பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 29, 2011

கையெழுத்து............இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், வீடு சத்தமாக இருந்தது. மற்ற நாட்களெல்லாம் வீட்டில் ஆள் நடமாட்டம் குறைவு என்பதால் இன்று மட்டும் இப்படி ஒரு இரைச்சல். சத்தமில்லாத நாள்களில் வீட்டில் ஏற்பட்டிருக்கும் அலங்கோலத்தை எல்லாம் இன்றைக்குத்தான் மாற்றியமைக்க வேண்டும். ஆறுநாட்கள், கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் உள்ளவர்கள் சேர்த்து வைத்த சோம்பேரித்தனம், வீட்டின் திரைத் துணியிலும் தொலைக்காட்சி மேல் இருக்கும் தூசியிலும், சமையல் அறை எண்ணெய் பிசுபிசுப்பு கொண்ட அடுப்பிலும் ஒட்டிக் கொண்டிருந்தன. அவ்வபோது செய்திருக்க வேண்டியதை செய்திருந்தால் இன்றைய விடுமுறை நாளை மற்றவர்களைப் போலவே மகிழ்ச்சி நிறைந்த உரையாடலில் மூலமாகவோ ஏதாவது பயண ஏற்பாட்டிற்கோ செலவு செய்திருக்கலாம். அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. இப்போது மட்டுமல்ல, மணி இந்த வீட்டை வாங்கிய கடந்த 8 ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறது.
மணியின் மனைவி பவானியைப் பொருத்தவரை ‘இவரை திருத்தவே முடியாது’ என்ற முடிவுக்கு வருவதற்கு முன் பல முறை சொல்லியும் செய்தும் பார்த்தாகிவிட்டது. ம்ஹிம்.. மணி எதற்கும் மசியவே இல்லை. ஒரு நாள் இரு நாள் பழக்கமா உடனே மாற்றிக் கொள்ள. பள்ளியில் தொடங்கியப் பழக்கம் இது. அதிலும் குறிப்பாக மணியின் கையெழுத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அட.... அட..... என்ன அழகு எவ்வாறான எழுத்து வடிவங்கள் என்று மணி தனக்குத்தானேச் சொல்லிக் கொண்டாலும் கோழி கால் பட்ட மண் போலத்தான் நமக்குத் தெரியும். காக்கைக்கே தன் குஞ்சு பொன்னாகத் தெரியும் போது, மனிதனுக்கு மட்டும் கையெழுத்து உண்மை வடிவிலாத் தெரியப்போகிறது.
கையெழுத்தில் தொடங்கிய ஒழுங்கின்மை வீட்டிற்குள் நுழைந்தது. வீட்டில், கட்டிலைத்தான் முதன்முதலில் பாதித்தது அந்த ஒழுங்கின்மை. ஒழுங்கற்ற முறையில் இருக்கும் கட்டிலின் நிரந்தர வடிவத்தை கவனிக்க மறந்த பெற்றோரால், கட்டிலைத் தாண்டி ஒவ்வொரு இடமாக நுழைந்தது ஒழுங்கின்மை. கையெழுத்து, கட்டில், அப்புறமென்ன சமையல் அறையும் வாசற்படியும்தான் தொடர்ந்து பாதிக்கப்பட்டன.
சாப்பிட்ட பிறகு கழுவ வேண்டிய உணவுத்தட்டும், குப்பையில் போட வேண்டிய சாப்பிட்ட மிச்ச மீதியும் அப்படியே சமையல் அறையில் வைக்கப்பட்டது. ஒருவேளை முதல் நாளோ இரண்டாவது நாளோ இதனை கண்டித்திருக்கலாம். மணி இதனைத் தொடராமல் இருந்திருப்பான். ஒழுக்கின்மையும் வந்த வழியில் பின்னோக்கி சென்றிருக்கும். ஆனால் மணியின் பெற்றோர் அதனை செய்யவில்லை. ‘உங்க அப்பா பழக்கம் அப்படியே உனக்கும் ’ என பெருமையாய் சொன்ன அம்மாவும் அதைக்கேட்டு சிரித்த அப்பாவும் பெரிதாக எந்த தவறும் செய்திருக்கவில்லை. எறுப்பு ஊர தேயும் கல்லின் முதல் தேய்தலை எறும்பே அறிந்திருக்காதே. இதனையும் நாம் அந்த வகையில் சேர்க்கலாம்.
முன்பெல்லாம் வீட்டிற்குள் வரும் முன்பு தன் காலணியை அதற்கான குட்டி அலமாறியில் வைப்பது மணியின் வழக்கம். அதற்கென்றே அழகான பாதுகாப்பான குட்டி அலமாரி வாசல் அருகில் இருந்தது. மணியின் காலணி மட்டும் வலது காலுக்கானது வடக்கிலும், இடதுக் காலுக்கானது தெற்கிலும், இருக்கும். பல முறை காலணிகள் காணாமலும் போனது உண்டு. அலமாரியின் உள் வைக்கப்பட்ட பழைய நாளிதழை மாற்றுவதற்குள் புதுப்புது காலணிகளை மணியின் பெற்றோர்கள் வாங்கினர். தேய்ந்து போன காலணிக்கு பதில் புதிதாக வாங்கும் காலணியில் இருக்கும் திருப்தி காணாமல் போன காலணிக்கு பதிலாக வாங்குவதில் இல்லை. அதனை அவர்கள் பொருட்படுத்தவும் இல்லை. ம்.. அப்போதே பொருட்படுத்தியிருக்கலாம்.