பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 09, 2026

- இளம் எழுத்தாளர்களின் கொண்டாட்டம் -

-இளம் எழுத்தாளர்களின் கொண்டாட்டம்-


ஐபாட்டி அமைப்பின் புத்தக வெளியீட்டு விழா & மரபு நாள் கொண்டாட்டத்திற்கு  சென்றிருந்தேன். சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருந்தார்கள். 

இவ்விழா ஜூன் ஆறாம் நாள் பிரிக்பீல்ட்ஸ் கந்தையா மண்டபத்தில் நடைபெற்றது. மூன்று முக்கிய அம்சங்கங்களை இவ்விழா கொண்டிருந்தது. முதலாவதாக சொற்கற்கள் போட்டி. அடுத்ததாக மண் பானை உருவாக்கம். மூன்றாவதாக இளம் எழுத்தாளர்களின் புத்தக வெளியீடு. நான் மூன்றாவது அங்கத்திற்கு சிறப்பு விழுந்தினராக சென்றிருந்தேன்.

காலை எட்டு மணி தொடங்கி மதியம் 2மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியை சங்கீதா சந்திரகுமாரன் இந்நிகழ்ச்சியின் இயக்குனராகவும், திரு.மனோஷ் இராமா (ஐபாட்டி இயக்குனர்) துணை இயக்குனராகவும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்களோடு ஐபாட்டி அமைப்பினரும் நண்பர்களும் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு பலமூட்டினார்கள். 
மலேசியாவில் தமிழில் முதன் முறையாக   தேசிய அளவிலான ‘சொற்கற்கள்’ போட்டியை இவர்கள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஐப்பாட்டி அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களில் எட்டு இடைநிலைப்பள்ளி மாணவர்களின் கதை புத்தகங்கள் வெளியீடு கண்டன.

அந்த எட்டு மாணவர்களின் கதை புத்தகங்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்து நற்சான்றிதழ்களை வழங்கினேன். பின்னர் சிறப்புரையாற்றினேன்.

எட்டு கதை புத்தகங்களையும் முன்னமே வாசித்திருந்ததால் என்னுடைய உரையில் அந்த எட்டு கதைகளிலும் இருக்கக்கூடிய முக்கியமானவற்றை பகிர்ந்து கொண்டதோடு இளம் எழுத்தாளர்களுக்கு இம்மாதிரி அமைப்புகள் கொடுக்கும் உற்சாகத்தையும் பெற்றோர்களிடம் இருந்து  ஆதரவும் அவசியம் என்பதையும் பேசினேன்.

ஐபாட்டி அமைப்பினர் முதன் முறையாக ஏற்பாடு செய்திருந்த இந்த ‘இளம் எழுத்தாளர் புத்தக வெளியீட்டு விழா & மரபு நாள்’ கொண்டாட்டத்தில் நானுமே ஓர் எழுத்தாளராக கலந்து கொண்டதிலும் இளம் எழுத்தாளர்களைச் சந்தித்து பேசியதிலும் மகிழ்ச்சி. இம்மாதிரியான நிகழ்ச்சிகள்  தொடர்ந்து ஒரு விழா போல கொண்டாடப்படவேண்டும் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.

இளம் தலைமுறையினரை வாசிக்க வைக்கவும் எழுத வைக்கவும் நம்மால் இயன்றதை செய்வது நமது கடமைகளின் ஒன்றுதானே.


எட்டு கதைகளைக் குறித்து சொல்லாமல் போனால் எப்படி? 

1. நான் உயர்ந்தவன், என்ற கதையை லாவண்யா சதிஷ் குமார் எழுதியிருந்தார். எப்படியாவது முன்னேறி தன் குடும்பத்தைக் காப்பாற்ற நினைக்கும் மாணவனின் கதை. கல்வியும் தொழிலும் நிச்சயம் உதவும் என சொல்லும் கதை.

2. பெண்களின் வெற்றி, என்ற கதையை மோனிகா ரவி எழுதியிருந்தார். வீனை வாசிக்க ஆசைப்படும் நாயகி நண்பர்களால் கேலி செய்யப்படுகின்றாள். மனம் உடைந்த மாணவி தனது விடாமுயற்சியால் எப்படி சாதனை பெண்ணாக மாறுகின்றாள் என்பதுதான் கதை.

3. ரோபோட் உலகம், என்ற கதையை மீனாள் முத்தையா எழுதியிருந்தார். நான் இரசித்த கதைகளில் இதுவும் ஒன்று. நமக்காக வேலை செய்து கொண்டிருந்த இயந்திரங்கள் ஒரு மனிதர்களை வேலை வாங்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்ற கதை மாணவனின் பார்வையில் இருந்து சொல்லப்பட்டிருக்கும்.

4. இருட்டில் ஒரு நட்சத்திரம், யாஷினி ஏண் டிக்சன் என்பவர் எழுதியிருந்தார். விரக்தியில் இருக்கும் மின்மினி மூச்சி தவளையைக் காப்பாற்றி தனது விரக்தியை விரட்டும் கதை.
5. ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கைக் கதை, என்ற கதையை பரமேஸ்வரி மோகன் எழுதியிருந்தார். தந்தையின் மரணத்தில் மனம் சோர்ந்த மாணவி தனது ஆசிரியை மூலமும் பாட்டி மூலமும் தேர்வில் வெற்றி பெறும் கதை.

