பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 31, 2022

- காதல் துரோகி -


நம்பிக்கை துரோகம். ஜீரணிக்க முடியாதது. தன் கண்முன்னே நடந்து கொண்டிருப்பதை மேற்கொண்டு பார்க்க முடியவில்லை.

அவள் சிரித்துக்கொண்டிருக்கிறாள். முகம் பிரகாசமாக இருக்கிறது. யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள். யாராக இருக்கும். தன்னைவிடப் பணக்காரன் போலத் தெரிகிறது. அதனால்தான் மயங்கிவிட்டாளா. தன்னைவிடா அவனால் அவளைக் காதலித்துவிட முடியும். தன் உயிருக்கு இணையாக நினைத்த காதலி; எப்படி அவளால் தன்னை ஏமாற்ற முடிந்தது.

துரோகம் செய்த காதலியைக் கொல்லவேண்டுமென மனம் துடிக்கிறது. இந்த உணவகத்திலேயே அதனைச் செய்ய வேண்டுமென முடிவெடுத்தான். புனிதமான தன் காதலுக்கு இப்படியொரு துரோகம் செய்து காதலை மாசுபடுத்தியவளை உடனே பலி தீர்க்க வேண்டும். 

மேஜையில் இருந்த கத்தியுடன் எழுந்தான். 
"என்னங்க.. டாய்லெட் போக எதுக்கு கத்தி.." என மனைவி கேட்கவும், மகள் சிரிக்கலானாள்.

சமாளித்துக்கொண்டு அமர்ந்தான். இவர்கள் மட்டும் இயங்கில்லாமல் இருந்திருந்தால் அந்தக் காதல் துரோகியை கொன்றுவிட்டுதான் மறுவேலை பார்த்திருப்பான்.

ஜனவரி 29, 2022

‘உங்கள் தக்காளி சட்னியும் என் இரத்தமும்’

 


இந்தக் கேள்வி ரொம்ப நாளாகவே இருக்கிறது. எவ்வளவோ கேட்டு வாங்கிக் கட்டிகிட்டாச்சி. இதையும் கேட்டுக்குவோம். வாங்கிக் கட்டிக்குவோம் என்ன வந்திடப்போகிறது.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்து;நடத்தியது. பலருக்கும் குறிப்பாகச் சில புதிய முகங்களுக்கு விருதுகள் கிடைத்தன. வழக்கம் போல யாருக்குக் கிடைக்கக்கூடாது எனப் பலர் யூகித்திருந்தார்களோ அவர்களுக்கே கிடைத்து விட்டதாகப் பலரும் தங்களின் அதிருப்த்தியைத் தெரியப்படுத்தினார்கள். வாழ்நாள் சாதனையாளர் என்கிற விருது பெறவேண்டியவரின் பெயரை, சிறந்த துணை கதாப்பாத்திர தேர்விற்கு வைத்துவிட்டதாகவும் கூட முகநூல் ஆதங்கம் ஒன்றைக் காண நேர்ந்தது.

இன்னொன்று, சமீபத்தில் தொலைக்காட்சியில்  ஒலியேறிய நாடகங்களைக் குறித்துப் பல்வேறு கருத்துகள்/பார்வைகள் வந்திருந்தன. அரைமணி நேர நாடகத்தில் விளம்பரம் போக மீதமுள்ள பெரும்பாலான நேரத்தில் கதாப்பாத்திரங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டும், இன்னும் சில கதாப்பாத்திரங்கள் கட்டிலில் படுத்திருந்த வண்ணம், அலுவலகம் என்ற பெயரில் கணினிக்கு முன்னும் கணினிக்குப் பின்னும் இரு  கதாபாத்திரங்கள்  பேசிக்கொண்டிருக்கின்றன. படக்கருவி ஏங்கல் சரியில்லை,  கதாப்பாத்திரங்கள் வெறும் வசனத்தையே பேசுகின்றன, காட்சிகள் நகரவில்லை. இம்மாதிரி பல.

இதில் பலருக்கும் உடன்பாடு இருந்தன. அதற்கான பின்னூட்டங்களை அந்தந்தக் கருத்தையொட்டி கவனிக்க முடிந்தது. இது எதுவும் சிக்கல் இல்லை. பார்வையாளனாக ரசிகனாக இவற்றைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அப்போதுதான் கலை வளர்ச்சியடையும் என்கிற எதிர்ப்பார்ப்பும் உங்களிடம் இல்லாமலில்லை.

இதையே இன்னொரு தளத்தில் செய்தால் நீங்களே எதிர்ப்புத் தெரிவிக்கிறீர்கள். திட்டிப்பேசுகின்றீர்கள். புதியவர்களை அழிப்பதாக வதந்தி பரப்புகிறீர்கள். புரிகிறதா?

சரி, சொல்கிறேன். ஆனால் இதனை என்னில் இருந்து நான் சொல்ல நினைக்கிறேன். ஏனெனில் சட்டென ஏதாவது ஒரு குழுவில் சிரமம் பாராது என்னை உறுப்பினர் ஆக்கிவிட்டு தான் மறு வேலை பார்ப்பீர்கள் என்ற அச்சம்தான். அந்த மெல்லிய கோட்டிற்கு மிக அருகிலிருந்தே நான் இதனைச் சொல்ல முயல்கிறேன்.

நீங்கள் ஒரு தொலைக்காட்சி தொடரை தொடர்ந்து பார்க்கிறீர்கள். நான் ஒரு புத்தகத்தைத் தொடர்ந்து வாசிக்கிறேன். நீங்கள் பார்த்தத் தொடரிலிருந்து உங்களுக்கு ஒன்று தோன்றுகிறது. நான் வாசித்த புத்தகத்திலிருந்து எனக்கு ஒன்று தோன்றுகிறது. நீங்களும் உங்கள் கருத்தினை எழுதுகிறீர்கள். நானும் என் கருத்தை எழுதுகிறேன். இதுவரை சரிதான். ஆனால் எழுதி முடித்தப்பிறகு நீங்கள் எழுதியது கலையை வளர்ப்பதாகவும் நான் எழுதியது கலையைச் சிதைப்பதாகவும் எப்படி மாற்றப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால் நாடகமோ திரைப்படமோ ‘நல்லாவேயில்லை’ எனச் சொல்ல முடிந்தவர்கள் கூட ஒரு கதையை/புத்தகத்தை வாசித்து இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்று சொல்லும் என்னை என்னவோ போல் பார்க்கிறீர்கள்.

நீங்கள் ஒரு திரைப்படம் குறித்தும் அதன் நாயக பிம்பம் குறித்துப் பேசுகிறீர்கள், கைத்தட்டல்களைச் சேர்த்துக் கொள்கிறீர்கள். யாரும் உங்களிடம் நீ எத்தனை திரைப்படம் எடுத்துவிட்டாய் எனக் கேட்பதில்லை. ஆனால் நாவலை வாசித்துச் சில குறைகள் இருப்பதாகச் சொல்கிறேன். நீ எத்தனை நாவல்கள் எழுதிவிட்டாய் என்பதுதான்    முதற்கேள்வியாக  உங்களிடமிருந்து வருகிறது.

இன்னும் கூட அதிகம் பேசலாம். ஆனால் நான் கேட்க நினைக்கும் அடிப்படை கேள்விகளைத் தான் கேட்டுள்ளேன். நாம் இருவரும் கலையை நம் ரசனையின்  அடிப்படையிலிருந்துதான் அணுகுகிறோம். என்னவென்று திரைப்படத்துக்காரர்கள் தூரமாக இருப்பதாலும் கதை/புத்தகம் எழுகின்றவர்கள் உங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதாலும் இப்படியெல்லாம் நடக்கிறதோ என்னவோ.

இரண்டரை மணிநேரம் திரைத்துறை பார்த்து, மூன்று நான்கு மணி நேரம் விருது நிகழ்ச்சி பார்த்து ஒரு பக்கம் கருத்து தெரிவிக்க நேரமிருக்கும் உங்களுக்குப் பல மணிநேரம் (பக்கங்களைப்பொருத்து) ஒதுக்கி வாசித்து அதையொட்டி மேலும் சிலவற்றைக் கோடிட்டுக்காட்டத் தேடி வாசித்து எழுதுகின்றவர்கள் மீது ஏன் வெறுப்பு.