படிப்பில் எந்த குறைபாடும் இல்லை. ஆம்... அதுவரையில் இல்லை என்றே சொல்லலாம். கட்டம் அமைத்து, கோடு கிழித்து, குழுக்கள் பிரித்த கால்பந்து விளையாட்டுக்கும்; கண்மூடித்தனாமான கால்பந்தாட்டத்திற்கும் வித்தியாசம் அவரவர் மனதில் மாறுபடும். மணிக்கு இரணாவதாய் சொன்னதில் ஆர்வம் எழுந்தது. பள்ளி இறுதியாண்டு விடுமுறையில் படிந்து சீவப்பட்டிருந்த முடியை வளர்த்து வானம் நோக்கி மாற்றினான். கறுமை நிறம் கொண்ட முடி, முன்புறம் மிட்டாய் வண்ணமாய் மினுக்கியது. புதிய தலைமுடியைக் கண்ட பெற்றோரின் கேள்விக்கு; பள்ளி விடுமுறைதானே என சமாளித்தான். அவர்களும் சரி என்றார்கள். இப்படிப்பட்ட பெற்றோர்க்கு நிச்சயம் மணி கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் இப்படி பட்ட மகன் கிடைக்க அந்த பெற்றோர், ம்.. என்ன சொல்வது..?ஆரம்பபள்ளி முடித்து இடைநிலை பள்ளிக்குச் சென்றான். மூன்று நாள்கள், வானம் பார்த்த தலை முடியுடனே பள்ளியில் நடமாடினான் மணி. அதுவரையில் மணிக்கு இருந்த பழைய நண்பர்கள் மாறினர். தன்னைப் போலவே இருக்கும் புதுப்புது நண்பர்கள் வருகை மணிக்கு மேலும் கௌரவத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. ஒழுங்கின்மை அங்கு ஒழுக்கமின்மையாக பொறுப்பேற்றது. அதன் விளைவு சீக்கிரமேத் தெரிந்தது.
ஆறு ஆண்டுகள் தன்னுடன் படித்து வந்தவள் ப்ரேமா. நல்ல தோழியாக இருந்த ப்ரேமாவிற்கு காதல் கடிதம் கொடுக்கப் போகிறான். இச்செயலை மணியும் நினைத்திருக்க மாட்டான். கையெழுத்தில் வெளிவந்த ஒழுங்கின்மை, படுக்கை அறை , சமையல் அறை, அதன் ஊடே காலணி தொடர்ந்து தலைமுடி, நண்பர்கள் என மாறிமாறி தற்போது சிந்தனையிலும் நுழைந்துவிட்டது. ஒழுக்கமின்மையாக செயல்படத் தொடங்கியது.காதல் கடிதத்திற்கு புதிய நண்பர்கள் துணையாய் இருந்தாலும்; அதனை தொடரும் எண்ணத்தைத் தூண்டியது என்னமோ பழைய மூளைதான். இந்த மூளையும் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சினை சேர்த்தது; பழக்கத்தில் உள்புகுந்த ஒழுக்கமின்மை. கையெழுத்தின் வழி தன்னை வெளிகாட்டும் போதே கவனித்திருக்கலாம். வயல்வெளியில் வளர்ந்து நிற்கும் புதர்கள் வயலையே மறைப்பது போல; இதுவரையில் மணியிடம் இருந்த நல்ல பண்புகளும் இயல்புகளும் இனி இல்லை.
ஆசிரியர் அடித்ததால் உள்ளங்கை சிவந்திருந்தது. காதல் கடிதம் குறித்து ப்ரியா எதனையும் சொல்லவில்லை. அவளது தோழி செய்ததற்கு இவள் என்ன செய்வாள். மணிக்கு அறிவுரை மட்டுமே கூறிய ப்ரியா இதனை செய்திருக்க மாட்டாள் என மணிக்கும் யோசனை வரவில்லை. ஆத்திரம் அவன் கண்ணையும் தன் தோழி இதுவரை காட்டிய நட்பையும் மறைத்தது. அவளின் அழகி என்ற நினைப்புதான் தனது இந்த அவமானத்திற்கு காரணம் என முடிவு செய்தான். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினான்.நண்பர்களிடம் ஆலோசனை கேட்டான். கடந்த ஆண்டு வரை படிக்கவும் பாடங்களைப் பகிரவும் தேவைப்பட்ட நண்பர்கள் இல்லாமல் புதிய வரவுகள் மணிக்கு யோசனையைக் கொடுத்தார்கள். அதிகம் செல்லவில்லை. தந்தையின் பணப்பையில் கைவைக்கும் அளவுக்கு மட்டுமே தொகை இருந்தது. அமிலம் வாங்க பணமும் அதனை எடுக்க திட்டமும் கிடைக்கப் பெற்றான் மணி.
