கடைசியில் எல்லோருக்கும்
ஒரு கப் காபி தேவைப்படுகிறதுதான்
மௌனத்தை கடக்க
உரையாடலை நகர்த்த
மனதை கொஞ்சம் ஆசுவாசப்படுத்த
கடைசியில் எல்லோருக்கும்
ஒரு கப் காபி தேவைப்படுகிறதுதான்
கண்ணீரை அடக்க
நடந்ததை மறக்க
நடக்கவேண்டியதை நினைக்க
கடைசியில் எல்லோருக்கும்
ஒரு கப் காபி தேவைப்படுகிறதுதான்
யாருக்காகவோ காத்திருக்க
யாரின் கதையையோ கேட்க
யாரையும் தெரியாதது போல் நடிக்க
கடைசியில் எல்லோருக்கும்
ஒரு கப் காபி தேவைப்படுகிறதுதான்
நிகழ்காலத்திற்கு மீள
நிகழ்ந்ததை மீட்க
நீண்ட மறதியை வெல்ல
கடைசியில் எல்லோருக்கும்
ஒரு கப் காபி தேவைப்படுகிறதுதான்
தான் உயிரோடு இருப்பதை உணர்த்த
இன்னும் கொஞ்சம் முயற்சிக்க சொல்ல
இதுவும் கடந்து போகுமென புரிய
கடைசியில் எல்லோருக்கும்
ஒரு கப் காபி தேவைப்படுகிறதுதான்
தன்னை அழகென காட்ட
தன் சுவாசத்தை சீராக்க
லிப்ஸ்டிக்கின் வண்ணம் பார்க்க
கடைசியில் எல்லோருக்கும்
ஒரு கப் காபி தேவைப்படுகிறதுதான்
இன்றோரு கவிதையை எழுதவும்
நாளை நீங்களதை வாசிக்கவும்
என்றாவது ஒருநாளில் நீங்கள் என்னை நினைத்துப் பார்க்கவும்
கடைசியில் எல்லோருக்கும்
ஒரு கப்........
0 comments:
கருத்துரையிடுக