பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 03, 2026

- பொம்மியுடன் 3வது தைப்பூசம் – (பகுதி 1)

 - பொம்மியுடன் 3வது தைப்பூசம் – (பகுதி 1) -

வழக்கம் போல இந்த ஆண்டும், பத்துமலை முருகனுக்கு எங்களின் நேர்த்திக்கடனை செலுத்திவிட்டோம்.

இவ்வாண்டு கூடுதலாக, வீட்டிற்கு அருகில் இருக்கும் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் காலையிலேயே பால் குடம் எடுக்கும் வாய்ப்பும் ஆசீர்வாதமும் கிடைத்தது.

தைப்பூசத்திற்கு சில நாட்களுக்கு முன்; மனைவிக்கு ஏதோ கனவு வந்ததாய்ச் சொல்லி பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு அழைத்தார். மறுத்தால் வீட்டிலேயே சாமி ஆடுவார் என்பதால் ஆடுகிற சாமி  கோவிலிலேயே ஆடட்டும் அப்போதுதான்  எனக்கு அடி விழாது என்று நினைத்தபடி சம்மதித்தேன்.

அதற்கிடையில் பத்துமலைக்கு எப்போது பால் குடம் எடுக்கலாம் என்கிற யோசனையே எங்களுக்கு இருந்தது. ஒரு வாரமாகவே நேர்த்திக்கடனைச் செலுத்த தொடங்கியிருந்தார்கள்.

 இங்கு எங்களுக்கு பெரிய குடும்பம் இல்லை. நான் இல்லாள் பொம்மி என மூன்றுபேர்நான். மற்றவர்கள் எல்லாம் ஆளுக்கு ஓர் இடத்தில் இருக்கிறார்கள். எனக்கு பிடித்தபடி பெரிய கூட்டமாய்க் குடும்பமாய்ச் செல்லும் வாய்ப்பு எளிதல் எனக்கு கிடைத்ததில்லை.  சில நண்பர்கள் பத்துமலைக்கு செல்லும் நேரத்தை கேட்டோம். எப்படியும் வாகன நெரிசலில் மாட்டி யாருமே சரியான நேரத்தில் சரியான இடத்தில் சந்திக்க முடியாது. ஒருவேளை ஒரே வாகனத்தில் அல்லது ஒரே பொது இரயிலிலோ போனால் சாத்தியப்படலாம்.

கடைசியாக தைப்பூச நாளிலேயே காலையில் போகலாம் என்று முடிவானது.

அதற்கு முன் சிவன் கோவிலுக்கு செல்லும் சூழல் வந்தது. இன்னும் இரண்டு நாட்களில் தைப்பூசம் என்பதால் சிவன் கோவிலிலும் தன் சுப்பனுக்காய்ப் பல ஏற்பாடுகளை அப்பன் செய்திருந்தார்.

கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்துவிட்டு மீனாட்சி சொக்கநாதரைச் சுற்றிக்கொண்டிருந்தோம். சட்டென எங்கள் பின்னால் இரு வயதான பாட்டிகள் பேசிக்கொண்டார்கள். “தைப்பூசத்திற்கு பத்துமலைக்கு போகலையா..?” என ஒருவர் கேட்க, “போகனும்னு ஆசைதான்.. அதான் முருகன் இங்கயே பால ஊத்திக்கோ எதுக்கு மலையேறி கஷ்டப்படறன்னு கேட்கறானே…” என சொல்லவும். “இல்லாட்டையும் மலையேறிதான் நீ பாலு ஊத்துவ பாரு…” என்றது இருவரும் சிரிக்கலானார்கள். அச்சிரிப்பு எனக்குமே தொற்றிக்கொண்டதால் அதன் ரிஷிமூலத்தைப் பார்க்க திரும்பினேன்.

அதில் ஒரு பாட்டி என்னிடம் “பாருங்க தம்பி… இவங்களுக்கு குமரின்னு நினைப்பு… என்னைய சொல்றாங்க.. தைப்பூசத்துக்கு இங்கயே பால் குடம் எடுக்கலாம்னு சொல்ல வந்தா… இந்த கிழவிக்கு வாய பார்த்தீங்களா…” என்றார்.