6. சிங்கமும் தந்திர நரியும், என்ற கதையை நர்மதா லிங்கமுத்து எழுதியிருந்தான். சிறு வயதில் நாம் வாசித்த சிங்கத்தை ஏமாற்று காட்டுக்கு இராஜாவாக மாறும் நரியின் கதைதான். இதன் சுவாரஸ்யமே அந்தச் சிங்கத்திற்கு ஒரு தம்பி இருப்பதும் அதனால் அடுத்து நடப்பதும்தான்.

7. புகழனின் இணைப்பிரபஞ்சம், என்ற கதையை மோவ்பானி ஶ்ரீ சௌமங்கலி  என்பவர் எழுதியிருந்தார். என்னை ஆச்சர்யப்படுத்திய கதை இது. பூமியில் இருந்து இன்னொரு பிரபஞ்சத்தில் சிக்கி கொள்ளும் மாணவனின் கதை. சில பக்கங்கள்தான் என்றாலும் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கும். இதனையே வளர்தெடுத்து சிறுகதையாகவும் மாற்றலாம்.

8. மர்மமான இரவு, என்ற கதையை யாளினி ஏண்ணா டிக்சன் எழுதியிருந்தார். இதுவும் எனக்கு பிடித்தமான கதைதான். இக்கதை நமக்கு பழக்கமான கதைதான். இறந்தவரே வீட்டுக்கு வந்து தான் இறந்த செய்தியைச் சொல்கிறார். அதன் பின் நடந்தது என்ன என்பதை பயம் காட்டும்படி எழுதியிருப்பார்.

இளம் எழுத்தாளர்கள் குறிப்பாக இவர்கள் அனைவருமே மாணவர்கள் என்பதால்  அவர்களின் இந்த   முதல் முயற்சிக்கு உற்சாகம் கொடுக்கும்படியும் அவர்களுள் இருக்கும் எழுத்தாளர்களை அவர்கள் தீவிரமாக தேட வேண்டும் என்பதற்காகவும் இவ்வொரு கதையில் இருந்து விமர்சனமாக அள்ளாமல் என் வாசிப்பை மட்டுமே எழுதியுள்ளேன்.

இந்த முதல் எழுத்து அவர்களில் யார்யாரின் எழுத்து வாழ்விற்கு பிள்ளையார் சுழியாக அமைந்திருக்கின்றது என்பதை நாமும் காலத்தோடு இணைந்து பொறுமையாய்க் காத்திருந்து பார்க்கலாம்.

ஐபாட்டி அமைப்பினர்க்கும் இளம் எழுத்தாளர்களுக்கும் இதுவரை வாசித்த அனைவருக்குமான எனது அன்பு.

- தயாஜி

ஜூன் 08, 2026

வாசிப்பில்


வாசிப்பில் 'கள்ளிப்பழத்தால் தொய்யில் எழுதுவேன்'. மௌனன் யாத்ரிகாவின் கவிதைகள்.

கவிஞரின் முந்தைய கவிதைத் தொகுப்புகளில் 'வேட்டுவம் நூறு' மற்றும் 'ஊர்க்காரி ஒருத்தியின் காதல்' போன்ற இரு தொகுப்புகளை வாசித்துள்ளேன்.

குறிப்பாக 'வேட்டுவம் நூறு' தொகுப்பு குறித்த வாசிப்பு அனுபவத்தை எனது வலைப்பூவில் எழுதியுள்ளேன். 'ஊர்க்காரி ஒருத்தியின் காதல்' தொகுப்பு குறித்து எழுதுவதற்கு முன்பாக இந்தத் தொகுப்பு வாசிக்க வந்துவிட்டது.

போதுவாகவே கவிதை வாசிப்பதில் கவிதையை வாசிப்பதும் கவிதையால் வாசிக்கப்படுவதும் ஓர் மையப்புள்ளியில் அமைந்துவிடும்.
எனக்கு அப்படி அமைக்கும் கவிதைளை மௌனன் யாத்ரிகா எப்போதும் கொடுத்துகொண்டே இருக்கின்றார். அதுவே அந்தக் கவிஞரை தவறாது வாசிக்க வைக்கிறது.


👉புத்தகவாசிப்பு_2021 ‘வேட்டுவம் நூறு’ ~ தயாஜி வெள்ளைரோஜா https://share.google/7oihdVSkmb362D4Bl

ஜூன் 04, 2026

வாசிப்பில்


எப்பவோ
மரித்திருக்க வேண்டிய உடல்.
இன்னும் என்னுடன்
இழுபட்டுக்கொண்டே
பயணிக்கிறது......
(கவிஞர் தில்லையின் புறத்தலைதல் கவிதையில் இருந்து)


வாசிப்பது ஈழத்து எழுத்தாளரும் கவிஞருமான தில்லையின் 'விடாய்' கவிதைகள். தாயைத்தின்னி நாவல் மூலம் அதிகம் அறியப்பட்டவர். நானும் அந்த நாவலின் வழிதான் அறிந்து கொண்டேன்.

அதன் பின்னர் தனித்தனியாக அவரது கவிதைகளை வாசிக்க தொடங்கினேன். இப்போது அவரது கவிதைத் தொகுப்பை வாசிக்கவுள்ளேன். ஒரு கவிஞரின் கவிதைகளைத் தனித்தனியாக வாசிப்பதும் புத்தகமாக வாசிப்பதும் தனித்தனி அனுபவங்களைக் கொடுக்கக்கூடியவை.

