பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 24, 2016

கதை வாசிப்பு 26 - மிகவும் புதிய கத்திரி

கதை வாசிப்பு 26 - மிகவும் புதிய கத்திரி

   ஆகஸ்ட் மாத (2016) உயிர்மையில் வந்திருக்கும் மொழிப்பெயர்ப்பு சிறுகதை. மலையாளத்தில் அர்ஷாத் பத்தேரி எழுதியுள்ளதை ஶ்ரீபதி பத்மநாபா தமிழாக்கம் செய்துள்ளார்.

   இப்போதெல்லாம் ஶ்ரீபதி பத்மநாபா மொழிபெயர்த்த கதையென்றால் நம்பிக்கையாக படிக்கலாம் என தோன்றுகிறது . தொடர்ந்து அவ்வாறான முக்கியத்துவம் கொண்ட கதைகளையே அவர் தமிழாக்கம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கதை.

    தன்னிடம் வரும் நோயாளிகள் யாராயினும் அவர்களின் இதயத்தை லேபுக்கு மாற்றுகிறார். பின்னர் அவர்களுக்கு  பிளாஸ்டிக் இதயத்தை பொருத்துகிறர் . விரைவாகவே நல்ல இதயத்துக்கு தட்டுப்பாடு வரப்போவதாகய்வும் தன்னைச்சார்ந்தவர்கள் இதயத்தை தேடி அலையும் நிலை வரக்கூடாது என்கிறார்.
 அவரின் செயலுக்கு மனதால் சம்மதமின்றி உதவியாய் இருக்கிறார் மேரி.

   தன் தங்கை உட்பட , கறுத்த அழகிகள், ஆரோக்கியமான ஆண்கள் என பலரின் இதயத்தையும் களவாட உதவிய மேரிக்கு மருத்துவரை விருப்பத்தை உடைக்க முடியவில்லை. 

    இதயம் மாற்றப்பட்ட சிலர் மருத்துவரை சந்திக்கிறார்கள். அவர்களால் அழமுடியவில்லை. சிரிக்க முடியவில்லை. கனவுகள் வருவதில்லை என்று புகார் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு ஆயுட்கால கேரண்டி மட்டுமே கொடுக்க முடியும் என்கிறார் மருத்துவர் ஜோ. இம்முறை அவரது குரலில் கட்டளை தொனி இருக்கிறது.

    நிறைவாக மருத்துவர் தனக்கு இதுவரை உதவிவந்த தாதி மேரியின் இதயத்திற்கு வருகிறார். மேரி மருத்துவரிடம் அவளது கடைசி ஆசையாக அவரின் இதயத்தை பார்க்கச்சொல்கிறார் .

  மருத்துவர் அவரின் இதயத்தைப் பார்க்கிறார்.  ரத்தம் சதை இல்லாத பிளாஸ்டிக் இதயம். அழுகிறார் . சிரிக்கிறார் . 
  
     பின்னர் அவரது ஒவ்வொரு உணர்ச்சியாக கழன்று விழுகிறது . ஏதுமில்லாமல் ஆகிறார்.
கதை இவ்வாறு முடிகிறது.

கதையைக்குறித்து ,

   தலைப்பு படிக்கும் ஆவலைத்தூண்டுகிறது. கதையின் போக்கை யூகிக்க முடியாத்து அதன் பலம்.

  இக்கதையை பலவாறு பார்க்கலாம் எனத்தோன்றுகிறது . இக்கதையினை நான் எவ்வாறு பார்க்க நினைக்கிறேனெனில் ,
மற்ற இதயங்களை களவாடி, பிளாஸ்டிக் இதயம் பொருத்தி அவர்களின் உணர்ச்சியை மழுங்கச்செய்து இயந்திரம் போல நடமாடவைக்கிறார் மருத்துவர் . தனக்கு பல நாள் உதவியாக இருப்பவரின் இதயத்தை களவாட முடிவெடுக்கிறார். அவரின் இதயத்தையும் யாரோ களவாடி பிளாஸ்டிக் இதயத்தை பொருத்தியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியாகி தன் உணர்ச்சிகளை இழக்கிறார்.

   நாம் மற்றவர்க்கு என்ன செய்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். நம் குரோதம் பழியுணர்ச்சி நமக்கானதாக இல்லாமல் யாருக்கோ நாம் பலியாடாகிவிடுகிறோம். மருத்துவர் அவர் சார்ந்தவர்களுக்காக இதயத்தை களவாடி வைக்கிறார் . அவராக செயல்படுவதாக நினைக்கிறார். தான் செய்யும் ஆய்வில் வேற்றி பெறுவதாக நினைத்தாலும் அவர் யாருக்காகவோ அதனை செய்கிறார்.

