பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 08, 2021

- ஆண்கள் ஏன் கற்பழிக்கறீங்க.. ? -

 #குறுங்கதை 2021 - 19

- ஆண்கள் ஏன் கற்பழிக்கறீங்க.. ? -

"என்னடா கேள்வி இது..?"

        "அதான் பாரேன். என்னமோ நமக்கு வேற வேலை வெட்டி இல்லாம புள் டைமா கற்பழிச்சிகிட்டு இருக்கற மாதிரி இந்த பொண்ணு கேள்வி கேட்டு இண்டெர்வியூ செய்யுது.."

        முழு நிகழ்ச்சியை விடவும் அடிக்கடி காட்டப்பட்ட அந்நிகழ்ச்சிக்கான விளம்பரத்தில்தான் அப்படியான கேள்வி இருந்தது. யாரோ ஒருவர் இக்கேள்வியை ஒட்டி முகநூலில் தன் அதிருப்தியை தெரிவித்ததால் அது, பலரின் பேசு பொருளானது.

            குமாரும் ரவியும் ஒரே நாளில் நான்காவது முறையாக அது பற்றி பேசி கொந்தளித்துக் கொண்டிருந்தார்கள். கேள்வி கேட்ட பெண்ணையும் அவரின் குடும்பத்தையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேசினார்கள்.

            கொஞ்ச நேரத்தில் அந்நிகழ்ச்சி தயாரிப்பாளரும் அறிவிப்பாளரும் ஒருவர் பின் ஒருவராக தொலைக்காட்சியில் தோன்றினார்கள். தத்தம் கவனக்குறைவிற்கு மன்னிப்பு கேட்டனர். அறிவிப்பாளரின் முகம் பொலிவு இழந்து பார்ப்பதற்கே என்னமோ போல வெளுத்து இருந்தது.

        "பார்த்தியா மச்சான்.. நாம போட்ட போடுல ஒரு கூட்டமே மன்னிப்பு கேட்குது..." என்றார் குமார்.

        "ஆனாலும்... ஆம்பளைங்க எல்லோரும் ஏன் கற்பழிக்கறீங்கன்ற கேள்வி கேட்டிருக்கவே கூடாதுடா... நம்மலையெல்லாம் பார்த்தா எப்படி தெரியுது...". என புலம்பிக் கொண்டே கோவத்துடன் கிளம்பினார்.

        இரவு. படுத்தும் ரவிக்கு தூக்கம் வரவில்லை. மனம் அந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் நினைத்தபடியே இருந்தது. 'என்ன கேள்வி அது.. ச்சே...' என முணுமுணுத்துக் கொண்டே காலை தூக்கி மனைவி மீது போட்டார்.

        "இன்னிக்கு வேணாம்ங்க... ரொம்ப வேலையா போச்சி.. அசதியா இருக்கு..." என்ற மனைவியிடம்,

        "புருஷன் கூப்டா... வரனும்.. காரணம் சொல்லக் கூடாது.. அதுக்கு பேருதான் பொண்டாட்டி..." என்றவாறே கையையும் போடலானார்.

ஆனாலும் அவர் மனதில் அந்த வார்த்தை உறுத்திக்கொண்டே...

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்