ஒரு பக்கம் கலையை வளர்ப்பதாகச் சொல்லும் நீங்களே ஏதோ ஒரு காரணத்தால் அதையே கதைகளில்/புத்தகங்களில் செய்யும் என் மீது வெறுப்பு உள்ளதாக ஏன் வேடம் போடுகின்றீர்கள்.


- தயாஜி

புத்தகசவாசிப்பு_2022_4 பால் சக்காரியாவின் 'யேசு கதைகள்'



யேசு கதைகள்
தலைப்பு – யேசு கதைகள்
எழுத்து – பால் சக்காரியா
தமிழாக்கம் – கே.வி.ஜெயஶ்ரீ
வகை – சிறுகதைத் தொகுப்பு
வெளியீடு – வம்சி பதிப்பகம்
நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)

பவா  செல்லதுரை மூலம் இந்தப் புத்தகத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன். சில ஆண்டுகளுக்கு முன் மலேசியா வந்திருந்தவர், இந்தப் புத்தகத்தில் இருந்து இரு கதைகளை மக்களிடம் கூறினார். அவர் அக்கதைகளைச் சொல்லும் போதே என்னைக் கவர்ந்தது. ஒரு திரைப்படம் பார்ப்பது போல ஒவ்வொரு காட்சிகளையும் தன் சொற்கள் மூலம் காட்சி பரிணாமத்தைக் கொடுக்க முயன்றார். கொடுக்கவும் செய்தார்.

அப்போது தொடங்கி, பல மாதங்களாக ‘யேசு கதைகள்’ புத்தகத்தைத் தேடினேன். கடைசியில் கிடைத்தது.

இப்புத்தகத்தில் ஐந்து சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் அடங்கியுள்ளன. ‘யேசுவின் மீட்பு’ என்னும் தலைப்புல் புத்தகத்திற்கான முன்னுரையை ஜெ.ஜெயகரன் கொடுத்திருக்கிறார். இக்கதைகளையும் அதன் தேவைகளையும் புரிந்து கொள்ள இம்முன்னுரை உதவும்.

மலையாளத்தில் மட்டுமன்றி தமிழிலும் நன்கு அறிமுகம் கொண்ட பால் சக்காரியா தன் கதைகளின் வழி யேசுவை அணுகிய விதம் மாறுபட்டிருந்து. தேவதுதனை வேறேப்படியும் பார்க்க விரும்பாத பார்ப்பவர்களையும் விரும்பாத சமூகத்திலிருந்து வெளிவந்து இவர் அணுகியிருந்த யேசு மனதிற்கு நெருக்கமாகிறது. இப்படிக்கூட யேசுவை அணுகலாம்தானே என நம்மையே கேட்க வைக்கிறது.

எல்லாம் வல்ல இறையாக இருக்கும் யேசு, எல்லா நோய்களுக்கும் சுகமளிக்கும் யேசு தன்னால் ஏதும் செய்ய முடியாதவனா தோன்றுவதை நம்மால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. ‘அன்னம்மா டீச்சர் – சில நினைவுக் குறிப்புகள்’ அப்படியொன்றி நிகழ்த்தி காட்டியிருக்கிறார் எழுத்தாளர். இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் இக்கதைதான் முதன்மையானது.

தன்னைவிட இளம் வயதிலேயே மறித்த யேசுவிற்குத் தன்னை அக்காவாகப் பாவிக்கும் அன்னம்மா டீச்சருக்காகத் தம்பியாகவே தோன்றுகிறார் யேசு. அன்னாம்மா டீச்சர் வாழ்க்கையைத்தான் நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தன்னைச் சுற்றி எல்லாறையும் கரை சேர்க்க வேண்டும். உடன் பிறப்புகளுக்கு வாழ்க்கை அமையவேண்டும். குடும்பம் தலையெடுக்க வேண்டும். இதுவெல்லாம் வேண்டும் என்ற போதும் தன்னால் தனக்காகப் பிரார்த்தனை மட்டுமே செய்ய முடியும் என்கிற நிலையில் அன்னம்மா டீச்சரில் வாழ்க்கைச் சூழலை அழகாகவும் ஆழமாகவும் பதிவு செய்திருக்கிறார் எழுத்த்தாளர்.

‘யாருக்குத் தெரியும்’ என்கிற கதையைத்தான் பவா செல்லதுரை சொல்லக் கேட்டேன். அப்போது அவர் காட்டிய அந்தப் பரிணாமத்தை என்னால் வாசிப்பில் அடைய முடியவில்லை. வாசிப்பு கதையை மேலும் எனக்கு அணுக்கமாக்கியது. குழந்தைகளைக் கொன்று குவித்த போர் வீரன் விபச்சார விடுதிக்கு வருகிறார். அங்கும் ஒரு குழந்தை இருக்கிறது. அது குழந்தை யேசு. விபச்சார விடுதியின் தலைவி, குழந்தை யேசுவை காப்பாற்றுகிறார். பெற்றோருடன் குழந்தையை அனுப்பி வைக்கும் போது தனக்காக மட்டுமின்றி அந்தப் போர் வீரனுக்காகவும் பிரார்த்தனைச் செய்கிறார்.

ஒவ்வொரு கதையிலும் யேசுவை ஒவ்வொரு விதத்தின் தன் எழுத்துகளின் வழி அணுகி, வாசகர்களுக்கும் புதிய வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்துள்ளார். ஒரு படைப்பாளி எவ்வாறாகப் படைப்பை படைக்கின்றார் என்பது ஆழமான கேள்வி. அர்த்தம் பொதிந்த பதில் அதற்குத் தேவை.

யேசு பொதுவானவர் என்று சொல்லிச்சொல்லி அவரை ஒரு மத நிறுவனராகவே மாற்றிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், அந்தத் தேவ மைந்தனை சக மனிதனாகப் பாவித்து மனிதனுக்கு மிக நெருக்கமான பரிசுத்த ஆவியாக மாற்றி ஆன்ம ரீதியான நெருக்கத்தையும் நேசத்தையும் இக்கதைகளின் வழி , வழி சமைத்திருக்கிறார்.

- தயாஜி

(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)


#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம் 

பைத்தியம் பலவிதம்



 
இதை எப்படிப் பார்ப்பது தெரியவில்லை. இப்போதுதான் மழை மெல்ல நிற்கிறது. அதுவும் அடைமழை. இந்நேரம் பார்த்து என் பக்கத்துவீட்டுப் பைத்தியம் செய்யும் காரியத்தை பாருங்களேன்.

வாலி நிறையத் தண்ணீரைக் கொண்டு வந்து செடிகளுக்கு ஊற்றிக்கொண்டிருக்கிறார். செடிகளுக்கு வாயிருந்தால் அழுது வடிந்திருக்கும் போல. போதாக்குறைக்கு, குழாயில் குழாயைப் பூட்டியும் செடிகளுக்கு தண்ணீர் அடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த அடைமழையில் நனையாத மண்ணா இந்த வாலி தண்ணீரில் நனைந்து விடப்போகிறது. உண்மையில் பைத்தியங்கள் பல விதத்தில்தான் இருக்கிறார்கள் போல.
அதிலும் எங்கள் பக்கத்துவீடு. இன்னும் என்னவெல்லாம் பார்க்கப் போகிறேனோ என்கிற பயமே வந்துவிட்டது.

நான் பார்ப்பதைக் கவனித்துவிட்டார் போல. சிரித்துக் கொண்டே என்னையும் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சச் சொல்லிப் பரிந்துரை வேறு செய்கிறார். பைத்தியக்கார வேலையில்  பங்கெடுக்கக் கூப்பிடுகிறார். சமாளித்து வீட்டிற்குள் வந்துவிட்டேன்.
மறுநாள். புலனச்செய்திகள் பறந்தன. வீட்டு வாசலில் வந்து பார்க்கிறேன். நேற்றுவரை இருந்த செடிகள் எதுவும் இப்போது இருக்கவில்லை. எல்லாம் வாடி வதங்கி மண்ணோடு மண்ணாகியிருந்தன.