புத்தகமாக கவிதைகளை வாசிக்கும் போது அந்தக் கவிதைகளுள் இன்னும் ஆழமாகவும் நேரமெடுத்தும் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த ஆண்டு இவரது தாயைத்தின்னி நாவலைத்தான் முதலில் வாசிக்க திட்டமிட்டிருந்தேன். அதற்குள் கவிதைகள் முந்திகொண்டன.

வாசிப்பில் எது நம்மை அழைக்கும் எது எதோடு நம்மை இணைக்கும் என்பதையெல்லாம் யாரால் எப்படி யூகிக்க முடியும்; சொல்லுங்கள்.



ஜூன் 03, 2026

மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் - 6



இம்மாத நடுகல்.காமில் நான் எழுதிய 'மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் - தொடர் 6-ல்', 
கவிஞர் 
மதிக்குமார் தாயுமானவனின் 'யாமக்கோடங்கி' கவிதைத் தொகுப்பு குறித்து எழுதியுள்ளேன்.
இது கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பு.

வாசிப்பதையும் எழுதுவதுவதையும் நாம் மனதார  செய்யும் போது, அது பல எல்லைகளைக் கடந்து செல்லும் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன்....

இந்தத் தொடரை எழுத வாய்ப்பு கொடுத்த நடுகல்.காம் இணைய இதழின் ஆசிரியர் வா.மு.கோமுவிற்கும் ஆசிரியர் குழுவிற்கும் என் அன்பும் நன்றியும்...


என் எழுத்துகளை வாசித்தும் அதுபற்றிய உரையாடலையும் தொடங்கும் அனைவருக்கும் எப்போதுக்குமான என் அன்பு.
கட்டுரைகளின் இணைப்பு முதன் மறுமொழியில் உள்ளது. நீங்களும் வாசித்து சொல்லுங்களேன்....

அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜுன் மாத நாவல் வாசிப்பில்..


ஜூன் மாத நாவல் வாசிப்பு திட்டத்தில் அசோகமித்திரனின் 'தண்ணீர்'....

கடந்த ஐந்து மாதங்களில் வாசித்த புத்தகங்களை அதற்குரிய இடத்தில் அடுக்கிவிட்டேன். ஜூன் மாதம் முடிந்ததும் அதுவரை வாசித்தவற்றை பகிர்வேன்.

ஜூன் மாதத்திற்கான புத்தகங்களை வழக்கம் போல எனது வாசிப்பு மேஜையில் அடுக்கி கொண்டிருக்கிறேன். எப்போதும் போல  நாவல், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என ஒவ்வொரு வகையிலும்  ஒரு புத்தகம் என எடுத்து வைத்தாகிவிட்டது.

வாசிப்பதற்கான நேரத்தையும் அதற்கான மனநிலையும் எந்தக் குறையுமின்றி கிடைக்க வேண்டும்.

வாசிப்பை திட்டமிடுவது வாழ்க்கையை நடத்த உதவுகிறது.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூன் 02, 2026

மாதம் ஒரு மலேசிய புத்தகம் - 18

இம்மாத நடுகல்.காமில் நான் எழுதிய 'மாதம் ஒரு மலேசிய புத்தகம் - தொடர் 18-ல்' கவிஞர் மகேந்திரன் நவமணியின் 'மழை நின்ற வீதி' ஹைக்கூ தொகுப்பு குறித்து எழுதியுள்ளேன்.

வாசிப்பதையும் எழுதுவதுவதையும் நாம் மனதார செய்யும் போது, அது பல எல்லைகளைக் கடந்து செல்லும் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன்....


இந்தத் தொடரை எழுத வாய்ப்பு கொடுத்த நடுகல்.காம் இணைய இதழின் ஆசிரியர் வா.மு.கோமுவிற்கும் ஆசிரியர் குழுவிற்கும் என் அன்பும் நன்றியும்...


என் எழுத்துகளை வாசித்தும் அதுபற்றிய உரையாடலையும் தொடங்கும் அனைவருக்கும் எப்போதுக்குமான என் அன்பு.
கட்டுரைகளின் இணைப்பு முதன் மறுமொழியில் உள்ளது. நீங்களும் வாசித்து சொல்லுங்களேன்....

அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மாதம் ஒரு மலேசிய புத்தகம் – தொடர் 18 - Nadukal https://share.google/4h6FdJxoHFJeZlSy6

மே 31, 2026

- புத்தகச்சிறகுகள் - தொடர் 13


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 13' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில்  ரெ.கார்த்திகேசுவின் 'அந்திம காலம்' நாவல் குறித்து எழுதியுள்ளேன்.

எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.
வாசிப்போம்.. நேசிப்போம்..வளர்வோம்..

அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மே 27, 2026

- கவிதையைச் சுமப்பவர்கள் -


மூடாத
ஜன்னல் ஓரத்தில்
அமர்ந்தபடி
கவிதை எழுதுகிறவன் நான்

என் வீட்டில்
எழுதுவதற்கென
கொடுக்கப்பட்ட மாளிகைவாசல்
அதுதான்

சாலையோர மனிதர்களில்
ஒருசிலரையாவது
எனக்கு
கொஞ்சம் தெரியும்

கவிதை வராத நாட்களில்
போவோர் வருவோர்
முகங்களில்
ஏதாவது தட்டுப்படுகிறதா என
பார்ப்பதுதான்
என்
பொழுது போக்கு

எழுதி முடித்த கவிதைகளின்
கடைசி வரிகளை
அழித்துவிடுகிறேன்
அவற்றை
காற்றில் பறக்கவிடுகிறேன்

ஜன்னலின் வழி
அவை
பறந்திறங்கும் போது
பறவைகளில் நிழலைப்
போலிருக்கும்

விலாசமற்ற வாசலைத் தேடி
கண்டடையும்
தபால்காரன் போல

கடைசி வரிக்கு
ஏற்ற யாரோ ஒருவரை
அந்தக் கவிதைகள்
தேடி தவழ்கின்றன

என் கவிதைக்கான
கடைசி வரியை
நீண்ட காலமாக
சுமந்தபடி வாழும்
யாரோ ஒருவர்
இந்த வழியே
எப்போதாவது
வராமலா போய்விடுவார்...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மே 26, 2026

வாசிப்பில்


- பாவ மன்னிப்பு -
கோவிலுக்குள்
அனுமதி மறுக்கப்பட்டவனின்
காலில் வந்து விழுகிறது
கோபுர நிழல்
- மதிக்குமார் தாயுமானவன்.

வாசிப்பில் மதிக்குமார் தாயுமானவனின் 'யாமக்கோடங்கி'.
இந்தக் கவிதைகள் கொடுக்கும் அனுபவத்தை விரிவாகவே எழுதுகிறேன்.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மே 25, 2026

- வலி வேதனை தெரியா வயது -


- வலி வேதனை தெரியா வயது -

அண்ணன், கவிஞர் சிவா சுங்கைப்பட்டாணியையும் அவரது வாரிசையும் சந்தித்தேன். நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையில் அவருக்கான புத்தகங்களை
வாங்குவதற்காக வந்திருந்தார். 

நண்பர்களை வழக்கமாகச் சந்திக்கும் உணவகத்தில் சந்தித்தோம். காலை உணவின் ஊடே வழக்கம் போல இலக்கியம் குறித்தும் அடுத்த என்ன என்பது குறித்தும் எங்கள் உரையாடல் இருந்தது.

விரைவிலேயே கவிஞர் நா.முத்துக்குமார் குறித்த நிகழ்ச்சியொன்று நடக்கவுள்ளதையும் அதில் அவர் பேசவுள்ளதையும் கொஞ்சம் பகிர்ந்து கொண்டார்.

அந்தக் கொஞ்சமே இரசிக்கும்படி இருந்தது. வாய்ப்பிருந்தால் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும்.

கூடவே நா.முத்துக்குமாரின் கவிதைகள் குறித்தும் பேசினோம். அந்த இடத்தில் என்னால் கவிஞர் கார்த்திக் நேத்தாவை வைக்க முடிகிறது என்றேன். அவரும் தலையசைத்தார். 

கோலாலும்பூருக்கு நான் வருவதற்கு முந்தைய காலக்கட்டத்தில்   அந்தப் பதின்ம வயதில் நான் பிரமித்து பார்த்தவர்களின் சிவா அண்ணனும் ஒருவர்.

எங்கள் வாழ்விடத்தில் இருந்து ஒரு இளைஞன் கோலாலும்பூர் பட்டணத்தில் கவனிக்கத்தக்க இடத்தில் இருப்பது அவ்வளவு எளிதல்ல என்பது எங்களுக்கு தெரியும்.

அந்த வயதில் அவரின் தம்பி எழுத்தாளர் மணிராமுவை அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பும் அவரது நட்பும் கிடைத்தது. சொல்லப்போனால் இலக்கிய சர்ச்சைகள் என்னென்ன நடக்கிறது என அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது. எதையும் சுவாரஸ்யமாகவே சொல்லுவார். அவரின் நட்பும் ஒருவகையில் எனக்கு பல அனுபவங்களுக்கு வழிகாட்டியது. வெளியில் இருந்து வரும் பூசல்களால் பெரிதாக பாதிக்கப்படாத நட்புகளில் இவரது நட்பும் ஒன்று.

இன்றைய சந்திப்பில் அண்ணன் சிவாவுடன் பேசுவது உற்சாகத்தைக் கொடுத்தது. சமீபத்தில் வாசித்த சிறுகதைகள் குறித்தும் பேசினார். நல்ல வேளையாக நானும் அந்தச் சிறுகதைகளை வாசித்திருந்தேன். எங்களின் உரையாடல் அப்படியே சிறுகதைப் பக்கமும் நுழைந்தது.

அவர் பேச்சில் இருக்கும் உற்சாகம் என் காலைப் பொழுதை மேலும் உற்சாகமாக்கியது. இன்றும் கூட நான் அவரை பிரமிப்பாகத்தான் பார்த்து கொண்டிருக்கிறேன். அவரைப் பார்க்கும் போதெல்லாம் மீண்டும் நான் என் பதின்ப வயதிற்கு சென்றுவிடுகிறேன்.

வலியும் வேதனையும் என்னவென்று முழுதாய்த் தெரியாத/ புரியாத வயதாயிற்றே அது....

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

- கடவுளின் கரங்களில் ஒன்று -

- கடவுளின் கரங்களில் ஒன்று -

வல்லினம் ஏற்பாடு செய்திருந்த 'முதல் எழுத்து இலக்கிய விழாவிற்கு' சென்றிருந்தேன்.

சமீபத்தில் நடந்த குறுநாவல் போட்டியின் வெற்றியாளர்கள் நால்வருக்கு பரிசுகள் கிடைத்தன. கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தியின் 'அப்சரா' புத்தகம் வெளியீடு கண்டது. தேர்ந்தெடுத்த மலேசிய சிறுகதைகளை வாசிப்பதற்கான அகப்பக்கமும் இன்று வெளியீடு கண்டது. அதோடு காமன் ரதி விழாவின் ஆவணப்படத்தின் பதினைந்து நிமிட காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரைகளை வல்லினம் இணைய பக்கத்தில் வாசித்திருக்கின்றேன். பிடித்திருந்தது. தனித்தனியாக வாசித்ததௌ  இன்று தொகுப்பாக பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.


தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் சு.வேணுகோபால் இன்றைய நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளர்களில் ஒருவராக வந்திருந்தார்.

எனக்கு அவரது பேச்சும் எழுத்தும் பிடிக்கும். இரண்டாவது முறையாக அவரை இன்று சந்தித்தேன். முதன்முறையாக தமிழகத்தில் நடந்த விஷ்ணுபுரம் விருது விழாவில் அவரை சந்தித்தேன். அன்றைய சந்திப்பில் அதிகம் பேசுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. அன்று அவர் சந்தித்த பல வாசகர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

ஆனால் இன்றைய இரண்டாவது சந்திப்பு அப்படியாக இருக்கவில்லை. நான் என் பெயரைச் சொன்னதுந் அவருக்கு தெரிந்திருந்தது.

2021-ஆம் ஆண்டு சு.வேணுகோபால் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' என்கிற விமர்சன கட்டுரைத் தொகுப்பைக் குறித்து கட்டுரைகள் எழுதியிருந்தேன்.

குறிப்பாக பதிமூன்று இலக்கிய ஆளுமைகளின் கட்டுரைகள் அடங்கிய அந்தப் புத்தகத்தில் இருந்து ஒவ்வொரு கட்டுரையை வாசித்து முடிக்கும் போது என் வாசிப்பு அனுபவத்தை கட்டுரையாக எழுதினேன். நான் எழுதிய அந்தப் பதிமூன்று கட்டுரைகளும் எனது வலைப்பூவிலும் முகநூலிலும் பகிரப்பட்டது.

அதோடு பலரின் வாசிப்பிற்கும் சென்றது. பலர் அந்தக் கட்டுரையை வாசித்தப்பின் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்படி பேசிய பலருக்கும் அந்தப் புத்தகத்தை பரிந்துரை செய்தேன்.

அதோடு எங்களின் 'புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை' மூலம் குறைந்த விலையில் அந்தப் புத்தகத்தை விற்பனைக்கும் கொண்டு வந்தோம்.


இன்றளவும் நான் எழுதும் இரசனை விமர்சனக் கட்டுரைகளுக்கும் சு.வேணுகோபாலின் 'தமிழ்ச் சிறுகதையில் பெருவெளி' புத்தகமும் துணையாக இருக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய கட்டுரையின் மூலம் எனக்கு பிடித்த எழுத்தாளருக்கு என் பெயர் பரிச்சயம் ஆகியிருக்கிறது என்பதை நினைக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.


என் வீட்டு நூலகத்தில் அவரின் பெரும்பாலான புத்தகங்கள் இருக்கின்றன. சமீபத்தில் வெளிவந்த 'பனங்காய் மயிலை' என்னும் இரு குறுநாவல் தொகுப்பில் அவரிடம் கையொப்பம் வாங்கினேன். அதே போல இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எனது இரு குறுங்கதைகள் தொகுப்பை அவரிடம் வாசிக்க கொடுத்தேன். என்றாவது ஒருநாள் அவரிடம் இருந்து ஏதாவதொரு சொல் என்னை நோக்கி வருமென்ற நம்பிக்கையோடு அவருக்கு கைகொடுதேன்.

இன்றைய உரையில் அவர், இலக்கியத்தில் இயங்கும்  எழுத்தாளர்களிடம் இருக்கும் 'கடவுளின் கையைக்' குறித்து பேசியிருந்தார். நானும் அந்த கடவுளின் கைகளில் ஒன்றைத் தொட்டு பார்த்த திருப்தியுடன்
திரும்பினேன்.

இலக்கியத்தில் ஆர்வம் உள்ள பல நண்பர்களை வழக்கம் போலவே இன்றும் சந்தித்தேன்.  சுவாமிஜி, டாக்டர் சண்முகசிவா போன்றோர் தவறாது எனது உடல்நிலையைக் குறித்து விசாரித்தார்கள்.
டாக்டர் சண்முகசிவா அவரது புதிய புத்தகமான  'அன்பேற்றுதல்' என்னும் கட்டுரைத் தொகுப்பை  எனக்கு கொடுத்தார்.


இந்தப் புத்தகத்தை அவர் எழுதிய சமயத்தில் என்னுடன் பேசும்போது "தயாஜி... அன்பை நம்மால இன்னொருத்தருக்கு கத்து கொடுக்க முடியுமா ?" என்று கேட்டார்
நான் அதிகம் யோசிக்காது "முடியாது!!!" என்றேன்.

அவர் சிரித்தபடி "ஆனா நம்மால ஒருத்தரை வெறுப்பேற்ற முடியும்தானே தயாஜி??" என்று கேட்கவும் எனக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை.