நானும் என்னையறியாமல் அந்தப் பாட்டியின் வாயைப் பார்க்கவும் எங்கள் சுற்று மூலஸ்தானத்தை அடையவும் சரியாக இருந்தது.  ஐயர் அங்கு நிற்கும் ஒருவருக்கு அர்ச்சனை செய்து  தீபாராதணை காட்டவும் நாங்களும் தீபத்தைத் தொட்டு நெற்றியில் வைத்து கொண்டோம். பொம்மியைத் தூக்கி கொண்டேன். அவளுக்கு தீபத்தைத் தொட்டு நெற்றியில் வைத்தேன். ஐயரை பொம்மிக்கு விபூதி வைக்கச் சொன்னேன்.

விபூதி வைத்தவர்; “தைப்பூசத்துக்கு காலையிலேயே வந்துடு முருகா.. இங்கயே பால்குடம் எடுக்கலாம்..” என்றபடி சிரித்து கொண்டே திரும்பினார்.

நானும் தலையாட்டியபடி சிரித்து கொண்டே தூணுக்கு கீழ் இல்லாளுடன் அமர்ந்தேன். அங்குள்ள அறிவிப்பு பலகையில் தைப்பூசம் அன்று காலை 8மணிக்கு பால் குடம் எடுப்பது குறித்து எழுதியிருந்தார்கள்.

கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டு, புறப்பட ஆயுத்தமானோம். கோவில் வாசலுக்கு வந்த இல்லாள் மீண்டும் என்னையும் பொம்மியையும் அழைத்துக்கொண்டு அர்ச்சனை கவுண்டருக்கு சென்றார்.

பால்குடம் எடுப்பது குறித்தும் அர்ச்சனை சீட்டு குறித்து மேலும் சிலவற்றை கேட்டு தெரிந்து கொண்டார். பின் நாங்கள் எங்கள் காருக்கு வந்தோம். “தைப்பூச காலையில் பொம்மியை இங்கயே பால்குடம் எடுக்க வைக்கலாமா…?” என்று கேட்டார். அதில் மறுப்பதற்கு ஏதுமில்லாததால் சரியென்றேன்.



       இரவே எங்களின் நேர்த்திக்கடனுக்கு வாங்க வேண்டியதை வாங்கினோம். முருகன் படமும் தமிழ் எழுத்தும் உள்ள சட்டை மீது ஆசை வந்தது. எனக்கும் பொம்மிக்கு வாங்கினேன். மற்ற பூஜைக்கானவற்றை மனைவி வாங்கி வைத்து கொண்டார். பொம்மிக்கு மூடி உள்ள சிறிய குடத்தை வாங்கினோம். எனக்கும் ஒரு குடத்தை மனைவி வாங்கலாமே என்றார். இதுநாள்வரையில் வீட்டில் இருப்பது குடம் அல்ல சொம்பு என எப்போதோ நான் அடித்த ஜோக்குக்கு இன்று இருபது வெள்ளி குடமாக பதில் கொடுத்தார் இல்லாள்.

பத்துமலைக்குச் செல்வதற்கு முன்பாக மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்திலேயே நாமும் பால்குடம் எடுத்துவிடலாம் என பேசிக்கொண்டோம். அதற்கு ஏற்றபடியும் சிலவற்றை அங்கேயே வாங்கினோம்.

நான் எப்போதும் பால் குடம்தான் எடுக்கிறேன். பெரும்பாலும் அதனை மாற்றியதில்லை. இல்லாள் இம்முறை கரும்பு சாறு கொண்ட குடம் எடுப்பதாகவும். பொம்மிக்கு பஞ்சாமிருதத்தை கொடுத்துவிடலாம் என்றார்.

இன்று தைப்பூசம். காலையிலேயே எழுந்துவிட்ட பொம்மி, இல்லாளின் உதவியுடன் அவள் செலுத்த வேண்டிய பஞ்சாமிருத்தை அவளே தயார் செய்தாள். அவளது பிஞ்சு கைகளிலேயே முடிந்த மட்டில் கொடுப்பதை பிசைந்து கொண்டிருந்தாள். குடும்பமாய்க் கோவிலுக்கு உற்சாகத்துடன் சென்றோம். பால் குடம் எடுக்கவுள்ளவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து குடங்களை வரிசையாய் வைத்தார்கள்.