பக்கத்துவீட்டு பூச்செடிகளைப் பார்த்தேன். எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தன. இதெப்படி சாத்தியம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த செடிகொடிகளும் தெரியவில்லை. மரங்கள் கூட பொலிவிழந்து இலைகள் உதிர்ந்துவிட்டன.

நேற்று பெய்ந்த ஆசிட் மழை பற்றி ஆளுக்கு ஆள் கருத்துகளைப்  புலனத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  பக்கத்துவீட்டுப் பைத்தியத்திற்கு  முன்னமே எப்படித் தெரிந்தது.
அது சரி இப்போது யார் பைத்தியம்?

ஜனவரி 28, 2022

- புலியொன்றின் நன்றி நவில்தல் -


    எங்கள் மீது கருணை காட்டியமைக்கு நன்றி. நீங்கள்தான் எங்கள் பசியைப் புரிந்து கொண்டீர்கள். உங்களையா இவர்கள் திட்டுகிறார்கள். உங்களையா இணையத்தில் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். மூளை இல்லாதவர்கள். அவர்கள் எங்கள் இனத்தையும் எங்கள் பசியையும் தெரிந்து கொள்ளாதவர்கள்.

    அடர் காடுகளில் எங்களால் வாழ முடியவில்லை. துள்ளி ஓடும் மான்களை ஓடி பிடிக்க மரங்கள் தடையாக இருக்கின்றன. ஆமாம் அது எங்கள் ஓட்டத்தின் பெருந்தடை. நீங்கள் வெட்டி விற்கும் மரங்களால் எங்கள் உணவுப்பாதையில் தடைகள் இருக்கவில்லை.

    பாய்ந்தோடும் இறையைப் பாயாமலேயே பிடித்து தின்ன நீங்கள் அழிக்கும் காடுகள் உதவுகின்றன. தூரத்தில் மேயும் எந்த மானையும் பார்ப்பதற்கு உயர்ந்த மரங்கள் மறைக்கின்றன. அதைத்தானே வெட்டுகிறீர்கள். பிறகு ஏன் திட்டுகிறார்கள். தைரியமாக இருங்கள்.

    அடுத்ததாக நீங்கள் சொல்லவிருக்கும் 'மழையில், வெள்ளம் வருவது மீன்களுக்கு நல்லது' என்னும் பத்திரிகை சந்திப்பில் 'காடழிப்பது புலிகளுக்கு நல்லது' என்று நீங்கள் சொன்னதை மறந்துவிடுவார்கள்.





#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்
#குறுங்கதை

ஜனவரி 27, 2022

- ஆமென் -

"இளவரசு... இளவரசு..."

அந்தக் குரல் மெல்ல கேட்டது. ஆனால் யாரை அழைக்கிறார்கள் என தெரியவில்லை. தன்னை பீட்டர் என்றே அழைக்க வேண்டும் என்கிற உத்தரவு வந்த பிறகும் யார் இப்படி விளையாடுவது என தெரியவில்லை.

தீராத வயிற்று வலிக்கு தான் கொடுத்த முதல் விலை அந்தப் பெயர் மாற்றம். தப்பித்தால் போதும் பிழைத்தால் போதும் என்றான போது பெயரில் என்ன இருக்கிறது.

"இளவரசு... இளவரசு.."

மெல்ல அருகில் வந்த உருவம். அவன் தலையை வருடியது. உள்ளுக்குள் ஏதோ ஊடுருவுவதாக உணர்ந்தான். இதுவரை இல்லாத உற்சாகம் உடலில் குடியேறியது. தூய்மையான ஒளிர்ந்த வெண்ணிற ஆடையில் இருந்து ஏதோ ஒன்று அவன் மீதும் பிரகாசத்தைப் பரவவிட்டது.

உடலில் இருந்து கொஞ்ச நஞ்ச வலியும், மனதில் இருந்த குழப்பமும் மெல்ல சீராகிக்கொண்டிருக்க, வந்தவர் கிளம்பலானார்.

"யார் நீங்கள் ?"
 
அவர் நகரந்து கொண்டெ தன் கையை உயர்த்தினார். செக்கச்சிவந்திருந்த உள்ளங்கையில் ஓட்டை தெரிந்தது.

"நீங்கள்... நீங்கள்..." அவனுக்கு வார்த்தை வரவில்லை. அவர் மெல்ல மறையலானார்.

"இளவரசு.. இளவரசு..." அப்பெயர் மட்டும் அறை முழுக்க நிறைந்தது. தான் பீட்டர் அல்ல இளவரசுதான் என புரியத்தொடங்கினான். பெயரில் என்ன இருக்கிறது.

வந்தவர் பீட்டர்களுக்கு மட்டுமா வருகிறார், இளவரசுகளுக்கும் வந்து கொண்டுதானே இருக்கிறார்.

#தயாஜி 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம் 
#குறுங்கதை

- பாதுகாப்பற்றப் பிரபஞ்சத்துளி -



"அதோ தெரிகிறதே நிலவு, அங்கிருந்துதான் வந்தேன்.."

"ஓ, சூரியன் முழுக்கத் தேடினாலும் இப்படி ஓர் அழகியைக் காண முடியாதுதான்..."

"சரி வருகிறாயா...  கொஞ்ச தூரம் பூமிக்கு சென்றுவரலாம்"

"வேண்டாம் பொண்ணே அவர்களுக்கு நம்மை அடையாளம் தெரியாது..."

"அதனால் என்ன.?"

"உன்னையும் என்னையும் கொன்றுவிட்டுதான் , நம்மை யாரென்று விசாரிக்கிறார்களாம்."

"என்னது கொலை செய்வார்களா.. யாரவர்கள்...?"

"அவர்கள் மனிதர்களாம். கொலையும் செய்வார்கள்"

#தயாஜி 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம் 
#குறுங்கதை

ஜனவரி 25, 2022

- தப்புக்கணக்கு -


- தப்புக்கணக்கு -

உலகநாடுகளில் இருந்து உதவித்தொகை வந்துவிட்டது. இனி மக்கள் கவலைக்கொள்ள வேண்டாம் என்கிற அறிவிப்பு பலறையும் பெருமூச்சு விட வைத்தது.

யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் நாட்டில் ஏற்பட்ட புயல் காற்று, மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகள் வரலாறு காணாதது. இனி கிடைத்த உதவித்தோகையை மக்களுக்காக, மக்களின் அடுத்த கட்டத்திற்காக, மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்வதற்காக பயன்படுத்த வேண்டியக் கடப்பாட்டை ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் ஒரு சேர பரப்புரை செய்கிறார்கள்.

ஆயினும் முறையான கணக்கை மக்களிடம் சேர்ப்பிப்பதுதான் முறை.

மக்கள் கவனத்திற்கு;

- உதவிக்கரம் நீட்டிய நாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் 20% கொடுக்கப்பட்டது.

- ஒத்துழைத்த எதிர்க்கட்சிக்கு நிதி உதவியாக 20% கொடுக்கப்பட்டது.

- பணம் கிடைத்த செய்திகளை மக்களிடம் சேர்ப்பிக்க ஊடகங்களுக்கு 15% கொடுக்கப்பட்டது.

- இரவு பகலாக மக்கள் பணியில் இருக்கும் கட்சிகளுக்கு 15% கொடுக்கப்பட்டது.

- உலக நாடுகளிடம் சமகால அவசர நிலையைத் தெரியப்படுத்திய அரசியல்வாதிகளுக்கு உக்கத்தொகையாக 15% கொடுக்கப்பட்டது.

- பாதிக்கப்பட்ட மக்களை கண்டறியும் பணியில் இருக்கும் கட்சி உறுப்பினர்களுக்கு 10% கொடுக்கப்பட்டது.

