பொம்மியுடன் 3-வது தைப்பூசம் (பகுதி 3)
பொம்மியுடன் 3-வது தைப்பூசம் (பகுதி 3)
எங்கள் வாகனம் பத்துமலையை நெருங்கியது. கோவில் எங்களின் இடது பக்கத்தில் இருந்தது. அதே போல இடது பக்க சாலை முழுக்கவும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இன்னும் சில இடங்களில் வாகனங்கள் நிறுத்த முடியாதபடிக்கு மோட்டார்களை நிறுத்தியிருந்தார்கள். மேற்கொண்டு யாரும் தத்தம் வாகனங்களை நிறுத்தி நெரிசலைக் கூட்டக்கூடாது என்பதற்காக சில பாதுகாவலர்கள் ஆங்காங்கே நின்றிருந்தார்கள்.
வாகனத்தில் இருந்து கொண்டே அதை எங்காவது நிறுத்துவதற்கு இடம் இருக்கிறதா என பார்த்தேன். பார்த்து கொண்டிருந்தபடியே கோவிலைத் தாண்டிவிட்டோம். கடந்த ஆண்டு கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் ஆசிரமத்தில் வாகனத்தை நிறுத்த இடம் கிடைத்தது. பதினைந்து ரிங்கிட்தான் வாங்கினார்கள். அங்கேயே போகலாம் என்று பார்த்தால் இம்முறை அங்கே நுழைய முடியாதபடி மறைத்திருந்தார்கள். ஆக அங்கே போக முடியாது. தூரத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்து பொம்மியுடன் நடந்து வர எனக்கு விருப்பம் இல்லை. அதுவும் இந்த வெயிலில் நாங்களே நடக்க சிரமப்படுவோம்.
“முருகா ஒரு பார்க்கிங்கைக் காட்டேன். உன்னையத்தானே பார்க்க வர்றோம்…” என்றபடி சென்றுகொண்டே இருந்தேன். சட்டென ஒரு அறிவிப்பு பலகை கண்ணில் பட்டது. இல்லாள்தான் காட்டினார். வாகனங்களை நிறுத்தி வைக்க இடம் உள்ளதான அறிவிப்பு. அருகில் செல்லவும் அவர்கள் நிர்ணயித்த விலை தூக்கிவாரிப்போட்டது. நான்கு சக்கர வாகனங்களுக்கு ஐம்பது வெள்ளி என இருந்தது.
வருடத்திற்கு ஒருமுறைதான் என்றாலும் பட்ஜெட்டில் வாழ்கிறவர்களுக்கு எல்லா நாளுமே ஒன்றுதானே. இப்போதைக்கு ஐம்பது வெள்ளி கொடுத்து வாகனத்தை நிறுத்தினால் பால் குடங்களுக்கு அர்ச்சனை சீட்டு வாங்குவதில் சிக்கலாகிவிடும். தைப்பூசத்திற்கென்று குறிப்பிட்ட தொகையைத்தான் சேமித்திருந்தோம். அதுவும் காலையில் மீனாட்சி கோவிலில் பால்குடம் எடுப்பதற்காக கொஞ்சம் செலவானது.
இன்னும் கொஞ்ச தூரம் முன்னே சென்று பார்க்கலாம் என்று இல்லாளும் சொல்ல; அப்படியே செய்தேன். அருகில் ‘பெட்ரோனாஸ்’ பெட்ரோல் நிலையம் இருந்தது. அதற்கு அருகில் சில அடுக்குமாடி குடியிருப்புகளும் இருந்தன. அங்கே நுழையும் பாதையிலும் ‘பார்க்கிங்க்’ என அறிவிப்பு பலகை வைத்திருந்தார்கள். ஆனால் எவ்வளவு கட்டணம் என்பதை குறிப்பிடவில்லை.
இவ்வளவுதான் கட்டணம் என இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் கட்டணம் குறித்து அறிவிப்பு இல்லையென்றால் ஆளுக்கு ஒரு விலையைச் சொல்லுவார்கள். இருந்தும் ஏதோ நம்பிக்கையில் உள்ளே நுழைந்தேன்.
