பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 07, 2026

பொம்மியுடன் 3-வது தைப்பூசம் (பகுதி 5 – நிறைவு)

    பொம்மியுடன் 3-வது தைப்பூசம் (பகுதி 5 – நிறைவு)


பத்துமலை படிக்கு கீழ் குடும்பத்துடன் நின்றோம். பொம்மியைத் தூக்கியபடி முதற்படியைத் தொட்டு வணங்கினோம். எங்களின் படியேற்றத்தைத் தொடங்கும் முன்; பொம்மி அவளை கீழே இறக்கிவிடும்படி கேட்டாள். அவளால் அத்தனைப் படிகளையும் ஏற முடியும் என நான் நினைக்கவில்லை. சரி பாதி படிகளில் மீண்டும் தூக்கி கொள்ளலாம் என்று இல்லாளிடம் சொல்லி பொம்மியின் கையைப் பிடித்தபடி நாங்கள் ஒன்றாக படியேற ஆரம்பித்தோம். பொம்மியின் கையை நான் பிடித்திருக்க அவள் என்னை இழுத்துக்கொண்டு படியேறினாள். எந்த இடத்திலும் சோர்ந்திடாது எங்கும் நிற்காது பொம்மி படியேறிக்கொண்டிருந்தாள்.

முதல் படியில் காலை வைத்து ஏறத்தொடங்கியதும், நான் அவள் கையைப் பிடித்திருந்ததாய் நினைத்தது மெல்ல மறந்து பத்துமலையான்தான் எங்கள்  மூவரின் கைகளையும் பிடித்திருக்கிறான் என்கிற எண்ணம் வலு பெற. ‘வேல்… வேல்…’ என கோஷமிட ஆரம்பித்தேன். கோஷம் எங்களுடன் படியேறிக்கொண்டிருந்த எல்லோரிடத்திலும் இருந்து எதிரொலித்தது. நாங்கள் தனியாக இல்லை முருகனை நம்புகிறவர்கள் எல்லாமே அந்தப் பத்துமலையானின் குடும்பம்தானே என்பது போல ‘வேல்… வேல்…’  கோஷம் ஒலிக்கவும். ஒலித்த கோஷம் ஒவ்வொரு திசையில் இருந்தும்  எதிரொலிக்கவும் நாங்கள் படியேறிக்கொண்டிருந்தோம். அந்தப் படி எங்கள் கால்களை சுடவேயில்லை.  

பல முறை பத்துமலை படியில் ஏறியிருக்கிறேன். ஒவ்வொரு இடமாக நின்றபடி மூஞ்சுவாங்கிதான் மெல்ல மெல்ல ஏறியிருக்கிறேன். அதுவும் இப்போதைய என் உடல்நிலை, நான் என்  உடலை வருத்தி செய்வது எதையும் என்னுடல் இப்போது ஏற்றுக்கொள்வதில்லை. சட்டென தலை சுத்தல் ஏற்பட்டு மயக்கம் வந்துவிடும்.

 ஆனால் இம்முறை எங்கள் கையைப் பிடித்து அழைத்தவன் முருகன் என்பதால் எந்தக் களைப்பும் அசதியும் அருகில் வரவில்லை. உடல் உபாதைகளுக்கு சாப்பிட்ட மருந்துகளின் பக்கவிளைவுகளால் நூற்றுக்கும் அதிகமான எடை கொண்டிருந்த என் உடல் எனக்கு எடையற்றதாகவும் தோன்றியது. சாதாரணமாக நடக்கும் போது ஏற்படும் முட்டிவலியும் இன்றி கால்கள் படியேறியபடி இருந்தன.

 பொம்மி எங்கள் இருவரையும் இழுத்தபடி உற்சாகமாய்க் கோஷமிட்டபடி படியேறிக்கொண்டிருந்தாள். பொம்மி கடந்து செல்லும் படியில் நேர்த்திக்கடன்களுடன் பயணிப்பவர்கள் சிலர் அவளின் தலையில் கைவைத்தபடி ‘முருகா…’ என்றே சொல்லி மகிழ்ந்தார்கள். பத்துமலையானைக் காண படியேறும் ஒவ்வொருவருடனும் அந்தப் பத்துமலையானும் ஏதோ ஒரு வடிவில் படியேறிக்கொண்டுதானே இருக்கின்றான்.

