பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 30, 2021

- அத்தையை நம்புவோம் -

 #குறுங்கதை 2021 - 23

- அத்தையை நம்புவோம் -

காலையில் சீக்கிரம் எழுந்துவிட்டேன். காலைக்கடன்களை முடித்துவிட்டு வெளியேறினேன். வரவேற்பறையில் அத்தை அமர்ந்திருந்தார். வழக்கமான புன்னகை இருக்கவில்லை.

முகம் பீதியில் இருந்தது. என்னவென்று விசாரித்தேன்.

"அத்தை என்ன ஆச்சி..? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க.?"

"ஒன்னுமில்ல.."

"ஏதோ இருக்குன்னு தெரியிது அத்தை. சொல்லுங்க..."

"சொன்னாலும் நீங்க நம்பமாட்டீங்க.. விடுங்க.."

அத்தை இப்படி சொல்லிவிட்டால், அடுத்ததாய் நடந்ததைச் சொல்லப்போகிறார் என்று அர்த்தம். ஆரம்பித்தார்.

"விடியற்காலைல ஏதோ ஒன்னு என்னை அமுக்கிடுச்சி..!"

"அமுக்கிடிச்சா...?"

"ஆமா.. நல்லா தூங்கிட்டு இருந்தேன். கறுப்பா ஒன்னு முகம் கூட சரியா தெரியல.. என் காலை புடிச்சிருச்சி..."

"ஐயோ அப்பறம்!"

"என்னால கை காலை அசைக்க முடியல.. வாய்க்கு வந்த சாமிங்க பேரையெல்லாம் சொல்லிட்டு... காலை இழுத்துகிட்டேன்.."

"அப்பறம்....!"

"அப்பறம் என்ன அப்பறம்.. என்கிட்டயா விளையாடுதுனு சொல்லி.. இழுத்துகிட்ட காலிலேயே ஒரு எத்து விட்டேன்.. அப்படியே பறந்து போச்சி.. அப்பறம் காணல.."

சொல்லும் போதே அத்தையின் முகத்தில் ஏதேதோ தெரிந்தது. நம்புவதா வேண்டாமா என யோசிக்க முடியவில்லை.

அப்போதுதான் மாமா அறையை விட்டு வெளியில் வந்தார். முகம் வீங்கி இருந்தது. மூக்கு உடைந்து இரத்தம் காய்ந்திருந்தது. நடக்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தார்.

சந்தேகமே இல்லை. அத்தையை நம்பிவிட்டேன்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்