- இது போக மீதமிருக்கும் 5%மும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்று சேரும் என்பதை தன்னார்வலர்கள் உறுதி செய்யும் படிக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு மக்களால் நாங்கள்; மக்களுக்கு நாங்கள்;  மக்களுக்காகவே நாங்கள்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்
#குறுங்கதை

ஜனவரி 19, 2022

பொறுத்திரு; பிரியாதிரு

பொறுத்திரு; பிரியாதிரு

என்னால் அவரின் அடி உதைகளைத் தாங்க முடியவில்லை. தாலி கட்டிக்கொண்டேன் என்பதற்காக எவ்வளவு நாள் வாழ்வேன். முடிந்த மட்டும் முயன்றேன். வார்த்தைகளின் வேதனையையும் வாய்த்துவிட்ட வலியினையும் தாங்கிக்கொண்டேன். இனி உடம்பிலும் மனதிலும் தெம்பில்லை. பிரிந்துவிடலாம். அவரின் வாழ்வை அவர் வாழட்டும் என் வாழ்வை நான் வாழ்ந்து கொள்கிறேன் என்றேன்.

அம்மா, உன்னிடம்தான் முதலில் என் முடிவைச் சொன்னேன். மாப்பிள்ளையை விட என் அப்பா ஆரம்பத்தில் செய்த கொடுமைகள் அதிகம் என்றாய். பூமாதேவி போல பொறுத்துக்கொண்டேன் என்றாய். கொஞ்ச நாளில் எல்லாமே சரியானது என்றாய். என் மகனுக்காக பொறுத்துக்கச் சொன்னாய். அதற்காகவே பொறுத்திரு; பிரியாதிரு என்றாய்.

அப்பா உங்களிடம் இரண்டாவதாய்ச் சொன்னேன். ஆப்பளைங்கன்னா அப்படித்தான் என்றீர். தன்மையாக கணவனை திருத்து என்றீர். துணையில்லாமல் வாழ்வது பிழையே என்றீர். என் பிள்ளைக்காக யோசி என்றீர். அதற்காகவே பொறுத்திரு; பிரியாதிரு என்றாய்.

சகோதரனே உனக்கும் சொன்னேன். கணவனை திருத்துவது மனைவியில் கடமை என்றாய். அம்மாவைப் பார் அக்காவைப் பார் என்றாய். அண்ணியையும் நீ அடித்திருப்பதாய் சொன்னாய். இதெல்லாம் சகஜம்தான் என்றாய். அதற்காகவே பொறுத்திரு; பிரியாதிரு என்றாய்.

சகோதரியே உனக்கும் சொன்னேன். உன் தழும்புகளுக்கு நீ தடவும் மருத்து பாட்டில்களைத் தந்தாய். தகுந்த நேரம் பார்த்து தடவிக்கொள் என்றாய். கணவனை எப்படி திருத்துவது என்கிற பாடத்தை கற்கச் சொன்னாய். நீயே கற்றுக்கொடுப்பதாய் சொன்னாய். அதற்காகவே பொறுத்திரு; பிரியாதிரு என்றாய்.

தோழி உன்னிடமும் சொன்னேன். தனியான சூழலில் வாழ்வது சிரமம் என்றாய். ஆனாலும் சமாளிக்கலாம். கொஞ்சம் அவகாசம் எடுக்க சொன்னாய். அதற்காகவே பொறுத்திரு; பிரியாதிரு என்றாய்.

தோழா உன்னிடமும் சொன்னேன். வீட்டில் வந்து பேசுவதாகச் சொன்னாய். நேரம் பார்த்துதான் வரவேண்டும் என்றாய். அதற்குள் உனக்கும் ஆயிரம் சிக்கல்கள். வீட்டில் வந்து பேசும் வரை காத்திரு என்றாய். அதற்காகவே பொறுத்திரு; பிரியாதிரு என்றாய்.

பொறுத்திரு; பிரியாதிரு என அறிவு புகட்டியவர்களுக்கு நன்றி. புரிந்து கொண்டேன். உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டேன். நான் பொறுத்துக்கொள்கிறேன் நான் பிரியாதிருக்கிறேன். ஆனால் என் உடலில் பேச்சை என் உயிர் கேட்கவில்லையே.

ஜனவரி 14, 2022

புத்தகவாசிப்பு 2022_3 அகரமுதல்வனின் முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு

முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு

தலைப்பு – முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு

எழுத்து – அகரமுதல்வன்

வகை – சிறுகதைத் தொகுப்பு

வெளியீடு – டிஸ்கவரி புக் பேலஸ்

நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)


விரும்பி யாரும் மன உளைச்சலை நாடுவார்களா? இயலாமையின் பைத்தியத்திற்கு மிக அருகில் சென்று திரும்பதான் யாரும் தயாராவார்களா? இவ்வளவு ஏன் மனிதர்கள் எத்துணை மோசமானவர்கள் என தேடித்தேடி அறிந்து கொண்டு வருந்தி வீழ முயல்வார்களா? அப்படித்தான் இருக்கிறது அகரமுதல்வனின் கதைகள்.

சிலர் என்னிடம் அவர்களின் சிறுகதைகளை வாசிக்கச்சொல்லிக் கேட்பார்கள். வாசித்து  சொல்லும்  பொழுது அவை வெறும் சம்பவங்கள்தான் கதைகளாக  மாறவில்லை என்பேன். அதன்  பிறகே  இது  என்  பக்கத்து வீட்டில் நடந்த கதை,  எதிர்த்த வீட்டில் நடந்த கதை என சொல்வார்கள். இப்படி நாம் கேட்டும் பார்த்தும் உணரும் சம்பவங்களைக் கதைகளாக்குவது  எளிதல்ல என்பது நமக்கு தெரியும்.  அப்படி தன் கண் முன்னே சிதைந்த நம்மினத்தின் வரலாற்றின் இரத்தக்குருதியைக்  கதைகளில் எழுதி  ஊருக்கும் உலகுக்கும் உரக்கச் சொல்லும் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார் அகரமுதல்வன்.

கதைகளில் வாதையினை எழுத சிரமப்படும் கைகளுக்கு மத்தியில் நம்மினத்தின் ஒட்டுமொத்த வாதையையும் சிதைவுகளையும் சின்னாபின்னங்களையும் தொடர்ந்து எழுதிவரும் அகரமுதல்வனின் கைகளுக்கு என் கண்ணீர்த்துளிகளை படரவிடுகிறேன். நான் எவ்வளவு பலவீனமானவன் என்பதை, அழவே மாட்டேன் என்கிற கட்டுகளை இவரின் கதைகள் உடைத்துவிடுகின்றன. கண்முன்னே வாதைகளை நடத்திக் காட்டுகின்றன. வாசகனையும் அதில் ஒருவனாக மாற்றிவிட்டு கதையை முடிகின்றன. அவர் எழுதி முடித்த கதையின் கடைசி வாக்கியத்தில் இருந்து அக்கதை நம் மனதில் விரிந்து செல்கிறது.

எழுத்தாளர் அகரமுதல்வனை  அவரின் முதல்  சிறுகதைத் தொகுப்பான ‘இரண்டாம் லெப்ரிணன்ட்’ புத்தகம் மூலமாக வாசித்து அறிந்து கொண்டேன். அச்சிறுகதைகள் பற்றி எழுதிய என் வாசிப்பு அனுபவத்தில் இதுவரையில் இல்லாத வாக்கியக் குழப்பங்கள், பிழைகள் என இருப்பதை கண்டேன். அதனாலேயே  அதிக நேரம் எடுத்து அந்த கட்டுரையைப் பகிர்ந்தேன். ஏனெனின் அக்கதைகள் என்னை என் இயல்பிலிருந்தும் என் இருத்தலில் இருந்தும் இடம் பெயர்த்துவிட்டன.  மீண்டு வர அதிக நேரம் எடுத்தது. வீட்டில் அச்சிறுகதைகளைப் பற்றி பேசிப்பேசியே என் மன உளைச்சலில் இருந்து மீண்டேன்.

ஏன் “இப்படி எழுதறீங்க?” என வழக்கமான பொது வாசிப்பில் இருந்து வரும் கேள்விகளைப் புறக்கணித்து, எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டிருக்கிறோம் என்கிற ஆவணங்களாக இதனை அடுத்த தலைமுறைக்கு (இத்தலைமுறைக்குக் கூட முழுமையாக புரிந்ததா என தெரியவில்லை), அடுத்த தலைமுறைக்காவது கொண்டு செல்ல வேண்டும். எப்படி இருந்தோம் தெரியுமா என்கிற பழம் பெறுமையின் குளிர்ச்சியில் இருந்து, எப்படியெல்லாம் வதைக்கப்பட்டோம் என்கிற இரத்தச்சூட்டை காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு அகரமுதல்வனின் எழுத்துகள் நம்மை தள்ளிவிடுகின்றன.

