பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 02, 2010

பிம்பங்கள்....
அவளை அவ்வளவு சீக்கிரத்தில் நான் மறக்கவில்லை. எப்படி மறப்பது..? அவளால் ஏற்பட்ட வலிதான் இன்னமும் இருக்கிறதே. அதற்கான காரணக் காரியங்களைப் பற்றி இப்போ பேச வேண்டாம். அதற்கான நேரம் இதுவல்ல.

ஏன் , இந்த பேருந்து நிலையத்தில் அவள். அதும் குடைகூட இல்லாமல். இவ்வளவு சோர்வா..? என்னை அறியாமலே அவள் அருகில் சென்றேன். நான் பார்த்து பரவசமடைந்த அவளின் முகம் கலையிழந்து காணப்படுகின்றது.
ஏதோ விரக்தியால் தாக்கப்பட்டவள் போல காட்சியளித்தாள்.

தயங்கியப்படி நான்,

“ம்,.. நீங்க அனு..?” முடிப்பதற்குள்

“அட... மணி தானே, (புன்னகை) எப்படி இருக்கிங்க எங்க இப்படி..? என்ன செய்றிங்க..?”

இப்படி படபடவென வெடிப்பது, அவளின் இயல்பாக இருந்தாலும் இன்று அதனுள் இருக்கும் போலியை என்னால் உணரமுடிந்தது.

“என்னங்க பட்டாசு மாதிரி வெடிக்கறிங்க. இன்னும் என்னை ஞாபகம் வச்சிருக்கிங்கலே சந்தோஷம்... இங்க என்ன செய்யறிங்க கல்யாணம் ஆச்சின்னு கேள்விப்பட்டேன்”

“கல்யாணம் ஆச்சி ஆனா அகாத மாதிரி..!”

அவளது புதிர் பேச்சி எனக்கு புரியாம பொச்சி. அவளிடமே விளக்கம் கேட்டேன்.

“என்னங்க புதிர் போடறிங்க..?”

“இந்த வாங்க போங்க எல்லாம் எதுக்கு..? ஒரே வயசுதானே ஆகுது.அதும் இப்படி பெசறது ரொம்ப அன்னியமா கேக்குது.. மணி”

மணி. அவளின் உதடுகள் உச்சரித்த வார்த்தை. இதற்காக தவம் கிடந்தவனாயிற்றே நான். எனக்கு இவ்வளவு இனிமையான பெயர் வைத்த பெற்றோர்க்கு கோவில்தான் கட்டனும். என்ன இடிச்சுடுவாங்க..?

“சரி அனு. வா போன்னே பேசுவோம். நீ சொன்னது புரியலையே..!”

பதில் சொல்வதற்கு முன் அந்த மான் விழி சுற்றும் முற்றும் நோட்டமிட்டது.

“மணி வரியா நாம அங்க உட்காந்து பேசலாம். எதும் வேலை இருக்கா..?”

அடக்கடவுளே இன்னிக்குன்னு பார்த்து ரிப்போட் எடுக்க என்னை போகச் சொன்னாரு ஆசிரியர். சரி மத்த நிருபர் யார்கிட்டயாச்சும் தகவலையும் போட்டோவையும் வாங்கி கொடுத்துடலாம்.

“இல்லையே.. இன்னிக்கு அவசர வெலை ஏதும் இல்லை. வா...”

இருவரும், ஒன்றாக அவள் காட்டிய இடம் நோக்கி நகர்ந்தோம். பக்கத்தில் இரண்டு பெண்கள் குடைபிடித்தவண்ணம் எங்களை கைகாட்டு பேசுவதை கவனிக்கவில்லை. நான் ஏன் கவனித்தேன்..?
அமர்ந்தோம் கொஞ்சம் இ..டை..வே..ளி விட்டு.

“அப்பறம் மாறன் கல்யாணம் ஆகிடுச்சா..? என்ன வேலை செய்ற..?”