அமிலத்தை கண்ணாடி போத்தலில் கொடுத்த நண்பர்கள் மத்தியில் தனது திட்டத்தை விவரித்தான் மணி. படிக்கவும் அதன் படி நடக்கவும் போட வேண்டிய திட்டங்கள் இவை. இன்று தன் தோழி மீது வந்த வன்ம எண்ணதால் அவள் முகத்தினை சிதைக்கப் போடப்படுகிறது. அவள் பாவம் இல்லையா...? அவள் செய்யாத தவறுக்கு தன் முக அழகை இழக்கப் போகிறாள். இனி வாழ்நாள் முழுவதும் கோர முகத்துடன்தான் இருக்கப்போவதை நினைத்தால்... பாவம் அவள்.மணி தனது நண்பர்களிடம் சொன்ன திட்டத்தினை செயல்படுத்த ஆயுத்தமானான். கால் சட்டைப் பையில் கண்ணாடி போத்தலுடன் வந்துக் கொண்டிருந்தான்.போத்தலில் அமிலம் தயாராய் இருந்தது. இந்த நேரம் ப்ரேமா தனியாக ஆங்கில வகுப்பிற்கு வருவாள். இன்று ஏனோ தாமதம். நல்ல மனிதனின் மனதினை கெடுக்கும் தீய எண்ணங்கள் போல; மணியின் அந்த புதிய நண்பர்கள் கூட்டத்திலும் ஒரு நல்லவன் இருந்திருக்க வேண்டும். அவன் நல்லவனா இல்லையா என்பதைவிட அந்த கூட்டத்தில் அவன் ஒரு கறுப்பு ஆடு என்றே சொல்லலாம். அப்படித்தன் இனி மற்றவர்கள் அவனை சொல்வார்கள். கறுப்பு ஆடு.ப்ரேமாவுக்கு தன் மீது நல்ல எண்ணம் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் கூட அந்த கருப்பு ஆடு இதனைச் செய்திருக்கலாம்.பிரேமாவை பின் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்த அவளின் தந்தையையும் அவரின் நண்பர் ஒருவரையும் மணி கவனிக்கவில்லை. அவள் வழக்கத்திற்கு மாறாக பின்னால் திரும்பியும் ஏதோ பதட்டமுமாய் வருவதை தாமதமாகத்தான் கவனித்தான். ப்ரேமாவும் தன் கண்ணால் எதிரே வந்துக் கொண்டிருக்கும் மணிக்கு எதையோ சொல்ல முயற்சித்தால்.
கண் புருவத்தை உயர்த்தி தன் கால்சட்டைப் பையில் கையை வைத்தாள். பிறகு தன் கண்ணத்தில் கை வைத்தாள். அவள் பின்னால் கொஞ்சம் திரும்பும்படி காட்டிய செய்கையில் மணிக்கு புரிந்தது. மணி வந்த வேகத்திலேயே பின்னால் ஓட ஆரம்பித்தான். அவனது ஓட்டத்தில் வழக்கத்திற்கு மாறான வேகம் இருந்தது. ஓட்டத்தில் மட்டுமல்ல, மூளையிலும்தான்.அதிவேகமாய் ஓடியவன், எப்படியோ கால் தடுக்கி கீழே விழுந்தான். கால்சட்டைப் பையில் வைத்திருந்த கண்ணாடி போத்தால் பையிலேயே உடைந்தது. பிறகென்ன ப்ரேமாவுக்காகக் கொண்டு வந்திருந்த அமிலம் தன் காலில் சிந்தியது. சிந்திய இடத்தில் தோல் பொசுங்கியது.கண்விழித்து பார்த்த மணியின் முன் ப்ரேமாவும் அவளது தந்தையும் தந்தையின் போலிஸ்கார நண்பரும். அந்த நேரம், அவர்கள் நிகழ்த்திய உரையாடல் மணியின் மூளைக்குள் மின்சாரத்தை பாய்ச்சியது. உரையாடல்தான் எத்தனை விதமாக இருக்கிறது. கைகலப்பிற்கும் காரணமாகிறது, சில மன எழுச்சிக்கும் காரணமாகிறது. சரியான உரையாடல், சரியான நபர், சரியா நேரம், இதனை பொறுத்தே உரையாடலில் விளைவு மாறுபடலாம்.மூளைக்குள் புகுந்த மின்சாரமும் காலில் வலிக்கும் பொசுங்கிய தோலும்; கிடைத்த தனிமையும் மணியை யோசிக்க வைத்திருக்க வேண்டும். இனி ப்ரேமா அவனுக்கு எதிரி அல்ல. இந்த சம்வத்திற்கு பிறகு மணியில் பெற்றோர் அவன் மீது கொண்டிருந்த கொஞ்சநஞ்ச அக்கறையையும் குறைத்தனர். அவர்களிடம் இருந்த இடைவேளி மணிக்கு மேலும் வலித்தது.
மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான் புதிய மணி. தங்கள் மீதும் தவறு இருப்பதை உணர்ந்தனர் பெற்றோர்.மூளையில் இறங்கிய மின்சாரம் ஒவ்வொரு இடமாக பிரவேசித்தது. மணியின் சிந்தனை மாறியது, சிந்தனை செயலை மாற்றியது, செயல் பழக்கத்தை மாற்றியது, மாறியப் பழக்கம், அவனது வழக்கத்தை மாற்றியது, மணியின் வாழ்க்கை முறையும் மாறியது.இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மணிக்கும் பவானிக்கும் திருமணம். இருவர்க்கும் ஆனந்தன் ஒரே வாரிசாகப் பிறந்தான். அவனுக்கும் திருமணம் முடிந்தது. இன்று பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை மணிக்கு அமைந்திருந்தது. இப்போது மணியின் வயது நாற்பத்தைந்து இருக்கலாம்.