இப்படியெல்லாம் இருந்தும் கூட ஏன் மீண்டும் அகரமுதல்வனை வாசிக்க வேண்டும். ஏன் அவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பையும் வாசிக்க வேண்டும் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். பதில் தெரியவில்லை. ஒருவேளை ஒவ்வொரு கதையிலும் வந்து போகும் மனிதனுக்காக சில நிமிடங்கள் மௌன அஞ்சலியையும் சில கண்ணீர் துளிகளையும் கொடுப்பதற்காக இருக்கலாம்.

அகரமுதல்வனின் படைப்புகள் குறித்தும் பொதுவாகவே இலங்கை படைப்பாளிகள் மீதான மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் மறுத்துப்பேசவும் புறக்கணித்து ஓடவும் முடியாத எழுத்துகள் அகரமுதல்வனுடையது.

‘முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு’ சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பத்து சிறுகதைகள் என்றழைக்க வேண்டிய  பெரும் வதைகள் அடங்கியுள்ளன.

 

1.   மரணத்தின் சுற்றிவளைப்பு

‘நான் என்ன செய்யப்போகிறேன் என்று எண்ணுவதை விடுத்து என்னை என்ன செய்யப்போகிறார்கள் என யோசிக்கும் ஒரு காலத்தில் உயிர்வாழ்வது அவமானம்’ என்னும் வரி இக்கதையில் வருகிறது. போர்க்களத்தில் தொலைந்த, உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்ற நிலையில் இருக்கும் காதலி நித்திலாவிற்கு அன்பு எழுதும் கடிதம். ஒரு காதல் கடிதத்தில் என்னவெல்லாம் இருக்கும் என நாம் அறிந்ததிலிருந்து இன்னொன்றைச் சொல்கிறார் ஆசிரியர்.

2.   திருவளர் ஞானசம்பதன் 

எல்லாவற்றையும் இழந்த பின் முகாமில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாம் சாவதற்குக்கூட அதிஷ்டம் அற்றவர்கள் என சொல்லும் கதை.

3.   சர்வ வியாபகம் 

போராளியின் வாழ்வின் ஒருவர் எதிர்க்கொள்ளும் சிக்கலைச் சொல்லும் கதை. நம்பிக்கை என்பதும் எதார்த்தம் என்பதும் வேறு வேறானவை என ஆசிரியர் சொல்வதற்கு காரணம் இல்லாமலில்லை

4.   கிழவி 

முகாமில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்ப்படுகிறார்கள் பாட்டியும் (கிழவி) பேத்தியும் அங்கிருந்து தப்பிக்க முயல்கிறார்கள். இதற்கிடையில் அவர்களும் மற்றவர் போல இறந்துவிட்டார்கள் என சொல்லிவிட்டு கதையை மேற்கொண்டு நகர்த்திக்காட்டுகிறார் ஆசிரியர். அவர்கள் இறந்தார்களா இல்லையா என்பதைவிட அவர்கள் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என நம்மையும் எதிர்ப்பார்க்க வைக்கிறார்.

 இக்கதையை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். பாட்டியும் பேத்தியும் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்றே நினைக்க வைக்கிறது. அவர்கள் தப்பிக்க நினைப்பது எதிலிருந்து? மருத்துவமனையில் இருந்தா, இராணுவத்திடமிருந்தா இல்லை இந்த உயிரில்  ஒட்டிக்கொண்டிருக்கும் உடலில் இருந்துதான்  என்கிற அவலத்தை எப்படி மறுப்பது.

5.   நிலமதி 

என்னை அழவைத்தக் கதை. ஒரு நாள் முழுக்க என்னை தூங்கவிடாமல் செய்த கதை. போருக்கு செல்லும் அரசன் தன்  அரசிக்கு கடைசியாக சில வார்த்தைகள் சொல்லும் கதைகளை யாரோ சொல்லி கேட்டிருப்போம். இந்நவீன சூழ்ச்சிகள் நிறைந்த உலகில் அதுவே தன்னை மீள் உருவாக்கம் செய்கிறது. போருக்கும் மரணத்திற்கு ஒப்புக்கொடுத்த உயிரிலும் உடலிலில் இருக்கும் இதயம் சுமக்கும் காதல் கதை.  அதிகமான இடங்களைக் கோடிட்டு வாசித்த கதை இதுதான். வேன்ற காதலும் தோற்ற காதலும் காவியங்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் மறக்கவேக் கூடாத போராளிகளின் காதை கதை இது.

 6.   முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு 

யார் இந்த முதஸ்தபா, ஏன் சுட்டுக்கொல்கிறார்கள். என்னதான் நடந்தது என சொல்லும் கதை. முஸ்தபாவை எப்போதும் சுமந்து கொண்டிருப்பவனே, முஸ்தபாவிற்கு ஏதுமென்றால் துடித்துப்போகிறவனே முஸ்தபாவைக் கொல்ல என்ன காரணம். இங்கு முஸ்தபா என்றழைக்கப்படுவதற்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம். யாரோ போடும் வெடிகுண்டால் சிதறிச்சாவதற்காகா வாழ்கிறார்கள்.

7.   பிரேதங்கள் களைத்து அழுகின்றன 

இனிமையும் இளமையும் கொண்ட இரு காதலர்களின் கட்டிலில் தொடங்கிய கதை, போராளிகளான அக்கா மாமாவின் தற்கொலையில் முடிகிறது.

8.   பிட்டிப் பூசை 

யுத்த மண்ணில் தன்னை ஏதோ நம்பிக்கையில் பிடித்துக் கொள்ளும் காதல் கதை.

9.   பெய்துக்கொண்டிருக்கும் மழை 

யுத்தம் மீதும் போராளிகள் மீதும் மாற்றுக்கருத்துகள் இல்லாமலில்லை. தன் கதைகளை அதனையும் இணைத்தே ஆவணம் செய்துக் கொண்டிருக்கிறார் ஆசிரியர். இதுவும் காதல் கதைதான் ஆனால் காதலை மட்டுமே பேசவில்லை.

    10.     தேடியலையும் நள்ளிரவு

கதையின் முடிவு முழு கதையின் போக்கையும் மாற்றிக்காட்டுகிறது. காணாமல் போகும் மனப்பிறழ்வானன் ஏன் கல்லறையில் கண்ணுறங்குகிறான் என்கிற கேள்வி கதையை வாசித்து முடித்தும் கூட விடைக்காகத் தேடிக்கொண்டிருக்கிறது.

     நிறைவாக; போர் பற்றிய பல ஆவணங்கள் போலவே, போருக்கு பிந்திய வேதனைகளையும் ஆவணங்களாக்க வேண்டும் என்கிற முனைப்பு அகரமுதல்வனின் எழுத்தில் இருக்கின்றன. ‘போராளிகள் இப்போது முகாம்களில் மறுவாழ்விற்காக காத்திருக்கிறார்கள்’ என்று சொல்லி எல்லாவற்றையும் மூடி மறைக்கும் அரசியல் பிரச்சார பீரங்கிகள் மீது தத்தம் சீழ்பிடித்த மரணத்தை தூக்கியடிக்க வேண்டிய கட்டாயத்தை எற்படுத்துகின்ற இக்கதைகள்.

 - தயாஜி

(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்

 

 

ஜனவரி 07, 2022

புத்தகவாசிப்பு 2022_2 அசோகமித்திரனின் 'அமானுஷ்ய நினைவுகள்'

அமானுஷ்ய நினைவுகள்

தலைப்பு – அமானுஷ்ய நினைவுகள்

எழுத்து – அசோகமித்திரன்

வகை – சிறுகதைத் தொகுப்பு

வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம்

நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)

 

அசோகமித்திரன் எனக்கு பிடித்தமான எழுத்தாளர்களில் ஒருவர்.  அவரின் ‘பிரயாணம்’ சிறுகதையை இன்றும் பல கோணங்களில் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர்களிடம் விவாதித்துக் கொண்டும் இருக்கிறேன். முடிவற்ற முடிவை அச்சிறுகதை தன்னகத்தே போத்தியிருப்பதாகவே எப்போதும் தோன்றும்.