வளைந்ததும் உள்ளே இரு பாதைகளாகப் பிரிந்தன. ஒன்று குடியிருப்புக்கு முன்புறமாகவும் இன்னொன்று பின்புறமாகவும் சென்றன. நாங்கள் பின்பக்கமாக சென்று முதலில் பார்க்க நினைத்தோம். அந்த ஒத்தையடிப் பாதையில் கடைசியில் ஒரே ஒரு இடம் மட்டும் காலியாக இருந்தது. யாரோ ஒருவர் அருகில் ஒரு பெரிய லாரியை குறுக்கே நிறுத்தியிருந்ததால் யார் கண்களுக்கும் இந்த இடம் தெரியவில்லை. அருகில் வந்தால் மட்டுமே தெரியும். எங்களுக்காகவே அந்த இடம் காலியாக இருந்தது போல அமைந்தது.
‘நன்றி முருகா.. ‘ என்றபடியே வாகனத்தை உள்ளே கொண்டு போய் நிறுத்தினேன். முதலில் நான்தான் இறங்கினேன். யாரும் வந்து கட்டணத்தைக் கேட்கிறார்களா என சுற்றிப்பார்த்தேன். யாருமில்லை. இல்லாளிடம் இங்கு யாருமில்லை என்றபடி பொம்மியைத் தூக்கப் போனேன்.
“அங்க பாருங்க ஒருத்தரு இருக்காரு.. யாரும் இல்லன்னு சொல்றிங்க…” என்று இல்லாள் சொல்லவும்தான் மீண்டும் பார்க்கிறேன். ஒரு கருப்பு உருவம் லாரிக்கு அருகில் நின்றபடி என்னையே பார்த்து கொண்டிருக்கிறது. எங்கிருந்து வந்தார் என தெரியவில்லை. என் கண்ணுக்கு எப்படி தெரியாமல் நின்றார் எனவும் புரியவில்லை. நான் பார்ப்பதைப் பார்த்தவர்; நடக்கலானார். என்னிடம்தான் வருகிறார் என்று நினைத்தேன். என்னையும் கடந்து போகலானார்.
“அண்ணே.. இங்க பார்க்கிங் எவ்வளோ அண்ணே…” என்று கேட்டேன். நடந்தவர் நிற்கலானார். திரும்பினார். என்னையும் வாகனத்தையும் உள்ளே இருப்பவர்களையும் ஒரு பார்வைப் பார்த்தார்.
“என்ன.. முருகனைப் பார்க்கத்தானே வந்திருக்கீங்க… காசெல்லாம் ஒன்னும் வேணாம்.. போய்ட்டு நல்லா கூம்படு வாங்க… எவ்வளோ நேரம்தான் நானும் இங்கயே இருக்கறது… போங்க போங்க..” என்றபடி நகர்ந்தார்.
“யாராச்சும் வந்து காசு கேட்டா என்ன சொல்லட்டும்…”
“ம்… நான் சொன்னேன்னு சொல்லு; எவனும் வரமாட்டான்…” என சொல்லியபடியே நடக்கலானார்.
நானும் காருக்கு திரும்பி அவர் சொன்னதைச் சொன்னேன். பொம்மியைத் தூக்கிக் கொண்டேன். இல்லாளும் பூஜைக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு இறங்கினார்.
“ஆமா.. அவர் பேர் என்னன்னு கேட்டிங்களா…”
“ஐயயோ ஆமா.. அப்பறம் எப்படி… யார் சொன்னார்னு சொல்றது…?” என்று பதறியபடி திரும்பினேன். அங்கு அவர் இல்லை. இல்லாளும் வந்து பார்க்கிறார். அந்த ஒருவழி பாதையில் ஒருவரும் இருக்கவில்லை.
“ஏங்க… உங்களுக்கு அவரோட பேரை கூட கேட்க தோனலையா..? என்ன நீங்க… அப்பறம் யாராச்சும் வந்து காசு கேட்டா.. இவர்தான் காசு வேணாம்னு சொன்னாருன்னு சொல்லலாம்தான…”
“உங்கிட்ட திரும்பி அப்டேட் பண்ணிட்டு பாக்கறதுகுள்ள அந்த மனுஷன் ஓடிப்போவாருன்னு எனக்கு எப்படிமா தெரியும்.. நீ வேற பேரை கேட்கல ஊரை கேட்கலைன்னு ஆரம்பிக்கற…”
“வண்ணமயில் ஏறும், என் தங்க வடிவேலோன். கந்தன் உனை காண தினம் ஓடிவருவேனோ..” என சாலையோரத்தில் யாரோ அவர்களின் கூடாரத்தில் பாடலை சத்தமாக வைத்தார்கள்.