கதையின் முடிவு 1

மணியின் படுக்கையறை அலங்கோலமாக இருந்தது. சாப்பிட்ட தட்டை அப்படியே வைக்கபட்டிருந்தது. மணி சாய்வு நாற்காலியில் சாய்ந்து யாருக்கோ கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். மணியின் மையெழுத்து மீண்டும் அலங்கோலமாக மாறியிருந்தது.

கதையின் முடிவு 2

மணி தன் பேரனின் அறையில் நிற்கின்றார். அங்கே படுக்கையறை அலங்கோலமாக இருக்கிறது. பேரனின் புத்தகம் இன்றினை எடுத்த பக்கங்களைத் திறக்கின்றார். எழுத்துகள் ஒழுங்கற்ற முறையில் இருக்கிறது. தாத்தா மணி பேரனை கூப்பிடுகின்றார்.

கதையின் முடிவு 3
முன்றாவது முடிவாக, நீங்கள் நினைப்பதை எழுதுங்கள். கையெழுத்தை கவனியுங்கள். அவை ஒழுங்காக இருக்கின்றவா...?


தயாஜி........

ஆகஸ்ட் 17, 2011

புத்தகங்கள்
10.8.2011 - தோழர்கள் அழைக்க புத்தகக்கடைச் சென்றேன். வெறுங்கையுடன் எப்படி திரும்புவேன். அதான் கொஞ்ச நாட்களாய் தேடிய புத்தகங்கள் மீது தேடல் தொடுத்து வாங்கினேன். என்ன ஆச்சர்யம் என்றால் முதன்முதலாக 10 நிமிடத்திற்குள் வாங்கிய புத்தகங்கள் இவை.

