பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 03, 2012

பட்டாம்பூச்சி பறந்தது....

“ஒரு முறைதான் குத்தினேன். இறந்துவிட்டான். கத்தி அவ்வளவு கூர்மையா என நான் பார்க்கவில்லை. அவனிடம் எனக்கு எந்த முன்விரோதமோ, எந்த கோவமோ இல்லை. இத்தனைக்கும் அவன் என் பால்ய நண்பன்.” வானொலியில் ஏதோ நிகழ்ச்சிக்காக கைதியொருவரை அதன் அறிவிப்பாளர் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். இவருக்கு என்ன தெரியும், பாதிக்கப்பட்டவர்களிடம் கேள்வி மேல் கேள்வி மட்டும் கேட்கத் தெரியும். அவனவன் கஷ்டம் அவனுக்குதானே தெரியும், ம்.. இப்படி யாராவது என்னை செய்திருந்தால் நிம்மதியாக போய் சேர்ந்திருப்பேன்..!அந்த சிந்தனைதான் இந்த நிகழ்ச்சி முடியும் வரை என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. அந்நிகழ்ச்சிக்கு இடையில் ஒலியேறிய தன்முனைப்பு பாடல்கள் எனக்கு ஆறுதல் கொடுத்தாலும், அந்த பாடல்களால் முழுமையாக என்னை மாற்ற முடியவில்லை. என்னால் மாற்ற முடியாத என்னை அந்த பாடல்களா மாற்றப் போகின்றது. இனியும் வாழ முடியாது. தற்கொலைதான் தீர்வு என்ற என் தீர்மானமில்லாத தீர்மானம்தான் நிறைவேறப்போகின்றது இன்று.இந்த தற்கொலை எண்ணம் எப்போது ஆரம்பித்தது என மிகச்சரியாக சொல்ல முடியவில்லை. இன்று.. நேற்று.. வந்த எண்ணம் அல்ல இது. யோசித்தவுடன் இதன் தொடக்கத்தை ஆராய்ந்து சொல்லிவிடுவதற்கு. ஆனாலும் இதைப் பற்றி யோசிக்கையில் எனக்கு வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்கள்கூட இதற்கு ஒரு வகையில் காரணம்தான். முக அமைப்பில் நான் ஒன்றும் அத்தனை அழகுக்குக் சொந்தக்காரன் இல்லை. தடித்த மூக்கு , வரிசையில் அடக்கமாய் அமர்ந்துக் கொள்ளாத பற்கள், இனிமைக்கு எதிர்பதமாய் விசித்திர குரல்.இதெல்லாம் பெரிய குறை இல்லைதான், வெளியில் இருந்து பார்க்கும் வரை. பள்ளியில் சக மாணவர்கள் முதல் பாடம் நடத்தும் ஆசியர்கள்வரை உங்களை ‘மூக்கன்’ என்றும் ‘பல்லன்’ என்றும் அழைத்து சிரித்தால் எப்படியிருக்கும்; வெளியில் எங்கும் போனால், எதையோ பார்ப்பது போல உங்கள் மீது பார்வையை செலுத்தும் கோணல் முகங்களை எப்படி சமாளித்திருப்பீர்கள். இதெல்லாம் என் தற்கொலைக்கு காரணம் என்றால் முட்டாள்தனம்தான்.இதுவரை என் எழுத்து நடையை கவனித்த நீங்கள் நான் எழுந்து நடக்கும் விதத்தை கவனிக்கவில்லை போலும். எப்படி நடந்தாலும் எதை பிடித்து நடந்தாலும் கொஞ்சம் தாங்கி..தாங்கி.. நடக்கவே முடிகிறது. அம்மாவிடம் விசாரித்தேன் இதேல்லாம் எனக்கு மட்டும் ஏன் என்று. நான் அவங்க வயித்தில் இருக்கும் போது பாட்டியுடன் போட்ட சண்டையில் , சொந்த பாட்டியே கொடுத்த சாபம்தான் இதுன்னு அம்மா சொன்ன பிறகு, நல்ல வேலை அந்த பாட்டி உயிரோட இல்லை.இப்படியெல்லாம் சொல்லி சமாளிச்ச அம்மா, நேத்து என்ன சொன்னாங்க தெரியுமா.. “நீ பொறந்த நேரம்தாண்டா இப்படி நம்ம குடும்பத்தையே படுத்துது; அப்பவே அந்த சாமியார் சொன்னாரு...! இந்த புள்ளையால உங்களுக்கு நல்லது ஏதும் நடக்காதுன்னு.. உங்க அப்பாதான் இதிலெல்லாம் நம்பிக்கையில்லாம உன்னை பெத்துகலாம்னு சொல்லி.. நீ பொறந்த நாலு வருசத்திலேயே போய்ட்டாரு.”
