பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 24, 2022

- விலை -

"ஒரு பத்து வருஷம் இருக்குமா?" எனதான் அந்த உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருவரின் காபியும் முடிந்துவிட்டது. சாப்பிட்டத் தட்டில் மட்டும் சிதறிய தின்பண்டங்கள் கிடந்தன. இனி அதை இவர்கள் சாப்பிடப்போவதில்லை.

"ஆமா இருக்கும்...." என்று ஆமோதித்தான் சுகுமாறன். அடுத்ததாக நண்பன் என்ன கேட்கப் போகிறான் என்று சுகுமாறனுக்கு தெரிந்தது. அதற்குள் கிளம்பிவிட வேண்டும். முயன்றான். முடியவில்லை.

"சரி என்ன சம்பளம் எடுக்கற எங்கதான் வேலை செய்யற... என்ன சட்டை இது... கைகடிகாரம் என்ன ப்ராண்டுன்னே தெரியல...."

"அது....."

"என்னோட வாட்ச் மட்டும் எட்டாயிரம் வெள்ளி.... மத்த விலையெல்லாம் சொன்னேனு வாசிக்கோ.. மயக்கமே போட்டுடுவ..." சொல்லிய நண்பன் மற்றதின் விலைகளைச் சொல்ல ஆரம்பித்தான்.
இனியும் முடியாது என்றபடியால் சுகுமாறன்,
"நல்லாருக்கு.... சரி பா.. உன்னை பார்த்ததில் சந்தோஷம்... நான் கிளம்பறேன்.."

"என்ன அவசரம்.. இரு.. டைம் இருக்கு... மெதுவா போகலாம்... " என்று அடுத்தச் சுற்றுக்கு என்ன சாப்பிடலாம் என மெனு புத்தகத்தைப் பார்க்கலானான்.

"ஏன் பா... எவ்வளவோ சம்பதிக்கற.. எவ்வளவோ விலைக்கு கடிகாரம் சட்டை சப்பாத்து எல்லாம் வாங்கியிருக்கயே... வீட்டுல உனக்காக சமைச்சி காத்திருக்க ஒருத்தர் கூட இல்லையா....?

நண்பனுக்கு பகீரென்றது,

"அது...."

"சரிப்பா நீ இங்கயே டின்னரையும் முடிச்சிட்டு கிளம்பு.. நான் இப்ப கிளம்பறேன்... வீட்டுக்கு போய் ஒன்னா உட்கார்ந்து சாப்டாதான் மனசுக்கு திருப்தி....."

சுகுமாறன் கிளம்பினான். நண்பனுக்கு பசி மறந்து போனது. பல விடயங்கள் நினைவிற்கு வரத்தொடங்கின....


மார்ச் 19, 2022

புத்தகவாசிப்பு_2022_9_வாசிப்பின் வழிகள்


வாசிப்பின் வழிகள்

தலைப்பு – வாசிப்பின் வழிகள்

எழுத்து – ஜெயமோகன்

வகை – கட்டுரைகள்

வெளியீடு – விஷ்ணுபுரம் பதிப்பகம்

நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)

 

‘வாசிப்பின் வழிகள்’ கட்டுரைத் தொகுப்பு மொத்தம் 21 கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் முன்னமே ஜெயமோகன் வலைத்தளத்தில் வெளிவந்தவை. வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் கொடுத்த முழுமையான பதில்கள் அவை. அவற்றை வாசிப்பு என்ற மையக்கருவைக் கொண்டு ‘வாசிப்பின் வழிகள்’ என்று புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள்.

வாசிப்பு என்பது மிகவும் அகவயமானது. நாம் ஏன் வாசிக்கின்றோம். எதற்கு வாசிக்கின்றோம் என்பதற்கான பதில்கள் ஆளுக்கு ஆள் மாறுபடும். உண்மையில் நாம் சொல்லும் பதில்கூட சில ஆண்டுகள் அல்லது சில புத்தக வாசிப்புகளில் இன்னொரு பதிலாக பரிணாமம் அடைந்துவிடுவதைக் காணலாம்.

முகம் தெரியாத எழுத்தாளர்களிடம் வாசிப்பின் வழியே வாசகம் நெருக்கமாகிறான். அதே போலத்தான் வாசிப்பின் வழியே அந்த எழுத்தாளரை விரோதியாகவும் கற்பித்துக் கொள்கிறான்.

இலக்கிய உலகிற்கு நுழைய வாசிப்பைத் தவிர வேறோர் வழி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சரியான வாசிப்பு இல்லையெனில் கடைசி வரை இலக்கிய உலகில் கண்களற்றவர்களாக நாம் அலைந்து கொண்டிருப்படி ஆகிவிடுகிறது. இந்தச் சரியான வாசிப்பு எப்படி அமைகிறது எவ்வாறு அமைத்துக்கொள்ளப்படுகிறது என்பது வாசகனின் தேடலைப் பொறுத்தது. இன்னும் சொல்லப்போனால் வாசிப்பவர்கள் எழுத்தாளர்களாக ஆகத்தான் வேண்டுமா? என்றால் இல்லை. எழுத விரும்பாது வாசிப்பது மட்டுமே போதுமென இருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தான் வாசித்தக் கதையில் அந்த எழுத்தாளர் என்ன சொல்கிறார் என்ன கவனிக்கவில்லை என அவர்களால் பேச முடியும் ஆனால் அவர்கள் எழுதுவதை விரும்புவதில்லை. வாசிக்கிறார்கள், வாசிப்பதில் மட்டுமே இன்பம் காண்கிறார்கள்.

இயல்பாகவே ஆரம்பகால வாசகனுக்கு வாசிப்பில் சில சிக்கல்கள் எழுவது இயல்பு. தொடர் வாசகனுக்கும் கூட ஒருவித சலிப்பு வருவதும் உண்டு. அவர்கள் ஒரு கேள்வியை முன் வைக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் பதில் ஒருவருக்கான பதிலாக அல்லாமல் அனைவருக்கும் ஏற்ற மாதிரி ஒரு பதிலை ஜெயமோகன் முன் வைக்கிறார். அது வாசிப்பவர்களுக்கு பல திறப்புகளைக் கொடுக்கிறது. இவர்கள் தங்கள் கேள்விகளை ஏன் ஜெயமோகனிடம் வைக்கிறார்கள்.  அவர் தரும் பதிலுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது அவரவர்க்கு மாறுபடலாம் அதே போல ஜெயமோகனின் பதில்களின் வழி ஏன் சிலர் அவரை புறக்கணிக்கின்றார்கள் என்பதும் அவரவர்க்கு மாறுபடும். ஆனால் முற்றாக அவரை புறக்கணிக்க முடியாது என்பது அவரை வாசிப்பவர்கள் உணர்வார்கள்.

