- ஏமாற்றும் கலை -
#குறுங்கதை 2021 - 20
- ஏமாற்றும் கலை -
நிகழ்ச்சி பரபரப்பானது. நம்புகின்றவர்களும் நம்பாதவர்களும் ஆளுக்கு ஆள் பேசவும் சிலர் சத்தம் போடவும் செய்தனர்.
நிலைமையை சமாளிக்க வேண்டும். இரு குழுவில் இருந்தும் ஒருவர் அழைக்கப்பட்டார்கள்.
"நிகழ்ச்சியை நிறைவுக்கு கொண்டு வரப்போகிறோம். நீங்க ரெண்டு பேரும்தான் முடிவை சொல்லனும்." என்றார் அறிவிப்பாளர்.
நம்புகிறவர்; "சொல்லுங்க.. நீங்க யார்கிட்ட பேசனும்..."
நம்பாதவர்; "ம்... எங்க பாட்டிகிட்ட பேசனும்.."
நம்புகிறவர்; "சரி... "
கண்களை மூடியவர். காற்றில் கைவிரல்களை அசைக்கலானார். முகம் வயதான தோற்றம் போல மெல்ல மாறியது. வயதான நடுங்கும் குரலில் பேசலானார்.
"அய்யா... அய்யா.. சாப்டியா.."
"பாட்டி.....!!!"
பார்த்துக் கொண்டிருப்பவர்கள் பரவசமானார்கள். நம்புகின்றவர்களின் கண்கள் கலங்கின. நம்பாதவர்களின் கண்கள் ஆச்சர்யத்தில் பெரிதாகின.
"மிஸ்டர் பாலன். இது உங்க பாட்டியின் குரலா...? அப்படின்னா ஆவிங்ககிட்ட பேசலாம்ன்றதை நீங்க நம்பறீங்களா..?"
"இன்னும் ஒரு கேள்வி... அப்பறமா பதில் சொல்றேன்.."
"கேளுங்க மிஸ்டர் பாலன்"
பாலன் " நீங்க என் பாட்டினு ஒத்துக்க.. நீங்க எப்படி செத்திங்கன்னு சொல்லுங்க பாட்டி.". பேச்சில் நக்கல் இருந்தது.
கொஞ்சம் நேர அமைதிக்கு பிறகு, பாட்டியின் குரலில் அவர் பேசலானார்.
"பாத்ரூம்ல வழுக்கி விழுந்து செத்துட்டேன் அய்யா..."
பாலன் சிரிக்கலானார். மற்றவர் புரியாமல் பார்த்தனர்.
" இத பாருங்க.. இவரு என் பாட்டியோட ஆவிகிட்ட பேசறாராம்.. என் பாட்டி உயிரோடதான் இருக்காங்க... இப்படி முகத்தை கோணிக்கிட்டு வயசானவங்க குரலில் யார் வேணும்னாலும் பேசி இப்படி நடிக்கலாம்."
நம்பாதவர்கள் இப்போது ஆரவாரமாக கைத்தட்டினார்கள். நம்புகின்றவர்கள் செய்வதறியாது அமைதியானர்.
பெரிய ஏமாற்று வேலையை கண்டுபிடித்த துள்ளலில் தன் இருக்கைக்குச் சென்றார் பாலன். அவர் கைபேசிக்கு குறுஞ்செய்தி வருகிறது. அதில்,
"பாட்டி காலையில் இறந்துட்டாங்க..... பாத் ரூம்ல வழுக்கி விழுந்துட்டாங்க....."
0 comments:
கருத்துரையிடுக