1.ரஜினி முதல் பிரபாகரன் வரை 60 பிரபலங்கள் பற்றிய 25 அபூர்வ தகவல்கள்.
-விகடனின் வந்த பகுதி இது.
-60 பிரபலங்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.

2.ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்.
- பாடலாசிரியர் தாமரையின் முதல் கவிதை தொகுப்பு இது.

3.விண்வெளி கிராமம்.
-விஞ்ஞான சிறுகதை.
-எழுத்து நெல்லை சு.முத்து.

4.விட்டுவிடு கருப்பா.
-மர்ம அமமனுஷ்ய நாவல்.
-எழுத்து இந்திரா சௌந்தரராஜன்.
- 'விடாது கருப்பு' என்ற தொடரின் மூலம்.

5.கான்பிடன்ஸ் கார்னர்.
-100 நம்பிக்கை , குட்டிக்கதைகள்.
-எழுத்து மரபின் மைந்தன் ம.முத்தையா

புத்தகங்கள்5.8.2011 - எனக்கு மிகவும் மகிழ்ச்சியும் இன்ப அதிர்ச்சியும் கொடுத்த புத்தகங்கள்.........

சுந்தர ராமசாமியின் நூல்கள்
1- ஒரு புளியமரத்தின் கதை

- 28வயதில் தொடராக சில வெளிவந்த பிறகு நிறுத்தப்பட்டு 35வயதில் முடிக்கப்பட்ட நாவல்.

2- இறந்த காலம் பெற்ற உயிர்

-1995 முதல் 2003 வரை சு.ரா எழுதிய கட்டுரைகள், முன்னுரைகள், மதிப்புரைகள், விவாதங்கள், அஞ்சலிகள்,வாசகர் கடிதங்கள் ஆகியவற்றின் தொகுப்பு.

3- அழைப்பு

- சு.ராவின் 16 சிறுகதைகளின் தொகுப்பு.

4-கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது

- 20 முக்கிய படைப்பாளர்களை பாதித்த புத்தகங்கள் குறித்து அவர்களிடம் நடந்த உரையாடல்.

5-வேதியல் கதைகள்

- எழுத்து - பேரா மோகனா

-ஆய்வுக்கூடத்தில் மட்டுமல்ல நம் வீட்டு சமையலறைகூட ஒரு வேதியல் அய்வுக்கூடம்தான். ஏன் எப்படி எதனால்.....?

6- சில்லு மனிதனின் புன்னகை

-அறிவியல் புனைக்கதைகள்

-அய்சக் அசிமோவ் எழுதியதை மொழிபெயர்த்தவர் பொறிஞர் செங்கோ.

- மொத்தம் 26 அறிவியல் புனைக்கதைகளின் தொகுப்பு.

7-குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல்

-எழுத்து - புலமை வெங்கடாசலம்

- குற்றத்தின் பின்னனியை எப்படி கண்டறிகிறார்கள்... எவை சாட்சிகளாகின்றன....... கொலை தற்கொலையின் அடையாளம் போன்றவற்றை இதன்வழி தெரிந்துக் கொள்ளலாம்.

புத்தகங்கள்3.8.2011 - பாகான் லாலாங் கடற்கரை மைதானத்தில் நடைபெற்ற 'மக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி & ஆடிப்பெருக்கு கலை விழா 2011 ' க்கு அறிவிப்பாளராக சென்றிருந்தேன்.
நிகழ்ச்சியின் நிறைவில் நினைவுப் பரிசாக வந்திருந்தவர்களுக்கு சுகி.சிவம் எழுதிய புத்தகங்களைக் கொடுத்தார்கள். பாராட்டத்தக்க ஒன்று. எல்லோர்க்கும் ஒன்று மட்டுமே கிடைத்தது. மிச்சம் இருந்த புத்தகங்களை கவனித்த நநன் உரிமையாய் கேட்டதில் கிடைத்த புத்தகங்கள் இவை.
என் வாசிப்பை தொடக்கத்தில் வளர்த்தவர்களில் சுகி.சிவமும் ஒருவர்.