அதற்குத்தான் தான் ஒரு புத்தகத்தை எழுதுவதாக சொன்னார். இன்று அந்தப் புத்தகத்தை கையில் எடுத்ததும் அன்றைய உரையாடல் நினைவிற்கு வருகிறது.

டாக்டர் சண்முகசிவாவின் 'அன்பேற்றுதல்' புத்தகம் இனி நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையிலும் கிடைக்கும்.

நிகழ்ச்சி முடிந்து புறப்படும்போது மலேசிய எழுத்தாளர்களில் ஒருவரான ஸ்ரீகாந்தனும் நானும் சக எழுத்தாளரான அ.பாண்டியனோடு கொஞ்ச நேரம் செலவழித்தோம்.


இன்றைய நிகழ்ச்சியில் எனது பார்வையிலிருந்து ஒரு சிறு பகிர்வாக இதனை எழுதியிருக்கின்றேன். மற்றபடி இந்நிகழ்ச்சி குறித்தும் அதன் முன்னெடுப்புகள் குறித்தும் ஒவ்வொருவரும் எழுதுவார்கள் என நம்பலாம்.

வல்லினம் குழுவினர்க்கும் அவர்களின் இலக்கிய முன்னெடுப்புகளுக்கும் என் அன்பு.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


மே 20, 2026

- நானற்ற நானாக -

 நாடகத்திற்கு அழைத்திருந்தார்கள். துணை கதாப்பாத்திரமாக நாயகனுடன் சில காட்சிகளில் நடித்தேன்.

மயக்கத்தில் இருக்கும் நாயகனுக்கு மயக்கம் தெளிந்து குழப்பத்தில் ஆவேசமாக கத்த, மருத்துவரான நான் சென்று சமாதானம் செய்யும்படியான முதற்கட்ட படபிடிப்பு நடந்தது. மேற்கொண்டு காட்சிகளை இப்போதைக்கு பகிர முடியாது.


இதற்கு முன் நான் இணைந்து பணி செய்த நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.


படபிடிப்பு அனுபவங்கள் முன்னமே இருந்தாலும் ஒவ்வொரு முறையும் கேமரா முன்  இதுவரை இருந்த நான், இப்போது இன்னொரு ஆளாக நிற்பதில் எப்போதும் ஒரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


மே 18, 2026

அன்பும் நன்றியும்


'40+ என்ற wildcard entry'யோடு மீண்டும் இந்த வாழ்விற்குள் வருகின்றேன். இந்த வாழ்வை ரொம்பவும் நேசிக்கும் ஒரு மனிதனாகவே என்னை உணர்கிறேன். நான் உணர்வதையே எழுதவும் செய்கிறேன். 

பிறந்தநாள் வாழ்த்துகள் பகிர்ந்து கொண்ட தோழமைகளுக்கு என் நன்றியும் அன்பும்...

ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு காரணத்தில்  நாம் அனைவரும் இணைந்தே பயணித்துக் கொண்டிருக்கின்றோம். யார் யாரோடு எதுவரை இப்பயணம் தொடரும் என தெரியவில்லை. பலர் பாதியில் காணாமல் போகிறார்கள். பலர் எப்படியும் என்னை தேடி கண்டடைந்துவிடுகிறார்கள். அந்த மாயம் முழுதாய்ப் புலப்படுவதுமில்லை.

என் மீதான உங்கள் அன்பிற்கு எப்போதும் அன்பு. 
நீங்கள் அனைவரும் என் ஆசீர்வாதமே.
எப்போதும் மகிழ்ந்திருப்போம் 💙

#தயாஜி 
#பொம்மி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை 
#வெள்ளைரோஜா_பதிப்பகம் 
#புத்தகச்சிறகுகள்_வாசிப்பாளர்_குழு

மே 16, 2026

- பசிக்கும் வயிறுகள் -


அறிவிப்பின்றிய மழையில்
முழுதும்
நனைவதற்கு முன்
இறகில் ஈரம் ஏற்றிய
பாரத்தோடு
பசித்த வயிற்றுடன்

எம்பி எம்பி
எப்படியோ பறந்த
பட்டாம்பூச்சியொன்று

சுவரோரம் வந்து
ஈரம் காயவும்
மழை மறையவும்
காத்திருக்கிறது

எங்கிருந்தோ
வீசி வந்த
நாக்கொன்றின் நுனி பட்டு
பல்லியின் வாய்க்குள்
நுழைகிறது

ஈரம் காய
பல்லிக்கும் பொறுமையில்லை
ஈரம் காய
பட்டாம்பூச்சிக்கும் வாய்க்கவில்லை

வாசிப்பில்


" ....இது காதலின் பெருங்களிப்பு. காதல் என்பது விசித்திரமான மரம்தான். தழைத்து நிற்கும் போது தலைகீழாய் விழும். பச்சை மறந்து பட்டுப் போனதென்று நினைக்கும் போது காய்க்கத் தொடங்கும். வெட்டி முறித்தாலும் வெடித்துத் துளிர் விடும்.'
நாவலிலிருந்து......

இன்றைய இரவு கே.ஆர்.மீராவின் 'அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்' நாவலோடு விடியப்போகிறது. சிற்பி பாலசுப்பிரமணியம் இந்நாவலை தமிழாக்கம் செய்திருக்கிறார்.

நான் வாசிக்கும் கே.ஆர்.மீராவின் இரண்டாவது நாவல் இது. இந்நாவலின் முதல் பக்கமே எனக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியையும்  பதட்டத்தையும் அடுத்தடுத்த பக்கங்களில் சரி செய்ய முடியுமா என இன்னும் புலப்படவில்லை.