   யோசிக்கையில் நாமும் பல சமயங்களில் நமக்கான செயல்களாக நினைத்து யாருடைய புத்திசாலித்தனத்திற்கோ நம்மையும் சேர்த்து  பலியாகிக் கொண்டிருக்கிறோம்.


-தயாஜி-

கதை வாசிப்பு 26 - மிகவும் புதிய கத்திரி

கதை வாசிப்பு 26 - மிகவும் புதிய கத்திரி

   ஆகஸ்ட் மாத (2016) உயிர்மையில் வந்திருக்கும் மொழிப்பெயர்ப்பு சிறுகதை. மலையாளத்தில் அர்ஷாத் பத்தேரி எழுதியுள்ளதை ஶ்ரீபதி பத்மநாபா தமிழாக்கம் செய்துள்ளார்.

   இப்போதெல்லாம் ஶ்ரீபதி பத்மநாபா மொழிபெயர்த்த கதையென்றால் நம்பிக்கையாக படிக்கலாம் என தோன்றுகிறது . தொடர்ந்து அவ்வாறான முக்கியத்துவம் கொண்ட கதைகளையே அவர் தமிழாக்கம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கதை.

    தன்னிடம் வரும் நோயாளிகள் யாராயினும் அவர்களின் இதயத்தை லேபுக்கு மாற்றுகிறார். பின்னர் அவர்களுக்கு  பிளாஸ்டிக் இதயத்தை பொருத்துகிறர் . விரைவாகவே நல்ல இதயத்துக்கு தட்டுப்பாடு வரப்போவதாகய்வும் தன்னைச்சார்ந்தவர்கள் இதயத்தை தேடி அலையும் நிலை வரக்கூடாது என்கிறார்.
 அவரின் செயலுக்கு மனதால் சம்மதமின்றி உதவியாய் இருக்கிறார் மேரி.

   தன் தங்கை உட்பட , கறுத்த அழகிகள், ஆரோக்கியமான ஆண்கள் என பலரின் இதயத்தையும் களவாட உதவிய மேரிக்கு மருத்துவரை விருப்பத்தை உடைக்க முடியவில்லை. 

    இதயம் மாற்றப்பட்ட சிலர் மருத்துவரை சந்திக்கிறார்கள். அவர்களால் அழமுடியவில்லை. சிரிக்க முடியவில்லை. கனவுகள் வருவதில்லை என்று புகார் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு ஆயுட்கால கேரண்டி மட்டுமே கொடுக்க முடியும் என்கிறார் மருத்துவர் ஜோ. இம்முறை அவரது குரலில் கட்டளை தொனி இருக்கிறது.

    நிறைவாக மருத்துவர் தனக்கு இதுவரை உதவிவந்த தாதி மேரியின் இதயத்திற்கு வருகிறார். மேரி மருத்துவரிடம் அவளது கடைசி ஆசையாக அவரின் இதயத்தை பார்க்கச்சொல்கிறார் .

  மருத்துவர் அவரின் இதயத்தைப் பார்க்கிறார்.  ரத்தம் சதை இல்லாத பிளாஸ்டிக் இதயம். அழுகிறார் . சிரிக்கிறார் . 
  
     பின்னர் அவரது ஒவ்வொரு உணர்ச்சியாக கழன்று விழுகிறது . ஏதுமில்லாமல் ஆகிறார்.
கதை இவ்வாறு முடிகிறது.

கதையைக்குறித்து ,

   தலைப்பு படிக்கும் ஆவலைத்தூண்டுகிறது. கதையின் போக்கை யூகிக்க முடியாத்து அதன் பலம்.

  இக்கதையை பலவாறு பார்க்கலாம் எனத்தோன்றுகிறது . இக்கதையினை நான் எவ்வாறு பார்க்க நினைக்கிறேனெனில் ,
மற்ற இதயங்களை களவாடி, பிளாஸ்டிக் இதயம் பொருத்தி அவர்களின் உணர்ச்சியை மழுங்கச்செய்து இயந்திரம் போல நடமாடவைக்கிறார் மருத்துவர் . தனக்கு பல நாள் உதவியாக இருப்பவரின் இதயத்தை களவாட முடிவெடுக்கிறார். அவரின் இதயத்தையும் யாரோ களவாடி பிளாஸ்டிக் இதயத்தை பொருத்தியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியாகி தன் உணர்ச்சிகளை இழக்கிறார்.

