறப்போகிறாள் என்கிற கேள்வி எழாமல் இல்லை. இரண்டு திருடர்களில் ஒருவருக்கு மட்டும் ஒரு திருடன் தண்டனைக் கொடுத்து தான் மீண்டும் எப்போதாவது திருடலாம் என புறப்பட்டால் எப்படியிருக்கும். இக்கதையை இன்னமும் நன்றாக சொல்லியிருந்தால் எந்த கேள்விகளுக்கும் இடமில்லாமல் போயிருக்கும். ஆனால் கதையில் கதாப்பாத்திரங்கள் சரியாக சொல்லப்படாதது கதையை பலவீனமாக்கிவிட்டது என தோன்றுகிறது.

     இப்புத்தகம் வாசித்தவரை போதும் என நினைக்கிறேன். மீண்டும் இக்கதையை சிறிய இடைவேளி விட்டு படிக்கலாம். நண்பர்கள் யாரும் இப்புத்தகத்தை வாசித்திருந்தீர்கள் என்றால் மேற்கொண்டு இக்கதைகளைக் குறித்து நாம் பேசலாம். இக்கதைகளை நீங்கள் வாசிக்கையில் உங்களுக்கு வேறு கருத்துகள் இருக்கலாம். ரசனை என்பது அதுதானே. நாம் உரையாடலாம்.


- தயாஜி
-      ஏப்ரல் 18, 2020

நண்பா...
     திட்டம் வெற்றி. ராகு முதலில் செல்ல வேண்டும். அவனும் பணமும் முதலில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். பணத்தின் தேவை அவனுக்குத்தான் அதிகம். கேதுவிற்கும் தேவை உண்டு. ஆனால் ராகுவைவிட அதிகமில்லை என அவனே அவனுக்குச் சொல்லுக்கொண்டான்.

    ராகு காலி வீட்டினுள் வந்துவிட்டான். பணப்பையை பதுக்க ஆரம்பித்தான். முன்னமே பேசிக்கொண்ட இடத்தில் பணப்பையை வைக்கும் நேரத்தில் அவனது மனம் சஞ்சலித்தது.

     திட்டம் தீட்டியது ராகு, நேரம் குறித்தது ராகு, முன்னேற்பாடுகள் செய்தது ராகு, காரை வாடகைக்கு எடுத்தது ராகு, எங்கெல்லாம் காமிராக்கள் உள்ளதென தெரிந்துச் சொன்னது ராகு, இப்படி எல்லாவற்றிலும் மூல காரணமாக இருந்தது ராகு. ஒரு 'மோரல் சப்போர்ட்க்காக' வந்த கேதுவிற்கு எதற்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்.

 பணத்தை வேறு இடத்தில் பதுக்கினான். பணம் செய்வதாக சொல்லும் பத்தில், துரோகமும் சேர்ந்ததுதானே. இன்னும் கொஞ்ச நேரத்தில் கேது வந்துவிடுவான். உள்ளே வந்தவன் ஓய்வெடுக்க நாற்காலியில் அமர்வான். நிச்சயம் கண்களை மூடுவான். அந்நேரம் பக்கத்தில்  மறைத்து வைத்திருக்கும் இரும்பை எடுக்கவேண்டும். கேதுவின் தலையில் ஒரே போடு. இங்கு ஒருவன் செத்துக்கிடப்பது நாற்றம் வந்தால்தான் வெளியில் தெரியும். அதற்குள் ராகு எங்கே போய்விடலாம்.

    கேது, வெளியில் நிலமை சரியாகும் வரை காத்திருந்தான். அவ்வப்பொது தகவல்களை ராகுவிற்கு சொல்லிக்கொண்டிருந்தான். யாரும் ராகுவை பின் தொடர்ந்து வாராதை உறுதி செய்துவிட்டான். விபரத்தைச் சொல்ல கேதுவை ராகுவைத் தொடர்பு கொள்ள, கிடைக்கவில்லை.
ஏதோ நடந்துவிட்டதாக மனதில் படுகிறது. ராகுவிற்கு எந்த ஆபாத்தும் வந்துவிடக்கூடாது என வேண்டிக்கொண்டான். புறப்பட்டான்.

