பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 08, 2021

- மிஸ்டர் மணி -

 #குறுங்கதை 2021 - 15

- மிஸ்டர் மணி -

"கம்.. கம்... மிஸ்டர் மணி... ஏன் நேத்து வரல.. உங்க அப்பாயிண்ட்மெண்ட் நேத்துதான.. ?"

"ஆமா டாக்டர்... சாரி. நேத்து வரமுடியல...".

            டாக்டர் மணி சம்பந்தப்பட்ட கோப்புகளை மீண்டும் பார்க்கலானார். மாதம் ஒருமுறை வருவதால், ஒவ்வொரு தடவையும் கோப்புகளை முதலில் இருந்து பார்ப்பது அவருக்கு வழக்கம்.

        "நான் கொடுத்த மருந்துகளை சரியா சாப்டறீங்களா.. இப்ப எப்படி பீல் பண்றீங்க... இன்னமும்..." முடிப்பதற்குள்

            "மருந்தெல்லாம் கரட்டாதான் டாக்டர் சாப்டறேன். ஆனாலும் அப்படியேதான் இருக்கு..." . மணி எங்கோ பார்த்துக் கொண்டு பேசலானார். டாக்டருக்கு ஏதோ தவறாக இருப்பதாக படவும்,

"ஐ சீ... மிஸ்டர் மணி... அப்படின்னா...?"

"ஆம் டாக்டர். என்னால செத்தவங்களைப் பார்க்க முடியுது. அவங்களோட பேச முடியுது..."

டாக்டர் இப்படி பலரை பார்த்து பரிசோதித்தவர் என்பதால்,
"எல்லாத்துக்கும் உங்க மனசுதான் காரணம்.. ரொம்ப குழப்பிக்காதீங்க..."

"நான் பார்க்கறேன் டாக்டர்.. அதுங்க பேசறதை என்னால கேட்க முடியுது"

கோப்புகளில் புதிதாக சிலவற்றை எழுதிக்கொண்டே,"உங்களுக்கு மருந்துகளை மாத்தனும்னு நினைக்கிறேன்... அதோட வாரா வாரமும் நீங்க இங்க கவுன்சலிங் வரவேண்டியிருக்கும்.."

"நீங்களும் என்னை நம்பலையா டாக்டர்.."

            "இதை நம்பாததாலதான் எங்களால உங்களுக்கு மருத்துவம் பாக்க முடியுது மிஸ்டர் மணி. நம்ப ஆரம்பிச்சா நானும் அங்க உட்கார்ந்து புலம்பிக்கிட்டு இருக்கனும்.." அப்படி பேசியிருக்கக் கூடாதென உணர்த்த மருத்துவர்;

            "ஐம் சாரி... ஒன்னும் சிக்கல் இல்ல.. ரெண்டு வாரம் கவுன்சலிங் வாங்க சரியாகிடும்..."

            "சரிங்க டாக்டர்.. இப்ப கூட என்னால ஒரு உருவத்த பாக்க..." முடிப்பதற்குள் தொலைபேசி ஒலித்தது.

"ஹெல்லோ.. சொல்லுங்க ஜெஸ்ஸி.."

            "டாக்டர் நேத்து வரவேண்டிய பேஷண்ட் மிஸ்டர் மணி, கார் அக்சிடென்ல இறந்துட்டதா அவங்க அண்ணன் கால் பண்ணி சொன்னாரு...."

            டாக்டரின் கண்கள் விரிந்தன. கைகள் நடுங்கின.அவரின் அறையில் யாரும் இருக்கவில்லை. எதிரில் இருந்த நாற்காலி ஏனோ அசையத் தொடங்கியது.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்