- புத்தகங்களுக்கான தாலாட்டு -
இன்றோடு முடிந்தது
என்று அறிவித்து
நடந்தார்கள்
அடுக்கி வைத்தவற்றை
எடுத்து வைக்க
நேரம் இருக்கிறது
உதவிக்கு ஆட்களும்
இருக்கிறார்கள்
கணக்கு வழக்குகளை
எல்லாம்
தனித்தனியாய்ப் பார்த்துக்கொள்வார்கள்
யாருக்கும் எந்தச்
சிக்கலும் இல்லை
நான் மட்டும் ஏனோ
தனியே அமர்ந்திருக்கின்றேன்
இல்லை
இதுவரை விற்ற புத்தகங்களின்
நினைவில் அமர்ந்திருக்கின்றேன்
இதுநாள்வரை
இங்கிருந்தவை இனி
எங்கெங்கோ செல்லப்போகின்றன
புதிய ஸ்பரிசங்களை
அனுபவிக்கப்போகின்றன
ஏதோ ஓர் உள்ளங்கை வியர்வையில் வெட்கப்படப்போகின்றன
நிச்சயம் யாரோ
ஒருவரைத் தாலாட்டப்போகின்றன
யாரோ ஒருவரின் தூக்கத்தைக் கெடுக்கப்போகின்றன
யாரோ ஒருவரை ஏங்கி ஏங்கி
அழவைக்கப்போகின்றன
இன்னொருவரோ மீண்டும்
பழையதை நினைத்து நினைத்து
குற்றவுணர்ச்சியில் குதிக்கப்போகிறார்
அடுத்தவரோ அதன் கரையைக்
கண்டு நீந்தி
தப்பிக்கப்போகிறார்
எல்லாவற்றையும்
தாங்கதான் வேண்டியுள்ளது
இந்தும்கூட வேறுவழியில்லை
உங்களிடம் மன்றாடியொன்றைக் கேட்கிறேன்
புத்தகங்களை கவனமாகக் கையாளுங்கள் நண்பர்களே
அதுவும் எங்களுக்கு குழந்தைகள்தான்.......
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக