- முதல் சலுகை -
#குறுங்கதை 2021 - 17
- முதல் சலுகை -
'வீடு வாடகைக்கு' என்கிற வழக்கமான விளம்பரங்களின் நடுவில் ஒரு குறிப்பு ஆர்வத்தைத் தூண்டியது. 'இளம் வயது மோகினியுடன் கூடிய வீடு'. அதனால் விலையும் அதிகமில்லை.
மாறனுக்கு அது சுருக்கென்றது. எத்தனை நாட்கள்தான் தனியாக வாழ்வது. துணை வேண்டாமா. நான்கு அடி அறையில் வாழ்ந்தது போதும், கையில் இருக்கும் பணத்தில், வாடகை வீட்டிற்கு செல்லலாம். மோகினியை சமாளிக்க பல வழிகள் உண்டே.
எத்தனை பேய் படங்களில் அழகான மோகினிகளாக நடித்த நடிகைகளைக் கண்டு ரசித்தவனாயிற்றே. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் தவறவிட மனம் வருமா.
மறுநாளே அங்கு சென்றான். அவனுக்கு முன்னே சிலர் காத்திருந்தார்கள். நாட்டில் தம்மை போன்றே தனித்து விடப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது தெரிந்தது. வாழ்வின் மன பண நெருக்கடி புரிந்தது.
ஒவ்வொருவர் கையிலும் விண்ணப்ப பாரம் இருந்தது. வாடகை வீடு பெறுவதற்கு சில கட்டுப்பாடுகள் வைத்திருந்தார்கள். சிலர் அந்த பாரங்களை முழுமையாக வாசிக்காமலேயே கிளம்பினார்கள். மாறனும் தனக்கு கிடைத்த விண்ணப்பத்தைப் படிக்க ஆரம்பித்தான்.
- வீட்டில் ஆணி அடிக்கக் கூடாது.
- இரவு நேரத்தில் பொருட்களை நகர்த்தக் கூடாது.
- செடிகளை தேவையில்லாமல் ஆட்டக் கூடாது.
- பிராணிகளை பயமுறுத்தக் கூடாது.
- அதிகமாக புகை மூட்டம் போடக்கூடாது.
- தண்ணீர்த் தொட்டியில் விளையாடக்கூடாது.
- தேவையில்லாமலும் விருப்பம் இல்லாமலும் மோகினியைத் தொடக்கூடாது. (இருவர் விருப்பத்தில் சங்கம் தலையிடாது.)
மாறனுக்கு சிரிப்பு வந்தது. ஆனால் பாரத்தில் இருந்த, பல 'கூடாது'களில் ஒன்று மட்டும் வேறாக இருந்தது.
'இறந்து 15 ஆண்டுகள் ஆனவர்களுக்கே முதல் சலுகை உண்டு' அது மாறனையும் ஏமாற்றியது. அவன் இறந்து இப்போதுதான் பத்து ஆண்டுகள் ஆகின்றன. வேறு வழியின்றி தன்னை மோதிய லாரி டயருக்கே மீண்டும் பறக்கலானான்.
0 comments:
கருத்துரையிடுக