   நாம் மற்றவர்க்கு என்ன செய்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். நம் குரோதம் பழியுணர்ச்சி நமக்கானதாக இல்லாமல் யாருக்கோ நாம் பலியாடாகிவிடுகிறோம். மருத்துவர் அவர் சார்ந்தவர்களுக்காக இதயத்தை களவாடி வைக்கிறார் . அவராக செயல்படுவதாக நினைக்கிறார். தான் செய்யும் ஆய்வில் வேற்றி பெறுவதாக நினைத்தாலும் அவர் யாருக்காகவோ அதனை செய்கிறார்.

   யோசிக்கையில் நாமும் பல சமயங்களில் நமக்கான செயல்களாக நினைத்து யாருடைய புத்திசாலித்தனத்திற்கோ நம்மையும் சேர்த்து  பலியாகிக் கொண்டிருக்கிறோம்.


-தயாஜி-

ஆகஸ்ட் 21, 2016

கதை வாசிப்பு 25 - கதவு

கி.ராஜநாராயணனின் 'கதவு'


முதலில் இச்சிறுகதை இத்தனை ஆண்டுகளாகியும் பேசப்படுவது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. இக்கதை சொல்வது ஓர் ஏழ்மை குடும்பத்தைப்பற்றி. வெளியூருக்கு வேலைக்கு போன தந்தை, போனவர் போனவர்தான். ஐந்து மாதங்கள் ஆகியும் எந்த விபரமும் இல்லை. ஒரு சிறுமி ஒரு சிறுவன் ஒரு கைக்குழந்தையை வைத்திருக்கும் அம்மா எதிர்கொள்ளும் சிக்கல்தான் கதை.

 அப்படியொன்றும் கதையில் இருப்பதாக தெரியவில்லையே என்கிற நினைப்பு வராததற்கு எழுத்தாளர் கையாண்டிருக்கும் படிமமும் வாசகர்களை யார் மீது கவனம் வைக்கவிடுகிறார் என்பதும் முக்கிய காரணமாகிறது.

இந்த மாதிரி வறுமையைச் சொல்லும் கதைகள் ஏராளம் உண்டு ஆனால் இக்கதை அதில் இருந்து தன்னை மாறுபடுத்திக்காட்டுகிறது. கதவின் பயன்பாடுதான் அதற்கான காரணம் .

கதவு. இதுவரை திறக்கவும் மூடவும் மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் நமக்கு கதவை படிமமாக்கி அதற்குள்ளே ஆன்மாவை மறைத்து வைத்திருக்கிறார் கி.ரா .

இக்கதவு குழந்தைகளுக்கு ரயில் , சிறுமிக்கும் சிறுனுக்கும்  அப்பா, கைக்குழந்தைக்கு பாதுகாப்பு, வீட்டிற்கு கௌரவம். குழந்தைகளால் மட்டுமே ஜடப்பொருள்கள் மீது தாங்கள் விரும்பும் ஒன்றை ஏற்றி வைத்துக் கொண்டாட முடிகிறது.

குழந்தைகளுக்கும் கதவுக்குமான ஆத்மார்த்தமான உறவு இக்கதையை இன்னும் பல ஆண்டுகளுக்கு நிலைக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 இப்போதெல்லாம் கதவின் மீது கைபடாதவாறு ரிமோட்டில் அதனை இயக்குகிறோம். இக்கதை மனிதன் தொலைத்துக்கொண்டிருக்கும் வாழ்வின் அர்த்தத்தை காட்டுவதாகவே மனதில் படுகிறது. இக்கதையை படித்து முடித்தபின் என் வீட்டுக்கதை ஒருமுறை ஆழமாக தொட்டுத் தடவிப் பார்க்கிறேன். சட்டென கதவு என்னையும் குழந்தையாக்கி ரயில் ஏற அழைக்கிறது.


-தயாஜி-

கதை வாசிப்பு 24 - பிரயாணம்

அசோகமித்திரனின் பிரயாணம்.

     குரு, சீடன்,ஓநாய்களைச் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது .குருவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பலகை மீது தன் குருவை வைத்து இழுத்துப்போகிறான் சீடன். கடந்துச் செல்லவேண்டிய தூரம் முன்பை விட இப்பொழுது அதிகமாகப் படுகிறது. இடையில் ஓநாய்களை சீடன் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

    பயண்த்தில் எதிர்பாராதவிதமாக குரு இறந்துவிடுகிறார்.  சிகிச்சைக்காக தொடங்கிய பயணம் பின்னர் குருவை சமபரப்பில் புதைக்கவேண்டிய நோக்கமாக மாறுகிறது.

