பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 08, 2021

- கோவம் -

 #குறுங்கதை 2021 - 18

- கோவம் -

"பளார்"...

        பெரிய சத்தமாய் கேட்டுவிட்டது. பாக்கியம் கன்னத்தில் கைவத்தவாறு அழ ஆரம்பித்தாள். அவளின் முதல் விசும்பல் முடிவதற்குள் அறையில் இருந்தவர்கள் வெளியில் வந்துவிட்டார்கள்.

        அம்மாவிற்கு பாக்கியம் அழுவதை பார்க்க முடியவில்லை.
"என்னய்யா இப்படி அடிச்சிருக்க... இதுக்கா உனக்கு கல்யாணம் செஞ்சி கொடுத்தோம்.."

        அப்பாவிற்கும் கோவம் கொப்பளித்தது. பழைய ஆளாக இருந்திருந்தால் மருமகனை ஒரே கையால் தூக்கி காற்றாடியில் மாட்டியிருப்பார். வயசாகிவிட்டது. ஆனாலும் அழுதுக் கொண்டிருப்பது அவரது செல்லமகளாயிற்றே,

        "பொம்பளைய அறையர அளவுக்கு என்ன அவ்வளவு பெரிய கோவம் உங்களுக்கு... மனுஷன்னா பொறுமை வேணாமா..? நானே என் பிள்ளைய அடிச்சது இல்ல..."

        சுகுமாறனுக்கு கோவம் வந்தால் இப்படித்தான் தன் நிலையை மறந்துவிடுவான். இருந்தும் நிலைமையை அவர்களுக்கு புரியவைக்க முயன்றான்

" மாமா.. அது வந்து..."
பேசி முடிக்கவில்லை. அத்தை ஆரம்பித்துவிட்டார்.

        "என்ன வந்து என்ன போயி... எங்க குடும்பத்துல ஒருத்தர் கூட பொம்பளைங்கள அடிச்சது கிடையாது.. நல்ல பையன்னு நினைச்சி பொண்ணை கட்டிக்கொடுத்தா... நாங்களாம் இருக்கும் போதே அடிக்கறீங்க.. நாங்க இல்லன்னா என்னலாம் செஞ்சிருப்பீங்க..."

        மாமாவும் அத்தையும் பாக்கியத்தை கூட்டிக்கொண்டு அறைக்குச் சென்றார்கள். அவளும் அழுதுக்கொண்டே சென்றாள்.

        சுகுமாறனுக்கு இப்போதுதான் ஒரு காது முழுமையாகக் கேட்க ஆரம்பித்தது. கண்கள் தெளிவானது. நடந்ததை நினைவுப்படுத்தினான். கன்னம் எரிந்தது.

        "அடப்பாவிங்களா அறைவாங்கனது நானு.. இதை கூட சொல்ல முடியாம ஆக்கிட்டீங்களே..."

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்