“இன்னும் இல்லை. பத்திரிக்கை நிருபரா இருக்கேன். சரி ஏதோ புதிர் போட்டு விடை சொல்லாமலிருக்கே.. என்ன சொல்லு. அதுக்குதானே இங்க வந்திருக்கோம்”


“அட ஆமா மணி, சொல்றேன். தெரியும்தானே நான் பாதியிலேயே நிறுத்தினது”

“ஆமாம்”

எனக்கு, படிவம் ஒன்றில் அறிமுகமானவள் அனு. ஆறாண்டுகள் தமிழ் பள்ளியில் படித்து திடிரென்று மலாய் பள்ளியில் புதிய முகங்களுக்கு மத்தியில் பிதுங்கிய கண்களுடன் அமர்ந்திருந்த சமயம். எனது வகுப்பில், எனக்கு ஆறுதலாய் இருந்த ஒரே தமிழ் பெண் அனுதான். அதையும் தாண்டி அவளிடம் ஏதோ ஒன்று இருந்தது உண்மை.
இல்லாவிட்டால் நான் கவிதையை எழுதியிருக்கவே மாட்டேன். அதும் மூன்றாவது நாளில்.....

வகுப்பு நேரம் முடியும் தருணம் எல்லோரும் எழுந்து நின்று ஆசிரியர்க்கு விடைகொடுத்து புத்தகப்பையை கையில் எடுத்தனர்.
அவசர அவசரமாக ஒரு தாளை கிழித்துக்
( கிழித்தது லிம் சிங் ஹோகின் புத்தகத்திலிருந்து அவனுக்கு தெரியாமல் ) கவிதை எழுதினேன்,
கவிதையான்னு தெரியலை அவளோட பெயரை மூணு தடவை எழுதினேன்.

அப்பறம்,சரியா ஞாபகம் இல்லை. காதலி என்னைக் காதலி என முடித்திருந்தேன்.
நண்பன் ஹில்மி உதவுவதாக சொல்லியும் அநாவசியம் எனக் கருதி நானே அவளிடம் சென்று கொடுத்து, படித்து நாளை பதில் சொல் என்றேன்.

மறுநாள் காலை பள்ளி தொடங்கும் நேரம். அறிமுகமான நண்பர்களுடன் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தேன். மின்னலென அருகிள் வந்தாள் அனு. முதல் நாள் இரவு நான் தூங்காததை கண்டுக்கொள்ளாத வண்ணம் கடிதத்தை கொடுத்தாள். படித்துவிட்டாய் பதில் என்ன என்றேன்.

எனக்கு தமிழ் தெரியாது நான் மலாய் ஸ்கூல் என்றாள். சிரித்துக் கொண்டே கடித்தை வாங்கி. ஏதும் பேசாமல் வந்துவிட்டேன். என்னையே கவனித்த நண்பர்கள்.
அவள் கொடுத்த கடிதத்தைப் பற்றிக் கேட்டனர். கோவமான முகத்தை அவர்களிடம் காட்டி கையில் இருந்த கடிதத்தை; ‘கிழிகிழி’ன்னு கிழிச்சி குப்பைத் தொட்டியில் போட்டுட்டு,
சொன்னேன், பாருங்கடா ஸ்கூலுக்கு படிக்க வந்தா அந்த அனு லவ் லெட்டர் கொடுக்குது. சிரிக்கும் போதே தெரிந்துவிட்டது யாரும் நம்பவில்லை என.


“சரி மணி அப்படின்னா அதுக்கப்பறம் நடந்ததை சொல்லட்டா..?”

“சரி ”

“நான் படிக்கும்போது ஒருத்தனை காதலிச்சேன். என்னோட உயிரே அவந்தான்னு நெனச்சேன். அப்பா இல்லாத குறையை அவன் இல்லாம பார்த்துகிட்டான். என்னைப் பார்க்காம அவன இருக்க முடியாது. பள்ளி முடியும் சமயம் சரியா வந்து என்னைப் பார்ப்பான். அவன்கிட்ட பேசினா நேரம் போறதே தெரியாது மணி. நீ கூட பார்த்திருப்பே பள்ளி பின்னால் கேட் இருக்குமே அங்கதான் பேசுவோம்.”

“தெரியும். ஆனால் சரியா ஞாபகம் இல்லை. தேவியும் அதைப்பத்தி என் கிட்டா ஒரு முறை கேட்டப்போ தெரியாதுன்னு சொல்லிட்டேன். தேவிக்கு அவரை பார்த்தாலே பிடிக்கலைன்னு சொன்னா..”

“அம்மாவும் அப்படித்தான். அவரை பிடிக்கவேயில்லை. அப்பா இல்லாததால் சீக்கிரம் சம்மதம் வாங்கலாம்னு நெனைச்சோம். எதுவுமே நடக்கலை.அம்மா ஒத்த கால்ல நின்னாங்க..”

