- இரட்டைக் கிளவி -
கவிதை எழுதும்போதெல்லாம்
பின்னணியில்
ஏதாவது ஓர் இசையை
இசைக்க விடுகிறேன்
சில சமயங்களில்
அது இனிமையாகவும்
சில சமயங்களில்
அது இரைச்சலாகவும்
மாறிக்கொண்டே வருகிறது
எழுதுவதற்கு இடையில்
இசையோ இரைச்சலோ
நிறுத்த நான் ஒருபோதும்
முயல்வதில்லை
இனிமைக்கு மட்டுமே
காதுகள் சொந்தமா என்ன
இரைச்சலுக்கும் நாம்
சொந்தம்தானே
இதற்கிடையில்
கவிதையில் சிற்சில
சித்திரங்கள் வந்து போவதை
வாசித்திருப்பீர்கள்
என்னால் அவற்றை
தவிர்க்க முடிவதில்லை
ஆனந்த குரலில் குதிப்பதும்
அழுதபடி கூனிக்குறுகி அமர்வதும்
எழுதும்போது
இரண்டுமே நான் தான்
வாசிக்கும்போது
இரண்டில் ஒன்றினை
நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்
நினைவில் கொள்ளுங்கள்
நல்லதோ கெட்டதோ
நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்
ஒரே ஒரு நிர்பந்தம்
எதை எடுத்தாலும்
இன்னொன்று இலவசம்
அதுவே இரண்டிற்குமான
நித்திய பந்தம்
0 comments:
கருத்துரையிடுக