‘வாசிப்பின் வழிகள்’ தொகுப்பில் எனக்கானக் கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. ‘எழுத்தும் உடலும்’ என்ற கட்டுரையில் தூக்கம், உணவு, நேரம் இவை மூன்றும் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் எவ்வளவு முக்கியம் என சொல்கிறார்.

எது நவீன இலக்கியம் எது வணிக இலக்கியம் என உதாரணங்களுடன் விளக்குகிறார். ரஷ்ய இலக்கியங்களை வாசிப்பதற்கு வாசகன் எப்படி தன்னைத் தயார் செய்ய வேண்டும் என்கிறார். இலக்கிய விவாதங்கள் தற்சமயம் அதன் எல்லையைக் கடந்துவிடுவதாகத் தோன்றிலானும், ‘இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்’ என்ற கட்டுரையில் இராமலிங்க வள்ளலார் காலக்கட்டத்தில் இருந்து மேற்கோள் காட்டி நீண்ட கட்டுரையை எழுதியுள்ளார். இப்படி மேலும் பல தலைப்புகளில் எழுதியுள்ளார். அது ஒவ்வொன்றும் அடிப்படையில் வாசிப்பையே மையமாகக் கொண்டுள்ளது.

வாய்ப்பிருப்பின் என சொல்ல விரும்பாது; வாய்ப்பை ஏற்படுதுக்கொண்டு இந்நூலை வாசிக்க வேண்டும் என முன்மொழிகிறேன்

- தயாஜி

 

(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)

மார்ச் 16, 2022

- துரோகி -

"யாராவது என்னைக் கொல்லத்தான் போகிறார்கள்...."

"அதற்காக...."

"நீயே என்னைக் கொன்றுவிடு...."

"முட்டாளா நீ...... வாயை மூடு..."

"முட்டாள் அல்ல... வீரன்..."

"அதிகம் பேசாதே... சுட்டுவிடுவேன்..."

" அதற்குத்தான் பேசுகிறேன்.. சுடு.. சுடு... என்னைச் சுட்டு கொன்றுவிடு...."

"நீ என் நண்பன்..... "

"யார் இல்லையென்றது...  அதனால்தான் உன் கையால் சாக விரும்புகிறேன்..."

"அது என்னால் முடியாது.... இந்த யுத்தம் முடியும் வரை நான் உன்னைப் பாதுகாத்துக் கொள்கிறேன்..."

" இப்போது நீதான் முட்டாளாகிவிட்டாய். யுத்தம் எப்போதும் முடியாது..."

"யுத்தத்தில் உன் நாடோ.. என் நாடோ இரண்டில் ஒன்று வென்றுதானே ஆக வேண்டும்.. அப்போது கூடவா யுத்தம் முடியாது...."

" டேய் நண்பா... யுத்தத்தில் இருதரப்பும் வெற்றி பெறாது... மூன்றாம் தரப்பு அதையப்படி விட்டுவிடாது...."

" மூன்றாம் தரப்பா...?"

" அது நமக்கு பிடிபடாது.... என்னை கொன்றுவிடு தயவு செய்து...."

" நீ என் நண்பன்.... "

"ச்சீ... நீயெல்லாம் ஒரு நண்பனா... உன் இடத்தில் நானிருந்தால் இன்னேரம் உன்னை என் துப்பாக்கியால் சுட்டிருப்பேன். என் கத்தியால் குத்தி கிழித்திருப்பேன். பூட்ஸ் காலால் உன் இடுப்பை உடைத்திருப்பேன். உன் கைகளைப் பின் பக்கமாக மடைக்கியிருப்பேன். உன் காலில் நரம்புகளை அறுத்திருப்பேன்..... இன்னும் இன்னும் எத்தனையோ செய்திருப்பேன்... ஆனால் நீ....."

" வேண்டாம் அப்படி பேசாதே..."

" யாரோ முகம் தெரியாத ஒருத்தன் என்னைக் கொல்வதைத்தான் நீ விரும்புகிறாயா... துரோகி........"

மார்ச் 14, 2022

- வந்த வேலை -

நான் முதலில் பயந்துவிட்டேன். எப்படி பயப்படாமல் இருக்க முடியும். இந்த இடத்தில் யார்தான் நிற்பார்கள். அதுவும் உச்சி நேர வெயிலில். "ஹையோ ரொம்ப பாவம்ங்க...' என மனைவிதான் சொன்னாள். புருஷனைத் தவிர மற்ற எல்லாமும் அவளுக்கு பாவம்தான்.

காரை அந்த வயதான அம்மாவின் அருகில் நிறுத்தினேன். கையில் துணிப்பையுடன் ஒரு குடை கூட இல்லாமல் போகும் வரும் வாகனங்களை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். விசாரித்ததில் உண்மையிலேயே பாவமாக இருந்தது. அதிகாலையில் மகன் இங்கு இறக்கிவிட்டிருக்கிறான். கொஞ்ச நேரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டு போனவன் தான். வரவேயில்லை. அம்மாவிடம் கைப்பேசியோ அடையாள அட்டையோ எதும் இல்லை. எல்லாவற்றையும் மருமகள் வாங்கி பத்திரமாக வைத்துவிட்டாளாம்.

எனக்கும் மனைவிக்கும் புரிந்துவிட்டது. மகன் மனைவியின் பேச்சைக் கேட்டு அம்மாவை இங்கு இறக்கிவிட்டிருக்க வேண்டும். கொலை செய்வதற்கு ஈடான காரியம் என மனம் கலங்கியது. அம்மாவிடம் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை. எங்கள் வீட்டிற்கு அழைத்தோம். மகிழ்ந்தார். ஆனால் ஒரு முறையாவது மகனையும் மருமகளையும் பார்க்க வேண்டுமே என்றார். ஆயிரம் இருந்தாலும் அம்மா இல்லையா.