“அம்மான்னா அப்படிதானே அனு... முதலில் சம்பதிக்க மாட்டாங்க , அப்பறம் சரியாகிடும்”

“நானும் அப்படித்தான் நெனைச்சேன்..! ஆனா எல்லா நேரத்திலும் எல்லாமும் சரியா நடக்குன்னு என்ன எழுதியா இருக்கு..?”

அனுவின் இந்த வார்த்தை, அவள் விரக்தியின் விளிம்பில் இருப்பதை உணர்த்தியது. மேற்கொண்டு எதும் கேட்க வாய் வரவில்லை எனக்கு. அவளே தொடர்ந்தாள்.

“அப்படி நெனைச்சுதான் நாங்க கல்யாணம் செய்யலாம்னு கிளம்பிட்டோம்”

சொல்லி முடிக்கவும் , கண்ணில் நீர் கசியவும் சரியாக இருந்தது. அதை துடைக்க கைப்பையிலிருந்து கைக்குட்டையை எடுக்க ஏதோ பொட்டம் வெளிவந்து விழுந்தது. அதை எடுத்து கைப்பையில் வைத்தவள் என்னைப் பார்த்து கண்ணீருடன் அசட்டு சிரிப்பு சிரித்தாள். அந்த பொட்டலம் எனக்கு பழக்கமான பொட்டமாக இருந்தது. இருந்தும் ‘வெளிச்சத்தில்’ தெரியவில்லை..!!

“அனு, நீ எந்த நம்பிக்கையில இப்படி கிளம்புன..”

“என்ன செய்யறது ஒரு வருட பழக்கம். நாங்க பல இடங்களில் திருட்டுத்தனமா சந்திச்சாலும் அவன் அத்துமீறி நடந்ததில்லை. இப்படி இருக்க அவனை எப்படி நம்பாம இருக்கிறது..? ”

அனு தொடர்ந்தால்.

“நானும் அவனும், அவனோட நண்பர்கள் ரெண்டு பேரு முன்னுக்கு கல்யாணம் செய்துகிட்டோம். அவர் எனக்கு தாலி கட்டிணதை வீடியோகூட எடுத்தாங்க தெரியுமா..?”

“வீடியோவா..?”

“ஆமா, அவங்க கல்யாணத்துக்கு வீடியோ படம் எடுக்கறவங்கன்னு அவருதான் சொன்னாரு. ஒரு ரூம் முழுக்க வீடியோ, சீடிங்க, ரெண்டு கம்பியூட்டர் எல்லாம் இருக்கும். அது அவங்க வேலை செய்யற இடம். தூசி ரொம்ப இருக்கும்னு என்னை உள்ளே அனுமதிக்கலை. பெரும்பாலும் அந்த கதவு பூட்டியே இருக்கும்”

கொஞ்சம் பெரு மூச்சி விட்டவள், மீண்டும்.....

“நாம இப்படியே இருந்தா உங்க அம்மா நம்மை ஏத்துக்க மாட்டாங்க... நாம நம்ம குழந்தையோட அவங்க முன் போஉ நின்னா அவங்களோட கல் மனசு கறையும் அப்படி இப்படின்னு என்னை சம்மதிக்கவச்சாரு...”

“..................................”


அமையானவள் தொடர்ந்தாள்.“மணி அன்னிக்கு ராத்திரி அவர் நடந்துகிட்ட முறை அவை ‘இதில்’ கைத்தேர்ந்தவர் போல இருந்தது, விளக்கை அடைக்காம என்னை பயன் படுத்தினார். கொஞ்ச நாள் கழிச்சி என் கிட்ட ‘விட்டமின்’ மருந்தை கொடுத்து உடம்புக்கு நல்லதுன்னு சொன்னாரு. நானும் சாப்டு படுத்தேன்”

எனக்கு அதன் காரணம் புரியவில்லை.

“என்ன அனு..... எதுக்கு அந்த மாத்திரை.?”

“ம்.... என் உடம்பு வீக்கா இருக்கு சொல்லி கொடுத்தாரு. சாப்டதும் தூக்கம் வந்திடும். தூங்கிட்டேன். மறுநாள் குளிக்குபோது என்னாலயே நம்ப முடியலை என் உடம்பு ஒரே வலி. அங்கங்க நகக்கீரல் வேற... ”
“ஐயோ! என்ன அச்சி,..?”