நாவலில் வரும் நாயகி ராதிகா, அவளைச் சுற்றியும் சுழன்று அவளை வதைக்கும் காதல், காமம், வன்முறை, தனிமை என்னும் பல சிக்கலான உணர்வுகளின் இருந்து அவள் தப்பிப்பாளா அல்லது அவளும் அதனோடு கரைந்துதான் போவாளா என்கிற பதட்டம் எனக்குமே தொற்றிக்கொண்டது....

மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில் மே மாதத்தித்கான ஐந்தாவது நாவல் வாசிப்பு இது.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மே 14, 2026

- சுவாரஸ்யமான திருப்பம் -


சமீபத்தில் இலக்கியவாதி ஒருவரைச் சந்தித்தேன். முன்னமே கொடுத்திருந்த குறுங்கதைகளில் அவர் வாசித்திருந்த சில குறுங்கதைகளைப் பற்றி பேசலானார்.

தனக்கு இப்படி குட்டிகுட்டியாக வாசிப்பது பிடிக்கவில்லை என்றார். கதையைப் புரிந்து கொள்ளும் முன்பே கதை முடிந்துவிடுவதை ஒரு குறையாகவே சொன்னார். எழுத்தாளர்கள் இப்படி எழுத சோம்பல்பட்டு குறைவாக எழுதாமல் இன்னும் விலாவாரியாக எழுதினால்தான் என்ன என்றார்?

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஒரு முறை அவர் வாசித்த சிறுகதைத் தொகுப்பைப் பற்றி சொல்லும்போது, வாசிக்கறவங்களை யோசிக்க விடாம எல்லாத்தையுமே கதையில் சொல்லிடறாங்க. ஒரு வாசகனா எனக்கும் அதில் கொஞ்சம் உழைப்பும் தேடலும் இருக்க வேணாமா. இப்படி எழுத்தாளரே கதையை சொல்லிட்டு போய்ட்டா வாசகனா என்னோட வேலை சும்மா வாசிச்சிட்டு போறதுதானா? சொற்சிக்கனம்தான் கதைகளுக்கு முக்கியம் என்றார்.

சரி இன்னொரு முறை முயற்சிக்கலாமே என்று, உள்நாட்டு எழுத்தாளரின் புத்தகமொன்றை வாசிக்க கொடுத்தேன். 

இதெல்லாம் வேணாம் தம்பி, உள்நாட்டுல என்ன எழுதறாங்க எல்லோரும் ஒரே கதையைத்தான் சுத்தி சுத்தி எழுதறாங்க. அதனால நான் உள்நாட்டு புத்தகங்களை வாசிக்கறதில்ல என்றவர் சட்டென ஏதோ நினைவுக்கு வந்தவராய், "ஏன் தம்பி... இந்த விஜய் முதலமைச்சர் ஆகிட்டாருன்னா இனிமே படம் நடிக்க மாட்டாரா?" என்ற கேட்கவும் எனக்கு புரிந்தது மலேசிய இலக்கியச் சூழலில் பலரும் பாராட்டும் இலக்கியவாதியாக 
நூறு சதவீதம் பொருந்தகூடிய ஒருவராக அவர் மாறிகொண்டிருந்தார்.  

நிச்சயம் ஒருநாள் அவருக்கு விருது கொடுப்பார்கள்; ஊடகங்களில் அவரை பேட்டி எடுப்பார்கள், மலேசிய இலக்கியம் குறித்து பேச மேடை அமைத்து அழைப்பார்கள்  என்பதால் அவர் யார் என்பதை இப்போது நான் சொல்லவில்லை.

பிறகு நீங்களே தெரிந்து கொண்டு ஒரு முடிவுக்கு வாங்களேன். 

அடடே இதுவல்லவா இந்தப் பத்தியில் வந்த திருப்பம். சுவாரஸ்யமாக இருக்கிறதுதானே....

மே 09, 2026

- சமாதானம் செய்வேன் -

பேருந்தில் ஒருத்தி
அழுவதைக் கண்டேன்
இடது பக்க
கன்னத்தில் வழிந்த கண்ணீர்
கழுத்தில் இறங்கி
ஆடைக்குள்ளே மறைகிறது

எந்தத் தடையுமில்லாமல்
நீண்ட நதியாய்
வழியும்
கண்ணீரைக் கண்டதும்
எனக்கும் அழத் தோன்றியது

நான் அப்படித்தானே
யாராவது அழுதால்
நானுமே சேர்ந்து கொள்வேன்
பழகிவிட்டது

அழுவதில் நான்
அந்தப் பெண் போல
தேர்ச்சி பெற்றவன்
அல்ல போலும்

அழ தொடங்கிய
ஐந்தாவது வினாடியில்
மூக்கில் சளி உருவாகிவிடும்
மூக்கை உறிஞ்சியபடியே
அழுவேன்

என்
மூக்குறிஞ்ச சத்தத்தை
அந்தப் பெண்
கண்டுகொண்டாள்

என்னைத் திரும்பி பார்த்து
அவளது கண்ணீரைத்
துடைத்தபடி
"ஒன்னுமில்ல ஒன்னுமில்ல..."
என
மெல்லிய குரலில்
சொல்லியபடி
கொஞ்சமாய்ச் சிரிக்க முயன்றாள்

அழுத கண்கள்
இன்னுமே கலங்கியபடி இருக்க
எனக்காக சிரித்து
என்னை சமாதானம் செய்யும்
அவளை

நான் எப்படி
சமாதானம் செய்வேன்...