வீட்டை விசாரித்தேன். ஏதேதோ இடம் சொல்லி ஒரு கடையைச் சொன்னார். அது முகநூல் பிரபலம் பெற்ற கடை என்பதால் தெரிந்தது. அங்கு அழைத்துச் சென்றோம். அங்கிருந்து அம்மா வீட்டிற்கு வழி காட்டினார்.

வீட்டு வாசலில் கார் நின்றது. அம்மா ஏனோ கீழிறங்க தயங்கினார். அவரின் மனம் எங்களுக்கு புரிந்தது. நானும் மனைவியும் இறங்கினோம். மகனிடம் கொஞ்சம் பேசி அம்மாவை ஏதாவது ஆசிரமத்திலோ அல்லது எங்கள் வீட்டிலோ அழைத்துப்போக நினைத்தோம். அதற்கு அவரிடம் சம்மதம் வேண்டும். இல்லையென்றால் தேவையில்லாத சட்டச்சிக்கலுக்கு ஆளாகிவிடுவோம்.

வீட்டுக்கதவைத் தட்டினேன். மகன்தான் வந்தார். விபரத்தைச் சொன்னேன். அவரால் நம்ப முடியவில்லை. முகம் பீதியடைந்தது. மூச்சு வாங்கியது. அவர் அம்மாவை அங்கு இறக்கிவிட்டது உண்மைதான் ஆனால், அது நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டனவாம். இப்போதுவரை அம்மா அங்கு எப்படி இருக்க முடிந்தது என குழம்பினார்.

அவர் ஏதோ உளறுவதாகப்பட்டது. அவரை அழைத்துக் கொண்டு நாங்கள் காருக்கு வந்தோம். அம்மா அங்கில்லை. காணவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம்.

திடீரென அவர் வீட்டில் மட்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீட்டில் இருந்து அவரது மனைவி ஏனோ அலறினாள்.  மகன் உள்ளே ஓடுகிறார்.

என் கையைப் பிடித்த என் மனைவி "அந்தம்மா வந்த வேலையை ஆரம்பிச்சிட்டாங்க வாங்க நாம கிளம்புவோம்" என்று இயல்பாகச் சொல்கிறாள்.


மார்ச் 12, 2022

புத்தகவாசிப்பு_2022_8_திமிரி


தலைப்பு – திமிரி

எழுத்து – ஐ.கிருத்திகா

வகை – சிறுகதைத் தொகுப்பு

வெளியீடு – எழுத்து பிரசுரம்

நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)

 

எழுத்தாளர் ஐ.கிருத்திகாவை முகநூல் வழி அறிந்துகொண்டேன். அவ்வப்போது அவரது படைப்புகள் இணைய இதழ்களில் வாசிக்க நேர்ந்தது. ஒரு கட்டத்தில் அதிகமாகவே அவரது படைப்புகள் கண்ணில் பட ஆரம்பித்தன. அவ்வப்போது அவரது படைப்புகளை வாசித்துப் பேசியிருந்தாலும். புத்தகமாக வாசித்துப் பேசுவதில் ஒரு திருப்தி இருக்கிறது.

‘திமிரி’ , எழுத்தாளர் ஐ.கிருத்திகாவின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. இதற்கு முன், உப்புச்சுமை, நாய்சார் என்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘திமிரி’ மொத்தம் பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.

ஒவ்வொரு சிறுகதையும் பெண்ணில் உலகத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. அவளின் அக உலகத்தையும் புற உலகத்தையும் இக்கதைகள் வழி நாம் நெருக்கமாக உணரலாம். அதோடு பெண்கள் மீது ஆண்களும் சமூகமும் வைக்கும் கட்டுப்பாடுகளையும் அதிகாரத்தையும் பேசுகிறது.

சிறுகதைகளுக்கு எழுத்தாளர் வைத்திருக்கும் தலைப்புகள் வசிகரித்தன. கதைகளை வாசிப்பதற்கு முன்னமே அத்தலைப்பிற்கான அர்த்தத்தைத் தேடவ வைக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு கதையாக வரிசையாக வாசித்துப்பழகிய எனக்கு ஒவ்வொரு தலைப்பாகத் தேர்ந்தெடுத்த வாசிக்க வைத்ததும் அதுதான்.

வாசித்த சில கதைகள்,வழக்கமான கதைகளாகவே தெரிந்தன. அக்கதைகளைப் பலரும் பலவாறாகச் சொல்லியுள்ளார்கள். அதைவிட நன்றாகவும் சொல்லக்கூடிய கதைகள் எனவும் தோன்றியது. ஆனால் அடுத்தடுத்த கதைகளை வாசிக்கையில் எழுத்தாளர் தன்னையும் தேர்ந்த எழுத்தாளர் இடத்தில் நிறுத்திக்கொண்டார். அவரால் எப்படி இக்கதைகளை எழுத முடிந்தது என வாசித்தப்பின் யோசிக்கவும் வைத்துவிட்டார்.

‘இருட்டில் ஒளிரும் ஆயிரம் கண்கள்’ கதையில் அம்மா தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் மகளுக்கும் ஏற்படக் கூடாது என நினைக்கிறார்.

‘எரி நட்சத்திரம்’ என்ற கதையில் காலாகாலத்தில் கல்யாணம் ஆகாத பெண்ணின் வாழ்க்கையைச் சொல்கிறார்.

‘கணை’ சிறுகதையில் திருமணத்திற்குப் பிறகு பெண் கர்ப்பவதி ஆகவேண்டுமென்று எதிர்ப்பார்த்து அதனையே அப்பெண்ணுக்கு ஒரு அவப்பேராகச் சுமத்த காத்திருக்கும் சமூகத்தைச் சொல்கிறார்.

‘கணல்’ சிறுகதையில் இன்றும்கூடப் பெண்ணுக்கு காதலிக்க இருக்கும் சுதந்திரம் காதலித்தவனையே திருமணம் செய்வதில் இல்லாததையும் ஜாதி அங்கொரு பெரும்தடையாக இருப்பதைக் காட்டுகிறார்.

‘கனவு’ சிறுகதையில் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் பெண்கள் இழப்பது கொஞ்சநஞ்சமல்ல எனச் சொல்கிறார்.

‘கொண்டலாத்தி’ சிறுகதையில் பெண்ணின் மனம் எத்துணை விசித்திரமானது எனக் காட்டவும் தவறவில்லை.