“தெரியலை . ஒரே குழப்பம். அப்பறம் மறுநாள், அந்த மருந்தை சாப்பிடாம தூக்கம் வந்தமாதிரி படுத்திருந்தேன். கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவருதான்னு நெனைச்சி எழுந்தேன்..ஆனா... ஆனா.. அது வேற யாரோ”

கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“நான் கத்தினேன். நான் நம்பி வந்தவனும் அவனோட கூட்டாளிங்களும் உள்ளே வந்தாங்க.... எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை என்னை தொடவந்த அந்த ஆளை தள்ளிவிட்டு ஓட பார்த்தேன். மத்தவங்க என்னை புடிச்சி ஆளாளுக்கு அறைஞ்சாங்க..... நான் மயங்கிட்டேன்”

என்னால் அடுத்து அனு சொல்லப்போகும் விசியத்தை யூகிக்க முடியாமல், முழித்தேன்.அதை புரிந்துக் கொண்டவள்,

“நீ மட்டுமில்லை மணி யாருமே யோசிச்சிப் பார்க்காத ஒன்னு நடந்தது. மயக்கம் தெளிஞ்சதும் என்னை கைகால் , வாய் பொத்தி டி.வி முன்னுக்கு உட்கார வச்சிருந்தாங்க. அதில் நான் பர்த்தது என்ன தெரியுமா..? கல்யாணம் செய்துகிட்டவன் கூட நான் இருந்த அந்த ராத்திரி முழுக்க படமாகியிருந்தது. அதுமட்டுமா..! அவனோட கூட்டாளிங்களும் என்னை அனுபவிச்சதை பார்த்தேன். அவங்க கொடுத்தது போதை மாத்திரை. திருட்டு வீசீடி விக்கிற கூட்டம் அதுன்னு அப்பதான் தெரிஞ்சது. அதும் அவங்ககிட்ட இப்படி ஏமாந்த பொண்ணுங்க ரொம்ப பேராம். அவங்க கூட்டி வரவங்ககூட நான் , .. நான் சம்பதிக்கலைனா இந்த படத்தை எல்லோருக்கும் அனுப்பிடுவாங்க. எங்க வீட்டில தெரிஞ்ச என்ன ஆகும்னு தெரியுமான்னு மிரட்டினாங்க...”

“அய்யோ அப்பறம்..”

“இதுதான் வாழ்க்கைன்னு ஆகிடுச்சி. கொஞ்ச நாள் அங்கயே இருந்து வரங்களுக்கெல்லாம் ஒரு நாள் மனைவியா இருந்து. இப்போ தனியாவே... தொழில்; செய்ய ஆரம்பிச்சாச்சி.”

“என்ன அனு இப்படி சொல்ற..?”

“வேற என்ன செய்ய சொல்ற மணி..?”

“உன் பழைய வாழ்க்கையை மறந்து புதுசா வாழலாமே..”

“எதை நான் மறந்தாலும் , இந்த சமூதாயம் மறக்குமா.. சொல்லு. இப்படிப்பட்ட பொண்ணுங்களை சமுதாயம் எப்படி பார்க்கும் தெரியுமா..”

“ஏன்”

“நீயும் நானும் பேசும்போது அங்க ரெண்டு பொண்ணுங்க நம்மை கைகாட்டி ஏன் கிசிகிசுத்தாங்க தெரியுமா..? அதைவிடு,
முன்ன பின்ன தெரியாத ஒருத்தன் வரான். வந்து ஒரு ராத்திரிக்கு என்ன விலை கேக்கறான்.. இவங்களுக்கெல்லாம் எப்படி தெரியும். சொல்லு..?”

பதில் தெரியாததால் அவளெ சொன்னாள்.

“ஆபாசப்படங்கிறது எல்லா இடத்துலும் சாதாரணமா கிடைக்குது. ஸ்கூல் பிள்ளைங்க கைபேசி முதல் பொம்பளைங்க எல்லோரும் பார்க்கறாங்க... என் படத்தையும் பார்த்திருப்பாங்க.. ம் (யோசித்து) நீ மட்டும் என்ன யோக்கியமா.. சொல்லு மணி..?”

அவளின் இந்த கேள்வி என்னை அறைந்தார்போல இருந்தது.
கலங்கிய கண்ணைத் துடைத்துக்கொண்டே,

“அப்படியே யாரும் என்னைப் பத்தி தெரிஞ்சி கல்யாணம் செஞ்சா.. என்ன ஆகும் தெரியுமா..?”