    ராகுவிற்கு அந்த சத்தம் கேட்டுவிட்டது. யாரோ வந்துக்கொண்டிருக்கிறார்கள். எச்சரிக்கையானான். வாசல் அருகில் கையில் எதையோ வைத்துக்கொண்டு நிற்கிறான். ஆளில் அசைவு தெரிகிறது. இந்த கேதுவை கொல்வதற்கு முன்பாக இன்னொரு கொலை செய்ய வேண்டியுள்ளதே என பற்களைக் கடித்துக் கொண்டான். நல்லவேளையாக அதற்கு வாய்ப்பில்லை. வந்துக்கொண்டிருந்தது கேதுதான். வாசலுக்கு வந்த விட்டான்.

    கதவை திறப்பதற்கு முன்பாக கேது தன்னை யாரும் பின் தொடர்ந்தார்களா என பார்த்துக்கொண்டான்.ராகுவும் நாற்காலிக்கு அருகில் அந்த இரும்பு இருக்கிறதா என பார்த்துக்கொண்டான்.
குறிப்பு சத்தத்தை கேது கொடுக்கிறான். ராகு கதவை திறந்துவிட்டு முன்னே நடந்துச் செல்கிறான். அப்போது;

'படார்....!!!!!!!'

   எதாலோ அடிபட்டு, பின் மண்டை உடைந்து ராகு கீழே விழுந்து துடித்துக் கொண்டிருக்கிறான்.

- தயாஜி


ஏப்ரல் 17, 2020

சமையல்இன்னும் கொஞ்ச நேரத்தில்
சமையல்  முடிச்சிடலாம்
அதுவரை பொறுக்க வேண்டுமே
அந்த ஆப்பிள்
அத்தனை பெரிதாக இருக்கிறது
அதன் வண்ணத்திற்கும்
ருசிக்கும் சம்பந்தம் உண்டோ
சில வாழைப்பழங்கள்
சில டுரியான்கள்
போதுமா
போதாது
வெறும் பழம் தின்னால்
தீருமா பசி
தீராதே
பெரிய பானை
அதனுள் அரிசி
எப்போது எரியும்
விரகடுப்பு
பக்கத்தில் கொப்பளிக்கும்
கோழி குழம்பு
அம்மாவிற்கு மட்டும்
ஒரு தட்டு குறைகிறது
பரவாயில்லை
அவள் எப்போதும்
அப்பாவின் தட்டில்தானே
சாப்பிடுகிறாள்
சமையல் ஆகிவிட்டதா
கேட்கும் தம்பிக்கு
நல்ல பசிதான்
எனக்கும் தான்
இன்னும் கொஞ்சம்
தண்ணி கலக்க வேணும்
தொட்டுக்கொள்ள ஊறுகாய்
இல்லாவிட்டால் வேண்டாம்
சோறும் பொங்கிற்று
கோழியும் வெந்திற்று
அப்பா
அம்மா
தம்பி
அவள்
கத்தரிக்கோல்
வரைந்து முடிந்த ஓவியங்கள்
ஒவ்வொன்றாக
வெட்டி
தட்டுகள் மேல் வைக்கிறாள்
ஏதோ மந்திரம் சொல்ல
எல்லாமே நிஜமாகிறது
ஆசை தீர
பசி தீர
தின்று முடித்தார்கள்
ஏப்பமும் வந்தது
பெரிய இடி சத்தம்
விழித்துக்கொண்ட பொம்மி
சொன்னாள்
'அம்மா அப்பா தட்டுலயே நீயும் சாப்டு....'
இரண்டு நாட்களாய் அவளை
தோளில் சுமந்து
நடந்துக் கொண்டிருக்கும்
அம்மா சொன்னாள்
'காரம் அதிகமா இருக்குது....'