‘சம்வாதம்’ என்னும் கதையில் வெளியூரில் வேலை செய்யும் பெண்ணைப் பற்றிப் பேசுகிறார். இத்தனை காலம் ஆண்கள் மட்டுமே வெளியூர் வேலைகளில் சிதைகிறார்கள் என வாசித்தும் கேட்டும் பழகியவர்களுக்கு இக்கதை பெண் சந்திக்கும் சிக்கலை எடுத்து சொல்லும். தன் உணர்வுக்கும் தன் பொறுப்பிற்கும் இடையில் சில பெண்கள் சிக்கி மூச்சு திணறுவதையை நன்றாகவே கதையாக்கியுள்ளார்.

‘திமிரி’ சிறுகதையில் கணவனை விட்டு பிரிந்து வாழும் பெண்ணைப் பற்றிச் சொல்கிறார். என்னதான் அவளது குடும்பம் அவளை ஏற்றுக்கொண்டாலும் அவள் கணவனிடம் அனுசரித்துப் போகவேண்டிய கட்டாயத்தைச் சொல்லவும் செய்கிறது. ஒரு பெண் அவளாக இருக்கவும், அவளுக்கான முடிவுகளை எடுக்கவும் யாரோ ஒருவர் சம்மதிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதைக் காட்டுகிறார்.

‘புருஷாமிருகம்’. இக்கதையில் தலைப்பே கதையைச் சொல்லிவிட்டாலும், தனது கதை சொல்லும் பாணியில் இச்சிறுகதையை எழுத்தாளர் வாசிக்க வைக்கத் தவறவில்லை. குடும்பத்தில் வாழும் பெண் சந்திக்கும் உடல் உளவியல் சிக்கலை பேசும் கதை. உண்மையில் யார்தான் அவள். பெண்ணா, உடலா, மனமா, மனுசியா எனகிற பல கேள்விகளை வாசகர் முன் வைக்கிறார்.

‘பெரீம்மா’ இச்சிறுகதை, எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் ‘முள்’ என்ற சிறுகதையை நினைக்க வைத்தது. பெரீம்மாவின் மரணமும் அதைச்சுற்றியும் நடப்பதுதான் கதைக்களம். ஆனால் இக்கதையின் கடைசிப் பத்தி முழுக் கதையையும் வேறொரு இடத்திற்குக் கொண்டு சென்று ஜீரணிக்க முடியாத இடத்தில் வாசகனைக் கொண்டு நிறுத்துகிறது. இன்னும் சொல்லப்போனால் அந்தக் கடைசிப் பத்திவரை கதை ஒரு பரிணாமத்தையும், கடைசிப் பத்தி அதற்கு நேர்மாறான இன்னொரு பரிணாமத்தையும் கொடுக்கிறது. இக்கதையை நிராகரிக்க வேண்டிய இடத்திலும் இருக்கிறது அதே சமயத்தில் நிராகரிக்க முடியாத இடத்திலும் தன்னை நிறுத்திக் கொள்கிறது.

‘போக்கு’ இக்கதை என் தூக்கத்தைக் கெடுத்த கதை. ஒரு பெண்ணைத்தவிர வேறு யாரால் இக்கதையைச் சொல்லிவிட முடியும் எனத் தெரியவில்லை. மறைந்த மலேசிய அளுமையான எம்.ஏ.இளஞ்செல்வனின் ‘பாக்கி’ என்ற சிறுகதை இங்குப் பிரபலம். பல இடங்களில் அச்சிறுகதை மேற்கோள் காட்டப்பட்டது. பெண் தனது எல்லா வேலையையும் முடித்து அசந்து உறங்கத்தாயாராகும் சமயம் கணவன் தன் காலை மனைவி மீது போடுகிறான், இன்னும் இது பாக்கி இருப்பதாக மனைவி சொல்வதோடு கதை முடிந்துவிடும். இக்கதை எழுதப்பட்ட சமயத்தில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கேள்விபட்டுள்ளேன். அதன் பிறகு கணவன் மனைவி உளவியில் சிக்கலை பேசும் பல கதைகள் வந்துவிட்டாலும் இக்கதை இன்னமும் பேசப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 

மனைவி என்பவள் ஆணுக்கு எப்போது தன் உடலைத் தருவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்கிற ஆண்களின் மனப்போக்கை பல கதைகளில் நாம் வாசித்திருப்போம். அது எப்படி முடியும் அவள் உடல் அவள் உரிமை எனப் பலர் முழக்கங்களையும் செய்கிறார்கள். இன்றளவும் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஐ.கிருத்திகாவும் அந்த இடத்தில் கதையைக் கொண்டு செல்கிறார். ஆனால் அவர் கதையைச் சொல்வதற்கு எடுத்துக்கொண்ட களம் முக்கியமான ஒன்று. மாதவிடாய் சிக்கலையும் அது தரும் உடல் வலியையும் மன உளைச்சலையும் ஆழமாகச் சொல்லியுள்ளார். அப்படிச் சொல்லிருந்ததால்தான் கணவன் கடைசியில் கேட்கும் ‘ரொம்ப நாளாச்சுடி’ என்ற வார்த்தை வாசகனுக்கும் கோவத்தைக் கொடுக்கிறது.

‘வெற்றிடம்’ கணவனின் வருகைக்கும் காத்திருக்கும் மனைவியின் கதை.

‘கூடடைதல்’ என்னும் கதை இன்றைய குடும்பச்சிக்கலை பேசியிருக்கும் கதை. ரொம்பவும் முக்கியமான கதையும் கூட. நடுத்தர வயதைத் தாண்டி குழந்தைகளுடன் வாழும் பெற்றோர் பற்றிய கதை. கத்தி மேல் நடப்பது மாதிரியான கரு என்றும் சொல்லலாம். நல்லவேளையாக அந்தப்பெண் தப்பித்தால் என வாசகனுக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கும் கதை. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கதை என நான் நினைப்பதால் மேற்கொண்டு இக்கதை நான் சொல்வதைவிடவும் நீங்கள் வாசிப்பதே அவசியம்.

‘தாயக்கட்டைகள்’ யாரும் யாரையும் அவர்களாக மகிழ்ச்சியில் இருக்க விடுவதில்லை என நினைக்க வைத்த கதை.

‘தடம்’ கணவனை இழந்த கர்ப்பவதி மனைவியின் வாழ்க்கையைச் சொல்லும் கதை.