அந்த சாமியாரு இப்போ எந்த ஜெயிலில் இருக்காரோ தெரியலை இந்த அம்மா இன்னும் அதை நம்பறாங்க. கோவத்தில் இப்படி உண்மையெல்லாம் வெளிவரும்னு எனக்கு அப்பதான் தெரியும்.அம்மா கோவிப்பதற்கு ஒரே காரணம் இன்னமும் எனக்கு எந்த இடத்திலும் வேலை கிடைக்கவில்லை, அதன் காரணம் நான். எப்படியும் சொந்தமாக ஏதும் வியாபாரம் செய்யலாம்னு அம்மாகிட்ட இருந்த பணத்தை வாங்கி குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்களை வீடு வீடா விற்க ஆரம்பிச்சேன் , ஒரு மாதம் என்னன்னவோ முயற்சி செய்தும், இந்த முகத்தைப் பார்த்தவர்கள் என் முயற்சியைப் பார்க்கவில்லை. பாவாம் பார்த்து வந்தவர்களையும் ; உங்கள் பாவம் பட்ட பணம் வேண்டாம், என சொல்லியது அம்மாவுக்கு எப்படியோ தெரிஞ்சி வந்த கோவத்தில்தான் என் பிறப்பின் உண்மையை அவங்களே சொன்னாங்க.ஒரு வேலை அம்மா சொன்னது உண்மையா இருக்குமோ..? இந்த பாவம் செய்த புள்ளையாலதான் அம்மாவுக்கு இத்தனை கஷ்டம். நான் இல்லாமலே போய்ட்டா... அம்மா அனுபவிக்கற கஷ்டமெல்லாம் மறைஞ்சி போய்டும்.
நடக்க ஆரம்பிச்சேன், எங்க வீட்டிலிருந்து ரொம்ப தூரம் நடந்த உணர்வு... நடை நின்ற பாடில்லை. தொலைத்தவன் தொடர்ந்து தேடுவது போல... கிடைத்தவன் மீண்டும் தொலைப்பதுபோல.. சம்பந்த சம்பந்தமில்லா எதையெதையோ நினைத்துக் கொண்டேன். தொடர்ந்து நடந்தேன். துன்பத்தைதான் கடக்க இயலவில்லை, இப்படி தாங்கி தாங்கி, தற்கொலைகாவது நடக்க முடிகின்றதே என்று என்னை நானே சமாதானம் செய்தேன்.எப்படியும் வீட்டிலிருந்து ரொம்ப தூராம் வந்தவிட்டேன் என்பதனை உறுதி செய்துவிட்டேன். சாலையில் கார்கள் வந்த வண்ணமும் சென்ற வண்ணமும்தான் இருந்தன. எல்லாம் விலை உயர்ந்த கார்கள். ஒரே பரபரப்பு.இந்த நேரத்தில் இவர்கள் யாரை இடித்தாலும் கண்டுகொள்ளமாட்டார்கள் அவ்வளவு பரபரப்பு மிகுந்த சூழலில் வாழ்கின்றார்கள். பாருங்களேன், இவர்களுக்கென்று ஒரு வேலை, நல்ல சம்பளம், கார் வீடு. நானும் இவர்களை போல ஒரு மனிதன் தானே. மனிதன் தான், ஆனால் இவர்களை போல் அழகற்றவன். இவர்களை போல் நேராக நடக்காதவன், இவ்வளவுக்கும் மேல் அடுத்தவர்கள் பணத்தில் படித்து அதை கட்டமறந்தவன் இல்லை.படிக்கும்போதும் சரி வேலை தேடும் போதும் என் திறமை யாருக்கும் பயன்படவில்லை. என் முகமும் நடையும்தான் அவர்கள் கேலி செய்ய பயன்பட்டது. இனி இதற்கெல்லாம் விடுதலை. மரணம் பிறகு வாழ்க்கை இருக்கின்றதா என்பது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. மரணம் வரை வாழ்க்கை வாழ்வும் வலு இல்லை. அங்கே ஒரு சிகப்பு கார் வேகமாக வருகிறது. அருகில் வரவும் நான் சட்டென்று குறுக்கே செல்லவும் சரியாக இருக்கும்.
இன்னும் கொஞ்ச அருகில்..