#தயாஜி

ஏப்ரல் 16, 2020

புத்தகவாசிப்பு_2020_7 ‘அபிதா’
        இப்படி ஒரு கதைச் சொல்லல் சாத்தியமா என வாசித்து முடித்ததும் தோன்றியது. முற்றிலும் நனவோடையில் சொல்லப்பட்டுள்ள கதை. லா.ச.ராமாமிருதத்தின் வாசிக்க வேண்டிய புததகம் என  பல எழுத்தாளர்கள் முன்மொழிந்த படைப்பு.

      வாசிக்க ஆரம்பித்த பொழுதில், ஏனோ முழுமையாய் உள்வாங்க முடியவில்லை. சிரமம். லா.ச.ராவின் எழுத்தினை முதலாவதாக வாசிப்பது அதன் காரணமாக இருக்கலாம். இதற்கு முன் அவரின் சிறுகதைகள் கூட வாசித்ததாய் நினைவில் இல்லை.

       மெல்ல அவரில் எழுத்தில் இருக்கும் கவிநயம் என்னை இழுக்க ஆரம்பித்தது. திரும்ப திரும்ப வாசிக்கிறேன், உரைநடை என் கண்முன்னே நிழலாடத் தொடங்கியது. கொஞ்சம் பிசகினாலும் கதையின் தன்மை கெட்டுவிடும். கத்தி மேல் நடப்பது போல தனக்கான பாதையில் மிக கவனமாக கதை பயணிக்கின்றது.

     காதல் கதைதான். அதிலும் தோல்வி கண்ட காதல் கதை. அதில் சொல்வதற்கு என்ன இருக்கப்போகிறது. சொல்லலாம். சொல்வதற்கு என்னவெல்லாமோ அதில் இருப்பதை லா.ச.ரா காட்டியுள்ளார். அம்பி கதாப்பாத்திரம் ஆசை, ஏக்கம், காதல், காமம், ஏமாற்றம், பழிவாங்கள் என எல்லாவற்றியும் தன் நினைவோடையில் சொல்லிச் செல்கிறார்.

       அம்பிக்கும் சாவித்திரிக்கும் எப்படி திருமணம் ஆனது என்பதில் இருந்து கதை தொடங்குகின்றது. அந்த தொடக்கம் கொடுத்த எதிர்ப்பார்ப்பு அடுத்தடுத்து காணாமல் போகிறது. உற்ற தம்பதிகளாக இருக்கப் போகின்றார்கள் என்ற வாசகர்களின் எண்ணம் மெல்ல மெல்ல மாறுகிறது. இவர்களுக்குள் இருப்பது ‘நீயா நானா’. யார் யாரைத் தோற்கடிக்கப் போகின்றார்கள் என்கிற பந்தயம்.

      ஒரு நாள் மழையின் தூறல் அழுகையாய் உருவெடுக்கிறது. அவளும் அப்படித்தானே அழுதிருப்பாள் என நினைக்கிறார். யாரவள். அங்குதான் அம்பியின் பழைய நினைவுகள் தொடங்குக்கிறது.  அங்குதான் சகுந்தலை அறிமுகமாகிறாள். அம்பியின் கடந்த காலத்தில் எத்தனையோ நம்பிக்கைகள் எத்தனையோ எதிர்ப்பார்ப்புகள். இருந்தும் சகுந்தைலையை விட்டு பட்டிணத்திற்கு ஓடிப்போகிறார்.

     வயோதிகத்தை நெருங்கிக்கொண்டிருந்தாலும் அம்பியின் வாழ்வில் ஏதோ ஒன்று குறைவதாகவே மனதில் படுகிறது. ஒரு நாள் தன் மனைவி சாவித்திரியுடன் தனது பழைய ஊருக்குச் செல்கிறார். அவர் எதிர்ப்பார்த்துச் சென்றவர்கள் பலர் அங்கு உயிருடன் இல்லை. அவரின் மனம் சகுந்தலையைத் தேடுகிறது. அவளுக்கு திருமணம் ஆகியிருப்பது தெரிகிறது. ஆனால் அவள் காணக்கிடைக்கவில்லை. அவள் இறந்துவிட்டாள் என அறிகிறார்.