ஐ.கிருத்திகாவின் கதைகளை நகர்த்திச்செல்வது நம்மை ஆழ்ந்து வாசிக்க வைக்கிறது. தன்னைச்சுற்றி நடப்பதை ஆழ்ந்து அவதாணித்துக் கதைகளில் கொண்டு வந்துள்ளார். கதையினைச் சொல்லும் யுக்தியும் கவர்கிறது. பேசவேண்டிய விடயங்களைக் கதைகளாக மாற்றி வாசிக்க வைத்து அதிலிருந்து ஓர் உரையாடலுக்கு வழி வகுக்கின்றார். இச்சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்ததும் சிலரிடம் சில கதைகள் குறித்துப் பேசினேன். என்னுடைய தோழிகளுக்கு இவரின் கதைகளில் இவர் எடுத்துச் செல்லும் சிக்கலையும் இவரின் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்கள் குறித்துப் பேசினேன். குறிப்பாக ‘கூடடைதல்’, ‘போக்கு’ கதைகளைக் கண்டிப்பாக வாசிக்கவும் சொல்லியுள்ளேன். இப்படியான சிறுகதைகளைக் கொடுத்த எழுத்தாளருக்கு அதுதான் எனது நன்றி.

இனி வாசிக்க வேண்டியவர்கள் பட்டியலில் ஐ.கிருத்திகாவையும் இணைத்துவிட்டேன்.


- தயாஜி

 

(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)

மார்ச் 09, 2022

- குழந்தையா அது...? -

குழந்தை ஒன்று வந்திருந்தது. குழந்தையா அது; அது ஒரு குரங்கு அப்படித்தான் நடந்து கொண்டது. ஐந்து வயதுதான். எனக்கு அவன் பையன். வீட்டிற்கு அவன் குழந்தை.

சரி குழந்தையாகவே வைத்துக்கொள்ளட்டும். இப்படியா வளர்ப்பார்கள். அது எதையாவது செய்துக்கொண்டே இருக்கிறது. ஓரிடத்தில் உட்கார மாட்டேன் என்கிறது. சாப்பிடும் போது கூட அதன் தொல்லை தாங்க முடியவில்லை.

நான் புத்தகம் வாசிக்கும் போது யாரும் இடைஞ்சல் செய்தால் எனக்கு ஒவ்வாது. என் புத்தகங்களில் யாரும் கைவைத்தால் எனக்கு ஆகாது. என் வாசிப்பு மேஜை நாற்காலியில் யாரும் உட்காரக் கூடாது. அனைத்தும் அது செய்தது. புத்தகத்துடன் அமரும் போதுதான் பக்கத்தில் அமர்ந்து ஏதேதோ கதைப்பேசியது. புத்தகங்களை எடுத்து மாற்றி மாற்றி அடுக்கி வைத்தது. நாற்காலியில் அமர்ந்து சுழன்று சுழன்று விளையாடியது. 

வீட்டின் அமைதியே போய்விட்டது. என்ன பிள்ளையை வளர்க்கிறார்கள். எப்படித்தான் சமாளிக்கிறார்கள். ஒன்றுமே புரியவில்லை. ஒரு வாரம் கூட என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நல்லவேளையாக ஆறாவது நாளே கிளம்புகிறது. 

போகும் போது கூட அதற்கு சேட்டைகள் குறைந்தபாடில்லை. சென்றுவிட்டது. இனி தொல்லை இல்லை. நிம்மதியாக இருக்கலாம். வீடு அமைதியாக இருக்கும்.

ஆனால், ஏதோ ஒன்றை அக்குழந்தை என்னிடம் விட்டு சென்றது. அது என்னவென்று புரியவில்லை. மீண்டும் அக்குழந்தை எப்போது வருமெனவும் தெரியவில்லை.

மார்ச் 08, 2022

- இயந்திர மனிதர்கள் -

இன்று யுத்தம் முடிந்ததாக அறிவித்தார்கள். யார் அறிவித்தார்கள், யாரிடம் அறிவித்தார்கள் என தெரியவில்லை. அன்று யுத்தகம் தொடங்கியது என அறிவித்தப்போதும் யார் அறிவித்தார்கள். யாரிடம் அறிவித்தார்கள் என தெரியவில்லைதான்.

அவ்வப்போது இப்படி புரளிகள் வந்து கொண்டிருக்கவே செய்கின்றன. ஆட்களைக் கொல்பவர்களுக்கு எது புரளி என நன்றாகவே தெரிந்திருக்கும். துப்பாக்கியின் தோட்டாக்கள் தீரும் அந்த நேரமும், அவர்கள் துப்பாக்கியில் புதியத் தோட்டாக்களை இணைக்கும் நேரமுமே வீணாகக்கூடாதென அதிவேகமாய் புதியத் தோட்டாக்களை இணைக்கும் பயற்சிகள் கொடுக்கப்பட்டவர்கள்.

தவறியும் கூட வெண்ணிறத்தில் எதுவும் தெரியக்கூடாது என கவனமாய் இருப்பவர்கள். உடனுக்குடன் யாரின் குருதியைக் கொண்டும், வெண்ணிறத்தை செந்நிறமாய் மாற்றிவிடுபவர்கள். 

இவர்கள் இயந்திரமாக இருப்பார்களோ என நாங்கள் சந்தேகிப்போம். அவர்கள் உண்டு, உறங்கி, சிரித்து , கண்கள் கலங்கி நாங்கள் பார்த்ததே இல்லை. யாரோ அழுத்திய விசையில் அவர்கள் சுட்டுக்கொண்டும் வருவதும் குண்டுகளை வீசிக்கொண்டும் வருவதையும்தான் நாங்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அவர்களுக்கு தாகம் கூடவா எடுக்காது. உண்மையில் அவர்கள் எல்லாம் இயந்திரங்கள்தான் போல.

நாங்களும் அப்படி இயந்திரமாக வேண்டும். எங்களையும் யாராவது விசை கொண்டு இயக்குங்கள். எங்களுக்கு பசிக்கிறது. தூக்கம் வருகிறது. கண்கள் அழுது வடிகிறது. குருதி கொட்டுகிறது. முடியவில்லை.  குறைந்தபட்சம் குடிக்கக் கொஞ்சமாவது தண்ணீர் கொடுங்கள். 

கண்ணீர் குடித்து பசி போக்கு என்ற சாபத்தையாவது கொடுங்களேன்....