“ஏன் முருகா… எல்லாம் உன் வேலைதான்னுதான் தெரியிதே… அப்பறம் எதுக்கு பொண்டாட்டிகிட்ட திட்டு வாங்க வைக்கற…” என்று சத்தம் வராதபடி கேட்டுகொண்டே நடக்கலானோம்.
பொம்மி அவளும் கீழிறங்கி எங்களுடன் நடக்கப்போவதாகச் சொன்னாள். இப்போதே நடந்தால், படியேற முடியாது. நான் தான் தூக்கி கொண்டு படியேற வேண்டும் என தெரியும். ஆனால்; குழந்தைகளின் குறைந்தபட்ச ஆசைகளையாவது உடனுக்குடனே நடத்திக் கொடுப்போம் என கீழே இறக்கிவிட்டேன்.
அங்கிருந்த வளைவு பாதைக்கு அருகில் ஒரு குறுக்குப்பாதையும் இருந்தது. அங்கு நுழைந்து சாலையோரத்திற்கு வந்தோம். அங்குதான் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நடந்து கொண்டிருந்தார்கள்.
எல்லோரும் சொல்லி வைத்தார்போல தலையில் எதையோ வைத்து மறைத்தபடி நடந்தார்கள். சிலர் நாளிதழ், சிலர் தொப்பி, சிலர் துண்டு, சிலர் அவர்களின் கைகளையே வைத்திருந்தார்கள். எங்களுக்கு புரிந்தது. வெயில் சுட்டெரித்து கோண்டிருக்கிறது. பொம்மியும் ‘அப்பா சுடுகிறது’ என்றாள்.
“என்ன முருகா இப்படி வெயிலடிக்கற… நாங்களாம் பாவம் இல்லையா… ” என்று கேட்டபடி நடந்தேன். பாடல் போட்ட கடைக்காரர் ஒரு மாதிரியாய்ப் பார்த்தார். அவர் பார்த்தது கூட பரவாயில்லை. இல்லாளும் ஏதோ மாதிரி பார்த்தார்.
ஏதோ சொல்ல வாயெடுத்தவர் அமைதியானார். சட்டென வெயில் மறைந்தது. ஏதோ ஒரு பெரிய மேகம் எங்கள் மேல் வந்து நிற்பது போன்றதொரு நிழல். எங்களுக்கு மட்டுமல்ல அந்த நிழல் எல்லோருக்குமே போனது. அதுவரையில் தலையில் எதையெதையோ வைத்தவர்கள் அதை எடுத்துவிட்டு நடக்கலானார்கள்.
“பரவாயில்லையே.. முருகன் உங்க பேச்சைக்கூட கேட்கறாரு…!?”
“ஆமா.. பொண்டாட்டிதான் கேட்கல அவராச்சும் கேட்கறாரே..” என சொல்லிவிட்டேன். அது இல்லாளுக்கு புரிவதற்கு முன் வேகமே நடக்கலானேன். பொம்மியும் நடக்கலானாள். இல்லாளும் நடக்கலானார்.
இன்னும் பத்துமலை கோவில் வாசலைக்கூட மிதிக்கவில்லை. அதற்குள் நாங்கள் மிதித்து நடக்கும் சாலையின் சூட்டை தணித்திருக்கிறான் அந்தப் பத்துமலையான்.
குழந்தைகளின் விளையாட்டுகளாய் அதிசயங்களை நடத்தும் நாயகனிடம் நாமே குழந்தைகளாய்த்தானே இருக்கின்றோம்.
பத்துமலை படியேற்றத்தில் எங்களுக்கான இன்னொரு அதிசயத்தையும் அப்பன் விளையாட்டாய்க் காட்டினான். விளையாடி காட்டினான்.
கந்தனின் அந்தத் திருவிளையாடலை அடுத்த பதிவில் சொல்லவா…?
தொடரும்...
0 comments:
கருத்துரையிடுக