     பயணத்தின் அடுத்த இரவில் ஓநாய் கூட்டங்களொடு சிஷ்யன் போராடும் சூழல் ஏற்படுகிறது. அதற்கிடையில் சில ஓநாய்கள் குருவின் சடலத்தை பள்ளத்தாக்கில் போட்டுவிடுகிறது. மயங்கி விழுந்துவிட்ட சிஷ்யன் மறுநாள் அதிர்ச்சிக்கொண்டு எழுகிறான் . குருவின் உடலைத்தேடி பள்ளத்தாக்குக்கு போகிறான். ஓநாய்கள் தின்று மிச்சம் வைத்திருந்த உடலை காண்கிறான் சிஷ்யன்.
ஆனால் குருவின் கையில் கட்டியிருந்த துணி அறுபட்டுக் கிடந்தது. ஒரு ஓநாயின் கால்
அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்டு,  குருதேவரின் வலது கைப்பிடியில் இருந்தது. கதை அங்கு முடிகிறது .

     அப்படியெனில் குரு இறக்கவில்லையோ என்கிற சந்தேகம்  வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

    மீண்டும் ஒரு முறை கதையை மனதிற்குள் அசைபோட்டேன் . குரு,சிஷ்யன்,ஓநாய்,நிஜம்,  நம்பிக்கை போன்றவை மனதில் வந்து நிற்கிறது.

    குருவின் சிகிச்சைக்கான பயணத்தில் குரு இறந்துவிட்டதாக சிஷ்யன் நம்புகிறான் . அதனை அவன் பரிசோதிக்கவில்லை. பரிசீலனையும் செய்யவில்லை. தான் நம்பியதற்கு ஏற்றார் போல தன் பயண நோக்கத்தை மாற்றுகிறான் . அதே பயணம்தான் ஆனால் இப்போது அதன் நோக்கம் மாறிவிட்டிருக்கிறது.

    ஆன்மிக தேடலை இதைக்கொண்டு அணுக நினைக்கிறேன். தனக்கு போதிக்கப்படும் போதனைகளை எந்த பரிசீலனையும் இன்றி எந்த கேள்வியும் இன்றி பின்தொடரும் மனிதன் . குருவின் இறப்பை தவறாக புரிந்துகொண்டு ஓநாய்களுக்கு இரையாக்கியது போல கிடைக்கவேண்டிய  ஞானத்தை தவறான புரிந்துணர்வின் மூலம் கேள்விகளற்று எதற்கோ இரையாக்கிவிடுகிறோம். அர்த்தமின்றி வாழ்வில் நாமும் கூட ஓநாய்களோடு போராடிக்கொண்டிருக்கிறோம்.

-தயாஜி-

ஆகஸ்ட் 20, 2016

கதை வாசிப்பு 23 - அக்னி


கதை வாசிப்பு 23


 

     அக்னி மற்றும் பிற கதைகள் என்ற சிறுகதை தொகுப்பை படித்தேன். ஸிதாரா.எஸ் எழுதிய மலையாள கதைகளின் தமிழாக்கம் . முதல் கதையானஅக்னிஎன்னும் கதை என்னை பீதி கொள்ள செய்தது. இப்படியொரு கதையை சமீபத்தில் படித்ததாய் நினைவு இல்லை. ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு மாதிரியானதுதான்.  ஆனால் அக்கதையில் இருக்கும் புதுமையை வாசகர் கண்டுக்கொள்வார்காள்.

    ஒரு பெண் மூன்று நபர்களால் கற்பழிக்கப்படுகிறாள். அப்போது அவளுக்கு மாதவிடாய். அவளின் ஆடைகளை கிழித்தெறியும்  சமயம் சில நொடி அதிர்ச்சியில் அவர்கள் ஸ்தம்பிக்கின்றார்கள். ஆனாலும் அவளது ஆடையினை அவர்களால் முழுமையாக அவிழ்க்கப்படுகிறது. உலகில் மிகவும் அவமானப்பட்ட பெண்ணாக அவள் ஆகிறாள். இருவரும் அவளை பழிவாங்க மூன்றாவது பதின்ப வயது பையனையும் சேர்த்துக் கொண்டார்கள். அவனும் அவனால் முடிந்ததை அவளுக்கு செய்கிறான்.
 
    அவள் வீடு செல்கிறாள். மறுநாள், அலுவலகம் செல்ல வாசலில் அவளுக்கு அந்த இருவர் காத்திருந்தார்கள். குரூரம் கொண்ட கண்களுடன் விசயத்தை வெளியில் சொன்னால் அவளுக்கும் அவளது குடும்பத்தினர்க்கும்  ஆபத்தென எச்சரித்து, வன்மத்துடன் முதல் நாளை குறித்து கேட்டு சிரிக்கிறார்கள். அவள் சில வினாடிகளில் அவர்களின் கண்களையே உற்று நோக்கி , ஒருவனை பார்த்து இவ்வாறு சொல்கிறாள். “நீங்க ரொம்பவும் போராயிரிந்திங்க, உங்களுக்கு வீரியம் குறைவாக்கும் ஒரு பொண்ணை பூரணமா திருப்தி படுத்த உங்களால முடியும்னு எனக்கு தொணலஎன்று கூறி மற்றொருவனை பார்த்து நீதான் சரியான ஆம்பள உன்னை எனக்கு பிடிச்சிருக்கு  என்கிறாள். 

