- இதயங்கள் உடையட்டும் -
உடைப்பதற்கே
இதயம் கொடுக்கப்பட்டதாய்ச்
சொல்கிறார்கள்
காதலால் உடைந்த
பாக்கியசாலிகள்
நீ உடைத்து விளையாடு
என் அன்பே
நான்
கண்ணீர் பசை கொண்டு
உடைந்த துண்டுகளை
உனக்கே உனக்கென
மீண்டும் ஒட்டி கொடுக்கின்றேன்
தூக்கி அடி
எடுத்து வீசு
காலால் மிதி
காரி உமிழ்
கடவுளைக் காட்டிலும்
காதலை அடைவது
அத்துணை சுலபமா என்ன
பாடுகள்
எனக்கு பழகட்டும்
என்னை பக்குவப்படுத்தட்டும்
ஆகவே
படுத்தியெடு
ஜென்மங்கள் பல எடுத்தும்
பலகொடி முறை
புதுப்பித்தும்
என் இதயத்தை
உனக்கே கொடுக்கின்றேன்
அதற்குரியவள் நீயென
விதிக்கப்பட்டதால்
என்றாவது ஒரு காலப்பெருவெளியில்
நீ அதை
உடைக்க தாமதிக்கும்
மெல்லிய நொடியின்
சிறு துளியில்
என் காத்திருப்பை நீ
புரிந்து கொள்வாய்
உன் காதலையும்
எனக்கு அருள்வாய்
அதுவரையில்
முழு சுதந்திரம் கொண்டு
என் இதயத்தை உடை
கண்ணீர் வற்றினாலும்
என்
உதிரத்தைப் பசையாக்கி
ஒட்டிய இதயத்தை
மீண்டும் உனக்கே உனக்கென
கொடுக்கின்றேன்.....
2 comments:
சிறப்பு..
நன்றி
கருத்துரையிடுக