பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 01, 2019

2018க்கு Bye 2019க்கு Hi

Welcome 2019
2018க்கு Bye 2019க்கு Hi

"நீங்க எதுவாச்சும் எழுதுவிங்கன்னு எதிர்ப்பார்த்தேன்..."

"நீ ஏண்டா ஒன்னும் எழுதாம இருக்க.."

"என்ன ஆச்சி, முடிந்த ஆண்டை பத்தி எதாச்சும் எழுதலாமே.."

"ஏன் இப்பல்லாம் எழுதுவதில்லை..."

"ரொம்ப வேலையா, ஆளை பாக்கவே முடியலயே.. போன்ல கூப்டா கூட கிடைக்க மாட்டுது...."


இப்படியாக சமீபம் தொடங்கி இப்போதுவரை பலர் எனக்கு வட்சப் செய்தி அனுப்புகிறார்கள், அழைத்துக் கேட்கிறார்கள் இன்பாக்ஸ் செய்கிறார். 

யோசிக்கையில் , நான் முடிந்தமட்டில்  உங்களிடம் இருந்து ஒதுங்கியே இருக்க விரும்புகிறேன். அதிக தூரத்தில் அடையாளமற்று இருக்க விரும்புகிறேன். யாருக்கும் நம்மை தெரியாத போது யார் வந்து நம்மிடம் பேசி நலம் விசாரித்துவிட போகிறார்கள்.

புலம்ப ஆரம்பித்துவீட்டான் என இப்போது நீங்கள் நினைத்தீர்கள் என்றால் மேற்கொண்டு தொடர்வதற்கு உங்களுக்கு பல வேலைகள் இருக்கும் இங்கு உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். என்னால் இந்த உதவியை மட்டும் உங்களுக்கு செய்ய முடியும்.

இப்போதும் கூட என்னதான் ஆகிவிட்டது இவனுக்கு என யோசித்து எப்போதாவது 'இவன் நல்லா வருவான் பாரேன்' என்று தனக்குத்தானே சொல்லுபவர்கள் நீங்கள் என்றால் உங்களுக்கு என் நன்றி. அதே சமயம் நீங்களும் மேற்கொண்டு படிக்க வேண்டாம். என்னை நேசிக்கும் உங்களை என் புலம்பல் பாதிக்க வேண்டாம். உங்களுக்கு நான் செய்யும் உதவி இது மட்டும்தான்.

"அவங்களும் படிக்க வேண்டாம் இவங்களும் படிக்கவேண்டாம்னா வேற எவுங்கதான் படிக்கனும்னு நீ சொல்ற?" என உங்களுக்கு தோன்றிலான் கையைக் கொடுங்க நாம் ஜாலியா இருக்கலாம்.

எல்லாம் போன பிறகு இருக்கும் ஒரு வெறுமையை புன்னகைக் கொண்டு கடந்துவிடுவதை தவிர வேறொன்றும் இருப்பதாக எனக்கு படவில்லை. நேற்று சும்மாக்காச்சும் பீர் அடிக்கலாமேன்னு கடையில வரிசை நின்னேன். அப்புறம் மோருக்காகவா வரிசை நிற்பாங்க. 

முன் வரிசையில் இருந்த ஸ்கூல் பையன் பீர் விலையையும் எந்த ப்ரேண்ட் பீரோட எதை மிக்ஸ் செய்யலாம்னு கிளாஸ் எடுத்துகிட்டு இருந்தான். நம்ம வாய் சும்மா இல்லாம, அது என்னிக்கிதான் சும்மா இருந்திருக்கு. அந்த நேரத்துல ஏதோ ஒரு கஷ்டத்தை நினைச்சி நானும் சிரிச்சி தொலைச்சிட்டேன். சட்டார்னு அந்த ஸ்கூல் பையன் திரும்ப பட்டார்னு என் நெஞ்சி படபடத்துபோச்சி அப்பறம் அவனென்ன பையன் மாதிரியா இருந்தான் பயில்வான் மாதிரியில்ல இருந்தான்.
நான் வேற இப்ப அடி வாங்கற மூட்ல இல்ல. இன்னிக்காவது நமக்கு நாமே லீவு விட்டுக்கலாம்னு பீரும் வேணாம் மோரும் வேணாம்னு வராத போனை எடுத்து காதுல வச்சி, ஹெல்லோ ஹெல்லோ விளங்கல.. இருங்க வெளிய வரேன்னு வந்துட்டேன்.

இப்படிதான் ஒவ்வொன்னையுன் சமாளுச்சி வர்றதா இருக்கு.
ஆனால்  நான் சொல்ல வருவது அதுவல்ல.

