- செய்யும் தொழிலே சாத்தான் -
#குறுங்கதை 2021 - 14
- செய்யும் தொழிலே சாத்தான் -
இது ஒரு சவால். அப்படித்தான் நினைத்துக் கொண்டார். தன் தொழிலுக்கான சவால். தன் அறிவுக்கான சவால். தான் எடுத்த பட்டங்களுக்கான சவால். எப்படியும் ஜெயித்து விடவேண்டும்.
முன்றாவது கப் காபியும் வந்துவிட்டது. காபியை வைத்துவிட்டு மனைவி வெளியேறினாள். பிள்ளைகள் யாரும் இப்போது அவரின் அறைக்கு செல்ல முடியாது. செல்லக்கூடாது. கண்டிப்பானவர், ஆனால் அவரின் மொத்த உழைப்புமே அவர்களுக்குத்தான்.
அவருக்கு தொழில் சுத்தம். எந்த அழுக்குகளையும் சுத்தம் செய்துவிடும் சாமர்த்தியம். பண வருவுகளில் குறையில்லை. இன்றைய சவாலை அவர் ஜெயிக்கவேண்டும்.
சட்ட புத்தகங்களை மீண்டும் மீண்டும் புரட்டலானார். கண்களில் வெறி தெரியத்தொடங்கியது. ஆழ்ந்து யோசிக்கலானார். கணினியை திறந்தார். எதையோ தேடலானார். கிடைத்தது. கண்கள் விரிந்தன. லேசான புன்னகையும் வந்தது.
இறந்துப்போனவனின் பழைய புகைப்படத்தில், ஒரு காட்சி. அந்த அப்பாவி சிறுவன் அணிந்திருந்த சட்டையின் ஓரத்தில் ஏதோ எண் குறிப்பிட்டு இருந்தது.
அந்த சிறுவன் அந்த குண்டர் கும்பலின் ஒரு கையால். அவன் தான் முதலில் வம்பு செய்திருக்கிறான். அதனால்தான் அந்த சிறுவன் ஐந்து பேர்களால், கொடுரமாக தாக்கப்பட்டு, கன்னங்கள் கிழிக்கப்பட்டு, கைவிரல்கள் ஒடிக்கப்பட்டு. கால்கள் இரும்பால் அடிக்கப்பட்டு, தலை முழுக்க கண்ணாடி போத்தலால் அடிக்கப்பட்டு, இறந்திருக்கிறான்.
குறிப்பாக அந்த ஐந்து பேர், தங்களை ஒரு குண்டர் கூட்ட உறுப்பினனிடம் இருந்து தங்களை தற்காக்க முயன்றிருக்கிறார்கள் என நாளைய வழக்கு விசாரணைக்கான குறிப்புகளை எழுதி முடித்தார்.
கொலை செய்தவனை காப்பாற்றுவதை விட கொலையானவனையே குற்றவாளி ஆக்குவதற்கு பெரிய திறமை வேண்டும்தான். தன் தோலை தானே தட்டிக்கொடுத்துக் கொண்டார்.
உற்சாகத்தில் எழுந்து நடக்கலானார். கால் இடித்து மேஜை மேல் உள்ள குடும்ப புகைப்படம் கீழே விழுந்து உடைய.....
0 comments:
கருத்துரையிடுக