1- வாழப் பழகுவோம் வாருங்கள்.
2- இந்த நாள் இனிய நாள்
3- ஞானமலர்கள்

புத்தகங்கள்
(31.7.2011) இந்த வாரம் படித்து முடித்த புத்தகம். இளசச சுந்தரம் எழுதிய 'நம்மை நாமே செதுக்குவோம்'. மொத்தம் 32 சிறு தலைப்புகளில் இந்த புத்தகத்தை எழுதியிருக்கின்றார். புத்தகங்கள்

தான் படித்த;கேட்ட;பார்த்த-வற்றையெல்லாம் சுவைபட தொகுத்து தனக்கே உரிய நடையில் இளகுவாக புரியும்படி எழுதியிருக்கின்றார்.
பல நல்ல கருத்துகள்; குட்டிக்கதைகள்;உண்மை சம்பவங்கள் இந்த புத்தகத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன. வாய்ப்பிருப்பின் வாங்கி படிக்கவும். முடிந்தால் படித்தபின் கருத்துரைக்கும்;பகிரவும்.
நன்றி; இப்படிக்கு தயாஜி


(22.7.2011-ல்0 )SJK (TAMIL) TAMAN MELAVATI - பள்ளி மாணவர்கள் மத்தியில் வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக கதைகள், சிறுகதைகள் குறித்து பேச அழைக்கப்பட்டேன்.
நிகழ்ச்சியின் முடிவில் அண்ணன் நவின் எனக்கு இந்த புத்தகத்தை நினைவுப் பரிசாகக் கொடுத்தார்.

புத்தகம் - சுந்தர ராமசாமியின் 'இவை என் உரைகள். 1987 முதல் 2002வரை சுந்தர ராமசாமி ஆற்றிய உரைகளின் தொகுப்பே இந்த நூல். இலக்கியம்,சமூகப் பிரச்சனைகள், பண்பாடு,சினிமா போன்ற பல பொருட்களை எடுத்தாளும் உரைகள் இவை.

"என்னை பாதித்தவர்களில் சுந்தரராமசாமியும் ஒருவர். இந்த புத்தகம் உங்களுக்கு ஒரு தெளிவைக் கொடுக்கும்....அதன் ஊடே உங்கள் பயணத்தை நீங்கள் தொடரலாம்.- நவின்"
Navin Manogaram

நன்றி நவின்.
இப்படிக்கு தயாஜி.......

புத்தகங்கள்
(21.7.2011) நானும் என் தந்தையின் நண்பருமான அண்ணன் பாலகோபாலன் நம்பியாரும்.

என் அழைப்பை ஏற்று வந்து தனது நாவலான "கனவுக் கோலங்கள்" -ஐ கொடுத்தமைக்கு நன்றி. வளரும் எழுத்தாளர்கள் பட்டியலில் என் பெயரையும் சேர்த்த உங்களின் வாழ்த்து என் அப்பாவுக்கு நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
சீக்கிரம் உங்கள் கனவுக் கோலங்கள் நாவலைப்ப் படித்து இங்கே பதிவிடுகின்றேன்.புத்தகங்கள்

புத்தகங்கள்11.7.2011 படித்து முடித்த புத்தகம் இது. சுஜாதா எழுதி 1980-ல் முதல் பதிப்பாக வெளிவந்த புத்தகம் இது. வழக்கமான சுஜாதாவின் நாவல் என்று இதனை சொல்லலாம். வழக்கமான எழுத்து நடையில் இரண்டே நாளில் படிக்க முடிந்தது. சுவாரஸ்யமான இந்த கதையில் 'காதர்' என் சிறுவனின் முடிவு மனதை வாட்டும். அதுவே கதையின் முடிவுக்கு காரணமாக அமைந்தது, 'வைரங்கள்' நாவலின் சிறப்பு.

புத்தகங்கள்
9.7.2011-ல் காலையில் தொடங்கி இரவுக்குள் படித்து முடித்த புத்தகம் சுஜாதாவின் 'ஆதலினால் காதல் செய்வீர்'.

சிறிய இடைவேளிக்குப் பிறகு படித்த சுஜாதாவின்ன் நாவல் இது. வழக்கம் போலவே சுஜாதாவின் மின்னல் நடையையும் இளமை துள்ளலையும் ரசித்தேன்.

இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1984-ல் வெளிவந்தது.
ஜேமோ இந்த கதையின் நாயகன். அவனுடன் இருக்கும் முன்று நண்பர்களும் கொஞ்சம் மாறுபட்டவர்கள். இந்த கூட்டத்தில் ஏற்படும் பிரச்சனை;அதன் சமாளிப்பு என மேலும் மேலும் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் எழுதியிருக்கின்றார் சுஜாதா.

புத்தகங்கள்
25.6.2011 -ல் வாங்கிய புத்தகங்கள்.

1. எப்போதுமிருக்கும் கதை

- எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்கள் இவை.