மார்ச் 07, 2022

- இரத்தக்கறை -

பல தடவைகள். பல முயற்சிகள். ஒன்றும் சரிவரவில்லை. பலரின் ஆலோசனைகள். அறிவியல் விளக்கங்கள். எதுவும் உதவவில்லை. நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது. தயார்தான். ஆனால் திருப்தி இருக்கவில்லை.

கையில் கிடைத்த எத்தனையோ வாசனைத் திரவியங்களைக் கையில் ஊற்றினாலும் வேலைக்கு ஆகவில்லை. அடுத்த ஐந்து நிமிடத்தில் துர்நாற்றம் வீசத்தொடங்கிவிடுகிறது.

உயிர் காக்கும் பாதுகாவலர்களுடன் நறுமணம் காக்கும் சிலரும் வாசனையைத் தெளித்துக்கொண்டே வருகிறார்கள். சரியாக ஒவ்வொரு ஐந்து நிமிட இடைவேளையில் அவர்கள் வாசனையை அவருடலில் எதார்த்தமாகவும் யாருக்கும் தெரியாத கவனத்துடன் தெளிக்கிறார்கள்.

இன்று இந்நாட்டின் முக்கியத்தினம். அதனை அவர் மாற்ற விரும்பவில்லை. கொடியேற்றினார். அனைவரும் வாழ்த்துப்பாடல்களைப் பாடுகிறார்கள். ஆள் உயர கூண்டு கொண்டுவரப்பட்டது.

கூண்டின் உள்ளே நூறு புறாக்கள் இருக்கலாம். அனைத்தும் வெண் புறாக்கள். இன்றொருநாள் மட்டும் அவை சமாதானப்புறாக்கள். அவர் அந்தக் கூண்டை திறக்கவும், சமாதானப்புறாக்கள் சுதந்திரமாய் பறக்கலாயின.

கூண்டிலிருந்த கடைசி புறா பறக்கவும், அவர் கைகளில் மீண்டும் துற்நாற்றம் வீச ஆரம்பித்தது. ஐந்து நிமிட இடைவெளி இன்றி தொடர்ந்து வீசத்தொடங்கியது.

இம்முறை அவரது கைகளில் மட்டுமின்றி அவரது பிள்ளைகள், மனைவிகள், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள், ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் என ஒவ்வொருவரின் கைகளிலும் துர்நாற்றம் வீசத்தொடங்கியது.

போர்க்குற்றக்கரங்களை எதைக் கொண்டும் கழுவ முடியாது. அது யாரையும் தப்பிக்கவும் விடாது......


மார்ச் 06, 2022

- பாப்பா -

ஒரு வாரமாக வெளியே செல்ல முடியாதச் சூழல். யார் தலை தெரிந்தாலும் துப்பாக்கி சூட்டுக்கு இரையாகிடுவார்கள். பல கட்டிடங்களின் சுவர்கள் துப்பாக்கி சூட்டில்  உடைந்தும் சிதைந்தும் போயிருக்கிறது. வலுவற்றச் சுவர்களைத் தாண்டியும் மறைந்திருந்தவர்களை குண்டுகள் துளைத்துள்ளன.

வீட்டில் இருந்த அவசரகால உணவுகள் முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. ஏதாவது கிடைத்தால் அதை சாப்பிடுவதற்கு ஏற்றதாய் அம்மாவால் மட்டுமே செய்ய முடியும். இத்தனை நாட்களாய் அப்பா இல்லாமல் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டவர்தானே அவர். ஏழு வயது மகன் இரண்டு வயது மகள். காணாமல் போன கணவன். சிறிய வட்டத்தையும் யுத்தம் சிதறடித்துவிடுகிறது.

நேற்றையத் துப்பாக்கி சூட்டில் பயந்து பதுங்கி உறங்கிப்போனவர்கள்தான். கண்களைத் திறக்கிறார்கள். பசி திறக்க வைக்கிறது.

"அம்மா பசிக்குது.... ஏதாச்சும் இருந்தா கொடுங்கம்மா... நேத்தும் ஒன்னும் சாப்டல.. தங்கச்சி பாப்பா இன்னும் தூங்குதுமா... அம்மா.. தங்கச்சி பாப்பா அசைய மாட்டுது... மா... பாப்பா அசையல.. பாப்பா....பாப்பா....பாப்பா.. அம்மா...இங்க வாங்க மா... பாப்பா...."

நேற்றையத் துப்பாக்கி சூட்டில், ஜன்னலைத் தாண்டி வந்த தோட்டா அம்மாவின் இதயத்தில் தஞ்சம் புகுந்துவிட்டதை யாராவது அந்தப் பையனிடம் சொல்லுங்கள். என்னால் சொல்ல முடியாது. சொல்லவே முடியாது.....

மார்ச் 05, 2022

- பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -

"யுத்தம் முடிந்தது. நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்.. பயப்படவேண்டாம்.... நாங்கள் உங்களுக்கு உதவுவதற்காக வந்துள்ளோம்"

ஒலிபெருக்கியில் சத்தமிட்டபடி இராணுவ வாகனங்கள் குடியிருப்பில் நுழைந்தன. எஞ்சி இருக்கும் கட்டிட இடிபாடுகளில் ஒழிந்திருக்கும் சிலருக்கு இன்னமும் பயம் இருக்கவே செய்கிறது. யாரை நம்புவோம். யாரால் சாவோம் என்பதே மிகப்பெரியக் கேள்விக்குறியானது.

தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டிலும் கையெறி குண்டு வெடிப்பிலும் சிலர் மட்டுமே உயிர் தப்பினர். அனைவரும் பொதுமக்கள். கையில் துப்பாக்கியை ஒரு முறை கூட தொட்டுப்பார்க்காதவர்கள்.

யாருக்கு யாருடன் யுத்தம். எங்கள் நாட்டிற்கு அவர்கள் ஏன் வருகிறார்கள். நாங்கள் நன்றாகத்தானே வாழ்கிறோம். ஏன் எங்களைக் காப்பாற்றுவதாக  சொல்கிறார்கள் என இப்போதுவரை ஒருவருக்கும் புரியவில்லை.