பொம்மியின் தலையில் கைவைத்தவர்கள் எல்லாம் அந்த முருகனா, கைப்பிடித்து நடக்கும் பொம்மிதான் முருகனா என தெரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கில்லை. ஆனால் கந்தனை நம்பிவிட்டால் நாம் ஒருபோது தனியாக விடப்படமாட்டோம் என்பதில் எனக்கும் அனுபவம் இருக்கிறது. எனக்கு மட்டுமா தொடர்ந்து இதனை நீங்கள் படித்து வருவதற்கும் அதுதானே; அந்தக் கந்தன்தானே காரணம். இந்த அனுபவங்களின் எண்ணிக்கைதான் பின்னாளில் நமக்கு பக்குவமாக பரிணமிக்கும்.

எந்த இடத்திலும் நிற்கவிடாமல் பத்துமலையான் பொம்மியைக் கைப்பிடித்து அழைக்க; அவளும் எங்களை இழுக்க நாங்களும்  நிற்க வழியின்றி அதற்கான தேவையும் இன்றி ‘வேல்.. வேல்…’ கோஷத்துடன் படியேறி முடித்தோம்.

பத்துமலை கோவிலுக்கு உள்ளே நுழைந்தோம். நாங்கள் செல்லும் வழியில் கூட்டம் அதிகம் இல்லை. நேராக பால்குடத்திற்கான சீட்டை வாங்க சென்றோம். மூன்று பேருக்கு பால்குடம் என்றோம். அங்கு அமர்ந்திருந்தவர் எங்கள் இருவரையும் பார்த்தார். பின் மேஜை உயரமே இருக்கும் பொம்மியைப் பார்த்தார். “குட்டி முருகனுக்கு டிக்கட் இல்லை…” என்றார். நாங்கள் எங்களுக்கு மட்டும் சீட்டை வாங்கி கொண்டு வரிசையில் நிற்கலானோம். நிற்பது போல தோன்றினாலும் எந்தத் தடையும் இன்றி நேரே நடந்து கொண்டிடுந்தோம். மூலஸ்தான முருகனுக்கு பாலுற்றி கொண்டிருந்தார்கள். எங்கள் முன்னே சென்ற குடும்பத்தினரில் ஒருவர் முட்டி போட்டு நடக்க ஆரம்பித்தார். எங்களுக்கு அவர்களைத் கடந்து முன்னே செல்லும் வாய்ப்பு அமைந்தது.


பக்தர்களிடம் இருந்து பால்குடங்களை வாங்கி அதன் முகப்பில் இருக்கும் துணியை கிழித்து அல்லது கழட்டி கொடுப்பதற்கு சிலர் நின்றிருந்தார்கள். அதே போல பாலூற்றும் இடத்திலும் பால்குடங்களை வாங்கி அங்கிருக்கும் ஐயர்களுக்கு கொடுக்கவும் சிலர் நின்றிருந்தார்கள்.

நாங்கள் எங்கள் பால்குடங்களைக் கொடுத்தோம். பொம்மியுடைய தூக்குச் செம்பில் விபூதி இருப்பதாய்ச் சொல்லியபடி கொடுத்தேன்.

பாலையும் பன்னீரையும் வேலவனுக்கு ஊற்றினார்கள். விபூதியை முருகனுக்கு அபிஷேகமாய்க் கொட்டினார்கள். காலையில் ஶ்ரீ மீனாட்சி சுந்தரேசர் ஆலயத்தில் இருந்ததைவிட இம்முறை முருனுக்கு மிக அருகில் இருப்பதாய்த் தோன்றியது.

முருகனின் மீது அபிஷேகம்  செய்யப்பட்டு கீழே கொட்டும் பொம்மியின் விபூதி; கீழே பட்டு வெளியில் நின்ற எங்கள் மீதும் பட்டது. உடல் புல்லரித்தது.

கடந்த ஆண்டுகளில் பால்குடத்தை கொடுக்கவும் அவர்கள் பாலை வேலவனுக்கு ஊற்றி, எங்கள் குடத்தை எங்களுக்கே கொடுப்பதும் மின்னல் வேகத்தில் நடந்தன. இம்முறை அடுத்த பக்தர்கள் வரும்வரை நாங்கள் அங்கேயே நின்றபடி பத்துமலையானை கண்குளிர பார்த்து; குளிர்ந்த கண்கள் கலங்கியபடி அங்கிருந்து நகர்ந்தோம்.

எப்போதும் போல அங்கேயே மற்றவர்களுடன் நாங்களும் அமர்ந்து இளைப்பாறினோம். அப்போதெல்லாம் உடலில் அசதி மிகுந்திருக்கும். ஆனால் இப்போது உடலில் அசதியென எதுவுமில்லை. இருந்தும் அங்கே அமர்ந்து உள்ளே வரும் பக்தர்களைப் பார்த்து கொண்டிருந்தோம்.