ம்..


5..


4..


3..


2..
“யாராவது இருக்கிங்களா..?”
திரும்பினேன், கறுப்பு கண்ணாடியுடன் வெள்ளைச்சட்டையுமாய் எனக்கு மிக அருகில், அடடே அந்த கார் போய் விட்டது. மீண்டும் யாரவது இருக்கிங்கலா என்ற கேட்கவும்.
“ஏன் உங்களுக்கு கண் தெரியாதா..?”
“ம்.. இருக்கிங்கலா.. ஆமாங்க, கண் தெரியாதுதான். சின்ன உதவி வேணும் செய்விங்களா..?”
“பணம் ஏதும் கேட்டுறாதிங்க. என் நிலமை அப்படி..”
“ஐயோ இல்லைங்க. நானும் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன். அதான் முதல் சம்பளத்துல சாமிக்கு மாலை வாங்கியிருக்கேன். இந்த சாலையில் எப்பவும் கார் வந்துகிட்டேதான் இருக்கும். யாராவது இருந்தா.. அவங்ககூட இந்த சாலையைக் கடந்துடுவேன்.. ரொம்ப நேரம் காத்திருக்கேன் யாரும் வந்த மாதிரி தெரியலை, உங்க பேச்சி சத்தம் கேட்டுச்சி அதான் கூப்டேன். எனக்கு இந்த சாலையைக் கடக்க உதவி செய்திங்கன்னா போதும், நான் கோவிலுக்கு போய்டுவேன் ”


அவரின் கையை பிடித்துக் கொண்டே, சாலையை கடக்க ஆரம்பித்தேன். முன்பு இடிக்க வேண்டிய கார்களைக் கவனமாக கடந்தேன். சாலையைக் கடந்ததும், அவருடன் கேட்டேன்,
“சரிங்க கொண்டுவந்து விட்டுட்டேன் , மறுபடியும் எப்படி சாலையைக் கடந்து அந்த பக்கம் போவிங்க..”
“ சாலையை கடக்கனும்னு வந்துட்டா கண்டிப்பா யாராவது உதவிக்கு வருவாங்க. இப்போ நீங்க எனக்கு கிடைச்ச மாதிரி மறுபடியும் யாரும் வருவாங்க..”
“எப்படி எவ்வளவு உறுதிய சொல்றிங்க..?”
“அதாங்க நான் கத்துகிட்ட பாடம். ஒரு காலத்துல இதே சாலையில் செத்திருக்க வேண்டியவன் நான். சம்பந்தமே இல்லாமல் ஒருத்தர் வந்தாரு, கை கொடுத்து காப்பாத்தி..என் வாழ்க்கை பாதையை மாற்றியமைச்சாரு.. அவர் முகத்தை கூட என்னால பார்க்க முடியலை ஆனா என அகம் அவரை கடவுளா பார்த்தது. இப்போ நான் என்ன வேலை செய்யறேன் தெரியுங்கலா..?”
“என்ன வேலை..?”
“பேசற வேலை.. புரியலையா..?”
“ஆமாம்.”