     ஆனால், இறந்துவிட்ட சகுந்தலையே அவளில் மகளாக பிறந்து ‘அபிதா’வாக அவர் முன் நிற்கிறாள். யாரும் எதிர்ப்பார்க்காத திருப்பம் அது. அவளின் மரணத்திற்கு தான்தான் காரணம் என நினைக்கிறார்.சகுந்தலைதான் தனக்காக மீண்டும் பிறந்திருக்கிறாள் எனவும் நினைக்கிறாள்.

   அம்பியின் மனம் அபிதாவை எப்படிப் பார்க்கிறது. அவர் என்ன செய்யப் போகிறார். ஏன் அதுவெல்லாம் நடக்கிறது. அவரின் அடுத்த நடவடிக்கை என்ன, என நாவல் வாசகர்களை தன் பக்கம் ஆழமாக இழுத்துக் கொள்கிறது.

     தனக்கே உரிய கவிதை நடையில் நாவல் முழுக்கவும் நம்மை ஈர்க்கின்றார். ஒவ்வொன்றையும் நம் கண்முன்னே காட்டுகிறார். நம்முன்னே பல கேள்விகள். நமது கடந்த காலத்தை நோக்கி விசாரணையை முன் வைக்கிறது. வாசிக்க வேண்டிய நாவல் என பலரும் முன்மொழிவதற்கு நிச்சயம் காரணம் இருக்கத்தான் செய்கிறது. 

-      தயாஜி

புத்தகவாசிப்பு_2020_6 ‘வீடில்லாப் புத்தகங்கள்’
       புத்தகங்களை எங்கிருந்து வாங்குகின்றீர்கள். வழக்கம் போல புத்தகக்கடைகளில் தானே எங்கின்றீர்களா? ஆமாம். ஆனால் புத்தகக்கடைக்குச் சென்று வாங்குகின்றிர்களா அல்லது இணையம் வழி புத்தகங்களை வாங்குகின்றீர்களா?. தொழில்நுட்ப முன்னேற்றம், நேர மிச்சம் இணையம் வழிதான் வாங்குகின்றோம் என்கிறீர்கள்தானே. புத்தககமாக யார் வாங்குகிறார்கள், வீட்டில் அடுக்கி வைக்க இடமா இருக்கிறது. மின்நூல்களாக வாங்கிக்கொண்டு கணினியில் சேமித்து வைக்கின்றோம் என்கின்றீர்களா? குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. உலகோடு ஒட்டிதான் வாழ்ந்தாகவேண்டியுள்ளது.

        கோவிலுக்கு அருகில் ஒரு பூக்கடை இருக்கிறது. ஒரு பாட்டி இன்றும் தன் வயிற்றுக்கு தானே உழைத்து வாழ நினைக்கிறார். ஒரு விஷேஷ நாளில் வியாபாரமாகும் என நினைத்து, கைவசம் இருந்த பூக்கள அனைத்தையும் மாலைகளாகத் தொடுத்துவிட்டார். அவரின் துரதிஷ்டம் அன்று மழை.  வியாபாரம் ஆகவில்லை. அன்றை வியாபாரம் அவருக்கான நாளைய உணவு. இன்னும் கொஞ்ச நேரத்தில் கோவிலை மூடப்போகிறார்கள். அப்போது ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து ஒருவர் இறங்குகின்றார். நேராக பூக்கடைக்கு வருகிறார். கட்டி வைத்திருந்த பூ மாலைகளில் எதையோ தேடுகிறார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கிருந்த மொத்த பூ மாலைகளையும் அவரே வாங்கிக்கொண்டு புறப்பட்டுவிட்டார். இப்போது அந்த பாட்டியின் மனநிலையை நினைத்துப்பாருங்கள். அந்த கண்கள் இந்நேரம் கலங்கியிருக்கும் தானே. கோவிலுக்கு அருகில் கடை இருந்தாலும், இப்போது அந்த பாட்டிக்கு கடவுள் யாராக தெரிவார். இனி அந்த பாட்டியால் அந்த நபரை மறக்கத்தான் முடியுமா என்ன. அப்படியான மனிதர்களும் அவர்கள் கண்ட கடவுகளையும் உங்களுக்கு காட்டுவதுதான் இந்த புத்தகம் ; ‘வீடில்லாப் புத்தகங்கள்’.