இனியும் மறைந்திருக்க வேண்டாம். நமக்காக அவர்கள் வந்துவிட்டார்கள். பயமின்றி ஒவ்வொருவரும் வெளியேறினார்கள். ஆனாலும் அவர்கள் தத்தம் கைகளைத் தலைக்கு மேல் தூக்கியபடியேதான் வெளியில் வந்துகொண்டிருக்கிறார்கள்.

இராணுவத்தினர் அவர்களைப் பெரியவர் முதல் சிறுவர்கள் என  வரிசையில் நிறுத்தினார்கள். கைகளைக் கீழிறக்கச் சொல்லிவிட்டார்கள். பெருமூச்சு விட்டபடி அனைவரும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.

உணவுக்கு தயாரானவர்களாய் ஒவ்வொருவரும் காத்திருக்க, அவர்களை நோக்கி அது திரும்பியது. அதன் மீது அமர்ந்திருந்தவனின் பிடி இறுகியது. இரு கட்டை விரல்களும் விசையை அழுத்த அதிநவீன துப்பாக்கியின் தோட்டாக்கள் ஒவ்வொருவரையும் பல முறை துளைத்து மறுபக்கம் வெளியேறி சுவரையும் துளைத்தன.

வரிசையில் நின்றிருந்த சிறுவர்களும் விதிவிலக்கல்ல. உலகின் எந்த யுத்தத்திலும் சிறுவர்களும் குழந்தைகளும்  எதிரிகளாகவேதானே பார்க்கப்படுகிறார்கள்....


மார்ச் 04, 2022

- தப்பித்தலும் காப்பாற்றுதலும் -

இப்போதுதான் சத்தம் அடங்கியது. காலையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தங்கள், குண்டு வெடிப்பு சத்தங்கள், விமானங்களின் சத்தமென எங்களை பீதியாக்கிக் கொண்டிருந்தன. இது யுத்தகால ஓய்வு நேரம் போல, பெரியதொரு வெடி சத்தத்தைத் தொடர்ந்து மயான அமைதி நிலவிக்கொண்டிருக்கிறது.

யுத்தத்தின் சத்தத்தைவிட, அது தரும் திடீர் அமைதி அபாயமானது. உயிர் பயத்தை முழுமையாகக் காட்டக்கூடியது. ஓடும் திசை தெரியாமல் திக்கு முக்காட செய்வது. யாரெல்லாம் செத்துவிட்டார்கள் என காட்டிக்கொடுப்பது.

வெடிக்கும் சத்தத்தைவிடவும் அடுத்து எங்கே வெடிக்கும் என்கிற முன்னமைதி நிச்சயம் அபாயமானதுதான்.

என்னால் காப்பாற்ற முடிந்த மனைவியையும் பிள்ளையையும் இறுக்கப் பிடித்துக் கொண்டேன்.  வெளியில் எங்கும் செல்ல முடியாது. வாசலில் குவிந்து கிடக்கும் உறவினர்களின் சடலங்களை நாங்கள் மீண்டும் பார்க்க முடியாது.

பக்கத்துவிட்டு பையன் ஒருவன். அடைக்கலம் தேடி வந்தான். அவனைக் காணவில்லை. அவன் வீட்டார் வந்து கேட்டால் என்ன பதில் சொல்லட்டும். சொல்ல முடியும்.

என் மகளைக் காப்பாற்ற முடிந்த என்னால் ஏன் அந்தப் பையனைக் காப்பாற்ற முடியவில்லை. என் மனைவியைப் பாதுகாத்த என்னால் ஏன் உறவினர்களை பத்திரமாக இடம் மாற்ற முடியவில்லை. நான் முயலவில்லையா. இயலாமையா. சுயநலமா. நானும் மனிதன் தானா.....

அதோ மீண்டும் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது. யுத்தம் தொடங்கிவிட்டது.
இனி மனசாட்சியின் குரலுக்கு மதிப்பில்லை. அதற்கான பதிலும் தேவையில்லை. எப்படியாவது என்  மனைவியையும் என் மகளையும் காப்பாற்ற வேண்டும். அதற்கு நான் ஏதும் செய்ய வேண்டும்...


மார்ச் 03, 2022

- குழந்தையின் சிரிப்பில்... -

குழந்தையின் அழுகையை யார்தான் தாங்குவார். என்னதான் திடமான மனம் கொண்டவராக இருந்தாலும், அதிகாரம் முழுக்க தன் கைவிரல் அசைவில் இருந்தாலும் அவருக்குள்ளும் ஈரம் இருக்கத்தான் செய்கிறது.

இன்று அவருக்கு முக்கியமான கடமையொன்று காத்திருக்கிறது. கடமை மட்டுமல்ல உலகின் பல மூலைகளில் இருக்கும் மக்களும்தான் காத்திருக்கிறார்கள். சிலருக்கு அது கொண்டாட்டம். சிலருக்கு அதுதான் கடைசி திண்டாட்டம்.

அவசரமாகச் சென்றவர், அழும் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டார். சுற்றியுள்ளவர்கள் இந்த உன்னதக் கணத்தை புகைப்படங்களில் பதிவு செய்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் உடனுக்குடன் சமூக ஊடகங்களில் நிழற்படங்களைப் பகிர்ந்து நிழலாகவே சிலவற்றை எழுதத்தொடங்கினர்.

கையில் உள்ள குழந்தையைச் சமாதானம் செய்துக்கொண்டே நடக்கலானார்.

அறைக்கதவு திறந்தது. உள்ளே சென்றார். பிரம்மாண்டத் திரையைக் கண்டதும் குழந்தை சற்று அதிர்ந்து மீண்டும் அழுதது. அவர் மிகவும் நிதானமாக குழந்தையின் கண்ணீரைத் துடைத்தார். லேசாக, வலிக்காதவாறு குழந்தையின் கன்னத்தைக் கிள்ளினார்.

நாற்காலியில் அமர்ந்தார். பிரம்மாண்ட திரையில் சிறு சிறு புள்ளிகளாக மனிதர்கள் நடமாட ஆரம்பித்தார்கள். குழந்தை அழுவதை நிறுத்துவதாக இல்லை.

தன் முன்னிருந்த, சில பட்டன்களின் அருகில் குழந்தையைக் கொண்டு சென்றார். குழந்தை விளையாடத் தொடங்கியது.

ஒவ்வொரு முறையும் ஒரு பட்டனை அழுத்தவும் , திரையில் பிரகாசமான ஒளியும் வெடி சத்தமும் கேட்கத் தொடங்கியது.