- மொத்தம் 10 வெவ்வேறு சூழலில் எடுக்கப்பட்ட நேர்காணல்களின் தொகுப்பு.

2.இலைகளை வியக்கும் மரம்

- எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 20 கட்டுரைகளின் தொகுப்பு இவை.


சுஜாதாவின் புத்தகங்கள் இவரை எனக்கு அடையாளம் காட்டியது. இவரின் எழுத்துகள் எனக்குள் செய்யும் மாற்றங்களை உணரமுடிகின்றது.

புத்தகங்கள்
21.6.2011 - ல் வாங்கிய புத்தகம்.

-சிறந்த சீனத்துச் சிறுகதைகள்.புத்தகங்கள்

- தமிழாக்கம் கோ.பரமேஸ்வரன்.

- 10 மொழிப்பெயர்ப்புக் கதைகள் உள்ளன

புத்தக்காதலிகள்
20.6.2011 -ல் வாங்கிய புத்தகங்கள்.
1.கண்ணதாசனின் அலைகள்

- கண்ணதாசன் பல சமயங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

- கண்ணதாசனின் புத்தகங்களை படிக்காமல் இருந்திருந்தால், என் இந்த நிலைக்கு சாத்தியமே இருந்திருக்காது.

2.கோபிநாத்- நேர் நேர் தேமா

- அவர் சந்தித்த 20 முக்கியமானவர்கள் பேட்டியின் தொகுப்பு.

- இதில் பலதரபட்ட நபர்களின் பேட்டி இடம்பெற்றுள்ளது.

- ஊடகத்துறையைப் பொருத்தவராக இவரைத்தான் மனம் முன்னோடியாகக் கொண்டுள்ளது.

புத்தகங்கள்


28.5.2011-ல் வாங்கிய புத்தகங்கள்..........புத்தகக்காதலிகள்
எப்போதும் எனக்கு பிடித்த கண்ணதாசனின் அனுபவ மொழிகள்.

சோம.வள்ளியப்பன் எழுதிய புத்தகங்கள்
1- பணம் பண்ணலாம், பணம் பணம்!
2- தொட்டதெல்லாம் பொன்னாகும்
இரண்டும் பண நிர்வாகம் குறித்த புத்தகங்கள்.

புத்தகங்கள்

6.6.2011 -ல் வாங்கிய புத்தகங்கள்....

1. ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்
-தலைவர் சுஜாதா


2. ஆதலினால் காதல் செய்வீர்

3. எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்.
- 2005 வரையிலான கதைகள்.

- மொத்தம் 90 கதைகள்

4. பாமா விஜயம்.
- கே.பாலசந்தர் இயக்கிய பாமா விஜயம் திரைப்படத்தின்; திரைக்கதை-வசனம் அடங்கிய புத்தகம்

புத்தகக்காதலிகள்

10.5.2011-ல் வாங்கிய புத்தகங்கள்.

1. ஆனந்த விகடனின் காலப் பெட்டகம்.
-1926முதல்2000வரை விகடனில் வெளிவந்த மிகமிக முக்கிய தகவல்களின் தொகுப்பு.

2. உலகப்பெரும் அதிசயங்கள்.
- மோகன ரூபன் எழுதிய புத்தகம் இது.
- இவ்விலகில் இன்னும் பதில் தெரியாத வினோதங்களை தொகுத்து எழுதுயிருக்கின்றார்

புத்தகக்காதலிகள்1.5.2011 இன்றைய தினத்தை அண்ணன்கள் ம.நவின் .பாலமுருகன் கேசவன் , சிவா பெரியண்ணன் - உடன் செலவு செய்ததில் மகிழ்ச்சி.

இலக்கியம் குறித்தும் நான் இயங்க வேண்டியது குறித்தும் உங்கள் மூவரின் உரையாடல் மூலம் அறிந்துக்கொண்டேன். நவின் மூலம் மலேசிய நாட்டின் கவனிக்க வேண்டிய முத்தம்மாள் பழனிசாமி குறித்து தெரிந்துக் கொண்டேன். அதோடு பேரரசிரியர் அரசு குறித்து தெரிந்துக் கொண்டேன்.

(விரைவில் நடைபெறவிருக்கும் வல்லினம் கலை இலக்கிய விழாவில் முத்தம்மாள் பழனிசாமி குறித்தும் அவரது தன்வரலாற்று நாவல் ; மலேசிய நாட்டுபுற பாடல்கள் குறித்தும் தெரிந்துக் கொள்ளலாம்)

இவ்வேளையில் முகுந்த் நாகராஜன் கவிதை தொகுப்பையும் ; சாருவின் 'தேகம்' நாவலை (இரவல்) கொடுத்து அண்ணன் நவினுக்கு நன்றி...............