        சக மனிதர்கள் மீதான அன்பையே தன் எழுத்தின் பிரதானமாகக் கொண்டிருக்கும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. இக்கட்டுரைகளை தமிழ் இந்துவில் அவர் எழுதியிருந்தார். தனது கதைகளில் மட்டுமல்ல தனது இதர படைப்புகளியும் அவர் முன்னிலைப்படுத்தி நம் கண் முன்னே காட்டிச்செல்வது நாம் கவனிக்க மறந்த அல்லது கவனிக்கத் தவறிய சக மனிதனின் வாழ்வைதான்.

       தனக்கு மிகவும் பிடித்த பழைய புத்தகக்கடைக்கும் தனக்குமான உறவையும் அங்கு இவருக்கு கிடைத்த புத்தகங்களின் அறிமுகங்களையும் இந்நூலில் கொடுத்திருக்கின்றார். அதோடு அங்கு அவர் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையில் நம்மிடம் பகிர்ந்து அதனையும் பதிவு செய்திருக்கின்றார்.

       பழைய புத்தகங்களை விற்பவர்கள் வெறும் வியாபாரிகள் அல்ல. பணம் தான் பிரதானன் என்றால் செய்வதற்கு அவர்களுக்கு பல வேலைகள் கிடைக்கும். ஆனால், அவர்கள் மனம் லயிப்பது புத்தகங்களில்தான். அதனை வாங்கிச் செல்கின்றவர்களின் கண்களில்; நான் தொடக்கத்தில் சொன்ன பூக்காரப் பாட்டி பார்த்த அந்த முகம் தெரியாத நபர் போல பலர் தெரிந்துக்கொண்டே இருக்கிறார்கள்.
      ஒவ்வொரு பழைய புத்தகக்கடையில் தனக்கு கிடைத்த அரிய புத்தகங்களின் அறிமுகத்தினை வழக்கம் போலவே சொல்லி நம்மையும் அந்த புத்தகங்களைத் தேட வைக்கின்றார். புத்தகத்தில் மொத்தம் 56 தலைப்புகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு புத்தகத்தையோ அல்லது இரண்டு புத்தகத்தையோ நமக்கு அறிமுகம் செய்கின்றார்.

      மழை நாளில் , தன்னிடமிருந்த புத்தகங்களை மூட்டைக்கட்டி ஒருவர் எஸ்.ராவின் வீட்டுக்கதவைத் தட்டுகிறார். வேறு வழியில்லை புத்தகங்களை எடுத்துக்கோங்க, எவ்வளவு தோணுதோ அவ்வளவு கொடுத்தா போதும் வீட்டில் பிள்ளைகள் பசியுடன் இருப்பதாகச் சொல்கிறார்.

     புத்தகம் வாங்கிப்படிக்க பணமில்லாத ஒருவருக்கு ஒரு கடைக்காரர் கடையிலேயே ஒரு நாற்காலியை போட்டுக்கொடுத்து எவ்வளவு வேணுமோ அவ்வளவு படிச்சிக்கோங்க என்கிறார். சும்மா படிக்க முடியாத அவரும் அங்கு வருகின்றவர்களுக்கு தேவையான புத்தைகங்களை அறிமுகம் செய்கிறார்.