ஐயரின் பூஜைக்கு பின், யாரோ ஒருவரின் "வேல்...வேல்" சத்தத்திற்கு நாங்களும் ஒருசேர கோஷமிட்டபடி கோவிலைச் சுற்றினோம். சிறிய கோவில் என்பதால் சீக்கிரமே பால் குடங்களுடன் முருனிடம் நெருங்கினோம். எங்களின் நேர்த்திக்கடனை இவ்வளவு நெருக்கத்தில் இதுவரை செலுத்தியதில்லை.

தடுக்கி விழுந்தால் முருகன் மேல்தான் விழுவேன் என்கிற நெருக்கம். ஆனால் தன் குழந்தையை விழ வைப்பானா முருகன்? விழாமலேயே நம்மை தாங்கியல்லவா பிடித்துக்கொள்வான் கந்தன்.

சில அடி முன்னே எங்களில் பாலில் குமரன் குழந்தையென குதூகலத்தில் குளித்து  கொண்டிருந்தான். இல்லாளின் கரும்பு குடத்தையும் பொம்மையின் பஞ்சாமிருத குடத்தையும் அடுத்த அபிஷேகத்துக்கு பயனடுத்திக் கொள்வதற்காக கேட்டு வாங்கி கொண்டனர்.

பால் ஊற்றி முடிந்ததும் முருகனுக்கு அபிஷேகமும் தொடங்கியது, கரும்பு தண்ணியும் பஞ்சாமிருதமும் முருகனின் மேனியெங்கும் பட்டு வழிந்தது. கொஞ்சமாய்ப் பஞ்சாமிருதத்தை எடுத்து பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு கொடுத்தார்கள்.

பொம்மி தன் கையால் முதன் முதலில் செய்த பஞ்சாமிருதம் அங்கு வந்த எல்லோர் கைகளுக்கும் போனது.

சிறிய கோவில்தான் சீக்கிரமே நேர்த்திக்கடனை செலுத்திவிட்டோம். ஆனால் உடலில் சொல்ல முடியாத அசதி. சோர்ந்து போய், உடலில் இருந்து பெரிய பாரம் குறைந்தது போல நாங்கள் மட்டுமல்ல அங்கு வந்திருந்த பெரும்பாலானவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

முருகனுக்கு அபிஷேகம் செய்தி விபூதியைக் கொண்டு வந்து வைத்தார்கள். அதனைத் தொட்டதும் உடலில் புது தெம்பு வந்தது. நெற்றி நிறைய பூசிக்கொண்டோம். காலை உணவும் அங்கு தயாராகி கொண்டிருந்தது. இல்லாளையும் பொம்மியையும் அங்கு சென்று காத்திருக்கச் சொல்லிவிட்டு பால்குடத்திற்கான அர்ச்சனையை வாங்கி கொள்ள வரிசையில் நின்றேன். ஒருவர் பின் ஒருவராக அவரவருக்குரியதைப் பெற்றுக்கொண்டோம்.

பிறகு நாங்கள் சாப்பிட்டோம். சிறிய கோவில் என்றாலும் நேர்த்தியாக ஒவ்வொன்றும் நடந்தது. மனதிற்கு நிறைவான தைப்பூசமாகத் தோன்றியது.

சரிதான் அதான் இங்கு பால் ஊற்றிவிட்டோமே பத்துமலைக்கும் போய்ப் பால் ஊற்றனுமா என்ற சிந்தனை வரத்தொடங்கியது.


ஆனால் முருகனின் அழைப்பு வேறுமாதிரி இருந்தது; அதுவும் அவன் அருளிய பொம்மியின் மூலமே பத்துமலைக்கு வர வைத்தான் பால் ஊற்ற வைத்தான் அதிசயங்களை நடத்தினான்.

நம் கந்தனின் அந்தத் திருவிளையாடலை அடுத்த பதிவில் சொல்லவா?


தொடரும்........

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்