பின் பொம்மியைத் தூக்கியபடி உள்ளே வரும் வண்ண வண்ண காவடிகளை பொம்மிக்கு காட்டத் தொடங்கினேன். இல்லாள் அமர்ந்திருக்க, பொம்மியுடன் உள்ளேயே சில சுற்றுகள் சுற்றினேன். அங்கு சில பெரிய சேவல்கள் இருந்தன. அதன் அருகில் சென்றும் தொட்டும் விளையாடினோம்.

          சட்டென வயிறு பசித்தது. சாப்பிட கீழேதான் இறங்கவேண்டும் என  நினைத்து இல்லாளை நோக்கி நடந்தேன். செல்லும் வழியில் ஒருவர் என்னை அழைத்தார். இப்போதுதான் நேர்த்திக்கடனை முடித்திருப்பார் போல வியர்வையால் முழுக்க நனைந்தபடி நெற்றி நிறைய விபூதியுடன் இருந்தார்.

“தம்பி அங்க எங்க போறிங்க.. தோ பாருங்க பொங்க சோறு கொடுக்கறாங்க.. நீங்களும் வாங்கிக்கோங்க… அப்பறம் முடிஞ்சிடப்போகுது…” என்றார்.

அட ஆமாம் நானும் அந்த வழியாகத்தான் வந்தேன் என் கண்ணுக்கு தெரியவில்லை. அவருக்கு நன்றி சொல்ல திரும்பினேன். அதற்குள் அங்குள்ள பக்தர்களுள் கலந்துவிட்டார்.

கணவனும் மனைவியும் வருகிறவர்களுக்கு உள்ளங்கையளவு பொட்டலத்தில் புளிசோறும் கொண்டை கடலையையும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நானும் பொம்மியும் ஆளுக்கொரு பொட்டலத்தை வாங்கி கொண்டு இல்லாளிடம் சென்றோம். அவருக்கும் பசிதான் போல. எங்கள் கையைப் பார்த்தவர் உற்சாகமாகிவிட்டார்.

மூவரும் சாப்பிட்டோம். மனம் நிறைந்த அனுபவத்தைக் கொடுத்த பத்துமலையான் எங்கள் வயிறையும் நிறைத்தான். எங்களை அறியாமல் கண்கள் கலங்கின.

இந்த ஆண்டு தைப்பூசத்தை எந்த ஆண்டிலும் மறக்காதபடிக்கு பத்துமலையான் செய்துவிட்டான். மனதில் புதுத்தெம்புடன், இனி அவன் பார்த்துக்கொள்வான் என்ற மன தைரியத்துடன் மீண்டும் அவனை வணங்கிவிட்டு எங்களின் இந்த ஆண்டு பயணத்தைத் தொடங்கினோம்.

‘எதையும் இரட்டைப்படையாய் விடக்கூடாது…’ என அம்மா அடிக்கடி சொல்லுவார். இன்று காலையில் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் ஒருமுறையும் பத்துமலையானுக்கு ஒருமுறையும் என இரண்டு முறைதான் பால்குடம் எடுத்திருந்தோம். மூன்றாவதாக எங்கே எப்போது அமையப்போகிறதோ என்கிற கேள்வி எழுந்தது.

அங்கே ஒர் அம்மா தலையில் பால்குடத்துடன் கண்களில் கண்ணீர் வழிய முருகனை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போதுதான் தெரிந்தது பக்தியாலும் அன்பாலும் மனம் உருகி அழும் கண்ணீரையும் கந்தக்கடவுள் தனக்கான அபிஷேகமாக எடுத்து கொள்கிறவன் தானே.

எங்களின் மூன்றாவது பால்குடமும் அப்படித்தான். என நினைத்தபடி அதுவரை துடைத்துக் கொண்டிருந்த கண்ணீரைத் துடைக்காமலேயே நடக்க ஆரம்பித்தோம். உள்ளிருந்து வெளியே வந்து, இறங்குவதற்கு முன்பாக படியை வணங்கவும் இதுநாள் வரையில் கண்களில் சேமித்து வைத்த கண்ணீர் எல்லாம் அழுது முடிந்ததாய்த் தொன்றியது.

மீண்டும் மனதிற்குள்வேல்… வேல்…’ என்று சொல்லியபடி, பத்துமலை படியில் இறங்க ஆரம்பித்தோம்.

அந்த இறக்கம், நாம் எல்லோருக்குமே வாழ்க்கையில் ஏற்றமாக அமைய, அந்தப் பத்துமலையான் நாம் எல்லோருக்கும் அருள் புரியட்டும்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா….

 

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த

கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு

தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்

தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே


(அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் – பாடல் 38)

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்