குழந்தைக்கு அவ்விளையாட்டு பிடித்துவிட்டது. அழுவதை நிறுத்திவிட்டது. ஒவ்வொரு பட்டணையும் அழுத்தி அதன் பின் வரும் சத்தத்திற்கு கைத்தட்டத் தொடங்கியது குழந்தை.

குழந்தையில் குதூகலத்தில் அவரும் பங்கேற்றார். யார் அழுத்தினாலும் குண்டு மழை பெய்யும், இராணுவம் முன் செல்லும், துப்பாக்கிகள் வெடிக்கும். சாவது என்னமோ அப்பாவிகள்தான்.

குழந்தை தொடர்ந்து கைத்தட்டிக்கொண்டே பட்டண்களை அழுத்தி விளையாடியது. திடீர் வெளிச்சமும் வெடிச்சத்தமும் திரையில் தோன்றியவண்ணம் இருக்கின்றன....


மார்ச் 02, 2022

- வெற்றுத்துப்பாக்கி -

சிதைந்து போன கட்டிடங்கள். கடைசி நம்பிக்கையாய்ச் சில செங்கல் சுவர்களைப் பிடித்திருந்தன. நல்லவேளையாக சில வீடுகளுக்கு மட்டும் கீழ்த்தளம் இருந்தது. வீட்டின் ஒரு பகுதியாக இருந்தவை இப்போது பதுங்கு குழியாகிப் போனது.

ஆயுதம் ஏந்திடாத அப்பாவி மக்கள் அவ்வப்போது வெளியேறுவார்கள். சாப்பிட முடிந்தபடி பார்க்கக் கிடைக்கும் ஒவ்வொன்றும் அவர்களுக்கு அன்றைய உணவு. 

சில நாட்களுக்கு முன்பதாக இதே சாலையில் சுற்றுலா பயணியாக வந்திருந்தவன். இன்று கையில் துப்பாக்கியுடன் இதே சாலையில் கண்ணில் படுபவர்கள் எல்லோரையும் சுட்டு வீழ்த்தும் குழுவினருடன்   முன்னேறிக்கொண்டிருந்தான். அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை. 'எதிரியைக் கொல் இல்லையேல் சொந்த இராணுவத்திடமே செத்துப்போ' என்கிற நிலைமை.

அவன் மெல்ல மெல்ல தன்னைக் கடைசி ஆளாக ஆக்கிக்கொண்டான். இராணுவ உடையை விடவும் அவன் உள்ளம் பலம் பெற்றுக்கொண்டு வந்தது.  அப்போதுதான்  அவன், அந்தச் சிறுவனை கவனித்தான். அன்று அவன்தான் இவ்வீரனுக்கு வழிகாட்டியாக இருந்தவன். சிறுவனும் இவனை அடையாளம் கண்டுகொண்டான்.

யாருமற்ற இடத்தில் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். வழக்கம் போல தன் வாடிக்கையாளர்களுக்கு ரோஜா மலரைக் கொடுத்து வரவேற்பவன். இன்று தரையில் கிடைத்த காய்ந்த இலையைக் கொடுத்து வரவேற்று அழுதான்.

இராணுவ வீரனின் கண்களும் கலங்கிவிட்டன. சிறுவனுக்கு கொடுக்க இப்போது அவனிடம் ஒன்றுமில்லை. ஆனால் ஒன்று இருக்கிறது. துப்பாக்கி.
தன்னிடம் இருந்த இன்னொரு துப்பாக்கியில் இருந்து தோட்டாக்களைப் பிரித்தான். வெற்றுத்துப்பாக்கியை அந்தச் சிறுவனிடம் கொடுத்து அவனைச் சிரிக்க வைக்க முயன்றான்.

வெற்றுத்துப்பாக்கியை கையில் ஏந்தியச் சிறுவன், அதனை மெல்லத் தடவிப்பார்த்தான். அவன் கைகள் அப்போதுதான் துப்பாக்கியைத் தொடுகிறது. 

தூரத்தில்,
போராளி ஒருவனிடம் துப்பாக்கியும் எதிரில் தங்கள் இராணுவ வீரனும் நிற்பதைப் பார்த்தக் கண்கள், தனது 'ஸ்னைப்பரால்' அப்போராளியை குறிவைத்து.

அது வெற்றுத்துப்பாக்கி என்பதைத் தெரிந்தவர்கள் நான்கு பேர். அங்கு அவர்கள் இருவரும், இங்கு நாம் இருவரும் மட்டுமே. ஆனால் நம்மால் எதுவும் செய்ய முடிவதில்லை...


மார்ச் 01, 2022

- அவளை நீங்கள் பார்க்க வேண்டும் -

அவளுக்கு பெயர் அவசியமில்லை. தேவதை என்கிற பெயருக்கு நூறு சதவிதம் பொருத்தமான முகத்தைப் பெற்றிருந்தாள். அவளை நீங்கள் பார்க்க வேண்டும்.

சில முகங்கள் சில வண்ணங்களால் அழகடையும். ஆனால் இவள் முகமோ எல்லாவித வண்ண ஆடைகளையும் அழகடையச்செய்யும். அவளை நீங்கள் பார்க்க வேண்டும்.

இயற்கை ஏதோ ஒன்றை அவள் கண்களில் வைத்திருந்தது. உங்கள் கோவத்தையும் வெறுப்பையும் அரை நொடியில் அக்கண்கள் இல்லாமலாக்கிவிடும். அவளை நீங்கள் பார்க்க வேண்டும்.

முத்துப்பற்கள் சிரிப்பில், துருத்தித்தெரியும் வலது பக்க சிங்கப்பல்லும் அவள் அழகைக் கூட்டிக்காட்டும். அவளை நீங்கள் பார்க்க வேண்டும். 

அப்படியொரு தேவதை நம் குடும்பத்திலும் இருக்க வேண்டுமென யார்தான் கேட்கமாட்டார்கள். அவளின் ஒளிரும் கண்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையுமே ஒளிரச்செய்யும். அவளை நீங்கள் பார்க்க வேண்டும். 

சீக்கிரம் பார்த்துவிடுங்கள். அதோ அவளது முகம். எங்கிருந்தோ வீசப்பட்ட ஈவு இரக்கமற்ற வெடிகுண்டால் அவள் முகத்தை மட்டும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவளை நீங்கள்........

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்