பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 08, 2021

- உண்டியல் திருடன் -

 #குறுங்கதை 2021 - 21

- உண்டியல் திருடன் -

        அந்தக் கிழிந்தக் காகிதம் ஒரு பக்கம் விழுந்துக் கிடக்கின்றது. அதனுடன் எப்போதோ சாப்பிட்ட மிட்டாய் பைகள். இன்னும் சில ரொட்டித் துண்டுகளின் நெகிழிப்பைகளும் இருக்கின்றன.

        வாங்கிய அறையில் கன்னம் வீங்கியிருந்தது. மேலும் சிலரின் அடிகளால் முதுகும் கை கால்களும் வீங்கி சில இடங்களில் இரத்தம் கசியத்தொடங்கியது.

        "இவனை அடிக்கற அடில இனிமேல் எவனும் கோவில் உண்டியல்ல கை வைக்கக் கூடாது.."
என்றபடியே எட்டி மிதித்தார் அழகேசன்.

   மயக்கத்தில் கிடந்தவனின் கைப்பிடியில் பத்து வெள்ளி மட்டும் இருந்தது.

    "ஏண்டா டேய்... அல்பம் பத்து வெள்ளிக்குலாமா கோவில்ல வந்து திருடுவீங்க... " என்ற யாரோ ஒருவர் அவனது கழுத்தைப் பிடித்துத் தூக்கி வீசினார்.

    இப்படியேப் போனால் அந்த திருடன் இறந்துவிடக்கூடும் என்கிற அச்சம் சிலருக்கு வந்தது. அவனை அப்படியே இழுத்துக் கொண்டு கோவிலை விட்டு
வெளியேறினார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் காவல்துறையில் இருந்து ஆட்கள் வந்துவிடுவார்கள்.

கூட்டத்தைக் கலையச்சொல்லியபடி அந்தத் திருடனின் சட்டைப்பையில் இருந்து கீழே போட்ட குப்பைகளை சுத்தம் செய்யலானார் அழகேசன்.

அதில் ஒரு கசங்கியக் காகிதம் இருந்தது. எடுத்தவர் மௌனமானார்.

        'சாமி, நான் சாப்ட்டு ரெண்டு நாள் ஆகுது. பத்து வெள்ளிய கடனா எடுத்துக்கறேன். சீக்கிரமே கொடுத்துடுவேன். இதான் அதுக்கு சாட்சி'

என்று எழுதப்பட்டு கையெழுத்தும் போடப்பட்டிருந்தது. அக்கடிதத்தில் சில இடங்களில் பட்டிருந்த திருடனின் காயாத இரத்தம், அழகேசன் கையில் ஒட்டிக் கொண்டது.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்