மே 03, 2026

புத்தகச்சிறகுகள் - தொடர் 10


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 10' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் வார தொடரில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஆதி.இராஜகுமாரனின் 'ஆதி.இராஜகுமாரன் சிறுகதைகள்' புத்தகத்தை குறித்த வாசிப்பனுபவ கட்டுரையின் இரண்டாம் பகுதி நிறைவடைகிறது.

அடுத்த வாரம் இன்னொரு புத்தகத்தைக் குறித்து எழுதுகிறேன்.

எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.
வாசிப்போம்.. நேசிப்போம்..வளர்வோம்..
அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


- சொல்லி உதவினால் -

இங்கு
யாருக்கு என்ன கவலை
என்று
யாரால் சொல்ல முடியும்?

எது கவலை என
அடையாளம் தெரியாத
அளவிற்கு பழகிவிட்டேன்

யாராவது
சொல்லி உதவினால்

இரண்டில்
எது நானென
கண்டுகொள்வேன்

மே 02, 2026

- கவிதை விமர்சனம் -

நான்
எழுத நினைக்கும்
கவிதைகளை
எனக்கு முன்னமே
எழுதிவிடுகிறீர்கள்

நீங்களாது கொஞ்சம்
புன்னகைத்தபடி வாழக்கூடாதா
என
வருந்துவதைத் தவிர
எனக்கு வேறு
விமர்சனம் இல்லை...

ஏப்ரல் 30, 2026

- புத்தகங்களைப் பின்தொடரும் பயணம் -


நடுகல்.காம் இணைய பக்கத்திற்கு இரு தொடர்களை எழுதி வருகின்றேன். 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' என்ற தொடரில் மலேசிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் குறித்த வாசிப்பனுபவத்தையும், 'மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம்' என்ற தொடரில் சிங்கப்பூர் எழுத்தாளர்களின் புத்தகங்கள் குறித்த வாசிப்பு அனுபவத்தையும் எழுதும் தொடர் அது.

இந்த மே மாதம் வரை 17 மலேசிய புத்தகங்கள் குறித்தும், 5 சிங்கப்பூர் புத்தகங்கள் குறித்தும் எழுதியுள்ளேன். அதோடு மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பிலும் 'புத்தகச்சிறகுகள்' என்ற தலைப்பில் புத்தக அறிமுகத்தினை வாராந்திர தொடராக எழுதுகிறேன்.

இந்தத் தொடர்களின் வழி பல புதியவர்கள் எனக்கு அறிமுகம் ஆகின்றார்கள். பலரும் புத்தக பரிந்துரைகளை செய்கிறார்கள். புத்தக வாசிப்பின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு பிடித்த தொடராக இந்தத் தொடர்கள் அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

புத்தகங்கள் மீதான எனது காதல்தான் 'புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை' எனும் இணைய புத்தகக் கடையையும் பல சிக்கல்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியுடன் என்னை நடத்த வைக்கிறது. என்னை வழிநடத்தியும் செல்கிறது.

இந்தத் தொடர், என்னைப் போலவே புத்தகங்களை நேசிக்கின்றவர்களை எனக்கருகில் கொண்டு வந்து சேர்க்கிறது என்றால் மிகையில்லை.

நான் புத்தக வியாபாரி மட்டுமல்ல புத்தகங்களை நேசிக்கும் ஒருவன் என தெரிந்தவர்கள் எனக்கு நண்பர்களாகவும் நமது புத்தகக்கடைக்கு வாடிக்கையாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போதும் என் அன்பு.

இந்தத் தொடருக்காக சிங்கப்பூரில் இருந்து கவிஞர் பாண்டிதுரை 12 சிங்கை எழுத்தாளர்களின் புத்தகங்களை பெற்றுகொண்டு எனக்கு அனுப்பி வைத்துள்ளார். தனது புத்தகம் பேசினால் போதும் என ஒதுக்கி இல்லாமால் தனது நண்பர்களின் புத்தகங்களும் பேசப்படவேண்டும் என சிரத்தை எடுத்து புத்தகங்களைச் சேகரித்து எனக்கு அனுப்பிய நண்பருக்கு எனது அன்பும் நன்றியும்.

அதே போல மலேசிய மூத்த எழுத்தாளர்களின் ஒருவரான மனஹரன் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். மறைந்த எழுத்தாளர் கோ.முனியாண்டியின் 'சிறுகதை தொகுப்பை' எனக்கு அனுப்பி வைத்தார். அவருக்கும் எனது அன்பும் நன்றியும்.

வாசிப்பதும் எழுதுவதும் எனக்கு விருப்பமான ஒன்றாக இருப்பதோ என்னுடைய தன்னறமாகவே இருப்பதாக நம்புகிறேன். அதற்காவே எழுதுகிறேன்.

புத்தகங்களைப் பின் தொடர்ந்து செல்கிறேன். இந்தப் பயணத்தில் நான் ஒருபோதும் தனியாக இல்லை. நீங்கள் எல்லோரும் என்னுடனே இருக்கிறீர்கள். வேறென்ன வேண்டும்.

தொடர்ந்து வாசிப்போம். தொடர்ந்து எழுதுவோம்.....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்