    முதலாமவன் தான் கொண்ட குரூர சிரிப்பை தொலைத்து பழியுணர்ச்சிக்கு ஆளாகிறான். இனி அவன் அடுத்தடுத்த நொடிகளை எப்படி கழிக்க போகிறான் என நினைக்கையில் வாசகர்களை அது பீதிக்குள்ளாக்கிறது. அவனது வாழ்நாளில் இனி எந்த பெண்ணையும் அவன் நெருங்கமாட்டான் என்றே தோன்றியது. அடுத்தவனுக்கான பழியுணர்ச்சியும் சில தினங்கள் அவள் ஏற்படுத்துகிறாள்.

  வாசர் மனதில் இக்கதை தங்கிவிடும் என்பது இக்கதையின் சிறப்பு. பெண்ணின் பலத்தை காட்டும் சிறுகதைகளில் இக்கதை தனித்து நிற்கும். தனக்கு ஏற்பட்ட வலியை அவமானத்தை இழுக்கை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் எப்படி பழிவாங்குகிறாள் என்பதை பார்க்கும்போது நமக்குள் இயல்பாகவே ஓரு அச்சம் ஏற்படுகிறது.


-தயாஜி-
 

 

 

ஆகஸ்ட் 10, 2016

கதை வாசிப்பு 22 - 'மத்திய சிறைவாசி எண் 3718'

கதை வாசிப்பு 22 -
 'மத்திய சிறைவாசி எண் 3718'

    விகடன் (10/8/16) இதழில் லஷ்மி சரவணகுமாரின் 'மத்திய சிறைவாசி எண் 3718' என்ற சிறுகதை வந்துள்ளது.

    இன்னொருவர் மனைவிமீதான ஈர்ப்பை காதலை வேறொரு கோணத்தில் இருந்து சொல்லியுள்ளார். கதை சொல்லப்பட்ட விதம் படிப்பவரின் மனதில் பாதிப்பைக் கொடுக்க தவறவில்லை.

கதை.

   சிறையில் இருக்கும் விஜிக்கு அமுதா எழுதிய கடிதத்தில் இருந்து கதை தொடங்குகிறது. அமுதாவின் கணவன் மனோ இராணுவத்தில் இருப்பவர். பாதிநாள் விடுமுறையில் ஊரிலேயே இருப்பார் அவர்களுக்கு ஆதிரா என்ற குழந்தையும் இருக்கிறது.
விஜி தன் மீது கொண்டிருக்கும் இனம் புரியாத ஈர்ப்பை புரிந்துக்கொண்டும் பெரிதாக காட்டிக்கொள்ளாமல் இருக்கிறாள் அமுதா.
அமுதாவின் கணவன் ஊரில் இருக்கும் போதெல்லாம் அவரை சந்திப்பதை தவிர்க்கிறான் விஜி. மனோ ஊர் திரும்பும்போது மட்டும் வழியனுப்ப வந்த விஜியை இராணுவத்தில் சேர்வதற்கு தயாராக சொல்லி வீட்டில் பழுது பார்க்கும் வேலை இருப்பதாகவும் சரி செய்ய ஆள் அனுப்பவும் சொல்லி விஜியின் தேவைக்கு பணம் கொடுக்கிறார் மனோ.
வீட்டில் அமுதாவும் குழந்தையும் மட்டும் இருக்கிறார்கள்.

   வீட்டிற்கு வந்திருந்த விஜி அமுதாவிற்கும் எதிர்பாராத விதமாக முத்தம் கொடுத்துவிடுகிறான். அதனை பெற்றுகொண்ட அமுதா சுயநினைவு வந்து அதனை தவிர்த்து அவனுக்கு இதெல்லாம் வயது கோளாறு அவன் மீது எந்த வெறுப்பும் இல்லையென்று அனுப்புகிறாள்.

   பின்னர் ஒரு நாள், ஊர் பிரச்சனையில் மனோ வெட்டிக்கொல்லப்படுகிறார்.
மனோவைக் கொலை செய்த இருவர்  நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படுகிறார்கள். எதிர்பாராத விதமாக விஜி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு வெட்டிக்கொல்கிறான். அவ்விடமே கைதாகி கொண்டுச்செல்லப்படுகிறான். அங்கிருக்கும் கூட்டத்தில் அமுதாவை கண்டு அவள் மட்டு புரியும் விதம் புன்னகைக்கிறான்.