‘அமானுஷ்ய நினைவுகள்’. அசோகமித்திரன் எழுதிய கடைசிக் கதைகள் இவை என இந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த சொல்லாடலில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. ஏனெனில் ஆளுமைக் கொண்ட எழுத்தாளரின் படைப்பானது காலமாற்றம் காணக்காண தன்னைத்தானே பல சாத்தியங்கள் கொண்ட கதைகளாக மாற்றிக் கொள்கின்றன என நம்புகிறவன் நான். அதுவே புதிய தலைமுறை வாசிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களும் கூட அப்படைப்புகளைத் தேடி வாசித்து அது குறித்த உரையாடலை மேற்கொள்ள வைக்கிறது. இந்தத் தொகுப்பில் மொத்தம் ஏழு சிறுகதைகள் அடங்கியுள்ளன. ஏழும் ஏழு வகையான கதையாக இருக்கிறது.  விஷால் ராஜாவின் முன்னுரையும் அசோகமித்திரன் படைப்புகள் எதை நோக்குகின்றன என கோடிட்டுக் காட்டுகிறது.

1.    ஒரு மாஜி இளவரசனின் கவிதை வேட்கை

    தலைப்பில் இருந்தே இக்கதை தொடங்குவதாக தோன்றியது. தலைப்பை மறந்து இக்கதையை வாசிப்பது சிரமம்தான் போலும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.  யார் அந்த மாஜி இளவரசன் ஏன் கவிதை எழுத வேட்கை கொள்கிறான் என சொல்லப்படும் கதையில் உண்மையில் அந்த மாஜி இளவரசன் நம்முள்தான் இருக்கிறானோ என யோசிக்க வைக்கும்படிக்கு கதையை முடித்திருக்கிறார்.

2.    அமானுஷ்ய நினைவுகள்

அப்பாவை இழந்த இளைஞனின் வாழ்க்கை.  அப்பா  எப்போது தேவைப்படுகின்றார்  என யோசிக்க வைக்கிறது. நாம் ஒவ்வொருவருக்கும் அமானுஷ்ய அனுபவம் ஏதோ ஒரு வயதில் ஏற்பட்டிருக்கும். பேயோ பிசாசோ அது எப்படித்தான் இருக்கும் என பேசியும் இருப்போம். இச்சிறுகதை அக்களத்தைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.

3.    துரோகங்கள்

    எனக்கு மிகவும் பிடித்துவிட்ட கதை. துரோகங்கள் என்பது நாம் ஒருவருக்கு நேரடியாக செய்வது மட்டுமல்ல என சொல்லும் கதை. நாம் நம்பும் ஒன்று கூட நாம் நேசிப்பவர்களுக்கு பெரியத் துரோகமாக மாறிவிட வாய்ப்புள்ளதை நினைவுப்படுத்துகிறது. காலேஜ் வயதில் காணாமல் போகும் அல்லது  தான்  தொலைத்தக் காதலியை தன் அறுபதாவது வயதைக் கடக்கும் பொழுது  கண்டு பிடிக்கிறார் நீலகண்டன். அப்போது அவருக்கு திருமணமாகி ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். அந்த பெண்ணோ தன் காதலின் நினைவாகவே இத்தனைக்காலம் வாழ்ந்திருக்கிறார். ‘சீதை ஒரு வருடம் ராமனுக்குக் காத்திருந்தாள்: ரஞ்சினி நாற்பது வருடங்கள் காத்திருக்கிறாள்’ என ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார் அசோகமித்திரன். இக்கதை அந்த வாக்கியத்தின் நீட்சிதான். 

    ஆனாலும் நீலகண்டன் மீது நமக்கு கோவம் வரவில்லை.  காதலிக்கும் பெண்ணின் அப்பா சொன்ன வார்த்தையை நம்பியப் பாவத்தின் சம்பளம்தான் மிகப்பெரிய துரோகியாக்கியிருக்கிறது.  ஆனால் ரஞ்சினிக்கு அப்படியல்ல. “உன் மகன், மகள், பெரியவங்க. அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க. நீ உன் பொண்டாட்டியை அழைத்துக்கிட்டு இங்க வந்திடு” என   ரஞ்சினி நீலகண்டனை தன்  வீட்டிற்கே அழைக்கும் இடத்தில் ஒரு பெண்ணால் எப்படி எப்பவும் வலியை ஒதுக்கி வைத்துவிட்டு பேச முடுகிறது என யோசிக்க வைக்கிறது. இக்கதையை  அசோகமித்திரன் முடித்திருக்கும் விதம் மனதை மேலும் கணக்க வைக்கிறது. வாசித்து முடித்ததும் கதையின் முடிவில் ‘பாபநாசம்’ திரைப்படத்தில் கையெடுத்து வணங்கி கமல்ஹாசன் போலிசிடம் பேசும் கடைசி வசனம் போல நீலகண்டனை நான் நினைக்கலானேன்.

4.    நிழலும் அசலும்

    நம்மில் பாலர் நிழலைத்தான் சுமந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய அசலை நம்மால்     கூட  ஜீரணிக்க முடியாத துக்கத்தைச் சொல்லும் கதை.

5.    ஆட்டுக்கு வால்

    எல்லா காலத்திலும் இப்படியானத் துயரத்தை மகளைப் பெற்ற அப்பாக்களில் சிலர் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மருமகன் தன் மகளை ஒதுக்கிவிட்டு இன்னொரு பொண்ணை திருமணம் செய்துக் கொண்டதாகக் கேள்விபட்டதும் அப்பாவும் அம்மாவும் மகளை சந்திக்கச் செல்கிறார்கள். மகள் நிலையைக் கண்டதும் உடைந்து அழும் அப்பா யார் யாரையோ கண்முன் கொண்டுவருகிறார்.

6.    நான் கிரிக்கெட் கோஷ்டிக்கு காப்டன் ஆன வரலாறு

    தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என அடுக்கிக்கொண்டு போகிறார் கதை சொல்லி. ஆனால் கடைசியில் அவர் மீதே நமக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. எல்லாவற்றுக்கும் அவர்தான் காரணமாக இருப்பாரோ?

7.    பாட்டு வாத்தியார் ஆழ்வார்

    கலையை மதிப்பவர்கள் போல கலையை வியாபாரம் ஆக்குபவர்களும் இருக்கிறார்கள். இரண்டாமவர்களுக்கே சமூகத்தில் மரியாதை கிடைப்பதை நாம் பார்த்திருப்போம். எனக்குத் தெரிந்த ஒருவர் ‘எழுதி காசு சம்பாதிக்க முடிஞ்சா எழுது, எதை எழுதினா இவனுங்க வாங்குவானுங்கனு எனக்கு தெரியும்… நான் எழுதி விக்கறேன் அவனுங்க வாங்கி படிக்கறானுங்க’ என சொல்லவும் எனக்கும் அவருக்கும் பெரிய வாக்குவாதமே வந்துவிட்டது. ஆனால் சிலர் அவரைத்தான் இலக்கியத்தைக் காப்பாற்ற வந்தவர்     போல புகழ்ந்து கொண்டிருப்பதை இக்கதை நினைக்க வைத்தது. இக்கதையை வாசிக்க உங்களுக்கும் அப்படியான அனுபவம் இருந்தால் நினைக்கவைக்கும் அந்த வலி புரியும்.

நிறைவாக; அசோகமித்திரன் கதைகளுக்கு ஆயுள் அதிகம். அதற்கான திறப்புகளும் அதிகம் என்ற நம்பிக்கைக்கு வலு சேர்த்திருக்கிறது இத்தொகுப்பு. அவரின் சிறுகதைகளை வாசித்துப் பேசியது போல அவரது கட்டுரைகள் பக்கம் நான் அதிகம் செல்லவில்லை என்கிற குற்றவுணர்ச்சி தோன்றிவிட்டது. அதனை விரைவில் போக்க வேண்டும்.