இதற்கும் அவளே பதில் தந்தாள்.

“ஒருத்தனுக்கு தாலி கட்டி எல்லோருக்கும் மனைவியா இடுக்கனும். என்னை கட்டிக்கிட்டவறோட அண்ணனோ , தம்பியோ, பக்கத்துவீடோ, சொந்தக்காரங்களோ அந்த படத்தைப் பார்த்தா என்னை சும்மாவா விடுவாங்க.. என்னா என்னை கட்டிக்கிட்டவருக்குதான் அவமானம்..அப்படி இல்லாட்டியும் பத்து வருடம் கழிச்சி என் மகளோ, மகனோ இதை பார்த்தா என்ன ஆகும்..”

அனு சொல்வதை என்னால் மறுக்க இயலவில்லை. அதனால்தான் என்னவோ இன்றளவும் பல தவறுகள் திருத்தம் காணாமல் இருக்கின்றன. இருந்தும் இதற்கு விதிவிலக்காக சில பிரமுகர்கள்..! இருக்கத்தான் செய்கின்றார்கள். அதைப்பற்றி நான் சொல்லப் போவதில்லை. அவளை விட்டு பிரியும் அந்த நொடி ஏன் சந்தித்தோம் என முள்ளாய் குத்தியது.

விடைபெறும் நேரம் மனம் சொன்னார் போல, ஐம்பது வெள்ளியைக் கொடுத்து,

“ஏதும் நெனைச்சிக்காத அனு , வச்சிக்கோ..!!”

“சீ..சீ.. உனக்கு காசு வாங்க மாட்டேன் வா.. எங்க போலாம்..”

“இல்லை… அனு அதுக்கில்லை. உனக்கு சாப்பாடு வாங்கிக்கொடுக்கனும்னு நெனைச்சேன். கொஞ்சம் வேலை இருக்கிறது இப்பதான் ஞாபகம் வந்தது. கிளம்பனும் அதான். கொடுத்தேன். சாப்டு. என்ன..”

“நீ கேட்டதே போதும். தப்பா இருந்தாலும் உழைக்காம வரக் காசு வேணாம்..”

பேருந்தும் வந்தது. ஏறினேன். பேருந்து புறப்பட்டது. பேருந்திலிருந்து அவளை எட்டிப் பார்த்தேன். யாரோ அவளுடன் பேசிக்கொண்டிதான். அவளும் தன் கைப்பையில் இருந்து எதையோக் காட்டி சிரித்தாள். பின்னர் இருவரும் என் கண்ணை விட்டு மறைந்தனர்.

நான் இறங்கவேண்டிய இடம் வந்ததும் இறங்கினேன். பழுதுப் பார்க்கக் கொடுத்த மோட்டாரை வாங்கிய போது என் கைபேசி அலறியது. நண்பன் கேசவன். அவசியமில்லாமல் அழைக்க மாட்டான்.

“சொல்லுடா”

“மணி என்ன வேலையா..?”

“இனிமேல்தான் போகனும் . ஏன்.?”


“சரி ராத்திரி ஒரு இடத்துக்குப் போறோம்.எங்கன்னு கேட்காதா... போன தடவை மாதிரி பிரச்சனை வராது.. அப்பறம் ஒரு வீடியோ க்கிலிப் அனுப்பறேன் பாரேன்.. சரி . ராத்திரி வந்திரு”

அவன் அனுப்பிய வீடியோ கைபேசியில் வந்தது. அதில் ஒருத்தி அவளைச்சுற்றி மூன்று முகம் தெரியாத ‘நிச்சயம்’ ஆண்கள். அவள்.. அவள்.. அனு என் அனு..

மயக்க நிலையில் அவள் முழுவதுமாய் ஆடை இழந்திருந்தாள். ஒருவர் பின் ஒருவர் அவளை நெருங்க..... நேற்றுவரை ஆபாசப்படத்தை, காமத்தோடு பார்த்தவன், இன்று கருணையோடு பார்க்கின்றேன்.

இப்படி வெளிவர இயலாத ‘அனு’க்கள் எத்தனைப் பேர் இருக்கின்றார்களோ...?ஆக்கம்------- தயாஜி வெள்ளைரோஜா

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்