சிரித்தார். தன் பையிலிருந்து அவரின் அடையாள அட்டையைக் கொடுத்தார். அதிர்ந்தேன்...! அவர் வானொலி அறிவிப்பாளர்...! பல குரல் கலைஞன்...! அதிலும் பகுதி நேரமாக ஒரு பத்திரிக்கையில் வேலை செய்கின்றார்...! இதெல்லாம் ஒரு மாத காலத்தில் அவருக்கு ஏற்பட்ட மாற்றங்கள் என்பதை அவர் சொன்னதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பத்து இருபது ஆண்டுகள் வரை வராத வேகம் இப்படி ஒரு மாதம் எப்படி சாத்தியம் என குழம்பி அவரிடம் கேட்டேன். அவரின் பதில்,“மாற்றம் என்பது தீக்குச்சி போல.. சரியான நேரத்தில் அதை உணர்ந்து உரசப்பட வேண்டும். அப்போதுதான் அந்த மாற்றம் உங்கள் உள் உறங்கிக் கிடக்கும் திறமைகளை வெளிகொணரும்..அதற்கு நாம்தான் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அன்று முகம் பார்க்காத அந்த நபர் எனக்கு சொன்னதைதான் உங்ககிட்ட சொன்னேன்.ஆமா உங்களைப் பத்தி ஒன்னும் சொல்லலையே..?”என்ன சொல்வது இன்னும் கொஞ்ச நேரத்தில் சாக போகிறேன் என்றா..?சட்டென்று யோசனை. பத்திரிக்கைத் துறையில் வேலை தேடிக்கொண்டிருப்பதாகச் சொன்னேன்.“அப்படியா நான் பகுதி நேரமா செய்யற வேலைக்கு முழுநேர பணியாளர் தேவைப்படுது.. அந்த பெயர் அட்டையில் முகவரி இருக்கு. நாளைக்கு வாங்களேன் எங்க ஆசிரியர்கிட்ட அறிமுகப் படுத்தறேன். என் வாழ்க்கையை மாற்றியவர் உங்கள் வாழ்க்கையையும் மாற்றுவார். அவர் மூலமாகத்தன் எனக்கு வானொலியிலும் வேலை கிடைச்சது. உங்கள் திறமை உங்களைவிட உங்கள் மீது அக்கறை கொண்டவர்களுக்குதான் தெரியும்னு அடிக்கடி சொல்லுவார். ”அவருக்கு விடைகொடுத்து. மீண்டும் அதே சாலையைக் கடந்தேன். ஒரு கார் என்னை நெருங்கிவிட்டதை அப்போதுதான் கவனித்தேன். அப்போது அவர் சொன்னதை என்ணினேன்.“உங்களுக்கு பட்டாம்பூச்சி கதை தெரியுமா..? கூட்டுப்புழுவா இருந்து ஒவ்வொரு முடியை உதிர்க்கும்போதும் உயிர்போகும் வலி வலிக்குமாம்.. அதை தாங்கிக்கொண்டு மீண்டும் அடுத்தடுத்த முடியை உதிர்க்குமாம்..அந்த புழு. அப்பறம்தான் வண்ண பட்டாம்பூச்சியாய் பறக்குது.. இதையும் அவர்தான் சொன்னாரு..ம்.. ஒரு பட்டாம்பூச்சியே வலி தாங்கனும்னா நாமெல்லாம் எம்மாத்திறம்னு நான் நெனைச்சிதான் அவர்கூட என் புது வாழ்கையை தொடங்கினேன்”

சட்டென்று அந்த காரின் முன் கைகாட்டினேன். என் கையில் அவர் கொடுத்த பெயரட்டையில் ஒரு பட்டாம்பூச்சி பறந்தது.


நன்றி  'தினக்குரல்'.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்