பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 08, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘சொற்களின் புதிர்பாதை’

புத்தகவாசிப்பு_2021 ‘சொற்களின் புதிர்பாதை’

தலைப்பு –‘சொற்களின் புதிர்பாதை’
வகை – கட்டுரைகள்
எழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு – தேசாந்திரி பதிப்பகம்
புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)


        அன்பின் எஸ்.ராவின் புத்தகம். வாசிக்க வேறென்ன காரணம் இருக்க வேண்டும். அவரின் எழுத்துகளைத் தொடர்ந்து இணையத்தில் வாசித்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால் அதனை புத்தக வடிவத்தில் ஒரு தலைப்பின் கீழ் வாசிப்பதில் இன்பம் இருக்கவே செய்கிறது.

        தேர்ந்த எழுத்தாளர்கள் தன் படைப்பின் மீது மட்டுமே தம் வாசகர்கள் ஆர்வம் கொண்டிருப்பதை விரும்புவதில்லை. தான் ரசித்த தன்னை பாதித்த பிற படைப்புகளையும் பிற படைப்பாளிகளையும் தன் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தபடியே இருக்கிறார்கள். அதுவே தம் வாசகர்களுக்கு அவர்கள் செலுத்தும் நன்றியாகப் பார்க்கின்றேன். வாசகர்களின் வாசிப்பை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்ல அதுவே வழி. இவ்வாறாக எஸ்.ராவின் கட்டுரைகள் வழி பல மொழி படைப்புகள் குறித்தும் படைப்பாளிகள் குறித்தும் அறிந்துக் கொண்ட வாசகர்களின் நானும் ஒருவன்.

        இதில் எஸ்.ரா சில ஆச்சர்யம் தரும் விடயங்களையும் அவ்வப்போது செய்துவருகின்றார். அவர் சொல்லி நாம் வாசித்து அறிந்த எழுத்தாளர்கள் போல, நான் வாசித்து ரசித்த படைப்புகள் குறித்தும் எழுத்தாளர்கள் குறித்தும் எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாகவும் சில கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார். இவற்றை வாசிக்கும் பொழுது ஒரு வாசகனாக என் வாசிப்பின் மீதே எனக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் வந்துச் சேர்கின்றது.

        ‘சொற்காளின் புதிர்பாதை’ கட்டுரை தொகுப்பு 2019 தேசாந்திரி பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. தமிழ் இலக்கிய ஆளுமைகள் மட்டுமின்றி சமகால மலையாள படைப்பாளிகளை பற்றிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 26 கட்டுரைகள் அடங்கியத் தொகுப்பு இது.

        தொகுப்பில் முதல் கட்டுரையாக ‘ சொற்களின் புதிர்பாதை’ எனும் கட்டுரை இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரையில் மலையாளத்தில் முக்கிய சிறுகதையாசிரியராக இருக்கும் அஷ்டமூர்த்தி குறித்து எழுதியுள்ளார். அவரின் கதைகளை சிதம்பரம் ரவிச்சந்திரன் தமிழாக்கம் செய்துள்ளதைக் குறிப்பிட்டு அவர் கண்பார்வை அற்றவர் என்கிறார். அவரால் எப்படி மலையாளத்தில் இருந்து கதைகளை தமிழாக்கம் செய்ய முடிகின்றது என்பதையும் விவரிக்கின்றார். அதோடு அஷ்டமூர்த்தியின் கதைகள் குறித்தும் தன் பார்வையைச் சொல்கின்றார்.

        ‘ரகசியத்தின் வரைபடம்’ என்கிற கட்டுரை இரண்டாவதகா வருகின்றது. சமீபத்தில் எஸ்.ரா வாசித்த மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பாக ஷங்கர் ராமசுப்ரமணியனின் ‘கல் முதலை ஆமைகள்’ என்கிற கவிதைத் தொகுப்பைக் குறிப்பிடுகின்றார். கவிஞரின் கவிதைகளின் மூலம் குறித்தும் அதன் போக்கு குறித்து தொடர்ந்து விவரிக்கின்றார். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கவிதை தொகுப்பாக இத்தொகுப்பை தன் அறிமுகத்தின் வழி வாசகர்களுக்கு கோடி காட்டியுள்ளார்.

        கி.ராஜநாராயணன் குறித்து எஸ்.ரா பேசினாலும் சரி எழுதினாலும் சரி, கேட்டுக்கொண்டும் வாசித்துக் கொண்டுமே இருக்கலாம் போலிருக்கும். ‘இந்த அவள்’ என்கிற கட்டுரையில் 96 வயதில் கி.ரா எழுதியிருக்கும் குறுநாவல் குறித்து எழுதியுள்ளார். அந்நாவலின் தலைப்புதான் ‘அந்த இவள்’.

        ‘போகனின் கவிதைகள்’ என்ற கட்டுரை வழி வாசகர்கள் போகனின் கவிதைகளை எப்படி புரிந்துக் கொள்ளலாம் எனச் சொல்கின்றார். இக்காட்டுரை போகனின் கவிதைகள் குறித்து மட்டுமின்றி அவரின் சிறுகதைகளை அறிந்துக் கொள்ள உதவும்.


        ‘தோப்பில் எனும் காலத்தில் குரல்’ என்ற கட்டுரை வழி தோப்பில் முகமது மீரானின் எழுத்துகளை வாசிக்கவேண்டிய அவசியத்தைச் சொல்கின்றார். இக்கட்டுரை தோப்பில் முகமது மீரானின் நாவல்கள் மீதான என் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது எனலாம்.


        ‘பிரபஞ்சனின் இணையற்ற தோழமை’ எனும் கட்டுரை வழி கண்களைக் கலங்க வைத்துவிடுன்கிறார். எழுத்தில் மட்டும் அன்பையும் அறத்தையும் காட்டிவிட்டு நிஜத்தில் அதற்கு புறம்பாக நடந்துக்கொள்பவர்கள் மத்தியில் பிரபஞ்சன் எத்தனை அன்பாக இருந்திருக்கின்றார் என உணரவைக்கின்றார்.

        ‘வசந்தத்தில் ஓர் நாள்’ எனும் கட்டுரையில் ஒரு சிறுகதையை புகுத்தியுள்ளார். சினிமா பாடல்கள் வெறும் பாடல்கள் மட்டுமல்ல. அதற்கு மனித மனங்கள் கொடுக்கும் இடம் மிக முக்கியமானது. நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்யவும் துன்பத்தை அழுகையாக்கி கரைக்கவும் கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கவும் பாடல்கள் பல வகைகளில் பயன்படுகின்றன என அவர் சொல்லும் போது அதனை மறுக்க நம்மால் முடியவில்லை.


        ‘எழுத்தாளனின் தீபாவளி’ என்னும் கட்டுரையில் தன் சிறுவயதில் கொண்டாடிய தீபாவளிக்கும் இன்று கொண்டாடப்படும் தீபாவளிக்குமான இடைவெளியைச் சொல்கிறார். நாம் எத்தனை இழந்துவிட்டிருக்கின்றோம் என மனம் ஏங்கத்தான் செய்கிறது.

        இத்தொகுப்பில் பல கட்டுரைகளில் வாசகர்கள் வாசிக்க வேண்டிய எழுத்தாளர்கள் அவர்கள் கதைகள், புத்தகங்கள் என ஒரு பட்டியலே இடும் அளவிற்கு குறிப்புகளைக் கொடுத்திருக்கின்றார். இந்த ஒரு புத்தகம் வாசகர்களுக்கு பல்வேறு வாசிப்பின் திறப்புகளாக சாவியைக் கொடுத்திருக்கின்றது.


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்