உங்களை நான் தவிர்ப்பதற்கு காரணம் உங்களால் என்னை தாங்கிக்கொள்ள முடியாது. நீங்கள் அதற்கு தயாராக இருக்கவில்லை. அதற்கு நீங்கள் தயாதாகவும் வேண்டாம். நீங்களும்தான் பல இன்னல்களை துரோகங்களை கடந்து வந்துள்ளீர்கள் உங்கள் முதுகு கூடதான் நம்பிய பலரால் குத்தப்பட்டிருக்கிறது. அந்த காயங்களை உங்களால் இன்னும் மறக்க முடியவில்லைதானே.
உங்களுக்கும் எனக்கும் அதில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லைதான். ஆனால் ஒன்று,
நாம் சந்தித்துக்கொண்டால் என் கதைகளை சொல்வதற்கு முன் உங்களை கட்டிப்பிடித்து அழுதுவிடுவேன். எல்லாம் இழந்து விட்டவனால் முடிந்த மிச்ச செயல் அதுதான். என் அழுகை உங்களுக்கு உங்களின் கடந்த கால வலியை நினைவுப் படுத்தும். சமாதானம் சொல்ல வந்த நீங்களும் அழுதுவிட்டால் நான் என்னதான் செய்வேன். 
போனது போகட்டும் ஆனது ஆகட்டும் இனிமேலாவது நான் உருப்பட்டால் சரிதான் என அவ்வபோது  தூக்கத்தில் எழுப்பி சொல்லிவிட்டு ஓடிவிடுகிறாள் எவளோ ஒருத்தி.
ஒருத்தி என்றதும் நினைவுக்கு வருகிறது. என்னால் பெண்களை பற்றி நினைக்காமல் இருக்கவே முடியாது. தேவதைகளையுன் சந்தித்துள்ளேன் தேவையா நீ வகைகளையும் சந்தித்துள்ளேன்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் என் வாழ்வில் இடியாகவும் எடுத்து வைக்க வேண்டிய அடுத்த அடியாகவும் பெண்கள்தான் இருக்கிறார்கள். பெண்கள் எப்போதும் என் நன்றிக்கு உரியவர்கள். 

இவ்வளவு பேசறயே உங்க அம்மா அப்பாகிட்ட சொல்லவேண்டிதானே என கேட்பதற்கும் பதில் இருக்கிறது. மகனாக இந்த வயதிலும் பிள்ளை என்ற கடமையை செய்துவிடாத ஒருவன் எந்த முகத்தில் அவர்களிடம் புகழிடம் கேட்பேன்.

ரைட்டு விடுவோம். முடிந்த ஆண்டில் கற்றுக்கொண்டது விட்டு போனதும் அதிகம்தான். 
1. யாருக்காகவும் வாக்கு கொடுக்க கூடாது.
2. முடிந்தால் செய்யலாம் முடியாததை சொல்லிவிடலாம்.
3. நாம் காட்டும் அன்பு மீண்டும் நம்மிடம் காட்டப்படும் என நினைக்க கூடாது.
4. உறவுக்குள்ளும் நட்புக்குள்ளும் பணம் நுழையும் போது அதன் விளைவு மோசமானதாகவே இருக்கும்.
5. யாருக்காகவும் நம் மனம் விரும்புவதை விலக்கிவிட கூடாது.
6. இன்று நண்பர்களாக இருப்பவர்கள் என்றுமே அவ்வாறாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
7. லாபம் உள்ள இடத்தில் யாருந் சேர்வர்.
8. எல்லாவற்றையும் விட தன்மானத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
9. மிகவும் கராராக தன்னை காட்டிக்கொள்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
10. குணத்தை விட பணம்தான் பல சமயங்கள் நம்மை காப்பாற்றும்.
11. நட்பு என்ற பெயரிலும் உறவு என்ற பெயரிலும் வியாபாரத்தை தொடங்கினால் கணக்கு வழக்குகளை முன்மே பேசிக்கொள்ள வேண்டும். ஏனெனின் 20ஆயிரம் லாபம் எடுத்து கொடுத்தாலும் மாதம் இரண்டாயிரம் சம்பளம் நமக்கு போதுமென நஷ்டக்கணக்கு காட்டுவார்கள்.
12. பேசத்தெரிந்தவர்கள் எப்படியும் பேசுவார்கள். நமக்காகவும் நமக்கு எதிராகவும்.
இன்னும் எண்ணிக்கைகளை அடுக்கலாம் . கடுப்பாக இருக்கிறது. 

ஆக மொத்தத்தில் என் அறியாமைதான் எல்லாவற்றுக்கும் காரணம் இதில் யாரை குற்றம்சொல்ல.
ஆனால் தயவு செய்து அவர்களும் இனி அறம் முறம் என பீலா பேசி காலரை தூக்கிவிட்டுக்கொண்டால் எனக்கு கோவம் வராமல் இருக்காது.

எல்லாம் இழந்துவிட்ட பின் இப்போது தனியாக அமர்ந்து யோசிக்கையில் ஏதோ ஒன்று எல்லா சமயத்திலும் என்னை காப்பாற்றி அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக்கொண்டே போகிறது. அது என்ன அதன் காரணம்தான் என்ன என இனியாவது எனக்கு தெரியட்டும்.

நட்பிலும் உறவிலும் பொருளாதாரத்திலும் தோற்றுப்போன ஒருவனாக இருந்துக்கொண்டு உங்களுடம் சகஜமானவனாக பேச என்னால் முடியவில்லை. 
ஆனாலும் முயல்வதில் தவறில்லைதான்.

ஆகா வாங்களேன், ஜாலியா பேசலாம். நல்லா ஊர் சுத்தலாம். நிறைய வாசிக்கலாம், எழுதலாம்......
இப்போதைய என் சந்தோசம் பல மாதங்கள் கழித்து என்னால் எழுத முடிகிறது. எழுதிவிட்டேன். எழுதுவதுதான் என் போன்றவர்களின் ஒரே தீர்வு.

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
அன்புடன் தயாஜி.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்