    சிறைச்சாலையிலும் அமுதாவிற்கு தொல்லை கொடுக்காமல் தானே தவறான வழிகளில் பணம் சம்பாதிக்க முயன்று பின்னர் காவலாளிகளால் தண்டிக்கப்படுகின்றான். வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றலாகிறான். அங்கு அவனை சந்திக்க வரும் அமுதாவுடனான உரையாடலில் அவள் இப்படியாக சொல்கிறாள், 'இனி நான் உனக்கு தேவையில்லாமல் இருக்கலாம் ஆனா நீ எனக்கு தேவை'.

    விஜிக்கு உணவு கொடுக்கும் முன்பாக அங்குள்ள விண்ணப்பத்தில் தன்னை விஜியின் மனைவி என குறிப்பிட்டு எழுதுகிறாள்.

கதை குறித்து,

    பொது புத்தியில் இருந்து மறக்கப்படும் மறுக்கப்படும் மனிதனின் கதையாக இதனைச்சொல்லலாம். சமூகம் சொல்லிக்காப்பாற்ற நினைக்கும் நன்னெறிகூறுகளை இதில் காண முயன்றால் இக்கதை மீது இயல்பாகவே ஓர் வெறுப்பு ஏற்படும்.

    கதை சொல்லும் விதம் வாசகர்களை கவர்ந்துள்ளது. யூகிக்க முடியாமலும் தான் யூகித்ததை நம்பாமலும் கதை செல்கிறது. உதாரணமாக விஜி கொலை செய்வான் என நாமே நம்புகிறோம். பின்னர் ஏன் கொலை செய்தான் என நம்ப மறுக்கின்றோம்.

    விஜிக்கும் அமுதாவுக்குமான ஈர்ப்பை அழகாகவும் நேர்த்தியாகவும் சொல்லியுள்ளார் எழுத்தாளர். கதை காட்சிகளாக கண் முன் விரிவது கதையின் பலம்.

    தன் கணவன் மனோவின் மரணத்தை அவள் எதிர்கொள்ளும் விதம் அவள் மீது நமக்கு பரிதாபத்தைக்கொடுக்கிறது. விஜி் தனக்கு கொடுத்த முத்தத்திலும் , பின்னர் விஜியின் மனைவி என தன்னை சொல்லிக்கொள்ளும் போதும் அமுதா மீது கோவமோ வெறுப்போ வரவில்லை.  அமுதா செய்தது சரியென விஜியின் வருகைக்காக நம்மையும் காக்க வைப்பது மூலம் கதையில் வென்றுள்ளார் லஷ்மி சரவணகுமார்.
இக்கதை அவரின் வாசகர்களை அதிகப்படுத்தும் என நம்பலாம்.


- தயாஜி

ஆகஸ்ட் 05, 2016

கதை வாசிப்பு 21- 'பிரிவென்ற உறவு'

கதை வாசிப்பு 21- 'பிரிவென்ற உறவு'

   ஆகஸ்ட் மாத மயில் இதழில் 'பிரிவென்ற உறவு' என்ற கதையை கூலிம் கேடாவைச் சேர்ந்த சு.சத்தியா எழுதியிருக்கின்றார். குறுங்கதை என்ற குறிப்புடன் இக்கதையை பிரசுரம் செய்திருந்தார்கள். ஆனால் சிறுகதைக்கான அம்சத்தையே இக்கதை கொண்டிருக்கிறது.

கதை.