- தயாஜி

 

(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)

 

ஜனவரி 05, 2022

- அங்கே ஓரிடம் வேண்டும் -



சுதாகர் ரொம்பவும் பக்தி கொண்டவர். இம்மையை விடவும் மறுமையில் அதிகமே அக்கறைக் கொண்டவர். அதற்காக பாடுபடுபவர். காலை விழிப்பது முதல் இரவு படுப்பது வரை ஒரே பக்தி மயம்தான்.
 
தொலைக்காட்சியில் எப்பவும் பக்தி படங்களாகவே ஓடிக்கொண்டிருக்கும். வானொலியில் எப்பவும் பக்தி பாடல்களே கேட்டுக்கொண்டிருக்கும். கைப்பேசியில் கூட நாள் கிழமைகளுக்கு ஏற்றார் போல ஏதாவது ஒரு சாமி அவரைப் பார்த்துக்கொண்டிருக்கும். சட்டி பானைகள் எதுவும் மருந்திற்கும் ரத்தம் பார்த்திடாத சைவம் போற்றுபவர்.

பெற்றோர் செய்த புன்னியத்தில் இம்மை இன்பமாக அமைந்திருந்தது. மறுமைக்கு தான் தானே பாடுபட வேண்டும் என்கிற தெளிவு உள்ள மனிதர்.

ஒரு நாள் இறந்துவிட்டார். அவர் எதிர்ப்பார்த்தது போல சுவர்க்கத்தின் வாசற்கதவின் முன் நிற்கலானார்.  கதவு திறந்தது. உள்ளே செல்ல எத்தணிக்கிறார். நீண்டதொரு ஈட்டி கொண்டு வழி மறைத்த வாயிற்காவலன், அவருக்கும் முன் சிலர் செல்லவிருப்பதைச் சொன்னார்.

சுகுமார் வழிவிட்டார். சுவர்க்கவாசலில் ஒன்றின் பின் ஒன்றாக சுகுமார் வீட்டு தொலைக்காட்சி பெட்டி,  வானொலி பெட்டி, கைப்பேசி,  சட்டி பானைகளென துள்ளிக்குதித்து ஆரவாரமிட்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்தன.

கடைசியாக கரண்டி ஒன்று வழுக்கிக்கொண்டு உள்ளே சென்றதும் சுவர்க்கவாசல் மூடத்தொடங்கியது.

#தயாஜி 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம் 
#குறுங்கதை

கதைவாசிப்பு_2022_2- லதாவின் 'பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை'



தலைப்பு – பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை

எழுத்து – லதா

வெளியீடு – வல்லினம் ஜனவரி 2022

 

இந்த நள்ளிரவு நேரத்தில் படித்திருக்கக்கூடாதக் கதை. படிக்கப்படிக்க ஏதோ அமானுஷ்யம் சுற்றிலும் சூழ்வது போல ஒரு பிரமையைக் இக்கதை கொடுத்துவிட்டது. பூனை பற்றியக் கதை எழுத முயன்று முடியாமல் தவிக்கிறாள் அனா. கதை எழுதி கொடுப்பதாக ஒப்புக்கொண்டு அதற்கான பாதி பணத்தையும் வாங்கியப்பின்னரும் அவளால் பூனையைப் பற்றி ஏன் கதை எழுத முடியவில்லை என ஆரம்பித்து பூனையிலேயே கதையை முடித்த விதம் சுவாரஷ்யம் குன்றாமல் இருக்கிறது.

சிங்கப்பூர் வாழ்வியலோடு நகர்ந்து கொண்டிருக்கும் கதையில் பகச்சைக்கண் பூனையைப் பற்றி அனா நினைக்கும் போதும் அதைத் தேடும்போதும் நமக்கு ஒருவித நடுக்கமும் பதற்றமும் வரும் வகையில் நன்றாகவே கதையைக் கொண்டு சென்றுள்ளார் ஆசிரியர்.

கண்டிப்பாக வாசிக்க வேண்டியக் கதையாக இதனைச் சொல்லலாம்.


கதையை வாசிக்க இங்கு சொடுக்கவும்

 - https://vallinam.com.my/version2/?p=8159 

 

 

ஜனவரி 04, 2022

புத்தகவாசிப்பு_2022_1 - பணக்காரராவது உங்களது உரிமை



    பணக்காரராவது உங்களது உரிமை புத்தாண்டை தொடக்கி வைத்த புத்தகம். டாக்டர் ஜோசப் மர்ஃபியின் ‘பணக்காரராவது உங்களது உரிமை’. ‘Riches are Your Rights’, புத்தகத்தைத் தமிழாக்கத்தில் ‘பணக்காரராவது……’ என குறிப்பிட்டிருந்தாலும் புத்தகத்தில் பணத்தைக் குறித்து தெரிந்து கொள்வதை விடவும் செல்வ செழிப்பைக் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. இந்நூலில் மேலும் இரண்டு நூல்களின் இணைப்புகள் உள்ளன. அவை ‘வளமடைவது எப்படி’, ‘வெற்றிக்கான மூன்று வழிகள்’ ஆகும். 

    டாக்டர் ஜோசப் மர்ஃபியை முதன் முதலாக நான் அறிந்து கொண்டது ‘ஆழ்மனதின் அற்புத சக்தி’ (The Power of Subconscious Mind) என்ற புத்தகத்தின் மூலமாகத்தான். விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்த போது, மனைவியிடம் வாசிக்க புத்தகத்தை எடுத்து வர சொல்லியிருந்தேன். என் புத்தக அலமாரியில் இருந்து அவர் கைக்கு எட்டிய புத்தகமாக அந்த புத்தகத்தை எடுத்து வந்தார். சரி வாசிக்கலாமே என ஆரம்பித்தேன். அப்போதைய என் மன நிலையிலும் உடல் நிலையிலும் ஏற்பட்ட சிக்கலைப் போக்குவதற்கு அந்நூல் பெரிதும் உதவியாக அமைந்தது. இன்னொரு நாள் அந்நூலைக் குறித்து கட்டாயம் எழுதுகிறேன். 

    இப்போது ‘பணக்காரராவது உங்கள் உரிமை’ புத்தகத்திற்கு வருவோம். கிறிஸ்தவர்களின் வழிபாட்டு முறையில் இருந்து தனிமனிதனின் வாழ்வில் எப்படி மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற அடிப்படையில் இந்நூலை எழுதியிருக்கிறார். பல வேத வசனங்களை மையமாகக் கொண்டு அதிலிருந்து சமகாலத்தில் எப்படி நம் பிரார்த்தனைகளை அமைத்துக் கொள்வது. நம் வேண்டுதல்களை எப்படி முறையிடுவது என்ற வகையில் மிகத்தெளிவாக இந்நூலை எழுதியிருக்கிறார். 

    அப்படியெனில் இது மதத்தைப் பிரச்சாரம் செய்யும் நூலா என்கிற கேள்வி எழுவதை புரிந்துகொள்ள முடிகிறது. முதல் சில பக்கங்களில் எனக்கும் அவ்வாறு தோன்றியது. ஆனால் அப்படியில்லை என அடுத்தடுத்தப் பக்கங்களின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார். 

    பைபிளை வாசிக்கும் கிறிஸ்துவர்களுக்கு அவர்களின் ஸ்தோத்திரங்கள்/பிரார்த்தனைகள் எப்படி அமைகிறது எப்படி செயல்படுகிறது என அறியலாம். ஆனால் எனக்கு தெரிந்த சில கிறிஸ்துவ நண்பர்களிடம் இந்நூலைக் குறித்து பேசும் போது, அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு இது ஒரு பொருட்டாகவே அமையவில்லை. அதோடில்லாமல் இலக்கியம் மீது பெரிய ஈடுபாடோ மதிப்போ உள்ளதாகவும் தெரியவில்லை. டால்ஸ்டாய் மற்றும் தஸ்தயொவஸ்கி போன்ற பெரும் ஆளுமைகளைக் குறித்து பேசிப்பார்த்தாலும் அதனால் என்ன? என்கிற கேள்வியே எஞ்சியிருந்தது. 