      தன் கணித ஆசிரியர் ஞானசுந்தரத்தை குறித்து சொல்கிறார். அவருக்கும் புத்தகங்களுக்குமான தொடர்பை ஒரு சம்பவந்ததின் மூலம் சொல்கிறார். தன்னிடம் கேட்காமல் புத்தகத்தை எடுத்துச்ச் என்றவரிடம் சண்டைப்போட்டு உறவையும் முறித்திருக்கிறார். ஒரு சமயம் எஸ்.ராவிற்கு அவரின் கணித ஆசிரியர் கையொப்பம் இட்ட பழைய புத்தகம் ஒன்று கிடைக்கிறது. விசாரிக்கையில், ஒரு பெரியவர் இறந்துவிட்டப்பிறகு அவரது புத்தகங்களை குடும்பத்தினர் எடைக்கு போட்டுவிட்டதை தெரிந்துக்கொள்கிறார். ஆசிரியர் இறந்தப்பிறகு அவரது புத்தகங்களை காப்பாற்றக்கூட வீட்டினர் தயாராய் இருக்கவில்லை. இதனை வாசித்து முடித்தததும் ஒரு முறை எழுந்துச் சென்று எனது புத்தக அலமாரியில் நிறைந்துக் கிடக்கும் புத்தகங்களைத் தொட்டுப்பார்த்துக் கொண்டேன். என் அடுத்த தலைமுறை உங்களை எப்படி பார்த்துக்கொள்ளப்போகிறார்கள் என தெரியவில்லை.

      தன்னை சந்திக்க வருகின்றவர்களுக்கு புத்தகங்களையே நினைவாக கொடுத்தனுப்பிகின்றார் ஒருவர். அதற்காகவே புத்தகங்களை வாங்குகின்றான். அவர் மருத்துவமனையில் இருக்கும் போதுகூட அவரை சந்திக்க வந்திருந்தவர்களுக்கு புத்தகங்களையே கொடுக்கின்றார். ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாக அவரின் மகன் கடைக்கு வந்து அதிகமான புத்தகங்களை வாங்குகின்றார். காரணம் விசாரிக்கையில், அவரது தந்தை இறந்துவிட்டதாகவும், துக்கத்தில் கலந்துக் கொள்கின்றவர்களுக்கு அவரின் நினைவாக புத்தகங்களைத்  தரவுள்ளதாகச் சொல்கிறார்.

      இப்படி, இப்புத்தகம் முழுக்கவும் பலவிதமான புத்தகங்கள் பற்றிய அறிமுகங்களைக் கொடுக்கின்றார். பல எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிச் சொல்கிறார். பழைய புத்தகக்கடை கொடுத்த அனுபவத்தையும் தான் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் பேசி நம்மை கலங்க வைக்கிறார். கதைகளில் மட்டுமல்ல கட்டுரைகளிலும் கூட வாசகரை கலங்க வைக்க முடியும் என்பதை புரிந்துக்கொண்டேன். இன்னும் இந்த புத்தகம் காட்டிய மனிதர்களைப் பற்றி பேசலாம். ஆனால் அதனை நீங்களாக வாசிக்கையில் உங்களுக்கு ஏற்படும் கலங்களைத் தடுக்க நான் விரும்பவில்லை.

    நிறைவாக; எழுத்தாளர்கள், எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு. எங்கிருந்தெல்லாம் கதைகள் கிடைக்கின்றன. எதனை கதைகளாக்கலாம். எங்கிருந்து எங்கு அதன் இணைப்பைச் சேர்க்கலாம். என்ற நுணுக்கங்களை இக்கட்டுரைகளில் சொல்லப்பட்ட பகிர்வின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். வாசித்து முடித்ததும் இப்புத்தகத்தில் எங்கெல்லாம் கதைகளுக்கான ஆதர கருக்கள் உள்ளதென நான் குறித்துவைத்துக் கொண்டதை வாசிக்கின்றேன். புத்தகத்தை மூடி வைத்து, பால்கனியில் இருந்து பார்க்கிறேன் எத்தனை மனிதர்கள் எத்தனை கதைகளைச் சுமந்துக் கொண்டுச் செல்கிறார்கள்.


-      - தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்