    விவாகரத்து மனுவை நீதிபதி ஒத்தி வைக்குமிடத்தில் கதை ஆரம்பமாகிறது. கையெழுத்திட்டுவிட்டு மகள் அப்பாவையே பார்த்து ஏங்க, மகள் கனிமொழியை இழுத்துப்போகிறார் அம்மா. காரில் மகளுடன் செல்லும்போது எல்லாவற்றையும் மகளுக்காகத்தான் செய்தாலும் அப்பாவையே ஏக்கப்பார்வைப் பார்த்த மகளை கடிந்துக்கொள்கிறார். அந்நேரம் மகளை திசைதிருப்ப பூங்காவிற்கு வாகனத்தைச் செலுத்துகிறார்.
பூங்காவில் அம்மா கைபேசியில் இருக்க,  
     பழைய நினைவுகள் வர, அதனை ஒதுக்கி மீண்டும் நிகழ்காலத்துக்கு வருகிறார். கனிமொழிக்கு விளையாட இன்னொரு சிறுமி அங்கு கிடைக்கிறாள் அம்மாவின் பக்கத்திலேயே இருவரும் விளையாடுகிறார்கள். அவர்கள் பேச்சு அப்பா அம்மா குறித்து மாறுகிறது. கனிமொழி தன் பெற்றோர் பிரிந்ததை சொல்லிவிட்டு புதிய தோழியின் பெற்றோர் சண்டை போடுவார்களா என கேட்டுவிடுகிறாள். அதற்கு அந்த தோழி, சண்டை வரும், அம்மாவும் அப்பாவும் மாற்றி மாற்றி ஏசிக்கொள்வார்கள் பின்னர் அப்பா தன்னையும் கூட்டிக்கொண்டு இரவு உணவுக்கு பிறகு சமாதானமாகிவிடுவார்கள் என சொல்கிறாள். இதனையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கனிமொழியின் அம்மாவிற்கு சுறுக்கென்கிறது. எல்லோர் வீட்டிலும் இப்படித்தானோ , கணவர் ஏன் விட்டுக்கொடுக்கவில்லை பெண் என்றால் ஆண்களிடம் அடிமைப்பட்டிருக்கத்தான் வேண்டுமா இனி தான் சுதந்திரமாக வாழ போவதாக தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கனிமொழியை அழைத்துக்கொண்டு புறப்படுகின்றார்.
அச்சமயம் கனிமொழியின் புதிய தோழியின் பெற்றோர் வருவது தெரிகிறது. கனிமொழி அவர்களை மட்டுமே பார்க்கிறாள், கதை முடிகிறது.

கதை குறித்து.

    இக்கதையை வாசிக்கையில் அதன் முடிவு கனிமொழியின் அம்மா தன் தவறை உணர்ந்து கணவருடன் சேர்வதாக இருக்கும் என்கிற மனநிலையை மாற்றி இக்கதையை முடித்திருக்கிறார் எழுத்தாளர். இங்குதான் சிறுகதைக்கான அம்சத்தை உணர முடிகிறது. சிறுகதைக்கு என்ன தேவை. எந்த இடத்தில் திருப்பம் வைக்கலாம் போன்ற நுணுக்கம் இவருக்கு கைவந்துள்ளது. கதை தொடங்கிய இடத்தில் இருந்து முடிவை நோக்கி சோர்வின்றி வாசகர்களை அழைத்துச்செல்கிறது.

   அதோடு சிலவற்றை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இக்கதையில் வரும் சிறுமிகள் பாத்திரம் அதற்கேற்ற மொழியை பயன்படுத்தவில்லை. இதுபோன்ற கதைகளில் அல்லது குழந்தைகள் சிறுமிகள் பேசுவது போல இருந்தால் அவர்களின் மொழியைக் கவனிக்கவேண்டும். அவர்களின் உரையாடலில் இருக்கும் எதார்த்தமே சிறுகதைக்கு பலம் சேர்க்கும்.
தொடர்ந்த வாசிப்பும் தொடர்ந்த எழுத்தும் இவருக்கு நல்ல வழிகாட்டியாக அமையும். அதன் மூலம் நல்ல சிறுகதைகளை நமக்கு அவர் வழங்குவார் என நம்புகிறேன்.

அதோடு,

      இரு பக்க குறுங்கதைக்கு இப்படியான பகிர்வு வேண்டுமா என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். ஏனெனின் இருக்கும் காலம் கொஞ்சமோ என உள்ளூர பயம் கொஞ்சநாளாக இருந்துவருகிறது.
அரைபக்கமே இருந்தாலும் சிறுகதைக்கான கூறுகள் இருப்பின் அதனை கவனப்படுத்துவது அவசியம் என நினைக்கிறேன். வாசகரின் கடமையும் அதுதான். 


-தயாஜி

ஆகஸ்ட் 01, 2016

கதை வாசிப்பு 20 - 'தொடாத எல்லை'

      இவ்வார மலேசிய நண்பன் (2016 ஜூலை 31) நாளேட்டில் ந.பச்சைபாலன் எழுதியிருக்கும் 'தொடாத எல்லை ' என்கிற சிறுகதை வெளிவந்துள்ளது.

   நா.பச்சைபாலனின் கவிதைகளில் பழக்கமுள்ள நான் முதலாவதாக அவரது சிறுகதையை வாசிப்பது இதுதான் முதன் முறை. என் நினைவில் அவரின் வேறெந்த சிறுகதையும் பதிந்திருக்கவில்லை.