    ஆனால் இன்னொரு கிறிஸ்துவ நண்பரிடம் இந்நூல் குறித்து பேசும்போது அவரும் உற்சாகம் ஆகிவிட்டார், அவர் வாழ்வில் நடந்த சில அற்புதங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். ஏறக்குறைய அது எப்படி நடந்தது, நடக்கிறது என்பதற்கு இந்நூல் சில உதாரணங்களைக் கொடுக்கிறது. இந்த வழிமுறையைத்தான் பல தன்முனைப்பாளர்கள் பேச்சாகவும் எழுத்தாகவும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சுருங்கச் சொன்னால் ‘ரோண்டா பைர்ன்’ எழுதிய ‘ரகசியம்’ தொகுதி புத்தகங்கள் இவ்வழிமுறைகளின் நீட்சியாக பார்க்க முடிகிறது. 

    மதம் ஒரு சிக்கலாக ஆகிவிடாது என்கிற தெளிவு உள்ளவர்களுக்கு இந்நூல் நிச்சயம் பயன் தரும். தன்னுடைய அன்றாட வாழ்க்கை பிரார்த்தனையில் தங்களின் வேண்டுதல்களை/பிரார்த்தனைகளை இயற்கையின் மீதோ பிரபஞ்சத்தின் மீதோ இறைவன் மீதோ முன் வைக்கலாம்.

 - தயாஜி 

(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)

கதைவாசிப்பு 2022_1 - ஜெயமோகனின் 'வேதாளம்'

    இவ்வாண்டின் முதல் சிறுகதையாக வல்லினம்.காமில் வந்திருந்த ‘வேதாளம்’ கதையை வாசித்தேன். வாசித்து முடிக்கவும், அவ்வேதாளம் என்னிடம் தொற்றிக்கொண்டதொரு உணர்வு. அபத்த நகைச்சுவையாக தொடர்ந்த கதை, அதன் முடிவில் கொடுத்திருக்கும் அதிர்ச்சியைக் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. 

    வலது கையின் அழகையும் அதன் வடிவையும் காட்டியவாரே நாம் அசந்த நேரம் இடது கையால் சட்டென நம் கையைத் தட்டிவிட்ட போன்ற உணர்வு. காவல் நிலையத்தில் இருக்கும் கைதி தாணூலிங்கத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் பொறுப்பு காண்ஸ்டபல் சடாட்சரம் கைக்கு வருகிறது. கைதியுடன் பேருத்து நிறுத்தத்திற்கு செல்கிறார்கள். அதற்கு முன் டீ கடைக்கு செல்லவும் இன்று பேருந்து வராது என தெரிந்ததும் வேறு வழியின்றி அடுத்த நிறுத்தத்திற்கு செல்ல வேண்டும். 

    அதற்கு ஆறு கிழோ மீட்டர் நடக்க வேண்டும். பாதி வழி நடந்ததும் ஏற்படும் அசம்பாவிதம் நமக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறது. கதைகளுக்கு வசனம் எவ்வளவும் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இக்கதை வழி அறிய முடிகிறது. இக்கதையில் காண்ஸ்டபிலுக்கும் திருடனுக்கும் இடையே நடக்கும் உரையாடலை சிரிக்காமல் கடக்க முடியவில்லை. 

    இந்த சிரிப்புத்தான் கதை முடிவில் நமக்கு வலியாக மாறி விளையாட்டு காட்டுகிறது. “சின்னப்பிள்ளைகள் தூக்கச்சொல்லி செல்லமாக க்கூப்பிடுவதுபோல அதன் கை தூக்கப்பட்டிருந்தது.” என்ற வாக்கியத்தை வாசித்ததும் ஏனோ குற்றவுணர்ச்சி நம்மையும் பிடித்துக் கொள்கிறது

. -இக்கதை இதழ் 133 – ஜனவரி 2022-ல் வெளிவந்துள்ளது. (https://vallinam.com.my/version2/?p=8119)

ஜனவரி 03, 2022

- குற்றம் சூழ் உலகு -


- குற்றம் சூழ் உலகு -

காயத்ரியை எனக்கு சில மாதங்களாகத் தெரியும். ஏதோ நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்ததாய் நினைவு. எப்போதாவது வணக்கம் என வட்சப் செய்தி வரும். பெரிதாக பழகிக்கொள்ளவில்லை.

நேற்று காலை , 'வணக்கம் வட்சப்' செய்திக்கு பதிலாக நீண்ட செய்தியை அனுப்பியிருந்தாள்.  அவளின் அம்மாவிற்கு உடல் நலமில்லை என்றாள். மருத்துவமனையில்  சேர்த்திருப்பதாகவும் சொன்னாள். சிகிச்சைக்கு பணம் அவசரமாகத் தேவைப்படுவதையும் சொன்னாள். நிச்சயம் அவள் கேட்கும் முழு தொகையையும் என்னால் கொடுக்க முடியாது. முடிந்தவரை உதவலாம் என்று பதில் செய்தியை அனுப்பினேன்.

சட்டென நினைவிற்கு வந்தது. கடந்த மாதமும் இதே செய்தியைச் சொல்லிதான் பண உதவி கேட்டிருந்தாள். கொடுத்து உதவினேன். திரும்ப கொடுக்கவில்லை. இப்போது இந்த மாதமும் அதே செய்தியைக் கொஞ்சமும் மாற்றாமல் அனுப்பியிருந்தாள்.

அப்போதுதான் நண்பன் அழைத்தான். அவனுக்கும் பண உதவி கேட்டு வட்சப் செய்தி வந்துள்ளதையும், காயத்ரி அடிக்கடி புதிய நண்பர்களிடம் அம்மாவின் பெயரைச் சொல்லி பணம் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பதாகவும் சொன்னான். 

மீண்டும் ஏமாறக்கூடாது. மேற்கொண்டு நட்பை வளர்க்க விரும்பவில்லை. உடனே அவளின் எண்ணை ப்ளாக் செய்துவிட்டேன்.

இன்று காலை, குமார் அழைத்தான். காயத்ரியின் அம்மா மருத்துவமனையிலேயே இறந்துவிட்டதாகவும் அங்குதான் கிளம்பிக் கொண்டிருப்பதாகவும் என்னையும் தயாராகச்சொன்னான். என்னால் காயத்ரியின் எண்ணை அன்ப்ளாக் செய்ய முடியுமா என்றே தெரியவில்லை.

#தயாஜி

ஜனவரி 01, 2022

- அமுதாவிற்கான ஆய்வேடு -



மீண்டும் அதே துர்நாற்றம். எவ்வளவுதான் செலவு செய்வது. இன்னும் எத்தனைப் பேரைத்தான் பார்ப்பது.  ஒவ்வொரு  முறையும் வீட்டு வாசலைத் தாண்டும் போதுதான் இந்த துர்நாற்றம் அமுதாவை தாக்கும்.

முதலில் லேசாகத்தான் உணர்ந்தாள்.  பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.நாட்கள் செல்லச்செல்லவும்தான் அதன் விபரீதத்தைப் புரிந்துகொண்டாள்.

வாசலைத் தாண்டியதும் தாக்கும் அந்த துர்வாடை மீண்டும் வீட்டிற்கு வந்ததும் மாயமாய்ப்போகும். தன்னை வீட்டிலேயே கட்டிப்போட நினைக்கும் யாரோ ஒருவர்தான் இதற்கு காரணம் என அமுதாவின் மனம் சொன்னது. அதன் உண்மையை அவள் தேடலானாள்.

மருத்துவமனையைத் தொடர்ந்து மந்திரவாதிகள் வரை பார்த்தாயிற்று ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் என்னிடம் ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லை. கேட்டிருந்தால் ஒரே வரியில் சிக்கலைத் தீர்த்திருப்பேன். ஓர் எழுத்தாளனிடம் இல்லாத தீர்வா?

சரி என்னிடம் கேட்டால் என்னதான் சொல்லியிருப்பேன்.
" அமுதா... அந்த பழைய மாஸ்க்கை தூக்கிப்போட்டுட்டு புது மாஸ்க் வாங்கு..."

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்