பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 14, 2025

- 14 பிப்ரவரி 2025 -


527 ஆண்டுகள் ஆகிவிட்டன

இன்னொரு மீரா

பிறக்கவேயில்லை


கண்ணனை காதலனாய்

ஆவாகனம் செய்ய

இன்று

ஆட்களே இல்லை


உச்சபட்ச உரிமையில்

கண்ணனை தன்னிடம்

அழைக்கவும்

தன் மார்போடு அணைக்கவும்

உரிமைகள் மறுக்கப்பட்டன


கோவர்த்தன மலை

அடிவாரத்தில்

கோவர்தனன் தனிமையில் 

தள்ளப்பட்டுவிட்டான்


கடவுளை தொடாதே

தொழு 

கடவுளிடம் நெருங்காதே

தள்ளி நில்

கடவுளை காதலிக்காதே

வணங்கு

என்கிறார்கள்


நூற்றாண்டுகள் கடந்த

காதல் தோல்வியில்

கிருஷ்ணனும்

தன் லீலைகளை

மறந்தேவிட்டான்


மனிதர்களிடமிருந்தும் விலகிவிட்டான்


கடவுளை காதலிப்பது

பெரும்பாவமாக பாவித்து

கொலை செய்யும்

மூடர்களால்

கடவுளும் காதலும்

பிளவுபட்டார்கள்


காதல் மணம் வீச

காதலி தூவும் மலர் மழையில்

கண்ணனின் கன்னத்தில்

வெட்கம் பூத்து 

அவன் இமைகள் இசைப்பதை

அவன் கண்கள் வசீகரிப்பதை

அவன் உதடுகள் சிலிர்ப்பதை

இனியெப்போதும் பார்க்க முடியாது


காதலிகளே உங்களுக்கு

சொல்ல 

ஒரே ஓர்

ஆறுதல்தான் இருக்கிறது  

எங்களிடம்


கடவுளைக்

காதலித்து கரைந்ததாய்

வரலாற்றில்  எங்களுக்கு இடமில்லை


ஆண்களுக்கு அது

ஒருபோதும் அனுமதிக்கப்படவேயில்லை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்