    கவிஞர்கள் சிறுகதை எழுதும் போது வாசகர்களுக்கு ஓர் இனிய அனுபவம் ஏற்படும். வாக்கியங்கள் கவிதைகளாகவும் காட்சி விவரணை ரசிக்கும்படியும் அமைந்து வாசகர்களை குதூகலப்படுத்தும். புதிய சொற்கள் கிடைக்கும். படிப்பவரும்  தான் சிறுகதையை வாசிப்பதை மறந்து கதைக்குள்ளாகவே ஈர்க்கப்பட்டுவிடுவார்கள். அப்படி நினைக்கையில் கவிஞர் ந.பச்சைபாலனில் இக்கதை ஏமாற்றிவிட்டது. அவரின் கவிதைகளில் வந்துவிழும் அழகுச்சொற்களை இங்கு காண முடியவில்லை. அல்லது தான் எந்த தருணத்தில் கவிஞனாக இக்கதையில் தெரிந்துவிடக்கூடாது என. வெகு கவனமாக இதனை எழுதியிருக்கலாம்.

கதை.

    மாலனுக்கு தாத்தாவின் கையெழுத்தில் புத்தகம் ஒன்று கிடைக்கிறது.  சயாம் மரண ரயில் தண்டவாளத்தில் வேலை செய்ததை அதில் பதிவு செய்திருக்கிறார் . அதனை கண்டதும் மாலனுக்கும் கதை கவிதை எழுதுவதில் ஆர்வம் எழுகிறது. மகனும் தாத்தாவை போல கதை பத்திரிகை என வீணாகிவிடுவானோ என அப்பா தடை போடுகிறார். மாலன் படித்து டாக்டராக வேண்டும் என்கிறார். அம்மா மாலனுக்கு ஒத்துழைப்பும் ஊக்கமும் கொடுக்கிறார் . மாலன் டியூசனுக்கு செல்லாமல் எழுத்தாளர் ஒருவரின் உரைக்கு செல்கிறான். வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் சிக்கிக்கொள்கிறான். அம்மா வந்து காப்பாற்றுகிறார் . மீண்டும் மீண்டும் டாக்டராக வேண்டும் என அப்பா சொல்ல , தாத்தாவழி தனக்கு கிடைத்திருக்கும் எழுத்து என்பது சொத்து. அதனை இழக்க மாட்டேன். இலக்கியத்தில் படித்து டாக்டர் பட்டம் பெறுகிறேன் என மாலன் பதில் சொல்லிவிடுகிறான். மாலனின் தெளிவான பேச்சு அம்மாவையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. எது எப்படியோ படிப்பும் முக்கியம் அங்கிருந்துதான் லட்சியத்தை அடைய முடியும் என அம்மா தன் பங்குக்கு சொல்லிவிடுகிறார். தாத்தா தொடாத எல்லையை தான் தொடவேண்டும் என எண்ணுகிறான்.


கதைக்குறித்து

     மாணவர்களை கருத்தில் கொண்டே கதை சொல்லப்பட்டிருக்கிறது. கதைச் சொல்லியைவிடவும் ஆசிரியரைத்தான் இக்கதை முழுக்க பார்க்க நம்மால்  முடிகிறது. 

   நிகழ்கால கதையைவிட , தாத்தாவின் புத்தகத்தில் இருக்கும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். தாத்தாவின் அனுபவம் சரியாகச் சொல்லப்படாததால் மாலனின் செயல்கள் மீது நாடகத்தன்மை மேலோங்கிவிடுகிறது. மாலனின் அப்பாவிற்கு தாத்தா மீதான வருத்தமும் விரிவாக்கமின்றி சட்டென கடந்து செல்வதும் பலவீனம்தான்.

  தாத்தாவின் புத்தகத்தில் அவர் எழுதியிருக்கும் எழுத்து பாணிக்கும் கதைச்சொல்லியின் கதைச்சொல்லும் எழுத்து பாணிக்கும் கொஞ்சமும் வித்தியாசம் இல்லை. தாத்தாவின் இருபது ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்தை அவரின் வலியை சொல்லும் விதம் வாசகர்களை கவர்ந்திருக்க வேண்டும். கிழிந்த ஏடுகளில் இருப்பதை வாசிக்கும் மாலனின் மனநிலையை வாசகர்களும் உணர்ந்து பதட்டமடைய வேண்டாம். அந்த பதட்டம்தான் இக்கதையை வெற்றியடைய வைத்திருக்கும். கதையின் ஆழத்தை காட்டவேண்டிய இடம் அது, ஆனால் தவறிவிட்டது.  ஒரே ஆள் கதையை சொல்லிச்செல்வது வாசகர்களை கதையில் இருந்து அந்நியப்படுத்திவிடுகிறது.


நிறைவாக,

    எழுத்தாளரின் உள்ளிருக்கும் ஆசிரியருக்கு பதில் கவிஞர் வெளிவந்திருந்தால் இக்கதை முக்கிய கதையாக வந்திருக்கும். வாசகர்கள் மனதிலும் இக்கதை வலியை பதிவு செய்திருக்கும்.


- தயாஜி 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்