பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 08, 2021

- என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது -

#குறுங்கதை 2021 - 13

- என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது -


        மணியைப் பாருங்கள். ஊரே உறங்கிவிட்டது. அம்மாவும் அப்பாவும் அவனுக்காக காத்திருப்பார்கள். வெளியில் போனவனுக்கு வீட்டுக்கு வர தெரியாதா சொல்லுங்கள். என்னால் ஏதும் சொல்ல முடியாது. சொன்னாலும் யாரும் கேட்க மாட்டார்கள்.

        தம்பிதான். அதற்காக எத்தனை நாட்கள்தான் பொறுமையாக இருப்பது. குடிகாரன். ஒரு நாள் தானே என சேர்ந்து குடிக்க கூட்டிப்போனேன். இன்று நான் இருப்பதையே மறந்துவிட்டான்.

        குடித்தாலும் பரவாயில்லை. அங்கேயே தூங்கிவிட வேண்டியதுதானே. போதையிலேயே தடுமாறி காரை ஓட்டுவான். எத்தனை தடவை தப்பித்திருக்கிறான் என எனக்கு தான் தெரியும். அவனை காப்பாற்றுவதுதான் எனக்கு வேலையா சொல்லுங்கள்.

        மணி கணக்கு இல்லாமல் வீட்டுக்கு வருகிறான். அம்மாவும் அப்பாவும் தம்பி வரும் வரை முழித்திருக்கிறார்கள். நான் கொடுத்த தொல்லைகள் போதாதென இவனும் சேர்ந்துக்கொண்டான்.

            இன்று வரட்டும் ஒரு கை பார்த்து விடுகிறேன். என்னை பார்த்து கூட திருந்தாதவனை திட்டினால் மட்டும் திருந்துவானா சொல்லுங்கள்.

            இதோ, இப்போது என் படத்திற்கு பக்கத்தில் அவன் படத்தையும் வைத்து மாலை போட்டுவிட்டார்கள். இனி திருந்தவா போகிறான்.

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்