புத்தகக்காதலிகள்


2&3-4-2011ல் பினாங்கு பீசா அரங்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். அங்கே வாங்கிய புத்தகங்கள்.

1.ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவியின் பொன்மொழிகள்.
-என்னை வழிநடத்தும் வார்த்தைச் சேர்ப்புகள்.

2.கலீல் ஜிப்ரான் ஞானமொழிகள்
- வழக்கம் போல் கலீல் ஜிப்ரானின் மொழிபெயர்ப்புகள்.

3.பன்முகப் பார்வையில் புதுமைப்பித்தன்
- இதுவரையில் சிறுகதை வழியே அறிந்த புதுமைப்பித்தனின் பன்முகத்தை இதன் வழி அறியமுடிந்தது. அதிலும் குறிப்பாக புதுமைப்பித்தனின் கவிதைகள் குறித்தும் அறிய முடிந்தது.

4. ரொமான்ஸ் ரகசியங்கள்
- ஆனந்த விகடனில் வெளிவந்திருந்த தொடர். காதலன் காதலி முதல் கணவன் மனைவி வரை இதில் அடங்கியுள்ளதால் வாங்கினேன்.

5. கோபிநாத் எழுதிய நீடும் நானும்
- இதுவும் விகடனின் வெளிவந்து என்னை மிகவும் கவர்ந்த தொடர். விஜய் தொலைக்காட்சி அறிவிப்பாளரான கோபிநாத் எழுதிய 'பிளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதிங்க' என்ற புத்தகம் வாங்கியதே இவரின் 'நீயும் நானும்' தொடர் வாசித்த பிறகுதான்.

புத்தகக்காதலிகள்

17.3.2011-ல் வாங்கியவை.

1. முறிந்த சிறகுகள்


2 . தீர்க்கதரசி


3. ஞானிகளின் தோட்டம்


4. மணலும் நுரையும்

நான்கும் கலீல் ஜிப்ரானின் மொழிபெயர்ப்புகள். சமீபத்திய என் வாசிப்பில் வந்திருக்கும் கலீல் ஜிப்ரானின் எழுத்துகள் நிச்சயம் ஆச்சர்யமூட்டும். நானும் அச்சர்யப்பட்டுதான் இதனை எழுதுகின்றேன்.

இப்படிக்கு;
தயாஜி.............

புத்தகக்காதலிகள்

15-3-2011 இன்று வாங்கிய புத்தகங்கள் (சம்பளம் வந்தாச்சி....!! :)

சமீபத்தில் படித்த 'கலில் ஜிப்ரான்' புத்தகமான 'மணலும் நுரையும் ' என்ற புத்தகத்தால் இவர்பால் ஈர்க்கப்படுள்ளேன்.ஆதலால் இவரின் - பைத்தியக்காரன் - என்ற ஆங்கிலத்தில் வெளிவந்த இவரது முதல் புத்தகத்தின் மொழிபெயர்ப்பை வாங்கியுள்ளேன். இந்த பைத்தியக்காரன் என் பைத்தியத்தை தீர்ப்பான இல்லை...மேலும் பைத்தியம் ஆக்குவானா என பொருத்திருந்து பார்க்கின்றேன்...

அடுத்த புத்தகம் "டிரகுலா" ப்ராம் ஸ்டோக்கர் எழுதிய புத்தம்.மொத்தம் 336 பக்கங்கள். தமிழில் புவியரசு. 1897-ல் புத்தகமாக வெளிவந்தது. ஆம்...சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு இன்று பல மொழிகளில் மொழிபெயர்த்திருக்கின்றார்கள். வெளிவந்த நாளில் இருந்து இன்று வரை உலகை குலுக்கிக் கொண்டிருக்கும் இந்த பயங்கர நாவல்...குலை நடுங்க வைக்கும் நிகழ்ச்சிகள் கொண்டது. பல டிரகுல கதைகளும் நாவல்களும் திரைப்படங்களும் வந்திருந்தாலும் இந்த புத்தகம்தான் அனைத்திர்கும் முன்னோடி என சொல்லப்படுகின்றது.

படித்ததும் வாய்ப்பிருந்தால் பகிர்கின்றேன்.... புத்தகக்காதலிகள்
இப்படிக்கு;
தயாஜி.......

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்